Wednesday, September 25, 2013

மெட்ராஸ் கபே : இந்திய பிராந்திய நலன்களின் விஸ்வரூபம்

ரோஜா படத்தில் காஷ்மீர் போராளிகளை வில்லன்களாக சித்தரித்தார்கள். விஸ்வரூபம் படத்தில் இந்தியர்களுடன் எந்த சம்பந்தமும் இல்லாத தாலிபான் போராளிகள் வில்லன்களாக காட்டப் பட்டார்கள். அந்த அரசியல் பிரச்சாரப் படங்களை பார்த்துப் பாராட்டிய தமிழர்கள், மெட்ராஸ் கபே படம் வந்த பின்னர் தான் விழித்துக் கொண்டார்கள். ரோஜா, விஸ்வரூபம், மெட்ராஸ் கபே ஆகிய மூன்று படங்களும், இந்திய மத்திய அரசின் வெளிவிவகார கொள்கைக்கு அமைய எடுக்கப் பட்டவை.


மேற்குறிப்பிட்ட சினிமாப் படங்களை தயாரித்தவர்கள், காஷ்மீர் போராளிகள், தாலிபான்கள், புலிகள் ஆகிய இயக்கங்களை வேறு படுத்திப் பார்க்கத் தெரியாதவர்கள். மணிரத்தினம்(ரோஜா), கமலஹாசன்(விஸ்வரூபம்), ஷூஜித் சிர்கார் (மெட்ராஸ் கபே) ஆகிய தயாரிப்பாளர்கள், இந்திய மத்திய அரசின் உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகளை அனுசரித்து தான் தமது திரைப்படங்களை தயாரித்துள்ளனர். அதனைப் புரிந்து கொள்ளாமல், ஒரு குறிப்பிட்ட திரைப்படத்திற்கு மாத்திரம் எதிர்ப்புக் காட்டுவதன் மூலம், இந்திய அரசின் வெளிவிவகார கொள்கையில் மயிரளவு மாற்றத்தை கூட உண்டாக்க முடியாது.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் வெளியான பொழுதே, அது விடுதலைப் புலிகளையும் கொச்சைப் படுத்துகின்றது என்று எழுதினேன். (விடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம்; http://kalaiy.blogspot.nl/2013/02/blog-post_16.html) அப்போது அதனை அலட்சியப் படுத்திய தமிழ் இன உணர்வாளர்கள், மெட்ராஸ் கபே வெளியான பின்னராவது புரிந்து கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே. அதுவே இந்திய மத்திய அரசின் பலமாகும். நமது தமிழ் இன உணர்வாளர்கள் போன்ற, சிறுபான்மையின அரசியல் ஆர்வலர்களின் அலட்சிய மனோபாவமே, மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்களை தயாரிக்க ஊக்குவிக்கின்றது.

மெட்ராஸ் கபே படத்தை பற்றி, இதுவரையில் நிறைய விமர்சனங்கள் வந்து விட்டன. ஆனால், அந்த விமர்சனங்களில் எல்லாம், படத்தின் கதைக்கருவின் ஒரு பகுதி (வேண்டுமென்றே) இருட்டடிப்பு செய்யப் படுகின்றது. மெட்ராஸ் கபேக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும், ஏற்கனவே படத்தை பார்த்து விட்ட தமிழ் தேசிய இன உணர்வாளர்களும் கூட, அதைப் பற்றிக் குறிப்பிடாமல் கடந்து செல்கின்றனர். அவர்களது வழமையான மேலைத்தேய விசுவாசம், வாயையும், கையையும் கட்டிப் போட்டிருக்கலாம்.

இலங்கை - இந்திய ஒப்பந்தம், யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவப் பிரசன்னம், புலிகளின் போர், ராஜீவ் காந்தியின் கொலை, போன்ற சரித்திர சம்பவங்களை வைத்து திரைக்கதை புனையப் பட்டுள்ளது. இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை, இன்றைய தலைமுறையினருக்கு கூற வேண்டிய தேவை என்ன? அதுவும், புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப் பட்ட பின்பு, அது தொடர்பான அச்சம் அகன்ற பின்னர், இதைப் போன்ற படத்தை எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

மெட்ராஸ் கபே, "புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் கெட்டவர்களாக காண்பிக்கின்றது" என்பது, புலி ஆதரவாளர்களின் வாதம். அந்தக் குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை. ஆனால், அது மட்டுமே திரைக்கதையின் மையக் கரு அல்ல. தமிழில் அர்ஜுன், விஜயகாந்த் நடித்த "தேசபக்தி படங்களில்" காஷ்மீர் அல்லது இஸ்லாமியவாத தீவிரவாதிகளை கொடூரமானவர்களாக சித்தரிப்பதைப் போன்றது தான் இதுவும். வட இந்தியர்களைப் பொறுத்தவரையில், மெட்ராஸ் கபே "தேசபக்தி படங்கள்" எனும் வகையறாவை சேர்ந்தது. தமிழர்களுக்கு காஷ்மீர் போராட்டத்தின் நியாயத்தன்மை எதுவும் தெரியாதது போன்று, வட இந்தியர்களுக்கும் (ஈழத்) தமிழரின் போராட்டத்தின் நியாயம் குறித்து அக்கறை கிடையாது.

படத்தின் தொடக்கத்திலேயே, சில ஆயுதமேந்திய இளைஞர்கள் பேரூந்து வண்டி ஒன்றை மறித்து, (தமிழர்களை பிரித்தெடுத்து விட்டு) அதில் வந்த சிங்களப் பயணிகளை சுட்டுக் கொல்கின்றனர். புலிகளைப் பற்றிய எதிர்மறையான சித்திரம் ஒன்றை பார்வையாளர் மனதில் பதிய வைக்கும் உத்தி இது. "புலிகள் ஒருபோதும் சிங்களப் பொதுமக்களை கொல்லவில்லையா?" என்று படத் தயாரிப்பாளர்கள் கேட்கலாம்.  (தமிழினவாதிகளைப் பொறுத்தவரையில், சிங்களப் பொதுமக்கள் மீதான தாக்குதல் என்பது ஒரு நியாயமான எதிர்வினை.) ஆனால், படம் முழுக்க வரும் இந்திய இராணுவமும், ஓரிரு காட்சிகளில் மட்டும் தலைகாட்டும் ஸ்ரீலங்கா படையினரும், "சாதாரண பொதுமகனுக்கு எந்தவொரு தீங்கும் இளைக்காதவர்கள் " போன்று காட்டுவது தான், மெட்ராஸ் கபேயின் பக்கச்சார்புத் தன்மையை வெளிப்படுத்துகின்றது. 

ஈழப்போர் வரலாற்றில் நடந்த உண்மைக் கதைகள் பல திரைப்படத்தில் கூறப் பட்டுள்ளன. சில பெயர்களை மட்டும் மாற்றி இருக்கிறார்கள். புலிகளைக் குறிக்கும் எல்.டி.டி.ஈ.(LTTE) என்பதை, எல்.டி.எப். (LTF) என்று மாற்றி இருக்கிறார்கள். அது போன்று பிரபாகரன் என்பதை பாஸ்கரன் என்று மாற்றினாலும், இந்தப் பெயர்கள் யாரைக் குறிப்பிடுகின்றன என்பதை புரிந்து கொள்வது பார்வையாளர்களுக்கு கடினமானதல்ல. 

"இந்திய உளவுப் பிரிவான RAW, இன்னும் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால், ராஜீவ் காந்தி கொலையை தவிர்த்திருக்கலாம்" என்ற கோணத்தில் இருந்து கதை சொல்லப் படுகின்றது. படம் முழுக்க முழுக்க இந்திய அரசின் பிராந்திய நலன் சார்ந்து எடுக்கப் பட்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை. "இந்திய இராணுவம், ஈழத் தமிழர்களுக்கு நல்ல தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க இலங்கை சென்றதாகவும், புலிகள் அதனை குழப்பியதாகவும்" காட்டப் படுகின்றது. இது ஏற்கனவே பல தடவைகள் கேட்டுக் கேட்டு புளித்துப் போன இந்திய அரசின் பிரச்சாரம் தான். 

ஈழப்போர் தொடங்கிய 1983, 1984 காலப்பகுதியில், இந்தியா தனது படைகளை அனுப்பி பிரச்சினையை தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை, ஈழத் தமிழர்களிடம் இருந்தது உண்மை தான். இன்றைக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் போன்றவர்கள் மத்தியில் இன்னமும் இந்தியா மீதான நம்பிக்கை போகவில்லை. ஆனால், முப்பது வருட காலத்திற்குள் பல திருப்புமுனைகள் ஏற்பட்ட பின்னரும், ஈழத் தமிழர்கள் இன்னமும் எண்பதுகளில் வாழ்வதாக நினைத்துக் கொள்வது தான் அபத்தமானது. அது தான் மெட்ராஸ் கபே திரைக்கதையின் மிகப் பெரிய ஓட்டை. 


வட இலங்கையில், யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலத்தில் தொடங்கும் கதை, ராஜீவ் காந்தி கொலையுடன் முடிவடைகின்றது. இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச் சாத்திடப் பட்ட பின்னர், புலிகள் ஆயுதங்களை ஒப்படைப்பதாக போக்கு காட்டி விட்டு, இந்திய இராணுவத்துடன் யுத்தம் ஒன்றை ஆரம்பித்தனர். அப்போது இரகசிய நடவடிக்கை ஒன்றுக்காக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப் படும் RAW அதிகாரி விக்ரம் (John Abraham) தான் படத்தின் கதாநாயகன். 

விக்ரமுக்கு கிடைத்த பணிகள் மிகவும் கடினமானவை. அந்த RAW அதிகாரி யாழ்ப்பாணம் சென்ற நோக்கம் நிறைவேறி இருந்தால், ராஜீவ் கொலை நடந்திருக்காது என்பது மெட்ராஸ் கபே முன்வைக்கும் வாதம். அது சரி, RAW நிறைவேற்ற விரும்பிய இரகசிய (சதித்) திட்டம் என்ன? 

  1. LTF தலைவர் பாஸ்கரனை ஒரு உடன்பாட்டிற்கு கொண்டு வர முடியாது. அவர் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு முரட்டுப் பிடிவாதத்துடன் போரை நடத்துகின்றார். அதனால், LTF க்கு போட்டியாக உள்ள ஸ்ரீ (வரதராஜப் பெருமாள்?) குழுவை பலப் படுத்த வேண்டும். அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்கள் கொடுத்து புலிகளுடன் மோத விட வேண்டும்.
  2. LTF இயக்கத்தின் உள்ளே பிரிவினையை உண்டாக்க வேண்டும். இந்தியாவுக்கு விசுவாசமான இரண்டாம் மட்டத் தலைவரான மல்லையா (மாத்தையா?) தலைமைப் பொறுப்பை ஏற்றால், அந்த இயக்கத்தை வழிக்கு கொண்டு வருவது இலகு. 


மேற்குறிப்பிட்ட இரண்டும், ஏற்கனவே RAW வினால் நிறைவேற்றப் பட்டு தோல்வியுற்ற சதித் திட்டங்கள் ஆகும். அனால், அது குறித்த சுய விமர்சனம் எதையும் முன்வைக்காமல், "மேற்குலகின் ஊடுருவல், எதிரிக்கு தகவல் கொடுக்கும் RAW உளவாளி" என்று கதை வேறு திசையில் தாவுகின்றது. புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர் கூட, ENDLF, EPRLF போன்ற இயக்கங்கள் ஆயுதங்களை வைத்திருந்தன. அந்த துணைப் படையினர், தமிழக அகதி முகாம்களில் தங்க வைக்கப் பட்டிருந்தனர். இந்திய இராணுவத்துடன் கூட்டி வரப் பட்டனர். ஆகவே, புலிகள் யுத்தத்தை தொடங்கிய பின்னர் தான், இந்தியா எதிர்க் குழுக்களுக்கு ஆயுதம் வழங்க முன்வந்தது என்பது ஒரு வரலாற்றுத் திரிப்பாகும்.

இந்திய இராணுவம் புலிகளுக்கு எதிரான தமிழ்க் குழுக்களுக்கு ஆயுதங்களையும், பாதுகாப்பையும் வழங்கி இருந்தது. அப்படி இருந்தும் புலிகளை அழிக்க முடியாமல் போனது. புலிகளின் புதிய நண்பர்களான, பிரேமதாச அரசு, மற்றும் மேற்குலகின் தொடர்பு மட்டும் அதற்கு காரணம் அல்ல. அவை எல்லாவற்றையும் விட, புலிகளுக்கு இருந்த தமிழ் மக்களின் ஆதரவு, மற்ற இயக்கங்களுக்கு இருக்கவில்லை என்பதும் உண்மை தான். அந்தக் குறையை நிவர்த்தி செய்யாமல், ஆயுதங்களை மட்டும் கொடுத்து விட்டு, இந்தியாவின் நலன்களை காப்பாற்றி இருக்க முடியுமா?

இதுவரை காலமும், வதந்தி வடிவில் பேசப்பட்ட  மாத்தையா பற்றிய கதைகளை, மெட்ராஸ் கபே உண்மை என்று நிரூபித்துள்ளது. பிரபாகரனும், மாத்தையாவும் வன்னிக் காடுகளுக்குள் இரண்டு படையணிகளுடன் மறைந்திருந்தனர். இந்தியப் படையினரின் சுற்றிவளைப்புகளால் இரண்டு தலைவர்கள் மத்தியில் தொடர்பில்லாமல் இருந்தது. இந்திய இராணுவத்தின் மிகப் பெரிய படை நடவடிக்கை ஒன்றில், பிரபாகரன் கொல்லப் பட்டதாக அன்று நம்பப் பட்டது. அந்தத் தகவலுடன், மாத்தையா தலைவரான தகவலும் இந்திய அரசினால் பரப்பப் பட்டது. அது வெறும் வதந்தி என்று சொல்வதை விட, தோல்வியடைந்த சதித் திட்டத்தின் பெறுபேறு என்று கூறுவதே தகும். மெட்ராஸ் கபே படமும் அதனை உறுதிப் படுத்துகின்றது.

இதுவரை காலமும் பேசப் படாத முக்கியமான உண்மை ஒன்று, மெட்ராஸ் கபே படத்தில் வலியுறுத்திக் கூறப் படுகின்றது. மெட்ராஸ் கபே திரைப்படம் அழுத்திக் கூறும் செய்தி இது தான்: "இலங்கை இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்திற்கு உட்பட்ட நாடு. ஈழப்போரை முடிவுக்கு கொண்டு வரவும், ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வைக் கொடுக்கவும் இந்தியாவால் முடிந்திருக்கும்..... ஆனால்...ஆனால்... மேற்கத்திய நாடுகள் அதனை விரும்பவில்லை." இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடர வேண்டும் என்று அவை விரும்பின. இலங்கையில் போர் நடந்தால் ஆயுத விற்பனை அதிகரிக்கும். அதனால் சிங்கப்பூரில் உள்ள முகவர் ஒருவர் (KP?) மூலம், மேற்கத்திய நாடொன்று புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகின்றது.

ராஜீவ் காந்தி போரை முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறார். அதனால் அவரின் கதையை முடித்து விட வேண்டும் என்று தீர்மானிக்கப் படுகின்றது. ராஜீவை கொலை செய்வதற்கான சதித் திட்டம், மேற்கத்திய நாடொன்றினால் தீட்டப் படுகின்றது. ராஜீவ் இலங்கையில் சமாதானத்தை கொண்டு வந்து விட்டால் (?), சர்வதேச ஆயுத விற்பனை படுத்து விடும் என்ற அச்சம் காரணம். பல மூன்றாமுலக நாடுகளில் நடக்கும் போர்களுக்கும், பன்னாட்டு ஆயுத நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு இரகசியமானதல்ல. 


ராஜீவை கொலை செய்யும் சதித் திட்டத்திற்காக, பெருமளவு பணம் கைமாறுகின்றது. (ஏற்கனவே CIA உளவாளியாக அறியப்பட்ட) RAW மேலதிகாரி ஒருவர், அந்த சதிக்கு உடந்தை ஆகிறார். மேலைத்தேய உளவு நிறுவனம் ஒன்று, அந்த அதிகாரியை பெண் தொடர்பு ஒன்றின் மூலம் சிக்க வைத்து, தனது காரியங்களை சாதித்துக் கொள்கின்றது. மெட்ராஸ் கபே பற்றிய விமர்சனம் எழுதிய தமிழினவாதிகள் சிலர், இந்தப் படத்தில் "மலையாளிகளை நல்லவர்களாகவும், தமிழர்களை கெட்டவர்களாகவும்" காட்டி இருப்பதாக எழுதியுள்ளனர். அது ஒரு தவறான கருத்து. 

உதாரணத்திற்கு, பாலகிருஷ்ணன் என்ற RAW மேலதிகாரி, படத்தில் வரும் முக்கியமான கதாபாத்திரம் ஆவார். அவரை ஒரு மலையாளியாகத் தான் காட்டுகின்றனர். திரைப்படத்தில், "பாலா என்ற மலையாளி" புலிகளின் நெருக்கமான நண்பராக காட்டப் படுகின்றார். ஸ்ரீ குழுவிற்கு ஆயுத விநியோகம் செய்யப் படும் தகவலை கசிய விடுகின்றார். கடற்கரையில் வந்திறங்கும் வெளிநாட்டு ஆயுதங்கள், புலிகள் கையில் போய்ச் சேர்வதற்கு உதவுகிறார். தனது வழியில் குறுக்கே வரும் கதாநாயகனை கடத்திச் செல்லுமாறு புலிகளுக்கு காட்டிக் கொடுக்கிறார். கதாநாயகனின் மனைவி கொலை செய்யப்படுவதற்கும் காரணமாகின்றார். இறுதியில் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் சதித் திட்டம் பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்புகளை அழிக்கிறார்.   

ராஜீவ் கொலை போன்ற அரசியல் படுகொலைகளை நிறைவேற்றுவதற்காக, உலகில் எங்கோ ஒரு மூலையில் திடீரென முளைக்கும் வங்கி ஒன்று, அதன் தேவை முடிந்ததும் கலைக்கப் படுகின்றது. அதனால், சதியில் சம்பந்தப் பட்ட நபர்கள், பணப் பரிமாற்றம் சம்பந்தமான தகவல்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இது போன்ற சம்பவம் ஒன்றுக்காகவே, புலிகளின் ஆயுத முகவர் கேபி யை தன்னிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கேட்டுக் கொண்டிருந்தது. மேலும், ராஜீவ் காந்தி கொலையில், இஸ்ரேலிய மொசாட் சம்பந்தப் பட்டிருந்தமை கூட ஏற்கனவே தெரிந்த விடயம் தான்.

நீண்ட காலமாகவே, "இந்தியாவுக்கு சீனாவிடம் இருந்து ஆபத்து வருகின்றது" என்று தமிழினவாதிகள் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கருதுகோளுக்கு மாறாக, "இந்திய நலன்களுக்கு எதிரான ஆபத்து மேற்குலகில் இருந்தே வருகின்றது." என்பதை மெட்ராஸ் கபே அழுத்திக் கூறுகின்றது. ஈழத் தமிழரின் பிரச்சினையானது, இந்திய, சர்வதேச நலன்களுடன் பின்னிப் பிணைந்துள்ளதை மறுப்பதற்கில்லை.

ஈழத் தமிழர் பிரச்சினையை கையாள்வதில் இந்தியா விட்ட நடைமுறைத் தவறுகளை எல்லாம், புலிகள் அல்லது மேற்கத்திய நாடுகளின் தலையில் சுமத்தி விட்டு தப்ப முடியாது. இந்திரா காந்தியின் அரசியல் சாணக்கியம், ராஜீவ் காந்தியிடம் இருக்கவில்லை என்று அவரது ஆட்சிக் காலத்திலேயே விமர்சிக்கப் பட்டார். ராஜீவ் காந்தியின் அதிரடித் தீர்வு அரைவேக்காட்டுத் தனமாக அமைந்தது மட்டுமின்றி, அதுவே இலங்கையில் அமெரிக்க வல்லூறு காலூன்றவும் காரணமாகியது.


சினிமா தொடர்பான முன்னைய பதிவுகள்:
5.விடுதலைப் புலிகளையும் புண்படுத்திய விஸ்வரூபம்

2 comments:

Anonymous said...

hi anna naan unkada blogspot thavaramal vasikiranan please write kashimir pirachanai patri. anku enna unmayana pirachanai

Kalaiyarasan said...

வணக்கம், நான் ஏற்கனவே காஷ்மீர் பிரச்சினை பற்றி சில கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். அவற்றை இந்த வலைப்பூவில் தேடி பார்க்கலாம்.