Saturday, August 11, 2012

"இன்றிலிருந்து இயக்கம் உங்கள் வாழ்வை தீர்மானிக்கும்"

"பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை" - பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு

(பகுதி - 5)

கம்போடியா விடுதலைப் போராட்டத்திற்கும், ஈழ விடுதலைப் போராட்டத்திற்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்தை, வலதுசாரிகள் யூதர்களின் வரலாற்றுடன் ஒப்பிட்டார்கள். இடதுசாரிகள் வியட்நாம், பாலஸ்தீனம், வங்க தேசம் ஆகிய நாடுகளின் போராட்டங்களுடன் ஒப்பிட்டார்கள். ஆனால், இன்று வரையில், யாருமே கம்போடியா போராட்டத்துடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ததில்லை. அதற்கு காரணம், பனிப்போர் காலத்தில் இரண்டு வல்லரசுகள், உலக மக்களின் அரசியல் போக்கை நிர்ணயித்திருந்தன. அமெரிக்கா, சோவியத் யூனியன் இரண்டுமே கம்போடியாவில் க்மெர் ரூஜ் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. அதனால், அந்த வல்லரசுகளுக்கு பின்னால் நின்ற பிற நாடுகளும் ஆதரிக்கவில்லை. அன்று கம்போடியாவை ஆண்ட, லொன் நொல் அரசுக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. லொன் நொல் அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய பொல் பொட்டின் கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சி, அல்லது அதன் இராணுவப் பிரிவான க்மெர் ரூஜ், வியட்நாமுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டது. அதனால், வியட்நாம் ஆதரிக்காத கம்போடிய விடுதலைப் போராட்டத்தை, சோவியத் முகாமில் இருந்த நாடுகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் எதுவும் ஆதரிக்கவில்லை.  

சீனாவுடன் சிறந்த இராஜதந்திர உறவுகளைப் பேணி வந்த மன்னர் சிஹானுக் வெளியேற்றப் பட்டு, அவரது ஆதரவாளர்களும் காடுகளுக்குள் பதுங்கி இருந்து ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, க்மெர் ரூஜும் சீனாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தியது. உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டில், சோவியத் யூனியனுடன் ஒப்பிடும் பொழுது, சீனா சற்று தாராளமாகவே நடந்து கொண்டது. விடுதலை இயக்கங்களுக்கு தேவையான ஆயுதங்களை இலவசமாக கொடுத்துதவியது. க்மெர் ரூஜ் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் உற்பத்தியான அரிசி, மூட்டை மூட்டையாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தது. சிலர் இதனை சுட்டிக் காட்டி, க்மெர் ரூஜ் சீனாவுக்கு அரிசி விற்று ஆயுதம் வாங்கியதாக குற்றம் சுமத்துகின்றனர். ஆனால், அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. சீனாவின் ஆயுதங்கள் இலவசமாகக் கிடைத்து வந்தன. வியட்நாமிய, சீன வியாபாரிகள், வழமை போல கம்போடிய அரிசியை வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தனர். க்மெர் ரூஜ் கம்போடியாவை ஆண்ட மூன்றரை வருட காலத்திலும், அரிசி மட்டுமே முக்கியமான, அல்லது ஒரேயொரு ஏற்றுமதிப் பொருளாக இருந்தது. 

ஈழப் போராட்டத்தில், சிறிலங்கா அரசின் கண்மூடித் தனமான விமானக் குண்டுவீச்சுகளும், அப்பாவிப் பொதுமக்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையும், புலிகள் போன்ற ஆயுதபாணி இயக்கங்களின் பின்னால், மக்களை அணிதிரள வைத்தன. அரச அடக்குமுறை தீவிரமடையும் போதெல்லாம், விடுதலை இயக்கத்திற்கான மக்கள் ஆதரவும் அதிகரிக்கும். சிறிலங்கா அரச படையினரின் நடவடிக்கைகள், விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்கு உதவியது போன்று, கம்போடியாவில் அமெரிக்க படையினரின் நடவடிக்கைகள் க்மெர் ரூஜ்ஜின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. அமெரிக்க அரசு அரசு விமானக் குண்டுவீச்சுகளை மட்டும் நடத்தவில்லை. அன்று அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த, தெற்கு வியட்நாமில் இருந்து கம்போடியா மீது தரை வழியாக படையெடுத்தது. அந்தப் படையெடுப்பிலும், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 

ஈழப் பிரதேசங்களில் நடந்ததைப் போன்று, அமெரிக்க விமானக் குண்டுவீச்சுகளில் இருந்து தப்புவதற்காக, கம்போடிய மக்கள் தமது வீடுகளுக்கு அருகில் பதுங்குகுழிகளை வெட்டி இருந்தனர். அமெரிக்க விமானப் படைக்கு தகவல் கொடுத்தார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில், பல "உளவாளிகள்" க்மெர் ரூஜ் போராளிகளால் சுட்டுக் கொல்லப் பட்டனர். அமெரிக்க குண்டுவீச்சுகள், நாட்டுப்புறங்களை மட்டுமே குறி வைத்து நடத்தப் பட்டதால், ஏராளமான மக்கள் தலைநகர் ப்னோம் பென்னை நோக்கி இடம்பெயர்ந்தனர். ஒரு வருடத்திற்குள், ப்னோம் பென்னின் சனத்தொகை இரண்டு மில்லியனாக அதிகரித்தது. தலைநகரத்தில் குவிந்த அகதிகளுக்கு நிவாரணம் அளிப்பதற்கு எந்த வசதியும் இருக்காததால், அங்கொரு மனிதப் பேரவலம் அரங்கேறிக் கொண்டிருந்தது. இதற்கிடையே, ஒழுக்கம் கெட்டலைந்த அரச படைகளால், கட்டுப்பாட்டுடன் இயங்கிய க்மெர் ரூஜை எதிர்த்து போராட முடியவில்லை. ஏப்ரல் 17 ம் தேதி, தலைநகர் ப்னோம் பென்னும் க்மெர் ரூஜிடம் வீழ்ச்சி அடைந்தது. தசாப்த கால யுத்தம் முடிவடைந்து விட்ட சந்தோஷத்தில், தலைநகரில் நுழைந்த க்மெர் ரூஜ் போராளிகளை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றார்கள். 

ப்னோம் பென் நகரவாசிகள் பலர், அப்பொழுது தான் முதன்முறையாக க்மெர் ரூஜ் கெரில்லாக்களை கண்ணால் கண்டார்கள். கறுப்பு நிற மேல் சட்டையும், அதே நிறத்திலான காற்சட்டையும் அணிந்திருந்தனர். கழுத்தில், சிவப்பு, வெள்ளை கலந்த சால்வை. கையில் ஏ.கே. 47 இரக துப்பாக்கி, மார்பில் மேலதிக ரவைக் கூடுகளைக் கட்டிய பைகள். ஆயுதமேந்திய இளைஞர்களின் வயது 18 க்கும் அதிகமாக இருக்க வாய்ப்பில்லை. சிலர் 16 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களாக தோன்றினார்கள். க்மெர் ரூஜ் படையில் ஆண் போராளிகள் மட்டுமல்ல, பெண் போராளிகளும் இருந்தனர். அவர்களது சமூகப் பின்னணியும் ஒரே மாதிரியாக இருந்தது. எல்லோரும் நாகரீகம் எட்டிப் பார்க்காத நாட்டுப்புறங்களை சேர்ந்த கிராமத்து இளைஞர்கள். அபூர்வமாக ஒரு சிலரைத் தவிர, பெரும்பான்மையானோர் எழுதப், படிக்கத் தெரியாத தற்குறிகள். 

ஐநூறு வருடங்களாக எந்த அபிவிருத்தியையும் காணாத கம்போடியாவின் கிராமங்களில் வாழ்ந்த மக்களுக்கு, வெளியுலகில் நடந்த மாற்றங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை. உதாரணத்திற்கு, மேலைத்தேய பாணி மலசல கூடத்தை பார்த்த இளைஞர்கள், அதனை "வீட்டுக்குள்ளே கட்டிய சிறிய கிணறு" என்று நினைத்தார்கள். நிலத்தில் பாய் போட்டு படுத்து பழகியவர்களுக்கு, கட்டில் மெத்தையைக் கண்டதும் குத்திக் கிழிக்க வேண்டுமென்ற ஆவேசம் ஏற்பட்டது. தமது வாழ்நாளில் கண்டிராத வசதி வாய்ப்புகளை அனுபவித்துக் கொண்டிருந்த நகரவாசிகள் மீது, அவர்கள் மனதில் வன்மம் குடிகொண்டது. அவர்களைக் கட்டுப்படுத்த, அங்கு யாரும் இருக்கவில்லை. கண்ணில் கண்ட எல்லாவற்றையும் அடித்து நொறுக்கினார்கள். "காட்டுக்குள் இருந்து வந்த வானரப் படை ஒன்று, வீடுகளுக்குள் புகுந்து துவம்சம் செய்வதாக" நகரத்து மாந்தர் நினைத்துக் கொண்டார்கள். 

பட்டிக்காட்டு இளைஞர்களின் அடாவடித் தனங்களை, நகரவாசிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை. க்மெர் ரூஜ் தலைவர்கள், பொது நூலகம் போன்ற சில முக்கியமான கலாச்சார மையங்களை மட்டுமே பாதுகாப்பதில் முனைப்புக் காட்டினார்கள். மற்ற இடங்களில் எல்லாம், பட்டிக்காட்டு கிராமவாசிகளை, பட்டணத்து சுகவாசிகளுக்கு எதிராக திருப்பி விடுவதில் திருப்திப் பட்டனர். க்மெர் ரூஜ் போராளிகள், கிராமங்களில் முகாமிட்டிருந்த காலங்களில், "நகரவாசிகளின் கீழ்த்தரமான சீரழிந்த கலாச்சாரம்" பற்றி அவர்களுக்கு போதிக்கப் பட்டிருந்தது. தற்போது அதனை, தமது கண்ணால் நேரில் கண்டார்கள். பட்டணத்து ஆடம்பரம் மீதான, கிராமப்புற இளைஞர்களின் வெறுப்பு மேலும் அதிகரித்தது. பொல் பொட்டும், க்மெர் ரூஜ் தலைவர்களும் நாட்டுப்புற ஏழை மக்களின் தார்மீகக் கோபத்தை, கம்போடியப் புரட்சியின் அடித்தளமாக பயன்படுத்தினார்கள். நகரங்கள், கிராமங்களை ஆள்வதைத் தான், உலக வரலாறு முழுவதும் நாங்கள் கண்டிருக்கிறோம். பொல் பொட் அந்த விதியை தலைகீழாக மாற்றினார். கிராமங்கள், நகரங்களை ஆளும் காலம் வந்தது. ஒரு நாள், அடிமைகள் எஜமானர்களானால் என்ன நடக்கும்?  எஜமானர்கள் அடிமைகளாவார்கள். இந்தப் புரட்சி, இனி வருங்காலத்தில் எந்தவொரு நாட்டிலும் நடக்கக் கூடாது என்பதில் ஆளும் வர்க்கம் உறுதியாக இருக்கின்றது. 

பொல் பொட் ஒரு கொலைவெறி கொண்டலைந்த மனநோயாளி போன்று சித்தரிப்பதும், கம்போடியாவில் நான்கு மில்லியன் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக பிரச்சாரம் செய்வதும் இந்த நோக்கத்திற்காகத் தான். இன்றைக்கும் மத்தியதர வர்க்க தமிழர்கள் பலர், அந்தப் பிரச்சாரத்தை முனைப்புடன் செய்து கொண்டிருக்கின்றனர். பொல் பொட்டின் கொலைவெறிக்கு படுகொலையான அப்பாவி கம்போடிய மக்கள் மீது கொண்ட கரிசனையால், அவர்கள் அதைச் செய்யவில்லை. அவர்கள் தமது எதிர்காலத்தை எண்ணி அச்சப் படுகின்றனர். கம்போடியாவில் நடந்ததைப் போல, இந்தியாவிலும், இலங்கையிலும் வாழும் நாட்டுப்புற ஏழை மக்கள் எழுச்சி பெற்றால் என்ன நடக்கும்? கம்போடியப் புரட்சியில் இருந்து நாங்கள் தான் எந்தவிதப் படிப்பினையையும் பெறவில்லை. இன்றைக்கும் மேற்கத்திய எஜமானர்கள் சொல்லிக் கொடுத்த பாடங்களை மனனம் செய்து ஒப்புவித்துக் கொண்டிருக்கிறோம். 

ஆனால், சிறிலங்கா அரசு போன்ற பல நாடுகளின் ஆளும் வர்க்கங்கள், அதனை நன்றாக ஆய்வு செய்து படித்து வைத்திருக்கின்றன. இலங்கையில்,  1989 - 1991  வரையில் நடந்த ஜேவிபி அழிப்பு போரில், ஏறத்தாள எழுபதாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். சிங்கள நாட்டுப்புற ஏழை மக்கள் தான், ஜேவிபி யின் ஆதரவுத் தளமாக இருந்தது. அதனால், அந்த மக்களை அழித்தொழிப்பதில் சிறிலங்கா அரசுக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. அதே போன்று, 2009 ம் ஆண்டு, வன்னியில் நாற்பதாயிரம் தமிழ் மக்களை படுகொலை செய்த போதும், உலகம் வேடிக்கை பார்த்தது. அன்று படுகொலையான தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர், ஒன்றில் வன்னிப் பெருநில விவசாயிகள், அல்லது கிழக்கு மாகாண ஏழைகள், அல்லது மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்த அகதிகளாக இருந்தனர். ஒரு வேளை, முள்ளிவாய்க்கால் பேரவலம், மத்தியதர வர்க்க மக்களை அதிகமாக கொண்ட யாழ்ப்பாணத்தில் நடந்திருந்தால், வரலாறு வேறு விதமாக திரும்பி இருக்கலாம். போரில் நாட்டுப்புற ஏழை மக்கள் பெருமளவு பலியாகிறார்கள் என்ற வர்க்க உணர்வு, பல மட்டங்களிலும் பரவிக் காணப்பட்டது. 

க்மெர் ரூஜ் வெற்றி பெற்ற சில மணி நேரங்களுக்குள்,  ப்னோம் பென் நகர வாசிகளின் மகிழ்ச்சி, சூரியனைக் கண்ட பனி போல கரைந்து போனது. "அனைவரும் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறி, கிராமப் புறங்களுக்கு செல்ல வேண்டும்." என்று க்மெர் ரூஜ் போராளிகள் ஒலி பெருக்கிகளில் அறிவித்தார்கள். நகர வாசிகள் தமது உடமைகளை எடுக்கக் கூட சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. (மக்களின் உடமைகளை யாரும் திருட விடாது பார்த்துக் கொள்ளப் பட்டது. நான்கு வருடங்களுக்குப் பின்னர் மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பிய போது, எல்லாம் அப்படியே இருந்தன. ஆனால், வியட்நாமிய படையெடுப்பின் பின்னர் நிறைய கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன.) சில மணி நேரத்திற்குள், அனைவரும் ப்னோம் பென் நகரத்தை விட்டு வெளியே சென்று விட வேண்டும். மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், முதியோர்கள், எல்லோரும் கிளம்பி விட வேண்டும். சில நாட்களில் திரும்பி வந்து விடலாம் என்று சொன்னார்கள். ஆனால், திரும்பி வர நான்கு வருடங்களாகும் என்று, அன்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. நகர மக்களின் பூர்வீகமும் கிராமம் என்பதால், பலர் தத்தமது சொந்தக் கிராமங்களுக்கு செல்ல நினைத்தார்கள். ஆனால், அது அவர்களை வெளியேற்றிய படைப்பிரிவின் தளபதியின் முடிவில் தங்கி இருந்தது. சில கமாண்டர்கள் மக்களை அவரவரது கிராமங்களுக்கு செல்ல அனுமதித்தார்கள்.  சிலர் கடுமையாக நடந்து கொண்டார்கள். தாம் சொல்லும் இடத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டனர். தலைநகரை விட்டு வெளியேறிய மக்கள், பல நாட்கள் கால்நடையாக நடந்து சென்று தான் கிராமங்களை அடைய வேண்டியிருந்தது. நடக்கும் வலுவற்ற நோயாளிகளையும், வயோதிபர்களையும் அந்த இடத்திலேயே போட்டு விட்டுச் சென்றார்கள். பலர் உணவு கிடைக்காமல் போகும் வழியிலேயே பலவீனப்பட்டு நின்று விட்டனர். அப்படியானவர்கள் சாவை எதிர்நோக்கி காத்திருப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. 

அன்றைய மனிதப் பேரவலத்தில் ஆயிரக்கணக்கானோர் மடிந்தனர். இறுதியில் இலட்சக் கணக்கான நகரவாசிகள், கம்போடிய கிராமங்களில் எல்லாம் பரவலாக தங்க வைக்கப் பட்டனர். அவர்களுக்கான தற்காலிக முகாம்கள் (ஓலைக் கொட்டில்கள்) அமைக்கப் பட்டன. காலங்காலமாக கிராமங்களில் விவசாயம் செய்து வந்த மக்களுடன் சேர்ந்து, நகர வாசிகளும் வயலில் இறங்கி வேலை செய்ய வேண்டுமென நிர்ப்பந்திக்கப் பட்டனர். ஒருவர் நகரத்தில், எத்தகைய மதிப்புக்குரிய தொழில் செய்திருந்தாலும், கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயியாக வாழ வேண்டி இருந்தது. எல்லோரும் ஒரே மாதிரியான இடத்தில் வசிக்க வேண்டும். ஒரே மாதிரியான வேலை செய்ய வேண்டும். ஒரே உணவை சாப்பிட  வேண்டும். பொல் பொட் கனவு கண்ட சமத்துவ சமுதாயம், நடைமுறைக்கு வந்தது. ஆனால், அது அனைத்துப் பிரைஜைகளினதும் ஏகோபித்த விருப்பமாக இருக்கவில்லை. நிச்சயமாக, படித்த, வசதியாக வாழ்ந்த மத்திய தர வர்க்க மக்கள், அதனை நரக வாழ்க்கையாக அனுபவித்திருப்பார்கள். அன்றிலிருந்து தம்மை இந்த நிலைக்கு தள்ளிய க்மெர் ரூஜை வெறுக்க ஆரம்பித்திருப்பார்கள்.  க்மெர் ரூஜ் போராளிகளும், அவர்களது கிராமப்புற ஆதரவாளர்களும், நகர வாசிகளை தனியாக பிரித்து வைத்தார்கள். அவர்களை சந்தேகத்துக்குரியவர்களாக பாகுபாடு காட்டினார்கள். இந்த வேறுபாடு, க்மெர் ரூஜ் ஆட்சியின் ஆரம்ப நாட்களில் சில படுகொலைகளுக்கு வழிவகுத்தது. வேலை செய்ய மறுத்தவர்கள், பொறுப்பாளர்களின் உத்தரவை மீறியவர்கள், எதிர்த்துப் பேசியவர்கள் எல்லோரும் "போட்டுத் தள்ளப் பட்டார்கள்".  சின்ன தவறேயாயினும், சுட்டுக் கொள்வது பெரிய விடயமாகப் படவில்லை. மனித உயிர்களுக்கு மதிப்பில்லாமல் போனது.

க்மெர் ரூஜ், கம்போடியாவின் ஆட்சி அதிகாரத்தை முழுவதுமாகக் கைப்பற்றியவுடன், அரச படையினர் தமது ஆயுதங்களை போட்டு விட்டு சரணடைந்தார்கள். ஆனால், சரணடைந்த படையினர் எல்லோரும் சுட்டுக் கொல்லப் பட்டனர்.  யுத்தம் நடந்து கொண்டிருந்த காலங்களிலும், க்மெர் ரூஜ் இயக்கத்தினர் வெற்றிகரமாக படை முகாம்களை தாக்கி அழித்த போதும் அப்படித் தான் நடந்தது. அரச படையினரும், பிடிபட்ட அல்லது சரணடைந்த க்மெர் ரூஜ் போராளிகளை சுட்டுக் கொன்று விடுவார்கள். சண்டையில் தோற்ற எதிராளியை உயிரோடு விட்டு வைக்கும் பழக்கம், க்மெர் மக்களின் வரலாற்றிலேயே கிடையாது. (சண்டையில் பிடிக்கப் பட்ட எதிரிப் படையினரை மன்னித்து விடுதலை செய்து விட வேண்டும் என்ற மாவோவின் கோட்பாட்டுக்கு மாறாகத் தான், அன்று க்மெர் ரூஜ் நடந்து கொண்டது. எண்பதுகளில் மீண்டும் கெரில்லா யுத்தம் நடத்திய காலத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர்.) ஒரு சண்டையில் வெற்றி என்றால், எதிரிப் படையில்  எத்தனை பேரை கொன்றோம் என்று கணக்குச் சொல்லிப் பெருமைப் பட வேண்டும். இல்லாவிட்டால் அது ஒரு வெற்றியாக கருதப் பட மாட்டாது. இது கம்போடியாவுக்கு மட்டும் உரிய சிறப்பம்சமல்ல. ஈழப் போரிலும் அது போல நடந்துள்ளது. இறுதி யுத்தத்தில் சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகளை, சிறிலங்கா அரச படையினர் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றனர். புலிகள் இயக்கம், முல்லைத்தீவு, ஆனையிறவு முகாம்களை தாக்கியழித்த யுத்தங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவவீரர்கள் கொல்லப் பட்டனர். இவர்களில் பலர் முகாம் வீழ்ச்சியடைந்த பின்னர் சரணடைந்திருந்தனர்.  

ப்னோம் பென் நகரம், ஆவிகள் நடமாடும் இடம் போன்று, ஆளரவம் அற்று வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. ஓரிரு மாதங்களின் பின்னர், கம்போடியாவின் புதிய ஆட்சியாளர்கள் அங்கே சென்று தங்கினார்கள். அப்பொழுது எந்த நாட்டுடனும் இராஜதந்திர உறவு ஏற்பட்டிருக்கவில்லை. எந்த நாட்டின் தூதுவராலயமும் அங்கிருக்கவில்லை. மக்கள் வெளியேற்றப்பட்ட அன்றே, வெளிநாட்டு தூதுவர்களும் வெளியேற்றப் பட்டார்கள். ப்னோம் பென் நகர மக்கள் வெளியேற்றப் பட்டதற்கான காரணங்கள் பல கூறப்படுகின்றன. மேலைத்தேய நாடுகளில், க்மெர் ரூஜ் இயக்கத்தின் கொடுங்கோன்மைக்கு சாட்சியமாக கூறிக் கொண்டிருக்கின்றனர். எது எப்படி இருப்பினும், மிக முக்கியமான மூன்று காரணங்கள், அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தன.

1. கம்போடியா மீதான அமெரிக்க விமானங்களின் குண்டுவீச்சு உத்தியோகபூர்வமாக நிறுத்தப் பட்டிருக்கவில்லை.  இரண்டு மில்லியன் மக்கட்தொகை கொண்ட ப்னோம் பென் நகரம் குண்டு வீசித் தாக்கப்படலாம் என்ற அச்சம் நிலவியது. அதனை ஆதாரமற்றது என கூற முடியாது. ப்னோம் பென் நகரம், அமெரிக்க சார்பு அரசாங்கம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் அதன் மீது குண்டு போட எந்த காரணமும் இல்லை. தற்பொழுது, அமெரிக்க விரோதியான "கம்யூனிச" க்மெர் ரூஜ் இயக்கம் அதனைக் கைப்பற்றியுள்ளது.  ப்னோம் பென் குண்டு வீச்சுக்கு இலக்கானால், ஒரு மாதத்திற்குள் புரட்சி முறியடிக்கப் பட்டிருக்கும். 
2. ப்னோம் பென் நகரத்தினுள், சி.ஐ.ஏ. உளவாளிகளின் வலைப்பின்னல் ஒன்று சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கே.ஜி.பி., வியட்நாம் உளவாளிகளுக்கும் குறைவில்லை. ப்னோம் பென் நகர மக்களை, நாடு முழுவதும் இருந்த கிராமங்களுக்கு பிரித்து அனுப்பி இருந்ததால், உளவாளிகளும் தொடர்பின்றி சிதறிப் போனார்கள். க்மெர் ரூஜின் எதிர்பாராத நடவடிக்கையால், உளவாளிகள் இயங்க முடியாமல் முடக்கப் பட்டனர். தென் கிழக்காசியப் பிராந்தியத்திற்கான சி.ஐ.ஏ. தலைமையகமும், புலனாய்வுத் தகவல்கள் வருவது நின்று போனதை உறுதி செய்திருந்தது.
3. இலட்சக் கணக்கான ப்னோம் நகரவாசிகளுக்கு நிவாரண உதவி வழங்கும் வசதி இருக்கவில்லை. ஏற்கனவே போரினால் உணவுப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப் பட்டிருந்தது. அதற்கு மாறாக, நகரவாசிகளை கிராமங்களுக்கு அனுப்புவதன் மூலம், அவர்களையும் உணவு உற்பத்தியில் ஈடுபடுத்த முடியும். 

1977 ம் ஆண்டு வரையில், கம்போடியாவின் புதிய ஆட்சியாளர்கள் யார் என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. க்மெர் ரூஜ் போராளிகள், தங்களை "இயக்கம்" என்ற பெயரில் அழைத்துக் கொண்டனர். கம்போடியாவின் அரசாங்கம் எங்கே? இயக்கம். பிரதமர் யார்? இயக்கம். மக்களுக்கு தொழில் வழங்கும் நிறுவனம் எது? இயக்கம். இப்படியே மக்களுக்கு உணவு, உடை, உறைவிடம் எல்லாமே இயக்கம் ஒழுங்கு படுத்திக் கொடுத்தது. மதம் தடை செய்யப் பட்டது. பௌத்த விகாரைகள் பூட்டப்பட்டன, அல்லது மாட்டுத் தொழுவங்களாக மாற்றப் பட்டன. பௌத்த பிக்குகள், "மக்களின் உழைப்பில் வாழும் ஒட்டுண்ணிகள்" என்று குற்றம் சாட்டப்பட்டனர். அதுவரை காலமும் மக்களிடம் இரந்துண்டு வாழ்ந்த புத்தபிக்குகள், சாதாரண மக்கள் போன்று உழைத்துண்டு வாழ வேண்டும். மக்களின் ஆன்மீக வாழ்வையும் இயக்கமே கட்டுப் படுத்தியது. யாரும் இயக்கத்திற்கு எதையும் ஒளிக்க முடியாது. இயக்கத்திற்கு எல்லாமே தெரியும். இயக்கத்தினால் ஆக்கவும், அழிக்கவும் முடியும்.

இயக்கம், இயக்கம் என்று சொல்கிறார்களே, அந்த இயக்கத்தின் தலைவர் யார்?  பொல் பொட் என்ற பெயர், இயக்கத் தலைவர்கள், பொறுப்பாளர்களைத் தவிர மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. பொல் பொட் என்பது இயக்கத்திற்காக சூட்டிக் கொண்ட புனைபெயர். 1977 ம் ஆண்டு, கம்போடியாவின் புதிய அரசு அறிவிக்கப் பட்டது. அப்பொழுது, புதிய அரசாங்கத்தின் பிரதமரின் பெயர் "சாலோத் சார்" (பொல் பொட்) என்று அறிவிக்கப் பட்டது. அதைக் கேள்விப்பட்டதும், ஒரு கிராமத்தில் கூட்டுறவுப் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த, ப்னோம் பென் நகரத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று அதிர்ச்சியில் உறைந்து போனது. பொல் பொட்டின் சொந்த அண்ணனின் குடும்பம் தான் அது. தனது தம்பி தான் கம்போடியாவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவன் என்பதை அந்த அண்ணனால் நம்ப முடியவில்லை. க்மெர் ரூஜ் போராளிகளால் ப்னோம் பென்னில் இருந்து வெளியேற்றப் பட்ட குடும்பங்களில் அவரின் குடும்பமும் ஒன்று. சக நகரவாசிகளைப் போன்று, வழி நெடுகிலும் அனைத்து துன்பங்களையும் அனுபவித்து, தற்பொழுது ஒரு கிராமத்தில் விவசாயிகளோடு வயலில் கட்டாய வேலை செய்து கொண்டிருந்தார்கள். தனது உறவினர்கள் என்பதற்காக, பொல் பொட் அவர்களுக்கு எந்த சலுகையும் காட்டவில்லை. அதே போன்று, எவராவது ஒரு உறவினர் கடந்த கால அரசாங்கத்தில் வேலை செய்திருந்தால், அவருக்கும் கருணை காட்டப் படவில்லை. சொந்தக்காரனாக இருந்தாலும், நெருங்கிய நண்பனாக இருந்தாலும், துரோகி துரோகி தான். துரோகிகள் எவராக இருந்தாலும், தீர்த்துக் கட்டப் பட வேண்டும் என்பது பொல் பொட்டின் கொள்கை. வருங்காலத்தில் அதைக் காரணமாக வைத்து, தன்னை ஒரு "இனப்படுகொலைக் குற்றவாளி" என்று உலகம் குற்றம் சாட்டப் போகின்றது என்பதை, அன்று அவர் அறிந்திருக்க நியாயம் இல்லை.

(தொடரும்)


தொடரின் முன்னைய பதிவுகள்:
1."பட்டணத்தில் படுகொலை, பட்டிக்காட்டில் விடுதலை!" - பொல்பொட்டிசம், ஒரு மீளாய்வு
2.கம்போடிய மண்ணுக்கேற்ற, க்மெர் ரூஜ் பாணி மார்க்ஸியம்
3.இனவழிப்பு குற்றவாளிக்கு நோபல் பரிசளிக்கும் அமெரிக்க நீதி
4.பொல் பொட் ஒரு கம்யூனிஸ்டா? அல்லது க்மெர் தேசியவாதியா?

 உசாத்துணை: 
1. Kampuchea, A photo record of the first American visit to Cambodia since April 1975, by Robert Brown, David Kline
2. Pol Pot, The History of a Nightmare, by Philip Short
3. De Glimlach van Polpot, Peter Fröberg Idling
4. A Short History of Cambodia, by John Tully
5. Angkor: An Essay on Art and Imperialism by Jan Myrdal and Gun Kessle

 இணையத் தளங்கள்: 
1. CAMBODIA: NATIONALISM, PATRIOTISM, RACISM, AND FANATICISM, http://www.mekong.net/cambodia/natlism.htm
2. Truth about Pol Pot and Maoism, http://maoistrebelnews.wordpress.com/2011/07/26/truth-about-pol-pot-and-maoism/ 
3. Pol Pot Was Not and Is Not A Communist, http://msuweb.montclair.edu/~furrg/pol/khmerrouge.html
4. Jag såg inget massmord, JAN MYRDAL tar upp diskussionen om Pol Pot och döden i Kambodja, http://www.aftonbladet.se/kultur/huvudartikel/article10789614.ab

1 comment:

Php Mute said...

//தனது உறவினர்கள் என்பதற்காக, பொல் பொட் அவர்களுக்கு எந்த சலுகையும் காட்டவில்லை. அதே போன்று, எவராவது ஒரு உறவினர் கடந்த கால அரசாங்கத்தில் வேலை செய்திருந்தால், அவருக்கும் கருணை காட்டப் படவில்லை. சொந்தக்காரனாக இருந்தாலும், நெருங்கிய நண்பனாக இருந்தாலும், துரோகி துரோகி தான். துரோகிகள் எவராக இருந்தாலும், தீர்த்துக் கட்டப் பட வேண்டும் என்பது பொல் பொட்டின் கொள்கை


சிந்திக்கவும் ஆதரிக்கவும் வேண்டிய விடயம்