Wednesday, January 08, 2025

"இலஞ்சம் வேண்டாம்!" - இலங்கையில் அலறும் அ‌திகா‌ரிக‌ள்!!


இலங்கை தொடர்பான இந்த தகவல்களை உங்களுக்கு எந்தவொரு தமிழ் ஊடகமும் சொல்ல போவதில்லை. 

👇👇👇

இலங்கையில் இன்று(8-1-2025), தனியார் வாகன முதலாளிகள் வேலைநிறுத்தம் அறிவித்திருக்கிறார்கள். ஆம், முதலாளிகளின் வேலைநிறுத்தம்!

ஏன் தெரியுமா? 

புதிய இடதுசாரி NPP அரசாங்கம் கொண்டு வந்த "கிளீன் சிறிலங்கா" (Clean Srilanka) திட்டத்தின் கீழ் விபத்துக்களை தடுப்பதற்கான பொலிஸ் சோதனை நடவடிக்கைகள் நடக்கின்றன. அதனால் வாகன முதலாளிகள் அதிகம் பாதிக்கப் படுகின்றார்களாம். 

1. பேருந்து வண்டிகளில் பழுதான உதிரிப்பாகங்கள் இருக்க கூடாது. தேவையற்ற கம்பிகளை கழற்ற வேண்டும். வீதியில் ஒலி மாசடைய வைக்கும், அதிக சத்தம் போடும் ஹாரன் அடிக்க கூடாது. பஸ் வண்டிக்குள் பயணிகளுக்கு இடைஞ்சலாக காதை செவிடாக்கும் அளவிற்கு அதிக சத்தமாக பாட்டு போட கூடாது.

2. சாரதி இருக்கைக்கு முன்பக்கமாக உள்ள கண்ணாடிக்கு அருகில் சாமி படங்கள் (புத்தர் சிலைகள் உட்பட) இருக்க கூடாது. ஏனெனில் அவற்றிற்கு மாலைகள், வர்ண விளக்குகள் அலங்காரம் செய்வதால் சாரதியின் பார்வையை மறைக்கிறது.

3. பந்தயம் ஓடுவது, அதி வேகமாக வாகனத்தை செலுத்துவது தடுக்கப் படுகிறது. பாடசாலைகள் போன்ற இடங்களில் போகும் பொழுது வேகத்தை குறைக்க வேண்டும். மீறினால் அதிக அபராதம் விதிப்பது மட்டுமல்ல, வாகன உரிமம் இரத்து செய்ய படலாம். 

உண்மையில் இது போன்ற பல பாதுகாப்பு விதிகள்  ஏற்கனவே சட்டத்தில் எழுதப் பட்டுள்ளன. ஆனால் முந்திய அரசாங்கங்களின் காலத்தில் யாரும் கணக்கெடுக்கவில்லை. வாகன விதி மீறல்கள் காரணமாக ஏராளமான வீதி விபத்துக்கள் நடந்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. 

அது மட்டுமல்ல, தற்போது இலங்கை முழுவதும் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்க மறுக்கிறார்கள்! பொது மக்கள் விழிப்பாக இருப்பதால் லஞ்சம் வாங்க தயங்குகிறார்கள் அல்லது அச்சப் படுகிறார்கள். இதனால் ஒரேயடியாக லஞ்சம் ஒழிந்து விட்டது என்று சொல்ல வரவில்லை. வெகுவாக குறைந்து விட்டது. 

உலகில் எந்த நாட்டிலும் ஒரு இடதுசாரி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இது போன்ற அதிசயங்களை எதிர்பார்க்கலாம். அதனால் முதலாளிகளின் ஆதிக்கத்தில் உள்ள வலதுசாரி ஊடகங்கள் இது போன்ற தகவல்களை மறைக்க பார்ப்பார்கள். அது மட்டுமல்லை, முதலாளிகளுக்கு அடிவருடி பிழைக்கும் தமிழ்த் தேசிய புனிதர்கள் கூட இதைப் பற்றி பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பார்கள்.

No comments: