Monday, January 24, 2022

கிளப் ஹவுஸில் துள்ளிக் குதித்த சாதிவெறி பூனைக்குட்டிகள்

கிளப் ஹவுஸ் பரிதாபங்கள்: 

"ஏம்பா, சபேசன், கலை மார்க்ஸ் மாதிரியான ஆளுங்க ஈழத்தில சாதி ஒழிப்பு போராட்டம் நடத்துறதா சொல்லிக்கிறாங்க... அங்க தான் சாதி என்ற ஒன்று இல்லையே? அப்புறம் எப்படி ஒழிப்பாங்க?" 

"அது வந்து.... அவங்களாகவே அங்க மொதல்ல புதுசா சாதிகளை உருவாக்கி வளர்த்து விடுவாங்களாம்.... அதுக்கு அப்புறம் அதையெல்லாம் அவங்களே வந்து ஒழிப்பாங்களாம்!" 

"இதெல்லாம் ஒரு ஏஜெண்டா கீழே நடக்குதில்லே?" 

"ஆமாம்மா... தமிழர்க ஒற்றுமையாக இருந்தா சீனாவை விடப் பெரிய ஒலக வல்லரசா மாறிடுவாங்க... அதை தடுக்கனும்னு நெனைக்கிறாங்க!"

 
கிளப் ஹவுஸில் துள்ளிக் குதித்த ஈழத்து சாதிவெறி பூனைக்குட்டிகள்

1. இந்தியாவில் பார்ப்பனர்கள் மாதிரி, ஈழத் தமிழர்களை ஒடுக்குவதற்காக ரிசர்வேஷன் (தரப் படுத்தல்) கொண்டு வந்தார்களாம். அவரைப் பொறுத்தவரையில் ஈழத்தமிழர் என்றால் யாழ் வெள்ளாளர்கள் என்று அர்த்தம். 

2. ஈழத்தில் சாதிக்கொரு கோயில், திருவிழாவில் சாதிப் பாகுபாடு இருக்கிறது தான். அதனால் என்ன பிரச்சினை என்று கேட்கிறார்கள். ஈழத்தில் நிறைய கலப்பு மணம் நடப்பதாகவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் சாதி பார்க்காமல் திருமணம் செய்வதாக கம்பி கட்டும் கதை பேசுகிறார்கள். 

3. இவர்கள் பெரும்பாலும் (95%) புலிகளை முகத்திரையாக மூடிக் கொண்டு சாதிவெறிக் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். அதனால் சாதிய மேலாதிக்கத்திற்கு எதிரான விமர்சனத்தை, மிக இலகுவாக புலிகளுக்கு எதிரான கருத்தாக மடைமாற்ற முடிகிறது. இவர்கள் தமது சாதிவெறியை மறைப்பதற்காக மட்டுமே புலிகளை ஆதரிக்கிறார்கள். சில அறிவுஜீவிகள் கூட இதைக் கண்டிக்காமல் வக்காலத்து வாங்குகிறார்கள்.

ஈழத்து சங்கிகளின் கிளப் ஹவுஸ் கூட்டம் ஒன்றில், "ஈழத்தில் சாதிப் பிரச்சினை இருக்கிறது" என்று சொன்ன குற்றத்திற்காக, புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வாழும் ஈழத்தமிழ் பெரியாரிஸ்டான சபேசனை எல்லோரும் ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருந்தார்கள். "சாதி இருப்பதை ஒத்துக் கொள்கிறார்களாம்.... ஆனால் அதைப் பற்றி பேசாது விட்டால் அது தானாக மறைந்து விடும்" என்பது அவர்களது சங்கித்தனமான நிலைப்பாடு. 

அப்போது ஒருவர், ஒரு அவுஸ்திரேலிய வாசி, "சபேசன் என்ன சாதி என்று சொல்ல வேண்டும்" என்று நேரடியாகவே கேட்டார். சாதியின் பெயரை சொல்லா விட்டாலும், "உயர்ந்த பிரிவா, தாழ்ந்த பிரிவா" என்று குறிப்பிட வேண்டுமாம். "உயர்த்தப்பட்ட சாதி என்றால் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும்... தாழ்த்தப்பட்ட சாதி என்றால் பேசலாம்..." என்று விளக்கமும் சொன்னார். 

நல்ல வேளை, அங்கிருந்த பிற சங்கிகளே அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படிக் கேட்பது தவறு என்று கேட்டவரை அடக்கி விட்டார்கள். நல்லது. வரவேற்கத்தக்க மாற்றம். ஆனால் சில தினங்களுக்கு முன்பு ஒரு பிரான்ஸ்வாசி "வெள்ளாள பெண்களை வசியப் படுத்தும் நோக்கில் பெரியாரிசம் பேசுகிறார்கள்..." என்று வெளிப்படையாக சாதித் திமிருடன் பேசினார். அப்போது இவர்கள் எல்லோரும் வாயை மூடிக் கொண்டிருந்தார்கள்.

ஈழத்தில் சாதி பிரச்சினை பற்றி பேசினாலே அது "இலுமினாட்டிகளின் சதி" என்று பதறும் ஒரு கூட்டம் உள்ளது. அந்த கூட்டத்தில் ஒருவர், "சதியை" முறியடிக்க ஒரு நல்ல ஐடியா சொன்னார். சிங்களவர்கள் மத்தியில் உள்ள அக முரண்பாடுகளை, சாதிப் பிரிவினைகளை வெளிப்படுத்தி கூர்மைப் படுத்த வேண்டுமாம். அதை பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டுமாம். இனிமேல் யாராவது தமிழர்கள் மத்தியில் உள்ள சாதிப்பிரச்சினை பற்றி பேச வந்தால் "சிங்களவர்களை பாருங்கள்" என்று சொல்லி திருப்பி அனுப்ப வேண்டுமாம். சங்கிகள் என்றோர் பிரிவுண்டு. தனியே அவர்க்கோர் குணமுண்டு.

"நாம் தமிழர் கட்சி ஆவணத்தில் இட ஒதுக்கீடு பற்றி குறிப்பிடப் பட்டிருக்கிறது. தமிழர்களுக்கு முன்னுரிமை, மிகுதி பிற இனத்தவருக்கு என்று இட ஒதுக்கீடு கொடுக்க படும்." இவ்வாறு ஒருவர் கிளப் ஹவுஸ் கூட்டத்தில் தெரிவித்தார். அந்தக் கூட்டம் நடத்தியதும் நாதக தம்பிகள் தான்.

கவனிக்க: 1971 ம் ஆண்டு இலங்கையில் தரப்படுத்தல் கொண்டு வந்தார்கள். அதுவும் இன அடிப்படையில் சிங்களவர்களுக்கு முன்னுரிமை, மிகுதி தமிழர், முஸ்லிம்களுக்கு என்று ஒதுக்கப் பட்டது. நாம் தமிழர் கட்சியும் அதையே சொல்கிறது. இவர்களை பேரினவாதிகள் என்று அழைப்பதில் என்ன தவறு?  

****

No comments: