Friday, June 09, 2023

கஜேந்திரகுமார் கைது தொடர்பாக...

7 June 2023, அன்று கொழும்பில் TNPF தலைவர் கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கும் அப்பால், ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினராகவும் அவரது கருத்து சுதந்திரம் பறிக்க படுவது கண்டனத்துக்குரியது. இந்த விஷயத்தில் அரசின் அடக்குமுறைக்கு எதிராக கஜேந்திரகுமாருடன் துணை நிற்போம். 

 அதே நேரம் கஜேந்திரகுமாரின் கட்சியினரும் தமது கடந்த கால தவறுகளை திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். தமிழ்த்தேசிய அரசியலில் தாங்கள் மட்டுமே புனிதர்கள் என்ற மிதப்பில், இன உயர்வுச் சிக்கல் மனப்பான்மை காரணமாகவும் மற்றவர்களிடமிருந்து தம்மைத் தாமே தனிமைப் படுத்திக் கொண்டவர்கள். 

இவர்களே ஒரு நாளும் சொந்த இன மக்களின் கருத்து சுதந்திரத்தை மதிக்கவில்லை. அதையே அரசு இவர்களுக்கு செய்யும் பொழுது மட்டுமே புரிகிறது. சொந்த இனத்தில் மாற்றுக் கருத்து வைப்பவர்களை எல்லாம் "துரோகிகள், ஒட்டுக்குழுக்கள்" என்று முத்திரை குத்தி, தாமும் சிங்கள பேரினவாத அரசுக்கு சளைக்காத தமிழ்ப் பேரினவாத கருத்தியல் அடக்குமுறையாளர்கள் என்பதை நிரூபித்தவர்கள். அரசும் அதே "துரோகி" முத்திரையை தான் இவர்களுக்கும் குத்துகின்றது. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும். 

ஒரு வருடத்திற்கு முன்னர் தெற்கில் நடந்த "அரகலய" என்ற மக்கள் எழுச்சியில் தமிழ் மக்கள் பங்குகொள்ள கூடாது என்று தடுத்து நிறுத்தினார்கள். அது "சிங்களவர் போராட்டம்" என்று இனவாத அடிப்படையில் நிராகரித்தார்கள். போராட்டத்தை தொடர்ந்து தெற்கில் பல மாணவர் அமைப்பினரும், தொழிற்சங்கவாதிகளும் கைது செய்யப்பட்ட நேரம் இவர்கள் அதைக் கண்டிக்காமல் மௌனமாக இருந்தார்கள். (வழமை போல "அது சிங்களவர் பிரச்சினை" என்ற புறக்கணிப்பு). 

பொலிசார் கைது செய்ய வந்த நேரம் கஜேந்திரகுமார் ஊடகங்களுக்கு சிங்களத்தில் பேட்டியளித்தார். அதில் அவர் அரச அடக்குமுறை குறித்து சிங்கள மக்களுக்கும் அறிவுறுத்தினார். நல்ல விடயம். இப்போதாவது இன ஐக்கியத்தின் மூலம் தான் அரச ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராட முடியும் என்ற ஞானம் பிறந்திருக்கிறது. 

இனிமேலும் "இரு தேசம், புலிப் பாசம்" என்று கற்பனாவாத கதைகளை பேசிக் கொண்டிருந்தால் கட்டியிருக்கும் கோவணமும் உருவப்பட்டு விடும். ஒடுக்கப்படும் சிங்கள, முஸ்லிம் உழைக்கும் வர்க்க மக்களுடன் தமிழர்களையும் ஒன்றுசேர்த்து, IMF ஆணைப் படி நடக்கும் ஸ்ரீலங்கா அரச இயந்திரத்திற்கு எதிராக போராட முன்வருவீர்கள் என நம்புகிறேன்.

No comments: