


ஐரோப்பாவில், ஸ்பெயின் நாட்டில், தனித்துவமான பாஸ்க் மொழி பேசும் மக்களுக்காக, தனிநாடு அமைக்க போராடும் ETA, ஐரோப்பிய யூனியனால் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டாலும், அதன் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாலும், ஒரு நூற்றாண்டு கால பாஸ்க் விடுதலைப்போராட்டம் இன்று வரை தொடர்கின்றது.
2003 ம் ஆண்டு கோடைக்காலம். வழக்கம் போல இவ்வாண்டும் வட ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலாப்பயணிகள் ஸ்பானியக் கடற்கரைகளில் தமது விடுமுறையைக் கழிக்க வந்திருந்தனர். ஒருநாள் அவர்கள் தங்கியிருந்த இரண்டு ஹொட்டல்களில் குண்டு வைத்திருப்பதாகத் தொலைபேசி அழைப்பு வந்தது. சில நிமிடங்களில் குண்டுகள் வெடித்து ஹொட்டேல்களுக்கு பெருஞ்சேதம் விளைவித்தன. குண்டுவெடிப்புக்கு அகப்பட்டுக் காயமடைந்தவர்கள் நெதர்லாந்து உல்லாசப்பிரயாணிகளே. சம்பவம் நடந்து சில மணிநேரத்திற்குள் ஸ்பெயினில் இருக்கும் நெதர்லாந்து தூதுவராயலத்திற்கு "எத்தா"(ETA) என்ற பெயரில் உரிமை கோரும் கடிதம் வந்தது. "தனது பிரசைகளை எந்த நாட்டிற்கு உல்லாசப் பயணிகளாக அனுப்ப வேண்டும் என்று உங்களது அரசாங்கத்திற்குத் தெரியாதா?" என்று அக்கடிதத்தில் காரசாரமாகக் கேட்கப்பட்டிருந்தது.
ஸ்பெயின் கஸ்திலியன் (ஸ்பானிய மொழி), கத்தலான், கலேக்கோ, பாஸ்க், என்ற நான்கு வேறு மொழிபேசும் இனங்கள் வாழும் நாடு. இருப்பினும் ஸ்பானிய மொழி மட்டுமே உத்தியோக பூர்வ மொழியாக இருந்து வருகின்றது. அண்மைக்காலங்களில் அதிகாரப்பரவலாக்கல் மூலம் பிறமொழிப் பிரதேசங்களுக்கும் சுயாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டதால் , அந்த மொழிகளும் நீண்டகால அடக்குமுறைக்குப்பின் மறுமலர்ச்சி கண்டுள்ளன.
இவற்றில் பாஸ்க் மொழி (அவர்கள் மொழியில் எயுஸ்கரா என அழைப்பர்) பேசும் மக்கள், மிக நீண்ட காலமாகவே தமது உரிமையயை விட்டுக்கொடாது, தனிநாடு கோரிப் போராடி வருகின்றனர். அதனை ஆயுதப் போராட்டமாக முன்னெடுத்தது ETA (எயுஸ்கடி தாயகத்திற்கும் விடுதலைக்குமான இயக்கம்). பாஸ்க் (அல்லது எயுஸ்கரா) மொழி பிற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்பில்லாத தனித்துவமான மொழியாகும். தற்கால ஐரோப்பியர்கள் வந்து குடியேறிய காலத்திற்கு முன்பே பாஸ்க் இன மக்கள் வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் உள்ளன. இதனால் ஐரோப்பாவின் முத்த குடியென்றும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
கி.பி. 818 ல் அமைக்கப்பட்ட நவாரா இராசதானி, முழு பாஸ்க் மொழி பேசும் பிரதேசங்களை உள்ளடக்கி ஆட்சி புரிந்த முதலும் கடைசியுமான அரசாட்சியாகும்.
வடக்கே பிரஞ்சு மன்னர்களுக்கும் தெற்கே ஸ்பானிய மன்னர்களுக்குமிடையே சிக்கித் தவித்த நவாரா இராச்சியம் நெப்போலியனின் படையெடுப்புகளுடன் ஒரு முடிவிற்கு வந்தது. பிரஞ்சு, ஸ்பானிய மன்னர்களின் செல்வாக்குக்கு உட்பட்டு, பாஸ்க் மொழி பேசும் பகுதிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இன்றைய பிரஞ்சு-ஸ்பானிய எல்லை உருவானது. அன்றிலிருந்து நான்கில் மூன்று பங்கு பாஸ்க் பிரதேசங்கள் ஸ்பெயினாலும், ஒரு பங்கு பிரான்ஸாலும் நிர்வகிக்கப்பட்டன.
1930 ல் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் ஸ்பெயின் அரசியல் நிலவரத்தை ஒரேயடியாக மாற்றியது. மத்திய அரசிற்கெதிராகக் கிளர்ச்சி செய்த ஜெனரல் பிராங்கோவின் பாஷிச இராணுவம் பாஸ்க் பிரதேசங்களையும் கைப்பற்றியது. அன்றிலிருந்து 1975 ல் பிராங்கோ மரணமடையும் வரை பாஸ்க் சிறுபான்மையினர் மீது இராணுவ அடக்குமுறை தொடர்ந்தது. எயுஸ்கரா பேசுவது தடைசெய்யப்பட்டது. மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். மொழி உரிமைக்கான அல்லது தொழிலாளர் உரிமைக்கான சாத்வீக வகையிலான போராட்டஙகள் அனைத்தும் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட்டன. அப்போது பாஸ்க் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய PNU என்ற தேசியக் கட்சி அகிம்சா வழிப்போராட்த்தைப் பின்பற்றியது.
1960 ல் அகிம்சாவழிப் போராடங்களில் ஏமாற்றமடைந்த PNU ன் மாணவர் அமைப்பு மாற்று வழி குறித்துச் சிந்தித்தது. தமது இன மக்களின் தேசிய விடுதலையை ஆயுதப் போராட்டம் மூலமே வென்றெடுக்கமுடியும் எனத் தீர்மானித்தனர். இந்தத் தீவிரவாத இளைஞர்கள் ஒன்றிணைந்து Euskadi ta Askatasuna(ETA) என்ற அமைப்பை உருவாக்கினர். தமது முதலாவது இராணுவ நடவடிக்கையாக ஸ்பானியப்படை வீரர்களை ஏற்றிச் சென்ற றயில் வண்டியை குண்டு வைத்துக் கவிழ்க்க முயற்சித்தனர்.
அதீத அவதானம் காட்டியதால் தண்டவாளத்தில் வெடித்த குண்டு ரயில் வண்டியைத் தடம் புரட்டவில்லை. ஆனால் இராணுவ அடக்குமுறை தீவிமடைந்தது. இயக்கத்துடன் தொடர்பற்ற பல அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாகினர். ETA யின் முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் பிரான்சுக்குத் தப்பியோடினர். பிரான்ஸிற்குச் சொந்தமான பாஸ்க் பிரதேசத்தில் தளம் அமைத்து மத்திய குழு அங்கிருந்து இயங்கியது. அந்நேரம் பிரஞ்சு அரசாங்கம் சாதாரண பாஸ்க் அகதிகளுக்கு மட்டுமல்ல தீவிரவாத இளைஞர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து வந்தது. ஆனால் எண்பதுகளின் பிற்பகுதியில் தனது நிலையை மாற்றிக்கொண்ட பிரஞ்ச அரசாங்கம் ETA உறுப்பினர்களைக் கைது செய்து ஸ்பெயினிடம் ஒப்படைத்து வருகிறது.
எயுஸ்கடி விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்த போது அது பலரது கவனத்தை ஈர்த்தது. ஸ்பெயினில் பாஸிஸ சர்வாதிகார ஆட்சி நடந்ததும் அதனை உள்நாட்டு மக்கள் மட்டுமல்ல பிற ஐரோப்பிய நாடுகளும் விரும்பாததும் பரந்த ஆதரவைப் பெற்றுக்கொடுத்தது. இன்று ஒரு பயங்கரவாத இயக்கமாக ஒதுக்கப்படும் ETA, அன்று பலரால் ஒரு விடுதலை இயக்கமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது என்பதைக்கேட்கும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கும். பிற்காலத்தில் தலைகீழாக மாறிய உள்நாட்டு-சர்வதேச அரசியலும் ETA ன் எடுத்த கொள்கைகளை விட்டுக்கொடுக்காத பின்வாங்காத போர்க்குணமுமே இந்த முரண்பாட்டின் காரணங்கள்.
இந்த அரசியல் மாற்றம் 1973 ம் ஆண்டு ஸ்பானியப் பிரதமர் பிளாங்கோவின் மரணத்துடன் ஏற்பட்டது. மரணப்படுக்கையில் இருந்த சர்வாதிகாரி பிராங்கோவினால் தனது அரசியல் வாரிசாக முன்மொழியப்பட்டவர்தான் பிளாங்கோ. வருங்கால சர்வாதிகாரியை கொலை செய்யத் திட்டம் தீட்டியது ETA. பிளாங்கோ அடிக்கடி போகும் தேவாலயத்திற்கருகில் இருந்த வீட்டை ETA கொரில்லாக்கள் வாடகைக்கு எடுத்தனர். அங்கிருந்து பிளாங்கோவின் வாகனம் நிறுத்தும் வீதிவரை சுரங்கம் தோண்டினர். குறிப்பிட்ட நாளில் சுரங்கத்தினுள் வைத்த குண்டுகள் வெடித்து பிளாங்கோ ஸ்தலத்திலேயே மரணமுற்றார். இந்தப் பிரமிக்கத்தக்க தாக்குதற் சம்பவம் ஸ்பெயின் முழுவதும் ETA ன் புகழ் பரவக் காரணமாயிற்று.
ஸ்பெயினில் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வரவும் பாராளுமன்ற ஜனநாயகம் ஸ்தாபிக்கப்படவும் இத்தாக்குதல் வழிகோலியது. புதிதாகப் பதவியேற்ற அரசாங்கம் பாஸ்க் பிரதேசத்திற்கு சுயாட்சி வழங்குவதாக அறிவித்தது. எயுஸ்கரா மொழி பாடசாலைகளில் கற்பிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆயினும் ஜனநாயக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை தயங்கித் தயங்கி நடைமுறைக்குக் கொண்டு வந்தது. மாநில அரசுக்கான அதிகாரங்களை கைமாற்றுவதில் இழுபறி நிலையேற்பட்டது. ETA விற்கும் அரசுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் முடிவற்று இழுபட்டது. மாயையிலிருந்து விடுபட்ட ETA உறுப்பினர்கள் மீண்டும் வன்முறைப்பாதையை நாடினர்.
சில வருடங்களின் பின்னர் ஸ்பெயினை மட்டுமல்ல, முழு ஐரோப்பாவையும் உலுக்கிய பாஸ்க் விடுதலைப்போர் வெடித்தது. இம்முறை ETA ன் தாக்குதல்கள் மிகக் கடுமையாகவிருந்தன. இராணுவ பொலிஸ் அதிகாரிகள் மட்டுமல்ல நீதிபதிகள் ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோரும் குறிவைத்துத் தாக்கப்பட்டார்கள். அவர்கள் எத்தனை பாதுகாப்புகளுடனும் பவனி வந்த போதும் திட்டமிட்ட கார் குண்டுவெடிப்புகளுக்குப் பலியாகினர். தாக்குதல் பட்டியலில் வந்தவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் ETA வினால் எதிரிகளாக அறிவிக்கப்பட்டார்கள். உதாரணத்திற்கு கைது செய்யப்பட்ட ETA உறுப்பினர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதிகள் ஆகியோர்.
இரு தசாப்தங்களைக் கடந்துவிட்ட நகர்ப்புற்ஙகளில் நடக்கும் நவீன பாணிப்போரில் இதுவரை 800 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்புப் படைகள் எவ்வளவுதான் உஷாராக இருந்தாலும் எதிர்பாராமல் நடக்கும் தாக்குதல்கள் ETA ன் பலத்தைக் காட்டியது. இராணுவரீதியான வெற்றிகள் கிடைத்தபோதும் மறுபக்கம் ETA அரசியல் களத்தில் தோல்வியடைந்து கொண்டிருந்தது. தொடர்ந்த வன்முறைகளால் வெறுப்படைந்த பெரும்பான்மையின (ஸ்பானிய மொழி பேசும்) மக்கள் ETA மீது வெறுப்புற்றனர்.
ஒரு ஜனநாயக அரசாங்கத்திற்கெதிராக வன்முறைகள் புரிவது வெறும் பயங்கரவாதமெனக் கூறினர். பாஸ்க் மொழி பேசும் மக்களில் ஒரு பிரிவினர் கூட ETA வின் நடவடிக்கைகள் அதி தீவிரமானவை என விமர்சித்தனர். அரசாங்கம் இந்த உணர்வலைகளை தனக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொண்டது. ETA உறுப்பினர்கள் வேட்டையாடப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். பிரான்சுடன் நாடுகடத்தல் ஒப்பந்தம் செய்ததன் மூலம் ஸ்பெயின் ETA வை இயங்க முடியத நிலைக்குத் தள்ளியது. ஐரோப்பாவில் அறுபதுகளில் உருவான பல நகர்ப்புற கெரில்லா இயக்கங்கள் பல தற்போது இருந்த சுவடே தெரியாமல் மறைந்து போக ETA மட்டும் சளைக்காமல் போராடுகிறது.
அதற்குக் காரணம் இன்றும் தொடரும் பெரும்பான்மை பாஸ்க் மக்களின் ஆதரவு, குறையாத நிதி மற்றும் மிக இரகசிமான அமைப்பு முறை என்பனவாகும். பிரான்ஸில் ஒரு ரகசியமான இடத்தில் இருந்து இயங்கும் மத்திய குழுவினர் ஆளுக்கொரு பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆட்சேர்ப்புக்கு ஒருவர், நிதிப்பொறுப்புக்கொருவர் என்றவாறு. மத்திய குழுவின் கீழே ஸ்பெயின் பாஸ்க் மாகாணங்களில் நடவடிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களின் மேற்பார்வையின் கீழ் கொமாண்டோக் குழுக்கள் எனப்படும் கூடியது ஐந்து பேரைக்கொண்ட "செல்" கள் நகரங்கள், கிராமங்களெங்கும் அமைக்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் கொமாண்டோக்கள் தமக்குத் தேவையான ஆயுதங்கள் உணவு இருப்பிடம் ஆகியவற்றைப் பெறுவதற்கு ஒழுங்கு செய்யும் ஆதரவுக்குழுக்கள் ஸ்பெயின் முழுவதும் இருக்கின்றன.
ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ETA இன்றுவரை நிலைத்து நிற்க உதவுகின்றனர். பெரும்பாலான துடிப்பு மிக்க இளைஞர்கள் எதிர்ப்பு ஊர்வலங்கள் மூலம் தமது அரசியல் வாழ்வை ஆரம்பிக்கின்றனர். அவர்களில் இருந்து எதிர்கால ETA உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர் முழுநேர உறுப்பினராவதற்கு இரண்டு வருட காலமெடுக்கும். அதுவரை அவரோடு தொடர்பு கொள்ளும் நபர் தனது தெரிவு நம்பிக்கைக்குரியதா எனப்பார்ப்பார். இத்தகைய இரகசிய அமைப்பு முறை அரச உளவாளிகள் ஊடுருவுவதை தடுக்கிறது.
ETA ஒரு தேசியவாத அமைப்பாக இருந்த போதும் மார்க்ஸீயத்தை தனது சித்தாந்தமாக ஏற்றுக்கொண்டுள்ளது. வெளிப்படையாகவே தொழிலாளர் வர்க்க நலன்களை கவனிப்பதாக தெரிவிக்கின்றது. பாஸ்க் மொழிபேசும் பிரதேசம் ஸ்பெயினின் தொழிற்துறை வளர்ச்சியடையந்த இடங்களில் ஒன்று. இதனால் அங்கே பெருகிய தொழிற்சாலைகளால் கணிசமான தொழிலாளர்கள் உருவாகியுள்ளனர். ETA பலமுறை தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுத்து நடாத்தியுள்ளது. மறுபக்கத்தில் தொழில் அதிபர்களிடம் இருந்து பெருந்தொகை பணத்தை வரியாகக் கறந்து வருகிறது. இந்த வரி கொடாத செல்வந்தர்கள் கடத்தப்படுகின்றனர்.
சர்வதேச மட்டத்தில் பிற ஆயதபாணி இயக்கங்களுடன் ETA தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் லிபியாவில் இரகசிய பயிற்சி முகாமகள் அமைக்க அந்நாட்டு அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டது. முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் உளவுத்துறையான ஸ்டாசி ETA வுக்கு உதவி வழங்கியமை பிற்காலத்தில் பகிரங்கப்படுத்தப்பட்ட பைல்களில் இருந்து தெரியவந்தது.
மத்திய, தென் அமெரிக்க நாடுகளில் தலைமறைவாக இயங்கிய உறுப்பினர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டனர். அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் தமது பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் ETA வின் பெயரையும் சேர்த்துள்ளன. இராணுவ, அரசியல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். கட்சி அரசியல் பிரதிநிதித்துவம் கூட தடைசெய்யப்பட்டது. இருப்பினும் ETA பாஸ்க் விடுதலைப் போராட்டத்தை 21 ம் நூற்றாண்டிற்கு எடுத்து வந்து விட்டது.
Euskadi ta askatasuna (E.T.A.)
8 comments:
நல்லபதிவு தொடர்க
நன்றி, தொடர்ந்து நல்ல பதிவுகளை கலையகத்தில் வாசிக்கலாம்.
அருமை நண்பரே..
தங்களுடைய தளம் பொது அறிவுக் களஞ்சியமாகத் திகழ்கிறது..
வாழ்த்துக்கள்.
உங்கள் பணி தொடரட்டும்.
அஹிம்சையிலிருந்து வன்முறைக்குத் தாவியவர்கள் அதில் கிடைக்கும் குறுகிய கால வெற்றியின் மிதப்பில் அஹிம்சை போராட்டத்தின் சக்தியை உணர மறுக்கிறார்கள்.
இது அனைத்து போராட்டக் கள இளைஞர்களுக்கும் பொருந்தும்.. வன்முறை நிச்சயம் என்றைக்கும் உறுதியான வெற்றியைத் தராது..
உங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் நன்றி, உண்மைத்தமிழன்,
பிற நாடுகளில் நடந்த, நடக்கும் தேசிய இனப் போராட்டங்களில் இருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு நிறைய உள்ளன. அதனால் தான் அவற்றை தேடி, அலசி, ஆராய்ந்து கட்டுரையாகத் தருகிறேன்.
இ.டி.ஏ பற்றி முழுமையான வரலாற்றை அறிந்து கொள்ள முடிந்த்து, நன்றி தோழர்
தோழமையுடன்
வினவு
நன்றி, வினவு,
எனது கட்டுரைகளில் என்னால் முடிந்த அளவு உள்நோக்கிய பார்வையை தருகிறேன்.
கலையரசன் ஈ.டி.ஏ பற்ரிய இந்தக் கட்டுரை மிகவும் நல்லக் கட்டுரை. மிக ஆழமாக தெரிவு செய்து எளிமையாக எழுதும் உங்கள் எழுத்து மிகவும் உற்சாகமளிக்கிறது.
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி, அருள் எழிலன். எனக்குத் தெரிந்த விடயங்களை, எனக்குத் தெரிந்த மொழிநடையில் எழுதி வருகிறேன். வாசகர்களின் அதிகரிப்பு என்னை இன்னும் நிறைய எழுத தூண்டும்.
Post a Comment