Monday, October 06, 2014

ஓநாய் அம்மா நனைகிறதென்று அப்பாவித் தமிழ் ஆடுகள் அழுகின்றன

அம்மா நெருப்பில் குளிர் காயும் இந்து பாஸிசம்

"ஒரு தமிழன் முதலமைச்சர் ஆக வந்தால், தமிழ் நாட்டில் பாலும் தேனும் ஆறாக ஓடுமென்று" சொன்னார்கள். இப்போது ஒரு தமிழர் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். அதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டிய தமிழ் தேசியவாதிகள், எதற்காக சிறையில் இருக்கும் கன்னட அம்மாவுக்காக அழுகிறார்கள்? அதனால் தான் தமிழ் மக்கள் அவர்களை "போலித் தமிழ் தேசியவாதிகள்" என்று அழைக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த நேரம், ஈழத் தமிழர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடாத, ஒரு வார்த்தை கண்டனம் தெரிவிக்காத ஜெயலலிதா, தேர்தல் வெற்றிக்காக "ஈழத் தாய்" வேடமிட்டார். ஒரு காலத்தில் புலிகளால் தீவிரமாக வெறுக்கப் பட்ட முன்னாள் முதல்வரை, பிந்திய புலி ஆதரவாளர்கள் தமது மீட்பராக நம்பியது ஒரு வரலாற்று முரண்நகை.

இலங்கையில் சிங்கள இனவாதிகளின் கோஷங்களை தனதாக்கிக் கொண்ட ராஜபக்சவின் பாணியை பின்பற்றி, தமிழகத்தில் ஜெயலலிதா தமிழினவாதிகளின் கோஷங்களை தனதாக்கிக் கொண்டார். 

ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், சிங்கள தேசத்திற்கு உள்ளூர மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும். இருப்பினும், அதைக் காட்டிக் கொள்ளாமல், ஜெயலலிதாவின் தமிழீழ ஆதரவு வாய்ச் சவடால்களை, சிங்கள மக்களுக்கு எதிரான ஆபத்தாக பரப்புரை செய்து வந்தது.

ஜெயலலிதா, சிங்கள அரசியல்வாதிகளின் பரஸ்பர அரசியல் சித்து விளையாட்டுகளை உண்மை என்று நம்பும் போலித் தமிழ் உணர்வாளர்கள், இன்றைக்கும் ஜெயலலிதாவை ஆதரிக்கின்றனர். போலித் தமிழ் தேசியவாதிகளை நலமடித்து, அவர்களை அரசியல் அரங்கில் இருந்து ஓரங் கட்டிய ஒருவரை, குற்றவாளியாக இருந்தாலும் "ஈழத் தாய்" என்று பாசம் காட்டுகின்றனர். அவரது குற்றங்களுக்காக விழுந்து விழுந்து வக்காலத்து வாங்குகின்றனர்.

ஈழத்தை சேர்ந்த தமிழ் தேசிய அரசியல் ஆர்வலர்களும், ஜெயலலிதா வைத்த பொறிக்குள் மாட்டிக் கொண்டு தவிப்பதைக் காணும் பொழுது, அவர்கள் மேல் பரிதாபமே உண்டாகின்றது.

2 comments:

வலிப்போக்கன் said...

உங்களுக்கு பரிதாபம் வருகிறது. எங்களுக்கு அவர்கள் மேல் கோபம் வருகிறது.

Unknown said...

நான் யார் பக்கமும் பேசவில்லை.
என்ன இருந்தாலும் ஒரு மாநிலத்தின் முதல்வரை ஓநாய் என்று உவமைப் படுத்துவது தங்களைப் போன்ற சிறந்த எழுத்தாளருக்கு அழகல்ல.