Saturday, June 13, 2009

தமிழீழ விடலைகளின் தறுதலைக் கூட்டணி


"Boys", இது ஒரு சினிமாப் படத்தின் கதையல்ல. ஈழ விடுதலை காண புறப்பட்ட ஆயுதமேந்திய அமைப்புகள், அவற்றின் ஆதரவுத் தளமான சாதாரண இளைஞர்களின் கதை இது. அப்போதெல்லாம் போராளிகளாக மாறிய இளைஞர்களை, மக்கள் "பெடியங்கள்" (boys) என்று செல்லமாக அழைக்கத் தொடங்கியிருந்தார்கள். அப்போது இது ஏதோ எமது மண்ணிற்கே உரித்தான சொல் என்று தான் நம்பிக் கொண்டிருந்தேன். இராணுவ வீரர்களையும் boys என்று அழைக்கும் கலாச்சாரம் உலகம் முழுவதும் இருப்பதை காலம் தாமதித்து தான் புரிந்து கொண்டேன். எது எப்படியிருப்பினும், போராளிகள் தமது பிள்ளைகள் என்ற உணர்வோடு "பெடியங்கள்" என்று அழைப்பது எப்படியோ எமது பேச்சு வழக்கிலும் புகுந்து கொண்டது.

1983 கொழும்பில் இடம்பெற்ற தமிழர் விரோத கலவரமானது, வட இலங்கையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்திய காலத்தில் இந்த கதை நகர்கிறது. அதுவரை நடந்த கலவரங்களில் பெரியது என்பதால் யாழ் குடாநாட்டிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில், பாதுகாப்புப் படையினர் சந்தேகப்பட்ட இளைஞர்களை எல்லாம் கைது செய்து தென்னிலங்கைச் சிறைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

ஏற்கனவே யாழ் நகரிற்கு அருகில் 13 இராணுவவீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் கலவரம் வெடிக்க காரணமாக அமைந்தது. பெருந் தொகையில் இராணுவத்தினர் கொல்லப்பட்டதும் அதுவே முதல் முறை. கலவரத்தின் பின் விளைவாக இலங்கை அரசியலில் மூக்கை நுழைக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்த இந்திய மத்திய அரசு, போராளிக் குழுக்களுக்கு இராணுவ பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கிக் கொண்டிருந்தது. பல்வேறு போராளிக் குழுக்களும், இந்திய நிதியுதவியை பயன்படுத்தி புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டிருந்தனர்.

ஆரம்ப காலங்களில், பலர் இயக்கங்களின் கொள்கை வேறுபாடுகளை பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. அனைத்தையும் ஈழ விடுதலைக்கு அர்ப்பணித்த சகோதர இயக்கங்களாக கருதினார்கள். பாடசாலையில் எம்மோடு படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் பலர் ஏதாவதொரு இயக்கத்தினால் கவரப் பட்டு போய் சேர்ந்து கொண்டிருந்தார்கள். ஒழுங்காக வகுப்பிற்கு வருபவர்கள் திடீரென காணாமல் போவார்கள்.

அவ்வாறு "காணாமல் போனவர்கள்" எல்லோரும் இந்தியாவிற்கு பயிற்சிக்கு போய் விட்டார்கள் என்பது பொதுவான அபிப்பிராயம். அன்று நாடு முழுவதும் தமிழரின் உணர்வுபூர்வமான விடுதலை வேட்கை இருந்த போதிலும், விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட மாணவர்கள் சிறு தொகையினர் தான். பெரும்பான்மையான பதின்ம வயது இளைஞர்கள் தமது படிப்பை பல தடைகளுக்கு மத்தியிலும் தொடர்ந்தனர்.

யாழ்ப்பாணவாசிகள் மத்தியில் மத்தியதர வர்க்க மனோபாவம் சற்று அதிகமாகவே மேலோங்கி காணப்படும். பெற்றோர்கள் பொது இடங்களில் தமிழீழப் போராட்டத்தில் இளைஞர்களின் அளப்பரிய அர்ப்பணிப்பு பற்றி புகழ்ந்து பேசுவார்கள். ஆனால் தனது வீட்டில் இருக்கும் பதின்ம வயது மகன் இயக்கத்திற்கு போய் விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்.
"தனது மகன் தறுதலையாக திரிந்தாலும் பரவாயில்லை. விடுதலைக்குப் போகக் கூடாது" என்பதில் பெற்றோர்கள் குறியாக இருந்தார்கள். எல்லோரும் போராடப் போய் விட்டால் மற்ற தொழில்களை யார் பார்ப்பது, என்று ஒரு "தேசாபிமானக் காரணம்" ஒன்றை சொல்வதற்கு தயாராகவே வைத்திருப்பார்கள். இருந்தாலும் போராடப் போகாமல் வீட்டிலே தங்கி விட்ட எமக்கு சொல்வதற்கு வேறொரு காரணம் இருந்தது. "எல்லாப் பையன்களும் இயக்கத்திற்குப் போய் விட்டால், ஊரில் இருக்கும் திருமணமாகாத பெண்களை யார் சைட் அடிப்பது?"

ஆகவே பெரியோர்களே! தேச நலன் கருதி ஊரில் எஞ்சிய விடலைப் பையன்கள் எல்லாம் சேர்ந்து ஒரு இயக்கம் ஆரம்பித்தோம். "தமிழீழ விடலைகளின் தறுதலைக் கூட்டணி “ என்று எமக்கு நாமே பெயர் சூட்டிக் கொண்டோம். நாம் எதை சாதித்தோம் என்று சாதாரணமாகக் கேட்டு விடக் கூடாது. எமது நண்பர்கள் யாராவது இயக்கத்தில் சேர்ந்து, இந்தியா பயிற்சிக்கு செல்ல திட்டமிட்டால் அதற்கு எமது உதவியை நாடுவார்கள். நாமும் வானரப் படையாக செயல்பட்டு, நண்பரின் உடைகள், உடமைகளை பெற்றோருக்கு சந்தேகம் ஏற்படாதபடி கொண்டு சென்று கொடுப்போம். (எந்தப் பையனாவது பயணப் பொதியை தயாராக வைத்திருந்தால் வீட்டில் சந்தேகப் பட மாட்டார்களா?) சில நேரம் சம்பந்தப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் வந்து கூட்டிச் செல்லும் வரை பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்போம். நண்பர் எந்த இயக்கத்தில் சேருகிறேன் என்ற தகவலை மட்டும் வழங்கினால் போதுமானது. ஏனென்றால் "காணாமல் போகும்" நண்பரின் பெற்றோர் எம்மைத் தான் முதலில் தொடர்பு கொள்வார்கள்.

இப்படித்தான் ஒரு முறை எமது நண்பர் ஒருவர், எம்மிடம் சொல்லிக் கொள்ளாமலே காணாமல் போய் விட்டார். நண்பரின் தந்தை ஒரு பேராசிரியர். தனக்குத் தெரிந்த இயக்கங்களின் தலைவர்களை எல்லாம் தொடர்பு கொண்டு விசாரித்துப் பார்த்து விட்டார். எங்குமே தனது அருமைப் புதல்வன் போன சுவடு தெரியாததால், எம்மிடம் வந்து முறையிட்டார். பேராசிரியர் என்பதால், தனது மகன் ஒரு வேளை சி.ஐ.ஏ. அல்லது கே.ஜி.பி.யில் சேர்ந்து விட்டானோ? என்று சர்வதேச மட்டத்தில் சிந்தித்தார். என்ன இருந்தாலும் அன்று அவர் RAW மட்டத்திலும் விசாரித்திருக்கலாம். அன்று இருந்த ஈழ விடுதலை அமைப்புகளின் விபரங்கள் யாவும் RAW வசம் இருந்த விஷயம் அனைவரும் அறிந்ததல்லவா?

இந்தியாவிற்கு இராணுவப் பயிற்சிக்கு சென்றவர்கள் குறைந்தது ஆறு மாதம் கழித்தாவது திரும்பி வருவார்கள். ஊர் திரும்புபவர்கள் முதலில் தமது தாய், தந்தையரை பார்த்து விட்டு, எம்மோடும் பழைய நட்பை புதுப்பிப்பார்கள். இருப்பினும் எமது நட்பில் முன்னொருபோதும் இல்லாத வித்தியாசம் காணப்படும். இயக்க நண்பருக்கு புதிய தோழர்கள் தோன்றியிருப்பார்கள். எம்மை சந்திக்க வரும் போதும், அந்த புதிய தோழர்களை கூட்டிக் கொண்டு தான் வருவார்கள். அவர்களின் நடத்தையில் ஒரு வகை ஹீரோத் தனத்தை தரிசிப்போம். நாமும் அவர்களிடம் இருந்து சில "இயக்க ஸ்டைல்களை" கற்றுக் கொண்டோம்.

சிவில் நிர்வாகம் அரசாங்கத்தின் கையை விட்டகன்று, ஆயுத பாணி இயக்கங்களின் பொறுப்பில் வந்து கொண்டிருந்த காலம் அது. கட்டான உடல்வாகு கொண்ட வாலிபர்கள் என்றால், இயக்கப் பெடியங்களாக இருக்கும் என்று மக்கள் நினைத்தார்கள். எங்கு சென்றாலும் இயக்கப் பெடியங்களுக்கு முதல் மரியாதை வழங்கப் பட்டுக் கொண்டிருந்தது. சில நேரம் சாதாரண (தறுதலை) இளைஞர்களும் அந்த முதல் மரியாதைக்கு உரித்தானார்கள். எமது நண்பர் ஒருவர் விபத்துக்குள்ளாகி காயமடைந்த போது அவரை வைத்தியசாலைக்கு கொண்டு போக வேண்டியிருந்தது. சிறிய காயம் என்பதால் அரசாங்க வைத்தியசாலையில் நீண்ட வரிசையில் நின்று சிகிச்சை செய்ய வேண்டும். அதிர்ஷ்டவசமாக, மோட்டார் சைக்கிளில் நாம் சென்று இறங்கிய போது கிடைத்த மரியாதையே தனி. தாதிகள் வரிசையில் நின்ற அத்தனை பேரையும் விட்டு விட்டு நண்பரை விசேஷமாக கவனித்தார்கள்.

தொள தொளப்பான பெரிய சைஸ் சேர்ட் அணிந்து கொள்வதும், அன்று பெரும்பாலான விடலைப் பையன்களால் பின்பற்றப் பட்ட "இயக்க ஸ்டைல்". (இடுப்பில் சொருகியிருக்கும் கைத்துப்பாக்கியை மறைக்க வேண்டுமாம்.) சிலர் வீட்டில் இருக்கும் அப்பாவின் சேர்ட்டை தூக்கிப் போட்டுக் கொண்டு வருவார்கள். இயக்க ஸ்டைல் சேர்ட்கள் யாழ் குடா நாட்டில் புதிய பாஷனாகியது. துணி வியாபாரிகளும் இது தான் தருணம் என்று பெரிய சைஸ் சேர்ட் விற்பனை செய்து நல்ல லாபம் பார்த்தார்கள். "தமது இயக்க உறுப்பினர்களை அடையாளம் காண்பதற்காக பெரிய சைஸ் சேர்ட் அணியச் சொல்ல, அது தற்போது அனைவரும் அணியும் பாஷனாகி விட்டது", என்று ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத இயக்கப் பொறுப்பாளர் அங்கலாய்த்தார்.

விடலைகளின் கூட்டம் கூடுமிடம், அனேகமாக ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருக்கும் (நீர் வரண்ட ஆற்றின் மேல் கட்டப்பட்ட) மதகாக இருக்கும். மதகின் மேல் குந்தியிருந்து கொண்டு ஊரில் நடக்கும் வம்பு, வழக்கை எல்லாம் ஆராய்ந்து கொண்டிருப்போம். அங்கே வந்து கலந்து கொள்ளும் இயக்கத் தோழர்கள் சிலர், அரசியல் ஆய்வுகளையும் புகுத்துவார்கள். சில சமயம் அந்த வழியால் எமது நண்பரொருவரின் தந்தையார் வந்தால், நண்பர் மதகிற்கு கீழ் ஒளிந்து கொள்வார். இயக்கத் தோழர் இத்தகைய போலி மரியாதைகளை கண்டித்து ஒரு அரசியல் வகுப்பெடுப்பார். மேலைத்தேய நாடுகளில் காணப்படும் தனிநபர் உரிமைகளை அப்படியான தருணங்களில் தான் கற்றுக் கொள்வோம்.

இராணுவ, பொலிஸ் முகாம்கள் ஐந்து அல்லது பத்து கி.மீ. தூர இடைவெளியில் அமைந்திருந்தாலும், வீதிகளில் இராணுவ வாகனங்கள் அடிக்கடி ரோந்து சுற்றுவது வழக்கம். வீதியோரமாக இளைஞர்கள் சிறு குழுவாக திரண்டு இருந்தால் படையினருக்கு சந்தேகம் ஏற்படும். ஒரு முறை குழுவாக வீதியில் கூடியிருந்த எம்மை, தூரத்தில் வந்த இராணுவ ஜீப் வண்டி ஒன்று பார்த்து விட்டது. நாம் அந்த இடத்தில் "கண்ணி வெடி வைக்க சதி செய்வதாக" நினைத்தார்கள் போலும். எம்மை நோக்கி ஜீப் வண்டி ஓடி வருவதற்குள், குறுக்கு வீதிக்குள் இருக்கும் உறவினர் வீட்டிற்குள் நுழைந்து, சமர்த்துப் பிள்ளைகளாக அவரவர் வேலையை பார்த்துக் கொள்வதாக நடித்தோம்.

இந்திய இராணும் இருந்த காலத்தில் வீடு வீடாக சோதனையிட வருவார்கள். அப்போதெல்லாம் "ஸ்டுடென்ட்" என்று சொன்னால் விட்டு விடுவார்கள். ஒரு முறை சோதனை இட வந்த இந்திய சிப்பாய், எமது நண்பர் ஒருவரின் சட்டைப்பையில் சிகரட் பெட்டியை கண்டு விட்டான். ஸ்டுடென்ட் ஆக இருப்பவன் சிகரட் பிடிப்பானா? என்று அந்த சிப்பாய்க்கு ஒரே குழப்பம். சந்தேக நபராக இழுத்துச் சென்று விட்டார்கள்.

பஞ்சமா பாதகங்களில் சிகரட் பிடிப்பது, மது அருந்துவது போன்றவையும் அடங்கும் என்பது யாழ் வைதீக சமூகம் விதித்த கட்டுப்பாடுகள். அத்தகைய சமூகத்தில் உதித்த விடுதலை இயக்கங்களிலும் இது போன்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்ததில் ஆச்சரியமில்லை. பெந்தேகொஸ்தே கிறிஸ்தவ சபைகளில் சேர்ந்து ஞானஸ்நானம் பெற்றவர்கள், ஒரேயிரவில் கெட்ட பழக்கங்களை ஒழித்து, நன்மக்களாக பைபிளும் கையுமாக காட்சி தருவார்கள். அதுபோல இயக்கங்களில் சேர்ந்த நண்பர்களும் புதிய மனிதர்களாக மாறியிருப்பார்கள். பிஸ்டலும் கையுமாக வரும் இயக்க நண்பர்கள், விடுதலைக்கு அர்ப்பணித்த வாழ்க்கை பற்றி சில பிரமைகளையும் உருவாக்கி விட்டுச் செல்வார்கள்.

பெரும்பாலும் வலதுசாரி அரசியல் சார்ந்த இயக்கங்களில் தனிநபர் ஒழுக்க விதிகள் கறாராக பின்பற்றப்படும். அதற்கு மாறாக இடதுசாரி அரசியல் சார்ந்த இயக்கங்களில் நெகிழ்ச்சியான தன்மை காணப்படும். "ஈழப் புரட்சி அமைப்பு" என்றொரு இயக்கம் இருந்தது. அதன் உறுப்பினர்கள் தினசரி இயக்க செலவிலேயே சிகரட் புகைக்கும் பாக்கியம் பெற்றவர்கள். அதனால் அவர்களே தமது இயக்கத்திற்கு "ஈழப் புகைத்தல் அமைப்பு" என்று மாற்றுப் பெயர் ஒன்றையும் சூட்டியிருந்தனர்.

ஊரில் இருக்கும் பணக்கார மத்தியதர வர்க்க குடும்பங்கள் எல்லாம், தமது வீடுகளை விட்டு விட்டு பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் குடியேறி விட்டிருந்தனர். வீட்டுச் சொந்தக்காரர்கள், "ஆளரவமற்ற தமது வீட்டில் பேய் குடி புகுந்து விடும்" என்று நினைப்பார்கள் போலும். தமது வீட்டை பராமரிக்கும் படி உறவினரிடம் பொறுப்புக் கொடுத்து விட்டுத் தான் செல்வார்கள். ஊரில் எந்தெந்த வீடுகள் காலியாக இருக்கின்றன என்ற விபரமெல்லாம் எமது விடலைப் பசங்க கைவசம் இருக்கும். எமது துப்புக் கிடைத்தவுடன், ஏதாவதொரு இயக்கத்தின் உறுப்பினர்கள் அந்த வீட்டை உடைத்து, தமது முகாமாக அல்லது அலுவலகமாக மாற்றி விடுவார்கள். பிறகென்ன, வீட்டை பராமரிக்க பினாமியாக நியமிக்கப்பட்டவர், மதில் மேல் நீளும் இயந்திரத் துப்பாக்கியை பார்த்து மிரண்டு ஓடி விடுவார்.

பல இயக்கங்கள் இராணுவ மேலாதிக்கத்தை மக்களிடம் வெளிப்படுத்தும் முனைப்புக் கொண்டிருந்தன. எங்காவது மக்கள் குடியிருப்பின் மத்தியில் இயக்க முகாம் இருந்தால், அதைச் சுற்றி கெடுபிடிகள் காணப்படும். அதே நேரம், ஆளரவம் இருப்பதைக் காட்டிக் கொள்ளாத சில இயக்க முகாம்களும் இருந்தன. ஒருமுறை ஒரு கிராமத்தில் நடந்த திருமண விழாவிற்கு, பெண் வீட்டுக்காரர்கள் தறுதலையாக சுற்றும் விடலைப் பையன்களையும் அழைத்திருந்தனர்.

பெண் வீட்டுக்காரருக்கு ஏதோ தாங்கள் மெய்ப்பாதுகாவலர்களை வைத்துக் கொள்ளும் நினைப்பு. தொலை தூர ஊரில் இருக்கும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்து சேர இரவாகி விட்டது. சீர்வரிசைகளுடன் வீதியில் கலகலப்பாக சிரித்துப் பேசிக் கொண்டே வந்தார்கள். நமது தறுதலைப் பையன்கள் வீதியோர மாமரத்தில் ஏறி மறைந்திருந்தார்கள். "சத்தம் போடாமல் போகத் தெரியாதா?" என்று ஒரு அதட்டு அதட்டினார்கள். அவ்வளவு தான். "அருகில் எங்கோ இயக்க பெடியன்களின் முகாம் இருக்கிறது" என்ற நினைப்பில், அந்தக் குழு அமைதியாக நடையைக் கட்டியது.

விட்டேற்றியாக ஊர் சுற்றும் தமிழீழ விடலைகள், குறைந்த பட்சம் ஏதாவதொரு நல்ல காரியமாவது சமூகத்திற்கு செய்யவில்லையா? இயக்க அரசியலின் செல்வாக்கு காரணமாக, பல புதிய கருத்துகள் எமக்கு அறிமுகமாகின. புரட்சிகரக் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டதால், எமக்கு முந்திய தலைமுறையை விட முற்போக்கானவர்களாக இருந்தோம். வெட்டியாக ஊர் சுற்றினாலும் அவ்வப்போது சமூகத்திற்கு நலன் பயக்கும் செயல்களையும் செய்யத் தவறவில்லை.

ஈழப்போர் தீவிரமடைந்து வரும் நேரம், இலங்கை அரசு யாழ் குடாநாட்டின் மீது பொருளாதாரத்தடை விதித்தது. எமது வீடுகளில் உணவுப் பொருட்கள் முடிந்து கொண்டிருந்தன. கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. எமது ஊரில் அரசாங்க கட்டுப்பாட்டில் இயங்கிய பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் வாரக்கணக்காக பூட்டிக் கிடந்தது. ஒரு நாள் ஊரில் இருந்த இளைஞர் பட்டாளம், மக்களை அழைத்துச் சென்று கூட்டுறவுச் சங்கத்தை உடைத்தது. கடையில் இருந்த உணவுப் பொருட்களை மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தது.

ஈழத்தில் ஒரு கலாச்சாரப் புரட்சியை ஏற்படுத்த, குறைந்த பட்சம் ஏற்றத்தாழ்வான சமூகத்தை சீர்திருத்த வலதுசாரி ஆயுதபாணி இயக்கங்கள் முன்வரவில்லை. "தமிழீழ தேசியம் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான சர்வரோக நிவாரணி" என்று கூறி வந்தார்கள். ஒரு வலதுசாரி விடுதலை இயக்கம் தனது உத்தியோகபூர்வ பத்திரிகையில் பின்வருமாறு எழுதியது: "இலங்கையில் சிங்கள வர்க்கத்தின் மேலாதிக்க வெறி, தமிழ் வர்க்கத்தை ஒடுக்குகின்றது. இவ்விரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் வர்க்கப்போராட்டம் என அழைக்கப்படும்." நல்ல வேளை, வர்க்கப்போராட்டத்திற்கு தமிழ் தேசியவாதிகள் கொடுத்த விசித்திர விளக்கத்தை கேட்பதற்கு கார்ல் மார்க்ஸ் இன்று உயிருடன் இல்லை.

சாதிய சமூகமான யாழ் குடாநாட்டில், இயக்கங்களின் வருகைக்குப் பின்னர் மாற்றம் ஏற்பட்டது உண்மை தான். இருப்பினும் எந்தவொரு இயக்கமும் சமூகப் புரட்சியை தலைமை தாங்கி நடத்த முன்வரவில்லை. சாதிச் சண்டைகள் தமிழ் தேசியப் போராட்டத்தை பின்னடைவுக்கு உள்ளாக்கும் என்று சில இடதுசாரி இயக்கங்களும் நம்பின. இருப்பினும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தலித் மக்கள் சம உரிமையை தாமாகவே பெற்றுக் கொண்டார்கள். இதற்காக அவ்வப்போது சில அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இந்தப் போராட்டத்தையும் நம்மூர் ஊர் சுற்றும் பையன்கள் நடத்திக் காட்டினார்கள்.

ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டில் இருந்த கோயில் கிணற்றில் தலித் மக்கள் சென்று தண்ணீர் அள்ள ஊக்குவித்தது, போன்ற சில உதாரணங்களைக் குறிப்பிடலாம். இதற்கு முன்னர், இப்படியான சம்பவங்கள் நடந்தால் வன்முறையை ஏவிவிடும் ஆதிக்க சாதியினர் பேசாமல் ஒதுங்கிக் கொண்டார்கள். கணிசமான அளவு தலித் இளைஞர்களும் இயக்கங்களில் சேர்ந்திருந்ததால் அவர்கள் எதிர்வினையாற்ற அச்சமுற்றிருக்கலாம். அல்லது போராளிகளை திரட்டுவதற்கு, அடித்தட்டு வர்க்கமான தலித் சமூகம் தேவை என்ற காரியவாதம் காரணமாக இருக்கலாம்.

பொதுவாக சரித்திரம் சாமானியர்களைப் பற்றி எழுதப்படுவதில்லை. ஆனால் சாதாரண மக்கள் சரித்திரத்தை மாற்றும் சக்தி படைத்தவர்கள். "உதவாக்கரைகளாக ஊர்சுற்றும் தறுதலைகள்" என பட்டம் சூட்டப்பட்ட சாதாரண பையன்களும் ஈழ விடுதலைப் போரில் தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம். இது எங்களின் "Boys" கதை.

*********************************************************************

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

ஈழத்தின் கடிதத் தலைப்பு விடுதலை அமைப்புகள்

****************************************************************************

Thursday, June 11, 2009

ஈரானில் பகிரங்க தூக்குத் தண்டனை காட்சிகள்

ஈரான் அரசியல் கைதிகளுக்கு சன நெரிசல் மிக்க சாலைகளில் பகிரங்கமாக
தூக்குத் தண்டனை வழங்குவது ஒரு வழமையான நிகழ்ச்சி. இது குறித்த வீடியோ ஆவணங்கள் அரிதாகவே வெளியுலகை எட்டியுள்ளன. பல மனித உரிமை நிறுவனங்களின் கண்டனங்களையும் மீறி, அண்மையில் ஐந்து குர்திஷ் விடுதலைப் போராளிகள் தூக்கிலடப்பட்டனர். ஈரானில் சிறுபான்மை இனமான குர்தியரின் விடுதலைக்காக போராடும் PJAK (Party for Free Life in Kurdistan) என்ற இயக்க உறுப்பினர்களே இவ்வாறு பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டனர்.
Execution Sentence for a Kurdish Political Activist in Iran
ஈரானில் பாசிஸ மதவாத கொடுங்கோலாட்சியின் சாட்சியமாக இந்த வீடியோ உள்ளது. ( இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்)


Wednesday, June 10, 2009

ஈழத்தின் கடிதத் தலைப்பு விடுதலை அமைப்புகள்


1983 ம் ஆண்டு இனக்கலவரத்திற்கு பின்னரான காலகட்டம். யாழ் மாவட்டத்தில் புதிதாக வியாபாரம் தொடங்குவது போல, விடுதலை இயக்கம் தொடங்குவது "fashion" ஆகிப் போன காலகட்டம் அது. "கடிதத் தலைப்பு வர்த்தக ஸ்தாபனம்" போல, "துண்டுப் பிரசுர இயக்கங்கள்" பல தோன்றியிருந்தன. பஸ் தரிப்பு நிலையங்களில், சந்தைகளில், பாடசாலைகளில், அல்லது தெருக்களில் திடீரென தோன்றும் ஓரிரு இளைஞர்கள் சில நிமிஷங்களுக்குள் துண்டுப் பிரசுரங்களை கொடுத்து விட்டு மறைந்து விடுவார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு இயக்கத்திற்கு துண்டுப் பிரசுரம் விநியோகித்த அதே இளைஞர்கள், இன்னொரு நாள் வேறொரு இயக்கத்தின் பிரசுரங்களைக் கொடுப்பார்கள்.

ஒவ்வொரு பிரசுரத்திலும் "சிறி லங்காப் பேரினவாத அரசுக்கு எதிராக போராடி, தாம் சரியெனக் கருதும் பாதையில் ஈழம் கிடைக்கும்" என்று மக்களுக்கு கொள்கை விளக்கம் அளித்திருப்பார்கள். சாதாரண மக்களுக்கு இத்தனை இயக்கங்கள் எங்கேயிருந்து முளைக்கின்றன என்று குழப்பம். ஒரு காலத்தில், முப்பதுக்கும் மேற்பட்ட இயக்கங்கள் இயங்கி வருவதாக, யாழ் மத்திய பஸ் நிலையத்தில் போஸ்டர்கள் காணப்பட்டன. எல்லா இயக்கங்களும் "ஈழம்", "தமிழீழம்", "விடுதலை", "புரட்சி", "இயக்கம்", "முன்னணி" போன்ற வார்த்தைகளில் இருந்து பெயர் தெரிவு செய்திருந்தனர்.

இத்தனை இயக்கங்களுக்கும் தேவையான பணம் எங்கேயிருந்து வந்தது? ஆட்பலம், ஆயுதபலம் கொண்ட பெரிய இயக்கங்கள் வங்கிகளைக் கொள்ளையடித்து நிதித் தேவையை பூர்த்தி செய்தன. இதைப் பார்த்த சிறிய இயக்கங்கள் தபால் நிலையங்களை கொள்ளையடிக்க தொடங்கின. இதனால் வங்கிகள், தபால் நிலையங்களில் பணப் புழக்கத்தை அரசு குறைத்துக் கொண்டது. பெயர் குறிப்பிடாத சிறிய இயக்கம் ஒன்று யாழ் நகர வங்கிக் கிளை ஒன்றை கொள்ளையடிக்க திட்டமிட்டது. வாசலில் இருந்த காவலாளியை துப்பாக்கி முனையில் கட்டிப் போட்டு விட்டு, உள்ளே நுழைந்தனர். எப்படியோ வங்கியினுள் பணம் வைத்திருக்கும் இரும்புப் பெட்டி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அங்கேயிருந்து உடைத்துக் கொண்டிருப்பது நேர விரயம் என்று கருதியதாலோ என்னவோ, இரும்புப் பெட்டியை டிராக்டரில் ஏற்றி புறநகர்ப் பக்கமாக கொண்டு சென்று உடைத்தனர். கடும் பிரயத்தனப் பட்டு பெட்டியை உடைத்துப் பார்த்த போது ஏமாற்றம் காத்திருந்தது. பெட்டிக்குள் இருந்த சில்லறைகளையும் சேர்த்து கணக்குப் பார்த்தாலும் நூறு ரூபாய்க்கு மேல் தேறவில்லை!

இலங்கையின் சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க பிரபல வங்கிக் கொள்ளையர் ஒருவர் இருந்தார். சிறையில் இருந்து தப்பியதால் "பனாகொட மகேஸ்வரன்" என்ற பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டவர். இவர் தலைமையிலான குழுவொன்று பல வங்கிகளைக் கொள்ளையடித்து கோடிக்கணக்கான ரூபாய்களை சேர்த்து விட்டிருந்தது. கொள்ளையடித்த பணத்தில், "தமிழீழ இராணுவம்" என்ற இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார்கள். அந்த இயக்கத்தில் சேர்ந்த போராளிகளுக்கு மாத சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. சிறிது காலம் யாழ் நகரில் லொத்தர் சீட்டுக் குலுக்கி பணம் சேர்த்தார்கள். கடைசியில் "விடுதலை வியாபாரத்தை" மூட்டை கட்டி வைத்து விட்டு, முக்கிய உறுப்பினர்கள் யாவரும் வெளிநாடு சென்று விட்டனர்.

கடவுளின் அருள் பெற்ற ஞானி என்றால், அற்புதம் நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்று சாதாரண மக்கள் எதிர்பார்ப்பார்கள். ஈழத்திற்காக ஆயுதப்போராட்டம் நடத்தும் இயக்கம் என்றால், குறைந்தது பொலிஸ் நிலையம் மீது என்றாலும் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்த காலமது. ஏற்கனவே பல முறை தாக்குதலுக்கு உள்ளான சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை தாக்கி தனது ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்கு சிறிய இயக்கம் ஒன்று திட்டமிட்டது.

நள்ளிரவுக்கு சற்று முன்னர், அமைதியைக் கிழித்துக் கொண்டு "டமார்" என்ற வெடிச் சத்தம் கேட்டது. சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வசித்த மக்களுக்கு ஒரேயொரு "டமார்" தான் கேட்டது. அதைத் தொடர்ந்து "பட, பட" வென துப்பாக்கியால் சுடும் சத்தம் ஒரு மணி நேரமாக கேட்டுக் கொண்டிருந்தது. துப்பாக்கிச் சூடுகள் கூட ஒரே திசையில் இருந்து வந்ததை உணரக் கூடியதாக இருந்தது. விடிந்த பிறகு பொலிஸ் நிலைய பக்கமாக சென்றவர்கள், அங்கே தாக்குதல் நடந்ததற்கான தடயம் எதையும் காணவில்லை. வழக்கமாக எங்காவது தாக்குதல் நடந்தால், பாதையில் போகும் மக்கள் மீது ஆத்திரத்தைக் தீர்த்துக் கொள்ளும் அரச படைகள், அன்று அமைதியாக நின்றமை வேறு ஆச்சரியமளித்தது.

சில மணி நேரங்களில், முதல் நாளிரவு நடந்த தாக்குதலின் தார்ப்பரியம் தெளிவானது. முதலில் கேட்ட டமார் சத்தத்திற்கு காரணம் வெடி குண்டு அல்ல. ஒரு கிரனேட் கூட அன்று வீசப்படவில்லை. காலி அலுமினிய டின்னிற்குள் பட்டாசு கொளுத்தி போட்டிருக்கிறார்கள், தாக்குதல் நடத்திய வீரர்கள். அதைத் தொடர்ந்து, நாய் வீட்டைச் சுற்றி குரைப்பதைப் போல, திகிலடைந்த போலீஸ்காரர்கள் காவல் நிலையத்தை சுற்றி சுற்றி வந்து சுட்டிருக்கிறார்கள். சுட்டுக் கொண்டே ஓடிய போலீஸ்காரர் ஒருவர் முள்ளுக் கம்பி மேல் விழுந்து காயமுற்றதைத் தவிர வேறு எந்த பாதிப்பும் அன்று ஏற்படவில்லை. ஆனால், அடுத்த நாள் தாக்குதலுக்கு உரிமை கோரி போஸ்டர் ஒட்டிய இயக்கம், "பொலிஸ் நிலையத்தை வெற்றிகரமாக தாக்கி அழித்து விட்டதாகவும், 10 பொலிஸ்காரர்கள் கொல்லப்பட்டதாகவும்" அறிவித்தது.

முன்னொருபோதும் கேள்விப்படாத இயக்கம் ஒன்றின் பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் மக்கள் அதை புறக்கணித்தார்கள். ஆட்பலம், ஆயுதபலம் கொண்ட பெரிய இயக்கங்கள் செய்யும் தாக்குதல்கள் கூட சில நேரம் தோல்வியடைவதுண்டு. இராணுவ முகாமை தாக்கச் சென்ற இயக்கமொன்றின் போராளிகள், கடுமையான எதிர்த் தாக்குதல் காரணமாக பின்வாங்கி விட்டனர். இருந்தாலும் போஸ்டர் பிரச்சாரம் மட்டும் குறைவில்லாமல் 40 அரச படையினர் கொல்லப்பட்டதாக கணக்குக் காட்டியது. சம்பந்தப்பட்ட இயக்கம் தாக்குதலுக்கு போவதற்கு முன்பே அந்தப் போஸ்டரை அடித்து விட்டதாக, மக்கள் பேசிக் கொண்டனர்.

போஸ்டர்கள், துண்டுப்பிரசுரங்கள் அச்சடிப்பதற்கு "றோணியோ இயந்திரங்கள்" பயன்படுத்தப்பட்டன. இந்த இயந்திரங்கள் பாடசாலைகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டன. பாடசாலை நிர்வாகம் மாணவர்களின் வினாத்தாள்களையும், பாடக்குறிப்புகளையும் றோணியோ மெஷின் மூலமே அச்சிட்டு வந்தது. பாடசாலைகளின் விஞ்ஞான பரிசோதனைக்கூடங்களும் இயக்க வன்முறைக்கு தப்பவில்லை. பரிசோதனைச் சாலைகளில் களவாடப்பட்ட இரசாயனப் பதார்த்தங்களை கொண்டு எவராவது வெற்றிகரமாக குண்டு தயாரித்தார்களா என்ற விபரம் எதுவும் கிடைக்கவில்லை. பாடசாலைக் கொள்ளைகள் தொடர்ந்ததால் குடா நாட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்ட விளைவு மட்டும் பலரால் உணரப்பட்டது. சிறிய இயக்கங்களின் அரச எதிர்ப்பு நடவடிக்கைகள் யாவும் அவற்றின் பலத்திற்கேற்ப மட்டுப்படுத்தபட்டிருந்தன. "அரசாங்க சொத்துகளை நாசமாக்குவது" என்ற பெயரில், பேரூந்து வண்டிகளை வழிமறித்து, பயணிகளை இறக்கி விட்டு தீயிட்டார்கள். அரசாங்கமும் புதிய பஸ்களை அனுப்பாமல் புறக்கணித்து வந்ததால், பாதிக்கப்பட்டதென்னவோ பொது மக்கள் தான்.

காலப்போக்கில் கடிதத் தலைப்பு விடுதலை அமைப்புகள் யாவும் அரங்கில் இருந்து மறையத் தொடங்கின. பலவற்றிக்கு எப்படி இயங்குவது என்பது பற்றிய எந்த வித திட்டமிடலும் இருக்கவில்லை. ஓரளவிற்கு தட்டுத்தடுமாறி வளர்ந்து கொண்டிருந்தவையும், பல்வேறு எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருந்தது. சிறிய மீன்களை பெரிய மீன்கள் பிடித்துச் சாப்பிடுவதைப் போல, பெரிய இயக்கங்கள் பல நெருக்குவாரங்கள் மூலம் சிறிய இயக்கங்களை அழித்து விட்டன. சில நேரம் தலைமை தாங்குபவர் சுட்டுக் கொல்லப்பட்டவுடன் இயக்கம் தானாகவே கலைந்தது.

Tuesday, June 09, 2009

துருக்கி/குர்து மக்களின் ஈழத்தமிழர் ஆதரவு அறிக்கை

"இலங்கையின் குர்தியர்கள் என அழைக்கப்படக்கூடிய ஈழத்தமிழரின் பிரதிநிதியாக உங்கள் முன் நிற்கிறேன். ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்களான குர்தியரும், ஈழத் தமிழரும், ஏகாதிபத்தியத்திற்கெதிராக ஒருங்கிணைந்து போராடுவதன் மூலம் தான் தமது விடுதலையை வென்றெடுக்க முடியும்." துருக்கி, இஸ்தான்புல் நகரில், ICAD அமைப்பு ஒழுங்கு செய்த பத்திரிகையாளர் மகாநாட்டில் (17-5-2006) நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. அன்று அந்த மண்டபத்தில் பெருமளவு குர்து இன மக்களும் நிறைந்திருந்ததால், பலத்த கரவொலி எழுப்பி எனது பேச்சுக்கு வரவேற்புக் கொடுத்தனர்.

துருக்கி அரச பயங்கரவாதத்தினால் ஒடுக்கப்படும் இடதுசாரி கட்சிகளின் அயராத விடா முயற்சியால் "காணாமல் போவதற்கெதிரான சர்வதேச கமிட்டி"(The International Committee Against Disappearances) ICAD என்ற அமைப்பு செயல்வடிவம் பெற்று வளர்ந்து வருகின்றது. ஆசிய, ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க நாடுகளின் மார்க்சிய லெனினிய கட்சிகளின் வெகுஜன அமைப்புகளையும், தேசிய விடுதலை இயக்கங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் அமைப்பு. ஒடுக்கப்படும் இனம் என்ற ரீதியில் குர்தியர்கள் முதல் காஷ்மீரிகள் வரை பல்வேறு இன மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் தமிழரின் குறுந் தேசியவாதம் இத்தகைய நட்புச் சக்திகளை இனங்காணத் தவறி வருகின்றது.

ICAD அமைப்புடன் தோழமை உறவுகளைப் பேணி வரும், "துருக்கி தொழிலாளர் சங்கம் (நெதர்லாந்து)" மற்றும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பி.கே.கே.) ஆகியன இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போருக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இங்கே டச்சு மொழியில் உள்ள அறிக்கையை மட்டும் தமிழாக்கம் செய்துள்ளேன்.


தமிழரின் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்துங்கள்

சிறி லங்கா அரசானது தமிழருக்கு எதிரான இரத்தக்களரியை ஏற்படுத்தி வருகின்றது. ஆணவத்துடன், முழு மனித குலமும் பார்க்கத்தக்கவாறு, கொடூரமாக கொல்லப்படுகின்றனர். குண்டுவீச்சுகளுக்கும், துப்பாக்கிச் சூடுகளுக்கும் அகப்பட்டு ஆயிரக்கணக்கணக்கான மக்கள் மரணித்துள்ளனர், அதேயளவு தொகையினர் காயமடைந்துள்ளனர். சாதாரண மக்களின் வாழிடங்கள் குண்டுவீச்சுகளுக்கு இலக்காகியுள்ளன. சிறி லங்கா மனித உரிமைகளை மீறும் குற்றம் புரிந்துள்ளது. ஒவ்வொரு தேசிய இனமும் சுய உரிமை கோரும் உரிமையை, இனப்படுகொலை புரிவதற்கான நியாயப்படுத்தலாக ஏற்றுக் கொள்ள முடியாது.

அனைத்து வல்லரசுகளும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டே முதலைக் கண்ணீர் வடிக்கின்றன. பல்வேறு தேசியங்களை சேர்ந்த நாம், வெறும் சாட்சிகளாக இருக்காமல், இனப்படுகொலைக்கு எதிரான எமது குரலை உயர்த்துவோம். நாம் தமிழர் உட்பட அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களினதும் போராட்டங்களில் எம்மை இணைத்துக் கொள்வோம். போரினால் காயப்பட்ட, அல்லது போரில் தமது உறவுகளை இழந்த மக்களின் வேதனைகளை பகிர்ந்து கொள்வோம்.

நாம் இனப்படுகொலை, சித்திரவதை, அரச பயங்கரவாதம் போன்ற உலகில் உள்ள அத்தனை வன்முறைக்கும் எதிரானவர்கள். அறிவிக்கப்படாத தேசங்கடந்த மற்றும் உள்நாட்டு யுத்தங்களின் அரசியல், பொருளாதார, இராணுவ விளைவுகளை நாம் உணர்ந்து கொள்கிறோம். முதலாளித்துவ, ஏகாதிபத்திய கட்டமைப்பில் இருந்து இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதை புரிந்து கொள்கிறோம்.

இந்த பொருளாதார, இராணுவ தாக்குதல்களை முறியடிப்பதற்கு நாம் ஒருங்கிணைந்த முன்னணியை கட்டி எழுப்ப வேண்டும். குடிவரவாளர்கள், வெளிநாட்டவர்கள், தொழிலாளர்கள் மற்றும் அனைத்துலக உழைக்கும் மக்களும், அநீதிக்கும், கொலைகளுக்கும் எதிரான முன்னணியில் ஒன்று திரள வேண்டும். ஜனநாயக, முற்போக்கு அமைப்புகள், ஊடகங்கள், தனிநபர்கள் அனைவரும் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுக்குமாறு, நெதர்லாந்தின் துருக்கி தொழிலாளர் சங்கத்தினராகிய (HTIF) நாம் கேட்டுக் கொள்கிறோம்.

எமது கோரிக்கைகளாவன:

* சிறி லங்கா அரசு உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.
* தமிழர்களின் அனைத்து அத்தியாவசிய தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

தமிழருக்கு எதிரான இரத்தக் களரியை உடனடியாக நிறுத்து!

25 april 2009



ஈழத்தமிழர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பி.கே.கே. யினரின் உத்தியோகபூர்வ அறிக்கை:
SOLIDARITY WITH THE TAMILS

Kongra Gel Called for An Immediate Ceasefire in Sri Lanka

Kongra Gel chairman Zubeyir Aydar condemned the Sri Lankan state's massacre of the Tamil people and stated that Kongra Gel is with the Tamil people in their freedom struggle. Calling for a bilateral ceasefire, Aydar criticized the silence of the international community.

The Sri Lankan army has been conducting heavy operations against the Tamil people for months. For the Tamil people, the operations that have killed thousands of civilians is called an "attempted genocide". While the violent clashes are ongoing in the north of the island, during the night of Saturday to Sunday [9-10 May], according to Tamil sources more than 2,000 civilians lost their lives.

A Continuous Struggle

Kurds, too, are watching closely the massacre against the Tamil people and are conducting solidarity activites. The Kongra Gel chairman, Zubeyir Aydar, said, "After Sri Lanka survived English imperialism, the Tamils demanded freedom. There has been a Tamil people's continuous armed struggle for a period of almost 26 years."

In the north of Sri Lanka, twenty-five percent of the population consists of Tamils (5 million), Hindus, Christians, Muslims, whereas 75% is Buddhist Sinhalese (15 million) people. Tamils are a Hindu people. Tamil Eelam Freedom Tigers (LTTE), the Tamil guerrillas, are conducting an independence struggle for the Tamil people who live in the north and northeast of Sri Lanka. Since 1972, at least 70,000 people lost their lives in the clashes.

In 2002, a ceasefire was declared between Tamils and the Sri Lankan state. However, Sri Lanka, which receives support from India and the US, empowered its army and began attacks against the Tamil people after 2006. The ceasefire was abolished de facto. Sri Lanka's president broke the ceasefire in 2008 and intensified attacks.

The Tamil's Demand Is a Just Demand

Pointing out the hardliner attitude of Sri Lanka's government, Aydar said, "All the calls for peace and ceasefires from LTTE were left without any response. Almost one week ago guerrillas declared a unilateral ceasefire; the army did not acknowledge it and continued to attack."

Stressing that the Sri Lankan army is not obeying any kind of law or international laws of war, Aydar said, "Excessive force is being used, civilians are targeted, hospitals are fired on; these are war crimes. Despite the various numbers, thousands of civilians lost their lives in the last couple of months. In the clashes that took place on Saturday and Sunday, mostly civilians lost their lives. It is mentioned that the numbers exceed thousands; there is a humanitarian tragedy there. The Tamil people's freedom demand is a just demand. The demand for living freely in their own country is a just demand. The Sri Lankan government is in an unjust position. Its attitude is an imperialist approach. It wants to keep the Tamil people under pressure and imperialism."

The Imposition of Official Language
The Sri Lankan state imposed Sinhalese language as the national language in 1956. This exacerbated the Tamil peoples reaction. The imperialist attitude, the imposition of official language, and the assumption of the non-existence of the Tamil people's rights first made severe clashes in 1983, which turned into a civil war.

It Is Getting the Support of the Great States
"In the recent clashes it seems like the Sri Lankan army feels itself powerful. It seems like, in the international arena, they acquired the support of the great states. Using this advantage, it conducts a massacre in front of the world's eyes. It wants to smash a people's hope for freedom. The world is just watching," said Aydar.

The International Community Remains Silent
Criticizing the western counties' silence toward the massacre, Aydar said that some European countries' (France and England) foreign ministers went to Sri Lanka. However, their efforts did not go beyond their statements. Aydar said, "America is silent on this issue." He claimed that the international powers are encouraging Sri Lanka by putting the Tamil independence organization on their "terrorist list".

Aydar stressed that the UN's attempts are insufficient. It's calls do not go beyond the statements, like "We are worried about civilian casualties", "The guerrillas must lay down their arms". In addition, it tries to soothe the consciences by saying, "Weapons must be silenced".

Despite the statements from international human rights organizations about Sri Lanka committing war crimes and that there must be intervention immediately, the international powers do not even move. The UN data, too, reveals the massacre. According to the UN, since the beginning of this year to date, 6,500 civilians lost their lives. However, it is estimated that the real number is much higher.

An International Mechanism Must Be Established

Aydar stated that there are similar ongoing incidents in other parts of the world, and suggested the establishment of a neutral and just mechanism with a lawful foundation that has been formed. Mentioning that fifteen years ago great massacres occurred in Rwanda, that the incidents that occur in Kurdistan are before everyone's eyes, and that there was a humanitarian tragedy in Darfur. Aydar said, "There may not be any oil in Sri Lanka, there may not be any conflict of interest from international powers, however humanity is being hurt there. Humanity is put underfoot. The place to bring up such issues is the UN; however since the UN consists of nations, not peoples, it reacts based on the interests of states. For this reason, this mechanism is insufficient. The international community must improve a mechanism for such issues. This international mechanism must react immediately when a people, a minority, a belief, or any group, is subjected to torture by a state's imposition. This mechanism must be a mechanism for which a lawful foundation has been formed and protects the weak."

Kurds and Tamils Must Be in Solidarity

Saying that they support the Tamil people's freedom demand and their struggle, Aydar said, "We are in solidarity with them. Previously we have told our supporters to join the activities for solidarity with the Tamil people. We remind them once more. We want them to show solidarity with the Tamil people, to be with them, to share their griefs, and to protest the Sri Lankan army's cruel attacks."

Call for Immediate Bilateral Ceasefire

Calling on the Sri Lankan government, Aydar said, "The Sri Lankan government could not solve this problem militarily for 26 years. It cannot solve it, either. Maybe now they are more powerful than the guerrillas. They may have partial superiority against the guerrillas, but this will not solve the problem. Insisting on the current attitude will result in more casualties."

For the solution of the problem, Aydar primarily called for an immediate ceasefire. He said, "Our wish and call is like the way they have done before, to come back to the table and resolve the problem through dialog."

Sunday, June 07, 2009

துருக்கியில் தொடரும் "ஈழப் போர்"



25 வருட ஈழப் போரின் முடிவில் வெற்றிவாகை சூடிய இலங்கை அரசுக்கு பாராட்டுத் தெரிவித்த மிகச் சில சர்வதேச நாடுகளில் துருக்கியும் ஒன்று. துருக்கியின் ஜனாதிபதி குல், ராஜபக்ஷவுடன் நேரடியாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். துருக்கிய (வலதுசாரி) தேசிய ஊடகங்கள் ஈழப்போரை மிக உன்னிப்பாக அவதானித்து வந்துள்ளன. தேசிய நாளிதழான "ஹுரியத்", இலங்கை அரசு நடைமுறைப்படுத்திய கெரில்லா எதிர்ப்பு யுத்த தந்திரங்களை, துருக்கிய அரசு படிக்க வேண்டும் என்று ஆசிரிய தலையங்கம் தீட்டியுள்ளது. ரஷ்ய படைகள் செச்னியாவில் செய்தது போல, மக்களின் இழப்பைப் பற்றி சிந்திக்காமல், கெரில்லாக்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் மீது வரைமுறையற்ற தாக்குதலை நடத்துதல். போர் நடக்கும் காலம் முழுவதும் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துதல், ஊடகங்களுக்கு தடை விதித்தல். இது போன்ற பாடங்களை துருக்கியும் நடைமுறைப்படுத்தி, குர்திஸ்தான் என்ற தனி நாடு கோரும் பி.கே.கே. இயக்கத்தை முற்றாக அழிக்க முடியும், என்று ஆலோசனை கூறுகின்றன.

இலங்கை அரசுக்கும், துருக்கி அரசுக்கும் இடையில் சில கருத்து உடன்பாடுகளும், அதையொட்டிய நட்புறவும் இருப்பதைப் போல; தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பி.கே.கே.) க்கும் இடையில் நெருக்கமான நட்புறவு இருந்து வருகின்றது. தொடக்க காலத்தில் புலிகளுக்கு கிடைத்த விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பி.கே.கே.இடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவை. (பனிப்போர் காலகட்டமான அன்று சோவியத் யூனியன் பி.கே.கே.க்கு "சாம்" ஏவுகணைகளை வழங்கி இருந்தது). சுவாரஸ்யமாக, புலிகள் 1983 லிலும், பி.கே.கே. 1984 லிலும், கிட்டத்தட்ட ஒரே காலத்தில் விடுதலைப் போரை ஆரம்பித்திருந்தன. போர் அகதிகளாக, மேற்கைரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்த லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை புலிகள் தமக்கு நிதி வழங்கும் ஆதரவுத் தளமாக வைத்திருந்தனர். அதே போலவே மேற்குலகில் வாழும் குர்திய சமூகத்தில் பெரும்பான்மையானோர் பி.கே.கே.இற்கு ஆதரவளிக்கின்றனர்.

புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகளினதும், பி.கே.கே.யினதும் செயல்முறை, அரசியல் அணுகுமுறை எல்லாமே ஒரே மாதிரியாக உள்ளன. புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் அண்மைய ஆர்ப்பாட்டங்கள் பல, பத்து வருடங்களுக்கு முன்னர் பி.கே.கே. ஒழுங்கு செய்த அதே பாணியில் அமைந்துள்ளன. பத்து வருடங்களுக்கு முன்னர், குர்தியர்கள் பெருமளவில் வாழும் ஜெர்மனியில் பி.கே.கே. தடை செய்யப்பட்டது. அப்போது தடைசெய்யப்பட்ட பி.கே.கே. கொடிகளுடனும், தலைவர் அப்துல்லா ஒச்சலானின் உருவப் படத்துடனும் ஆயிரக்கணக்கான குர்த்தியர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கென்யாவில் வைத்து, ஒச்சலான் துருக்கிய புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக, மேலைத்தேய நகரங்கள் ஆர்ப்பாட்டத்தால் அதிர்ந்தன. தூதுவராலயங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. லண்டன் மாநகரில் ஒரு மாணவி தீக்குளித்து மரணமடைந்தார்.

ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பவர்கள் ஒன்றில் இந்தியாவில், அல்லது சர்வதேச நாடுகளில் வாழும் தமிழ் இனத்தவர்கள் என்ற எல்லையை கடந்து செல்லவில்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் பி.கே.கே. பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமளவிற்கு அவர்களுக்கிடையே புரிந்துணர்வு உள்ளது.(SOLIDARITY WITH THE TAMILS) பி.கே.கே. சார்பு தொலைக்காட்சியான "ரொஜ் டி.வி." தினசரி ஈழப்போர் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பி வருகின்றது. தொலைகாட்சி சேவை நடத்துவதில் கூட இரு அமைப்புகளுக்கும் இடையில் அசாத்திய ஒற்றுமை நிலவுகின்றது. பாரிசில் இருந்து ஒளிபரப்பாகிய TTN தமிழ் தொலைக்காட்சி, இலங்கை அரசின் நடவடிக்கையால் தடை செய்யப்பட்டு, தற்போது GTV என்ற பெயரில் இயங்கி வருகின்றது. அதே போல லண்டனில் இருந்து ஒளிபரப்பாகிய MED குர்திஷ் தொலைக்காட்சி, துருக்கி அரசின் நடவடிக்கையால் தடை செய்யப்பட்டு, தற்போது ROJ TV என்ற பெயரில் இயங்கி வருகின்றது.

இரண்டு நாடுகளிலும் நிலவும் இனப்பிரச்சினை பல ஒற்றுமைகளையும், அதே நேரம் சில குறிப்பிடத்தக்க வேற்றுமைகளையும் கொண்டுள்ளது. புலிகளுக்கு நேர்ந்த கதியை பார்த்து பி.கே.கே. தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் என்று துருக்கிய ஊடகங்கள் போதித்து வருவதை, வட-ஈராக் மலைகளில் பதுங்கியுள்ள பி.கே.கே. தலைமை நிராகரித்துள்ளது. புலிகளின் வீழ்ச்சி குறித்து பி.கே.கே. ஊடகங்களுக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பி.கே.கே. ஜெனரல் கரயிலன் கையொப்பமிட்டுள்ள அந்த அறிக்கை புலிகள் விட்ட தவறுகளையும் விமர்சனத்திற்குட்படுத்தியுள்ளது.

கரயிலான் துருக்கி ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையின் தமிழாக்கம் இது: "தமிழ்ப் புலிகள் ஒரு காலத்தில் இந்தியாவால் ஆதரிக்கப் பட்டார்கள். ஆனால் பின்னர் இந்தியா இலங்கை அரசை ஆதரித்தது. இதை விட, புலிகள் இயக்கம் தேசக் கட்டுமானப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தமை, போராட்டத்தின் சீர்குலைவாக அமைந்தது. (இறுதிக் காலத்தில்) புலிகள் மரபுவழிப் படையணியாக போரிட்டனரே அன்றி, கெரில்லா யுத்தத்தை நடத்தவில்லை. இதன் விளைவு, (தமிழரின்) இனவழிப்பில் கொண்டு போய் முடித்தது. மத்திய கிழக்கில் இருந்து வேறுபடும், பூகோள அமைவிடத்தையும், காலநிலையையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். (குர்திய) போராட்டம் ஒரு தீவிற்குள் முடங்கி விடவில்லை. ஒரு தீவிற்குள் எதிரியை தனிமைப்படுத்தி கடலை நோக்கி தள்ளுவது சுலபம். அதற்கு அடுத்தபடியாக, பி.கே.கே. சிறிய விமானப்படை ஒன்றையோ அல்லது ஆட்டிலெறி போன்ற கனரக ஆயுதங்களையோ வைத்திருக்கவில்லை."

குர்திய இன மக்களின் தாயகம், இலகுவில் ஊடுருவ முடியாத மலைப்பிரதேசமாக உள்ளது. இது கெரில்லாப் போருக்கு அனுகூலமான தரையாகும். இப்போதும் பி.கே.கே. அமைப்பில் புதிதாக சேரும் உறுப்பினர்கள், முதல் ஆறு மாதங்களுக்கு எந்த வசதியுமற்ற கரடுமுரடான மலைகளில் வாழுவது எப்படி என்று பயிற்சி வழங்கப்படுகின்றது. குளிர்காலத்தில் உறை பனிக்குள்ளும் தப்பி வாழ வேண்டும். துருக்கியின் தென் கிழக்குப் பகுதி, ஈராக்கின் வட பகுதி மற்றும் சிரியாவின் வட எல்லைப்பகுதி ஆகியவற்றை இணைக்கும் மலைப் பிரதேசத்தில் குர்திய மக்கள் பரந்து வாழ்கின்றனர். பி.கே.கே. தொன்னூறுகளில் சில மலைப்பகுதி கிராமங்களை தமது கட்டுப்பாட்டுப் பிரதேசமாக வைத்திருந்தது. நேட்டோ இராணுவ அமைப்பின் அங்கத்துவரான துருக்கி அரசுக்கு கிடைத்த மேற்கத்தைய ஆயுதங்களின் துணை கொண்டு, பி.கே.கே. போராளிகளை துருக்கியில் இருந்து முற்றாக துடைத்தழித்தது.

துருக்கியின் அயல் நாடுகளான கிரீசும், சிரியாவும், பி.கே.கே. போராளிகளுக்கு அடைக்கலம் வழங்கின. துருக்கியுடன் எல்லையைக் கொண்டிருக்கும் இவ்விரு நாடுகளும் நீண்ட காலமாக பகைமை பாராட்டி வந்துள்ளன. "எதிரியின் எதிரி நண்பன்" என்ற தத்துவத்தின் படி, பி.கே.கே. தமது நாட்டில் தளம் அமைக்க உதவின. கிரீஸ் அரச ஆதரவுடன், பி.கே.கே. அரசியல் பிரிவு பகிரங்கமாகவே இயங்கி வந்தது. அதே நேரம், சிரியாவில் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கும் முகாம்கள் இருந்ததை இரகசியமாக வைத்திருந்தனர். பி.கே.கே. தலைவர் ஒச்சலானும் இலகுரக விமானமொன்றுடன் அங்கே தான் வசித்து வந்தார்.

1998 ம் ஆண்டு, "சிரியாவில் இருக்கும் பி.கே.கே. முகாம்களை மூடும் படியும், ஒச்சலானை தன்னிடம் ஒப்படைக்கும் படியும்" துருக்கி சிரிய அரசாங்கத்தை கேட்டது. தவறினால் படையெடுக்கப்படும் என மிரட்டியது. நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்த சிரிய அரசு, பி.கே.கே. முகாம்களை இழுத்து மூடி விட்டு, ஒச்சலானை வெளியேறுமாறு உத்தரவிட்டது. ஒச்சலானை ஏற்றுக் கொள்ள கிரீசும் மறுத்து விட்டது. சிரியாவும், கிரீசும், துருக்கியுடன் என்னதான் பகைமை பாராட்டிய போதிலும், அயல்நாட்டுடன் நல்லுறவைப் பேண விரும்பின.

ஆதரவற்ற ஒச்சலான் தனது இலகுரக விமானத்தில் ஏறி, நெதர்லாந்து சென்று தஞ்சம் புக நினைத்தார். நெதர்லாந்து அரசு விமானத்தை இறக்குவதற்கே அனுமதி அளிக்க மறுத்து விட்டது. இறுதியில் கென்யா தற்காலிகமாக தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கியது. தென் ஆப்பிரிக்க பிரதிநிதியொருவர் அங்கே வந்து பொறுப்பெடுத்து, ஒச்சலானுக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சி.ஐ.ஏ., மொசாட் ஆகியன துருக்கியின் புலனாய்வுத் துறைக்கு நிமிஷத்திற்கு நிமிஷம் தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தன. தென் ஆப்பிரிக்க பிரதிநிதி வருவதற்கிடையில், துருக்கிய புலனாய்வுத் துறையை சேர்ந்தவர்கள் கென்யா சென்று விட்டனர். (மேற்குலக சார்பு) கென்யா அரச அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, ஒச்சலானை கடத்திச் சென்றனர்.

ஒச்சலான் கைது செய்யப்பட்ட பின்னர், குறிப்பிட்ட காலம் பி.கே.கே ஆயுதப் போராட்டத்தை இடைநிறுத்தி இருந்தது. பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்தது. தனி நாட்டுக்கான கோரிக்கையை மறு பரிசீலனை செய்ய முன்வந்தது. அதற்குப் பின்னர் வெளியிடப்படும் பி.கே.கே. அறிக்கைகள் யாவும் "குர்திஸ்தான்" என்ற தனி நாட்டிற்காக போராடுவதாக அறிவிப்பதில்லை. குர்திய இன மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பது மட்டுமே தமது உயரிய லட்சியம் என கூறி வருகின்றனர். இதே நேரம் தலைவர் இல்லாத பி.கே.கே. இரண்டாக பிரிந்து விட்டது. ஒரு பிரிவிற்கு ஒச்சலானின் சகோதரனும், மற்ற பிரிவுக்கு முன்னணி தளபதி ஒருவரும் தலமை தாங்குகின்றனர். ஒன்றை மற்றொன்று "துரோகக் குழு" என்று குற்றம் சுமத்தி வருகின்றது. இதைவிட சுயேட்சையாக இயங்கும் இரண்டு சிறு பிரிவுகளும் உள்ளன. முன்னாள் பி.கே.கே. தளபதி ஒருவர் துருக்கி அரசுடன் சேர்ந்து விட்டதால், அவரது பிரிவு இராணுவத்தின் துணைப்படையாக இயங்குகின்றது.

துருக்கி அரசுடன் சர்வதேசம் கொண்டுள்ள விசித்திரமான உறவு, இலங்கை அரசுடனும் தொடர்கின்றது. தொன்னூறுகளில் புகலிடத்தில் குர்திஸ்தான் பாராளுமன்றம் அமைப்பதற்கு நெதர்லாந்து இடம்கொடுத்தது. அதற்காக துருக்கியின் எதிர்ப்பையும் சம்பாதித்தது. அதே நேரம் ஜெர்மனி துருக்கியின் அரச படைகளுக்கு பயிற்சி கொடுப்பது முதல், குர்த்தியருக்கு எதிரான போருக்கு நேட்டோ ஆயுதங்கள் வழங்குவது வரை, மேற்கத்திய நாடுகளின் ஆசீர்வாதம் என்றென்றும் கிடைத்து வந்தது. இன்னொரு பக்கத்தில் இதே நாடுகள், துருக்கி மனித உரிமைகளை மீறி வருவதாக குற்றம் சாட்டி வருகின்றன. அவ்வப்போது துருக்கி அரசின் போர்க்கால குற்றங்களை விசாரிப்பது என்ற நகைச்சுவை நாடகம் ஐரோப்பிய யூனியனால் அரங்கேற்றப்படும். அந்த தருணங்களில் எல்லாம், மேற்குலக எதிர்ப்பு கோஷம் போடும் படி துருக்கியும் தனது மக்களை தூண்டி விடும். பின்னர் திரைமறைவில் இராஜதந்திர உறவுகள் மறுசீரமைக்கப்படும்.

இலங்கையின் விஷயத்திலும், மேற்குலக நாடுகள் அதே போன்ற அணுகுமுறையைத் தான் பின்பற்றுகின்றன. போர்க்கால குற்றங்களுக்காக இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த துடிக்கும் அதே பிரிட்டிஷ் அரசு,இறுதிப் போருக்கு ஆயுதங்களை வழங்கி வந்துள்ள விஷயம் அம்பலமாகியுள்ளது. ஐ.நா. சபையில் மனித உரிமை மீறல்களை விசாரிப்பது சம்பந்தமாக இலங்கை அரசுக்கு எதிராக வாக்களித்த ஐரோப்பிய நாடுகளும் இரட்டை வேஷம் போடுவதில் கில்லாடிகள் தான். பிரிட்டன், பிரான்ஸ், செக் குடியரசு, இத்தாலி, நெதர்லாந்து, போலந்து.... இப்படி தமிழின அழிப்பு போருக்கு ஆயுதம் வழங்கிய மேற்குலக நாடுகளின் பட்டியல் நீண்டு செல்கின்றது.

இருப்பினும் மேலைத்தேய நகரங்களில் மாதக்கணக்காக மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்திய, புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருவர் கூட, இந்த நாடுகளுக்கு எதிராக ஒரு வார்த்தை பேசவில்லை. பிரிட்டிஷ் அரசு தமது வரிப்பணத்தில் உற்பத்தி செய்த ஆயுதங்களை, வன்னியில் இருக்கும் தமிழ் சகோதரர்களை கொல்வதற்கு கொடுத்த போதும், இதுவரை யாருக்கும் அது பற்றிய பிரக்ஞை எழவில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பு விஷயத்தில் மட்டும், குர்தியரின் ஆர்ப்பாட்டங்கள் மாறுபட்டு நிற்கின்றன. பி.கே.கே. தலைவர் ஒச்சலான் கைது செய்யப்பட்ட அந்தக் கணமே, மேலைத்தேய நகரங்களில் ஒன்று திரண்ட பல்லாயிரக்கணக்கான குர்த்தியர்கள் வெகுண்டெழுந்தனர். அன்று அந்த மக்கள் அனைவரதும் கோபாவேசம் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு எதிராக திரும்பியிருந்தது. மேற்குலகின் இரட்டை வேஷத்தை ஆக்ரோஷத்துடன் அம்பலப்படுத்தினார்கள்.


____________________________________________________________________

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

குர்திஸ்தான், துருக்கியின் துயரம்

_____________________________________________________________________