Friday, August 04, 2023

நோர்வேயில் புலிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப் பட்டதா?

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், வன்னியில் இருந்து நோர்வே சென்ற புலிகளின் பிரதிநிதிகளுக்கு அங்குள்ள இராணுவ முகாமொன்றில் பயிற்சி அளிக்கும் வீடியோ பார்க்க கிடைத்தது. எப்படியான பயிற்சிகள் என்பதை நோர்வீஜிய படையினர் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், அது கலவரங்களை தடுப்பதற்கான காவல்துறை (மிலிட்டரி பொலிஸ்) பயிற்சி.

அதாவது, சமாதான உடன்படிக்கையின் பின்னர் ஒரு தீர்வு எட்டப்பட்டால் புலிகள் இராணுவ ரீதியாக இயங்க முடியாது. ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டி இருக்கும். அதற்குப் பின்னர் ஒரு அரசியல் கட்சியாக மட்டுமே இயங்கலாம். முன்னாள் போராளிகள் புதிதாக உருவாகப் போகும் வட - கிழக்கு மாகாண பொலிஸ் படையில் சேர்த்துக் கொள்ளப் படுவர். தற்போதைய நிலையில் இது அனுமானமாக தெரியலாம். ஆனால் அது மட்டும் தான் நடைமுறைச் சாத்தியமான விடயம். அதை நிரூபிக்கும் வகையில் பயிற்சியில் ஈடுபட்ட பொலிசாரின் கைகளில் இருந்த கவசங்களில் "KFOR" என்று எழுதப்பட்டிருந்தது. அதாவது நேட்டோவின் கொசோவோ சமாதானப் படையின் குறியீடு.

உண்மையில் புலிகள் அல்லது தமிழர்களுக்கு பூரண திருப்தி அளிக்கக் கூடிய ஒரு தீர்வு எட்டப் பட்டாலும், பிரச்சினைகள் தீர்ந்து விட்டன என்று அர்த்தம் அல்ல. இங்கு தீர்க்கப் பட்டது இனப் பிரச்சினை மட்டுமே. ஏனைய பிரச்சினைகள் அப்படியே இருக்க போகின்றன. அவற்றுக்காக தமிழ் மக்கள் மத்தியில் இருந்து போராட்டங்கள் வெடிக்கலாம். ஏன் கலவரங்கள் கூட நடக்கலாம். அவற்றை அடக்கும் பொறுப்பு புலிகளின் அரசாங்கத்திற்கு உள்ளது. அவர்கள் தமது பொலிஸ் படையை அனுப்பி மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும். சுருக்கமாக சொன்னால் சிங்கள பொலிஸ் செய்த அதே வேலையை இனி தமிழ்ப் பொலிஸ் செய்ய வேண்டும். அதற்கான பயிற்சி தான் நோர்வேயில் அளிக்க பட்டது.

நோர்வேயில் மட்டுமல்ல, பிற மேற்கத்திய நாடுகளிலும் மக்கள் போராட்டங்களை அடக்குவதற்கு பொலிஸ் கையாண்ட வன்முறை நடவடிக்கைகள் உலகறிந்த விடயம். இதனால் பலர் காயமடைந்த, கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில், தமிழீழமே வந்தாலும் அது ஏகாதிபத்திய நலன் காக்கும் இன்னொரு சிறிலங்காவாகத் தான் இருக்கும். 100%. தமிழர்களின் அரசாக இருந்தாலும், அதுவும் ஒரு அரசு தான். அரசு என்பதே ஒரு அடக்குமுறை இயந்திரம் தான். 



நோர்வேயில் இராணுவப் பயிற்சி வீடியோ:

No comments: