Tuesday, July 22, 2008

சைப்பிரசில் ஓர் ஈழம்

ஒரு காலத்தில் இனப்பிரச்சினை முற்றி, ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்த போரின் பின்னர், இரண்டு தேசங்களான சைப்பிரஸ், இன்று மீண்டும் சேரத் துடிக்கின்றது. இரு வேறு மொழிகள்(கிரேக்கம்,துருக்கி), மதங்கள்(கிறிஸ்தவம்,இஸ்லாம்), ஆகியன ஒரு சிறிய தீவின் மக்களை எப்படி பிரித்ததன? தற்போது அவர்களை சேர்க்கும் காரணம் எது?  
 
ஐரோப்பாக் கண்டத்தையும், ஆப்பிரிக்கா கண்டத்தையும் பிரிக்கும் மத்தியதரைகடலில் உள்ள குட்டித்தீவு சைப்பிரஸ். அதன் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக அன்னிய படையெடுப்புகளுக்கு அடிக்கடி ஆளானது. எகிப்து, சிரியா, பெர்சியா ஆகிய பண்டைய சாம்ராஜ்யங்கள் அதற்கு உரிமை கோரியுள்ளன. இருப்பினும் இன்றைய கிரீஸ் மட்டுமல்ல, துருக்கி, சைப்பிரஸ் என்பனவும் ஒரு காலத்தில் கிரேக்க இனங்களால் நிறைந்திருந்தன. 
 
மத்திய ஆசியாவில் இருந்து வந்த துருக்கி நாடோடிக் குழுக்களின் படையெடுப்புகள், அந்த பிரதேச மொழியியல் வரைபடத்தை அடியோடு மாற்றியது. துருக்கிய பிரதேசத்தில் வாழ்ந்த (கிரேக்க) மக்கள் மெல்ல, மெல்ல துருக்கி மொழியை தமது தாய்மொழியாக்கிக் கொண்டனர். ஒரு காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைநகரான பாக்தாத் நகரையே முற்றாக அழித்த துருக்கிய நாடோடிகள், பின்னர் அங்கு வாழ்ந்த மக்களின் உயர்ந்த நாகரீகம் கண்டு வியந்து, தாமும் முஸ்லீம்களாக மாறினர். இதன் பின்னர் தான் துருக்கிய சுல்தான்கள் மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினர். அவ்வாறு சென்றவிடமெல்லாம் வெற்றி கண்ட ஒஸ்மான் அலியின், ஓட்டோமான் அரச பரம்பரையினர், இன்றைய கிரீஸ், சைப்பிரஸ் ஆகிய நாடுகளையும் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். 
 
சைப்பிரஸ் துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில்(250 வருடங்கள்) , துருக்கி பெருநிலப்பரப்பில் இருந்து, துருக்கி மொழி பேசும் மக்கள் சென்று குடியேறியதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் கணிசமான கிரேக்க மொழி பேசும் மக்களும், அரசாங்கத்திடம் சலுகைகள் பெறுவதற்காக, அல்லது தமது குடும்ப நலன் கருதி, அரச மதமான இஸ்லாத்திற்கு மாறி, அரச கரும மொழியான துருக்கியை தமது தாய் மொழியாக ஏற்றுக்கொண்டு, துருக்கியராகவே மாறியிருக்க வாய்ப்புண்டு. அல்லது துருக்கியராகியிருக்கலாம். 
 
இந்த சரித்திர உண்மையை இன்றைய கிரேக்கசைப்பிரஸ் வலதுசாரிகள் நம்ப மறுப்பார்கள். ஆனால் ஒரு சில கல்விமான்கள் சொல்வதைப்போல, மரபணு சோதனை செய்து பார்த்தால், சிப்ரியோட்(சைப்பிரஸ் மக்களை பிரிட்டிஷ் நிர்வாகம் "கிரேக்க சிப்ரியோட்", "துருக்கி சிப்ரியோட்" என பெயரிட்டழைத்தது.) என்று அழைக்கப்படும், கிரேக்கர்களுக்கும், துருக்கியருக்குமிடையில் ஒற்றுமை இருப்பதை நிரூபிக்கலாம். வெறும் மொழி அடிப்படையில் மட்டுமே, சைப்பிரஸ்- துருக்கியர் தம்மை துருக்கி- துருக்கியருடனும், அதே போல சைப்பிரஸ்- கிரேக்கர்கள் தம்மை கிரீஸ்- கிரேக்கர்களுடனும் இனம்காண்கின்றனர். இத்தகைய இனவாத சிந்தனை இன்றுவரை சைப்பிரசை பிரிக்கும் முக்கிய காரணியாகும்.  
 
19 ம் நூற்றாண்டில் உலகிலேயே சிறந்த கடற்படையை வைத்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியம், மத்திய தரைக் கடலிலும் ஆதிக்கம் செலுத்த வந்தது. ஸ்பெயினின் தென் முனையில் உள்ள ஜிப்ரால்டர், இத்தாலிக்கு கீழே உள்ள மால்ட்டா, ஆகியனவற்றை கைப்பற்றி தனது காலனியாக்கியத்துடன் நில்லாது, சைப்பிரசை அபகரிக்கும் நோக்கில் ஓட்டோமான் அரசுடன் பேரம் பேசியது. அந்தக்காலத்தில் நலிவடைந்து "ஐரோப்பாவின் நோயாளி" என்றழைக்கப்பட்ட ஓட்டோமான் சாம்ராஜ்யம், சைப்பிரசை பிரிட்டனுக்கு விற்றுவிட்டது. 
 
1878 ல் நிர்வாக பொறுப்பை மட்டுமே ஏற்பதாக கூறிய பிரித்தானியா, முதலாம் உலகப்போரில் துருக்கி தோல்வி அடைந்த தருணத்தை பயன்படுத்தி, சைப்பிரஸ் தனது காலனி என்று அறிவித்தது. இருந்தாலும் துருக்கியர்களை தனது நண்பர்களாக பார்த்த பிரிட்டன், சைப்பிரசிலும் தனது காலனிய நிர்வாகத்தில் துருக்கி மொழி பேசுவோருக்கு பதவிகளை வழங்கியது. இதனால் அனைத்து கீழ்மட்ட நிர்வாகிகளும், அரச எழுதுவினைஞர்களும், மட்டுமல்ல காவல்துறையை சேர்ந்தோரும் துருக்கியராகவே இருந்தனர். மொத்த சனத்தொகையில் 18 வீதமேயான, துருக்கியருக்கு ஆங்கிலேயர் வழங்கிய சலுகைகள், அதே இனங்களை பிரித்தாளும் சூழ்ச்சி தான்.

நவீன கால வரலாற்றில் கிறிஸ்தவ மதம் அரசியலில் ஈடுபடவில்லை என்று, மேற்கு-ஐரோப்பிய உதாரணத்தை மட்டுமே எல்லோரும் கவனிக்கின்றனர். கிரீசிலும், சைப்பிரசிலும் அரசியலே கிறிஸ்தவ மடாலயங்களில் இருந்து தான் பிறந்தது. தனித்துவமான கிரேக்க கிறிஸ்தவ நிறுவனம், சைப்பிரசிற்கு என சுயாதீனமான தலைமை மதகுருவை கொண்டிருந்தது. அவ்வப்போது நடந்த ஓட்டோமான் அரசுக்கெதிரான, அல்லது இஸ்லாமிய ஆதிக்கத்தை எதிர்க்கும் கிளர்ச்சிகளுக்கு மதகுருக்களே தலைமை தாங்கினர். 
 
சைப்பிரஸ் பிரிட்டிஷ் காலனியாகிய போது, கிறிஸ்தவ சபைகள் அதை வரவேற்கவே செய்தன. ஆயினும் கிரீசுடன் ஒரு பகுதியாக இணையும் அபிலாசை, பிரிட்டிஷ் நிர்வாகத்துடன் முரண்பாடுகளை தோற்றுவித்தது. முதலாம் உலகயுத்த முடிவில், துருக்கியிடம் இருந்து கிரீஸ் பரிபூரண சுதந்திரம் பெற்றிருந்தது. பல தீவுகள் புதிய கிரீஸ் தேசிய அரசின் வசமான போது, சைப்பிரசில் உள்ள கிரேக்க மொழி பேசும் மக்கள் கிரீசுடன் இணைய விருப்பம் தெரிவித்ததில் வியப்பில்லை. ஆனால் பிரிட்டன் அந்த விருப்பத்திற்கு தடையாக இருந்தது. இதனால் பிரிட்டிஷாருக்கு எதிரான கலகங்கள் வெடித்த போது, இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டது. கிறிஸ்தவ மதகுருக்கள் நாடுகடத்தப்பட்டனர்.

இருப்பினும் கிரீஸ் தான் தமது தாய் நாடு என்று கருதும் கிரேக்க-சிப்ரியோட்கள் "எநோசிஸ்" என்றழைக்கப்படும் இணைப்பிற்கான கொள்கையை கைவிடவில்லை. "எயோகஸ்"(EOKAS) என்ற கிரேக்க தேசியவாத இயக்கம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டது. சந்தேகத்திற்கிடமில்லாமல் துருக்கி-சிப்ரியோத்கள் கிரீசுடன் இணைவதை எதிர்த்தனர். ஓட்டோமான் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ஒரு காலத்தில் பிரிட்டன் வெளியேறும் பட்சத்தில், சைப்பிரஸ் துருக்கிக்கு திருப்பி வழங்கப்பட வேண்டும் என்று எழுதியிருப்பதாக வாதிட்டனர். சைப்பிரஸ் தனியான சுதந்திர நாடாக வர வேண்டும் என்று எதிர்பார்த்த பிரித்தானியா, துருக்கியர் பக்கம் சாய்ந்தது. எயோகஸ் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கோடு, துருக்கி துணை இராணுவக்குழுவை உருவாக்கியது.

ஆரம்பத்தில் எயோகஸ் ஆங்கிலேய அதிகாரிகளையும், கிரேக்க பொலிஸாரையும் குறி வைத்து தாக்கிக் கொண்டிருந்தது. இதனால் கிரேக்கர்கள் அரச தொழில்களை கைவிட்டு ஓட, துருக்கி துணைப்படை தாக்குதல் இலக்கானது. இதனால் ஏற்பட்ட இரு இனங்களுக்கிடையிலான பதற்றம் ஒருபக்கம், கிரேக்க பேரினவாத கனவு மறுப்பக்கம், எல்லாம் சேர்ந்து துருக்கியரை பிரிவினை நோக்கி தள்ளியது. முரண்பாடுகள் கூர்மையடையும் வேளை, மிதவாத கிரேக்கர்கள் 1960 ல் சைப்பிரசை தனியான குடியரசாக்க ஒப்புக்கொண்டனர். மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட கிறிஸ்தவ தலைமை மதகுரு மகாரியோஸ் பிரதமராக வந்தார்.


சுதந்திரம் வழங்கப்பட்ட போதும், பிரிட்டன் தனது இரண்டு படைத்தளங்களை தொடர்ந்து வைத்திருக்க அனுமதி வாங்கியது. இன்றும் கூட பிரிட்டனுக்கு "சொந்தமான" அந்த நிலங்களில், பிரிட்டிஷ் இராணுவம் முகாமிட்டுள்ளது. சுதந்திரத்திற்கு பின்னரான சைப்பிரசில் இனப்பிரச்சினை பற்றி கிரேக்க-துருக்கி பிரதிநிதிகளுக்கிடையில் பலதடவைகள் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. 
 
தற்போது ஆட்சியதிகாரத்தை தம் கையில் வைத்துக்கொண்ட கிரேக்க சிப்ரியோட்கள், 78 % பெரும்பான்மையை கொண்டிருந்ததால், சிறுபான்மை துருக்கி சிப்ரியோட்கள் வைத்த அதிகாரப்பரவலாக்கல் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தினர். துருக்கியர் தமக்கென தனியான தன்னாட்சிப்பிரதேசத்தை கோரினர். கிரேக்க அரசியல் தலைவர்களோ அதைப்பற்றி நினைத்துப்பார்க்கவும் விரும்பவில்லை. தொடர்ந்து பலவருடங்கள் இப்படியே, பேச்சுவார்த்தைகள், சில அதிகார அலகுகளுக்கான இணக்கப்பாடுகள், நடைமுறைக்கு வராத ஒப்பந்தங்கள், என்று காலம் கழிந்ததே தவிர இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

1974 ல் அதற்கொரு முடிவு வந்தது. கிரேக்க-சிப்ரியோட் இனவாத இராணுவ அதிகாரிகள் திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியதை காரணமாக காட்டி, துருக்கி சைப்ரஸ் மீது படையெடுத்தது. நடந்த போரில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இரண்டு பக்கமும் இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டன. கிரேக்க சிப்ரியோட்கள் வடக்கிலிருந்தும் (துருக்கி பெரும்பான்மை மாகாணங்கள்), துருக்கி சிப்ரியோட்கள் தெற்கிலிருந்தும் (கிரேக்க பெரும்பான்மை மாகாணங்கள்) விரட்டப்பட்டனர். விரைவில் போர்நிறுத்தம் ஏற்பட்டு நாடு இரண்டாகப்பிரிக்கப்பட்டது. ஐ.நா. தலையீட்டால் "பச்சைக்கோடு எல்லை" வகுக்கப்பட்டு, எல்லைகளில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன. 
 
தீவின் மத்தியில் அமைந்திருக்கும் தலைநகரம் நிக்கோசியா கூட இரண்டாகப்பிரிக்கப்படது. வடக்கு சைப்பிரஸ் துருக்கியின் இராணுவ மேலாதிக்கத்தின் கீழ் வந்த போதும், இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீடித்தன. சைப்பிரஸ் ஒரு சமஷ்டி குடியரசு ஆகும் வரை தான் வெளியேறப் போவதில்லை என்று துருக்கி அடம்பிடித்தது. 
 
அதேநேரம் துருக்கி நாட்டிலிருந்து இலட்சக்கணக்கான துருக்கி இனத்தவரை வடக்கு சைப்பிரசில் கொண்டு வந்து குடியேற்றப்பட்டனர். இது சைப்பிரசின் சனத்தொகையில், இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கிலேயே நடைபெறுகின்றது என்பதில் சந்தேகமில்லை. தற்போது நடக்கும் பேச்சுவார்த்தைகளில் கூட, பிரச்சினை தீர்ந்தால் குறைந்தது 50000 குடியேறிகளை மட்டுமே ஏற்றுக்கொள்வதாக, கிரேக்க-சிப்ரியோட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1983 ல் ஒருதலைப்பட்சமாக "வடக்கு சைப்பிரஸ் குடியரசு" பிரகடனம் செய்யப்பட்டாலும், அந்த புதிய தேசத்தை துருக்கியை தவிர, உலகில் வேறு எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. ஐரோப்பிய யூனியன் ஒன்றிணைந்த சைப்பிரசை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றது. கிரேக்க-சைப்பிரஸ் பகுதி ஐரோப்பிய யூனியனின் அங்கத்துவ நாடாகிய பிறகு, துருக்கி-சைப்பிரஸ் மக்களுக்கு துருக்கிய இராணுவம் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதாரத்தடை அந்தப்பகுதியை வெகுவாகப் பாதித்துள்ளது. 
 
இதனால் ஒப்பீட்டளவில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் விரக்தியுற்ற இளம்தலைமுறை, மீண்டும் சைப்பிரஸ் ஒரே நாடாக வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆயினும் இரண்டு பக்கமும் இருந்த வலதுசாரி கடும்போக்காளர்கலால் அண்மைக்காலம் வரை ஒற்றுமைக்கான முயற்சி எதுவும் கைகூடி வரவில்லை. கிரேக்க பகுதியில் கடந்த வருடம் வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி ஜனாதிபதி பதவிக்கு வந்த பிறகு தான் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த மே தினத்தன்று, நீண்ட காலத்திற்கு பிறகு, கிரேக்க-துருக்கி தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொண்டாடியுள்ளனர். இன்றைய நிலைமை இது.

துருக்கி-சிப்ரியோட் அரசியல்தலைவர்கள் சுயநிர்ணய உரிமை, அல்லது அதிக அதிகாரம் கூடிய சமஷ்டி ஆட்சிக்கு குறையாத தீர்வை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். துருக்கி அரசாங்கம், வேண்டுமென்றே பொருளாதார தடை போட்டு, தம்மோடு சேர்க்கப் பார்ப்பதாக கிரேக்க-சிப்ரியோட் பக்கம் குற்றம்சாட்டுகின்றது. அதே நேரம் துருக்கி எதிரிநாடாக இருப்பதால் (கிரேக்க)சைப்பிரஸ் சில பொருளாதார (கப்பல், விமான போக்குவரத்து) பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளது கிரேக்க-சிப்ரியோட் அரசியல்தலைவர்கள் சமஷ்டிக்கு மறுத்து, ஒற்றையாட்சியே நீடிக்க வேண்டும் எனக்கூறுகின்றனர். அதே நேரம் பெருமளவு துருக்கி சிப்ரியோட் மக்கள் பொருளாதார நலன் கருதி இணைப்பிற்கு ஆதரவாகவும், கிரேக்க-சிப்ரியோட் மக்கள் பேரினவாத எண்ணத்தால், சமஷ்டிக்கு எதிராகவும் உள்ளனர். துருக்கி தான் ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு சைப்பிரஸ் பிரச்சினையை துருப்பு சீட்டாக பயன்படுத்துகின்றது.

ஐரோப்பிய யூனியனோ, ஐரோப்பா என்ற எதிர்கால ஏகாதிபத்தியக்கனவுகளுடன் இந்தப்பிரச்சினையை பார்க்கின்றது. ஐரோப்பிய யூனியனின் நெருக்குவாரங்களால், சைப்பிரஸ் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரலாம். எதிர்பாராதவிதமாக இயற்கை ஒன்றிணைவுக்கு துணை செய்கின்றது. உல்லாசப்பிரயான, ரியல் எஸ்டேட் தொழிற்துறைகள், அதிக வருமானத்தை ஈட்டித்தரும் அதேநேரம், பாவனையாளர் அதிகரித்து, வரட்சியும் சேர்ந்து கொள்ள, தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் கிரீசில் இருந்து கப்பல்களில் தண்ணீர் இறக்குமதி செய்யவேண்டிய நிலைமை. இதற்கு அதிக செலவாகின்றது. அதேநேரம் 83 கி.மி. தூரத்தில் இருக்கும் துருக்கியில் இருந்து, குழாய் மூலம் தண்ணீர் வாங்குவது செலவு குறைந்த வழி. ஏற்கனவே துருக்கி, குழாய் மூலம் இஸ்ரேலுக்கு தண்ணீர் விற்கும் ஒப்பந்தம் செய்துள்ளது. 
 
சைப்பிரஸ் துருக்கியிடம் போக தடுப்பது அரசியல் மட்டும் தான். பொதுநலன் கருதி, பழைய பகையை மறந்து செய்யற்படும் காலம் நெருங்கி வருகின்றது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, அரசியல் அல்லது இன முரண்பாடுகளால், பிரிந்துள்ள இரண்டு சைப்பிரஸ்களும், பொருளாதார காரணங்களால் ஒன்று சேர்கின்றன. ஒரு காலத்தில், பிரிட்டிஷ் காலனியாதிக்கநிர்வாகம், தனக்கெதிரான விடுதலைபோரட்டத்தை, இனங்களுக்கு இடையேயான போராக மாற்றிவிட்டது. இனவாதிகள் அதனை தமது அரசியல் நலன்களுக்கு பயன்படுத்தினர். இறுதியில் பொருளாதார நலன்கள் எல்லாவற்றையும் மேவி நிற்பது வெள்ளிடைமலை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
(படம் 2 : நிகோசியா ஐ.நா. எல்லைக்கோடு )

 

 

 

 

 

(உயிர்நிழல் Januari-March/April -June 2008 ல் பிரசுரிக்கப்பட்டது)

_____________________________________________________________________________________ ஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள் சைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம் _____________________________________________________________________________________