Monday, June 26, 2017

ஒரு அமெரிக்க கனவு: "ஏழைகளின் குருதி விற்பனைக்கு"!



மேற்கு ஐரோப்பாவில் குருதிக் கொடை கொடுப்பவர்களுக்கு பொதுவாக பணம் கொடுப்பதில்லை. அதற்குக் காரணம், பணத்திற்காக குருதியை விற்பவர்கள் தமக்கிருக்கும் நோய்களை மறைக்கப் பார்க்கலாம். அதனால், தாமாக மனமுவந்து கொடுப்பவர்களிடம் இருந்து மட்டும் குருதி எடுக்கப் படுகின்றது. இருப்பினும் இரத்தவங்கியில் போதுமான அளவு குருதி சேமிப்பில் இருப்பதில்லை.

அண்மைய ஐரோப்பிய சட்டத் திருத்தமானது, வெளிநாடுகளில் இருந்து குருதி இறக்குமதி செய்வதை அனுமதிக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் அமெரிக்க நிறுவனங்கள், குருதி விற்று கோடிக் கணக்கான டாலர்கள் இலாபம் சம்பாதிக்கின்றன. உலகிலேயே குருதி ஏற்றுமதி செய்யும் நாடுகளில், அமெரிக்கா தான் எழுபது சதவீத பங்கைக் கொண்டுள்ளது. இது தொடர்பாக நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஓர் ஆவணப்படம் ஒளிபரப்பானது. (https://www.npo.nl/zembla/19-04-2017/VARA_101382220

தற்காலத்தில், குருதியானது பிளாஸ்மா வடிவத்தில் சேமிக்கப் படுகின்றது. சிவப்பு நிறமான குருதியில் இருந்து, முக்கியமான கலங்களை மட்டும் பிரித்தெடுத்தால் அது மஞ்சள் நிறமான திரவமாக இருக்கும். அதுவே "பிளாஸ்மா" என்று அழைக்கப் படுகின்றது. சுவிட்சர்லாந்து நாட்டில் பிளாஸ்மா போத்தில் குறைந்தது 1000 - 1500 யூரோவுக்கு சந்தையில் விற்கப் படுகின்றது. அது எங்கிருந்து வருகின்றது என்பதை ஆராய்வதற்காக, சுவிஸ் ஊடகவியலாளர் குழுவொன்று புறப்பட்டது.

சுவிஸ் அரச மருத்துவமனை மருத்துவர்கள் குருதி விற்கும் கம்பனிகள் பற்றிய விபரங்களை தந்துதவினார்கள். அதில் உள்ள விபரங்களின் படி, பெரும்பான்மையான குருதி அமெரிக்காவில் இருந்து வருகின்றது என்று தெரிய வந்தது. அதிலும் குறிப்பாக கிலீவ்லான்ட் பிரதேசத்தில் இருந்தே பெருமளவு குருதி-பிளாஸ்மா இறக்குமதி செய்யப் பட்டுள்ளது. ஆகவே, மேலதிக விபரங்களை திரட்டுவதற்காக, சுவிஸ் ஊடகவியலாளர் குழு அமெரிக்கா, கிலீவ்லான்ட்க்கு பயணமானது.

அமெரிக்காவில் ஏற்பட்ட நிதிநெருக்கடி காரணமாக, 2007ம் ஆண்டுக்குப் பின்னர் கிலீவ்லான்ட் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. அங்கு தற்போதும் பெரும்பாலானோர் வறுமையில் வாழ்கின்றனர். வருமானம் இன்றிக் கஷ்டப் படுகின்றனர். 

அமெரிக்காவில், இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைகள், தமது குருதியை விற்றுப் பிழைக்கிறார்கள். இது ஒரு அமெரிக்கக் கனவின் மறுபக்கம். ஏழைகளை சுரண்டி பணம் சேர்ப்பது வர்த்தக உலகில் ஏற்றுக்கொள்ளப் பட்ட நியதி. அந்த வகையில், அமெரிக்க ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி விற்கும் வணிக நிறுவனங்கள் அதிகரித்து விட்டன. இது ஒரு வகையில் "நவீன காலத்து நரமாமிச வியாபாரம்". 

அமெரிக்காவில் இரத்தம் விற்பனை செய்வதற்கு எந்தத் தடையும் கிடையாது. அதனால் குருதி வாங்கும் நிறுவனங்கள் பகிரங்கமாகவே விளம்பரம் செய்கின்றன. நானூறு டாலர், இருநூறு டாலர் என்று விலைபேசுகின்றன. இரத்தம் விற்றால் பணம் கிடைக்கும் என்பதால், இரத்த வங்கிகளுக்கு முன்னால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஏழைகள் வரிசையில் நிற்கின்றனர். இரத்தவங்கி ஒரு சராசரி தொழிற்சாலை போன்று இயங்குகின்றது.

வணிக நோக்கில் இயங்கும் இரத்த வங்கிக்குள் சுவிஸ் ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதிக்கப் படவில்லை. அதனால் அவர்கள், தெருவில் நின்று குருதி கொடுக்கச் செல்லும் "கொடையாளிகளை" பேட்டி எடுத்தனர். அப்போதும் அந்த நிறுவனம் பொலிசிற்கு அறிவித்து விட்டது. ஊடகவியலாளர்கள் "தெருவில் போவோருக்கு இடையூறு செய்ததாக" தமக்கு முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸ் தெரிவித்தது.

அதனால், மறைத்து வைக்கப் பட்ட கேமராவை கொண்டு சென்று இரத்த வங்கிக்குள் நடப்பவற்றை படமாக்கினார்கள். உள்ளே நூற்றுக்கணக்கான கொடையாளிகள் வரிசையாக படுக்க வைக்கப் பட்டு குருதி சேகரிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. அவர்களிடம் கேட்கப் படும் கேள்விகளும் முக்கியமில்லாதவையாக இருந்தன. தான் எல்லாவற்றிற்கும் "இல்லை" என்று சும்மா சொன்னதாக, வெளியே பேட்டி எடுக்கப் பட்ட ஒருவர் தெரிவித்தார். இன்னொரு இளைஞர் போதைவஸ்து வாங்குவதற்காக குருதி விற்றதாக கூறினார்.

அமெரிக்காவில் ஏழைகளின் அவலத்தை பயன்படுத்தி, வணிக நிறுவனங்கள் அவர்களது குருதியை வாங்கி அதிக இலாபம் வைத்து விற்கின்றன. இதனால் பில்லியன் கணக்கில் இலாபம் சம்பாதிக்கிறார்கள். அமெரிக்காவில் படமாக்கப் பட்ட காட்சிகள் சுவிட்சர்லாந்தில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இருப்பினும், குருதி வாங்கி விற்கும் சுவிஸ் நிறுவனம் ஊடகவியலாளருடன் பேச மறுத்து விட்டது. தலைமையகத்திற்கு சென்ற நேரம் போலீசைக் கூப்பிட்டு வெளியேற்றியது.

இரத்தவங்கிகள் வணிக நோக்கில் செயற்பட்டால் ஏற்படக் கூடிய விளைவுகள் பயங்கரமானவை. 1999 ம் ஆண்டு, பிரான்ஸில் ஒரு மிகப்பெரிய ஊழல் இடம்பெற்றது. குறிப்பிட்ட அளவு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட இரத்தத்தில் HIV எயிட்ஸ் வைரஸ் தொற்றி இருந்தது. முன்கூட்டியே பரிசோதிக்கப் படாத எயிட்ஸ் கிருமி கலந்த இரத்தம் பரிமாறப் பட்டதால் பலர் பாதிக்கப் பட்டனர். அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாரிஸ் நகரில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த ஊழலுக்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகளில் உள்ள இரத்த வங்கிகள், சேமிப்பில் உள்ள இரத்தம் தரமானதா என்பதையிட்டு, ஒன்றுக்குப் பத்து தரம் பரிசோதனை செய்கின்றன.

ஆவணப் படத்தை முழுமையாகப் பார்ப்பதற்கு:

No comments: