Thursday, December 31, 2009

இஸ்ரேல் - ஈரான் போர் மூளுமா? விரிவான அலசல்

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் அணு உலைகளை தாக்குவதற்கு இஸ்ரேல் இரகசிய திட்டம் தீட்டியுள்ளது. இஸ்ரேலின் விமானப்படைக்கு சொந்தமான இரு தாக்குதல் விமானங்கள் வீரியம் குறைந்த அணுகுண்டுகளை போடுவதற்கு தயாராகி வருகின்றன. இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜப்பானில் அணு குண்டுகள் போடப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர், முதலாவது அணுவாயுதப் போர் இதுவாக இருக்கும். ஈரான் மீதான தாக்குதல், இஸ்லாமிய நாடுகளில் கொந்தளிப்பை தோற்றுவிக்கலாம். வளைகுடா எண்ணெய் விநியோகம் தடைப்படலாம். இது போன்ற காரணங்களால் அமெரிக்கா தாக்குதலுக்கு அனுமதியளிக்கவில்லை. அவ்வாறு இஸ்ரேல்-ஈரான் போர் மூளுமாயின், அதன் காரணிகள் என்ன? ஈரானின் அணு உலைத் திட்டங்கள், இஸ்ரேலின் எதிர்ப்புக்கான காரணங்கள், போன்ற பூகோள அரசியலை ஆராயும் விறுவிறுப்பான ஆவணப்படம் இது.


Part 01

part 02

part 03

part 04

part 05

part 06

Wednesday, December 30, 2009

உலகம் அறியாத இஸ்லாமிய ஈரானின் மறுபக்கம்

"இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், ஈரானை இருண்ட மத்திய காலத்தில் வைத்திருப்பதாக" ஊடகங்கள் நமது காதில் முழம் முழமாக பூச்சுற்றுகின்றன. ஈரானிய இளைஞர்கள் ஆடம்பர அமெரிக்க கலாச்சாரத்திற்கு அடிமையானவர்கள். பாரிசிலும், லண்டனிலும் காணும் அதே கடைத்தெருக்கள் தெஹ்ரான் நகரை அலங்கரிக்கின்றன. இஸ்லாமியப் புரட்சி படித்த மத்தியதர வர்க்கத்தை தோற்றுவித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களில் 60 % பெண்கள். நிறுவனங்களைக் கூட பெண்கள் சிறப்பாக நிர்வகிக்கிறார்கள். ஈரான் ஒளிர்கிறது! முதலாளித்துவ பொருளாதாரத்தின் வெற்றிகரமான சாதனை அது. இருப்பினும் ஈரானுக்கு இன்னொரு இருண்ட பக்கம் இருக்கிறது. குழந்தைத் தொழிலாளரை சுரண்டும் தொழிலகங்கள். பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் தடைச் சட்டம் போடத் தயங்கும் அரசு. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான துரதிர்ஷ்டசாலிகள். நாடு முழுவதும் இரண்டு மில்லியன் போதை அடிமைகள் இருப்பதாக அரசே கூறுகின்றது. கணக்கில் வராதது இன்னும் பல மடங்கு. இது இஸ்லாமிய ஈரானின் இன்னொரு முகம். சமூக ஏற்றத்தாழ்வுக்கு காரணமான முதலாளித்துவ கொடுங்கோலாட்சியை இஸ்லாம் திரையிட்டு மறைக்கின்றது. இது தான் இன்றைய ஈரான்.

Monday, December 28, 2009

ஜனநாயக நாடுகள் திணிக்கும் சர்வாதிகாரம்

("போர்க்களமான புனித பூமி" - பாலஸ்தீன தொடரின் ஆறாம் பகுதி)
மறைந்த தலைவர் யாசீர் அரபாத் காலத்தில் இருந்தே பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட போராளிகளுக்கிடையே சகோதரச் சண்டை நடைபெற்று வந்துள்ளது. அரபாத்தின் ஃபதா இயக்கம் பெருந்தொகையான உறுப்பினர்களையும் நிதிவளங்களையும் கொண்டிருந்ததால் பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்ற அகிம்சாவழியில் இயங்கிய உதவி நிறுவனத்தைக் கைப்பற்றி முழு பாலஸ்தீனர்களுக்குமான பிரதிநதிகளாகத் தம்மை நிலை நிறுத்திக் கொண்டனர். பிற விடுதலை இயக்கங்கள் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் அளவில் சிறியதாக இருந்ததால் ஃபதாவின் தலைமையின் கீழ் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினுள் (PடO) உள் வாங்கப்பட்டனர். இந்த நிறுவனமயமாக்கலுக்குள் வர மறுத்தவர்கள் வேட்டையாடப்பட்டு ஒழிக்கப்பட்டனர்.

பாலஸ்தீன விடுதலையை மொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட ஃபதா இஸ்ரேலுடன் சமரசப் போக்கையே நாடியது. அதாவது, உண்மையான இறுதி இலக்கு பாலஸ்தீனம் என்ற தனிநாடு அல்ல. இஸ்ரேலுக்குள் சுயநிர்ணய உரிமைகளைக் கொண்ட சுயாட்சிப் பிரதேசம். அரபாத்தின் சமரசப் போக்கை பல சுயாதீனப் பத்திரிகையாளர்கள் ஏற்கனவே அம்பலப்படுத்தி உள்ளனர்; இஸ்ரேலிய அரசுக்குத்தான் இதனைப் புரிந்துகொள்ள நீண்டகாலம் எடுத்தது
அல்லது பாலஸ்தீன தேசியவாதம் என்ற சித்தாந்தமே தனது இருப்புக்கு ஆபத்து என்று அஞ்சியதால் PடO வை பலவீனப்படுத்தும் நோக்கோடு இஸ்லாமிய மத அடிப்படைவாத HAMAS சிற்கு மறைமுக ஆதரவு அளித்தது. அதாவது விடுதலைப் போராட்டத்தினுள் மதத்தைப் புகுத்துவதன்மூலம் கிறிஸ்தவ மற்றும் மதச்சார்பற்ற பாலஸ்தீனர்களை அந்நியப்படுத்திப் பார்த்தது. அந்த நோக்கம் கணிசமானளவு வெற்றி பெற்றுள்ளதைக் கண்கூடாகக் காணலாம்.

சமாதான ஒப்பந்தத்தின் பிரகாரம் பாலஸ்தீன அதிகாரசபை அமைக்கப்பட்ட பின்னர் கூட யாசீர் அரபாத் இஸ்ரேலிடம் எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கவில்லை. குறிப்பாக, அயல்நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் பாலஸ்தீன அகதிகளின் நாடு திரும்புவதற்கான உரிமையை அரபாத் வலியுறுத்தி வந்தார். இஸ்ரேலோ அந்த உரிமையை மறுத்தது. அதை ஏற்றுக்கொள்ளும் பாலஸ்தீனத் தலைமையை விரும்பியது. அதற்கு ஏற்ற ஆளாகத் தற்போது அப்பாஸ் கிடைத்துள்ளார். அரபாத் எப்போது சாவார் என்று இஸ்ரேல் மட்டுமல்லாது அப்பாஸ் போன்ற ஃபதா தலைவர்களும் எதிர்பார்த்ததை, “தனது கணவனை உயிரோடு குழியில் போட்டு மூட காத்திருப்பதாக” அரபாத்தின் மனைவி கூறுமளவுக்கு வெளிப்படையாகத் தெரிந்தது. பாலஸ்தீனப் பிரதேசங்களின் ஜனாதிபதியாக அப்பாஸ் தெரிவானதும் இனித்தான் நினைத்தபடி ஆட்டுவிக்கலாம் என்று இஸ்ரேலும் பெருமூச்சு விட்டது. ஆனால், HAMAS வடிவில் வந்தது சோதனை.

பாலஸ்தீன அதிகாரசபை நிறுவப்பட்டு செயல்படத் தொடங்கியபிறகுதான் ஃபதா எதற்காக இவ்வளவு தூரம் இறங்கி வந்தது என்பது மக்களுக்குப் புரிந்தது. அரசாங்கம் மட்டுமல்லாது அரசு சார்ந்த நிறுவனங்களிலெல்லாம் ஃபதா ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் நண்பர்கள் வர்த்தக நிறுவனங்களை ஸ்தாபித்தனர். வர்த்தகர்கள் கொடுத்த லஞ்சத்தில் அரசு அதிகாரிகள் கொழுத்தனர். இதனால் மொத்த அதிகார சபையும் ஊழல் மயமாகி, சாதாரண பொது மக்களை வறுமைக்குள் தள்ளியது. மக்களின் உள்ளக் குமுறலை வாக்குகளாக மாற்றிக் கொண்ட HAMAS பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. இதில் அதிசயம் என்னவென்றால் ஃபதாவின் ஊழலாட்சி நடந்தபோது கண்ணை மூடிக்கொண்டிருந்த சர்வதேச சமூகம், HAMAS அமைத்த புதிய அரசாங்கம் இயங்கவிடாமல் தடுத்தது. பாலஸ்தீன அதிகார சபைக்கு வழங்கிக் கொண்டிருந்த நிதியுதவிகளை ரத்து செய்தது. பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து வரும் வரித்தொகையை இஸ்ரேலுக்குத் திருப்பிக் கொடுக்க மறுத்தது.

இதனால் பாலஸ்தீன அரசாங்கத்திற்கு எந்த ஒரு வருமானமும் இல்லாமல் போக அரச நிறுவனங்களில் தொழில் புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் போனது. மாதக் கணக்காக வழங்கப்படாத சம்பளத்தைக் கேட்டு அரச ஊழியர்கள் போராடியபோது HAMAS சிடம் போய் வாங்குமாறு கூறி விரட்டியது ஃபதா. உண்மையில் தொழிலாளர்களின் கஷ்டத்தை ஃபதா தனது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொண்டது. பாடசாலை ஆசிரியர்களை வேலைநிறுத்தம் செய்யுமாறும் HAMAS அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுமாறும் தூண்டியது. ஏ.கே.47 சகிதம் சென்ற பொலிசார், HAMAS அரச அலுவலகங்களுக்குள் நுழைந்து நாசம் விளைவித்தனர். தெருக்களில் (ஃபதா ஆதரவு) பொலிஸ்காரர்கள் ஆயுதமேந்திய HAMAS உறுப்பினர்களை வலுச்சண்டைக்கு இழுத்தனர். இது ஃபதா - HAMAS இடையிலான சகோதர யுத்தமாகப் பரிணமித்தது.

பாலஸ்தீனத்தினுள் உண்மையில் என்ன நடக்கிறது? அங்கே ஒரு சதிப் புரட்சிக்கு ஒத்திகை பார்க்கப் படுகின்றது! அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் ஆகிய பாலஸ்தீன விவகாரங்களில் செல்வாக்குச் செலுத்தும் சக்திகள் ஃபதா போன்று தம்மோடு ஒத்துழைக்கக் கூடியவர்களையே எவ்வழியிலும் ஆட்சியிலிருத்த விரும்புகின்றனர். பெரும்பான்மை மக்கள் HAMAS போன்ற எதிர்க்கட்சிகளைத் தெரிவு செய்தாலும் அந்த ஜனநாயகத்திற்கு மதிப்புக் கொடுப்பதில்லை. இருப்பினும் ஃபதா நண்பர்களுக்கு பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாவிட்டால், வேறுவழியில்லாமல் சதிப்புரட்சி மூலம் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதற்கான அடிப்படையை உருவாக்கும் பொருட்டு HAMAS ஆட்சி மக்களுக்கு பொருளாதாரக் கஷ்டங்களையும் கலவரங்களையும் இன்னபிற இன்னல்களையும் மட்டுமே கொடுக்க முடியும் என்ற கருத்து திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது.

இறுதியில் தனது கையாலாகாத்தனத்தை உணர்ந்த HAMAS அரசாங்கம் மக்கள் நலன் கருதி பதவி துறக்கவும் ஃபதாவுடன் தேசிய ஐக்கிய முன்னணிக்கு உடன்பட்டதையிட்டு நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம். HAMAS அரசாங்கத்தை இயங்கவிடாமல் தடுக்கும் பொருட்டு ஏற்கனவே இஸ்ரேலிய படைகள் HAMAS அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பயங்கரவாதத் தொடர்பு குற்றம் சாட்டி சிறையில் அடைத்தும், அது போதாதென்று மீதமிருந்த HAMAS அரச அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், வாகனங்கள் யாவும் ஃபதா குண்டர்களால் தாக்கி நாசமாக்கப்பட்டன. அவ்வதிகாரிகளுக்கு கொலைப் பயமுறுத்தல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதைவிட, ஒருமுறை பாப்பரசர் முஸ்லிம்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து பிரச்சினை எழுந்த காலத்தில், சில பாலஸ்தீன கிறிஸ்தவ தேவாலயங்கள் இனந்தெரியாதவர்களால் தீயிடப்பட்டன. அந்த இனந்தெரியாதவர்கள் ஃபதா குண்டர்களாக இருக்கலாம் என்றும் கிறிஸ்தவர்களை HAMAS சிற்கு எதிராகத் திருப்பிவிடும் நோக்கோடு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

இதற்கிடையில் மிக இரகசியமாகப் பல திட்டங்கள் தீட்டப்படுகின்றன. பாலஸ்தீன அதிகாரமையம் இருக்கும் 'ரமலா' நகரம் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்படுகின்றது. அந் நகரத்தில் பாராளுமன்றம், அமைச்சுகள் ஆகியவற்றோடு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் பாலஸ்தீன மத்தியதர வர்க்கத்தின் வசிப்பிடங்களும் அமைந்துள்ளன. சுருக்கமாக, வசதி படைத்தவர்கள் மட்டும் வாழும் நகரத்தில் ஆடம்பரப் பொருட்களை விற்கும் விற்பனை நிலையங்கள் உள்ளன. ரமலாவிற்கு சிறிது தூரத்தில் இரகசியமான இடத்தில் ஜனாதிபதி அப்பாஸிற்கு விசுவாசமான சிறப்புப் பாதுகாப்புப்படை முகாமிட்டுள்ளது. இந்த முகாமில் அமெரிக்க, எகிப்து,ஜோர்தானிய இராணுவ ஆலோசகர்கள் பயிற்சியளிக்கின்றனர். இந்தச் சிறப்புப் படைக்கென மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து கொள்ள இஸ்ரேலும் அனுமதியளித்துள்ளது. இன்றைய நிலையில் HAMAS பல பின்னடைவுகளைச் சந்தித்தபோதும் அதன் பலம் குறையவில்லை. பல ஆயுதங்களை HAMAS இன்னமும் பயன்படுத்தாமல் பதுக்கி வைத்துள்ளது. இதனைக் கவனத்தில் எடுத்துத் தான் அப்பாஸின் சிறப்புப் பாதுகாப்புப் படைக்கு புதிய ஆயுதங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.


பாலஸ்தீனத் தொடரின் முன்னைய பதிவுகள்:
பகுதி 5: இஸ்ரேலின் தண்ணீர், பாலஸ்தீனரின் கண்ணீர்
பகுதி 4: ஜெருசலேம்: தீமைகளின் தலைநகரம்
பகுதி 3: இஸ்ரேலிய இராணுவத்தின் இரகசியங்கள்
பகுதி 2: தனி நாடு கண்ட யூதர்களும், தாயகம் இழந்த பாலஸ்தீனர்களும்

பகுதி 1: போர்க்களமான புனித பூமி


[உயிர்நிழல் (அக்டோபர்- டிசம்பர் 2006 ) சஞ்சிகையில் பிரசுரமானது.]

Sunday, December 27, 2009

இஸ்ரேலின் தண்ணீர், பாலஸ்தீனரின் கண்ணீர்

("போர்க்களமான புனித பூமி" - பாலஸ்தீன தொடரின் ஐந்தாம் பகுதி)
"மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால், அது வருங்காலத்தில் பல விரும்பத்தகாத விளைவுகளை உண்டாக்கும். குறிப்பாக அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படும்." இந்த எச்சரிக்கையை விடுத்தது, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நண்பனான சவூதி மன்னன் அப்துல்லா. அமெரிக்காவின் பிற கூட்டாளிகளான ஜோர்டான், பாஹ்ரைன் போன்ற நாடுகளும் இது போன்ற எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. இது வரை காலமும் அரபு நாடுகளில் இருந்து வரும் அமெரிக்க சார்பு மேட்டுக்குடியினரின் ஆட்சி அதிகாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 50 வருடங்களாக வளர்ந்த அரபு மத்திய தர வர்க்கம் ஆட்சியாளருக்கு சவாலாக கிளம்பியுள்ளது.

முன்பெல்லாம் அரபு நகரங்களில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் அரசால் ஒழுங்கமைக்கப்பட்டன. தற்போது பல்கலைக்கழக மாணவர்கள், அல்லது சமூக ஆர்வலர்கள் ஊர்வலங்களை ஒழுங்கு செய்கின்றனர். பொது ஜனங்களின் எழுச்சி வெறும் வாய்ப்பேச்சோடு நிற்காது செயலிலும் இறங்கியுள்ளது. முதற்படியாக அமெரிக்க பொருட்களை பகிஷ்கரிக்கும் இயக்கம் தோன்றியுள்ளது. இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவு, பொது மக்களை ஆத்திரமடைய வைத்துள்ளது. லெபனானில் கல்லூரி மாணவர்கள், அமெரிக்க பொருட்கள் எவை என்றும், அதற்கு மாற்றாக வாங்கக்கூடிய உள்ளூர் மற்றும் ஆசிய உற்பத்திப் பொருட்கள் எவை என்றும் பட்டியலிட்டுள்ளனர். இந்தப் பட்டியலை துண்டுப் பிரசுரமாக வீடு வீடாக விநியோகித்துள்ளனர். அரபு நாடுகள், சர்வதேச வர்த்தகத்தில் டாலரை புறக்கணித்து யூரோவுக்கு மாற வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

பொருளாதாரத் தாக்கம் இஸ்ரேலிலும் உணரப்படுகின்றது. பெரும் லாபமீட்டிய சுற்றுலாத் துறை, பயணிகளின் அச்சம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலியர் என்ன தான் வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும், தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பீதி, அவர்களை வீட்டுக்குள்ளே முடங்க வைத்தது. எதிர்காலம் கேள்விக்குறியான இஸ்ரேலியர்கள் அமெரிக்கா, அவுஸ்திரேலியா என்று சென்று குடியேறி வருகினறனர். பட்ஜெட்டில் பாதுகாப்பு செலவினம் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகின்றது. அதனால் வரி அதிகரிப்பு, மானிய வெட்டு என்பன யூத உழைக்கும் மக்களை பாதிக்கின்றன.

வெறும் பாலைவனத்தை, தாம் வளம் கொழிக்கும் பூமியாக மாற்றியதாக, யூதர்கள் பெருமையாக சொல்வார்கள். ஆனால் அதற்கு ஒரு விலை இருந்தது. தண்ணீர். வறண்ட நிலத்தை பண்படுத்த பிரமாண்டமான நீர்ப்பாசன திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. நாள்தோறும் வந்து குடியேறிக் கொண்டிருக்கும் யூதர்கள், இன்று ஆறு மில்லியனாக பல்கிப் பெருகி விட்டனர். பெரும்பாலும் வறண்ட நிலங்களைக் கொண்ட இஸ்ரேல், ஆறு மில்லியன் ஜீவன்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியாமல் தடுமாறுகின்றது. அதற்கு தீர்வு? அரபுக்களின் தண்ணீரை திருடுவது!
1967 யுத்தம் கூட, தண்ணீர் தேடி நடந்ததாக கருதப்படுகின்றது. இந்த யுத்தத்தின் பின்னர் இரு முக்கியமான நீர் நிலைகள் இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்டன. பாலஸ்தீன மேற்குக்கரையை சேர்ந்த ஜோர்டான் நதி, சிரியாவுக்கு சொந்தமான நன்னீர் ஊற்றுகளைக் கொண்ட கோலான் குன்றுகள். இவற்றில் இருந்து உறிஞ்சப்படும் தண்ணீர் இன்று மூன்றில் ஒரு பங்கு தேவையை பூர்த்தி செய்கின்றது. இஸ்ரேலியப் படைகள் தென் லெபனானை 20 வருடங்களாக ஆக்கிரமித்திருந்தன. அதற்குக் காரணமும் தண்ணீர்க் களவு. லெபனானின் வற்றாத லித்தானி நதி, வட இஸ்ரேலியரின் தேவையை பூர்த்தி செய்தது. இந்த தண்ணீர் எல்லாம் பகற்கொள்ளை மூலம் பெறப்படுவதால், யூதர்களுக்கு குறைந்த செலவில் விற்க முடிகின்றது. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் திருடுவது, சர்வதேச சட்டங்களுக்கு முரணானது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் தண்ணீர்க் கொள்ளையை நிரந்தரமாக்கும் பொருட்டு, திட்டமிட்ட யூதக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஜெருசலேமில் இருந்து ஜெரிக்கோ வரை, அதாவது ஜோர்டான் நதிக்கரையோரம் நூற்றுக்கணக்கான யூதக் குடியிருப்புகள் காணப்படுகின்றன. எல்லைப்புற யூத குடியேற்றங்களை அப்படியே விட்டு விடும் படி, அரபாத்திடம் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது. நோர்வே அனுசரணையிலான சமாதான ஒப்பந்தம், ஒரு நாளும் சுதந்திர பாலஸ்தீனத்தை சாத்தியமாக்கியிருக்காது. அது ஏன் என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

"மேகொரோட்" என்ற இஸ்ரேலிய கம்பெனி தான், யூதர்களின் வீடுகளுக்கு மட்டுமல்ல, பாலஸ்தீன வீடுகளுக்கும் நீர் விநியோகம் செய்கின்றது. ஒரு நாளைக்கு, ஒரு சராசரி யூதர் 350 லீட்டர் தண்ணீரைப் பெறுகின்றார். அதே நேரம், சராசரி பாலஸ்தீனர் பெறுவதோ வெறும் 70 லீட்டர் தான்! உலக சுகாதாரக் கழகத்தின் அளவீட்டின் படி, ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 100 லீட்டர் தண்ணீர் தேவை. கோடை காலங்களில், நீர் நிலைகள் வறண்டு, தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் போது, பாலஸ்தீன வீடுகளுக்கான விநியோகம் நாட்கணக்காக நிறுத்தப்படும். குடிப்பதற்காகவும், சமைப்பதற்காகவும் பாலஸ்தீனியர்கள் பக்கத்து வீடுகளில் தண்ணீர் கடன் வாங்குவார்கள். அப்போதெல்லாம் யூதக் குடியேற்றங்களில் நீச்சல் குளங்கள் நிரம்பி வழியும்.

பாலஸ்தீனப் பகுதிகளில் கிணறு தோண்டுவதற்கு கூட, இஸ்ரேலிய அரசிடம் அனுமதி பெற வேண்டும். யூதக் குடியேறிகளின் அட்டகாசம் குடிநீரையும் விட்டு வைப்பதில்லை. பாலஸ்தீனர்களின் கிணறுகளில் குப்பை கொட்டி நீரை அசுத்தமாக்குவது, குடிநீர் கொண்டு செல்லும் 'பௌசரை' வழிமறித்து, நீரை நிலத்தில் கொட்டி பாழாக்குவது. இப்படி பல அட்டூழியங்கள் வெளியே தெரிய வருவதில்லை. இஸ்ரேலிய படையும் தன் பங்குக்கு தண்ணீர்க் குழாய்களை உடைத்து நாசப்படுத்துகின்றது.
ஒஸ்லோ ஒப்பந்தத்தின் பிரகாரம் நீர் நிலைகள் பாலஸ்தீன அதிகார சபையின் கைகளுக்கு சென்று விடும் என்ற அச்சம் காரணமாக, மீண்டும் யுத்தம் ஏற்பட்டதாக வதந்திகள் உலாவுகின்றன. எது எப்படி இருப்பினும், அபரிதமான நீர்ப் பாவனையால் ஜோர்டான் நதி வற்றி வருகின்றது. கோலான் குன்றுகளின் நீரூற்றுகளும் ஒரு நாள் வற்றிவிடலாம். மறுபுறம் இஸ்ரேலிய/பாலஸ்தீன சனத்தொகை பெருகி வருகின்றது. அவர்களின் தேவைக்கேற்ற நீர் வளம் குறைந்து வருகின்றது. நிலைமை இப்படியே போனால், இன்னும் 50 வருடங்களில் அந்தப் பிராந்தியம் வறண்ட பாலைவனமாகி விடும். அப்போது இந்த புனித பூமிக்காக சண்டை போட யாரும் இருக்க மாட்டார்கள்.

பாலஸ்தீனத் தொடரின் முன்னைய பதிவுகள்:


பகுதி 4: ஜெருசலேம்: தீமைகளின் தலைநகரம்
பகுதி 3: இஸ்ரேலிய இராணுவத்தின் இரகசியங்கள்

(உயிர் நிழல் (ஏப்ரல்-யூன் 2002 ) சஞ்சிகையில் பிரசுரமானது. சில திருத்தங்களுடன் வலையேற்றம் செய்யப்படுகின்றது.)

Saturday, December 26, 2009

ஜெருசலேம்: தீமைகளின் தலைநகரம்

"ஜெருசலேம் சூழ்ச்சியினதும், அடக்குமுறையினதும் நகரம். ஊற்றிலிருந்து நீர் பெருகுவது போல அதன் தீச்செயல்கள் ஓய்வதில்லை. வன்முறை, வன்கொடுமை பற்றி மட்டுமே கேள்விப்படுகிறேன். மதகுருமார், தீர்க்கதரிசிகள் எல்லோரும் ஏமாற்றுகிறார்கள். எனது மக்களின் நோய்களை குணப்படுத்துவதாக அவர்கள் கூறுகிறார்கள். "எல்லாம் நல்லபடியாக நடக்கும்... எல்லாம் நல்லபடியாக நடக்கும்..." ஆனால் எதுவுமே நன்றாக வருவதில்லை. அவர்கள் தமது கேட்ட காரியங்களுக்காக வெட்கப்படுகிறார்களா? இல்லை. அவர்கள் சிறிதளவேனும் வெட்கப்படுவதில்லை. வெட்கம் என்றால் என்னவென்றே அவர்களுக்கு தெரியாது." (ஜெரேமியா, அத்தியாயம் 6:6-7,13 ,15 , பழைய ஏற்பாடு, பைபிள்)

யூதர், இஸ்லாமியர் ஆகிய இரு மதத்தவர்களும் ஜெருசலேம் எமக்கே சொந்தம் என்று சண்டை பிடிக்கிறார்கள். தொலைக்காட்சியிலும், வானொலியிலும் அன்றாடம் சொல்லப்படுவதை நாம் உண்மை என்று நம்புகின்றோம். டேவிட் மன்னனால் கட்டப்பட்ட ஆலயமும், முறையிடும் சுவரும் யூதருக்கு புனிதமானவை. முகமது நபி அவர்கள் சொர்க்கத்திற்கு சென்றதாக சொல்லப்படும் இடத்தில் கட்டப்பட்ட அல் அக்சா மசூதி முஸ்லிம்களுக்கு புனிதமானது. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த இடம் இருப்பதால், கிறிஸ்தவர்களுக்கும் ஜெருசலேம் புனிதமானது.

பண்டைய கால வரலாற்றில், யூதர்களும்,முஸ்லிம்களும், ஒரு போதும் ஜெருசலேமுக்காக சண்டையிட்டதில்லை. அது இரு மதத்தவருக்கும் சொந்தமான நகரமாக இருந்தது. ரோமர்கள் ஆட்சியில், யூதர்கள் ஜெருசலேமில் வசிக்க தடை விதித்திருந்தனர். அரேபியாவில் இருந்து படையெடுத்து வந்த முஸ்லிம்கள், பாலஸ்தீனத்தை கைப்பற்றிய பின்னரே யூதர்கள் ஜெருசலேமில் குடியேறும் உரிமை கிடைக்கப் பெற்றனர். பிற்காலத்தில் ஐரோப்பாவில் இருந்து படையெடுத்து வந்த சிலுவைப்போர் படைகளை, முஸ்லிம்களுடன், யூதரும் எதிர்த்து போராடினார்கள். ஜெருசலேமை கைப்பற்றிய கிறிஸ்தவ படைகள், முஸ்லிம்களோடு, யூதர்களையும் கொன்று குவித்தனர். மதச் சுத்திகரிப்பு செய்தனர். இஸ்லாமிய படைகள் ஜெருசலேமை விடுவித்த பின்னர் தான் யூதர்களுக்கும் சுதந்திரம் கிடைத்தது.

தற்கால ஜெருசலேம் சர்வதேச நிர்வாகத்தின் கீழ் வர வேண்டுமென, 1947 ல் ஐ.நா.சபை தீர்மானித்தது. 1948 அரபு-இஸ்ரேல் யுத்தத்தில், மேற்கு ஜெருசலேமை யூதப் படைகள் கைப்பற்றின. எஞ்சிய கிழக்கு ஜெருசலேமும், அதோடு அண்டிய மேற்குக்கரை பிரதேசமும் ஜோர்டானின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1967 யுத்தத்தில் அந்தப் பகுதியும் இஸ்ரேல் வசமாகியது. அதன் பின்னர் பாலஸ்தீனர் வாழ்ந்த கிழக்கு ஜெருசலேமையும் இணைத்து, ஒரே ஜெருசலேமாக இஸ்ரேலின் தலைநகரமாகியது.

அபிவிருத்தியடைந்த முதலாம் உலகத்தையும், பின்தங்கிய மூன்றாம் உலகத்தையும் ஒரே இடத்தில் பார்க்க விரும்பினால், நீங்கள் ஜெருசலேம் செல்ல வேண்டும். யூதர்கள் வாழும் மேற்கு ஜெருசலேம் பகுதி, மேற்கத்திய வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ளது. அதே நேரம் அரபுக்கள் வாழும் கிழக்கு ஜெருசலேம் கவனிப்பாரின்றி, அடிப்படை வசதிகள் கூட இன்றி காட்சியளிக்கின்றது. அங்கு வாழும் பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய அரசுக்கே வரி செலுத்திய போதும், அந்த வரிப்பணம் யூத-ஜெருசலேமின் அபிவிருத்திக்கே செலவிடப் படுகின்றது. நகர விஸ்தரிப்பு என்ற போர்வையின் கீழ், கிழக்கு ஜெருசலேமை சுற்றியுள்ள அரபு நிலங்கள் அபகரிக்கப்பட்டு, அங்கே யூதர்க்கான குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. ஆனால் பாலஸ்தீனர்கள் தமது சொந்தக் காணியில் வீடு கட்டினால் மட்டும், அனுமதியின்றி கட்டியதாக கூறி இடித்துத் தள்ளப்படுகின்றன.

புதிதாக வந்து சேரும், (பெயரில் மட்டுமே) யூதரான ரஷ்யர்களுக்கு கூட ஜெருசலேமில் குடியேற உரிமையுண்டு. அதே நேரம் பிற பாலஸ்தீன பகுதிகளில் இருந்து வரும் அரபுக்களுக்கு அந்த நகரத்தில் வசிக்கும் உரிமை கூடக் கிடையாது. யாராவது ஜெருசலேமில் இருக்கும் உறவுக்காரரை பார்க்க விரும்பினால், அதற்கென விசேஷ பாஸ் எடுக்க வேண்டும். காலங்காலமாக ஜெருசலேம் நகரில் வசித்து வரும் பாலஸ்தீனர்கள் வந்தேறுகுடிகளாக கருதப்பட்டு, கால வரையறை கொண்ட வதிவிட அனுமதிப் பத்திரம் வழங்கப்படுகின்றது. நோர்வே அனுசரணையின் நிமித்தம் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தம் கூட ஜெருசலேமை மீட்டுத் தராது எனக் கண்டனர். இதனால் இரண்டாவது இன்டிபதா என அழைக்கப்பட்ட மக்கள் எழுச்சி ஜெருசலேமில் ஆரம்பமாகியதில் ஆச்சரியமில்லை.

இஸ்ரேல் தன்னை ஒரு ஜனநாயக நாடாக வெளி உலகுக்கு காட்டிக் கொள்கின்றது. ஆனால் இந்த ஜனநாயகம் யூதர்களுக்கு மட்டுமே. 1948 சுதந்திரப் பிரகடனத்தின் போது, இஸ்ரேலிய எல்லைக்குள் வசித்த பாலஸ்தீனர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர்களை பாலஸ்தீனர்கள் என்று அழைப்பதில்லை. மாறாக "இஸ்ரேலிய அரபுக்கள்" என்ற நாமம் சூட்டப்பட்டுள்ளது. 1967 யுத்தத்தின் பின்னர், ஜோர்டானிடம் இருந்து மேற்குக்கரையும், எகிப்திடம் இருந்து காஸாவும் கைப்பற்றி ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தப் பகுதிகளை சேர்ந்த பாலஸ்தீனர்களுக்கு குடியுரிமை வழங்க இஸ்ரேல் முன்வரவில்லை. அதனால் அவர்கள் "நாடற்றவர்கள்" (எந்த நாட்டிற்கும் சொந்தமில்லாதவர்கள்.) ஆனார்கள். இன்று சுமார் மூன்று மில்லியன் பாலஸ்தீனர்கள் நாடற்றவராக எந்த உரிமையுமின்றி வாழ்கின்றனர். நாடற்றவர்கள் என்பதால் அவர்களுக்கு பாஸ்போர்ட் கிடையாது. அதனால் வெளிநாட்டுப் பயணத்தை நினைத்துப் பார்க்கவும் முடியாது.

இஸ்ரேல், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை, காசா பகுதிகளை "விவாதிக்கப்பட வேண்டிய பகுதிகள்" எனக் கூறுகின்றது. செவ்வியந்தியரின் நிலங்களுக்களை பறித்தெடுத்த ஐரோப்பியர்கள் இன்று அமெரிக்காவுக்கு சொந்தாடுகின்றனர். அதே போல, களவாடப்பட்ட பாலஸ்தீன நிலங்களில் அத்துமீறிக் குடியேறியவர்கள், அந்த நிலங்கள் தமது என உரிமை கொண்டாடுகின்றனர். "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எமது மூதாதையர் இந்த மண்ணில் வாழ்ந்தார்கள். இது எமக்கு ஆண்டவரால் அருளப்பட்ட பூமி." என்று பைபிளில் இருந்து மேற்கோள் காட்டுகின்றனர். பாலஸ்தீனர்கள் தமது ஆரஞ்சு பழத் தோட்டங்களை, விவசாய நிலங்களை யூத குடியேற்றக்காரரிடம் பறி கொடுத்தனர். இன்று தமது சொந்த நிலத்திலேயே கூலியாட்களாக வேலை செய்யும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் ஐ.நா.சபையோ, அல்லது அமெரிக்காவோ, யாராயினும் பாலஸ்தீனியரின் மண் மீதான உரிமையை மீட்டுத் தரவில்லை.

அமெரிக்காவில் செவ்விந்திய பழங்குடிகள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் மட்டுமே வாழ்கின்றனர். அது போல பாலஸ்தீன மக்களின் குடியிருப்புகள், யூதக் கடலுக்குள் தனித்த தீவுகளாக காட்சி தருகின்றன. நிறவெறி தென்னாபிரிக்காவில் இருந்தது போல, விசேஷ பாஸ் நடைகுறை மூலம் அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுகின்றது. இருப்பினும் அவர்கள் யூத முதலாளிகளிடம் வேலை செய்து விட்டு வர தடையில்லை. இதனால் இஸ்ரேலிய வர்த்தக நிறுவனங்கள், அல்லது யூத கமக்காரர்கள் பாலஸ்தீன வேலையாட்களுக்கு குறைந்த கூலி கொடுத்து சுரண்ட முடிகின்றது. சில முதலாளிகள் கூலியை ஒழுங்காக கொடுப்பதில்லை. சக்கையாக பிழிந்து வேலை வாங்கி விட்டு, நான்கு மாத சம்பளப் பணத்தை கொடுக்காமல் கம்பி நீட்டுபவர்களும் உண்டு. பாலஸ்தீன தொழிலாளர்கள் தொழிற்சங்கம் வைத்துக் கொள்ள உரிமை இல்லை. இஸ்ரேலிய அரச நிறுவனங்கள் மட்டிலுமே நான்கில் ஒரு பங்கு பாலஸ்தீன தொழிலாளரை பயன்படுத்திக் கொள்கின்றன. மூலதனத்திற்கும், தேசிய இனப்பிரச்சினைக்கும் இடையிலான சிக்கலான உறவை விளக்கும் ஒரு சிறு உதாரணம் இது. சுதந்திர பாலஸ்தீன தேசம் உருவானாலும், இஸ்ரேலின் பொருளாதார அடிமையாக தொடர்ந்து இருக்க வேண்டி வரும்.

இஸ்ரேலில் நிலவும் இனப்பாகுபாட்டுக் கொள்கையை எந்தவொரு மேற்குலக அரசியல்வாதியும் கண்டிக்கத் துணிவதில்லை. ஏனெனில் இஸ்ரேலியரை இனவெறியர்கள் என்று கூறினால், தம்மீது "யூத விரோதி" என்ற பட்டம் சூட்டப்படும் என்று தெரியும். ஐரோப்பாவில் ஒரு முறை, "ஹோலோகோஸ்ட் என்ற யூத இனவழிப்பில் பலியான அப்பாவிகளின் பெயரை பயன்படுத்தி இஸ்ரேலிய ஆளும் வர்க்கம் பணம் கறந்து வருவதாக" ஒரு நூல் வெளியானது. அந்த நூலை எழுதியவர் ஒரு ஐரோப்பிய யூதர். ஆகவே அவர் மீது "இனத் துரோகி" முத்திரை குத்தப்பட்டது. "அகண்ட இஸ்ரேல்" அமைக்கும் கொள்கையை இஸ்ரேலிய அரசு கைவிட்டு விட்டதா என தெரியவில்லை. எத்தனை வருடம் போனாலும் பாலஸ்தீனிய பகுதிகளை இஸ்ரேலுக்கு சொந்தமாக்கும் முயற்சியை அரசு கைவிடவில்லை. "பாலஸ்தீனப் பகுதி" ஊடகங்களில் மட்டுமே உயிர்வாழ்கின்றது. இஸ்ரேலிய பாடப் புத்தகங்களில் எங்குமே அதைப் பற்றிய குறிப்பு இல்லை. இதனால் பெரும்பான்மையான இஸ்ரேலியர்கள் "பாலஸ்தீனமா? அது எங்கே இருக்கின்றது?" எனக் கேட்பதில் வியப்பில்லை.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்ந்து வரும் பாலஸ்தீன மக்களுக்கு தமது நிலை நன்றாக தெரியும். கடந்த கால யுத்தங்களின் போது அகதிகளாக இடம்பெயர்ந்து அயல்நாடுகளுக்கு ஓடிய முட்டாள்தனத்தை தற்போது நொந்து கொள்கின்றனர். இன்று எதிர்த்துப் போராடுவது அல்லது மடிவது என்று துணிந்து விட்டனர். என்ன தான் மதவாதச் சாயம் பூசினாலும், ஜெருசலேமை மையப்படுத்திய போராட்டம் ஒரு தேசிய விடுதலைப் போராட்டமேயாகும். ஜெருசலேமை தலைநகராக கொண்ட பாலஸ்தீனம் உருவாகப் போவதில்லை. அதே நேரம் ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராக நிலைத்து நிற்கப் போவதுமில்லை.

இதனால் சமாதான ஆர்வலர்களும், இடதுசாரிகளும், புதிய வகை "செமிட்டிக் குடியரசு" ஒன்றை முன் மொழிகின்றனர். அரபுக்களும், யூதரும் செமிட்டிக் இனத்தவர்கள் என்பதால் அது புதிய தேசிய அடையாளத்தை உருவாக்கும். ஆனால் யூத/இஸ்லாமிய/கிறிஸ்தவ மத அடையாளங்களற்ற சிவில் சமூகம். அதில் இஸ்ரேலியரும் பாலஸ்தீனரும் சம உரிமைகளுடன் பங்குபற்றலாம். நாடற்ற பாலஸ்தீனர்களுக்கு வாக்குரிமை இல்லையென்பது இவ்விடத்தே நினைவுகூரத்தக்கது. அமெரிக்காவில் நடந்த கறுப்பர்களின் சமூகநீதிப் போராட்டத்தை அடியொற்றி, "ஒரு மனிதன், ஒரு ஓட்டு" கோரிக்கைக்கு ஆதரவு திரட்டப்பட்டு வருகின்றது. இஸ்ரேலில், பாலஸ்தீன பகுதிகளையும் உள்ளடக்கிய, பொதுத் தேர்தல் நடத்தப்படுமா? ஜனநாயக அடிப்படையில், அனைவருக்கும் (நாடற்ற பாலஸ்தீனருக்கும்) வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுமா? அப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்தால், அங்கே இஸ்ரேல் என்ற தேசம் இருக்காது. ஆனால் அது பாலஸ்தீனக் குடியரசாகவும் மாறாது.

(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:


(உயிர் நிழல் (ஏப்ரல்-யூன் 2002 ) சஞ்சிகையில் பிரசுரமானது. சில திருத்தங்களுடன் வலையேற்றம் செய்யப்படுகின்றது.)