Thursday, October 27, 2011

இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட புதிய லிபியாவின் எதிர்காலம்

கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்த புரட்சியாளர்கள், அங்கே இதுவரை என்னென்ன புரட்சிகளை செய்துள்ளனர்? கறுப்பின மக்களை இனச்சுத்திகரிப்பு செய்துள்ளார்கள். கறுப்பினப் பெண்களை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து, பாலியல் அடிமைகளாக நடத்தியுள்ளனர். பலதார மண சட்டத்தை அமுல் படுத்தி பெண்ணுரிமைக்கு சமாதி கட்டியுள்ளனர். புரட்சிப் படையினால் விடுதலை செய்யப்பட்ட புதிய லிபியாவில், இன்னும் பல அதிர்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

"எனது மரணத்தை விட, லிபியாவின் எதிர்காலம் குறித்து தான் அதிகம் கவலைப் படுகிறேன்." - கடாபி இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் கூறியது. கடாபியின் பாதுகாப்பு அதிகாரி மன்சூர், அல் அராபியா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் இருந்து. கடந்த சில மாதங்களாக, லிபியாவில் யுத்தம் காரணமாக பெருமளவு மக்கள் கொல்லப்பட்டதையிட்டு கடாபி வருத்தமடைந்திருந்தார், என்றும் மன்சூர் மேலும் தெரிவித்தார். அப்போது இடைமறித்த அல் அராபிய செய்தியாளர், "50000 பேரை சாதாரணமாக கொன்று குவித்த ஒருவர், தனது செயலுக்கு வருந்துவதாக கூறுவது ஆச்சரியமளிக்கிறது." என்றார். அதற்கு பதிலளித்த மன்சூர், "அல் அராபியா போன்ற ஊடகங்களே இவ்வாறான பொய்களை பரப்பி வந்துள்ளன." என்று சாடினார்.

தகவல் தொடர்பு சாதனங்களால் ஆளப்படும் உலகில், போரில் முதல் பலியாகும் உண்மையைக் கண்டறிவது எளிதான காரியமல்ல. லிபியாவில் கிளர்ச்சி ஆரம்பமாகிய முதல் நாளில் இருந்தே, அனைத்து லிபியர்களும் கடாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதைப் போன்ற பிரமையை ஊட்டி வளர்த்தன. அரசுக்கு எதிராக கலகம் செய்தவர்களை அடக்குவதற்கு கடாபி இராணுவத்தை அனுப்பிய பொழுது, அது "லிபிய இராணுவமல்ல, மாறாக கூலிப்படை." என்று அறிவித்தார்கள். கடாபியிடம், "ஆப்பிரிக்க கருப்பினத்தவர்களைக் கொண்ட கூலிப்படை இருப்பதாகவும், அவர்களே ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் மீது அடக்குமுறை பிரயோகிப்பதாகவும்," மதிப்புக்குரிய ஊடகங்கள் கூட செய்தி வாசித்தன. கறுப்பர்களுக்கு எதிரான லிபியர்களின் இனவெறி சர்வதேச ஊடகங்களிலும் எதிரொலித்தது.

கடாபியின் மரணத்திற்குப் பிறகு லிபியா எப்படி இருக்கின்றது? அநேகமாக, ஊடகங்கள் லிபியா குறித்து செய்தி அறிவிப்பதை இனிமேல் நிறுத்தி விடலாம். லிபியர்கள் எந்த விதக் குறையுமற்று, சுதந்திரமாக, சுபீட்சத்துடன் வாழ்வதாக நாமும் நினைத்துக் கொள்ளலாம். ஆனால், பிரச்சினைகள் இனிமேல் தான் பூதாகரமாக வெளிக்கிளம்ப இருக்கின்றன. அரபு மொழி பேசும் வட ஆப்பிரிக்க நாடுகளில் லிபியா மிகக் குறைந்தளவு சனத்தொகையைக் கொண்டுள்ளது. இருப்பினும், 140 இனக்குழுக்களைக் கொண்ட சமுதாயத்தில் ஒற்றுமையைக் கட்டுவது சுலபமான காரியமல்ல. 40 க்கும் குறையாத கிளர்ச்சிக் குழுக்கள், கடாபிக்கு எதிராக போரிட்டன. இசுலாமிய மத அடிப்படைவாதிகள், முன்னை நாள் அரச படையினர், இனக்குழுக்களை பாதுகாக்கும் ஆயுததாரிகள் என்று பலதரப் பட்டவர்கள். கடாபியின் கொடுங்கோல் ஆட்சி மீதான வெறுப்பு மட்டும் இவர்களை போராடத் தூண்டவில்லை. தாராளமயப் படுத்தப் பட்ட "கடாபியின் இஸ்லாத்தை" கடும்போக்காளர்கள் அங்கீகரிக்கவில்லை. அதே போல, கடாபியின் "ஆப்பிரிக்க சகோதரத்துவம்" இனவெறியர்களின் கண்களை உறுத்திக் கொண்டிருந்தது.

கறுப்பின ஆப்பிரிக்கர்களையும் சகோதரர்களாக மதித்து, "ஆப்பிரிக்க ஒன்றியம்" உருவாக்க பாடுபட்ட கடாபியின் கொள்கைக்கு நேர் எதிரானவர்கள், இந்தப் புரட்சிப் படையினர். லிபியாவிற்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் கறுப்பினத்தவர்கள் வாழவில்லை. "லிபியாவின் எல்லைகளுக்குள் வாழும் கறுப்பின பிரஜைகள் குறித்து," இனி உலகம் கேள்விப் படப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் யாவரும் "புரட்சிப் படையினரால்" இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டு விட்டனர். சில அக்கறையுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் விசாரித்த பொழுது, "கருப்பர்கள் எல்லோரும் நைஜருக்கு அகதிகளாக சென்று விட்டனர்." என்று பதிலளிக்கப் படுகின்றது. லிபியப் பிரஜைகளான கறுப்பினத்தவர்கள் மட்டும் இனச் சுத்திகரிப்பு செய்யப் படவில்லை. லிபியாவில் பல ஆப்பிரிக்க நாட்டவர்கள், கூலியாட்களாக, அகதிகளாக வாழ்ந்தனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு மில்லியன் அளவில் இருக்கும். வளைகுடா நாடுகளைப் போல, ஆப்பிரிக்க கூலிகளின் உழைப்பில் லிபியப் பொருளாதாரம் செழித்துக் கொண்டிருந்தது. அவர்களை விட, கடல் கடந்து ஐரோப்பா செல்வதற்காக வந்து குவிந்த ஆப்பிரிக்க அகதிகளுக்கும் லிபியாவில் தற்கால புகலிடம் கிடைத்தது.

"லிபியப் புரட்சி" ஆரம்பமாகிய அன்றிலிருந்து, லிபியாவில் சட்டம், ஒழுங்கு குலைந்து விட்டது. யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அராஜக சூழல் நிலவியது. "புரட்சிப் படையினர்" கடாபியின் விசுவாசிகளை மட்டும் வேட்டையாடவில்லை. கரு நிற மேனியைக் கொண்ட மக்களையும் நர வேட்டையாடினார்கள். போர் ஆரம்பமாகியவுடன், அயல் நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பான்மையானோர் கறுப்பினத்தவர்கள். தற்போது போர் ஓய்ந்த பின்னர், அங்கு நடந்த அக்கிரமங்கள் மெல்ல மெல்ல வெளிவருகின்றன. "புரட்சிப் படையினரின்" முகாம்களை துப்புரவு படுத்தவும், கடினமான பணிகளை செய்யவும் கறுப்பின ஆண்கள் அடிமைகளாக வேலை வாங்கப் பட்டுள்ளனர். போரிட்டுக் களைத்த "புரட்சிக் காரர்களின்" பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்வதற்கு கறுப்பின பெண்கள் பயன்பட்டுள்ளனர்.

பிரத்தியேக "அகதி முகாம்களில்" தனியாக பெண்களை அடைத்து வைத்திருந்துள்ளனர். "அகதி முகாம்" என்று அழைக்கப்பட்ட வதை முகாம்களை பார்வையிட, செஞ்சிலுவை சங்கத்தினர் வந்து போவதுண்டு. முகாம் பொறுப்பாளருடன் "பாதுகாப்பு ஏற்பாடுகளை" பற்றி மட்டும் பேசி விட்டு செல்வார்கள். முகாம்களை அண்டி வாழும் குடியிருப்பாளர்கள், அங்கு நடந்த அக்கிரமங்களை விபரிக்கின்றனர். "மாலை நேரங்களில் நீங்கள் இங்கே நின்றால் அந்தக் காட்சிகளைக் காணலாம். புரட்சிப் படையினர் துப்பாக்கி வெட்டுகளை தீர்த்துக் கொண்டே சத்தமிட்ட படி வருவார்கள். பெண்களை அள்ளிக் கொண்டு செல்வார்கள்."

துப்பாக்கிகளுடன் திரியும் "புரட்சிப் படையினர்" மட்டும் இவ்வாறான அத்துமீறல்களில் ஈடுபடுவதில்லை. சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்ட நிலையில், சாதாரண இளைஞர்களும் ஆப்பிரிக்க பெண்களை பாலியல் பண்டமாக நுகர்கின்றனர். புரட்சிப் படையினர் லிபியாவில் கொண்டு வந்த புரட்சி இது தான். அகதி முகாமை, இலவச விபச்சார விடுதியாக மாற்றிய சாதனை, புரட்சி அல்லாமல் வேறென்ன? கடாபியின் ஆட்சிக் காலத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த கமேரூன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்தார். "அப்போதெல்லாம் வேலை செய்யும் இடங்களில், சில எஜமானர்கள் அடிப்பார்கள். சிலர் சம்பளம் கொடுக்க மாட்டார்கள். ஆனால், இன்றுள்ள நிலைமை மிக மோசமானது. எல்லா லிபியர்களும் நிறவெறியர்களாக காணப்படுகின்றனர். ஆப்பிரிக்கர்கள் எல்லோரும் லிபியாவை விட்டு வெளியேறி விட்டனர்."

புரட்சிப் படையினரின் மற்றொரு மகத்தான சாதனை குறித்து, இதுவரை எந்த ஒரு ஊடகமும் வாய் திறக்கவில்லை. கடற்கரையோரமாக அமைந்துள்ள மிஸ்ராத்தா நகரில் இருந்து 25 கி.மி. தொலைவில் உள்ளது தவேர்கா (Tawergha ) எனும் சிறு நகரம். போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், மிஸ்ராத்தா சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தது. மிஸ்ராத்தா நகரில் புரட்சிப் படையினரின் கை ஓங்கி இருந்ததால், கடாபியின் படைகள் சுற்றி வளைத்து தாக்கிக் கொண்டிருந்தன. மிஸ்ராத்தா நகர மக்களின் அவலம் குறித்து, ஊடகங்கள் தினசரி செய்தி வாசித்தன. "சர்வதேச சமூகமும்" ஐ.நா. அவையை கூட்டுமளவு கண்டனம் தெரிவித்தன. இறுதியில் நேட்டோ விமானங்களின் குண்டுவீச்சினால் மிஸ்ராத்தா முற்றுகை விலக்கிக் கொள்ளப் பட்டது. மிஸ்ராத்தா முற்றுகைக்கு பழிவாங்குவதற்காக, புரட்சிப் படையினர் தவேர்கா மீது பாய்ந்தார்கள். தவேர்கா நகரில் நுழைந்த புரட்சிப் படையினர், கிரனேட் குண்டுகளை வெடிக்க வைத்தனர். ஆண்கள், பெண்கள், வயோதிபர், குழந்தைகள் எல்லோரையும் பிடித்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

தவேர்கா நகரில் வாழ்ந்த மக்கள், "கறுப்பு லிபியர்கள்" என்பது குறிப்பிடத் தக்கது. லிபிய பிரஜைகளான இவர்கள், சஹாரா பாலைவனவாசிகளான துவாரேக் இனத்தை சேர்ந்தவர்கள். இவர்களது மூதாதையர், நாடோடிகளாக வாழ்ந்தவர்கள். சஹாரா பாலைவனத்தின் வணிகப் போக்குவரத்து, அவர்களது பரம்பரைத் தொழில். கடாபியின் ஆட்சிக் காலத்தில், அந்த இனத்தவருக்கென ஒரு சிறப்புப் படையணி உருவாக்கப் பட்டது. இரு தசாப்தங்களுக்கு முன்னர், சாட் நாட்டுடன் எல்லைத் தகராறு காரணமாக போர் மூண்டது. தென் எல்லையில், ஒரு கறுப்பு ஆப்பிரிக்க நாட்டுடனான மோதலின் போது, துவாரக் சிறப்பு படையணியினர் ஈடுபடுத்தப் பட்டனர். இறுதியாக நடந்த, உள்நாட்டுப் போரில், கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு, கடாபியின் விசுவாசத்திற்குரிய துவாரக் படைகள் பயன்படுத்தப் பட்டன. குறிப்பாக, மிஸ்ராதா யுத்தத்தில் அவர்களின் பங்களிப்பு கணிசமான அளவில் இருந்துள்ளது.

தவேர்கா நகரத்தை சேர்ந்த கறுப்பின படையினரின் செயலுக்கு பழிவாங்குவதற்காகவே, அந்த நகர மக்களை வெளியேற்றியதாக "புரட்சிப் படையினர்" தெரிவிக்கின்றனர். தமது ஊரை சேர்ந்தவர்கள் கடாபியின் இராணுவத்தில் பணியாற்றியதை ஒப்புக் கொள்ளும் தவேர்காவாசிகள், "கிளர்ச்சியாளர் மனதில் ஊறியுள்ள, கறுப்பின மக்கள் மேலான இனவெறி காரணமாகவே" தாம் வெளியேற்றப் பட்டதாக கூறுகின்றனர். போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களை விசாரித்து வந்த, "சர்வதேச மன்னிப்புச் சபை" யை சேர்ந்த ஆர்வலர் ஒருவரும், தவேர்கா மக்களின் வெளியேற்றம் குறித்து ஆராய்ந்துள்ளார்.

சுமார் இருபதாயிரம் தவேர்காவாசிகள், திரிபோலியில் உள்ள அகதிமுகாமில் தங்க வைக்கப் பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. சில மனித உரிமை ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும், அங்கு சென்று விசாரித்துள்ளனர். அவர்கள் அங்கு சென்ற வேளை, முகாம் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. புரட்சிப் படையினரைக் கேட்டால், "அந்த மக்கள் யாவரும் நைஜருக்கு சென்று விட்டார்கள்." என்று அலட்சியமாக கூறுகின்றனர். மேற்கொண்டு எந்த வித தடயமும் கிடைக்காத நிலையில், தவேர்கா மக்களுக்கு என்ன நடந்தது என்ற மர்மம் நீடிக்கின்றது. இறுதி யுத்தம் நடந்த சியேர்ட் நகரில், மனிதப் புதைகுழிகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. கடாபிக்கு விசுவாசமானவர்கள், சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டிருப்பதாக, மனித உரிமை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அது போல, தவேர்கா நகரில் வாழ்ந்த, 20000 கறுப்பின மக்களும் எங்காவது கொன்று புதைக்கப் பட்டிருக்கலாம்.

லிபியாவின் புதிய ஆட்சியாளர்கள் புரிந்துள்ள போர்க்குற்றங்கள் பற்றிய விபரங்கள், மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடாபியும், அவரது மகன் முத்தாசினும் உயிருடன் பிடிபட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட விடயம், வீடியோ காட்சிகளாக உலகெங்கும் வலம் வந்தன. இது குறித்தும், நூற்றுக் கணக்கான கடாபி விசுவாசிகளின் படுகொலை குறித்தும் விசாரணை தேவை என்று, மனித உரிமை ஸ்தாபனங்கள் அழுத்தம் கொடுக்கின்றன. மேற்குலகம் அவற்றை எல்லாம் கண்டும் காணாதது போல நடந்து கொள்கின்றது. புதிய அரசானது, இஸ்லாமிய மத அடிப்படைவாத போக்கில் செல்வதையும், யாரும் பெரிது படுத்தவில்லை.

இருப்பினும், எதிர்காலத்தில் காட்சிகள் மாறலாம். எண்ணெய் வளத்தை பங்கு போடுவதில் தகராறு ஏற்பட்டால், போர்க்குற்ற விசாரணை சம்பந்தமான சர்ச்சைகள் எழலாம். இரண்டு வருடங்களுக்கு முன்னர், புலிகளை அழிப்பதற்கு சிறிலங்கா அரசுக்கு பக்கபலமாக நின்ற மேற்குலக நாடுகள், பின்னர் தமது நண்பர்களை போர்க்குற்ற விசாரணைக்கு அழைத்து அழுத்தம் கொடுத்தன. இலங்கையில் நாம் ஏற்கனவே கண்ட காட்சிகள், லிபியாவில் நடந்து முடிந்துள்ளன. வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் போன்றே, கடாபியின் முடிவும் அமைந்திருந்ததை, மனித உரிமை நிறுவனங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. மேற்கத்திய நாடுகளுடன் முறுகல் நிலை தோன்றினால், அவர்கள் மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்குவதற்கு புதிய லிபிய அரசு தயாராகி வருகின்றது.

புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கி வந்த "லிபிய இஸ்லாமிய போராட்டக் குழு", கடாபிக்கு எதிரான கிளர்ச்சியில் முன்னணிப் பங்கு வகித்துள்ளது. இஸ்லாமிய மத அடிப்படைவாத கொள்கை கொண்ட, அல் கைதாவுடன் இணைந்து போராடிய, அந்த அமைப்பின் முக்கிய தலைவர் தாய்லாந்தில் பிடிபட்டார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ், அமெரிக்கர்களால் கடத்தப்பட்டு, சி.ஐ.ஏ.யினால் இரகசியமாக சித்திரவதை செய்யப்பட்டார். பின்னர், சி.ஐ.ஏ. தனது கைதியை கடாபியின் கையில் ஒப்படைத்தது. அந்த "சர்வதேச பயங்கரவாதி" வேறு யாருமல்ல, கடாபிக்கு எதிரான புரட்சிப் படையின் தலைமைத் தளபதி பெல்ஹாஜ்! மேற்குறிப்பிட்ட விபரங்கள் அடங்கிய ஆவணங்கள், கைவிடப் பட்ட பிரிட்டிஷ் தூதரகத்தில் கண்டெடுக்கப் பட்டன. அந்த ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு, வழக்குப் தொடுக்கப் போவதாக, பெல்ஹாஜ் சூளுரைத்துள்ளார். லிபியாவின் புரட்சியாளர்களுக்கும், மேற்குலகுக்கும் இடையிலான தேனிலவு விரைவில் முறியலாம். அப்போது லிபியாவில் எழும் நெருக்கடிகள், இன்றுள்ளதை விட மிக மோசமாக இருக்கும்.


மேலதிக தகவல்களுக்கு:
1.
Ethnic Hatred Rooted in Battle for Misrata Underlines Challenges the Nation Faces After Gadhafi
2.MI6 role in Libyan rebels' rendition 'helped to strengthen al-Qaida'
3.Libyan rebels round up black Africans
4.African women say rebels raped them in Libyan camp
5.Empty village raises concerns about fate of black Libyans

11 comments:

EKSAAR said...

பலதார மணம் எப்படி பெண்ணுரிமைக்கு சமாதியாகும்? உதாரணத்துக்கு இலங்கையில் உள்ள விதவைகளுக்கு ஆண்களை இறக்குமதிசெய்தா கட்டிக்கொடுக்கமுடியும்?

Mohamed Faaique said...

///பலதார மணம் எப்படி பெண்ணுரிமைக்கு சமாதியாகும்?///

உலகில் இந்தியா தவிர அனைத்து நாடுகளிலும் ஆண்களை விட பெண்களே அதிகம். அதுபோக மனைவியை இழப்பவர்களை விட கனவனை இழப்பவர்களே (விதவைகளே) அதிகம். இவர்களின் நிலை என்ன???

1. பலதார மணம் (சட்டப்படி ஒருவரின் இரண்டாம், 3ம் மனைவியாதல்)

2. விபச்சாரியாதல்..

3. லெஸ்பியன் ஆதல்...

இதில் உங்கள் கருத்து என்ன??

ஜெகதீபன் said...

விதவைகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் நோக்கத்திற்காக தான் பலதார கொள்கை என்றால் அதைப்போன்றதொரு மூடத்தனம் வேறெதுவும் இல்லை. அது சரி பலதாரங்களில் இன்னுமொன்றாக இருப்பது எப்படி மறு வாழ்வு ஆகும்.

Kalaiyarasan said...

லிபியாவில் பலதார மண சட்டம் கொண்டு வருதற்கு எந்த வித நியாயப் பாடும் கிடையாது. இலங்கை, இந்தியாவில் உள்ள நிலைமையோடு லிபியாவை ஒப்பிட முடியாது. அரபு உலகில், அதிகளவு படித்த பெண்களைக் கொண்ட நாடு. பெண்கள் வேலைக்கு போவதும், உயர் பதவி வகிப்பதும் லிபிய சமூகத்தில் சாதாரணக் காட்சிகள். மேற்கத்திய நாட்டுப் பெண்கள் போல, சொந்தக் காலில் நிற்கும் வல்லமை கொண்ட லிபியப் பெண்கள், இரண்டாவது, மூன்றாவது மனைவியாவதை விரும்புவதில்லை. இதுவரை அவர்களை அத்தகைய சூழலுக்கு உந்தித் தள்ளும் பொருளாதாரக் கஷ்டமும் இருந்ததில்லை. விதவைகள் மறுமணம் செய்வதை யாரும் தடுக்கவில்லை. மனைவியை இழந்த ஆண்கள் மறுமணம் செய்வதைப் போல, பெண்களுக்கும் அந்த உரிமை இருக்கின்றது. இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பும் ஆண், முதல் மனைவியை விவாகரத்து செய்திருக்க வேண்டும் என்பது லிபியாவின் திருமணச் சட்டமாக இருந்தது. அதிலே என்ன குறைபாடு?

Mohamed Faaique said...

திருமணம் என்பது பொருளாதரக் கஷ்டத்திற்கான தீர்வு அல்ல... பொருளாதார கஷ்டத்தை தீர்க்க யாரும் திருமணம் செய்வதாகவும் நான் நினைக்கவில்லை. 2, 3 மனவியாக கட்டாயம் ஆக வேண்டுமெனவும் சட்டமில்லை. அது அந்தப் பெண்களின் சொந்த முடிவு. அவர்கள் விரும்பி முடிப்பார்களாயின் நமக்கு என்ன பிரச்சனை.

எஸ் சக்திவேல் said...

//இருப்பினும், எதிர்காலத்தில் காட்சிகள் மாறலாம். எண்ணெய் வளத்தை பங்கு போடுவதில் தகராறு ஏற்பட்டால், போர்க்குற்ற விசாரணை சம்பந்தமான சர்ச்சைகள் எழலாம்.

ஆம். அவர்களுக்கு ஒரு தேவை ஏற்பட்டால் மட்டும்/மட்டுமே போர்க்குற்ற விசாரணை எழும்.

Kalaiyarasan said...

//அது அந்தப் பெண்களின் சொந்த முடிவு. அவர்கள் விரும்பி முடிப்பார்களாயின் நமக்கு என்ன பிரச்சனை.//

ஆமாம், பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த பெண்கள் அத்தகைய முடிவுகளையும் எடுப்பார்கள். அது தவறாகவும் தெரியாது. ஆனால், வசதி படைத்த குடும்பப் பெண்கள் அதற்கு உடன்படுவார்களா? உலகம் முழுவதும் பெண்களின் அடிப்படை மனது ஒன்றாகத் தான் இருக்கும். அதாவது தனது துணையை இன்னொருத்தியுடன் பகிர்ந்து கொள்வதை விரும்புவதில்லை.
குடும்பத்தில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வாக விவாகரத்து சட்டம் இருக்கும் பொழுது, முதலில் அதைத் தான் நாடுவார்கள். விதிவிலக்காக சிலர் நடந்து கொள்ளலாம்.

J.P Josephine Baba said...

பல தார மணத்தால் பெண்கள் உரிமைகள், நலன்கள், பறிக்கப்படுகின்றது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆசிரியர் கொண்ட மறுமணம் என்ற சொல்லாடல் பின்னூட்டம் இடுபவர்கள் புரிதலில் இருந்து மாறுபட்டுள்ளதாக தோன்றுகின்றது!

Unknown said...

http://english.aljazeera.net/indepth/features/2011/09/2011920155237218813.html............read belhadge interview to aljazeera.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

What was Gadaffi's relationship with Syrian dictators and Rajapakse? (No tamil fonts here... sorry)

Kalaiyarasan said...

//What was Gadaffi's relationship with Syrian dictators and Rajapakse? (No tamil fonts here... sorry) //
சிரியாவுடன் சில நெருக்கம் இருந்தது. கடாபி போன்று சிரியாவின் ஆசாத்தும் அரபு தேசியவாதியாக இருந்தவர். அதே நேரம் இஸ்ரேலுடன் பகைமை பாராட்டும் அரசியலும் இருவரையும் ஒன்றாக இணைத்தது. கடாபி ராஜபக்சவுடனான் நெருக்கமாக இருந்தது போலக் காட்டுவது மிகைப்படுத்தல். மூன்றாம் உலக நாடுகளில் ஐரோப்பியர்களின் ஆதிக்கத்தை கடாபி எதிர்த்து வந்தார். தானும் ஐரோப்பியரால் நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுப்பதாக ராஜபக்ச பல மூன்றாம் உலக நாடுகளை நம்ப வைத்திருந்தார். அந்த விடயத்தில் சில இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கலாம். அதை விட குறிப்பிட்டு சொல்லக் கூடிய நெருக்கம் இருக்கவில்லை. கடாபி கடைசிக் காலத்தில், ஆப்பிரிக்க ஒருமைப்பாடு, இஸ்லாமியமயமாக்கல் போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்தார்.