Showing posts with label வில்டர்ஸ். Show all posts
Showing posts with label வில்டர்ஸ். Show all posts

Wednesday, June 23, 2010

அச்சுறுத்தப் போவது யாரு? முஸ்லிம்களா? ஐரோப்பியர்களா?

சில வருடங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி, உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய Fitna என்ற இஸ்லாமிய விரோத வீடியோவுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வீடியோ இது. "இஸ்லாம் ஐரோப்பாவை அச்சுறுத்துகிறது" என்ற தீவிர வலதுசாரிகளின் பிரச்சாரத்திற்கு மாறாக, ஐரோப்பிய கலாச்சாரம் உலகை அச்சுறுத்திய வரலாற்றை பதிவு செய்துள்ளது.
வீடியோவில் வரும் நெதர்லாந்து வசனங்களுக்கான தமிழ் மொழியாக்கத்தை கீழே கொடுத்துள்ளேன்.
______________________

Warning: This film contains very shocking images.

- சுதந்திரத்திற்கான கட்சி (PVV) -

நம்பிக்கைக்கும், நன்மைக்குமான நிகழ்ச்சிநிரல்

முன்னுரை


- நெதர்லாந்து தனது நியாயத்தை தெரிந்து கொள்ளாத நிலையை அடைந்துள்ளது.
- தனது நியாயத்தை தெரிந்து கொள்ளாத ஒரு சமுதாயம்
- முழு உலகும் பொறாமைப் படுகின்றது.
(கயிற்றால் கட்டி தொங்கவிடப்பட்ட அடிமைகள்)
- கலாச்சாரங்கள் சமத்துவமானவை அல்ல. எமது கலாச்சாரம் இஸ்லாமை விட மேன்மையானது.
-நாம் கடுமையானவர்கள்.

நம்பிக்கைக்கும், நன்மைக்குமான நிகழ்ச்சி நிரல்
பாதுகாப்பு

- இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் குடியேற்றத்தை முழுமையாக நிறுத்த விரும்புகிறோம்.
- (முஸ்லிம்களின் எண்ணிக்கை) அளவுக்கு மிஞ்சி பெருகி விட்டது.
- இந்த மசூதிகள் என்னை பைத்தியமாக்குகின்றன.
- அவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்?
- யார் அவர்களை உள்ளே விட்டது?
(CNN நேர்காணல்)
- அனைத்து நெதர்லாந்து மக்களையும் வந்து சேருமாறு அழைப்பு விடுக்கிறோம்.
- எமது போராட்டம் இலகுவானதல்ல.
- இஸ்ரேல் எமக்காக யுத்தம் செய்கின்றது.
- ஜெருசலேம் வீழுமானால், எதேன்சும், ரோமும் வீழ்ச்சி அடையும்.
(காசா மசூதி மீதான இஸ்ரேலிய தாக்குதல்.)
- நெதர்லாந்து மீதான முஸ்லிம்களின் படையெடுப்பை நிறுத்த மறுப்பவர்களை இட்டு வெட்கப் படுகிறேன்.
- கோழைகளாக பிறந்த பயந்தாங்கொள்ளிகள் கோழைகளாகவே மடிவார்கள்.
- நாங்கள் யுத்தத்தில் தோல்வியடைகிறோம்.
(CNN நேர்காணல்)
ஹெர்ட் வில்டர்ஸ்
- முஸ்லிம்கள் பொய்யர்கள், கிரிமினல்கள்.
- எனக்கு இஸ்லாம் போதும் போதும் என்றாகி விட்டது.
- குரான் எனக்கு இனி வேண்டாம்.
- அல்லாவை, முகமதுவை வணங்குவது எனக்கு இனி வேண்டாம்.
(தலையில் வெடி குண்டு திரியுடன் வெடித்துச் சிதறும் வில்டர்ஸ்.)

A film by Wil Geerders



பிற்குறிப்பு:
கடைசியாக நடந்த நெதர்லாந்தின் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் இஸ்லாமிய விரோத வில்டர்சின் PVV என்ற கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. தீவிர வலதுசாரியான வில்டர்ஸ் என்ற தலைமைப்பண்பும், அவரது இஸ்லாமியர் எதிர்ப்பு பிரச்சாரமும், பெருமளவு வெள்ளையின வாக்காளர்களின் வாக்குகளை வாங்கிக் குவிக்க போதுமானதாக இருந்துள்ளது. "இஸ்லாமிய காட்டுமிராண்டி கலாச்சாரம், அதி உன்னதமான ஐரோப்பிய கலாச்சாரத்தை அழித்து வருகின்றது. ஐரோப்பா முஸ்லிம்களின் காலனியாகி வருகின்றது." போன்ற இனவாதக் கருத்துகள் பெருமளவு வெள்ளையரைக் கவர்ந்துள்ளன. (குஜராத்துக்கு ஒரு நரேந்திர மோடி, நெதர்லாந்துக்கு ஒரு வில்டர்ஸ்.) வில்டர்ஸ் தனது முஸ்லிம் விரோத பிரச்சாரத்தை மேற்கொள்ள உதவியாக Fitna என்ற வீடியோவை தயாரித்து இணையத்தில் உலவ விட்டார். அதனால் நெதர்லாந்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது நெதர்லாந்து அரசியல் அரங்கில் பலமான சக்தியாக வளர்ந்து வரும் நிலையில், வில்டர்சின் PVV கட்சி நெதர்லாந்து சமூகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தல். வில்டர்சின் கொள்கை இஸ்லாமியருக்கு எதிரானது மட்டுமல்ல, அகதிகள், வெளிநாட்டு குடிவரவாளர்கள் ஆகியோருக்கும் எதிரானது. தீவிர முதலாளித்துவ ஆதரவுக் கட்சி, வெள்ளையின உழைக்கும் மக்களுக்கும் எதிரானது.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
சுதந்திரம் கேட்கிறது நிறவாதம்
இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது

Wednesday, June 17, 2009

"முஸ்லிம்களை வெளியேற்றுவோம்!" - ஐரோப்பிய தொலைக்காட்சியில் பேரினவாத வெறி

"லட்சக்கணக்கான கிரிமினல் முஸ்லிம்களை ஐரோப்பாவில் இருந்து வெளியேற்ற வேண்டும். அவர்களின் பிரஜாவுரிமை பறிமுதல் செய்யப்பட வேண்டும். முஸ்லிம் நாடுகளில் இருந்து குடியேற வருபவர்களை தடை செய்ய வேண்டும்." - டென்மார்க் தொலைக்காட்சியில் தீவிர வலதுசாரி வில்டர்சின் நேர்காணல்

கடந்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்திற்கான தேர்தலில், தீவிர வலதுசாரிக் கட்சிகள் பல முதன்முறையாக வென்று, ஆசனங்களைப் பெற்றுள்ளனர். தேர்தல் முடிவுகளை அறிவித்த ஊடகங்கள், ஐரோப்பாவில் தீவிர வலதுசாரி அலை பரவுவது போலவும், பெருமளவு மக்கள் இனவெறிக் கட்சிகளுக்கு வாக்களித்தது போலவும் பிரமையை தோற்றுவித்துள்ளன. வேற்றினத்தவருக்கு எதிராக இனவாதம் பேசும் கட்சிகள் கணிசமான வாக்குப் பலத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு தெரிவானது உண்மை தான். ஆனால் இவை ஒப்பீட்டளவில் மிகக் குறைவான ஆசனங்களையே பெற்றுள்ளன.

நெதர்லாந்தில் முஸ்லிம் விரோத வில்டர்சின் கட்சி நான்கு ஆசனங்களையும், பிரித்தானியாவில் குடிவரவாளர்/அகதிகளுக்கு எதிரான BNP இரு ஆசனங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்க வெற்றி தான். புதிய அங்கத்துவ நாடுகளான ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளிலும் வேற்றினத்தவரை சகித்துக் கொள்ளாத கட்சிகள் தலா ஒரு ஆசனத்தை தன்னிலும் பெற்றுள்ளன. இதே நேரம் ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் தீவிர வலதுசாரிகள் தோல்வியுற்றுள்ளன.

தீவிர வலதுசாரிக் கட்சிகளின் வெற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ஐரோப்பிய ஊடகங்கள், தீவிர இடதுசாரிக் கட்சிகளின் வெற்றியை இருட்டடிப்பு செய்ததன் மர்மம் என்ன? அயர்லாந்தில் (திரொஸ்கிச) உழைப்பாளர் கட்சி இரு ஆசனங்களையும், செக் குடியரசில் (மார்க்சிச லெனினிச) கம்யூனிஸ்ட் கட்சி நான்கு ஆசனங்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களும் இருக்கிறார்கள் என்பதை பிற ஐரோப்பிய மக்கள் அறியக் கூடாது என்பதில் ஊடகங்கள் அவதானமாக நடந்து கொள்கின்றன.

நெதர்லாந்தில் முஸ்லிம் விரோத பேச்சுகளால் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக, தீய வழியில் பிரபலமடைந்துள்ள வில்டர்சின் வெற்றியை அடுத்து, பரவலான ஊடக அங்கீகாரத்தை பெற்றுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த அன்றிரவே, ஐரோப்பிய ஊடகங்களில் "வில்டர்ஸ் புராணம்" களை கட்டியது. டென் மார்க் தொலைக்காட்சி ஒன்று வில்டர்சை அழைத்து செவ்வி கண்டது. வில்டர்ஸ் இந்த நேர்காணலில், ஐரோப்பாவில் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளார். "ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருபது மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். 2025 ம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி விடும். அப்போது ஐரோப்பாவில் மூன்றில் ஒருவர் முஸ்லீமாக இருப்பர்." என்று பூச்சாண்டி காட்டுகின்றார். "முஸ்லிம்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை ஏற்க மறுப்பதாகவும், ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்புவதாகவும், ஜிஹாத் ஆதரவாக இருப்பதாகவும்..." இவ்வாறு முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டிய காரணங்களை அடுக்கிக் கொண்டே போகின்றார்.

இதுவரை காலமும் நவ-நாசிச, பாசிச கட்சிகளே, மேற்குறிப்பிட்ட பொய்யான தரவுகளை பரப்புரை செய்து வந்தன. தற்போதெல்லாம் வில்டர்ஸ் போன்ற பாசிஸ்ட்கள் "வெகுஜன அரசியல்வாதிகள்" என்ற போர்வையில் இனவெறி நஞ்சை கக்குகின்றனர். வில்டர்ஸ் பயன்படுத்தும் சொற்பிரயோகங்கள் பல நவீன பாசிச அகராதியில் இடம்பெறத்தக்கவை. முஸ்லிம்கள் ஐரோப்பாவை "காலனிப்படுத்துவதாக", காலனியத்திற்கு புதிய விளக்கம் கொடுப்பார். தன்னை எதிர்க்கும் வெளிநாட்டவரை "இனவெறியர்கள்" என்றழைப்பார். வீதியில் ரவுடித்தனம் செய்யும் வேலையற்ற பொறுக்கிகளுக்கு "தெருப் பயங்கரவாதிகள்" என நாமம் சூட்டியுள்ளார்.

குறிப்பாக மொரோக்கோ குடிவரவாளர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவது உண்மை தான். இருப்பினும் அப்படிப்பட்டவர்கள் ஒரு சிறிய தொகையினர் தான். பெரும்பான்மை மொரோக்கோ சமூகத்தினர் தாமுண்டு, தமது வேலையுண்டு என்று அமைதியாக வாழ்பவர்கள். ஒரு சில கிரிமினல் இளைஞர்களை உதாரணமாகக் காட்டி, முஸ்லிம்கள் அனைவரையும் கிரிமினல்களாக காட்டும் வில்டர்சின் செயல் வன்மையாக கண்டிக்கப்படவேண்டும். தற்போது "முஸ்லிம்களை மட்டும் தானே வெளியேற்றுவார்கள்." என்று பிற சிறுபான்மை சமூகத்தினர் அலட்சியமாக இருந்தால், அவர்களுக்கும் அந்த நிலை வர அதிக காலம் எடுக்காது. கிரிமினல் செயல்களில் ஈடுபடுவோர், புலம்பெயர்ந்த நாட்டில் குறுந்தேசியவாதம் பேசுவோர் பிற சமூகங்களிலும் உள்ளனர். அவர்களுக்கும் இது ஓர் எச்சரிக்கை.

ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வாழும் அரபு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களிடையே இஸ்லாமிய அடிப்படைவாத அரசியல் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. ஐரோப்பிய பேரினவாதிகள் அதனை தமக்கு சாதகமாக மாற்றிக் கொள்கின்றனர். தீவிரவாத முஸ்லிம்களால் மொத்த ஐரோப்பிய சமூகத்திற்கும் ஆபத்து என்று பயமுறுத்துவதன் மூலம், பெரும்பான்மை ஆதரவை திரட்டிக் கொள்கின்றனர். அரபு-முஸ்லிம்களல்லாத பிற சமூகங்களான துருக்கியர், குர்தியர், பஞ்சாபியர், தமிழர் மத்தியில் குறுந்தேசியவாத அரசியல் செல்வாக்கு அதிகம். தற்போது இவர்களின் தேசிய இன அரசியல், ஐரோப்பிய பேரினவாதத்திற்கு எதிரானதல்ல போன்று தோன்றலாம். ஆனால் ஐரோப்பா முழுவதும், ஒரே கலாச்சார மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் திட்டமிடும் பேரினவாதத்தின் பாதையில் இவையெல்லாம் தடைக்கற்களாக தெரிகின்றன.

வில்டர்ஸ் பற்றிய மேலதிக தகவல்களை எனது முன்னைய பதிவுகளில் வாசிக்கலாம்.
- இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது
- சுதந்திரம் கேட்கிறது நிறவாதம்


டென் மார்க் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வில்டேர்சின் நேர்காணல் வீடியோ (in English):


Geert Wilders in Denmark: Deporting millions of Muslims may be necessary