Tuesday, April 05, 2016

சோவியத் நாட்டின் சோஷலிச நிறுவன நிர்வாகம் - ஓர் அறிமுகம்


சோவியத் யூனியனில் சோஷலிச பொருளாதார கட்டுமானம் எவ்வாறு இயங்கியது? எத்தனை முதலாளித்துவ அரசியல் ஆர்வலர்கள் அதைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள்? சோவியத் நாட்டில் தொழிலகங்கள் எவ்வாறு நிர்வகிக்கப் பட்டன? நம் நாட்டில், வணிகவியல், பொருளியல், முகாமைத்துவப் படிப்புகளில் பட்டம் வாங்கியவர்களுக்கே அது குறித்த அறிவு கிடையாது. சோஷலிச நாடுகளின் பொருளாதார அமைப்பு, முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இரண்டுக்கும் இடையில் சில ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் உள்ளன. அவற்றை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

சோவியத் யூனியனின் பொருளாதார கட்டுமானம் எப்படி இயங்கியது என்பதை அங்கு நேரில் சென்று ஆராய்ந்து கூறியவர்களை விரல் விட்டு என்னலாம். பொதுவாக மேற்குலக ஊடகங்களினால் பரப்பப் படும் கட்டுக்கதைகளை உண்மை என்று நம்பி ஏமாறுவோர் ஏராளம். ஐம்பதுகளில் சோவியத் யூனியனுக்கு சுற்றுலா சென்ற, அமெரிக்க பொருளியல் நிபுணர் David Granick, அங்கு தான் கண்டவற்றை The Red Executive என்ற நூலாக எழுதி இருக்கிறார். 1960 ம் ஆண்டு வெளியான அந்த நூல் தற்போது விற்பனையில் இல்லை. ஒரு பழைய புத்தகக் கடையில் அதன் டச்சு மொழிபெயர்ப்பு நூல் இருந்ததைக் கண்டு வாங்கி விட்டேன். அதிலிருந்த பல தகவல்களை இங்கே சுருக்கமாக எழுதுகின்றேன். மேலதிக விளக்கம் தேவைப்படுமிடத்து, அதனை அடைப்புக்குறிக்குள் (italic) எழுதி இருக்கிறேன்.


மொஸ்கோ நகரில் சுற்றுலாப் பயணியாக வந்திறங்கிய டேவிட், "இன்டூரிஸ்ட்" எனப்படும் சுற்றுலா மையத்தை தொடர்பு கொண்டு தொழிற்சாலை ஒன்றை பார்வையிட விரும்புவதாக கேட்டிருக்கிறார். வழமையாக மியூசியம், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டும் இன்டூரிஸ்ட் அலுவலகம் அவரது கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இறுதியில் தானாகவே நேரில் சென்று பார்ப்பதென்று முடிவெடுத்து விட்டார். ஒரு டாக்சியை பிடித்து தொழிற்சாலை ஒன்றின் வாசலில் போயிறங்கினார். அதன் தலைமை முகாமையாளரை சந்திக்க வேண்டும் என்பது அவரது நோக்கம். ஆனால், எப்படித் தொடர்பு கொள்வது?

தொழிற்சாலைக்குள்ளே போவதற்கு விசேட பாஸ் வேண்டும். வாயிற் காவலர் பாஸ் கொடுக்கும் இடத்திற்கு செல்லுமாறு அவரை அனுப்பி வைத்தார். அங்கு புதிதாக வேலை தேடி வந்தவர்களுடன் வரிசையில் காத்து நின்று பாஸ் எடுத்து விட்டார். இருப்பினும் நிர்வாகியை சந்திப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இவரது அமெரிக்க பாஸ்போர்ட்டை வாங்கி திருப்பித் திருப்பி பார்த்து விட்டு, பிராந்திய பொருளியல் திணைக்களம் செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.

சோவியத் யூனியனில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழமையான விடயம். தொழிற்சாலைகள், பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களை பார்வையிடுவதற்கு விசேட பாஸ் வைத்திருக்க வேண்டும். எங்கும் எதற்கும் பாஸ் தான். ஆனால், சட்டத்தில் இருக்கும் பல விடயங்கள் நடைமுறையில் கறாராக பின்பற்றப் படுவதில்லை. உக்ரைனில், இளம் கம்யூனிஸ்ட் கழக செயலாளரான இளம் பெண் ஒருவரை டேவிட் சந்திக்க நேர்ந்தது. அப்போது, தான் கம்யூனிஸ்ட் கட்சி அடையாள அட்டையை எப்போதும் கொண்டு திரிவதில்லை என்றும் கூட்டங்களிலும் அதைப் பார்க்காமல் உள்ளே அனுமதித்தார்கள் என்றும் சொன்னார்.

மொஸ்கோ நகர சபையின் அலுலகத்திற்கு சென்ற டேவிட், தொழிற்சாலைகளை பார்வையிட அனுமதி கேட்டிருக்கிறார். அவரை வரவேற்ற அதிகாரிகள், குறைந்தது பத்து தொழிற்சாலைகளின் பெயரைக் கூறுமாறு கேட்டனர். இவர் சொன்ன இடங்களில் எல்லாம் தொலைபேசி அழைப்பு எடுத்து விசாரித்தனர். பல தொழிலதிபர்கள் நேரமில்லை என்று தட்டிக் கழித்தனர். இறுதியில் ஒரு தொழிற்சாலையில் அனுமதி கிடைத்தது. சோவியத் நாட்டில் அரசாங்கம் ஒரு மத்தியஸ்தர் போன்று நடந்து கொள்கின்றது என்பதும், சம்பந்தப் பட்ட நிறுவனமே இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்பதும் அதிலிருந்து தெரிய வந்தது.

சோவியத் முகாமையாளர்களும், அமெரிக்க முகாமையாளர்களும் ஒரே மாதிரியான கல்வித் தகமையை கொண்டிருக்கின்றனர். கணக்கியல், புள்ளி விபரம், முகாமைத்துவம்,அலுவலக நிர்வாகம் போன்ற பாடங்களை படிக்கின்றனர். ஆனாலும், கல்வி அமைப்பில் வித்தியாசம் உள்ளது. அமெரிக்க முகாமையாளர் உயர்தர வணிகக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெறுகின்றார். சோவியத் முகாமையாளர் பொறியியல் கல்லூரியில் படிப்பதால் பொறியியலாளர் பட்டம் பெறுகின்றார். அது மட்டுமல்லாது, படித்து முடிப்பதற்கு முன்னரே தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து அனுபவத்தையும் பெற்றுக் கொள்கிறார்.

பெரும்பாலும் இளம் முகாமையாளர்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே, உள்ளூராட்சி சபைகள் அவர்களுக்கான வெற்றிடங்களை ஒதுக்கி வைத்திருக்கும். இதனால் பட்டம் பெற்ற கையோடு வேலையில் சேர்ந்து கொள்ளலாம். குறிப்பிட்ட ஒரு நகரத்தில் முகாமையாளர் பதவி வெற்றிடத்திற்கு தகுதியான ஆள் கிடைக்கவில்லை என்றால், பத்திரிகையில் விளம்பரம் கொடுப்பார்கள். வேறு இடங்களில் இருந்து விண்ணப்பம் அனுப்புவோரில் தகுதியானவரை சேர்த்துக் கொள்வார்கள்.

அமெரிக்க நிறுவனங்களை நிர்வகிக்கும் முகாமையாளர்கள் பெருமளவு இலாபம் சம்பாதிப்பதை, அல்லது செல்வம் திரட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளனர். அதற்கு மாறாக, சோவியத் தொழிலதிபர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருப்பதுடன், சோஷலிசத்திற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி எடுக்க வேண்டும். சில இடங்களில், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அல்லது செயலாளர் ஒரு தொழிற்சாலை முகாமையாளராக வந்திருக்கிறார்கள். இதை குறித்து வைத்துக் கொண்டு, தொழிலக நிர்வாகத்தையும் கட்சி கட்டுப்படுத்துவதாக சிலர் கருதலாம். அது உண்மையா?

நாங்கள் ஒரு முக்கியமான விடயத்தை மறந்து விட்டுப் பேசுகின்றோம். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாது செயலாளர்கள் கூட, பெரும்பாலும் ஏதாவதொரு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் முழு நேரத் தொழிலாளர்கள், ஓய்வு நேரத்தில் கட்சி வேலைகளை தொண்டு அடிப்படையில் செய்து கொண்டிருப்பார்கள். ஆகவே, தகுதி வாய்ந்த தொழிலாளர் ஒருவர், கட்சி உறுப்பினராக இருந்து, கல்லூரியில் படித்து பட்டம் பெற்று முகாமையாளராக வருவது சாதாரணமான விடயம்.

குறிப்பிட்ட சில விடயங்களில், மேற்கத்திய நாடுகளில் இருந்த அதே அமைப்பு முறை, சோவியத் யூனியனிலும் பின்பற்றப் பட்டு வந்தது. சோஷலிச அரசியல் அமைப்பிலும், எல்லோருக்கும், எல்லா தொழில்களுக்கும், பதவி வேறுபாடின்றி ஒரே சம்பளம் வழங்குவதில்லை. கல்வித் தகுதி, அனுபவத்திற்கு ஏற்றவாறு சம்பளம் அதிகரிக்கும். (சோஷலிச நாடுகளில் எல்லோருக்கும் ஒரே அளவான சம்பளம் வழங்கியதால், உற்பத்தி குறைந்தது என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், அதில் எந்த உண்மையும் கிடையாது. ஆனால், இன்றைக்கும் முதலாளித்துவ நாடுகளில் இருப்பது போன்று, நிர்வாகி தொழிலாளியை விட இருபது மடங்கு அதிகமாக சம்பாதிப்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது.)

சோவியத் யூனியனில், அதிக சம்பளம் வாங்குவோர் அந்தக் காசைக் கொண்டு பெரிதாக எதையும் அனுபவிக்க முடியாது. சொத்துக்களை வாங்கிச் சேர்க்க முடியாது. அதிக பட்சம், தனக்கென சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டிக் கொள்ளலாம். ஆனால், அது கூட ஆடம்பரமான வீடாக இருக்கக் கூடாது. வீட்டின் அமைப்பு எப்படி இருக்கலாம் என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும். (மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இந்த சட்டம் உள்ளது. நாம் நினைத்த மாதிரி கட்ட முடியாது.)

முதலாளித்துவ நாடுகளில் பெரிய நிறுவனங்களை நடத்தும் முகாமையாளர்கள், அதிக சம்பளம் எடுப்பதால் பங்குகளை வாங்கி வைத்திருப்பார்கள். அதன் மூலம் தான் பணி புரியும் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராக இருப்பார். ஆனால், சோஷலிச நாட்டில் அதனை நினைத்துப் பார்க்கவே முடியாது. சோவியத் முகாமையாளர், தனது நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்க முடியாது. இலாபத்தில் பங்கு கிடையாது. தனது பிள்ளைகளை உயர்தரமான தனியார் பாடசாலைக்கு அனுப்ப முடியாது.

ஐம்பதுகளில், ஒரு சராசரி தொழிலாளரின் மாதாந்த சம்பளம் எழுநூறு அல்லது எண்ணூறு ரூபிள்கள். அதே நேரம், தொழிற்சாலையின் தலைமை நிர்வாகி மூவாயிரம் ரூபிள் சம்பாதித்தார். அதை விட மேலதிகமாக 1500 ரூபிள்கள் போனசாக கிடைக்கும். ஆனால், அதிகம் சம்பாதிப்பவர்கள் வருமான வரியாக 13% கட்ட வேண்டும். அது கூட அமெரிக்காவை விடக் குறைவு தான்.

முகாமையாளர்கள் தொழிலாளர்களை விட அதிகமாக சம்பாதித்தாலும் அவர்கள் எப்போதும் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. குறிப்பாக ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில், தொலதிபர்கள், முகாமையாளர்கள் பெருமளவில் பாதிக்கப் பட்டனர். அவர்கள் எந்த நேரமும் கைது செய்யப் படும் ஆபத்து நிலவியது. ஒரே இரவில் பலரது பதவிகள் பறிபோயின.

புரட்சிக்குப் பின்னரான காலத்தில், பொதுவாக முகாமையாளர்கள் மேட்டுக்குடி (பூர்ஷுவா) வர்க்க சிந்தனை கொண்டவர்களாக கருதப் பட்டனர். உயர் மத்தியதர வர்க்க பின்னணி காரணமாக, புரட்சிக்கு எதிரான சதிகளில் ஈடுபடுவார்கள் என்று சந்தேகிக்கப் பட்டனர். தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் திடீரென செயற்படாமல் நின்று விட்டால், நாசவேலை காரணமாக இருக்கலாம் என நம்பப் பட்டது. நாசவேலைக்கு காரணமானவர்கள் என்ற குற்றச்சாட்டில் பல தொழிலதிபர்கள், முகாமையாளர்கள், கைது செய்யப் பட்டனர். ஐம்பதுகளுக்குப் பிறகு அந்தப் பயம் நீங்கி விட்டது.

சோவியத் யூனியனில் அரசு திட்டமிடல் பொருளாதாரத்தை அமுல் படுத்தி வந்தது. அதன் அர்த்தம், ஒரு தொழிற்சாலைக்கு வேண்டிய சகலதும் அரசு வழங்கும். முதலீடு மட்டுமல்லாது, மூலப்பொருட்களையும் அரசு வழங்கியது. ஒரு தொழிற்சாலை எந்தளவு மூலப்பொருள் பாவிக்க வேண்டும், எந்தளவு முடிவுப் பொருட்களை விற்க வேண்டும் என்பதை அரசே தீர்மானித்தது. அதாவது, சந்தைப் படுத்துவது, விற்பனையை அதிகரிப்பது போன்ற விடயங்கள் முகாமையாளர்களின் பிரச்சினை அல்ல. அதை அரசே பார்த்துக் கொள்ளும். (இதனால் விளம்பரங்களுக்கு பெருமளவு பணம் செலவிடுவதும், தொழிலாளர்கள் சுரண்டப் படுவதும் தவிர்க்கப் படுகின்றது. அதற்கு அங்கு இடமேயில்லை.)

ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் எத்தனை தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும், அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்க வேண்டும் என்பதையும் அரசு முடிவெடுத்தது. (குறைந்த பட்ச ஊதிய அளவை விடக் குறைவாக சம்பளம் கொடுக்க கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.) உண்மையில், அரசும், தொழிற்சங்கமும் இணைந்து அது போன்ற முடிவுகளை எடுத்து வந்தன. ஒவ்வொரு தொழிற்துறைக்கும் சம்பளத் திட்டம் மாறுபடும். இது சில மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அதே மாதிரியான திட்டம் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.

அரசு கொடுத்த வளங்களை பயன்படுத்தி தொழிற்சாலைகளை நிர்வகிப்பது மட்டுமே முகாமையாளர்களின் கடமை. முதலீடு செய்யும் உரிமையாளராக அரசே இருப்பதால், விற்பனையினால் கிடைக்கும் இலாபத்தையும் அரசுக்கு கொடுக்க வேண்டும். ஒரு நிறுவனம் எப்படி நடத்தப் பட வேண்டும் என்பதில், முதலாளித்துவ நாடுகளுக்கும், சோஷலிச நாடுகளுக்கும் இடையில் வித்தியாசம் கிடையாது. ஆயினும் சந்தைப் படுத்தலில் வித்தியாசம் உள்ளது. சோஷலிச நாட்டில் விளம்பரம் செய்து அதிகளவு வாடிக்கையார்களை கவர வேண்டிய தேவை இல்லை. வேறு நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டிய அவசியமும் இல்லை.

அதற்காக, விற்பனை தொடர்பாக தொழிலதிபர்களுக்கு சுதந்திரம் இருக்கவில்லை என்று சொல்ல முடியாது. தொழிற்சாலையில் உற்பத்தியான முடிவுப் பொருட்கள், பெருமளவு கொள்வனவு செய்யும் விநியோக நிறுவனத்திடம் விற்கப் படும். விநியோகஸ்தர்கள் சில்லறைக் கடைகளுக்கு கொண்டு சென்று கொடுப்பார்கள். இறுதியில் நுகர்வோர் தான் தரத்தை தீர்மானிக்கிறார்கள். அதனால், நுகர்வோரின் தேவைக்கு ஏற்றவாறு புதிய மாதிரிகளும் சந்தைக்கு வரும்.

நுகர்வோரின் சுவைக்கு ஏற்றவாறு, சற்று ஆடம்பரமாக வடிவமைக்கப் பட்டு விலை கூட்டி விற்கப்படும் பொருட்களும் உண்டு. அந்த ஆடம்பர மாதிரிகளை வடிவமைப்பதும், அவற்றின் விலைகளை தீர்மானிப்பதும் தொழிலதிபர்களின் பொறுப்பு. அதில் அரசு தலையிடுவதில்லை. ஆனால், ஒரு பொருளின் அடிப்படை விலை எதுவென அரசு மட்டுமே தீர்மானிக்கும். உண்மையில், ஒரு பொருளின் விலையை உற்பத்திச் செலவுகள் தீர்மானிக்கின்றன என்பது தெரிந்த விடயம். அதற்கும் சற்று அதிகமான விலையில் சந்தையில் விற்கப் படும். ஆனால், அத்தியாவசியப் பொருட்கள் அனைவரும் வாங்கும் விலையில் இருக்க வேண்டும். அதற்காக கணிசமான அளவுக்கு விலையை குறைத்து விற்பார்கள். துண்டு விழும் தொகையை அரசு மானியம் ஈடுகட்டும்.

ஒவ்வொரு தொழிற்சாலையின் தொழிலாளர்களும், கோடை கால விடுமுறையை தமது பிள்ளைகளுடன் களிப்பதற்கு உரிமை உண்டு. கடற்கரை போன்ற சுற்றுலாத் ஸ்தலங்களில் தங்குமிட வசதி செய்து கொடுக்கப் படும். தொழிலாளர்களுடன் அவர்களது பிள்ளைகளும் தங்கிக் கொள்ளலாம். தொழிலாளர்களின் சுற்றுலா செலவு முற்றிலும் இலவசம். பிள்ளைகளுக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு பிள்ளைக்கு அதிக பட்சம் தொண்ணூறு ரூபிள்கள் (அன்றைய மதிப்பில் பத்து அமெரிக்க டாலர்கள்) கட்ட வேண்டியிருக்கும். இருப்பினும் பல நிறுவனங்கள் பிள்ளைகளுக்கும் இலவச பயணச் சீட்டு வழங்கின. தொழிலதிபருக்கு விதிக்கப்பட்ட கடமைகளில், கோடைகால விடுமுறைகளை ஒழுங்கு படுத்தும் பொறுப்பும் அடங்கும்.

2 comments:

சீனிவாசன் said...

முகாமைத்துவம் என்றால் நிர்வாகம் எனும் பொருளா? இந்த வார்த்தையை தமிழ்நாட்டில் உபயோகிப்பதில்லை. சோசலிச நாட்டில் அனைவருக்கும் ஒரே சம்பளமென்றே இத்தனை காலமும் நினைத்திருந்தேன், பல புதிய தகவல்களை தங்களது கட்டுரை அளிக்கிறது..

உடல் உழைப்பு வேலைக்கும் ,மூளை உழைப்பு வேலைக்கும் இடையிலான பாகுபாடு அங்கு எவ்வாறு இருந்தது? அனைவருக்கும் கல்வி எனில் பெரும்பாலோனோரின் தேர்வு மூளை உழைப்பாகத்தானே இருக்கும்? தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு வராதா?அப்பொழுது.

தொழிலாளிக்கும் ஆலை நிர்வாகத்திற்கும் இடையே இருந்த உறவென்ன? அவர்கள் நிர்வாகத்திலும் பங்கு கொண்டனரா? தொழிலாளர்களே தொழிற்சாலையை நடத்தினரா?

தொழிலாளர்கள் தாங்கள் விரும்பிய இடத்தில் பணிபுரியும் சுகந்திரம் இருந்ததா? ஒரு தொழிற்சாலையில் பணிபுரிய விருப்பமில்லையெனில் வேறொரு இடத்தில் பணிபுரிய முடியுமா?

சிறப்பாக பணிபுரியும் தொழிலாளர்கள் எங்கனம் ஊக்கம் பெற்றனர்?, வேலையே செய்யாமல் ஏய்க்கும் நபர்கள் எந்த மாதிரியான தண்டனையை பெற்றனர்?

திறனற்ற நிர்வாகிகளை தொழிலாளர்களால் நீக்க முடியுமா? இன்றைய முதலாளித்துவ அமைப்பு முறையில் பல நிறுவனங்களில் மேலாளர்கள் எந்த தகுதியுமின்றி பல ஆண்டுகள் பொழுது போக்கி கொண்டுள்ளனர். அம்மாதிரி ஆட்களை சோசலிசம் என்ன செய்தது?

தொழிலாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் சம்பள வேறுபாடு உள்ளது என்று குறிப்பிட்டிருந்தீர்கள், கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளில் இவர்களுக்கும் இவர்களின் குடும்பத்தினருக்கும் வேறுபாடு இருந்ததா?

சொத்துரிமை இல்லாததால், அதிகம் சம்பளம் பெற்ற நிர்வாகிகள் அதை வைத்து என்னதான் செய்ய முடியும்? கார் உள்ளிட்ட ஆடம்பர பொருள்களை அவர்கள் நுகர முடியுமா?

அருமையான கட்டுரை தோழர், சோவியத் யூனியன் என்பது உலகப்பாட்டாளி வர்க்கம் இழந்த சொர்க்கம்! சோவியத் யூனியன் குறித்து ஆங்காங்கு நீங்கள் எழுதினாலும், அன்றைய சோவியத் யூனியனின் வாழ்க்கை முறை குறித்து ஒரு தொடராய் வாய்ப்பிருக்கையில் எழுத வேண்டும்.

Kalaiyarasan said...

நன்றி தோழர் சீனிவாசன்.
முகாமைத்துவம் என்றால் Management, நிர்வாகம் என்றும் சொல்லலாம். அந்தச் சொல் இந்தியாவில் பாவனையில் இல்லை என்பது எனக்குத் தெரியாது.
நான் இங்கே அந்த நூலில் எழுதி இருந்தவற்றை மொழிபெயர்த்து போட்டிருக்கிறேன். இது முதலாவது அத்தியாயம் மட்டும் தான். நூலை முழுவதும் வாசித்தால் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம். மேலும் இந்த எழுத்தாளர் கம்பனி நிர்வாகிகளை பற்றி மட்டும் ஆராய்ந்திருக்கிறார். புத்தகத்தின் தலைப்பும் அது தானே.