Monday, June 07, 2021

James Bond முதல் Family Man வரை

- ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் சோவியத் ரஷ்யாவையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் வில்லன்களாக காட்டி எடுத்திருந்தார்கள்.

நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் ரஷ்யர்களும் அல்ல, கம்யூனிஸ்டுகளும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- வியட்கொங் விடுதலைப் போராளிகளால் தென் வியட்நாம் விடுதலை செய்யப்பட்டு சில வருடங்களின் பின்னர் எடுக்கப்பட்ட ராம்போ போன்ற திரைப்படங்களில் வியட்நாமிய போராளிகளை வில்லன்களாகவும், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினரை ஹீரோக்களாகவும் காட்டினார்கள்.

நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் வியட்நாமியரும் அல்ல, கம்யூனிஸ்டுகளும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- ராம்போ-2 வில் சோவியத் செம்படையினரை கொடூரமான வில்லன்களாக காட்டினார்கள். ஆப்கான் இஸ்லாமியவாத ஜிகாதிகளை ஹீரோக்களாக காட்டினார்கள்.

நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- ரோஜா என்ற தமிழ்த் திரைப்படத்தில் காஷ்மீர் விடுதலைப் போராளிகளை இஸ்லாமிய மதவெறி பிடித்த கொடூரமான வில்லன்களாக காட்டி இருந்தார்கள். நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படத்தை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் காஷ்மீரிகளும் அல்ல, இஸ்லாமியரும் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- உயிரே எனும் தமிழ்த் திரைப்படத்தில் அசாமிய விடுதலைப் போராளிகளை வில்லன்களாக காட்டி இருந்தார்கள். நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படத்தை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் அசாமியர் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

- கடந்த இருபது வருட காலமாக பல நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய ஜிகாதிகளை வில்லன்களாக காட்டும் திரைப்படங்கள் ஏராளம் வந்து விட்டன. ஹாலிவூட் ஆங்கிலத் திரைப்படங்கள் மட்டுமல்ல, இந்தியாவில் தயாரிக்கப் பட்ட ஏராளமான ஹிந்தி, தமிழ்ப் படங்கள் அது போன்ற கதைக்கருவை கொண்டிருந்தன.

நாங்கள் அதைக் கண்டு பொங்கி எழவில்லை. மாறாக அந்தப் படங்களை பார்த்து இரசித்து மகிழ்ந்தோம். ஏனென்றால் நாங்கள் இஸ்லாமியர்கள் அல்ல. மாறாக தன்னலம் கருதும் தமிழ்த் தேசியவாதிகள்!

அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய பிராந்திய வல்லரசும் தமது நலன்களுக்கு எதிரான இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்களாக அறிவித்து தடைசெய்திருந்தன. அப்போதெல்லாம் எந்தவிதமான அரசியல் புரிதலும் இல்லாமல் நடந்து கொண்டோம். உலகத்தை அல்லது பூகோள அரசியலை புரிந்து கொள்வதற்கு, எமது குறுகிய சிந்தனை கொண்ட தமிழ்த்தேசியம் அனுமதிக்கவில்லை. அதைக் கூட ஒரு குறைபாடாக நினைக்காமல், பெருமையாக நினைத்துக் கொண்டோம்.

நாங்கள் தொடர்ந்தும் அமெரிக்க- இந்திய நலன்களுக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொண்டோம். இப்போதும் காட்டிக் கொள்கிறோம். எஜமானின் காலடியில் விழுந்து கிடந்தோம். ஒவ்வொரு வருடமும் ஜெனீவா மகாநாட்டில் அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் தமிழர்கள் பக்கம் நிற்பதாக எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்டோம். தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகளில் சீனா, கியூபாவை மட்டும் தேர்ந்தெடுத்து திட்டித் தீர்த்தோம். அப்போது தான் அமெரிக்காவின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று உண்மையிலேயே நம்பினோம்.

அமெரிக்காவையும், இந்தியாவையும் திருப்திப் படுத்துவதற்காக நாங்களும் சீனாவை திட்டினோம். இலங்கையில் சீன மொழித் திணிப்பு நடக்கிறது, சீனாவின் காலனி உருவாகிறது என்று பிரச்சாரம் செய்தால் இந்தியா தமிழர்களை ஆதரிக்கும் என்று நம்பினோம். சர்வதேச மட்டத்தில் இஸ்லாமியப் பயங்கரவாதத்தை கண்டித்தோம். "இஸ்லாமியர்களை நம்ப முடியாது... குண்டு வைப்பார்கள்..." என்று ஏகாதிபத்தியம் சொல்லித் தந்த பாடத்தை மனனம் செய்து ஒப்புவித்தோம். அத்துடன் இஸ்ரேலை இருக்க விடாமல் அரபு- இஸ்லாமியர்கள் தாக்குகிறார்கள் என்று சொல்லி, பாலஸ்தீனர்களின் போராட்டத்தை எதிர்த்து வந்தோம். இஸ்ரேலை நிபந்தனை இன்றி ஆதரித்தோம். இதன் மூலம் அமெரிக்க எஜமான் மனத்தைக் குளிர வைத்தோம்.

இவ்வாறு எந்தவிதமான அரசியல் புரிதலுமற்ற, குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழ் குறுந் தேசியவாதிகளின் பலவீனத்தை பயன்படுத்தி Family Man - 2 சீரிஸ் தயாரித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு சில எடுத்துக்காட்டுகள்:

1. இறுதிப்போரில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பி விட்டதாகவும் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகவும் தமிழ்த் தேசியவாதிகள் தான் கதைகளை கட்டி விட்டார்கள். அனைத்து தமிழர்களும் தாம் சொல்வதை உண்மை என்று நம்ப வேண்டும் என அடம்பிடித்தார்கள். இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man - 2 சீரிஸ் தொடங்குகிறது. பாஸ்கரன் என்ற பாத்திரப் பெயருடன் வரும் பிரபாகரன் போர்க்களத்தில் இருந்து உயிருடன் தப்பி விட்டதாக சொல்கிறது.

2. வைகோ, நெடுமாறன், சீமான் போன்ற தமிழக அரசியல்வாதிகளை "உண்மையான தமிழினப் பற்றாளர்கள்" என்று தமிழர்கள் பலர் (இன்றும்) நம்புகிறார்கள். அன்று புலிகளும் அவர்களை நம்பினார்கள்.

இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man - 2 சீரிஸ் தொடங்குகிறது. ஆரம்பத்திலேயே வைகோ, நெடுமாறன், சீமான் போன்றவர்கள் இந்தியப் புலனாய்வுத்துறையின் தொடர்பில் இருப்பவர்களாக காட்டப் படுகின்றனர். அவர்கள் புலிகளின் தலைவருடனும் நேரடித் தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களது விசுவாசம் இந்திய இறையாண்மை மீதே இருக்கிறது. (இந்த உண்மையை சீமானும் மறுக்கவில்லை.)

3. இறுதிப்போரில் புலிகளின் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் தைரியம் இல்லாத தமிழ்த் தேசியவாதிகள், "இருபது சர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்து அழித்து விட்டன" என்று சொல்லித் திரிந்தார்கள். இப்போது கேட்டாலும் அதைத் தான் சொல்வார்கள்.

இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man - 2 சீரிஸ் தொடங்குகிறது. புலிகளை அழித்த இந்த சர்வதேச நாடுகள் எல்லாம்,  இஸ்லாமியவாதிகளுக்கும் எதிரி நாடுகள் தான். ஆகவே லண்டனுக்கு தப்பிச் சென்ற புலிகளின் தலைவர் அங்கிருந்த படியே ISI உடன் கூட்டுச் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக சதி செய்வதாக கதை அமைத்திருக்கிறார்கள்.

4. அமெரிக்காவில் ஸ்தாபிக்கப் பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்க ஏகாதிபதிபத்திய, அல்லது இந்திய பிராந்திய வல்லரசின் நலன்களுக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொள்கிறது. இதை அவர்கள் எந்த ஒளிவுமறைவும் இன்று நேரடியாகவே சொல்லிக் கொள்கிறார்கள்.

இந்த நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு Family Man - 2 சீரிஸ் தொடங்குகிறது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எந்தக் கட்டத்திலும் இந்திய நலன்களுக்கு எதிராக நடந்து கொள்ளாது. மாறாக, இந்திய அரசுடன் ஒத்துழைப்பார்கள் என்று கதை அமைத்திருக்கிறார்கள். 

 *****

சரி, இனிமேல் Family Man - 2 சர்ச்சைக்கு பிறகாவது இந்த குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழ்த்தேசியவாதிகள் திருந்தி நடப்பார்கள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். இப்போதும் கம்யூனிஸ்டுகள், காஷ்மீரிகள், இஸ்லாமியர்கள் போன்றவர்களுடன் அவர்களுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை. இதன் மூலம் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தொடர்ந்தும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியான நிலைமையில், Family Man - 2 க்கு எதிரான எதிர்ப்புகள் அதற்கான விளம்பரமாக அமையுமே தவிர வேறெந்த பலனையும் தரப் போவதில்லை. இனி வருங்காலத்தில் இது போன்ற படங்கள் தயாரிப்பதற்கான ஊக்குவிப்பாகவே, அவர்கள் இந்த எதிர்ப்புகளை கருதிக் கொள்வார்கள்.

Sunday, May 09, 2021

யாழ்ப்பாணத்தில் எழும் சாதிய மதில் சுவர்!

யாழ் குடாநாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள மயிலிணி கிராமத்தில் சாதிப்பிரச்சினை தலைதூக்கியுள்ளது. வழமை போல இதுவும் கோயிலை மையமாகக் கொண்டு எழுந்த சாதிப் பிரச்சினை தான். ஈழப்போர் நடந்த முப்பது காலங்களில் நீறு பூத்த நெருப்பாக மறைந்திருந்த சாதிப் பிரச்சினைகள் தற்போது மெல்ல மெல்ல தலைதூக்கி வருகின்றன.

மயிலிணி பிரச்சினை தொடர்பாக இதுவரை எனக்குக் கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்: அங்குள்ள முருகன் கோயிலை அண்டி யாராலும் உரிமை கோரப்படாத வெட்டையான காணி ஒன்றுள்ளது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் தேர்த் திருவிழாக் காலங்களில், சாமி வெளிவீதி உலா வருவதை தவிர ஏனைய நாட்களில் அந்த இடம் பாவனையில் இருப்பதில்லை.

அதனால், அயல் கிராமத்து இளைஞர்கள் அந்தக் காணிக்குள் வந்து உதைபந்து, அல்லது வலைப் பந்து விளையாடுவது வழக்கம். சிலநேரம் விளையாட்டுப் போட்டிகளும் நடந்துள்ளன. கடந்த பல வருடங்களாக அனைத்து சாதிகளை சேர்ந்த இளைஞர்களும் வந்து விளையாடி வந்தனர். ஏற்கனவே யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தில் பாடசாலைகளிலும், விளையாட்டு மைதானங்களிலும் ஒன்று கூடும் இளைஞர்கள் தமக்குள் சாதி வேற்றுமை பார்ப்பதில்லை. இந்த வழக்கம் கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகின்றது.

அண்மைக் காலமாக குறிப்பிட்ட காணியில் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த இளைஞர்களே அதிகளவில் வந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதே நேரம், உயர்த்தப் பட்ட சாதியை சேர்ந்த இளைஞர்கள் வேறொரு இடத்தில் தனியாக பிரிந்து விளையாடுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இருந்தாலும் ஆரம்பத்தில் இதை யாரும் பொருட்படுத்தவில்லை.

சில தினங்களுக்கு முன்னர், குறிப்பிட்ட மைதானம் அமைந்துள்ள காணியை சுற்றி மதில் கட்டப் பட்டுள்ளது. ஊர் மக்கள் இதுகுறித்து காரணம் கேட்ட பொழுது, திருவிழாக் காலங்களில் சுவாமி வெளி உலா வருவதற்கான வீதியை சுற்றி மதில் கட்டுவதாக நிர்வாகத்தினர் பதில் கூறினார்கள். யாழ்ப்பாணக் கோயில்களில் பொதுவாக தேர்ப் பவனி நடக்கும் உள்வீதிகளை சுற்றித் தான் மதில் கட்டப் படுவதுண்டு. வெளி வீதி எப்போதும் குடியிருப்புகளை அண்டிய திறந்த வெளியாகத் தான் இருக்கும்.

மதில் கட்டுவதற்கு இன்னொரு காரணமாக, சில இளைஞர்களின் மது பாவனை சுட்டிக் காட்டப் பட்டது. அப்படியான ஒரு சிலர் இருந்தாலும் அதற்காக மதில் கட்டுவதை நியாயப் படுத்த முடியாது. இது சில மாதங்களுக்கு முன்னர், நல்லூர்க் கோயிலுக்கு அருகாமையில் காதல் ஜோடிகள் ஒன்று கூடுகிறார்கள் என்று கழிவு எண்ணை ஊற்றிய சம்பவத்தை நினைவுகூருகின்றது. அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் இந்துமதக் கலாச்சாரக் காவலர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது.

முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்திலும், இதே இடத்தில் இது போன்ற சாதிய மதில் கட்டப் பட்டதாகவும், அப்போது எழுந்த பிரச்சினையின் முடிவில் புலிகள் அந்த மதிலை இடித்து விழுத்தியதாகவும் தெரிய வருகின்றது. தற்போது ஆலய நிர்வாகத்தினர் பிரதேச சபையில் உள்ள தமது சாதியை சேர்ந்த உறுப்பினர்களின் ஆதரவில் மீண்டும் அந்த மதிலை கட்டி எழுப்பி உள்ளனர்.

இதைத் தவிர, மதிலை சுற்றி உயரமான கம்பங்களில் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. கோயில் காணியாக இருந்தாலும் பொது இடங்களில் கமெரா பொருத்த காவல்துறை அனுமதி தேவை. அப்படி எந்த அனுமதியும் பெறப் பட்டதாக தெரியவில்லை. பொது இடங்களில் மற்றவர்களின் சுதந்திரத்தில் (privacy) தலையிடுவதற்கு தனியாருக்கு உரிமை இல்லை.

அத்துடன் இந்தக் கமெராக்கள் அயலில் உள்ள வீடுகளை கண்காணிக்கும் வகையில் பொருத்தப் பட்டுள்ளன. இதனால் தங்களது தனிமனித சுதந்திரம் மீறப் படுவதாக ஊர் மக்கள் முறையிடுகின்றனர். கிணற்றடியில் குளிக்கும் பெண் பிள்ளைகளும் அச்சமடைந்து காணப் படுகின்றனர்.

கோயிலை அண்டிய கிராமங்களில் குடியிருப்பவர்கள் தாழ்த்தப் பட்ட சாதியினர் ஆவர். அதனால் மதில்சுவர் மட்டுமல்லாது, கண்காணிப்பு காமெராக்களும் சாதிய ஒடுக்குமுறையின் நவீன வடிவமாகவே அவர்கள் பார்க்கிறார்கள். இரண்டுமே அடிப்படை மனித உரிமை மீறல் பிரச்சினை என்பதால், ஊர் மக்கள் அது குறித்து காவல்துறை, பிரதேச சபை உறுப்பினர்களிடம் முறையிட்டு இருந்தனர். ஆனால், இன்னும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. வழமை போல ஆதிக்க சாதியினர் பக்கமே அதிகார வர்க்கமும் இருப்பதாகத் தெரிகின்றது.

இது குறித்து மேலதிக தகவல்களை பின்னர் தருகிறேன்.

Wednesday, May 05, 2021

கார்ல் மார்க்ஸ் எழுதிய‌ "லூயி பொன‌பார்ட்டின் ப‌தினெட்டாம் புருமேர்"

கார்ல் மார்க்ஸ் எழுதிய‌ "லூயி பொன‌பார்ட்டின் ப‌தினெட்டாம் புருமேர்" (The Eighteenth Brumaire of Louis Bonaparte) நூலை வாசிப்ப‌த‌ற்கு முன்ன‌ர், க‌ட்டாய‌ம் தெரிந்து கொள்ள‌ வேண்டிய‌ விட‌ய‌ங்க‌ள்: 
 - அது இன்றைய,‌ ந‌ம‌து கால‌த்திய‌ முத‌லாளித்துவ‌ அர‌சின் தோற்ற‌ம், குணங்க‌ள், செய‌ற்பாடுக‌ள் போன்ற‌வ‌ற்றின் அடிப்ப‌டையை புரிந்து கொள்ள‌ உத‌வும் நூல். 

 - அது "முத‌லாளித்துவ‌ ச‌முதாய‌த்தில் த‌னிம‌னித‌ சுத‌ந்திர‌ம் இருக்கிறது... ஜ‌ன‌நாய‌க‌ம் இருக்கிறது... அத‌னால் இன்றுள்ள‌ அமைப்பே சிற‌ந்த‌து!" என்று சொல்லிக் கொண்டு திரிப‌வ‌ர்க‌ளை வாய‌டைக்க‌ வைக்கும் நூல். 

 - ஜ‌ன‌நாய‌க‌ம் என்றால் ப‌ல‌ க‌ட்சி தேர்த‌ல் ந‌ட‌க்கும் முறை என்று 19ம் நூற்றாண்டில் யாருமே க‌ன‌வு கூட‌க் க‌ண்டிருக்க‌வில்லை. உண்மையில், ஐரோப்பாவில் அன்றிருந்த‌ ஜ‌ன‌நாய‌க‌ம் என்ப‌து பாராளும‌ன்ற‌ அமைப்பைக் குறிக்கும். அது தொழில‌திப‌ர்க‌ள், ம‌ற்றும் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ அறிவுஜீவிக‌ளின் பிர‌திநிதித்துவ‌த்தை கொண்டிருந்த‌து. 

 - பிரெஞ்சுப் புர‌ட்சிக்கு பின்ன‌ர் பிரான்ஸ் முற்றிலும் மாறுப‌ட்ட‌ நாடாக‌ இருந்த‌து. பூர்ஷுவா (முத‌லாளிய‌ வ‌ர்க்க‌ம்) புர‌ட்சியாள‌ர்க‌ளின் நாட்டுக்கு எதிராக, ம‌ன்ன‌ராட்சி ந‌ட‌ந்த‌‌ நாடுக‌ளான‌ பிரித்தானியா, ஜேர்ம‌னி, ஸ்பெயின், பியேமொன்த் (இத்தாலி) எல்லாம் போரிட்டு வ‌ந்த‌ன‌. ம‌திநுட்ப‌ம் வாய்ந்த‌ த‌ள‌ப‌தி நெப்போலிய‌னின் ப‌டைக‌ள் எதிர்ப்பை முறிய‌டித்தன‌. 

 - ஐரோப்பாவுட‌ன் ம‌ட்டும் நில்லாது, ஆங்கிலேய‌ கால‌னிய‌ மேலாதிக்க‌த்தை முறிய‌டித்து, வெற்றிக‌ர‌மாக‌ எகிப்து மீது ப‌டையெடுத்து, அதை கால‌னியாக்கி விட்டு திரும்பிய‌ நெப்போலிய‌னுக்கு பிரான்ஸில் ம‌க‌த்தான‌ வ‌ர‌வேற்பு அளிக்க‌ப் ப‌ட்ட‌து. 

 - த‌லைந‌க‌ர் பாரிஸ் வ‌ந்த‌ நெப்போலிய‌ன், பாராளும‌ன்ற‌த்தில் த‌ன‌க்கு விசுவாச‌மான‌வ‌ர்க‌ளை சேர்த்துக் கொண்டு ச‌திப்புர‌ட்சி ந‌ட‌த்தினான். அத‌னால் ஜ‌ன‌நாய‌க‌ம் (அதாவ‌து: பாராளும‌ன்ற‌ம்) ந‌சுக்க‌ப் ப‌ட்டு நெப்போலிய‌னின் ச‌ர்வாதிகார‌ ஆட்சி உருவான‌து. 

 - இந்த‌ ச‌திப்புர‌ட்சி ந‌ட‌ந்த‌ தின‌ம் 18 ம் தேதி, புருமேர் (அக்டோப‌ர் அல்ல‌து ந‌வ‌ம்ப‌ர்?) VIII ம் ஆண்டு. பிரெஞ்சுப் புர‌ட்சிக்குப் பின்ன‌ர் புதிய‌ க‌ல‌ண்ட‌ர் அறிமுக‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்டிருந்த‌து. (அதே மாதிரி, பிற்கால‌த்தில் க‌ம்போடியாவில் க்மெர் ரூஜ் ஒரு புதிய கலண்டர் கொண்டு வந்தனர்) புதிய‌ க‌ல‌ண்ட‌ர் பிரெஞ்சுப் புர‌ட்சியில் இருந்து ஆர‌ம்பித்த‌து. மாத‌ங்க‌ளின் பெய‌ர்க‌ளும் மாற்ற‌ப் ப‌ட்ட‌ன‌. 

 - ஆக‌வே, அன்றிருந்த‌ பிரெஞ்சுப் புர‌ட்சிக் க‌ல‌ண்ட‌ர் ப‌டி, நெப்போலிய‌னின் ச‌திப்புர‌ட்சி ந‌ட‌ந்த‌ தின‌ம் 18 ம் தேதி, புருமேர் மாத‌த்தில் ஆகும். புருமேர் என்ற‌ சொல்லுக்கு பிரெஞ்சு மொழியில் மூடுப‌னி என்று அர்த்த‌ம் உள்ள‌து. அன்று பிரான்ஸ் அர‌சிய‌ல் நில‌வ‌ர‌மும் மூடுப‌னியாக‌த் தான் இருந்த‌து. அர‌ச‌ ம‌ட்ட‌த்தில் என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்று தெரியாம‌ல் ம‌ர்ம‌மாக‌ இருந்த‌து. 

 - ஆக‌வே, கார்ல் மார்க்ஸ் ஒரு கார‌ண‌த்தோடு தான் த‌ன‌து க‌ட்டுரைக்கு 18ம் புருமேர் என்று த‌லைப்பிட்டிருக்கிறார். ஐரோப்பாவில், அன்றைய‌ கால‌க‌ட்ட‌த்தில் வாழ்ந்த‌வ‌ர்க‌ளுக்கு அத‌ன் அர்த்த‌ம் புரிந்திருக்கும். 

 - கார்ல் மார்க்ஸ் எழுதிய‌ நூல் இன்னொரு வித‌த்திலும் முக்கிய‌த்துவ‌ம் பெறுகின்ற‌து. பிரான்ஸில் நெப்போலிய‌னின் ச‌ர்வாதிகார‌ ஆட்சி உருவான‌ அதே பாணியில் தான், ஜேர்ம‌னியில் ஹிட்ல‌ரின் ச‌ர்வாதிகார‌மும் வ‌ந்த‌து. நிக‌ழ்வுக‌ளும், கார‌ண‌ங்க‌ளும் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரே மாதிரி அமைந்துள்ள‌ன‌. 

 - "வ‌ர‌லாறு திரும்புகிற‌து. ஒரு த‌ர‌ம் துய‌ர‌மாக‌வும், ம‌று த‌ர‌ம் வேடிக்கையாக‌வும்." எனும் மார்க்ஸின் பிர‌ப‌லமான‌‌ கூற்றும் அந்த‌ நூலில் தான் இட‌ம்பெற்றுள்ள‌து. 

 - எவ்வாறு ஒரு நாட்டில் உள்ள‌ முத‌லாளித்துவ‌ - ஜ‌ன‌நாய‌க‌ம், குறிப்பிட்ட‌ ஒரு க‌ட்ட‌த்தில் முத‌லாளித்துவ‌ - பாஸிச‌மாக‌ மாற்ற‌ம‌டைகின்ற‌து என்ப‌தை விள‌க்குகிற‌து. மார்க்ஸ் 19ம் நூற்றாண்டில் எழுதிய‌து, 21ம் நூற்றாண்டுக்கும் பொருந்துகிற‌து. இப்போதும் ப‌ல‌ர் ஜ‌ன‌நாய‌க‌ம் குறித்த‌ ம‌ய‌க்க‌த்தில் உள்ள‌ன‌ர். அந்த‌ ம‌ய‌க்க‌த்தை தெளிய‌ வைக்க‌ இந்த‌ நூல் உத‌வும்.

Tuesday, April 27, 2021

தடுப்பூசி வணிகம் திருட்டு முதலாளித்துவம்

 - கொரோனவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட ஆரம்ப கால கட்டத்தில், கண்டுபிடித்த பின்னர் அது பொதுச் சொத்து ஆக்கப்பட வேண்டும் என பல உலக நாடுகளை சேர்ந்த அரசியல்வாதிகள் ஒரே குரலில் சொன்னார்கள்.

- பல நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் தமது அறிவுச் செல்வத்தை பகிர்ந்து கொள்ள முன்வந்தார்கள். - ஆனால் எல்லோரும் வக்சீன் ஆராய்ச்சி ஒப்பந்தத்தில் சிறிய எழுத்துகளில் எழுதப்பட்ட ஒரு நிபந்தனையை காணத் தவறிவிட்டார்கள்.

- ஆராய்ச்சிக்கு நிதி வழங்குவது தொடர்பாக அரசுக்களுக்கும், மருந்துக் கம்பனிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப் பட்ட ஒப்பந்தம் அது.

- அதில் எந்த இடத்திலும் பேட்டன்ட் உரிமையை அல்லது தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொள்வது தொடர்பாக எழுதப்படவில்லை.

- பொது மக்களின் வரிப்பணத்தில் இருந்து நிதியுதவி அளிக்கப்பட்ட ஒரு திட்டமானது, ஒரு கட்டத்தில் திடீரென சில வணிக நிறுவனங்களுக்கு சொந்தமான வணிகப் பொருளாக மாறியது. அது எப்படி சாத்தியமாகிற்று?

- பெரும் தொற்று ஒன்றை அணைகட்டி தடுக்கும் நோக்கில் அரசமைப்பு சட்டம் வழங்கிய மனித உரிமைகள் குறைக்கப் பட்டன. பல கோடிக் கணக்கான மனிதர்களின் இயக்கம் இடைநிறுத்தப் பட்டது. ஆனால் வணிக நிறுவனங்கள் இலாபம் சம்பாதிப்பது மட்டும் எல்லையற்று தொடர்ந்தது.

வக்சீன் தயாரிப்பதற்கான திட்டத்தில் பொது மக்களின் பணத்தை முதலிடும் அரசுகள், அது குறித்து நிபந்தனைகள் போட்டிருக்க வேண்டும். செய்யவில்லை!

வக்சீன் உற்பத்தியாளர்கள் தமது அறிவுடைமையையும், தொழில்நுட்பத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்க வேண்டும்.

-ஐரோப்பிய ஒன்றியத்தின் இணையத்தளத்தில் இந்த அறிவிப்பு உள்ளது. ஆனால் அதை அன்பான வேண்டுகோளாக மட்டும் எழுதி இருக்கிறார்கள்.

"தயவுசெய்து நட்பு அடிப்படையில் வக்சீனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..." -இது ஒரு உத்தரவாக இருந்திருக்க வேண்டும். இப்படி கெஞ்சிக் கொண்டிருக்க கூடாது.

- வக்சீன் அறிவுடைமையை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் ஒரு வருடத்திற்கு முன்னர் உலக சுகாதார நிறுவனம் ஒரு பொதுத் தளத்தை உருவாக்கிக் கொடுத்தது.

- ஆனால் இன்று வரையில் எந்தவொரு மருந்துக் கம்பனியும் வக்சீன் தொடர்பான தமது அறிவுடைமையை அந்தப் பொதுத் தளத்தில் பகிர்ந்து கொள்ள முன்வரவில்லை!

- ஏன் அரசுகள் கடுமையான நிபந்தனைகளை விதிக்கவில்லை?

- வக்சீன் தயாரிப்பு செலவுகளை மக்களின் வரிப்பணத்தில் இருந்து எடுக்கலாம் என்றால், ஏன் அதை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் பகிர்ந்து கொள்ளக் கூடாது?

- அரசுகள் பிற்காலத்தில் வரப்போகும் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல், எடுத்த உடனே ஏராளமான பணத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அது எந்தளவு தவறு என்பதை இப்போது உணர்கிறார்கள். காலங் கடந்த ஞானம்.

- பெருந்தொற்று எல்லா இடங்களிலும் பரவப் போகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அதனால் அரசுகள் சிறந்த முறையில் தயார்படுத்தி இருக்க வேண்டும். எந்தளவு தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யலாம் என்று திட்டமிட்டிருக்க வேண்டும். எப்படி, எந்த நிபந்தனையின் கீழ் நிதி வழங்க வேண்டும் என்ற தெளிவு இருந்திருக்க வேண்டும். அது எதுவும் இல்லாமல் பின்விளைவுகளை பற்றி சிந்திக்காமல் அரசுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

- அதனால் 2021 ம் ஆண்டு ஏப்ரல் மத இறுதிப் பகுதியிலும் உலகம் முழுவதும் அனைத்து மக்களுக்கும் கொடுப்பதற்கு எந்தளவு வக்சீன்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற விபரம் யாருக்கும் தெரியாது.

- ஏற்கனவே சில மருந்துக் கம்பனிகள் தம்மிடம் தொழிநுட்ப அறிவைக் கொடுத்தால் மேலதிக வக்சீன்கள் உற்பத்தி செய்து தருவதற்கு சம்ம்மதித்துள்ளன. ஆனால், அவர்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. மேற்கத்திய மருந்துக் கம்பனிகள் தமது அறிவுடைமையை பகிர்ந்து கொள்ள மறுக்கின்றன. சிலர் இதை மருந்து மாபியா என்று சொல்கிறார்கள்.

- உலக மக்கள் அனைவருக்கும் மிக விரைவாக தடுப்பூசி போடுவதைக் காட்டிலும், இலாபம் சம்பாதிப்பது மாத்திரம் இந்த மருந்து நிறுவங்களுக்கு முக்கியமாகப் படுகின்றது.

பெருமளவு நிதியை முதலிடாமல் எந்தவொரு கண்டுபிடிப்பும் வெளியில் வருவதில்லை. இதனை இரண்டு வழிகளில் செய்யலாம்:

- நாம் எல்லோரும் ஒரு பெரிய விலை கொடுக்க தயாராக இருக்க வேண்டும். ஆனால் அது உலகில் ஒரு குறிப்பிட்ட மருந்துக் கம்பனியின் ஏகபோக அதிகாரத்திற்கு வழிசமைத்து விடும்.

- இதற்கு மாற்று வழி என்ன? கண்டுபிடிப்புக்கான ஆய்வுகளில் முதலிடும் அரசு, அதற்குப் பின்னரான உற்பத்தி, விற்பனை, விநியோகத்தையும் தானே கட்டுப்படுத்த வேண்டும். இதைத் தான் ரஷ்ய, சீன, கியூப, வியட்நாமிய அரசுகள் செய்துள்ளன. அந்நாட்டு அரசுகள் பெருமளவு நிதியை செலவிட்ட அளவுக்கு, பெருந்தொகையிலான வக்சீன்கள் தயாரிக்கப் படுகின்றன.

பிற்குறிப்பு: இது யூடியூப் வீடியோவாக பதிவேற்றப் பட்டுள்ளது:

 

Sunday, April 18, 2021

செக்கோஸ்லாவாக்கியா பிரிந்தது ஏன்? தேசியவாதம் ஒரு கற்பிதம்!

 


உலகில் சில தேசிய இனங்கள் தேசியவாதிகளால் உருவாக்கப் பட்டுள்ளன. எது தனித்துவமான மொழி, எது கிளை மொழி என்பதில் இன்றைக்கும் மொழியியல் அறிஞர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து கிடையாது.

பல நாடுகளில் தேசியவாதிகள் தான் தேசிய இனத்தை உருவாக்குகிறார்கள். இது அரசியல். என்னவென்று புரிந்து கொள்ள முடியாது. செர்பியருக்கும், குரோவாசியருக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது? வேறு நிறமா? வேறு பண்பாடா? வேறு மொழிகளா? இல்லை. ஆனாலும் ஒருவரை ஒருவர் கண்டால் இரத்தம் குடிக்கும் அளவிற்கு வெறுப்புக் காட்டினார்கள். பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிர்களைக் குடித்த போர்களை நடத்தினார்கள்.

ஆப்பிரிக்காவில் இன்னொரு உதாரணம்: ருவாண்டா. டுட்சி இனத்திற்கும், ஹூட்டு இனத்திற்கும் இடையில் என்ன வித்தியாசம்? எதுவும் இல்லை. அதே மாதிரி எத்தியோப்பியா - எரித்திரியா போர்.

இரண்டு நாடுகளிலும் ஒரே மொழிகளைப் பேசுகிறார்கள். ஆனாலும் நீண்ட காலம் எதிரிகளாக யுத்தம் செய்தார்கள். ஒரே இனச் சகோதர்களை கொன்று குவித்தார்கள். எதற்காக?

அது தான் தேசியவாதம். உங்களால் மட்டுமல்ல, யாராலும் காரணம் கண்டுபிடிக்க முடியாது. யாராலும் புரிந்து கொள்ள முடியாது. ஏதாவதொரு சின்ன வித்தியாசத்தை வைத்துக் கொண்டு தேசியவாதம் பேசுவார்கள். இது "இனப்" பிரச்சினை அல்ல. முழுக்க முழுக்க அரசியல் பிரச்சினை.

19ம் நூற்றாண்டில் முத‌லாளித்துவ‌த்தின் வ‌ள‌ர்ச்சியுட‌ன் பேரின‌வாத‌ அர‌சுக்க‌ள் தோன்றின‌. அத‌ற்கு முன்ன‌ர் அந்த‌ப் பிர‌ச்சினை இருக்க‌வில்லை. வ‌ள‌ங்களுக்கான‌ போட்டியில் பிற‌ இன‌ங்க‌ளின் மீது போர் தொடுப்ப‌தும் அட‌க்குவ‌தும் ந‌ட‌ந்து கொண்டிருக்கும். அவ‌ற்றை பிரித்தாலும் (உதார‌ண‌ம்: கொசோவோ) அது இன்னொரு மேலாதிக்க‌ அர‌சினால் (இந்த‌ இட‌த்தில் : அமெரிக்கா) அட‌க்க‌ப் ப‌டும். ச‌ட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்த‌ மாதிரி.

தேசியவாதிகளின் அரசியல் செல்வாக்கை குறைக்க வேண்டுமானால், அவர்கள் கேட்கும் தனி நாட்டை பிரித்துக் கொடுத்து விடுவது சிறந்த வழி. இருபது வருடங்களுக்கு முன்னர், தமிழீழம் கிடைத்திருந்தால், இன்று தமிழ் தேசியவாதிகள் காணாமல் போயிருப்பார்கள்.

ஒரு கால‌த்தில் செக், ஸ்லாவாக்கியா இர‌ண்டாக‌ப் பிரிக்கப் ப‌ட்ட‌ன‌. பின்ன‌ர் அவை ஐரோப்பிய‌ ஒன்றிய‌த்தால் உள்வாங்க‌ப் ப‌ட்ட‌ன‌. இப்போது சில‌ நாடுக‌ள் ஐரோப்பிய‌ ஒன்றிய‌த்தில் இருந்து வில‌க‌ப் பார்க்கின்ற‌ன‌. எத‌ற்காக‌?

உலகில் பல நாடுகளில் நடந்த தேசிய இன விடுதலைப் போராட்டங்கள், அதனை உறுதிப் படுத்துகின்றன. உதாரணத்திற்கு, செக்கோஸ்லோவாக்கியா என்ற நாடு, செக் மற்றும் ஸ்லோவாக்கியா குடியரசுகள் என்று பிரிந்த வரலாற்றை எடுத்துப் பார்ப்போம்.

செக் மொழிக்கும், ஸ்லோவாக்கிய மொழிக்கும் இடையில் என்ன வேறுபாடு? ஒன்றுமேயில்லை. சில நூறு சொற்களைத் தவிர, வேறெந்த வித்தியாசமும் இல்லை. வீம்புக்கு ஒரே மாதிரியான சொற்களை, வேறு எழுத்தை பாவித்து எழுதுகிறார்கள். (வேறு மொழி என்று காட்ட வேண்டுமாம்.)

அதே மாதிரி, ஈழத் தமிழையும் வித்தியாசமாக எழுதலாம். ஏற்கனவே அப்படித் தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். "T" என்ற ஒலிக்கு, ஈழத் தமிழில் "ரி" என்று எழுதுவார்கள். இந்தியத் தமிழில் "டி" என்று எழுதுவார்கள். அது போதும், ஈழத் தமிழ் மொழி தனித்துவமானது, ஈழத் தமிழர்கள் தனியான தேசிய இனம் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்து விடலாம். அதே தான், ஸ்லோவாக்கியாவில் நடந்தது. (மசிடோனியா, குரோவாசியா போன்ற பல தேசியவாத இயக்கங்கள் அப்படித் தான் ஆரம்பமாகின.)

செக்கோஸ்லோவாக்கியாவில் கம்யூனிச ஆட்சி முடிவுக்கு வந்ததும், செக், ஸ்லோவாக்கிய தேசியவாதிகளின் செல்வாக்கு உயர்ந்தது. செக்கியர்களின் தேசியத் தலைவர் Václav Klaus, ஸ்லோவாக்கியர்களின் தேசியத் தலைவர் Vladimír Mečiar, இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு தான், செக்கோஸ்லோவாக்கிய பிரிவினை. (ஒரு காலத்தில், இருவரையும் கம்யூனிஸ்டுகள் போட்டு உதைத்ததால், கடுப்பில் இருந்திருப்பார்கள் போலும்.)

உண்மையில் பெருமளவு மக்கள் அதனை ஆதரிக்கவில்லை. இரண்டு பக்கமும் முப்பத்தைந்து சதவீதமானோர் மட்டுமே ஆதரித்தார்கள். நீண்ட காலம் குடும்பம் நடத்திய கணவனும், மனைவியும் விவாகரத்து செய்வதைப் போல நாட்டை பிரித்தார்கள். அரசு உடைமைகள், இராணுவ உபகரணங்கள், ரயில் பாதைகள் எல்லாம் மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பிரிக்கப் பட்டன. ஏனென்றால், செக் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையாகவும், ஸ்லோவாக்கிய மக்கள், மூன்றில் ஒரு சிறுபான்மையாகவும் இருந்தனர்.

இரண்டு தேசியங்களும், தங்களுக்கென்று தனியான கொடிகள், தேசிய கீதங்கள், கடவுச்சீட்டு, நாணயம் என்றெல்லாம் உருவாக்கினார்கள். இதற்காக கோடிக் கணக்கில் செலவிட்டார்கள். இரண்டு நாடுகளுக்கு நடுவில், எல்லை போட்டு காவலர்களை நிறுத்தி வைத்தார்கள். செக்கியர்களும், ஸ்லோவாக்கியர்களும், "இனிமேல் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ முடியாது," என்று சொல்லி பிரிந்து சென்றார்கள்.

பிரிந்து வாழ்ந்து சில வருடங்கள் ஆகவில்லை. நேட்டோ கூட்டமைப்பில் இரண்டு நாடுகளும் சேர்ந்து கொண்டன. அதனால், பிரிந்த இராணுவம் மீண்டும் ஒன்றாக சேர்ந்தது. இன்னொரு பக்கத்தில், ஐரோப்பிய ஒன்றியமும் ஆள் சேர்த்துக் கொண்டிருந்தது. அதிலே இரண்டு நாடுகளும் சமர்த்துப் பிள்ளைகளாக சேர்ந்து விட்டன. ஐரோப்பிய ஒன்றியம் கேட்ட படி, செங்கன் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்கள்.

அதற்குப் பின் என்ன நடந்தது? இரண்டு நாடுகளுக்கு நடுவில் இருந்த எல்லைக் கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டன. இப்போது இரண்டு நாட்டு பிரஜைகளும் பாஸ்போர்ட் இல்லாமல், சுதந்திரமாக போய் வரலாம். ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகள் என்பதால், ஒரு நாட்டின் பிரஜை மற்ற நாட்டில் வாழவும், வேலை செய்யவும், வர்த்தகம் செய்யவும் பூரண சுதந்திரம் பெற்றவராகிறார்.

வருங்காலத்தில் யூரோ வந்தால், ஒரே நாணயம் புழக்கத்தில் இருக்கும். (ஏற்கனவே ஸ்லோவாக்கியா யூரோ பயன்படுத்துகிறது.) தற்போது, செக் குடியரசும், ஸ்லோவாக்கிய குடியரசும், நடைமுறையில் ஒரே நாடாக உள்ளன. ஆனால், பெயருக்கு இரண்டு அரசாங்கங்கள் இருக்கின்றன. இது எப்படி இருக்கிறது என்றால், விவாகரத்து பெற்று சென்ற கணவனும், மனைவியும் பின்னர் ஒரே வீட்டில் வாழ்வதைப் போன்றுள்ளது.

உலகில் உள்ள எல்லா நாட்டு மக்களையும் போலத் தான், செக்கோஸ்வாக்கிய மக்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. பெரும்பான்மை மக்களுக்கு, அவர்களது குடும்பப் பொறுப்புகள், வேலை, பணம், இவை மட்டுமே முக்கியமானவை. அவர்களிடம் சென்று, "எதற்காக ஸ்லோவாக்கியா பிரிந்தது?" என்று கேட்டு விடாதீர்கள். பெரும்பான்மை மக்களுக்கு அதற்குப் பதில் தெரியாது.