Thursday, February 05, 2009

சர்வதேசம் காலை வாரிய தமிழீழ தேசியம்


இறுதியில் மேற்குலக இணைத்தலைமை நாடுகள், இலங்கைப் பிரச்சினையில் தமது நிலைப்பாட்டை தெரிவித்து விட்டன. புலிகளை சரணடையக் கோரியதன் மூலம், தமிழீழ போராட்டம் இதற்கு மேலும் நகர முடியாது என்றும், அதற்கு தமது ஆதரவு கிடையாது என்றும் தெளிவுபடுத்தி விட்டன. ஒரு விடுதலைப் போராட்டம் தொடர வேண்டுமா, அல்லது நிறுத்த வேண்டுமா என்பதை, சம்பந்தப்பட்ட மக்கள் முடிவெடுக்க சுதந்திரமுண்டு. இப்படித்தான் செய்யவேண்டும் என்று உத்தரவிடுவது, ஏகாதிபத்திய தலையீட்டையே குறிக்கின்றது. எனினும் ஆரம்பத்தில் இந்தியாவையும், பின்னர் மேற்குலக நாடுகளையும் நம்பியிருந்த ஈழப் போராட்டம், நெருக்கடிக்குள் சிக்கிய நிலையிலும், தமிழர்கள் மத்தியில் சர்வதேசம் குறித்த மாயை அகல இன்னும் சில காலமெடுக்கலாம்.

"இலங்கைப் பிரச்சினையை இரு தரப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். என்ன பேச வேண்டும், என்ன தீர்வு எடுக்க வேண்டும், என்று நாம் வற்புறுத்த மாட்டோம். இது காலனிய காலகட்டம் அல்ல." இவ்வாறு கூறினார், மேற்குலக இராஜதந்திரி ஒருவர். தமக்கு மறுகாலனியாதிக்க அவா கிடையாது என்று வெளியில் சொன்ன போதும், இலங்கை அரசு குறித்த மேற்குலக நிலைப்பாடு அது உண்மையல்ல என எடுத்துக்காட்டுகின்றது. நேரடியாக தெரியாவிட்டாலும், திரைமறைவில் அவர்களின் கண்காணிப்பு இருந்து வந்துள்ளது. இது ஒருவகையில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஒத்தது. சில வருடம் நீடித்த சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், "யுத்தம் மீண்டும் ஆரம்பித்தால், தாம் இலங்கை அரசுக்கு உதவி வழங்குவோம்" என்று அடிக்கடி பேசி வந்தார். ஆகவே சர்வதேசம் எப்போதும் தனது நிலைப்பாட்டை பகிரங்கப் படுத்தியே வந்துள்ளது. இப்போது அது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சர்வதேசம் பற்றிய மாயை, தமிழர்கள் மத்தியில் இருந்து இன்னும் அகன்றதாக தெரியவில்லை. படிக்காத பாமரர் முதல், மெத்தப்படித்த முதுநிலைப் பட்டதாரிகள் வரை, ஒரே கோணத்திலேயே சிந்திக்கப் பழகி இருக்கின்றனர். ஏகாதிபத்தியம் என்றால் அது சிங்கள ஏகாதிபத்தியம் என்றும், வர்க்கம் என்றால் அது சிங்கள, தமிழ் இனவேறுபாடு என்றும், தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகிய காலத்தில் இருந்தே, வலதுசாரிக் கருத்துக்களுடன் தான், தமிழ் தேசியம் கொள்கை வகுத்து வந்துள்ளது. அப்படி இருக்கையில், ஏகாதிபத்தியம் வகுத்த பாதையில் நடைபோடும், இலங்கை சிங்களப் பேரினவாதப் போர் குறித்து குழப்பங்கள் வருவது தவிர்க்க முடியாதது.

தமிழர் மத்தியில் ஏகாதிபத்தியம் பற்றிய புரிதலின்மை, பல்வேறு தருணங்களில் புலப்படுகின்றது. நான் எழுதிய, மேற்கத்திய நாடுகளை விமர்சிக்கும் கட்டுரைகளைக் கூட, "இப்படி எல்லாம் எழுதலாமா?" என்று பலரை வியக்க வைக்கிறது. விருந்தினராக தங்க வைத்திருக்கும் கனவான்களின் நாட்டில் இருந்து கொண்டு, அவர்களைப் பற்றி விமர்சிப்பது சரியல்ல என்று, தமது விசுவாசத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றனர். ஆமாம், அதைத் தானே சிறி லங்கா அரசும் கூறுகின்றது? தமிழர் இந்த நாட்டில் இருக்கலாம், ஆனால் உரிமைகள் ஏதும் கேட்க வேண்டாம் என்று. இலங்கை அரசு இயந்திரம் பிழை என்றால், அதனை உருவாகிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எப்படி சரியாகும்? இலங்கையின் அரசியல் நிர்ணய சட்டம், அரச அலுவலகங்கள், இராணுவம், கல்வி, அவை மட்டுமல்ல இனப்பிரச்சினை, இவ்வாறு பல சொத்துகளை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் விட்டுச் சென்றுள்ளது.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் உருவான பின்னர் தோன்றிய யுத்தத்தினால், பல லட்சம் அரபு மக்கள் இடம்பெயர்ந்தனர். அதுவரை பாலஸ்தீனத்தை தனது பாதுகாப்பு பிரதேசமாக வைத்திருந்த பிரித்தானியா, தனது தார்மீக பொறுப்பை ஏற்றுக் கொள்ளாமல், ஐ.நா. மன்றத்தில் பாரம் கொடுத்தது. அதன்படி லெபனான், ஜோர்டான் போன்ற அயல்நாடுகளில் ஐ.நா. அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் அகதிமுகாம்களை நிறுவி பராமரித்து வருகின்றது. இதனால் பாலஸ்தீன அகதிகள் பெருமளவில் பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகளுக்கு செல்வது தடுக்கப்பட்டது. அந்த உதாரணம், பின்னர் பல்வேறு நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

சர்வதேச தொடர்புகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக, மேற்குலக நாடுகளை நோக்கி அகதிகள் செல்வது வழமையாகியது. தொன்னூறுகளில் அகதிகளின் படையெடுப்பு அதிகரித்து காணப்பட்டது. ஈராக்கில் வளைகுடா யுத்தம், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய யுத்தபிரபுக்களின் அராஜகம், பொஸ்னியாவில் இன/மத வெறியாட்டம், இலங்கையில் சிங்கள பேரினவாதப் போர் என்பன, அதிகளவு அகதிகளை உற்பத்தி செய்து மேற்குலகிற்கு அனுப்பிக் கொண்டிருந்தது. தமது முன்னாள் காலனிய நாடுகளின் புத்திஜீவிகளின் மூளைகளையும், தொழிலாளரின் உடல் உழைப்பையும் சுரண்டிக் கொண்டிருக்கும் மேற்குலக நாடுகள், தமது இனவிகிதாசாரத்தை மாற்ற விரும்பவில்லை.

போர் நடக்கும் நாடுகள் யாவும், அது பொஸ்னியா, கொசோவோ, ஈராக், ஆப்கானிஸ்தான் என்று எங்கே பார்த்தாலும், ஏதாவொரு பக்கத்தில், அல்லது இருதரப்பிலுமே ஏகாதிபத்திய தலையீடு இருப்பதை பார்க்கலாம். குறிப்பிட்ட காலம் ஆயுதம் கொடுப்பார்கள், போர் சில வருடம் நீடிக்க விடுவார்கள். பின்னர் தாமே தலையிட்டு ஒரு தீர்வுக்கு வருமாறு வற்புறுத்துவார்கள். ஒன்றில் அவர்கள் திணிக்கும் ஒப்பந்தம் மூலம் (உதாரணம்: கொசோவோ), அல்லது பலாத்கார ஆட்சிமாற்றம் மூலம் (உதாரணம்: ஈராக்), தாம் விரும்பியதை சாதிப்பார்கள். எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்கும் வரை, ஊடகங்கள் போரில் ஏற்படும் மனித அழிவுகளை பரபரப்பு செய்தியாக வெளியிடும். அதன் பின்னர் அவை மறக்கப்பட்டு, அல்லது மறைக்கப்பட்டு விடும்.

இலங்கைப் பிரச்சினை குறித்து,CNN,BBC World, போன்ற சர்வதேச செய்திகளை வழங்கும் ஊடகங்கள் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன. மற்றும்படி பல்வேறு நாடுகளின் ஊடகங்கள் அதிக அக்கறை காட்டுவதில்லை. அதற்கு காரணம் அவர்களுக்கு "தெரியாது" என்பதல்ல, அல்லது இலங்கை அரசின் பிரச்சாரமல்ல, மாறாக அந்த செய்தியால் ஏகாதிபத்திய நலன்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை என்பதே. இஸ்ரேலில் ஒருவர் கொல்லப்பட்டாலும், அது தலைப்பு செய்தியாக அனைத்து நாடுகளின் ஊடகங்களும் வெளியிடும், ஆனால் இலங்கையில் நூறு பேர் இறந்தாலும், அது ஒரு சிறிய பெட்டிச் செய்தியாக மட்டுமே இடம்பெறும்.

மேற்குல "ஜனநாயக" கட்டமைப்பின் படி ஊடகங்கள் சுதந்திரமானவை, அவை என்ன செய்தியை எப்படி பிரசுரிக்க வேண்டும் என்ற விடயத்தில் அரசு தலையிடாது என்று கூறப்படுகின்றது. ஆனால் ஏகாதிபத்தியத்திற்கு முண்டு கொடுப்பதில் தமது அரசின் பங்களிப்பு என்ன என்பதிலும், அதற்கேற்றால் போல் எப்படி சுயதணிக்கை செய்து கொள்ள வேண்டும் என்பதிலும், பல நாட்டு ஊடகங்கள் தெளிவாக இருக்கின்றன. கற்றோரால் மதிக்கப்படும், நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை, ஈராக் படையெடுப்பின் போது, அமெரிக்க அரசை ஆதரித்தமை ஒரு நல்ல உதாரணம். பெரும்பாலும் அனைத்து வெகுஜன பத்திரிகைகளை எடுத்துக்கொண்டால், ஒரே செய்தி முன்பக்கத்தை அலங்கரிப்பதை காணலாம். வியாபாரப் போட்டி நிறைந்த உலகில் அது எப்படி சாத்தியம்?

ஊடக நிறுவனங்களும், முதலாளித்துவ நலன்பேணும் அரசுகளும் ஒருவரில் ஒருவர் தங்கி இருக்கும் போது, முரண்பாடுகள் எழுவதற்கு வாய்ப்பில்லை. இவற்றை உணராத, அல்லது புரிந்து கொள்ள மறுப்பவர்கள், இன்னமும் ஜனநாயக மாயையில் இருந்து விடுபடவில்லை. மேற்குலக நாடுகள் எந்தக் காலத்தில் மனித அழிவுகளைப் பார்த்து இரக்கப்பட்டார்கள்? காலனியாதிக்க காலகட்டத்தில் விடுதலைக்காக போராடிய மக்கள், பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர். ஐரோப்பிய குடியேறிகள் இன அழிப்பு யுத்தம் செய்து தான், அமெரிக்காவிலும், அவுஸ்திரேலியாவிலும் தமது ஆட்சியை நிலை நாட்டினார்கள். இவை எல்லாம் கடந்து போன பழங்கதைகள் அல்ல. ஈராக்கில் அமெரிக்க படையெடுப்பின் பின்னர், இதுவரை பத்து லட்சம் மக்கள் இறந்துள்ளதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

அனேகமாக அனைத்துலகையும் கவனம் செலுத்த வைக்கும், எதோ ஒரு நாட்டில் மனித அவலம் குறித்த செய்திகள் எல்லாம், ஏகாதிபத்திய பொருளாதார நலன் சார்ந்ததாகவே இருக்கும். ஈராக்கில் தலையிட எண்ணை ஒரு காரணமாக இருந்தது போல, இலங்கையில் எதுவும் இல்லை. அதனால் இலங்கைப்பிரச்சினையில் "என்னவாவது நடக்கட்டும்" என்று மேற்குலகம் பாராமுகமாக இருக்கின்றது. அதிக பட்சம்,பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பும் அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். அது சாத்தியப்படாததால், உலகமயமாக்கலுக்கு தமிழீழ போராட்டம் தடையாக இருப்பதால், தற்போது இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பை வழங்குகின்றனர். அதுவும் இஸ்ரேலுக்கு கொடுப்பது போல நிபந்தனையற்ற ஆதரவல்ல. அவ்வப்போது மனித உரிமை மீறல்களை காரணங்காட்டி இலங்கை அரசை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது நடக்கின்றது.

இறுதியாக, மேற்குலக நாடுகளுக்கு இலங்கையில் நடப்பது எதுவும் தெரியாது என நினைப்பது பாமரத்தனம். அமெரிக்காவின் சி.ஐ.ஏ. முதல், மேற்கு ஐரோப்பிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகள் வரை, இலங்கை நிலவரம் குறித்த அறிக்கைகளை வருடாவருடம் வெளியிட்டு வருகின்றன. இதற்கான தரவுகளை, இலங்கையில் இருக்கும் தூதுவராலய ஊழியர்களும், மனித உரிமை நிறுவனங்களும் வழங்குகின்றன. அதைவிட உள்ளூர் ஊடகங்களும் பார்வையிட்டு அலசப்படுகின்றன. இலங்கை அரச சார்பு, புலிகள் சார்பு, இரண்டையும் சேராத நடுநிலை ஊடகங்கள் என பலவற்றையும் பார்வையிட்டு, அவற்றில் இருந்து மேற்கோள் காட்டப்படுகின்றது. இலங்கை தொடர்பாக மேற்குலக அரசுகளின் தீர்மானங்கள் பல, இந்த அறிக்கைகளை ஆதாரமாக கொண்டே எடுக்கப்படுகின்றன.

18 comments:

Anonymous said...

Yes, alarum setu senthitankaya !!!!
Now our hope only on our National Leader V Prabaharan.

but ethiriyai mannithalum nallavan pol nadikkum thurohiyai(India) manikka mudiathu



Indrajith
Dubai

Kalaiyarasan said...

உங்கள் கருத்துக்கு நன்றி, இந்திரஜித். மீண்டும் வருக.

Anonymous said...

nazi hiterruku aatharavaga 2nd world waril herist entra udaga viyapariyai yarum sulapathil maranthu vida mudiyathu.makkalukku ethirana thorogangal thodarkirathu udakangalin thunaiyudan endrum.
nalla pathivu vazhthugal.
k.kesavan,madurai

Kalaiyarasan said...

கருத்துக்கு நன்றி, கேசவன்.

Anonymous said...

I liked the point that there is no oil in this part of the world for the "so called powerful countries" to channel interest towards Sri Lanka. All I could tell is just one thing, but a very important detail, for every tamilan being killed, there will be hundred tamils raising up with hopes and aspirations of a dignified peace of separate land(Country). I will stand by tamils as a testimony to witness that great happening. And to Kaliarasan, Good job my dear friend!

Kalaiyarasan said...

Thank you Suthesh, for your comment.

Anonymous said...

ஏகாதிபத்தியங்களுக்கு இலங்கையில் பெரிய அளவுக்கு பிரயோசனமில்லை என்பதால் சர்வதேச ஊடகங்கள் முக்கிய்த்துவம் கொடுப்பதில்லை ஏன் என்பதை உங்கள் கட்டுரை புரியவைக்கின்றது, நன்றி தோழர்

வினவு

Kalaiyarasan said...

நன்றி, வினவு. இதிலே கூறப்பட்ட விடயங்கள் சில எனது அனுபவங்களில் இருந்து பெறப்பட்டவை.

Anonymous said...

//ஒரே செய்தி முன்பக்கத்தை அலங்கரிப்பதை காணலாம். வியாபாரப் போட்டி நிறைந்த உலகில் அது எப்படி சாத்தியம்?//

மார்க்ஸியக் கண்ணோட்டம் at it's best. நன்றி தோழரே

Kalaiyarasan said...

நடைமுறை அனுபவங்களில் இருந்தே கற்றுக்கொள்ள முடிகிறது.
நன்றி, தோழர் மா.சே.

Anonymous said...

ரொம்ப நல்ல சொல்லி இருகீங்க நண்பரே . ஈழ போராட்டத்தை பல்வேறு கோணங்களில் யாரும் ஆய்வு செய்வதில்லை. பலர் இதை வெறும் சிங்கள - தமிழ் இனச்சண்டை யாக மட்டுமே பார்கின்றனர் . இது உண்மை தான் என்றாலும் இதையும் தாண்டிய சர்வதேச பரிணாமங்கள் இருக்கின்றன. இன முரண்பாடுகளுக்கு அழுத்தமான வரலாற்று பின்புலம் இருந்தாலும் தற்போதைய போர் காலனி ஆதிக்கவாதிகள் ஏற்படுத்திய ஆட்சி கட்டமைப்பில் தான் நடந்து வருகிறது. மேலும் தங்களின் வசதிக்காக காலனி ஆதிக்க வாதிகள் தமிழ் சிங்கள முரண்பாடுகளை மேலும் கூர்மையாக்கி இருப்பர். அவர்கள் கட்டிய மேடையில் தான் இபோதைய போர் நடந்து கொண்டிருக்கிறது. போரின் முடிவில் புலிகள் வெற்றிபெற்றால் காலனி ஆதிக்க வாதிகள் ஏற்படுத்திய கட்டமைப்பு உடைந்து புதிய நிர்வாகம் ஏற்பட்டு சுதேசி தன்மையுடன் தமிழர் பகுதியில் ஆட்சி ஏற்பட்டு விடும். இது அவர்களுடைய பொருளாதார நலன்களுக்கு நல்லது அல்ல. பழைய பிரிட்டிஷ் காலனி அமைப்பை தமது நலன்களை பேணும் வகையில் பாதுகாக்கவே அவர்கள் முனைவர். அதனால் தான் அவர்கள் இலங்கை அரசுக்கு முழுமையான ராணுவ உதவிகள் வழகுகின்றனர்.

அது மட்டும் அல்ல . மெல்ல இந்த மாற்று அமைப்பு முயற்சிகள் இந்திய துணைக்கண்டம் முழுதும் பரவினால் இந்தியாவில் அவர்களது பழைய காலனி அமைப்பு அழிவதுடன் தற்போதைய உலகமயமாகளும் பெரும் பின்னடைவை சந்திக்க நேரலாம். எண்ணெய் வலம் போன்று முக்கிய வளங்கள் இலங்கையில் இல்லாவிடாலும் , ஈழ போராட்டம் இந்த பிராந்தியத்தில் ஏற்படுத்தகுடிய தாக்கங்களை மனதில் வைத்து நீண்ட கால அடிப்படையில் அவர்கள் ஈழ பிரச்னையை அணுகி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

நேரடி ராணுவ தலையீட்டில் உள்ள நடைமுறை சிக்கலை உணர்ந்து மறைமுகமாக இலங்கை ராணுவத்தை மட்டும் பலப்படுத்துவது அவர்களின் உத்தியாக உள்ளது. புலிகளிடம் ராணுவம் தோற்கும்போது சம்மதானம் பேச வருவார்கள். பேச்சு வார்த்தையில் ஏதாவது ஒரு தீர்வுக்கு புலிகளை சம்மதிக்க வைத்து பொறியில் சிக்க வைக்க முயற்சி எடுப்பார்கள். மறுபுறம் அரசு அமைப்புக்கு அனைத்து உதவிகளும் செய்வார்கள் . முடிந்த வரை சுதேசியான மக்கள் எழுச்சியில் ஒருவாகும் சுதந்திர அரசை அமைவதை தடுக்க முனைவார்கள். எப்படியும் ஏகாதிபத்திய வாதிகள் விழிப்புணர்வு உள்ள மக்கள் சமூகத்திடம் தோற்று விடுவார்கள் என்பது உறுதி.

Kalaiyarasan said...

மிகவும் நன்றி, நண்பரே. நான் தவற விட்டவற்றையும் சேர்த்து மிக விரிவாக எழுதியுள்ளீர்கள். இது போன்ற ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் தற்போதைய நிலையில் அவசியம்.

benza said...

மிக விரிவாக எழுதியுள்ளீர் ... நன்றி ... நீங்கள்
ஜனநாயக ஆட்சியை விரும்புவீர்களா அல்லது ஓரே
கட்சியின் ஓரே தலைவரின் சர்வாதிகார ஆட்சியை
தேர்வீர்களா

இங்கு கொப்பி அன்ட் பேஸ்ற் இயலாதுள்ளதே

என்னிடம் கேள்வி குறி போன்றவை கிடையாது

மன்னிக்கவும்

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

I really dont see why there are too many people commenting here...... One of the well thought tamil blog on net... Long time reader but thus is first time i m writing to you.... நன்றி. சந்திப்போம்.

Kalaiyarasan said...

//I really dont see why there are too many people commenting here......//

Pradeep, this post contains the topic, which many Tamil people are interested to know.
I thank you for visiting and commenting.

Kalaiyarasan said...

//நீங்கள் ஜனநாயக ஆட்சியை விரும்புவீர்களா அல்லது ஓரே கட்சியின் ஓரே தலைவரின் சர்வாதிகார ஆட்சியை தேர்வீர்களா//

Benzaloy, எனது அனுபவத்தில் தெரிந்து கொண்ட உண்மை என்னவெனில், "ஜனநாயகம்" என்பது ஒரு அழகான சொல். அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது என கருதப்படுகின்றது. ஆனால் அதனை இதுவரை எந்த ஒரு நாடும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. அதைவிட ஜனநாயகம் என்றால் இப்படித்தான் என்ற, பொதுவான வரைவிலக்கணம் கிடையாது. உலகில் பலவகையான ஜனநாயகங்கள் இருந்திருக்கின்றன, இருக்கின்றன.

உலகின் மாற்றங்கள் யாவும் இலகுவாக ஏற்பட்டுவிடவில்லை. சில நேரம் ஒரே தலைவர், ஒரே கட்சி மாற்றத்தை நடைமுறைச் சாத்தியமாக்கியுள்ளது. அதற்குப் பிறகு பல தலைவர்கள், கட்சிகள் வருகிறார்கள். நாம் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஜனநாயக மாற்றம் 150 அல்லது 200 வருடங்களுக்கு உள்ளே தான் ஏற்பட்டது. அதற்கு முன்னர் அங்கே ஒரு கட்சி, ஒரு தலைவர் ஆட்சி சர்வசாதாரணம்.

வெண்காட்டான் said...

மிகவும் வித்தியாசமான பதிவு. நல்ல விபரமாகவும் உள்ளது. பெயரில்லாவின் பெரிய பின்ணுட்டமும் அருமை.

Kalaiyarasan said...

மிகவும் நன்றி,வெண்காட்டான்.