Sunday, September 24, 2017

25 செப். 2017 பொது வாக்கெடுப்பு; குர்திஸ்தான் சுதந்திரத் தனி நாடாகுமா?


25 செப்டம்பர், திங்கட்கிழமை நடக்கவுள்ள, சுதந்திர குர்திஸ்தானுக்கான பொது வாக்கெடுப்பு பற்றிய சில குறிப்புகள்.

ஈராக்கில் இருந்து பிரிவதற்கான பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மையானோர் "ஆம்" என்று வாக்களிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இது பல தசாப்த கால குர்திய தேசியவாதிகளின் கனவு. இன்று நனவாகப் போகிறது. உண்மையிலேயே குர்திஸ்தான் தனி நாடாக இருக்க முடியுமா? அது ஐ.நா. அங்கத்துவம் பெற முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு யாரிடமும் பதிலில்லை.

கடந்த இருபதாண்டுகளாக குர்திஸ்தான் தன்னாட்சிப் பிரதேசமாக இருந்து வருகின்றது. சதாம் ஹுசைன் குவைத் மீது படையெடுத்த காலத்தில் இருந்து, ஐ.நா. மேற்பார்வையின் கீழான சர்வதேச விமானப் படையினரின் ரோந்து காரணமாக, ஈராக் இராணுவம் கட்டுப்பட்டை இழந்திருந்தது.

அமெரிக்க இராணுவமும் குர்திஸ்தானில் தரையிறங்கிய பின்னர் தான், சதாம் ஹுசைன் ஆண்ட ஈராக் மீது படையெடுத்தது. அதற்கான "நன்றிக் கடனாக", அமெரிக்க ஆக்கிரமிப்புக் காலத்திலும், குர்திஷ் பெஷ்மேர்கா படையணிகள் ஆயுதங்களுடன் நடமாட அனுமதிக்கப் பட்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, குர்திஸ்தான் பிராந்தியம் ஏறக்குறைய தனி நாடு போன்றே நிர்வகிக்கப் பட்டது. இருப்பினும், அது ஈராக்கின் ஒரு பகுதியாகவே தொடர்ந்தும் இருந்தது.

குர்திஸ்தான் பெயரில் தனிக்கொடி, தனியான நிர்வாக அமைப்புகளும், அரசாங்கமும் உருவாகி இருந்தன. அதற்கென தனியாக "குர்திஷ் தேசிய இராணுவம்" கூட இருந்தது. இருந்தாலும் அதை யாரும் தனிநாடாக கருதவில்லை, அல்லது அங்கீகரிக்கவில்லை. அங்கேயும் ஈராக் பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் நடக்கும். குர்திஷ் பாரளுமன்ற உறுப்பினர்கள் பாக்தாத்தில் இருந்தனர். வெளிவிவகார கொள்கை உட்பட பல விடயங்களில் பாக்தாத்தில் உள்ள மத்திய அரசு மேலாண்மை செலுத்தியது.

குர்திஸ்தான் சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு தேசியவாதிகளின் இறுதி இலக்கு என்றே பரப்புரை செய்யப் படுகின்றது. இருப்பினும் அதற்குமப்பால் சில விடயங்கள் உள்ளன. கிர்குக் எண்ணைக் கிணறுகள் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை நீண்ட காலமாக தீர்க்கப் படவில்லை. ஈராக்கில் பெருமளவு எண்ணை எடுக்கப் படும் பிரதேசங்களில் அதுவும் ஒன்று. அதில் கிடைக்கும் வருமானத்தை பங்கிடுவதில் பிரச்சினைகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்னர், குர்திஸ்தான் அரசு எண்ணை உற்பத்தியை தடை செய்தது. அதற்கு பதிலடியாக, ஈராக் அரசு குர்திஷ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை எழுபது சதவீதமாக குறைத்தது. இந்த இழுபறிப் போட்டி தான், பொது வாக்கெடுப்பில் வந்து நிற்கிறது.

இன்று வரைக்கும், ஈராக் மத்திய அரசு குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பை அங்கீகரிக்கவில்லை. வாக்கெடுப்பில் பெரும்பான்மையானோர் சுதந்திரத்திற்காக வாக்களித்தால், அடுத்ததாக என்ன நடக்கும் என்பது கேள்விக்குறி? வாக்கெடுப்பின் முடிவை வைத்து, குர்திஸ்தான் தனி நாடாவதாக பிரகடனப் படுத்தப் படுமா? ஈராக்குடனான தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப் படுமா? சுதந்திர குர்திஸ்தானை ஏனைய நாடுகள் அங்கீகரிக்குமா?

குர்திஸ்தான் தனி நாடாக பிரகடனப் படுத்தால், இராணுவ நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என ஈராக் அரசு அறிவித்துள்ளது. அப்படியானால், அது மீண்டும் ஒரு யுத்தத்திற்கு வழி வகுக்கலாம். இங்கே குறிப்பிடப் பட வேண்டிய விடயம், ஈராக் தேசிய இராணுவம் எந்தளவு பலமானது என்பதே. இரண்டொரு வருடங்களுக்கு முன்பிருந்த ஈராக் இராணுவம் மிகவும் பலவீனமாக இருந்தது. 

2014 ம் ஆண்டுக்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் இருந்த, ஐ.எஸ்.(ISIS) என்ற இயக்கம், மிகக் குறுகிய காலத்திற்குள் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றி பாக்தாத்தை நோக்கி முன்னேறி இருந்தது. குறிப்பாக, சுன்னி-முஸ்லிம் பிரிவை சேர்ந்த அரேபிய சமூகத்தவரின் "ஏக பிரதிநிதி" என்று அறிவித்துக் கொண்ட ஐ.எஸ்., ஈராக்கில் ஒரு தனிநாட்டை உருவாக்கி வைத்திருந்தது.

ஐ.எஸ். முன்னேறிக் கொண்டிருந்த நேரம், பின்வாங்கி தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்த ஈராக் இராணுவம் தன்னை மீண்டும் பலப்படுத்திக் கொள்ள சிறிது காலம் எடுத்தது. ஈரானின் மேற்பார்வையின் கீழ் பயிற்சி பெற்ற ஈராக் இராணுவம், தன்னைத் தயார் படுத்திக் கொண்டு ஐ.எஸ். மீது தாக்குதல் தொடுத்து இழந்த பிரதேசங்களை கைப்பற்றி விட்டது. இதிலே இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். போரில் ஈடுபட்டது ஈராக் இராணுவம் மட்டுமல்ல.

ஷியா முஸ்லிம் அரேபியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் துணைப்படைகளின் உதவியின்றி ஈராக் இராணுவம் போரில் வெற்றி பெற்றிருக்க முடியாது. அந்த துணைப்படைகள் ஈராக் அரசுக்கு கட்டுப்படுவதில்லை. அது மட்டுமல்ல, இலட்சிய வெறியுடன் போரிடுவார்கள். ஆகவே, குர்திஸ்தான் மீது படையெடுப்பு நடந்தால்,குர்தியர்கள் ஒரு பலமான எதிரியை சந்திக்க வேண்டி இருக்கும். அண்மைக்கால போரியல் அனுபவம் மிக்க ஈராக்கி இராணுவத்தை மட்டுமல்லாது, ஷியா துணைப் படைகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அவர்களுக்கு ஈரானின் ஆதரவு இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

குர்திஸ்தான் சுதந்திரத்தை அங்கீகரிக்க மாட்டோம் என அயல் நாடுகளான ஈரானும், துருக்கியும் அறிவித்து விட்டன. அந்த இரண்டு நாடுகளிலும் குர்திய மொழி பேசும் சிறுபான்மையினர் வாழ்வது மட்டுமல்லாது, அவர்களும் தனி நாட்டுக்காக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆகவே ஈராக்கில் குர்திஸ்தான் தனிநாடானால், தமது நாட்டுக்குள்ளும் பிரச்சினை உண்டாகும் என்று அஞ்சுகின்றனர். அவற்றை விட "சர்வதேச சமூகம்" எனக் கருதப் படும் அமெரிக்காவும், பிரான்சும் கூட அங்கீகரிக்க மாட்டோம் என அறிவித்து விட்டன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில், குர்திஸ்தானின் ஒரேயொரு நட்பு நாடு இஸ்ரேல் மட்டுமே. இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் குர்திய படையணிகளுக்கு பயிற்சியளிப்பது இரகசியம் அல்ல. அது நீண்ட காலமாக நடக்கிறது. குர்திஸ்தான் தேசியவாதிகளும், குர்திஷ் மக்களையும், யூதர்களையும் ஒப்பிட்டுப் பேசுவதும் புதிய விடயம் அல்ல. 

"யூதர்களுக்கும், குர்தியருக்கும் பொது எதிரிகளாக அரேபியர் இருப்பதாக" அரசியல் பேசுவது சகஜமானது. குர்தியர்கள் மத்தியில் யூத மதத்தை பின்பற்றுவோரும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதை இங்கே குறிப்பிட வேண்டும். என்ன தான் இருந்தாலும், இஸ்ரேலின் நட்புறவு குர்திஸ்தான் சுதந்திரத்திற்கு எந்தளவு உதவும் என்பது கேள்விக்குறி தான்.

அமெரிக்கா தனது வழமையான இரட்டை வேடத்தை இங்கும் அரங்கேற்றுகிறது. பிள்ளையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது மாதிரி நடந்து கொள்கிறது. ஒரு பக்கம் குர்திஸ்தான் தேசியத்தை ஆதரிப்பது போன்று நடந்து கொள்ளும். அதே நேரம், ஈராக் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும். இருபதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை பதிலீடு செய்த அமெரிக்க ஏகாதிபத்தியம் அப்போது ஏற்பட்ட காலனிய குடியரசுகளின் எல்லைகளை மாற்ற விரும்பவில்லை. இதை அமெரிக்க அரசு வெளிப்படையாகவே அறிவித்து விட்டது.

ஈராக்- குர்திஸ்தான் தனி நாடானால், அங்கு சிறுபான்மை மொழி பேசும் இனங்களாக உள்ள அரேபியரும், துருக்கியரும் எதிர்காலம் குறித்து அச்சப் படுவது இயல்பு. அதே நேரம், மொழியால் குர்தியர் ஆனாலும் மதத்தால் மாறுபட்ட யேசிடி மக்களும் சுதந்திரத்திற்கு எதிராகவுள்ளனர். அனேகமாக பொது வாக்கெடுப்பில் விழும் எதிர் வாக்குகள் அவர்களுடையவையாக இருக்கும். குர்திஸ்தான் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான குர்தியர்களும் பொது வாக்கெடுப்பை எதிர்க்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், ஆட்சியாளர்கள் தமது ஊழலை மறைப்பதற்காக தேசிய வெறியை தூண்டி விடுகிறார்கள் என்பதே.

ஏற்கனவே, குர்து மொழி பேசும் மக்களுக்குள் பல உள்ளக முரண்பாடுகள் உள்ளன. தேசியவாதப் போர்வை முரண்பாடுகளை மூடி மறைப்பதால், அவை வெளியே தெரிய வருவதில்லை. அங்கேயும் பிரதேசவாதம் இருக்கிறது. சமூகப் பிரிவுகள் உள்ளன. இனக்குழு அரசியலும் நடக்கிறது. குர்திஷ் அரச தலைவராக உள்ள மசூத் பர்சானி, செல்வாக்கு மிக்க பர்சானி குலப் பிரிவை சேர்ந்தவர். அவர் தனது "இனத்தவருக்கு" மட்டும் பதவிகள் கொடுப்பதாக முறைப்பாடுகள் உள்ளன. 

இருபது வருடங்களுக்கு முன்னர், பர்சானி KDP என்ற இயக்கத்தின் தலைவர். அப்போது, KDP க்கும் அதற்கு அடுத்த பலமான இயக்கமான PUK க்கும் இடையில் சகோதர யுத்தம் நடந்தது. பின்னர் ஒரு மாதிரியாக சமரசம் செய்து கொண்ட பின்னர் தான், இன்றுள்ள குர்திஸ்தான் அரசு உருவானது. அப்போதும் இப்போதும் KDP இன் ஆதரவுத் தளம் பெரியது. குறிப்பாக, பழமைவாதிகள் அதை ஆதரிக்கிறார்கள். சதாம் ஹுசைன் ஆட்சிக் காலத்தில், பர்சானி சில விட்டுக் கொடுப்புகள் செய்து, ஈராக் அரசுடன் ஒத்துழைத்த சம்பவங்களும் நடந்துள்ளன.

தேசியவாதிகளின் உணர்ச்சி அரசியல் காரணமாக, அங்கு யாரும் குர்திஸ்தான் தனி நாடாவதை எதிர்க்கவோ, விமர்சிக்கவோ முடியாத நிலைமை உள்ளது. ஹலாப்ஜா இனப்படுகொலையை சொல்லியே பொது வாக்கெடுப்புக்கு ஆதரவு திரட்டப் படுகின்றது. ஈராக்கை சதாம் ஹுசைன் ஆண்ட காலத்தில், 1988 ம் ஆண்டு, ஹலாப்ஜா என்ற குர்திஷ் பிரதேசத்தில் ஈராக்கிய படைகள் நச்சு வாயுக் குண்டுகளை வீசின. இந்தத் தாக்குதலில் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள்.

அன்றிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு வருடமும் ஹலாப்ஜா படுகொலைகள் நினைவுகூரப் படுவதுண்டு. அன்று இனப்படுகொலையில் பலியான சொந்தங்களுக்கு இன்றைய பொது வாக்கெடுப்பு அர்ப்பணிக்கப் படுகின்றது. ஆனால், பொது வாக்கெடுப்பின் முடிவில் குர்திஸ்தான் என்ற சுதந்திர நாடு உருவாகும் என்பது நிச்சயமில்லை. சிலநேரம், பாக்தாத் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மேலதிக உரிமைகளை பெற்றுக் கொள்வதாகவும் அமையலாம்.

No comments: