Wednesday, August 14, 2019

நரபலி கொடுப்பது, மனித மாமிசம் உண்பது பற்றிய மானிடவியல் ஆய்வு

நரபலி கொடுப்பது, மனித மாமிசம் உண்பது பற்றிய வரலாற்றுத் தகவல்களைக் கூறும் நூல் ஒன்றை வாசித்து அறிந்து கொண்ட தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். டச்சு மொழியில் "Kannibalisme en mensenoffers" எனத் தலைப்பிடப் பட்ட அந்த நூலை Daniel Vangroenweghe எழுதி இருக்கிறார். இவர் பெல்ஜியத்தை சேர்ந்த மானிடவியல் பேராசிரியர். காலனிய கால ஆவணங்களில் இருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு இந்த நூலை எழுதி இருக்கிறார்.

இந்த நூலை வாசிக்கும் பொழுது நமது காலத்தில் நடக்கும் இனப் பகை போர்களுக்கு காரணமான இன வெறுப்பு மனப்பான்மை எங்கிருந்து வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இன்றைய இனவாத அரசியலுக்கு அடிப்படையான அதி உச்ச கட்ட இனத் துவேசம், ஈவிரக்கமில்லாத படுகொலைகளுக்கு காரணமாக உள்ளது. பண்டைய காலத்தில் எதிரி இனத்தவரைக் கொன்று அவர்களது மாமிசத்தை சாப்பிட்டார்கள். தற்காலத்தில் கொன்று புதைப்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அது மட்டுமே வித்தியாசம். மற்றும் படி, இனங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வு கற்காலத்தில் இருந்து மாறாமல் இருந்து வந்துள்ளது.

இந்த நூலில் அரைவாசிப் பகுதி, ஐரோப்பியக் காலனிய காலகட்டத்திற்கு முன்னர் அமெரிக்க கண்டத்தில் நடந்த சம்பவங்கள் தொகுக்கப் பட்டுள்ளன. மிகுதிப் பகுதி ஆப்பிரிக்காவில் கொங்கோ பகுதிகளில் நடந்த சம்பவங்களை குறிப்பிடுகின்றன. காலனிய காலத்தில் அவற்றை நேரில் கண்ட ஐரோப்பியரின் சாட்சியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. எழுத்தாளர் டச்சு மொழி பேசும் பெல்ஜிய நாட்டவர் என்பதால், முன்னாள் பெல்ஜிய காலனியான கொங்கோ பற்றிய ஆவணங்களை ஆராய முடிந்துள்ளது. அத்துடன் தென் அமெரிக்காவில் பிரெஞ்சு கயானா காலனியை ஸ்தாபித்த பிரெஞ்சுக்கார்கள் எழுதி வைத்த ஆவணங்களையும் ஆராய்ந்துள்ளார். ஆப்பிரிக்காவை விட, மத்திய அமெரிக்காவில் நடந்த சம்பவங்கள் விரிவாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன. அதனால், இந்தக் கட்டுரையில் அதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எழுதி இருக்கிறேன்.

மனித மாமிசம் உண்பதற்கு, "கனிபலிசம்" (Cannibalism) என்ற சொல் பல ஐரோப்பிய மொழிகளில் பயன்படுத்தப் படுகின்றது. இந்தச் சொல் கொலம்பஸ் கரீபியன் தீவுகளை கண்டுபிடித்த காலத்தில் உருவானது. கொலம்பசுடன் சென்ற ஸ்பானிஷ் மாலுமிகள், அந்தத் தீவுகளில் வாழ்ந்த கரிபா இன மக்கள் மனித மாமிசம் உண்பதை கண்டிருக்கிறார்கள். கரிபா என்ற சொல் கனிபா எனத் திரிபடைந்து கனிபலிசம் ஆகியது.

இந்த நூலின் ஆரம்பத்தில் பிரேசிலின் வட பகுதிகளில் வாழ்ந்த துப்பி செவ்விந்தியர்களின் சடங்குகள் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளன. இவர்கள் பதினாறாம் நூற்றாண்டிலும் வேடுவர் சமூகமாகத் தான் வாழ்ந்தனர். பழங்குடி இனங்களுக்கு இடையில் அடிக்கடி யுத்தங்கள் நடக்கும். அப்பொழுது பலர் போர்க்கைதிகளாக சிறைப் பிடிக்கப் படுவார்கள். கைதிகள் பெரும்பாலும் ஆண்களாக இருந்த போதிலும், சிலநேரங்களில் பெண்கள், சிறுவர்களும் சிறைப்பிடிக்கப் படுவதுண்டு.

போர்க்கைதிகளாக பிடி பட்டவர்களை குறிப்பிட்ட காலம் சிறை வைத்திருந்து விட்டு, குறிப்பிட்ட ஒரு நாள் நடக்கும் சடங்குகளின் பொழுது கொன்று சாப்பிடுவார்கள். நெருப்புக்கு மேலே பன்றியை வாட்டுவது போல, அந்த மனிதனையும் வாட்டுவர்கள். தோலை தனியாக உரித்தெடுத்து விட்டு, உடலை துண்டு துண்டுகளாக வெட்டி சாப்பிடுவார்கள். எதிரி இனத்தவனது உடலை சாப்பிடுவதன் மூலம் தமக்கு சக்தி கிடைக்கிறது என்று நம்புகிறார்கள். அத்துடன் தம்மின மக்களை கொன்ற எதிரியை கொன்று சாப்பிடுவதன் மூலம் பழி தீர்க்கப் பட்டு விட்டதாக திருப்திப் படுகின்றனர். இது மிகத் தீவிரமான, கொடூரமான இன வெறுப்புணர்வு.

பண்டைய காலத்தில், இந்த நடைமுறை அனேகமாக எல்லா இனத்தவர் மத்தியிலும் இருந்துள்ளது. அதாவது போரில் வென்ற இனம் மட்டுமல்லாது, தோல்வியுற்ற இனத்தவரும் தம்மால் சிறைப் பிடிக்கப் பட்ட போர்க்கைதிகளை கொன்று சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருந்தனர். போர்க்கைதிகளை சுதந்திரமாக விட்டாலும், அவர்கள் தப்பியோட மாட்டார்கள். ஏனென்றால், அந்த நபர் தப்பிச் சென்று தனது இனத்தவரிடம் சேர முடியாது. அவர்கள் அவனை ஒரு கோழையாகக் கருதுவார்கள். இப்படித் தப்பி ஓடி வருவதை விட எதிரிகள் கைகளில் சாவது மேலானது என்று சொல்வார்கள்.

இங்கே குறிப்பிடப் பட வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றுள்ளது. மனித மாமிசம் உண்ணும் மக்கள், ஒரு நாளும் தமது இனத்தை சேர்ந்தவர்களின் இறைச்சியை உண்ண மாட்டார்கள். கடுமையான பஞ்சம் வந்தாலும் அதைச் செய்ய மாட்டார்கள். அதற்குக் காரணம் தம்மினம் சார்ந்த சகோதரத்துவ உணர்வு. சுருக்கமாக சொன்னால், இனங்களுக்கு இடையிலான பகை உணர்வு தான் நரமாமிசம் உண்ணும் பழக்கத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கென நடக்கும் சடங்கின் பொழுது அவர்கள் தமது வன்மத்தை வெளிப்படுத்துவார்கள்.

இனங்களுக்கு இடையில் நடக்கும் போர்களில், தம்மின மக்களை கொன்றதற்கு பழிவாங்குவதற்காக, எதிரி இனத்தவரை சிறைப் பிடித்து ஊருக்கு கொண்டு செல்வார்கள். அங்கு தமது சமூக உறுப்பினர்களுடன் சேர்ந்து எதிரி இனத்தவரை கொன்று சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருந்தனர். அந்தப் போர்க்கைதிகள் போரில் தம்மை எதிர்த்துப் போரிட்ட போர்வீரராக மட்டும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எதிரி இனத்தை சேர்ந்தவர்கள் அப்பாவிகளாக இருந்தாலும் எதிரிகள் தான். அதாவது தம்மினத்தவரை கொன்றதற்காக, எதிரி இனத்தில் யாரை வேண்டுமானாலும் கொன்று சாப்பிட்டு பழி தீர்த்துக் கொள்ளலாம்.

அநேகமாக போர்க்கைதிகளாக சிறைப் பிடிக்கப் பட்டவர்களை உடனடியாக கொன்று தின்பதில்லை. அதற்காக ஒரு சடங்கு நடக்கும் வரையில் உயிரோடு வைத்திருப்பார்கள். சிலநேரம் தம்மினப் பெண்களில் ஒருத்தியுடன் சில வருட காலம் குடும்பம் நடத்தவும் விடுவார்கள். அவ்வாறு மணம் முடித்து வைக்கப்படும் பெண், பெரும்பாலும் போரில் கணவனை இழந்த விதவையாக இருப்பாள். அவர்களுக்கு குழந்தை பிறந்தாலும் அது தந்தை வழியில் வந்த எதிரியின் பிள்ளையாகக் கருதப்படும். தந்தையை கொல்லும் அதே நாளில் பிள்ளையையும் கொன்று விடுவார்கள். அவர்களது இறைச்சியை சுவைப்பவர்களில் முதன்மையானவர்களாக அந்தப் பெண்ணும் இருப்பாள்.

இந்தக் கதைகளை கேள்விப் படும் பொழுது நம்ப முடியாமல் இருக்கும். இதனை நூலாசிரியரும் உணர்ந்துள்ளார். இதெல்லாம் இட்டுக்கட்டிய கற்பனைக் கதைகள் அல்ல என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறார். அதற்காக நேரில் கண்ட சாட்சிகள் எழுதிய குறிப்புகளை எடுத்துக் காட்டுகிறார். அது கூட கற்பனையாக எழுதி இருக்கலாம் என்று சொல்வோம் என்பதற்காக, இன்னொரு நாட்டில் இன்னொருவர் எழுதிய குறிப்புகளை ஒப்பிட்டுக் காட்டுகிறார். ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத இரண்டு நபர்கள் எவ்வாறு ஒரே மாதிரியான கதைகளை எழுத முடியும் என்று வாதிடுகிறார்.

இதிலே இன்னொரு ஆச்சரியமான விடயம், மெக்சிகோவில் உயர்ந்த நாகரிகத்தை கொண்டிருந்த அஸ்தேக் சாம்ராஜ்யத்திலும் நரபலி கொடுக்கும், மனித மாமிசம் உண்ணும் பழக்கம் இருந்துள்ளது. இதற்கு முன்னர் குறிப்பிட்ட பிரேசில் நாட்டு துப்பி (Tupi) இனத்தவர்கள் கற்கால மனிதர்கள் போன்று வேடுவர் சமுதாயமாக வாழ்ந்தவர்கள். அதே காலகட்டத்தில் மெக்சிகோவில் உலகிலேயே உயர்ந்த நாகரிகத்தை பின்பற்றிய மக்கள் வாழ்ந்தனர்.

இன்றைய மெக்சிகோ நாட்டின் வட பகுதியில் இருந்த அஸ்தேக் (Aztec) சாம்ராஜ்யத்தின் தலைநகரமும், அதன் ஆளுகைக்குட்பட்ட நகரங்களும் சிறந்த தொழில்நுட்பத்தில் நிர்மாணிக்கப் பட்டிருந்தன. அதே காலகட்டத்தில் பிரான்சில் மன்னரின் மாளிகையில் கூட கழிவறை இருக்கவில்லை. அதே நேரம், மெக்சிகோவில் அஸ்தேக் நகரங்களில் வீட்டுக்கு வீடு கழிவறை இருந்துள்ளது. மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கான தானியங்கி குழாய் அமைப்பு சிறப்பாக செயற்பட்டது.

அஸ்தேக் நாட்டு மக்கள் ஒழுங்கமைக்கப் பட்ட வர்க்க சமுதாயத்தில் வாழ்ந்தனர். உயர்மட்டத்தில் இருந்த பூசாரிகள், மன்னர் குடும்பத்தினர், நிலப்பிரபுக்கள் போன்றோரின் பிள்ளைகளுக்கு போர்க்கலை மட்டும் புகட்டப் படவில்லை. மதநெறி, தத்துவம், கணிதம், மொழி, மற்றும் பல அறிவியல் பாடங்கள் போதிக்கப் பட்டன. வருடங்கள், மாதங்கள், நாட்களை சரியாகக் கணிப்பிடும் கலண்டர்கள் இருந்தன. அஸ்தேக் சாம்ராஜ்யத்தின் பல நூறாண்டு கால வரலாறு எழுதி வைக்கப் பட்டிருந்தது.

அத்தகைய உயர்ந்த நாகரிகத்தை பின்பற்றிய மக்கள் நரபலி கொடுத்தார்கள், நரமாமிசம் உண்டார்கள் என்றால் நம்பக் கூடிய விடயமா? ஆம், இது அவர்களது சம்பிரதாயம் என்கிறார் நூலாசிரியர். அதாவது வருடத்தில் அல்லது மாதத்தில் ஒரு தடவை நடக்கும் கோயில் திருவிழாக்களில் நரபலி கொடுக்கப் பட்டது. பிரமிட் மாதிரி கட்டப்பட்ட கோயில்களில் பலி கொடுக்கப் படும் நபர் பூசாரியால் படிகளில் தூக்கிக் கொண்டு செல்லப் படுவார். அங்கு நடக்கும் சடங்குகளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.

பிரமிட் உச்சியில் இருக்கும் கடவுள் சிலைக்கு முன்னால் உள்ள பலிபீடத்தில் கட்டி வைக்கப் படுவார். நான்கு பேர் கைகளையும், கால்களையும் பிடித்து கொண்டிருக்கும் பொழுது, தலைமைப் பூசாரி நெஞ்சை அறுத்து இதயத்தை வெளியே எடுப்பார். இதற்காக கூரான எரிமலைக் கல் பொருத்தப் பட்ட ஒரு வகைக் கோடாலி ஆயுதமாகப் பயன்படுத்தப் படும். உடலைக் கீறும் பொழுது வடியும் இரத்தம் ஒரு கிண்ணத்தில் சேகரிக்கப் படும். வெளியே எடுத்த இதயத்தை கடவுள் சிலைக்கு படைப்பதுடன், சிலையையும், சுவர்களையும் இரத்தத்தால் பூசுவார்கள். பலி கொடுக்கப் பட்டவரின் உயிரற்ற உடல் கீழே உள்ள பக்தர்களை நோக்கி வீசப்படும். அவர்கள் அதை துண்டு துண்டாக வெட்டி எடுத்துச் சென்று சமைத்து சாப்பிடுவார்கள்.

அஸ்தேக் சாம்ராஜ்யத்தில் நரபலி கொடுப்பதற்கு அரசியல்- மதக் காரணங்களை சொல்லி நியாயப் படுத்தினார்கள். உலகில் இயற்கைச் சமநிலை பேணுவதற்கு மனிதப் பலி கொடுக்க வேண்டும் என்பது அவர்களது மத நம்பிக்கை. வரட்சி, வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்களை தணிப்பதற்கு பலி கொடுப்பது அவசியம் என்று கருதினார்கள். இயற்கை அழிவுகளின் போது தான் நரபலி கொடுப்பதும் அதிகரித்துள்ளது. வருடத்திற்கு ஆயிரக் கணக்கான நரபலிகள் கொடுப்பது வழமையாக இருந்தது. சில வருடங்கள் பலி கொடுப்பது குறைந்து விட்டால், அதற்காகவே போர்களை நடத்தினார்கள். அன்று நடந்த போர்கள் நிலத்தை ஆக்கிரமித்து, பொன், பொருள்களை அபகரிப்பதுடன் முடிந்து விடுவதில்லை. போர்க்கைதிகளை பிடித்து வந்து பலி கொடுப்பது ஒரு மதக் கடமையாகக் கருதப் பட்டது.

ஏகாதிபத்திய விஸ்தரிப்புவாதமும் நரபலி கொடுப்பதன் மூலம் நியாயப் படுத்தப் பட்டது. மன்னர்கள் அதை ஒரு மதக் கடமை என்று கூறுவதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டனர். பிற நாடுகளின் மீது படையெடுத்து, அங்கு சிறைப்பிடிக்கப் பட்ட ஏராளமான போர்க்கைதிகளை கொண்டு வந்து, நகரங்களில் இருந்த கோயில்களில் பலி கொடுத்தனர். இதனை மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்க ஊக்குவிக்கப் பட்டனர்.

ஓயாத யுத்தங்கள் காரணமாக, மெக்சிகோவில் வாழ்ந்த பிற இனத்தவர்கள் அஸ்தேக் சாம்ராஜ்யத்துடன் பகைமை கொண்டிருந்தனர். ஸ்பானிஷ் காலனியப் படைகள் வந்திறங்கிய நேரம், அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டனர். ஸ்பானிஷ்காரர்கள் உள்நாட்டு பூர்வீக இனத்தவரின் உதவியுடன் தான் அஸ்தேக் சாம்ராஜ்யத்துடன் போர் தொடுத்து வெற்றி பெற்றனர். அந்தப் போரில் பல்லாயிரக் கணக்கான அஸ்தேக் மக்கள் கொல்லப் பட்டனர். அவர்களது உடல்கள் பூர்வகுடி வீரர்களினால் கொண்டு சென்று புசிக்கப் பட்டன.

அஸ்தேக் சாம்ராஜ்யத் தலைநகர் தெநோக்தித்லன்(Tenochtitlan) இரண்டு இலட்சம் பேரை சனத்தொகையாகக் கொண்ட மாபெரும் நகரம். அங்கு நீண்ட காலம் நடந்த சுற்றிவளைப்புப் போரின் இறுதியில் ஸ்பானிஷ் படைகள் வெற்றி பெற்ற நேரம், தெருக்களில் பிணக் குவியல்கள் கிடந்தன. எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. உண்பதற்கு எதுவுமில்லாமல் பட்டினி கிடந்த போதிலும், தெநோக்தித்லன் நகரில் வாழ்ந்த மக்கள் இறந்தவர்களின் உடல்களை உண்ணவில்லை. அதற்குக் காரணம் அவர்கள் தம்மினத்தை சேர்ந்தவர்களின் மாமிசத்தை சாப்பிட மாட்டார்கள்.

தெநோக்தித்லன் நகரைக் கைப்பற்றுவதற்கு ஸ்பானிஷ் படையினருடன் சேர்ந்து போரிட்ட, பிற பூர்வீக செவ்விந்திய இனங்களை சேர்ந்த வீரர்களுக்கு நல்ல வேட்டை கிடைத்தது. அவர்கள் அங்கிருந்த உடல்களை கொண்டு சென்று, ஊரில் இருந்த குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்துண்டார்கள். அதாவது, தமது எதிரிகளின் உடல்களை சாப்பிடுவதை பெருமையாகக் கருதினார்கள். இந்த விபரங்களை யுத்தம் நடந்த காலத்தில் அங்கிருந்த ஸ்பானிஷ் பாதிரியார்கள் எழுதி வைத்துள்ளனர்.

அது போர்க்காலம் என்பதால், தம்முடன் சேர்ந்து போரிட்ட பூர்வீக செவ்விந்திய வீரர்கள் நரமாமிசம் உண்பதை ஸ்பானிஷ்வீரர்கள் தடுக்கவில்லை. இருப்பினும் போர் முடிந்த பின்னர் கிறிஸ்தவ மதத்தின் பெயரில் நரமாமிசம் உண்பதை தடை செய்தார்கள். ஸ்பானிஷ்காரர்கள் கைப்பற்றிய இடங்களில் எல்லாம் நரபலி கொடுப்பதும் தடுக்கப் பட்டது. ஒவ்வொரு கிராமமாக கைப்பற்றியதும் அங்கிருந்த தெய்வச் சிலைகளை உடைத்து நொறுக்கினார்கள். தடுக்க முயன்ற பூசாரிகளை கொன்றனர். இதன் மூலம் அவர்களது கடவுளரை விட தாமே சக்தி வாய்ந்தவர்களாக ஸ்பானிஷ் காலனிய வீரர்கள் காட்டிக் கொண்டனர்.

அஸ்தேக் நாடு நாகரிகமடைந்த சமுதாயத்தைக் கொண்டிருந்தது. அதன் அர்த்தம் அது பல அடுக்குகளை கொண்ட வர்க்க சமுதாயமாக இருந்தது. அந்நாட்டில் எந்த வகையான மக்கள் பிரிவினர் நரபலி கொடுக்கப் பட்டனர் என்ற விபரம், பண்டைய அஸ்தேக் ஆவணங்களில் இருந்து கிடைக்கிறது. ஆக்கிரமிப்புப் போர்களில் சிறைப் பிடிக்கப் பட்ட எதிரி இனத்தவர்கள் தான் நரபலி கொடுக்கப் பட்டவர்களில் பெரும்பான்மை. அதற்கு அடுத்த படியாக அடிமைகள் இருந்தனர்.

அஸ்தேக் நாகரிக காலத்தில், போரில் சிறைப்பிடிக்கப் பட்ட பிற இனங்களை சேர்ந்த போர்க்கைதிகள் எல்லோரும் நரபலி கொடுக்கப் பட்டனர் என்று அர்த்தமல்ல. கணிசமான அளவினர் சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கு அனுமதிக்கப் பட்டனர். பெரும்பாலும் பல்வேறு தொழில்களை செய்விப்பதற்கு அடிமைகளாக நடத்தப் பட்டனர். ஒரு வர்க்க சமுதாயத்தில், மேல் தட்டில் இருக்கும் நிலப்பிரபுக்களுக்கு அடுத்த நிலையில் வணிகர்களும், விவசாயிகளும் இருப்பார்கள். அவர்களுக்கு கீழே அடிமைகளும், பிற ஒடுக்கப் பட்ட மக்களும் இருப்பார்கள்.

பிற இனத்தவர் மட்டுமல்லாது, சொந்த இனத்தை சேர்ந்தவர்களும் அடிமைகளாக மாறலாம். அளவுக்கு மீறி கடன் வாங்கி கட்ட முடியாமல் கஷ்டப் படுபவர்கள் தமது பிள்ளைகளை அடிமைகளாக விற்று விடுவார்கள். சிலநேரம் அப்படியானவர்கள் தம்மைத் தாமே அடிமைகளாக விற்று விடுவதுண்டு. அடிமைகளின் பிள்ளைகள் "சுயவிருப்பின்" பேரில் நரபலி கொடுக்கப் படுவதுண்டு. ஆனால், எக்காரணம் கொண்டும் மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்களை நரபலி கொடுப்பதில்லை. சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

எதற்காக உலகில் நரபலி கொடுக்கும் வழக்கம் ஆயிரம் ஆண்டுகளாக மாறாமல் அப்படியே இருந்து வந்துள்ளது? அதற்குக் காரணம், நரபலி கொடுக்கப் படுபவர் தனது இனத்தவர் அல்ல என்ற உணர்வு. அதாவது எதிரி இனத்தை சேர்ந்தவர்களை மனிதர்களாக மதிக்காத மனப்பான்மை. மிக உயர்ந்த அஸ்தேக் நாகரிக சமுதாயத்தில் வர்க்க உணர்வும் சேர்ந்து கொண்டது. நரபலி கொடுக்கப் படுபவர்கள் எப்போதும் பொருளாதார ரீதியாக கீழ்த்தட்டு மக்களாக இருந்தனர். அதனால் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு அவர்கள் மீது இரக்கம் பிறக்கவில்லை. இந்த உணர்வு இப்போதும் நவீன காலத்திலும் தொடர்கிறது. 

"நாகரிக" வளர்ச்சி அடைந்த நவீன காலத்திலும், ஏழை மக்கள் பாதிக்கப் பட்டால் பணக்காரர்களுக்கு வலிப்பதில்லை. இன்று உலகில் நடக்கும் போர்களில் உயிர்ப் பலி கொடுக்கப் படுபவர்கள் பெரும்பாலும் ஏழைகள் தான்.  இனப் பகை காரணமாக நடக்கும் போர்களில், பலியாவது எதிரி இனத்தவர்கள் என்றால், அது குறித்து யாரும் கவலைப் படுவதில்லை. அவர்களும் மனிதர்கள் தானே என்ற மனிதாபிமான உணர்வு எழுவதில்லை. தனது இனத்திற்கு வந்தால் இரத்தம், எதிரி இனத்திற்கு வந்தால் தக்காளி சட்னி என்ற மனப்பான்மை பலரிடம் உள்ளது. முன்னொரு காலத்தில் நரபலி கொடுப்பதையும், மனித மாமிசம் உண்பதையும் மரபாகக் கொண்டிருந்த மக்களின் மனப்பான்மையும் அதே மாதிரித் தான் இருந்தது.

1 comment:

பொன்.பாரதிராஜா said...

தன் இனத்தை (மனிதன் மனிதனை, ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தை) தானே தின்னும் அனைத்து உயிரினங்களும் cannibal தான். இது வரை 1500 உயிரினங்கள் என்று அறியப்பட்டுள்ளது...