Wednesday, June 28, 2017

கம்யூனிசத்தை கருவறுக்க சி.ஐ.ஏ. உருவாக்கிய "எல்லை கடந்த பயங்கரவாதம்"!


சி.ஐ.ஏ. வரலாறு, "ஓர் அழிவின் சுவடு". Tim Weiner எழுதிய "Legacy of Ashes" ஆங்கில நூலின் டச்சு மொழிபெயர்ப்பு. இப்போது தான் வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன். இன்னும் நூறு பக்கங்கள் தாண்டவில்லை. அதற்குள் கண்ணைக் கட்டுதே!

பனிப்போர் தொடங்கிய காலத்தில், ஐரோப்பாவில் கம்யூனிசத்தை கருவறுக்கும் நோக்கில் உருவாக்கப் பட்டது தான் சி.ஐ.ஏ. உளவு நிறுவனம்.

இரண்டாம் உலகப்போர் முடிவில், கிரேக்க நாடு சோவியத் முகாமுக்குள் சென்று விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.

ஏதென்ஸ் நகரில் தரையிறங்கிய பிரிட்டிஷ் கடற்படையினர் ஊடாக, கிரேக்க மன்னருக்கு விசுவாசமான படைகளுக்கு உதவி செய்யப் பட்டது. அப்போது கிரேக்கத்தில் செல்வாக்குடன் இருந்த கம்யூனிச கிளர்ச்சிப் படைகளை எதிர்த்துப் போராடுவதற்கு உதவி செய்யப் பட்டது.

கிரீஸ் ஒரு சோஷலிச நாடாகி, அங்கு சோவியத் இராணுவம் தளம் அமைத்தால், எண்ணை வள மத்திய கிழக்கு நாடுகளையும் கைப்பற்றி விடுவார்கள் என்று அஞ்சினார்கள். அதனால், சோவியத் இராணுவம் முன்னேறினால், எண்ணைக் கிணறுகளை குண்டு வைத்து தகர்ப்பதற்கு தயாராக இருந்துள்ளனர்.

இஸ்லாமியருக்கு மெக்கா மாதிரி, கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு வத்திக்கான் என்று சொல்லலாம். வத்திக்கான் இருக்கும் இத்தாலி கூட கம்யூனிச நாடாகும் அபாயம் இருந்தது. அங்கு கம்யூனிஸ்ட் கட்சி பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது.

இத்தாலியில் சி.ஐ.ஏ. நிதியில் உருவாக்கப் பட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களின் (NGO) பெயரில், தீவிரமான கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் செய்யப் பட்டது. அதற்கு அமெரிக்கர்கள் நிதி வழங்க ஊக்குவிக்கப் பட்டனர். கம்யூனிச எதிர்ப்பு தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்கியவர்கள் அமெரிக்க அரசிடம் வரிச் சலுகை பெற்றுக் கொள்ள முடிந்தது.

சோவியத் யூனியன், மற்றும் கிழக்கைரோப்பிய சோஷலிச நாடுகளுக்குள் ஊடுருவுவது சி.ஐ.ஏ. இன் நோக்கமாக இருந்தது. அதற்காக, அந்த நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்த சமூகங்களில் ஆட்களை சேர்த்தார்கள். அப்போதே மேற்கு ஐரோப்பாவில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்தனர். அவர்கள் மத்தியில் கம்யூனிசத்தை வெறுப்பவர்கள் நிறையப் பேர் இருந்தனர். அவர்களை அணிதிரட்டுவது பெரிய விடயம் அல்ல.

முன்னாள் நாஸிகள், பாசிஸ்டுகள் எல்லாம் சி.ஐ.ஏ. கைக்கூலிகளாக மாறினார்கள். யூத இனப்படுகொலை நடத்திய உக்ரைனிய பாசிஸ்டுகள், சி.ஐ.ஏ. இனால் பயிற்றுவிக்க பட்டு உக்ரைனுக்கு திருப்பி அனுப்பப் பட்டனர். அதே மாதிரி, இத்தாலி, கிரீசில் வாழ்ந்த மனராட்சி ஆதரவு அல்பேனியர்களுக்கு பயிற்சி கொடுத்து அல்பேனியாவுக்குள் அனுப்பினார்கள்.

இதற்கிடையே ஒரு குறிப்பிடத் தக்க சம்பவம் நடந்தது. ஹங்கேரியில் சிலர் ஒரு விமானத்தைக் கடத்தி மேற்கு ஜெர்மனிக்கு கொண்டு சென்றனர். மேற்கு ஜெர்மனி அரசு, அவர்களை "விமானம் கடத்திய பயங்கரவாதிகளாக" கருதி சிறையில் அடைக்கவில்லை. மாறாக, சி.ஐ.ஏ. அவர்களில் சிலருக்கு இராணுவப் பயிற்சி கொடுத்து, பயங்கரவாதிகளாக மாற்றி மீண்டும் ஹங்கேரிக்கு திருப்பி அனுப்பியது.

சோஷலிச நாடுகளுக்குள் ஊடுருவ அனுப்பப் பட்டவர்கள், அடையாளமில்லா விமானங்களில் கொண்டு செல்லப் பட்டு பாரசூட்டுகளில் இறக்கி விட்டனர். அவ்வாறு பல நூற்றுக் கணக்கான "எல்லை கடந்த பயங்கரவாதிகளை" அனுப்பியும், அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. என்ன நடந்திருக்கும் என்று ஊகிப்பதற்கு சில வருட காலம் எடுத்தது.

பாரசூட்டில் இறக்கி விடப் பட்டவர்கள் அனைவரும் கம்யூனிச இரகசியப் பொலிசாரால் கண்டுபிடிக்கப் பட்டு விட்டனர். முதலில் அவர்களை பிடித்து வைத்திருந்து தகவல் அனுப்ப சொன்னார்கள். அதன்படி, "குறிப்பிட்ட இடத்திற்கு மேலதிக வீரர்களையும், ஆயுதங்களையும் அனுப்புமாறு" சி.ஐ.ஏ. க்கு தகவல் கொடுத்தனர். இதை உண்மை என்று நம்பிய சி.ஐ.ஏ. இன்னும் பலரை பாரசூட்டில் இறக்கி விட்டது. அவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப் பட்டு கொல்லப் பட்டு விட்டனர்.

முன்னாள் சோஷலிச நாடுகளில், "மக்கள் கம்யூனிச சர்வாதிகாரத்திற்குள் துன்பப் படுகிறார்கள்" என்று புனையப்பட்ட பொய்ப் பரப்புரைகளை சி.ஐ.ஏ. உண்மை என்று நம்பி விட்டது போலும். தாங்கள் "விடுதலை வீரர்களை" அனுப்பினால், அங்கு "மக்கள் எழுச்சி" ஏற்படும், கம்யூனிச அரசுகள் கவிழ்ந்து விடும் என்று நினைத்திருக்கிறார்கள்.

1 comment:

Kasthuri Rengan said...

வருத்தம்தான்