Monday, September 23, 2013

தேர்தலில் மலர்ந்த "தமிழர் அரசு"! - ஓர் ஆய்வு



இலங்கையில் நடந்த முதலாவது வட மாகாண சபைக்கான தேர்தல், எதிர்பார்த்த படியே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்துள்ளது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம், 13 ம் திருத்தச் சட்டம் மூலம் நடைபெற்று வரும் மாகாண சபைகளினால், இன்று வரையில் வடக்கு-கிழக்கை தவிர்ந்த பகுதிகளை சேர்ந்த மக்களே இலாபமடைந்துள்ளனர்.

எண்பதுகளின் இறுதியில், இந்திய இராணுவம் குவிக்கப் பட்டிருந்தும், அன்று வடக்கும் கிழக்கும் இணைந்திருந்த மாகாண சபைக்கு, வட மாகாணத்தில் தேர்தல் நடத்த முடியவில்லை. "ஒரு பிராந்திய வல்லரசான இந்தியாவால் முடியாத காரியத்தை தான் சாதித்துக் காட்டி விட்டதாகவும், ஜனநாயகத்தை மீட்டு விட்டதாகவும்," ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இனிமேல் பீற்றிக் கொள்ளலாம். உண்மையில் இந்தியாவும் இந்த தேர்தலை நடத்துவதில் தன்னாலான பங்களிப்பைச் செலுத்தியுள்ளது.

ஈழப்போர் முடிந்த பின்னர், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் இரண்டு தடவைகள் நடத்தப் பட்டாலும், வட மாகாண சபைக்கான தேர்தல் காலவரையறை இன்றி பின்போடப் பட்டு வந்தது. இறுதியில் இந்தியா, மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக தேர்தல் நடத்தப் பட்டது. ஜனாதிபதியும், ஆளும் சுதந்திரக் கட்சியும் எந்தக் காரணத்திற்காக தேர்தலை பின்போட்டார்களோ, அது நடந்து விட்டது. இன்று தமிழ் தேசியத்தையும், புலிகளுக்கு பின்னான அரசியலையும் முன்னெடுப்பதாக கருதப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. 

மத்திய அரசில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, "அபிவிருத்திப் பணிகள்" என்ற மாயமானைக் காட்டி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்து மண் கவ்வியுள்ளது. மிக முக்கியமான அபிவிருத்தித் திட்டங்கள், தேர்தலை ஒட்டியே பூர்த்தி செய்யப் பட்டன. தேர்தல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான், புனரமைக்கப்பட்ட A - 9 சாலை திறந்து விடப் பட்டது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் இருப்பதைப் போல, "கார்பெட் சாலை" அமைக்கப் பட்டதினால் போக்குவரத்து இலகுவானது. அதே போன்று, கிளிநொச்சி வரையிலான ரயில் சேவை, தொண்டமானாறு பாலம் என்பனவும் பொது மக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்தன என்பதை மறுப்பதற்கில்லை. 

வட மாகாண சபை தேர்தல் நடப்பதற்கு முன்னர், சில தினங்களுக்கு முன்னர், யாழ்தேவி புகையிரதம் கிளிநொச்சி வரை வந்தது. அதற்காக கிளிநொச்சி வந்து திறந்து வைத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அப்போது நடந்த பொதுக் கூட்டத்தை, தேர்தல் பிரச்சார மேடையாக பாவித்தார். இதே போன்று, தொண்டமானாறு பாலம் திறப்புவிழாவும் தேர்தல் பிரச்சார உத்தியாகவே நடந்தது. A - 9 பாதையில் செல்லும் வாகனங்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக, சாவகச்சேரி நுணாவில் பகுதியில் பிரமாண்டமான எரிபொருள் நிரப்பு நிலையம் கட்டப்பட்டது. அமைச்சர் பசில் ராஜபக்ச அதனை திறந்து வைத்தார். 

மேற்குறிப்பிட்ட "அபிவிருத்திப் பணிகள்" மூலம், ஐ.ம.சு.கூ. வுக்கு தமிழ் மக்களை வாக்களிக்க வைக்கலாம் என்று ஆளும் கட்சியினர் கனவு கண்டிருக்கலாம். ஆனால், இது போன்ற தேர்தல் கால தந்திரம் எதுவும், தமிழ் மக்களை ஏமாற்றவில்லை. அபிவிருத்தி பற்றி ஒரு வார்த்தையேனும் பேசாத, திரும்பத் திரும்ப தமிழர் உரிமைப் பிரச்சனைகளை பற்றி மட்டுமே பேசும், த.தே.கூ. வுக்கு மக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர். த.தே.கூ. தலைவர்கள், தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் அரசின் அபிவிருத்தித் திட்டங்களை விமர்சிக்கத் தயங்கவில்லை. "கார்பெட் வீதி போட்டிருக்கிறார்கள். யாருக்காக? எமக்காகவா? இல்லை. தென்னிலங்கை முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும், எமது வளங்களை சுரண்டிச் செல்வதற்காக போட்டார்கள்." என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் மேடை தோறும் முழங்கினார். அதிலே உண்மையில்லாமலில்லை. எங்கேயும் முதலாளித்துவத்தின் தேவைகளுக்காகவே நெடுஞ்சாலைகள் அமைக்கப் படுகின்றன.

நெடுஞ்சாலைகளும், வேறு சில அபிவிருத்திப் பணிகளும் வாக்குகளை அறுவடை செய்யாதற்கு காரணங்கள் இருக்கின்றன. யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையான A - 9 பாதையினால் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு பலனேதும் ஏற்படவில்லை. வசதியுள்ள மத்தியதர வர்க்கத் தமிழர்கள் அந்த அபிவிருத்தியால் பயனடைந்துள்ளனர். ஆனால், அவர்களது வர்க்க நலன்களை பிரதிநிதித்துவப் படுத்தும் த.தே.கூ. க்கு மட்டுமே வாக்களிப்பார்கள். A - 9 பாதையில் மாட்டு வண்டில்கள், டிராக்டர்கள் செல்வதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் அதிருப்தியை பெருமளவு சம்பாதித்துள்ளது. அன்றாடம் சைக்கிள்களில் வேலைக்கு சென்று வரும் உழைக்கும் மக்களும், கார்ப்பெட் சாலைகளை கூடுமான அளவு தவிர்த்துக் கொள்கின்றனர். 

பிரதானமான சாலைகளை தவிர, உள்வீதிகள் எல்லாம் குண்டும், குழியுமாக காணப் படுகின்றன. அவற்றை செப்பனிட யாரும் இல்லை. இதைத் தவிர, கிராமங்களை இணைக்கும் பாதைகளும் புழுதி மணலும், கற்களும் நிறைந்ததாக உள்ளன. சில கிராமங்கள் ஐம்பது, நூறு வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்தனவோ, அவ்வாறே இன்றும் உள்ளன. விவசாயம், வெளிநாட்டுப் பணம் போன்ற பொருளாதார வசதிகளால் தமது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்கள் கிராமங்களில் உள்ளனர். ஆனால், அவர்களும் தமது கிராமத்தின் அபிவிருத்தியை விட, தமிழர் உரிமை முக்கியமானதாக கருதுகின்றனர். 

ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள், கிராமிய மட்டத்தில் சில அபிவிருத்திகளை மேற்கொண்டாலும், அவை எல்லாம் தம்மை ஏமாற்றுவதற்காக தேர்தலை முன்னிட்டு நடக்கின்றன என்பதை மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, தென்மராட்சியை சேர்ந்த, சுதந்திரக் கட்சியின் பிரதான வேட்பாளராக நிறுத்தப் பட்ட சர்வா, தனது தொகுதி மக்களுக்காக அவசர அவசரமாக மின் கம்பங்களை கொண்டு வந்து நாட்டினார்.

இருபத்தோராம் நூற்றாண்டிலும் தனது தொகுதி மக்கள் மின்சாரம் இன்றி வாழ்கின்றனர் என்பது, தேர்தல் நேரம் தான் அந்த வேட்பாளருக்கு ஞாபகம் வந்தது. (அவர் முந்திய தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்டு வென்று, சுதந்திரக் கட்சிக்கு மாறியவர்.) அந்தக் கிராமங்களை சேர்ந்த மக்கள் ஏழைகளாக இருந்தாலும் புத்திசாலிகள். அதனால், அதிரடி அரசியல்வாதி சர்வாவை தேர்தலில் தோற்கடித்தார்கள். தேர்தல் முடிந்த பின்னர், மின் கம்பங்களை திரும்பக் கொண்டு சென்று விடுவார்கள் என்று மக்கள் நேரடியாகேவே பேசிக் கொண்டனர்.

யாழ் குடாநாட்டில் இனப்பிரச்சினையின் தாக்கமானது, ஈழப்போருக்கு முன்பிருந்ததை விட, இன்று அதிகமாகவே உணரப் படுகின்றது. காணுமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் படையினரின் பிரசன்னம் ஒரு முக்கியமான பிரச்சினை ஆகும். புலிகளை முற்றாக அழித்து விட்ட மகிழ்ச்சியில் திளைக்கும் ஸ்ரீலங்கா படையினர், தற்போது பொது மக்களை துன்புறுத்துவதில்லை. (அரசியல் பழிவாங்கல்கள் வேறு.) ஆனால், பொது மக்களின் காணிகளை அடாவடித் தனமாக பறித்து, அங்கே முகாம்களை அமைத்துள்ளனர். 

சில இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகள், முன்பு "புலிகளின் சொத்துக்களாக" இருந்தவை. அவை அனைத்தும், புலிகளுக்குப் பின்னர் தனக்கே சொந்தமாகும் என்று, ஸ்ரீலங்கா இராணுவம்  உரிமை கோருகின்றது. ஆனால், முகாம்களை விரிவுபடுத்துவதற்காக அருகில் உள்ள பொதுமக்களின் காணிகளை கூட அபகரிக்கிறார்கள். சில இடங்களில், முன்பு குடியிருந்த பொது மக்களின் வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டு, வேலிகள் அகற்றப் பட்டுள்ளதால், நிலத்திற்கு உரிமை கோருவது கடினமாக்கப் பட்டுள்ளது.

இன்றைக்கும் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த தமிழ் மக்கள், தமது நிலங்களை திருப்பித் தருமாறு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இராணுவம் வாடகைப் பணம் தருவதாக சொல்லியும், அதை மறுத்து தமக்கு நிலம் மட்டுமே வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். யுத்தம் முடிந்த காலத்தில் இருந்த முகாம்கள் பல இன்று அகற்றப் பட்டு விட்டாலும், பல இடங்களில் இன்றைக்கும் நிலப்பிரச்சினை தொடர்கின்றது. நாவற்குழியில் அமைந்துள்ள சிங்களக் குடியேற்றம் காரணமாகவும், அங்கு வாழும் தமிழர்கள் பாதிக்கப் பட்டனர். அந்தப் பிரச்சினை தனியாக அலசப் பட வேண்டும். 

கிராமங்களில் வாழும் ஏழைக் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் கூட, உயர்கல்வி கற்ற பின்னர் நகரங்களை நோக்கிச் செல்வது வழமை. இது ஒரு சமூகம் உழைக்கும் வர்க்கத்தில் இருந்து, கீழ் மத்தியதர வர்க்கத்திற்கு தன்னை உயர்த்திக் கொள்ளும் காலகட்டம் ஆகும். நகரங்களை நோக்கிச் செல்லும் படித்த தமிழ் இளைஞர்கள், அங்கே ஒரே தகைமை கொண்ட சிங்கள இளைஞர்களுடன் போட்டி போட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். இந்த இடத்தில், "சிங்கள இனத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாவற்றிலும் முன்னுரிமை கிடைப்பதாக" உணர்கின்றனர். அந்த உணர்வு பின்னர், "தமிழ் தேசிய உரிமைப் போராட்டமாக" மாறுகின்றது. த.தே.கூ. ஆல், இளைஞர்களின் ஏமாற்றத்தினை, தேர்தலில் வாக்குகளாக அறுவடை செய்ய முடிகின்றது.


ஈழத் தமிழ் சமூகத்தை புரிந்து கொள்வது இலகுவானதல்ல. சிங்கள அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, தமிழக அரசியல்வாதிகளும் அந்த விஷயத்தில் பலவீனமாக உள்ளனர். இனம், வர்க்கம், சாதி போன்ற அம்சங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து அரசியல் களத்தை சிக்கலாக்குகின்றன. முன்பு நடந்த தேர்தல்களில் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் முக்கியமாக கவனிக்கப் பட்டாலும், கடந்த வட மாகாண சபைத் தேர்தலில் அவை புறக்கணிக்கப் பட்டுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, இன்றைக்கும் தன்னை யாழ் சைவ - வேளாளர் மையவாத கட்சியாகவே தன்னைக் காட்டிக் கொள்கின்றது. ஆனால், பெரும்பாலான தமிழர்கள் அதனை அலட்சியப் படுத்தி வந்துள்ளனர்.

கூட்டமைப்பில் சில விதிவிலக்குகளை தவிர, அனேகமாக எல்லா வேட்பாளர்களும் உயர் சாதிகளை சேர்ந்தவர்கள் என்பது தற்செயலாக இருக்க முடியாது. மறுபக்கத்தில், ஆளும்கட்சியுடன் சேர்ந்தியங்கும் ஈபிடிபி, தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கு தாராளமாக இடமளித்து வந்துள்ளது. ஆயினும், தாழ்த்தப்பட்ட சாதியினர் பெரும்பான்மையாக கூட்டமைப்புக்கு ஓட்டுப் போட்டுள்ளனர். ஐ.ம.சு.கூ. ல் போட்டியிட்டு வென்ற, ஈபிடிபி யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலிற்கு மட்டும் அதிகப்படியான விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன. அவர் ஒரு தலித் சமூகத்தவர் என்பதால், தாழ்த்தப்பட்ட சாதியினரின் ஓட்டுக்கள் விழுந்திருக்க வாய்ப்புண்டு. அதுவும் சாதி அபிமானம் காரணமாக விழுந்த வாக்குகள் என்று கருத முடியாது. ஏனெனில், ஐ.ம.சு.கூ. ல் இன்னொரு தலித் வேட்பாளர், தனது சாதியை பகிரங்கமாக வெளிப்படுத்தி பரப்புரை செய்து வந்தார். தேர்தலில் அவர் படு தோல்வி அடைந்தார்.

உலகமயமாக்கல் என்ற சூறாவளியினால் தாம் ஒதுக்கப் பட்டு விடுவோமோ என்ற அச்சம், நிறையத் தமிழர்கள் மத்தியில் காணப் படுகின்றது. உலகமயமாக்கலால், எதிர்காலம் பற்றிய கனவுகள் சிதைவதையும்,வாழ்க்கை குறித்த அவநம்பிக்கையையும், இலங்கைத் தீவுக்குள் தோற்றுப்போன சமுதாயமாக ஓரங்கட்டப் படுவதையும் உணர்கின்றனர். இதனை அவர்கள் தமக்குத் தெரிந்த வழியில் வெளிப்படுத்துகின்றனர். "தென்னிலங்கையில் இருந்து படையெடுக்கும் சிங்களவர்கள் மேலாதிக்கம் செலுத்துவதாக," அதனைப் புரிந்து கொள்கின்றனர். மேலாதிக்கம் செலுத்தும் சிங்களவர்கள், உலகமயமாக்கலின் தூதுவர்களாக வருகை தருகின்றனர், என்பதை யாரும் உணரவில்லை. 

இதனால் என்ன நடக்கிறது என்றால், தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள மேலாண்மை குறித்த அச்சத்தை பயன்படுத்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறுகின்றது. வென்ற பின்னர், கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிங்கள மேலாண்மைக்கு அடிபணிந்தது நடக்கின்றனர். இதற்கு முன்னர் நடந்த, பாராளுமன்ற, பிரதேச சபைத் தேர்தல்களில் இருந்து அதனைப் புரிந்து கொள்ளலாம். வட மாகாணத்தில் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் எல்லோரும், அனேகமாக கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தான். ஆனால், அவர்களால் மக்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை. 

பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் தமது தொகுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக, அரசு நிதி ஒதுக்குவது வழமை. ஆனால், அரசு ததேகூ உறுப்பினர்களுக்கு கொடுக்கும் நிதியின் அளவு மிகக் குறைவு என்பதை மறுப்பதற்கில்லை. மத்தியில் ஆளும் சுதந்திரக் கட்சி, கூட்டமைப்பின் பிரதிநிதிகளை வேண்டுமென்றே புறக்கணித்து வருகின்றது. ஆனால், கிடைக்கும் சொற்ப நிதியைக் கூட ததேகூ உறுப்பினர்கள் பயன்படுத்துவதில்லை. இதனால், தொகுதி மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளுக்காக அரச தரப்பினரை நாட வேண்டியுள்ளது.

சுதந்திரக் கட்சி, ஈபிடிபி அமைப்பாளர்கள் தேர்தலில் தெரிவாகாமல் தோல்வியடைந்து இருக்கலாம். ஆனால், அவர்கள் கைகளில் தான் அதிகாரம் உள்ளது. வட மாகாணத்தில், படையினர் சிவில் நிர்வாகத்தில் தலையிடுவது இரகசியமல்ல. ஊரில் நடக்கும் பகிரங்க ஒன்றுகூடல் எது என்றாலும், இராணுவத்திற்கு அறிவிக்காமல் நடத்த முடியாது. ததேகூ மாகாண சபையை பொறுப்பெடுத்த பின்னர், அந்த நிலையில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்கு மாறாக, ததேகூ வின் மாகாண சபை அரசாங்கம், இராணுவ ஆட்சிக்கு ஒரு ஜனநாயக முகமூடி போன்று செயற்பட வாய்ப்புண்டு. 

வட மாகாண சபைக்கு தேர்தல் நடத்தியதன் மூலம் "ஜனநாயகத்தை காப்பாற்றி விட்டதாக"(?) ராஜபக்ஷ அரசு பீற்றிக் கொள்ளும். அடுத்து நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மகாநாட்டிலும் அது எதிரொலிக்கும். ஆனால், கூட்டமைப்புக்கு விழுந்த ஓட்டுகள் எல்லாம், அரசின் மீது அதிருப்தியுற்ற தமிழ் மக்களின் எதிர்ப்பு வாக்குகள் என்பதை, கொழும்பு புரிந்து கொள்ளுமா என்பது கேள்விக்குறி தான்.

தெற்கில் ஏற்கனவே, மாகாண சபை தேர்தல் முடிவுகளுக்கு எதிரான, கடும்போக்கு சிங்கள தேசியவாதிகளின் இயக்கம் ஆரம்பித்து விட்டது. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியான நாளில் இருந்து, அதனை "பிரிவினைவாதம், இனவாதம்" என்று முத்திரை குத்தி பரப்புரை செய்து வருகின்றனர். தங்களது பிரிவினைவாத பரப்புரை  "மெய்ப்பிக்கப் பட்டு விட்டதாக" அவர்கள் இனி வாதாடலாம். வட மாகாண சபையை இயங்க விடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கலாம்.

ஈழத்தமிழரின் அரசியல் நிலவரம், 77 ம் ஆண்டுக்கு திரும்பிச் சென்றுள்ளதை நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல் சுட்டிக் காட்டுகின்றது. வடக்கில் எழுந்த தமிழர் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையும், அதற்கு எதிர்வினையாக தெற்கில் எழுந்த பிரிவினை குறித்த அச்சமும் மீண்டும் எதிரொலிக்கின்றது. ஆனால், இந்த முறுகல் நிலை மீண்டும் ஒரு ஆயுத மோதலுக்கு இட்டுச் செல்லும் என்பது ஒரு மிகைப் படுத்தப் பட்ட கூற்றாகும். 

ஒரு பக்கம் சிங்கள இனவாதிகளும், மறுபக்கம் தமிழ் இனவாதிகளும் மீண்டும் ஒரு யுத்த சூழ்நிலை உருவாக வேண்டுமென்று விரும்பலாம். ஆனால், வெளியில் இருந்து இலங்கை அரசியலை தீர்மானிக்கும் வல்லமை பொருந்திய சக்திகளான, இந்தியாவும், மேற்குலக நாடுகளும் அதை எதிர்பார்க்கவில்லை. ஆகவே, சர்வதேச அழுத்தம் காரணமாக, ராஜபக்ஷ அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வாய்ப்புண்டு. இந்தத் தேர்தலிலும், வழமையாக தமிழ் மக்கள் தான் தோற்கடிக்கப் பட்டுள்ளனர்.   


வட மாகாண சபைத் தேர்தல் குறித்த முன்னைய பதிவுகள்:

2.மாகாண சபைத் தேர்தல் : வடக்கே வீசும் புயல்
1.வட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம்

No comments: