கடந்த நூற்றாண்டில், அறுபதுகளின் இறுதியில், பிரான்ஸ் ஒரு கம்யூனிச புரட்சியின் விளிம்பில் நின்றது என்று சொன்னால், இன்று யாரும் நம்ப மாட்டார்கள். இன்றைய தலைமுறையினர், கம்யூனிசம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்துள்ளனர். இதே மாதிரியான நிலைமை தான், அறுபதுகளில் இருந்த பிரான்சிலும் காணப்பட்டது. ஸ்டாலினின் மறைவின் பின்னர், அரசினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட ஸ்டாலினிச எதிர்ப்பு பிரச்சாரங்களும், அதற்கு துணையாக அமைந்த குருஷேவின் அரசியலும், ஐரோப்பிய நாடுகளில் "யூரோ கம்யூனிசம்" என்ற சீர்திருத்தவாத கட்சிகள் தோன்ற வழிவகுத்திருந்தது.
அறுபதுகளில் எல்லோரின் வீடுகளிலும் தொலைக்காட்சி பெட்டி வந்து விட்டது. அப்போது நடந்து கொண்டிருந்த வியட்நாம் போரும், அங்கே நடந்த அமெரிக்கப் படைகளின் அட்டூழியங்களும் மக்களுக்கு தெரிய வைத்ததில், தொலைக்காட்சி பெட்டிகளும் முக்கிய பங்காற்றின. வியட்நாம் போரை எதிர்க்கும் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம், ஐரோப்பிய நாடுகள் எங்கும் பரவியது. அந்த மாணவர்கள் தமது எதிர்ப்பரசியலுக்கு ஒரு கோட்பாட்டை தேடிய பொழுது, மாவோ பற்றி அறிந்து கொண்டனர். இதனால், அன்று தொடங்கிய மாணவர் இயக்கங்கள், பிற்காலத்தில் மாவோயிச கட்சிகளாக பரிணாம வளர்ச்சி கண்டன.
1968 ம் ஆண்டு, பிரான்சில் ஏற்பட்ட மாணவர், தொழிலாளர்கள், விவசாயிகளின் புரட்சி, பல்வேறு சீர்குலைவு நடவடிக்கைகளால் அடக்கப் பட்டது. ஆனால், புரட்சிகர அரசியல் மறைய பல வருட காலம் எடுத்தது. "இடது-பாட்டாளிகள்" (Gauche Prolétarienne) என்ற ஒரு மாவோயிச அமைப்பு, பிரான்சில் மிகவும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தது. பிரபல கார் கம்பனியான ரெனோல்ட், கார்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில், நிறைய தொழிலாளர்கள் அந்த அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தனர். தொழிற்சங்க நடவடிக்கை மூலம், வேலை நிறுத்தம் செய்வது, தொழிலாளர்களுக்கு துண்டுப்பிரசுரங்கள், புத்தகங்கள் விநியோகிப்பது என்று பல வழிகளில் இயங்கிக் கொண்டிருந்தனர். தொழிற்சாலை நிர்வாகம், கம்யூனிச தொழிலாளர்களை திடீரென பணிநீக்கம் செய்ததால், தொழிற்சாலை போராட்ட களமாகியது.
1975 ம் ஆண்டு, பெப்ரவரி 25 அன்று, பெருந்தொகையான மாவோயிஸ்ட் தொழிலாளர்கள், ரெனோல்ட் தொழிற்சாலையை ஆக்கிரமிக்கும் நோக்கில் முற்றுகையிட்டனர். பாசிச எதிர்ப்புரட்சியாளர்கள் தாக்குவதற்கு வந்தால், அதற்கும் தயாராக தற்காப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 26 பெப்ரவரி 1972, பியேர் ஒவெர்னி (Pierre Overney) என்ற மாவோயிச தொழிலாளி, தொழிற்சாலையின் முன்னால் நின்று கொண்டு, பாசிச எதிர்ப்பு துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்துக் கொண்டிருந்தார். தொழிற்சாலை நிர்வாகத்தினால், காவல் கடமையில் ஈடுபடுத்தப் பட்ட முன்னாள் இராணுவவீரர் Jean-Antoine Tramoni, திடீரென துப்பாக்கி எடுத்து சுட்டார். நெஞ்சில் குண்டடி பட்ட பியேர், அந்த இடத்திலேயே மரணமடைந்தார்.
26.02.1972 அன்று பாசிஸ்டுகளால் கொலை செய்யப்பட்ட, பிரெஞ்சு கம்யூனிச போராளி பியேரின் மரணம், பிரான்ஸ் நாட்டை உலுக்கியது. அவரது மரணச் சடங்கில், இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பாரிஸ் நகர தெருக்களில், சுமார் மூன்று இலட்சம் மக்கள், செங்கொடிகளுடன் அணிவகுத்து சென்றனர். பிரான்சில், இன்னமும் பெருந்தொகையான மக்கள் மாவோயிச-கம்யூனிச புரட்சியாளர்களை ஆதரவளிக்கின்றனர் என்ற செய்தியை, அந்த ஊர்வலம் உலகுக்கு உணர்த்தியது. அன்று மாலை, பிரான்சின் பிரபல புரட்சிகர பாடகர், Dominique Grange கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. மயானத்தில் திரண்ட உழைக்கும் மக்கள் சர்வதேச கீதமிசைக்க, தோழர் பியேரின் பூதவுடல் விதைக்கப் பட்டது.
இலட்சக் கணக்கான மக்களின் ஆதரவு இருந்த போதிலும், பிரெஞ்சு மாவோயிஸ்ட் இயக்கம் தொடர்ந்து இயங்காமல் ஸ்தம்பிதமடைந்தது. 1973 ம் ஆண்டு, சில பூர்ஷுவா வர்க்க மனப்பான்மை கொண்ட தலைவர்களால் கட்சி சீர்குலைந்தது. அவர்கள், "மாவோ முதல் மோசெஸ் வரை" என்ற புதியதொரு கொள்கையை கண்டுபிடித்து, இஸ்ரேலின் ஆதரவாளர்களாக மாறினார்கள். இந்த தலைவர்கள், இன்று அரச இயந்திரத்தின் பல்வேறு பதவிகளை அலங்கரிக்கின்றனர். இதே நேரம், பாட்டாளிவர்க்க நலன் சார்ந்த, அல்லது அந்த வர்க்க பின்னணியில் இருந்து வந்த உறுப்பினர்கள், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், புரட்சிகர இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தனர். பின்னர் அதற்குள் பிளவு ஏற்பட்டது. ஒரு பகுதியினர், சோஷலிச அல்பேனியாவின் என்வர் ஹோஷாவை ஆதரித்தனர். ஹோஷாவின் மறைவுக்கு பின்னர், பெருவின் ஒளிரும் பாதை இயக்கத்தின் போராட்டத்தை ஆதரித்தனர். அந்த தருணத்தில், பிரான்சில் மாவோயிசம் கோட்பாடு வடிவம் எடுக்க ஆரம்பித்தது.
இன்னும் சில மாவோயிஸ்டுகள், பிரான்சில் பாட்டாளி வர்க்க புரட்சியை ஏற்படுத்த வேண்டுமானால், நீண்ட கால கெரில்லா யுத்தம் ஒன்றை நடத்த வேண்டும் என முடிவெடுத்தனர். ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட அந்தக் குழுவினர், Noyaux Armés Pour l’Autonomie Populaire (NAPAP) என்ற பெயரில் இயங்கினார்கள். தோழர் பியேரினை படுகொலை செய்த ரெனோல்ட் தொழிற்சாலை காவல்காரரை சுட்டுக் கொன்றமை, அவர்களது முதலாவது தாக்குதலாகும். Jean-Antoine Tramoni என்ற அந்தக் காவல்காரர் மீது வழக்குத் தொடுக்கப் பட்டிருந்த போதிலும், அரசின் மெத்தனப் போக்கு காரணமாக விடுதலை செய்யப் பட்டிருந்தார். NAPAP இயக்கமும், இன்னொரு புரட்சிகர ஆயுதக் குழுவான Groupes d’Action Révolutionnaire Internationalistes (GARI) யும் இணைந்து, Action Directe என்ற புதிய இயக்கத்தை உருவாக்கினார்கள். Action Directe என்ற நகர்ப்புற கெரில்லா இயக்கம், இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. சில வருடங்களுக்கு முன்னர் கூட, ரயில் தண்டவாளத்தை குண்டு வைத்து தகர்த்திருந்தனர்.
2002 ம் ஆண்டு, பிரான்சில் ஒரு புதிய மாவோயிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப் பட்டது. இந்திய நக்சலைட் போராட்டத்திற்கு ஆதரவாக பிரான்சில் பிரச்சாரம் செய்வது மட்டுமல்லாது, சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி உள்ளனர். கடந்த வருடம், தோழர் பியேரின் நாற்பதாவது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்தனர்.
இன்று தோழர் பியேரின் 41 வது நினைவு தினமாகும்.
1972 ம் ஆண்டு, பாரிஸ் நகரில் நடந்த பியர் ஒவெர்னியின் மரணச் சடங்கில், இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டதை காட்டும் வீடியோ இங்கே இணைக்கப் பட்டுள்ளது.
பிரான்சில் கம்யூனிச புரட்சி பற்றிய முன்னைய பதிவுகள்:
3 comments:
செத்துப்போன மாஓ'வும் ஸ்டாலினும் கொலைகார ரவுடிகள். இவ்விருவர்களின் ஆட்சி பதவி அதிகார மோகத்திற்கு த்த்தம் சக குடிமக்களில் பல மில்லியன்கள் அடாவடித்தனமாக வஞ்சித்து, சித்திரவதை செய்யப்ப்பட்டு, பசி மற்றும் பட்டினியால் அநியாயமாய் கொலை செய்யப்பட்டு இற்ந்தனர்.
வணக்கம் திரு.கலையரசன்,
காலம் கடந்த பழைய செல்லரித்த கம்யூனிச பயங்கரவாத கொள்கைகளை தூசி தட்டி புதுப் பொளிவு கொடுத்து அப்பாவி ஏழைகள் எளியவர்கள் முக்கியமாக 'தலித்துக்களை' தம் வசம் இழுத்து கூட்டம் சேர்க்க நினைப்பது மதவாத தீவிரவாதிகளின் செயலை ஒத்தது. இன்றைய தேதிக்கு கம்யூனிசம் செத்துவிட்டது.
பிரான்சின் 'கம்யூனிசம்' என சொல்லப்படும் ஒரு சாதாரண அரசியல் கட்சி அன்றும் இன்றும் சனநாயக முறையில் செயல்பட்டு வருகிறது. இதனால்தான் இதை 'Communiste Français' 'பிரஞ்ச் கம்யூனிஸ்ட்' என்றழைப்பர். 'COMMUNISME' அல்ல 'COMMUNISTE'. பிரான்சில் உள்ள 'Le Parti Communiste Français' என்பது தீவிரவாத இடதுசாரி கட்சி கிடையாது. La Lutte Ouvrière et Le Nouveau Parti Anti-Capitaliste' போன்றவைகல்தான் இடதுசாரி தீவிரவாத கட்சிகளாக கருதப்படுகின்றன. இவர்களுக்கும் கம்யூனிசத்திற்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது. தேர்தல் காலங்களில் கூட்டனி வைத்தாலும் மற்ற காலங்களில் அனைத்தும் தன்னிச்சையாக சுதந்திரமாக செயல்படுகின்றன. கேடுகெட்ட கொலைகார சீன மற்றும் இரஷ்ய கம்யூனிசத்திற்கும் இதற்கும் எந்த உறவும் கிடையாது.
பழைய இரஷ்ய சோவியத் யூனியனின் அராஜக பிடியிலிருந்து விடுபட்ட நாடுகளில் செத்துப்போன ஸ்டாலின் மற்றும் லெனின் மடையர்களின் உலோக சிலைகள் பிடுங்கி எறியப்பட்டு உடைத்து காய்லான் கடைகளில் கிலோ கணக்கில் எடைக்கு விற்கப்படுகின்றன.
இதே நிலை கூடிய சீக்கிரம் சீனாவிலும் வரும். இனியும் எந்த ஒரு குடிமகனும் தன் வாழ் நாளை மடையனாக அடிமையாக கூழக் கும்பிடு போட்டு வாழ தயாராக இல்லை.
பிரான்சில் கடந்த நூற்றாண்டுகளில் இராஜ முறையாட்சியின் போது இராஜ பரம்பரையின் அடாவடி முட்டாள்தனத்தின் ஆட்சியால் பசி பஞ்சம் பட்டினிச் சாவு நிலைக்கு தள்ளப்பட்ட பெரும்பான்மை அடித்தள மக்கள் புரட்சி செய்து இராஜ வம்சத்தை அழித்தொழித்து குடியாட்சியை நிறுவினர். அப்போது நீங்கள் வக்காளத்து வாங்கும் கொலைகார கம்யூனிசம் இருந்ததில்லை.
கம்யூனிசம் என்பது மதங்களைப்போல் ஒரே கொள்கை, பக்தி, ஒற்றுமை, ஒரே சிந்தனை என்கிற பெயரில் எளிய மனிதர்களை அடிமைப்படுத்தி, அடையாளம்,விலாசம் அழித்து, சுரண்டி அவர்கள் முதுகில் இலவச சவாரி செய்து உடல் வளர்க்க சில வசியக்கார விஷமி கும்பல்களால் உருவாக்கப்பட்ட மாயஜால வித்தைகளே.
கம்யூனிசத்தின் மறுபக்கம்தான் முதலாளித்வம். கம்யூனிசத்தின் எதிரியல்ல முதலாளித்வம். இரண்டுமே அராஜகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. இது பல மில்லியன் எளியவர்களின் கல்லறைகலின் மீது கட்டப்பட்ட மாயா ஜால கோட்டையே.
எனவே திரு.கலையரசன் அவர்களே, ஏழை எளியவர்களை, நளிந்தவர்கலை வசியம் செய்ய மதவாதிகள் செய்வதைப்போல் எதையும் செய்ய வேண்டாம். இது போன்ற செயல்களை செய்ய தூண்டுபவர்களின் செயல்களானது அப்பாவி மக்களை கற்காலத்திற்கு அழைத்து செல்வதற்கு ஒப்பம்.
மனிதத்வம் கொண்ட மக்களாட்சி முறையே மனித குலத்திற்கு சிறந்தது.
கவனத்திற்கு நன்றி. வணக்கம்.
மாசிலா, பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி சீர்திருத்தவாதிகளாக மாறியதை, நான் கட்டுரையின் தொடக்கத்திலே குறிப்பிட்டு இருக்கிறேன். இந்தக் கட்டுரை முழுவதும், மாவோயிஸ்ட் இயக்கம் பற்றியது. அது கூட இரண்டு, மூன்று துண்டுகளாக உடைந்து இல்லாமல் போனதைப் பற்றி சொல்லி இருக்கிறேன். தற்போது புதிதாக உருவாக்கி உள்ள பிரெஞ்சு மாவோயிஸ்ட் கட்சியிடம் இருந்து தான், இந்தக் கட்டுரைக்கான தகவல்கள் கிடைத்தன. பிரான்சில் கம்யூனிஸ்டுகள் என்று யாரும் கிடையாது என்று, உங்கள் மனத் திருப்திக்காக சொல்லிக் கொள்ளுங்கள். ஸ்டாலின், மாவோ, ரஷ்யா சீனா என்று விரும்பியவாறு திட்டிக் கொண்டிருங்கள். மேற்கத்திய ஊடகங்கள் இதை விட நிறைய அவதூறுகளை எல்லாம் பரப்பி வருகின்றன. உங்கள் யாருக்கும் ரஷ்யா, சீனாவில் வாழும் மக்களுடன் தொடர்பும் கிடையாது. அந்த மக்களின் கருத்தை அறிந்து கொள்வதற்கு வேண்டிய மொழியறிவும், வசதிகளும் கிடையாது.
Post a Comment