Friday, August 21, 2009

"யூரோப்போல்": ஐரோப்பாவில் பயங்கரவாத எதிர்ப்புப் போர்


ஐரோப்பாவில் பயங்கரவாதத்திற்கெதிரான போர்... உலகில் ஐரோப்பாவின் பொருளாதார, இராணுவப் பாத்திரம், முன்றாம் உலகத்துடனான நீண்ட காலத்தொடர்பு, அதைவிடப் புவியியல் அமைவிடம் என்பன ஐரோப்பாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

இஸ்லாமியத் தேசியத் தீவிரவாதிகள் அமெரிக்காமீது பாய்வதற்கு ஐரோப்பாவைத் தளமாகப் பயன்படுத்துவதாக அமெரிக்க அரசின் குற்றச்சாட்டு. 2004 ல் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன் உள்ளூர் இடதுசாரித் தீவிரவாதிகளை அடக்குமாறு கிரேக்கம் மீதான அமெரிக்காவின் உத்தரவு. ஐரோப்பா ஒன்று சேரும் வேளையில், பிரிவினைவாதிகளை ஒன்று சேர்ந்து அடக்குவோம் என்ற பொது ஐரோப்பியப் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கை என்பன மூன்றாம் உலகப் போருக்குள் ஐரோப்பாவையும் இழுத்துக் கொண்டு வந்துவிட்டன.

மூன்றாம் உலக (போர்) தத்துவம் ஒன்று 1968 ல் மேற்கு ஐரோப்பாவெங்கும் இடம்பெற்ற மாணவர் எழுச்சியின் போது சிலரால் முன்வைக்கப்பட்டது. ஏகாதிபத்திய வல்லரசுகளின் அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் மூன்றாம் உலக மக்களுக்கு ஆதரவாக, "ஏகாதிபத்திய பூதத்தின் அடிவயிறான" ஐரோப்பாவில் தாக்க வேண்டும் என்ற அரசியற் கோட்பாட்டை சிலர் நடைமுறைக்குக் கொண்டுவர விரும்பினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் "செம்படைப்பிரிவு" என தமது இயக்கத்திற்குப் பெயரிட்டுக் கொண்ட ஆயுதந்தரித்த புரட்சிக்குழு. இவர்கள் மேற்கு ஜேர்மனியின் நகரங்களில் நகர்ப்புற கெரில்லா நடவடிக்கைகளான பொருளாதார இலக்குகளுக்குக் குண்டுவைத்தல், தொழிலதிபர்களைக் கடத்திச்சென்று கொல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதில் வேடிக்கை என்னவெனில் இந்தத் தீவிர வாத இயக்கத்தில் இருந்த இளைஞர்களில் சிலர் கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்களின் நெருங்கிய நண்பர்களின் பிள்ளைகளாயிருந்தமையே. இவர்கள் தமது மூன்றாம் உலகப் போரின் அங்கமாக பாலஸ்தீன விடுதலை இயக்கங்களுடன் கூட்டுச்சேர்ந்து விமானக்கடத்தல்களிலும் ஈடுபட்டனர்.

வெற்றிகரமாக முடிந்த விமானக் கடத்தல் நாடகமொன்று கிறீஸ் (கிரேக்கம்) தலைநகரான ஏதெனில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்றிலிருந்து அமெரிக்க உளவு நிறுவனம் கிரேக்கத்தை "நம்பமுடியாத" நாடுகளின் பட்டியலில் சேர்த்துவிட்டது. அது ஓரளவு உண்மையுந்தான். இரண்டாம் உலகப்போரின் பின்னர் தோல்வியடைந்த கம்யூனிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தை கிறீஸ் சந்தித்துள்ளது. தோல்வியடைந்ததின் காரணமே பிரிட்டஷ்-அமெரிக்கத் தலையீடுதான். ஆயுதங்களைக் கீழே போட்ட கம்யூனிஸ்ட்டுகள் அரச ஸ்தாபனங்களின் பல பகுதிகளிலும் ஊடுருவி விட்டிருந்தார்கள். இதனால் ஐரோப்பாவில் ஒரு "வித்தியாசமான நாடாக" கிறீஸ் இன்று வரை தெரிகின்றது. பாலஸ்தீன , குர்திஸ் விடுதலைப்போராட்டங்களுக்கு இங்கே பெருமளவு மக்கள் ஆதரவு உண்டு. இருப்பினும் கிரேக்க அரசாங்கம் அமெரிக்க, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துப்போகின்றது.

எழுபதுகளில் ஆண்ட கிரேக்க சமூக ஜனநாயகக் கட்சி பாராளுமன்றத்தின் ஊடாக சோஸலிசத்தைக் கொண்டுவந்துவிடும் என அஞ்சியதாலோ என்னவோ அமெரிக்க சி.ஐ.ஏ யின் ஆதரவுடன் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ந்த இராணுவச் சர்வாதிகாரத்தை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அவ்வாறு, 17 நவம்பர் 1975 ல் எதன்ஸ் தொழில் நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற மாணவரின் மறியல் போராட்டத்தை பாதுகாப்புப் படைகள் மூர்க்கமாக அடக்கியதில் பலர் கொல்லப்பட்டனர். அந்தத்தினத்தை நினைவு கூறும்முகமாக சில தீவிரவாத இளைஞர்களால் "நவம்பர் 17" என்ற பெயரில் ஆயுதந் தரித்த தலைமறைவு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.


இராணுவ சர்வாதிகாரம் மறைந்து, பாரளுமன்ற ஜனநாயகம் வந்த பின்னரும் "நவம்பர் 17" ன் போராட்டம் தொடர்ந்தது. இராணுவ ஆட்சிக்கு உடந்தையாகவிருந்த உயர் அதிகாரிகள் மட்டுமல்லாது அமெரிக்க உளவு நிறுவன அதிகாரிகள், பிரிட்டிஷ் இராணுவத் தலைமையதிகாரிகள் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலரும் ஆச்சரியப்படுமளவிற்கு சுட்ட சூத்திரதாரிகள் யாரும் நீண்டகாலமாகப் பிடிபடவில்லை. இது "நவம்பர் 17" ற்கு அரச மட்டத்தில் இருந்த ஆதரவைக்காட்டியது. இப்படியான சம்பவங்கள் முதலாம் உலகமான ஐரோப்பாவில் நடப்பது அமெரிக்க-பிரிட்டிஷ் அரசுகளுக்கு கண்ணைக் குத்தும் முள்ளாகத் தெரிந்தன. இதே நேரம் 2004 ஒலிம்பிக்ஸ் நடத்துவதற்கு கிறீஸ் தெரிவானது. ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடக்கும் வேளையில் "நவம்பர் 17" என்ற இயக்கம் இருக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டது.

2001 செப்டம்டர் 11, அமெரிக்காவை மட்டுமன்றி ஐரோப்பாவையும் மாற்றிவிட்டது. அமெரிக்கா அறிவித்த "பயங்கர வாதத்திற்கெதிரான போர்" பின் லாடனுக்கு எதிரானது மட்டுமேயென சிலர் நினைத்துக் கொண்டிருக்கையில், அதன் அர்தத்ம் பரந்துபட்டது என்பது விரைவிலேயே தெரிந்தது. அமெரிக்க அரசு தயாரித்த "சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின்" பட்டியலில் "நவம்பர் 17" ன் பெயரும் உள்ளது. "நவம்பர் 17" ன் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் கிறீஸின் மீது தடைகள் கொண்டுவரப்படும் என அமெரிக்கா மிரட்டியது. இந்த மிரட்டல் பலனுமளித்தது. குண்டு வைக்கப்போய் காயமடைந்த ஒரு நபர் பிடிபட்டதை தொடர்ந்து, "மக்களின் மனதைக் கவர்ந்த மர்ம வீரர்கள்" பிடிபட்டார்கள். இவர்களில் பலரும் மக்கள் மத்தியில் சாதாரண மனிதர்களாக வாழ்ந்து வந்தமை பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்தக் கைதுகளுக்குப்பின் முகமில்லாமல் இருந்த இயக்கத்திற்கு முகம் கிடைத்தது. குறைந்தது ஒருமாதமாகிலும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், யாவிலும் நவம்பர் 17 பற்றிய செய்திகள், விவாதங்கள் மட்டுமே இடம்பெற்று அந்த இயக்கத்திற்கு என்றுமில்லாத பிரபல்யத்தை தேடிக்கொடுத்தது.

"நவம்பர் 17" ன் கதை முடிந்ததென கிரேக்க அரசு நிம்மதிப் பெருமூச்சு விடுகையில் இடியென இறங்கியது இன்னொரு செய்தி: தொலைதூரத் தீவொன்றிலிருக்கும் இராணுவ முகாமின் ஆயுதக்கிடங்கில் இருந்து பெருமளவு ஆயுதங்கள் களவாடப்பட்டுவிட்டன. வழமைபோல் யாரும் பிடிபடவில்லை. கிறீஸ் பல திடுக்கிடும் செய்திகளுக்காகக் காத்திருக்கிறது.

இதிலிருந்து மிகவும் வேறுபட்ட கதை ஐரோப்பிய நாடுகளில் ஒளிந்திருக்கும் அல்-கைதா உறுப்பினர்களைத் தேடும் வேட்டை. செப்டம்பர் 11 விமானக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் ஜேர்மனியில் வசித்து வந்தார்கள் என்ற தகவல் வெளியான அன்றிலிருந்தே ஜேர்மனி, இத்தாலி , ஸ்பெயின், போன்ற நாடுகளில் பின்லாடனின் அல்கைதா இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் அல்லது அவ்வாறு சந்தேகப்படும் பலர் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளிலிருந்து கிடைத்த பொதுவான முடிவானது இவர்கள் தமது எதிரியான அமெரிக்காவைத் தாக்க ஐரோப்பாவைத் தளமாகப் பாவிக்கின்றனர் எனத் தெரிவிக்கின்றது.

இதனால் "அப்பாடா, நாம் தப்பினோம்" என்று ஐரோப்பியர் ஆறுதலடையலாம். ஆனால் அமெரிக்கா விடுவதாகவில்லை. பயங்கரவாதத்திற்கெதிரான போரில் ஐரோப்பாவையும் துணையாக வருமாறு அறைகூவல் விடுக்கின்றது. இப்போதைக்கு ஒத்துப் போனாலும் அமெரிக்க-ஐரோப்பிய முரண்பாடுகள் அவ்வப்போது தலைகாட்டாமல் இல்லை. இவற்றைவிட ஐரோப்பிய ஒன்றிணைவின் பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு புதிய பரிமாணம் பெற்றிருக்கின்றது. முன்பு ஒரு நாட்டின் தீவிரவாதிக்கு இனனொரு நாட்டில் அடைக்கலம் அளிக்கப்பட்டது.

இத்தாலியின் செம்படைப்பிரிவுத் தீவிரவாதிகளுக்குப் பிரான்ஸில் அடைக்கலம் கிடைத்தது. ஸ்பெயினின் பாஸ்க் மாநில பிரிவினைவாதிகளுக்கு பெல்ஜியத்தில் அரசியல் தஞ்சமும், பிரான்ஸில் தளமமைக்கும் வசதியும் கிடைத்தன. ஆனால் இவையெல்லாம் இப்போது பழைய கதை. பாஸ்க் பிரிவினைவாதிகள் பிரான்ஸிலிருந்து நாடுகடத்தப்படுகின்றனர். ஐரோப்பிய நாடுகளின் (இடதுசாரி) தீவிரவாத மற்றும் பிரிவினை கோரும் குழுக்களை கண்காணிக்க "யூரோப்போல்"(Europol) என்றழைக்கப்படும் ஐரோப்பியப் பொலிஸ் அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச காவல்துறை "இன்டர்போல்" லை முன்னுதாரணமாகக் கொண்டு, யூரோப்போல் உருவாக்கப்பட்டது. இருப்பினும் யூரோப்போல் அதிகாரம், ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் மட்டுமே செல்லுபடியாகும். யூரோப்போலின் கண்காணிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் மேற்குறிப்பிட்ட வகை இயக்கங்கள் தவிர, தீவிர சூழலியவாதிகள், வெளிநாட்டு விடுதலையியக்கங்கள், அவர்களின் ஆதரவாளர்கள், ஆகியனவும் அடங்கும்.

2 comments:

சிங்கக்குட்டி said...

நல்ல வரலாற்று பதிவு .

பதி said...

நல்ல பகிர்வு.. பல விசயங்களை அறியத் தந்தது இந்தப் பதிவு...
நன்றி...