பொதுத் தேர்தல் ஒன்றில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவது, இன்றைய உலகில் அபூர்வமாக நடக்கும் விடயம் தான். சைப்ரசில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கும் அளவிற்கு, அந்நாட்டில் ஊழல், வேலையில்லாப்பிரச்சினை என்பன அதிகரித்து வருகின்றன.
நான் அங்கு தங்கியிருந்த, கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தின் போது, கடைத்தெருக்கள் எல்லாம் அந்தந்த நகரசபைகளின் செலவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த வர்ணஜால வேடிக்கைக்கு குறிப்பிட்ட நகரசபை இரண்டு லட்சம் யூரோக்களுக்கு மேல் செலவிடுகின்றது. அதே நேரம் நகரவாசிகளுக்கு அத்தியாவசிய தேவையான பொதுப்போக்குவரத்து துறைக்கு செலவிட பணமில்லை என்று கைவிரிக்கும் அரசாங்கத்தை, ஒரு நாளிதழ் சாடியிருந்தது. உலகில் பொதுப் போக்குவரத்து துறை வளர்ச்சியடையாத நாடுகளில் சைப்ரசும் ஒன்று. லட்சக்கணக்கான மக்கள் வாழும் பெரு நகரங்களில் கூட ஒரு சில பேரூந்துவண்டிகள் குறிப்பிட்ட ஓரிரு வழித்தடங்களில் மட்டும் ஓடுகின்றன. அதுவும் கிழமைநாட்களில், பகல் வேளை மட்டும் தான். இரவில் அரிது. ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சேவை அறவே இல்லை. டாக்ஸி வாடகை ஒன்றும் மலிவானதல்ல. வசதியுள்ளவர்கள் தனியாக கார் வைத்திருக்கிறார்கள். வசதிகுறைந்தவர்கள் ஸ்கூட்டர், சைக்கிள் அல்லது கால்களை நம்பி வாழவேண்டியது தான். கார்கள் விற்பனையாக வேண்டும் என்பதற்காக, அரசும் பொதுப் போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்யாது, பாராமுகமாக விட்டுவிடுகின்றது. அந்நாட்டில் வருடம் 24000 யூரோக்களுக்கு குறைவாக சம்பாதிப்பவர்கள், வருமான வரி கட்டத் தேவையில்லை. அதனால் வரி காட்டாதவர்களுக்கு, வசதி செய்து கொடுக்க முடியாது என்று அரசாங்கம் சிந்திக்கின்றது போலும்.

வருடந்தோறும் இலங்கை, இந்தியாவில் இருந்து பெருமளவு இளைஞர், யுவதிகள் உயர்கல்வி கற்க என சைப்ரஸ் வருகின்றனர். ஹோட்டல் முகாமைத்துவம், வர்த்தகம் போன்ற கற்கைகள் ஆங்கில மொழியில் வழங்கும் தனியார் கல்லூரிகள், ஐக்கிய இராச்சியத்துடன் ஒப்பிடும் போது பாதியளவு குறைவான கட்டணம் அறவிடுவது மட்டுமல்ல, விசா இலகுவாக கிடைப்பதும் இதற்கு காரணம். அப்படி வரும் (அனேகமாக கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த) இளைஞர்கள், பெரும்பாலும் ஏதாவது வேலை செய்து சம்பாதிப்பதற்காக வருகின்றனர். தாயகத்தில் இருந்து கிளம்பும் போது, தாம் போகுமிடம் ஐரோப்பிய நாடென்பதால், பலவித கனவுகளுடன் வருபவர்கள், சைப்ரஸ் வந்த ஓரிரு மாதங்களிலேயே மாயை அகன்று நாடு திரும்ப விரும்புகின்றனர். தணலாய் தகிக்கும் வெயிலுக்குள் கட்டிடம் கட்டும் சித்தாள் வேலை போன்ற, சைப்ரஸ்காரர்கள் செய்ய விரும்பாத கடினமான வேலைகளையே இவர்கள் செய்கின்றனர். கிடைக்கும் சம்பளமும் சொற்பம். அதிக பட்சம் மணித்தியாலத்திற்கு 5 யூரோ கிடைப்பது அரிது. இவ்வாறு கஷ்டப்படும் இளைஞர்கள் சிலர் சொந்த நாட்டில் உயர்கல்வி கற்றவர்கள். வெளிநாட்டு கனவால் தமது வாழ்க்கையை பாழாக்கியதாக உணர்கின்றனர்.
சைப்ரசிற்கு மாணவர்களாக வருபவர்கள் படிக்காமல், வேலை செய்கின்றனர் என்ற விடயம் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நன்கு தெரியும். இன்னும் சொல்லப்போனால், அவ்வளவு மாணவர்களும் ஒழுங்காக கல்லூரிக்கு சமூகமளித்தால், அதற்கென வகுப்புகளையும், ஆசிரியர்களையும் ஒழுங்கு படுத்த வேண்டி இருக்கும். அந்த செலவு தமக்கு மிச்சம் என்று நினைக்கின்றது, கல்லூரி நிர்வாகம். மாணவர்களாக வரும் இளைஞர்கள் வருடாவருடம் குடிவரவு திணைக்களத்தில் தமது விசாவை புதிப்பிப்பதற்காக, கல்லூரிக் கட்டணத்தை ஒழுங்காக கட்டி வருகின்றனர். இதனால் மகிழ்ச்சியுறும் கல்லூரி நிர்வாகம், தேவைப்பட்டால் பரீட்சை வினாத்தாள்களை கொடுத்து, சித்தி பெற்றதாக புள்ளிகளும் போட்டுத் தருவார்கள். கொஞ்சம் கூடுதலாக பணம் கொடுத்தால் டிப்ளோமாவும் கிடைக்கும். காசே தான் கல்வியடா!
பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெறும் வரை, சைப்ரஸ் வளர்ச்சி குன்றிய மூன்றாம் உலக நாட்டைப் போல காட்சியளித்தது.
ஐரோப்பிய யூனியன் என்ற கோட்டையின் கிழக்கு வாயிலாக கருதப்படும் சைப்ரசிற்கு அகதிகளாக வருபவர்களின் தொகை அதிகரித்து வருகின்றது. அந்நாட்டிற்குள் இலகுவாக நுழையக்கூடியதாக இருந்தாலும், அங்கிருந்து வேறு நாடுகளுக்கு போவது ( பெரும்பாலான அகதிகளின் விருப்பம்) கடினமானது.
சைப்ரசின் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அண்மையிலான அமைவிடம் காரணமாக, பாலஸ்தீன, லெபனானிய அகதிகளுக்கே இதுவரை காலமும் தஞ்சம் வழங்கப்பட்டு வந்தது. முன்பு ஒருமுறை பாலஸ்தீன இன்டிபதா போராட்டத்தின் போது, பெத்லஹெம் தேவாலயத்தினுள் சரண்புகுந்த ஆயுதபாணிகளை, சைப்ரஸ் வரவேற்று புகலிடம் கொடுத்து உலகப் புகழ் தேடிக்கொண்டது. அதேநேரம் அரசியல் ஆதாயமற்ற பிறநாட்டு அகதிகள், நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலர் சிறைகளில் அடைக்கப்பட்டு, நாடுகடத்தப்படுவது வழக்கமாக நடந்து வருகின்றது.
(முற்றும்)
(இந்தக் கட்டுரையை தயாரிக்க உதவிய சைப்ரஸ் வாழ் நண்பர்களுக்கும், ஆங்கில மொழி நாளேடுகளுக்கும் எனது நன்றிகள்.)
_______________________________________________
கடந்தவை:
1. இனப்பிரச்சினையின் பரிமாணங்கள் - ஒரு சைப்ரஸ் அனுபவம்
2. ஒரு தீவு, மூன்று தேசங்கள் (சைப்ரஸ் தொடர்-2)
No comments:
Post a Comment