முதலாளித்துவம் தோற்றமும் வரலாறும்
முதலாளித்துவ தத்துவ அறிஞர்களான அடம் ஸ்மித், ரிக்கார்டோ ஆகிறோர் மட்டுமல்ல, கம்யூனிச தத்துவ அறிஞரான கார்ல் மார்க்ஸ் கூட, நீராவி இயந்திரங்களின் கண்டுபிடிப்பு, இரும்புத் தொழிற்துறை தான் முதலாளித்துவத்தின் அடிப்படை என்று கூறியிருக்கின்றனர்.
இயந்திரங்களை இயக்குவதற்கு நிலக்கரி அத்தியாவசியமானது. அது அன்றைய காலத்தில் எண்ணை, அல்லது மின்சாரம் போன்று மதிப்பு வாய்ந்த எரிபொருளாக இருந்தது. அதற்கு முன்னர் காற்றாடி மற்றும் நீரில் சுழலும் சக்கரம் மூலம் இயந்திரங்கள் இயங்குவதற்கான சக்தி பெறப்பட்டது. இவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வந்தன.
நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், அது ஆடைத் தொழிற்சாலை உட்பட பல தொழிலகங்களில் பாவனைக்கு வந்தது. அத்துடன் தரமான இரும்பு, உருக்கு கிடைத்த படியால், குதிரை வலுவால் கணிப்படப் படும் இயந்திரங்களின் செயல்திறனும் அதிகரித்தது.
இங்கிலாந்தில் நீராவி இயந்திரங்களின் எரிபொருளாக பயன்படுத்தப் பட்டு வந்த நிலக்கரியின் கேள்வி அதிகரித்த படியால் பல இடங்களில் நிலக்கரி சுரங்கங்கள் உருவாகின. இந்த சுரங்கங்கள் பணக்கார முதலாளிகளின் சொந்தமாக இருந்தன. சிலநேரம் ஒரு பெரும் நிலவுடமையாளருக்கு சொந்தமான நிலத்தில் சுரங்கம் தோண்டப் பட்டிருக்கலாம்.
சுரங்கத் தொழிலாளர்கள் மிகவும் ஆபத்தான, வசதிகள் குறைந்த நிலையில் வேலை செய்தனர். சில நேரம் சுரங்கம் இடிந்து விழுந்து பல தொழிலாளர்கள் கொல்லப் பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இருப்பினும் இங்கிலாந்து முழுவதும் சுரங்கத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப் பட்டது. அதனால் அப்போதே அவர்கள் “தொழிலாளர்களில் ஒரு மேட்டுக்குடி” என்று அழைக்கப் பட்டனர். இதில் ஒரு நன்மையையும் உண்டானது. சுரங்கத் தொழிலாளர்கள் தான் முதன்முதலாக ஒன்று திரண்டு தமக்கென தொழிற்சங்கம் அமைத்தனர். மிகக் கடினமான உடல் உழைப்பைக் கோரும் சுரங்கத் தொழில் காரணமாக அவர்களுக்குள் தோழமை உறவு ஏற்பட்டிருந்தது.
அந்தக் காலத்தில் இங்கிலாந்து நிலக்கரி மிகவும் மலிவாக கிடைத்து வந்தது. அதனால் அதை எரிபொருளாக பயன்படுத்துவதும் மலிவாக இருந்தது. தொழில்நுட்ப தேர்ச்சி காரணமாக ஒவ்வொரு தொழிற்துறைக்கும் தனியான நீராவி இயந்திரங்கள் தயாரிக்கப் பட்டன. இதனால் நிலக்கரி எனும் எரிபொருளின் தேவையும் அதிகரித்தது.
ரயில், கப்பல்களில் நீராவி இயந்திரங்களின் பயன்பாடு காரணமாக போக்குவரத்து செலவு பெருமளவு குறைந்தது. தரையிலும் கடலிலும் விரைவான போக்குவரத்து நடந்தது. இதனால் புதிய பாதைகள் உருவாகின. இவற்றை பயன்படுத்தி பெருமளவு உற்பத்திப் பொருட்களை எல்லா இடங்களுக்கும் அனுப்ப முடிந்தது.
இங்கிலாந்தில் மட்டுமல்லாது, பெல்ஜியம், ஜெர்மனியிலும் நிலக்கரி சுரங்கங்கள் உருவாகின. அதனால் அவையும் இங்கிலாந்துக்குப் போட்டியாக தொழிற்துறை வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகள் ஆகின. இந்த போட்டி, முரண்பாடுகள் ஒரு கட்டத்தில் முற்றி வெடித்து முதலாம் உலகப்போருக்கு இட்டுச் சென்றது. அது வேறு கதை.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்து தான் உலகம் முழுவதும் நிலக்கரி ஏற்றுமதி செய்து வந்தது. அன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப் பட்டு வந்த நிலக்கரியில் மூன்றில் இரண்டு பங்கு இங்கிலாந்தில் இருந்து வந்தது. இதனால் பிரித்தானியா என்ற பெயரில் இருந்த இங்கிலாந்தின் உலக மேலாண்மை நிலை உறுதிப் படுத்தப் பட்டது. இது மேலும் சர்வதேச சமூக பொருளாதார மாற்றங்களுக்கு காரணமாக அமைந்தது. கார்ல் மார்க்ஸ், முதலளைத்துவத்தில் இங்கிலாந்தின் பங்களிப்பு குறித்து அதிகமாக ஆய்வு செய்ததில் எந்த அதிசயமும் இல்லை.
நீராவி இயந்திரங்களின் பயன்பாடு இங்கிலாந்தில் தொடங்கிய படியால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்து ஒரு உலகப் பொருளாதார வல்லரசாக மாறியது. இது பிற்காலத்தில் ஜெர்மனி, அமெரிக்காவால் பின்பற்றப் பட்டது. அன்றைய இங்கிலாந்து நிலக்கரி, பருத்தி ஆடைகள் போன்ற தொழிற்துறைப் பொருட்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்தது. அதற்குப் பதிலாக உணவுப் பொருட்களையும், மூலப் பொருட்களையும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. இன்றும் பெரும்பாலான பணக்கார நாடுகள் இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றன.
இங்கிலாந்தில் அந்தக் காலத்திலேயே பிரெஞ்சு மொழியில் “செய்ய விடு” என்று அர்த்தம் தரும் Laissez faire எனும் “சுதந்திர முதலாளித்துவம்” நடைமுறைக்கு வந்து விட்டது. அதாவது அரசு முதலாளிகளின் விடயத்தில் தலையிடாக் கொள்கையை பின்பற்றியது. இதனை முதன்முதலாக முதலாளித்துவத்தை ஆய்வு செய்த பொருளியல் அறிஞரான அடம் ஸ்மித் வலியுறுத்தி வந்தார். அவரது சிந்தனைகள் முதலாளித்துவ கோட்பாடுகளாக பின்பற்றப் பட்டன. சுதந்திர வர்த்தகம் ஊக்குவிக்கப் பட்டது. விவசாயத்தை பாதுகாப்பது தடுக்கப் பட்டது. அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப் பட்டன. சுருக்கமாக, எல்லா இடங்களிலும் முதலாளித்துவ- லிபரல் சித்தாந்தம் கட்டாயமாக்கப் பட்டது.
முதலாளித்துவத்தின் பக்க விளைவாக உருவான ஏழைகள் ஏறக்குறைய அடிமைகள் போன்று நடத்தப் பட்டனர். அவர்கள் உயிர் வாழ்வதற்கு மட்டுமான செலவை அரசு பொறுப்பேற்றது. “வேலை இல்லம்” என்ற பெயரில் கட்டாய வேலை வாங்கும் முகாம்கள் உருவாக்கப் பட்டன. நீண்ட காலமாக சமூகத்தில் வசதியாக வாழ்ந்தவர்கள் ஏழைகள் குறித்து எந்த அக்கறையும் அற்று இருந்தனர். மார்க் ட்வைன் ஒலிவர் டிவிஸ்ட் என்ற உலகப் புகழ் பெற்ற நாவல் எழுதி வெளியிட்ட பின்னர் தான் ஏழைகளின் அவலம் வெளியில் தெரிய வந்தது.
ஏழைகள் வாழ்ந்த சேரிப் பகுதிகளில் நிலைமை மிக மோசமாக இருந்தது. அதனால் அன்றைய இங்கிலாந்தில் இருந்த மக்கட்தொகையில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. இங்கிலாந்தில் லண்டன் மட்டுமல்லாது, மான்செஸ்டர், பேர்மிங்ஹாம், லிவர்பூல் போன்ற தொழிற்துறை நகரங்கள் வளர்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக கிராமப் புறங்களில் இருந்தும், அயர்லாந்தில் இருந்தும் பெருமளவு மக்கள் படையெடுத்து வந்தனர். நகரங்களில் அவர்களது வாழ்க்கைத்தரம் மிக மோசமாக இருந்தது. இதனை பிரெடெரிக் எங்கெல்ஸ் தனது உழைக்கும் மக்களின் நிலைமை என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.
No comments:
Post a Comment