Tuesday, February 05, 2013

கிரேக்கர்களுக்கு அறிவியல் கற்பித்த எகிப்திய "பிராமணர்கள்"!

நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! 
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 20

(இருபதாம் பாகம்)

கிரேக்க தத்துவ ஞானிகள் பலர் எகிப்தில் கல்வி கற்றவர்கள். ஆனால், பண்டைய எகிப்தியரின் அறிவியலை, இன்று பாடசாலைகளில் "கிரேக்கர்களின் அறிவியல்" என்று கூறி  கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாற்றம் எதனால் ஏற்பட்டது? இன்றைய கிரீஸ் ஒரு காலத்தில் எகிப்திய காலனியாக இருந்திருக்கலாம். ஆனால், பிற்காலத்தில் ஒரு சாம்ராஜ்யத்தை கட்டிய கிரேக்கர்கள், எகிப்தையும் அதற்குள் கொண்டு வந்தனர். எகிப்து மட்டுமல்ல, சூடான் கூட கிரேக்க சாம்ராஜ்யத்தின் செல்வாக்குக்கு உட்பட்ட பிரதேசமாக இருந்தது. ஆனால், அன்றைய கிரேக்கர்கள் எல்லோரும் வெள்ளையர்கள் என்று நம்மால் அறுதியிட்டுக் கூற முடியாது. நானே நேரில் கண்ட உதாரணம் ஒன்றைக் கூறுகின்றேன்.

சைப்ரஸ் நாட்டில், கிரேக்க மொழி பேசும் கறுப்பின சூடானியர்கள் வாழ்கின்றனர். அவர்கள் எல்லோரும் நமது காலத்தில் அகதியாக வந்தவர்கள் தான். ஆனால், அவர்களது பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இருந்து கிரேக்க மொழியை தாய்மொழியாக பேசி வருகின்றனர். சூடானிய அகதிகளை நாடுகடத்தும் பிரச்சினை வந்த நேரம், சைப்ரஸ் ஊடகங்களின் கவனம் இவர்களின் மேல் திரும்பியது. ஒரு காலத்தில் சூடானில் கிரேக்கர்களின் காலனி இருந்ததால், அவர்கள் கிரேக்க மொழி பேசுகின்றனர் என்றே பெரும்பாலான சைப்ரஸ் மக்கள் அபிப்பிராயப் பட்டனர். ஆனால், அது "வெள்ளையின நிறவாத" கருத்தியலாகவே எனக்குப் படுகின்றது. கிரேக்கர்கள் என்றால், அவர்களின் தோல் வெள்ளை நிறமாக இருக்க வேண்டும் என்பது பொதுப் புத்தியில் உறைந்துள்ளது. இன்றைக்கு தமிழ் என்பது மொழி என்பதைக் கடந்து இனம் என்று தவறாகப் புரிந்து கொள்ளப் படுகின்றது. அதே நிலைமை தான் கிரேக்க மொழிக்கும். ஒரு காலத்தில், கிரேக்க மொழி பல இனத்தவர்களின் தாய்மொழியாக, அல்லது இரண்டாம் மொழியாக இருந்தது.

எகிப்தின் தலைநகர் கெய்ரோவை, கிரேக்கர்கள் "ஹேலியோபோலிஸ்" என்று அழைத்தார்கள். (அது இன்று கெய்ரோ மாநகரின் ஒரு பிரிவு.) கிரேக்க சரித்திர ஆசிரியர் ஹெரோடோதுஸ், மற்றும் தத்துவஞானி பிளேட்டோ ஆகியோர், கிரேக்க அறிஞர்கள் ஹேலியொபொலிசில் கல்வி கற்ற அனுபவங்களைப் பற்றி எழுதி உள்ளனர். எகிப்திய மதகுருக்கள் பற்றி அவர்கள் எழுதி இருப்பவை, எமக்கு படிப்பதற்கு சுவாரஸ்யமானவை. பல்துறை அறிஞர்களாக இருந்த எகிப்திய மதகுருக்களிடம் கல்வி கற்ற கிரேக்கர்களும், தாயகம் திரும்பியதும் அவர்களைப் போன்று பாவனை செய்து கொண்டனர். தமது தலையை மொட்டையாக வழித்து, பின்புறம் கொஞ்சம் தலைமுடியை வைத்துக் கொண்டனர். இந்த விவரணைகள், இந்திய பிராமணர்களின் கலாச்சாரத்தை ஒத்துள்ளது.

பண்டைய இந்தியாவில் பிராமணர்கள் மட்டுமே கல்வியறிவு பெற்ற பிரிவினராக இருந்தனர். அவர்களே கோயில் பூசாரிகளாகவும், மன்னர்களுக்கு ஆலோசகர்களாகவும் இருந்தனர். பண்டைய எகிப்திலும், பிராமணர் போன்ற சாதி ஒன்று இருந்தது. எகிப்திய "பிராமண" சாதியினரும், கோயில் பூசாரிகளாகவும், மன்னர்களுக்கு ஆலோசகர்களாகவும், சிலநேரம் அவர்களே ஆட்சியாளர்களாகவும் இருந்துள்ளனர். கல்வி கற்கும் உரிமையும் அவர்களுக்கு மட்டுமே வழங்கப் பட்டிருந்தது. கிரேக்க அறிஞர்கள் எகிப்தில் கல்வி கற்ற போதிலும், அவர்கள் தமது தாயகத்தில் ஒரு "பிராமண சாதியை" உருவாக்க முனையவில்லை. அதற்கு காரணம், அவர்களது அறிவியல் கிரேக்க மண்ணுக்கு உரியதல்ல, அந்நிய நாட்டில் இருந்து இறக்குமதியானது. உதாரணத்திற்கு, நமது நாட்டு அறிவுஜீவிகள் பலர் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் கல்வி கற்று திரும்பினார்கள். அந்த அறிவுஜீவிகள் ஆங்கிலேயரின் நடை உடை பாவனையை பின்பற்றி வாழ்ந்தாலும், தனியான சாதியாக உருமாற முடிந்ததா? அதே நிலைமை தான் பண்டைய கிரேக்கத்தில் காணப்பட்டது.

கேத்திர கணிதம் (Geometry) என்ற அறிவியல், கிரேக்கர்களிடம் இருந்து ஆங்கிலேயர் படித்து, பின்னர் அதை எமக்கு சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் அந்த கணிதத்தை கண்டுபிடித்தவர்கள் எகிப்தியர்கள் என்பது பலருக்கு தெரியாது. நைல் நதியில் ஏற்படும் வெள்ளத்தினால், கரையோரப் பகுதிகள் பாதிக்கப் பட்டதால், அவற்றை அளப்பதற்கு கேத்திர கணித அறிவியலை பயன்படுத்தி வந்தனர். பிரபல கிரேக்க தத்துவஞானி அரிஸ்டோட்டில், எகிப்து "கணித அறிவியலின் தொட்டில்" என்று வர்ணிக்கிறார். எகிப்திய மதகுருக்கள், "கணிதக் கலை" ( Mathematikai technai) எனப்படும், எண் கணிதம், கேத்திர கணிதம், வானியல் சாஸ்திரம் போன்ற அறிவியலை கண்டுபிடித்ததாக புகழ்ந்து எழுதியுள்ளார். (பார்க்க: Black Athena, by Martin Bernal)

இந்த தகவல்கள் எல்லாம் எமக்குத் தெரியாமல் போனது எப்படி? இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், ரோம சாம்ராஜ்யத்தில் பரவிய கிறிஸ்தவம் என்ற புதிய மதமும், அந்த மத அடிப்படைவாதிகள் முன்னெடுத்த கலாச்சார புரட்சியும் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. எகிப்தில் கல்வி கற்ற கிரேக்க அறிஞர்கள் எழுதி வைத்த அறிவியல் நூல்களை எல்லாம், "பழைய பஞ்சாங்கம்" என்று கூறி குப்பையில் வீசி விட்டார்கள், அல்லது எரித்து விட்டார்கள்.

பல நூறாண்டுகளுக்கு பின்னர், அரேபியரின் இஸ்லாமிய சாம்ராஜ்யம் உருவான பின்னர் தான் அவை கண்டெடுக்கப் பட்டன. அரேபியர்கள் அவற்றை அரபி மொழியில் மொழிபெயர்த்தார்கள். அரபி மொழியில் எழுதப்பட்ட கிரேக்க அறிவியல் நூல்கள், பண்டைய "இஸ்லாமிய ஸ்பெயினுக்கு" (கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் ஸ்பெயின் அரபு-மூர்களால் ஆளப்பட்டது.) கொண்டு செல்லப்பட்டன. சுமார் 500 வருடங்களுக்கு முன்னர், ஸ்பானிஷ்- கிறிஸ்தவ படைகள் போரில் வென்று, முழு ஸ்பெயினையும் கிறிஸ்தவமயமாக்கினார்கள். அப்போது அரேபியர்கள் விட்டுச் சென்ற கிரேக்க அறிவியல் நூல்கள், லத்தீன் மொழியிலும், பின்னர் பல ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டன.

கடந்த 500 வருட கால ஐரோப்பிய வரலாற்றில் நடந்த போர்கள், கறுப்பின மக்களின் நாகரீகத்தை இருட்டடிப்பு செய்வதற்கு வழிவகுத்தன. முதலாவதாக, ஸ்பெயினில் நடந்த புனிதப் போர், அரேபியர்களை வட ஆப்பிரிக்க கடல் எல்லைக்குள் முடக்கியது. இரண்டாவதாக, 19 ம் நூற்றாண்டின் இறுதியில், ரஷ்ய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக, துருக்கியரின் ஓட்டோமான் சாம்ராஜ்யம் பல பிரதேசங்களை இழந்தது. கிறிஸ்தவ- ஐரோப்பிய நாடுகள் பெற்ற இவ்விரண்டு வெற்றிகளும், வரலாற்றை ஐரோப்பிய மையவாத சிந்தனையுடன் எழுதுவதற்கு ஏடு தொடக்கி வைத்தன.

இனி, இந்தியாவில் "ஆரிய படையெடுப்பு" என்ற புனைவு எப்படி உருவானது என்று பார்ப்போம். ஆரியர் வருகைக்கு முன்னரே, ஹரப்பா நாகரீகம் அழிந்து விட்டது என்று, இன்று பல வரலாற்று ஆசிரியர்கள் ஒத்துக் கொள்கின்றனர். அதாவது ஹரப்பாவில் இருந்த திராவிட நாகரீகம் அழிந்து, பின்னர் அங்கே ஆரிய நாகரீகம் தோன்றியது. ஆனால், அந்த மாற்றத்தை "மெக்சிகோவில் மாயன்களின் நாகரீகம் அழியக் காரணமாக இருந்த, ஸ்பானிஷ் படையெடுப்பு" போன்று நினைத்துக் கொள்வது அபத்தமானது. அப்படி ஒரு படையெடுப்பு நடந்ததற்கான எந்தவொரு சரித்திர சான்றும் கிடையாது. மேலும் அந்நிய படையெடுப்புகளால் மட்டுமே, ஒரு ஆதிக்க மொழி, மதம், கலாச்சாரம் பரவும் என்று கூற முடியாது. அதற்கு உதாரணமாக அரபு-இஸ்லாமிய மயமாகலை கூறலாம். பல நாடுகளில், இராஜதந்திர, வர்த்தக உறவுகள் மூலமாகவும் இஸ்லாம் என்ற புதிய மதம் பரவியது. "ஆரிய படையெடுப்பு", "இஸ்லாமிய படையெடுப்பு", இவை எல்லாம் ஐரோப்பிய மையவாத சிந்தனையில் இருந்து தோன்றிய கருதுகோள்கள் ஆகும்.

 (தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!"
8.வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்
9.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
10.கோபுரங்கள் கட்டுவது, ஆண்டவருக்கு விரோதமானது!
11.சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?
12.அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!
13.ஆதித் தமிழ் சகோதர இனம் வாழ்ந்த "அரபி கண்டம்"
14.அரேபியரும், தமிழரும் : சில கலாச்சார ஒற்றுமைகள்
15.கன்னி மரியாளின் மகனான, குறிஞ்சிக் கடவுள் "குழந்தை அல்லா"!
16.யார் இந்த ஆரியர்கள்?
17.தங்கமலை இரகசியம்: துருக்கியில் குடியேறிய ஐரோப்பிய மூதாதையர்
18.கற்பின் பெருமை கூறும் கிரேக்க புராணக் கதைகள்
19.தேர்த் திருவிழா : ஆரிய மன்னர்களின் வெற்றி விழா!

*************************
  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters
12. Lost Cities of China, Central Asia, & India, by David Hatcher Childress
13. The Mummies of Ürümchi, by Elizabeth Wayland Barber
14. Black Athena, by Martin Bernal
15. The Minoans, The World's Greatest Civilizations
16. Empires of the Silk Road, A History of Central Eurasia from the Bronze Age to the Present, by Christopher I. Beckwith
17. தொல்காப்பியத் தமிழர், சாமி. சிதம்பரனார்

4 comments:

”தளிர் சுரேஷ்” said...

வியப்பூட்டும் தகவல்கள்! விந்தையான உண்மைகள்! முதல் வருகை! இனி தொடரும்!

Unknown said...

complete baseless crap. better read more before you write
-VIJAY ANAND 314 550 1720

thanthugi said...

இந்தியாவில் "ஆரிய படையெடுப்பு" என்ற புனைவு...?

ஆரியர் வருகைக்கு முன்னரே, ஹரப்பா நாகரீகம் அழிந்து விட்டது என்று, இன்று பல வரலாற்று ஆசிரியர்கள் ஒத்துக் கொள்கின்றனர்?

தமிழன் said...

அருமை தங்கள் ஆரிய மாயை வார்த்தை எகிப்து விடவில்லை
அப்ப ஆரியர்கள் இந்தியாவில் தோன்றினார்கள் புதிய கதை அருமை அடுத்தது