Showing posts with label பேஸ்புக். Show all posts
Showing posts with label பேஸ்புக். Show all posts

Wednesday, March 16, 2022

எனது பேஸ்புக் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டுள்ளது!

 நண்பர்கள் அனைவருக்கும்அறியத்தருவது,

 

எனது பேஸ்புக் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டுள்ளது. புதிய கணக்கையும் திறக்க முடியாது. அதை Artificial Intelligence (AI) தொழில்நுட்பம் உடனே கண்டுபிடித்து விடுகிறது. 

ஆகவே இதுவரை காலமும் என்னை பேஸ்புக்கில் பின்தொடர்ந்தவர்கள் பின்வரும் தளங்களுக்கு வர வேண்டுகிறேன்:

Twitter

@kalaiy https://twitter.com/kalaiy

vk.com (இது "ரஷ்ய பேஸ்புக்". இலவசம். ஆங்கிலத்திலும் பயன்படுத்தலாம்.) 

VK இல் எனது ID: https://vk.com/kalaiyarasan

 You Tube

கலையகம்: https://www.youtube.com/channel/UCJHMD0ISt5Laqu8mP1U_fxA

 odysee.com (இது யூடியூப் பாணியிலான வீடியோ தளம்.)

கலையகம்: https://odysee.com/@KalaiMarx:7


உங்கள் ஆதரவுக்கு நன்றி.

நன்றி, 

வணக்கம்.


Saturday, July 16, 2016

மாற்று சமூக வலைத்தளங்கள்; இணையத் தணிக்கையை முறியடிப்போம்


கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருந்த "Tharmalingam Kalaiyarasan" என்ற பெயரிலான எனது முகநூல் கணக்கு, தற்போது நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கான விசேட காரணம் எதையும் தெரிவிக்கவில்லை.

இது மட்டுமே பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ள காரணம்: //We've reviewed your account and determined that it hasn't followed the Facebook Statement of Rights and Responsibilities. The violation of these terms has resulted in the permanent loss of your account. One of our main priorities is the comfort and safety of the people who use Facebook, and we don't allow credible threats to harm others, support for violent organizations or exceedingly graphic content on Facebook. To learn more about Facebook's policies, please review the Facebook Community Standards://

காஷ்மீர் பிரச்சினை பற்றிய பதிவொன்றின் பின்னரே, இந்திய அரசின் அழுத்தம் காரணமாக முடக்கப் பட்டுள்ளது எனத் தெரிகின்றது. (பார்க்க:முகநூல் தணிக்கை செய்த காஷ்மீர் பற்றிய பதிவு) ஏனெனில், அதே பதிவுகளை இட்ட வேறு சிலரின் முகநூல் கணக்குகளும் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ முடக்கப் பட்டுள்ளன. இதனால் பலர் முகநூலில் வேறு பெயரில் இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
எனது புதிய முகநூல் கணக்கு :Kalai Marx (https://www.facebook.com/kalaimarx)
இந்த விபரத்தை உங்களது நட்புப் பட்டியலில் இருப்பவர்களுக்கு தெரியப் படுத்தவும். நன்றி.

அமெரிக்க நிறுவனமான பேஸ்புக் கருத்துச் சுதந்திர மறுப்பில் ஈடுபடுவதும், அடக்குமுறை அரசுக்களுடன் ஒத்துழைப்பதும் இதுவே முதல் தடவை அல்ல. இவ்வளவு காலமும் வணிக ஊடகங்கள் மூலம் மக்களை மூளைச்சலைவை செய்து வந்த அரசுகள், இணையத்தில் கிடைக்கும் சுதந்திரம் குறித்து கவலையடைந்துள்ளன. ஒரு சாமானியனும் தனது கருத்துக்களை உலகிற்கு எடுத்துரைப்பது ஆபத்தான விடயமாக கருதுகின்றன. ஜனநாயகத்தின் பெயல் இயங்கும் அரசுகள், உண்மையில் ஜனநாயக மறுப்பாளர்கள் என்பது நிரூபணமாகின்றது.

ஆகவே, முகநூல் தணிக்கையில் இருந்து தப்புவதற்கு நாம் வேறு வழிகளை நாட வேண்டியுள்ளது. அதாவது "மாற்று முகநூல்" ஒன்றின் தேவை எழுந்துள்ளது. எனக்குத் தெரிந்த வரையில் தற்போதைக்கு இரண்டு தெரிவுகளை அறிமுகப் படுத்த முடியும். நீங்களும் அதில் இணைந்து கொள்வதுடன், உங்கள் நண்பர்களையும் அதில் சேருமாறு ஊக்குவிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

“Minds.com” என்ற மாற்று சமுக வலைத்தளம் Bill Ottman மற்றும் அவரது நண்பர்களால் தொடங்கப்பட்டது. அவர் அமெரிக்காவைச் சார்ந்த “சுதந்திர மென்பொருள்”, “சுதந்திர இணையம்” ஆகியவற்றில்  நம்பிக்கை கொண்ட ஒருவர். (https://en.wikipedia.org/wiki/Minds).

அதில் வெளியிடப் படும் எமது தகவல்கள் பாதுகாக்கப் படுகின்றன. அரசுக்களோ, அல்லது வணிக நிறுவனங்களோ அவற்றை பார்வையிட முடியாது. இதற்கு மாறாக, பேஸ்புக் நிறுவனம், எமது தகவல்களை அரசுகளும், வணிக நிறுவனங்களும் பார்வையிட தாராளமாக அனுமதித்து வருகின்றது. அதன் மூலம் இலாபம் சம்பாதிக்கிறது. அந்த அவலத்தில் இருந்து பாவனையாளர்களை மீட்பதே, மைன்ட்ஸ் உருவாக்கியவர்களின் நோக்கமாக உள்ளது.

மேலதிக தகவல்களுக்கு பத்திரிகையில் வந்த இந்தக் கட்டுரையை வாசிக்கவும்:

பேஸ்புக் மாதிரி ரஷ்ய மொழி பேசும் மக்களிடையே பிரபலமான சமூக வலைத்தளம். ரஷ்யாவை தளமாக கொண்டு இயங்குவதால், இது "ரஷ்ய பேஸ்புக்" என்றும் அழைக்கப் படுகின்றது. ஆங்கிலம் மற்றும் பிற உலக மொழிகளிலும் பாவிக்க முடிகின்றது. தமிழ் மட்டும் இல்லை. தமிழ் பேசும் பாவனையாளர்கள் மிக மிகக் குறைவு. எதிர்காலத்தில் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்போம்.

மேற்குறிப்பிட்ட இரண்டு மாற்று சமூகவலைத்தளங்களிலும் ஏற்கனவே எனது கணக்குகள் உள்ளன. ஆகவே நீங்களும் என்னோடு நண்பர்களாக இணைந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். 

Minds இல் எனது கணக்கு:https://www.minds.com/Kalaiyarasan 

VK இல் எனது கணக்கு:https://vk.com/kalaiyarasan

எனது பழைய முகநூல் கணக்கு முடக்கப் பட்டதை விமர்சித்து சில நண்பர்கள் பதிவிட்டுள்ளனர். அவர்களுக்கு எனது நன்றிகள்.

நண்பர்களின் ஆதரவுப் பதிவுகள்:

Nandha Kumaran: நெதர்லாந்தை சேர்ந்த தோழர் கலையரசனின் பேஸ்புக் கணக்கு பேஸ்புக் நிர்வாகத்தால் முடக்கப்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பேஸ்புக் இந்த செயலை செய்துள்ளதாக தெரிகிறது. பேஸ்புக்கின் இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்தின் மீது கார்ப்பரேட்டுகளின் குறிப்பாக பேஸ்புக்கின் கைவரிசையாக பார்க்க வேண்டியுள்ளது. சாதி, மதவெறி ஊட்டும் பிரச்சாரங்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் பேஸ்புக், சமூக நலன் சார்ந்த பதிவுகளை முடக்குவதன் பொருள், அதன் வர்க்க பாசத்தை காட்டுவதல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும் ? (July 13)

Chinthan Ep: செய்தி: தோழர் கலையரசனின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தைப் பொருத்தவரையில், நாம்தான் அவர்களது "விற்பனைப் பொருள்". அதிகமான பயனர்கள் அவர்களுக்குத் தேவை. அதனால்தான் யாராவது ஒருவரின் கருத்து பிடிக்காமல் ஏராளமானோர் எதிர்த்து பேஸ்புக்கிற்கு ரிப்போர்ட் செய்தால், உடனடியாக அந்த நபரின் அக்கௌன்டை முடக்குகிறது. ஏனெனில் பேஸ்புக்கிற்கு எண்ணிக்கைதானே முக்கியம். காசா? கருத்துசுதந்திரமா? என்றால், காசுதான் என்பார்கள் கார்ப்பரேட்டுகள்.
பின்குறிப்பு: தேசப்பற்றாளர்களே(?!?) காஷ்மீர் குறித்து என்ன சொன்னாலும் இப்படி டென்ஷன் ஆனா எப்படி? (July 13)

Joshua Isaac Azad: Facebook has permanently disabled the accounts of Marxist writer Kalaiyarasan and brother Ilyas Muhammed for their stand against Indian state terrorism on Kashmiris. Let's stand against Facebook censorship. Their new accounts Kalai Marx; Ilyas. 
‪#‎StandWithKashmir‬ ‪#‎KashmirUprising‬ ‪#‎MartyrBurhanWani‬

Facebook has disabled the accounts of comrades Tharmalingam Kalaiyarasan, Subha D and blocked brother Ilyas Muhammed Raffiudeen for their stand against war crimes committed by the Indian state on Kashmiris. They've been exposing the Brahmindia's lies about Kashmir in the Tamil space. Recently they shared my post on martyr Burhan Wani for which I was blocked earlier, now they are. ‪#‎StandWithKashmir‬ ‪#‎TamilsWithKashmiris‬
Martyr ‪#‎BurhanWani‬
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவு:
முகநூல் தணிக்கை செய்த காஷ்மீர் பற்றிய பதிவு

Tuesday, July 12, 2016

முகநூல் தணிக்கை செய்த காஷ்மீர் பற்றிய பதிவு



காஷ்மீர் விடுதலைப் போராளி புர்ஹான் வானி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஜோஷ்வா ஐசக் ஆசாத் (Joshua Isaac Azadhttps://www.facebook.com/joshuaisaac.tamizhmaravan) எனும் தமிழ்நாட்டில் வாழும் தலித்- கிறிஸ்தவ அரசியல் ஆர்வலர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சில மணிநேரங்களுக்குள் அந்தப் பதிவு நீக்கப் பட்டது. மீண்டும் அதைப் பதிவு செய்த போதிலும், பேஸ்புக் திரும்பவும் நீக்கி விட்டது. அதே பதிவை நானும் எனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டேன். அதுவும் சில மணி நேரங்களுக்குள் நீக்கப் பட்டது.

சமூக வலைத்தளங்களில் உள்ள கருத்துச் சுதந்திரம் ஒரு கண்துடைப்பு நாடகம். யார் எதைப் பேசினால், தமது அதிகாரத்திற்கு ஆபத்தில்லை என்பதை ஆட்சியாளர்கள் தீர்மானித்து வைத்திருக்கிறார்கள். தமிழர்கள் விடுதலைப் புலிகளை புகழ்ந்து, அல்லது தமிழீழ விடுதலையை ஆதரித்து எப்படியும் எழுதலாம். அதே மாதிரி, முஸ்லிம்கள் காஷ்மீர் போராளிகளை புகழ்ந்து, காஷ்மீர் விடுதலையை ஆதரித்து எழுதலாம். அதிகார வர்க்கம் அவற்றைக் கண்டுகொள்ளப் போவதில்லை. அதையெல்லாம் ஊக்குவித்துக் கொண்டிருக்கும்.

ஆனால், இந்த விதிமுறைகளுக்கு மாறாக, சிங்களவர்கள் தமிழீழ விடுதலையை ஆதரிப்பதும், தமிழர்கள் காஷ்மீர் விடுதலையை ஆதரிப்பதும், ஆட்சியாளர்களுக்கு ஆபத்தான விடயம். அப்படியான சமூக மாற்றம், அதிகார வர்க்கத்தை ஆட்டம் காண வைத்து விடும். ஆகையினால், தமது ஆட்சிக்குட்பட்ட மக்களை, இனம், மதம் என்ற குறுகிய மனப்பான்மைக்குள் வைத்திருப்பதே அவர்களது நோக்கமாக உள்ளது.

******

பேஸ்புக் தணிக்கை செய்த  புர்ஹான் வானி பற்றிய பதிவு இது: 
(சிலநேரம் இதை புளொக்கரும் தடை செய்தால் ஆச்சரியப் பட எதுவும் இல்லை.)



"புர்ஹான் வானி" காஷ்மீர் விடுதலைப் போராட்ட வீரன்

இந்திய அரசாலும், ராணுவத்தாலும், ஊடகங்களாலும் மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடப்பட்டு வருவது புர்ஹான் வானி என்னும் 21 வயது இளைஞனின் மரணமாகும். நமக்கெல்லாம் தீவிரவாத இயக்கமாக அறியப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் இளம் தளபதிகளுள் ஒருவர் இவர். நேற்று நடைபெற்ற இந்திய ராணுவத்துடனான சண்டையில் தனது இரண்டு தோழர்களுடன் கொல்லப்பட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் தெற்கில் உள்ள புலவாமா மாவட்டத்தில் ட்ரால் நகரத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் முசாபர் வானியின் இரண்டாவது மகன் தான் புர்ஹான் வானி.

2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் ஒடுக்குமுறைக்கு எதிராக காஷ்மீரில் நடைபெற்ற எழுச்சி மிகுந்த போராட்டங்கள் காஷ்மீர் விடுதலை போராட்டத்துக்கு ஒரு புதிய பரிணாமத்தை கொடுத்தது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால், 1990களில் நடைபெற்ற வீரியமான ஆயுதம் தாங்கிய போராட்டத்தைப் பற்றியும், இந்திய ராணுவத்தால் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட அப்பாவிகள், கூட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்கள், நூற்றுக்கணக்கில் காணாமல் போக செய்யப்பட்டவர்கள் என நடந்த அட்டூழியங்களை நேரில் அனுபவிக்காத, வெறும் வரலாறாக மட்டுமே அறிந்திருந்த ஒரு புதிய இளம் தலைமுறை இந்த போராட்டத்தை முன்னெடுத்தது என்பது தான்.

2010ல் அவர்கள் கையாண்ட போராட்ட வடிவமும் பயன்படுத்திய ஆயுதமும் மிகவும் எளிமையான ஒன்று. அது இந்திய ராணுவத்தினர் மீது கற்களை வீசி எறிவது. மிகச் சாதாரணமாக தோன்றும் இந்த போராட்டத்தில் ராணுவத்தால் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதுவே அவர்களின் போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தும். இதில் பெரும்பான்மையானவர்கள் நன்கு படித்த, வசதியான குடும்பப் பின்னணி கொண்ட இளைஞர்கள். இந்திய அரசும் ராணுவமும் தாக்குபிடிக்க முடியாமல் விழித்தது. ஏதும் இல்லாதவன் போராடுவது வேறு ஆனால் எல்லாம் இருப்பவன் போராடுவதை அவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை, தடுக்க முடியவில்லை.

இந்த மாற்றத்தைக் குறித்து சொல்லும் சமூக ஆய்வாளர்கள், 1990களில் காஷ்மீருக்கான விடுதலை/ 'ஆசாதி' என்னும் முழக்கம் முன்னிலை வகித்தது. ஆனால் இன்றைய தலைமுறைக்கு இந்திய ஆக்கிரமிப்பு அரசின் ஒடுக்குமுறையை எதிர்ப்பதும், அதன் ஒடுக்குமுறை கருவிகளான ராணுவம், போலீஸ், அரசு கட்டமைப்புகளை தாக்குவது தான் முதன்மையாகவும் அதற்கடுத்து தான் ஆசாதி வருகிறது என்கிறார்கள். இந்த புதிய விதையின் விளைச்சல் தான் புர்ஹான் வானி.

தனது 16ஆவது வயதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு பத்து நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறுகிறான் புர்ஹான். ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் சேர்கிறான். அவன் தலைக்கு இந்திய அரசு 10 லட்சம் ரூபாய் விலை வைக்கிறது. தன்னுடைய 21வது வயதில் அந்த அமைப்பின் முக்கிய தளபதியாக கொல்லப்படுகிறான். தீவிரவாதியாக 'நம்மால்' கொல்லப்பட்டவனின் இறுதிச் சடங்கு புகைப்படங்களை இணையத்தில் தேடி பாருங்கள். ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி அழுகிறார்கள், முழக்கமிடுகிறார்கள், மசூதிகளில் அவன் மரணத்திற்காக தொழுகை நடக்கிறது, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது, கற்கள் வீசப்படுகிறது, ராணுவ முகாம்கள் தாக்கப்பட்டுள்ளது, இணைய சேவையை அரசு முடக்கியுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் இதுவரை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏன் இத்தனை கொந்தளிப்பு? வெறும் 21 வயது 'தீவிரவாதி' கொல்லப்பட்டதற்காகவா இவ்வளவும் நடக்கிறது? அப்படி தன் வாழ்நாளில் அவன் என்ன தான் செய்துவிட்டான் அந்த மக்களுக்காக? அவன் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அம்மக்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளான். காஷ்மீரிகளின் போராட்டத்திற்கு புதிய முகம் கொடுத்துள்ளான்.

கடந்த ஐந்தாண்டுகளில் இணையத்தில் பரவலாக தொடர்பு வைத்திருந்தான் புர்ஹான். காஷ்மீர் பள்ளத்தாக்கின் காடுகளில் தன் தோழர்களுடன் பயிற்சி எடுப்பது, கிரிக்கெட் விளையாடுவது, குழுவினரோடு படம், பேட்டி என அதன் காணொளிகள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டான். மிக சமீபமான ஒரு வீடியோவில் ராணுவத்தையும் போலீசையும் எச்சரித்தும், அவர்களைக் குறித்து ஒரு பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்று பேசியுள்ளான். பேஸ்புக்கில் இப்போதும் அவை கிடைக்கிறது.

சர்வ வல்லமை பொருந்திய இந்திய அரசை எதிர்க்கும் துணிச்சலை மக்களிடம் ஏற்படுத்தினான். ராணுவத்தால் பெண்கள் பாதிக்கப்பட்டாலோ, போலியாக தீவிரவாதியென இளைஞர்கள் கொல்லப்பட்டாலோ ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் வீதியில் இறங்குகிறார்கள். ராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையே சண்டை நடைபெறும் இடங்களில் போராளிகளை பாதுகாக்க பொதுமக்கள் ராணுவத்தின் மீது கல்லெறிகிறார்கள், ராணுவ வாகனங்களை சிறைபிடிக்கிறார்கள். இதற்குமுன்பு இது போல் மக்கள் செயல்பட்டதில்லை என்று அரசே சொல்கிறது. இப்போது 16லிருந்து 30 வயதுக்கும் குறைவாகவே உள்ள இளைஞர்கள் தான் போராட்ட பாதைக்கு அதிகம் வந்துள்ளனர்.

புர்ஹான் அவர்களுக்கு ஒரு ஆதர்ச நாயகனாகவே இருக்கிறான். ஆதிக்க எதிர்ப்பின் அடையாளமாக மாறியுள்ளான். நாட்டுப்புற கதைகளின் நாயகனைப் போல் மக்கள் அவனை கொண்டாடுகின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் அவனைப் பற்றிய சாகச கதைகள் ஏராளம் உண்டு. புர்ஹான் வானியின் தந்தை சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் சொல்கிறார் 'காஷ்மீர் போராளிகளின் சராசரி வாழ்க்கை அளவு 7 வருடம் தான். என் மகன் 6 வருடங்கள் வாழ்ந்துவிட்டான். விரைவில் அவன் இறந்தால், இந்த வீட்டிற்கு அவன் ஒரு ஷாஹித்தாக (உயிர் தியாகம் செய்தவர்) தான் திரும்ப வேண்டும்'. இன்று அவ்வாறே திரும்பியுள்ளான்.

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு, இணைய சேவை துண்டிப்பு, ஆங்காங்கே கலவரம் என்று சொல்லி வெறிச்சோடி கிடக்கும் சாலைகளையும், நடுவே மறித்து போடப்பட்டிருக்கும் தடுப்பு கம்பிகளையும் அடைக்கப்பட்ட கடைகளையும் அருகே துப்பாக்கி ஏந்தி நிற்கும் ராணுவத்தையும் தான் ஊடகங்கள் நமக்கு காட்டுகிறது. இந்திய அரசின் உத்தரவு அப்படி. ஆனால் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கும் காலகட்டத்தில் இன்னும் எவ்வளவு காலகட்டத்திற்கு இவர்கள் பொய் சொல்லி திரிவார்கள். நாமும் 'பாகிஸ்தான் தீவிரவாதிகள்' என்று நம்பிக் கொண்டிருப்போம்.

இணையத்தில் தேடுங்கள். படியுங்கள். கேளுங்கள். பாருங்கள். ஒரு பெரும் மக்கள் கூட்டம் நம் பெயரில், இந்தியாவின் பெயரில் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு கிடக்கிறது. துப்பாக்கி முனையில், அமைதி என்ற பெயரில் வளர்ந்த ஒரு தலைமுறை அதை கேள்வியெழுப்ப தொடங்கியுள்ளது. ஒரு மகத்தான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நான் தொடங்கிவிட்டேன். 20 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு சொல்லித் தரப்பட்ட, திணிக்கப்பட்ட பொய் திரைகளை கிழித்து உண்மையை நோக்கிய என் பயணத்தை. மிகவும் கடனமாகத்தான் உள்ளது. ஆனாலும் தொடங்கிவிட்டேன். நீங்கள்?

ஷாஹித் புர்ஹான் வானிக்கு வீரவணக்கம்.

~~~ ஜோஷ்வா ஐசக் ஆசாத் ~~~

******

மேலே உள்ள பதிவு நீக்கப் பட்டது தொடர்பாக, தோழர் ஜோஷ்வா ஐசக் ஆசாத் அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறார்:

நாம் தோழர்கள்.

நான் கடந்த அஞ்சு வருசமா தலித்துகளின் படுகொலை, பாலியல் வன்கொடுமைகள், தீண்டாமை கொடுமைகள், சேரிகளின் மீதான தாக்குதல்கள், தலித்துகளின் மீதான போலீஸ் அடக்குமுறைகள் என மையநீரோட்ட ஊடகங்களால் மறைக்கப்பட்ட செய்திகளை புகைப்படங்கள், காணொளி ஆதரங்களோட பதிவு செஞ்சுன்னு வரேன். அப்பப்ப சாதி மதவெறி கூட்டம் கும்பலா வந்து வெத்து சவுண்ட் கொடுத்துட்டு போய்டுவாங்க. அந்த பதிவெல்லாம் அவர்களுக்கு சாதாரணமா இருந்துச்சு. இவன் ஒரு விடுதலைச் சிறுத்தை, ஒரு தலித் கிறிஸ்தவன், மத்தவங்கள போல இல்லாம இங்லீஸ்ல எழுதுறான் அவ்வளவு தான் வித்யாசம். அவங்க சிஸ்டத்துக்குள்ள நாம எந்த மாதிரியான எதிர்ப்ப காட்டணும், எதையெல்லாம் பேசணும், எப்ப பேசணும்னு கைடு போட்டு வெச்சிருக்கானோ அதன்படியே என் பதிவுகள் இருந்தது. என் மூலமா அந்த சிஸ்டத்துக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லனு ப்ரீயா உட்டுட்டாங்க.

இத்தன வருசத்துல நா போட்ட பதிவ ரிப்போர்ட் பண்ணி நீக்கியிருக்கும் முதல் பதிவு காஷ்மீரின் ஷாஹித் புர்ஹான் வானியோட பதிவு தான். பதிவு போட்ட கொஞ்ச நேரத்திலேயே இதுக்கு முன்ன எந்த தொடர்பும் இல்லாத காக்கி டவுசர்கள் குவியத் தொடங்குனாங்க. ஒருத்தன் எடுத்ததும் 'போடா பாகிஸ்தானுக்கு'னு சொல்லிட்டான். அவன்கிட்ட டேய் நா கிறிஸ்டியண்டா. என்ன எதாச்சு அமெரிக்கா ஆஸ்திரேலியா ஐரோப்பானு அனுப்பி வெச்சுடுங்கனு கோரிக்க வெச்சேன். சாய்ந்தரம் பதிவ தூக்கிட்டாங்க. தமிழ்நாட்டிலுருந்து விடுதலைச் சிறுத்தைகளில் இருக்கும் ஒரு தலித் கிறிஸ்தவன் காஷ்மீரின் புர்ஹான் வானிக்காக பேசுவான் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவ்ங்க சிஸ்டத்தின் டிசைனும் அதை ஏற்கவில்லை. இவனை என்னவென்று திட்டலாம் என்று குழம்பியிருப்பார்கள். அப்போது தான் நான் ஒரு அச்சுறுத்தலாக மாறினேன்.

புர்ஹான் வானி பற்றி இஸ்லாமியர்கள் பேசுவது அவர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை. முதலில் காஷ்மீரிகளின் விடுதலை போராட்டத்தில் அவர்களின் மதம் ஒரு முக்கிய பங்கை வகித்தாலும் அதுவே முக்கிய பாத்திரமில்லை. ஒடுக்குமுறை - ஆக்கிரமிப்பு - ஆதிக்க எதிர்ப்பு தான் அவர்களின் போராட்டத்தில் முதலிடம் வகிக்கிறது என்பதை நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். ஒரு இஸ்லாமிய தோழனால் சொல்ல முடியாத நேர்மையான உண்மையான கருத்தை நாம் சொல்லலாம். அவர்களை ஆதரித்து பேச வேண்டும் என்றில்லை. முதலில் பேசத் தொடங்குவோம். அங்கு நடப்பதை தெரிந்துக் கொள்வோம். தலித்துகளுக்காக தலித்தல்லாதவர்கள் பேச வேண்டியது போன்று தான் இதுவும்.

வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் நடப்பதற்கே உரிமை மறுக்கப்படுபவர்கள் நாம். வீட்டிற்கு வெளியே ஒவ்வொரு பத்து அடிக்கும் துப்பாக்கி முனையில் வாழ்பவர்கள் அவர்கள். நம்மையும் அவர்களையும் இணைக்குக் ஒரே உறவு - நாமிருவரும் ஒடுக்குமுறைக்கு எதிரானவர்கள் என்பதே.

இதைத் தான் புரட்சியாளன் சேகுவாரா அன்றே சொல்லிவிட்டார்.

~~~ ஜோஷ்வா ஐசக் ஆசாத் ~~~

Saturday, December 20, 2014

வேலை வெட்டி இல்லாமல் அல்லது காசுக்காக இதை எழுதவில்லை


சமூகவலைத் தளங்களில் எழுதும் என்னைப் போன்ற பலர், வேலை வெட்டி இல்லாதவர்கள் அல்ல. எங்கள் எல்லோருக்கும் வாரத்திற்கு நாற்பது மணிநேர வேலையும், குடும்பப் பொறுப்புகளும் இருக்கின்றன. ஏனென்றால், நாங்கள் எல்லோரும் உழைத்து வாழ வேண்டுமென நிர்ப்பந்திக்கப் பட்ட உழைக்கும் வர்க்க மக்கள். எங்களில் யாரும், வேலையே செய்யாமல் பணத்தாள்களை மட்டும் எண்ணிக் கொண்டிருக்கும் சோம்பேறி முதலாளிகள் அல்ல.

 "உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில், சமூக வலைத் தளங்களில் எழுதுங்கள்" என்று, சில தினங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு சிலர் பின்வருமாறு எதிர்வினையாற்றி இருந்தனர்:
//எங்களுக்கு யாராவது காசு கொடுத்தால் எழுதுகிறோம்!//

இந்தக் கூற்றின் மூலம் அவர்கள் தெரிவிக்க விரும்புவது இது தான்:

//நாங்கள் அடிமைகள் தான். மறுக்கவில்லை. யார் பணம் கொடுத்தாலும் உழைப்பை விற்கத் தயாராக இருக்கிறோம். எங்களுக்கென்று ஒரு தனித்தன்மை, சுயகெளரவம் கிடையாது. சுதந்திரத்தை பற்றியும் அக்கறை இல்லை.//

"நீங்கள் யாருடைய ரொட்டியை சாப்பிடுகிறீர்கள்? அவருடைய வார்த்தைகளைப் பேசுகின்றீர்கள்." என்பது ஒரு பழமொழி. எங்களுக்கு காசு கொடுப்பவர் யாராக இருந்தாலும், அவர்கள் சொல்வதை மட்டும் தான் எழுத முடியும். அதனால் தான், வணிக நோக்கில் இயங்கும் ஊடகங்கள் எல்லாம், குறிப்பிட்ட தகவல்களை மட்டுமே வெளியிடுகின்றன. ஏனென்றால், அவர்களுக்கு காசு கொடுக்கும் விளம்பரதாரர்கள் விரும்புவதை மட்டுமே வெளியிட முடியும். மற்றவை சுயதணிக்கை செய்யப்படும்.

உதாரணத்திற்கு, ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் இனவாதமாக கூட இருக்கலாம். இனவாதம் கவர்ச்சிகரமாக இருப்பதால், அதற்கு சந்தையில் கேள்வி அதிகமாக இருக்கின்றது என்பதால் தான், முதலாளிகளும் விளம்பரம் கொடுத்து ஊக்குவிக்கிறார்கள்.

இலங்கையில் உள்ள சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இன்று இனவாதம் பேசுபொருளாக உள்ளதற்கு காரணம், அதற்கான சந்தை மதிப்பு அதிகம் என்பதால் தான். எப்படியான அரசாங்கம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதையும், மக்களது அரசியல் கருத்து எதுவாக இருக்க வேண்டும் என்பதையும், சந்தை தான் தீர்மானிக்கிறது.

"முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டுகின்றது." என்றார் கார்ல் மார்க்ஸ். பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைத் தளங்கள் யாவும், முதலாளித்துவத்தின் இலாபவெறிக்காக உருவாக்கப் பட்டவை தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மறுபக்கத்தில் அது ஜனநாயகத்திற்கான அசைவியக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.

முதலாளிகள் விரும்பும் தகவல்களை மட்டுமே வெளியிட்டு வந்த வணிக ஊடகங்கள், தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக நின்று பிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. மேலை நாடுகளிலேயே, பல பிரபலமான பத்திரிகைகள் நடத்த முடியாமல் முடங்கிப் போயுள்ளன. அந்த இடத்தை சமூக வலைத்தளங்கள் மெல்ல மெல்ல ஆக்கிரமித்து வருகின்றன.

இன்று பிரபலமான வணிக ஊடகங்களே, தமது தகவல்களை இணையத்தில் இருந்து பெற்றுக் கொள்கின்றன என்பது இரகசியம் அல்ல. இணையத் தொடர்பு வைத்திருக்கும் மக்கள், தமது சொந்தப் பிரச்சினைகள் பற்றியும், சுற்றாடலில் நடக்கும் மாற்றங்கள் பற்றியும் எழுதி வருகிறார்கள். அதன் மூலம், முன்னொருபோதும் இல்லாத சமூக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றது.

மீண்டும் ஒருமுறை கூறுகிறேன். சமூகவலைத் தளங்களில் சமூகப் பிரச்சினைகள் பற்றிப் பேசும் யாரும் "வேலை வெட்டி இல்லாத சோம்பேறிகள்" அல்ல. உழைத்துக் களைத்து வீடு வந்து, எமது சொந்த அரசியல் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் உழைக்கும் வர்க்கம். இவ்வளவு காலமும் வணிக ஊடகங்களால் ஒதுக்கப்பட்டு வந்த குரலற்றவர்கள்.

தங்களது ஆன்மாவைத் தொலைத்த அடிமைகள், யாரோ ஒரு முதலாளி கொடுக்கும் பணத்திற்காக விபச்சாரம் செய்யலாம். ஆனால், நாங்கள் சுதந்திரமான மனிதர்கள் என்ற தன்முனைப்பு எங்களுக்கு இருக்கிறது. அதனால் தான் எழுதுகின்றோம். ஏனென்றால், ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களால் நடத்தப் படும் நிர்வாகக் கட்டமைப்பு ஆகும். பெரும்பான்மை மக்களின் பெயரில், ஒரு சிறு மேட்டுக்குடியினர் தீர்மானிப்பது ஜனநாயகம் ஆகாது. அதை வேண்டுமானால் "பண நாயகம்" என்று அழைக்கலாம்.


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 

Friday, March 21, 2014

எமது உழைப்பைத் திருடி விற்கும் பேஸ்புக்கிடம் கூலி கேட்போம்


பலருக்கு இதைக் கேட்கும் பொழுது சிரிப்பு வரலாம். ஆனால், ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். ஏன் பேஸ்புக் நிறுவனம், அதைப் பாவிக்கும் எமக்கு கூலியாக பணம் கொடுக்கக் கூடாது? தமிழில் முகநூல் என்று அழைக்கப்படும், பேஸ்புக் பாவனையாளர்கள், சில விடயங்களை அவதானித்திருப்பார்கள். விளம்பரங்களுக்கு என ஒதுக்கப்படும் இடம் அதிகரிக்கப் பட்டுள்ளது. எமக்கான பக்கத்தில் கூட விளம்பரங்கள் வருகின்றன. எமது அஞ்சல் பெட்டிக்குள் நாம் கேட்காமலே விளம்பரங்கள் வந்து குவிகின்றன. அதே நேரம், பேஸ்புக் பாவனையாளர்கள் மத்தியிலும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றது. உண்மையில், பேஸ்புக் நிறுவனம் அதைப் பாவிக்கும் எங்கள் எல்லோருக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது.

கடந்த வருடத்தில் இருந்து முகநூலில், யார் வேண்டுமானாலும் பணம் கொடுத்து தனது தகவலை எல்லோருடைய கணக்கிலும் தெரியச் செய்ய முடியும். ஒரு தகவலை பிரசுரிப்பவர், அதற்காக குறிப்பிட்ட தொகை பணம் கொடுத்தால் போதும். இது பல வர்த்தக நிறுவனங்களை பெரிதும் கவர்ந்துள்ளது. தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்தப் புதிய ஏற்பாடு, பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்கள் தோன்றிய நோக்கத்தை சிதைக்கின்றது. பேஸ்புக் பாவனையாளர்கள் மத்தியிலான போலி சமத்துவம் மறைந்து, அந்த இடத்தில் பணக்காரர், ஏழைகள் என்ற ஏற்றத் தாழ்வு உண்டாகின்றது.

நிச்சயமாக, பேஸ்புக் நிறுவனம் சமூக சேவைக்கான தொண்டு நிறுவனம் அல்ல. தொடக்கத்தில் இருந்தே இலாபம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. பாவனையாளர்களான நாங்கள், பேஸ்புக்கில் பிரசுரிக்கும் ஒவ்வொரு தகவலும், தரவேற்றும் ஒவ்வொரு நிழற்படமும், பேஸ்புக் நிறுவனத்தின் சொத்துக்களாக மாறி விடுகின்றன. நாம் எமது கணக்கை இரத்து செய்து விட்டு சென்றாலும், அந்த தகவல்கள் யாவும் பேஸ்புக்கில் தொடர்ந்தும் சேமித்து வைத்திருக்கப் படும். அதாவது, எமது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவல்கள், பேஸ்புக்கில் பகிரங்கமாக வைக்கப் படுவதல்ல இங்கேயுள்ள பிரச்சினை. அது நமது விருப்பத்திற்கு மாறாக, ஒரு விற்பனைப் பண்டமாக மாற்றமடைகின்றது. ஒரு விற்பனைப் பண்டம் வைத்திருப்பவர், அதை விற்று இலாபம் சம்பாதிக்க முடியும்.

தற்போது உலகம் முழுவதும் உள்ள பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனை தாண்டி வருகிறது. அவர்கள் அனைவரும் பிரசுரித்த பல கோடிக் கணக்கான தகவல்களை, பேஸ்புக் நிறுவனம் கையகப் படுத்தி வைத்திருக்கிறது. பேஸ்புக் ஒரு நாடு என்று நினைத்துக் கொண்டால், அது தான் இன்று உலகில் சனத்தொகை கூடிய இரண்டாவது பெரிய நாடாக இருக்கும். ஒரு பில்லியன் பேஸ்புக் பிரஜைகள், இருபது நிமிடங்களுக்குள் ஒரு மில்லியன் இணைப்புகள், ஒரு மில்லியன் தகவல்களை அனுப்புகிறார்கள். இரண்டு மில்லியன் நண்பர்களை சேர்த்துக் கொள்கிறார்கள். 

இந்தப் புள்ளி விபரமானது, பேஸ்புக் வலையமைப்பு எந்தளவு விரிவானது என்பதை மட்டும் காட்டவில்லை. பேஸ்புக் நிறுவனத்தின் மொத்தப் பெறுமதி என்னவென்று கணிப்பிடவும் உதவுகின்றது. இந்த நிமிடத்தில், பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 140 பில்லியன் டாலர்கள். இது சில நேரம், மிகைப் படுத்தப் பட்ட தொகையாக இருக்கலாம். ஆனால், கடந்த வருடம் பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கெர்பெர்க், ஒரு நாளைக்கு 6 மில்லியன் டாலர்கள் சம்பாதிப்பதை தடுத்து நிறுத்தவில்லை.

பேஸ்புக் நிறுவனத்தின் இலாப விகிதம் வருடாந்தம் அதிகரித்துக் கொண்டிருப்பதால், அதற்கு எதிரான எதிர்ப்புக் குரல்களும் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில், நியூ யார்க் நகரை சேர்ந்த, Laurel Ptak என்ற ஆய்வாளர், அனல் பறக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் மையக் கரு: "பேஸ்புக் அதனது பாவனையாளர்களுக்கு கூலியாக பணம் கொடுக்க வேண்டும்." அறிக்கையின் தொடக்கத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்: "பேஸ்புக் பயன்படுத்துவது,  நட்பு அடிப்படையிலான செயல் என்று அவர்கள் கூறுகின்றார்கள். நாங்கள் இதனை கூலி கொடுக்கப் படாத இலவச உழைப்பு என்று சொல்கிறோம். "லைக்", "குறுஞ் செய்தி", "இணைப்பு" போன்ற ஒவ்வொன்றும் அவர்களுக்கு இலாபமாக மாறுகின்றது. நாங்கள் எமது தகவல்களை மற்றவர்களுடன் "பகிர்ந்து கொள்கிறோம்" என்று அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் அதனை "தகவல் திருட்டு" என்று அழைக்கின்றோம்."

Laurel Ptak கூறுவதன் படி, நாம் பேஸ்புக்கில் பிரசுரிக்கும் ஒவ்வொரு தகவலும் எமது உழைப்பில் இருந்தே உருவாகின்றது. அதற்காக நாம் நேரத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி, ஆக்கபூர்வமான ஒன்றை செய்கின்றோம். நிச்சயமாக, அதுவும் ஒரு உழைப்பு தான். ஆனால், விலை தீர்மானிக்கப் படாத உழைப்பு, உபரி மதிப்பாக சேமித்து வைக்கப் படுகின்றது. நியாயமாகப் பார்த்தால், எமக்குச் சேர வேண்டிய, எம்முடைய உழைப்பின் உபரி மதிப்பு, இன்னொருவரால் பணமாக மாற்றிக் கொள்ளப் படுகின்றது. இதைத் தான் திருட்டு என்று சொல்கிறோம். 

உதாரணத்திற்கு, பேஸ்புக் ஒரு புத்தகம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். பல்லாயிரம் நபர்கள் சேர்ந்து எழுதிய ஒரு புத்தகம் அது. பலரின் கூட்டு உழைப்பால் உருவான புத்தகம் விற்று வரும் ராயல்ட்டி தொகையை, ஒரு சிறிய குழுவினர் சொந்தமாக்கிக் கொள்கின்றனர். இந்தப் பகற் கொள்ளையை தடுக்க வேண்டுமானால், பாவனையாளர்கள் அரசியல் மயப் படுத்தப் பட வேண்டும். நாங்கள் ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு இலவசமாக வேலை செய்கிறோம் என்ற உணர்வு, பாவனையாளர்கள் மத்தியில் உருவாக வேண்டும். பாவனையாளர்களும் பேஸ்புக் நிறுவனத்திற்கு கிடைக்கும் இலாபத்தில் பங்கு கேட்க வேண்டும்.

பேஸ்புக் நிறுவனம் இதைக் கேட்டு விட்டு, நாளைக்கே எங்கள் எல்லோருக்கும் பணம் கொடுக்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. சமூக வலையமைப்பில் ஏகபோக உரிமை கொண்டாடும் அவர்கள், இதைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பார்கள். ஆனால், உழைப்பவர்கள் ஊதியம் கேட்க முடியும் என்ற நியாயமான கோரிக்கை ஒரு இணையப் புரட்சிக்கு வித்திட முடியும். அதுவே பேஸ்புக் நிறுவனத்தின் பலவீனமும் ஆகும். ஏனெனில், பாவனையாளர்கள் இன்றி பேஸ்புக் இயங்க முடியாது. அதனால் தான் பாவனையாளர்கள் அரசியல் மயப் படுத்தப் பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறோம். "உழைப்பு என்றால் என்ன? உபரி மதிப்பு எவ்வாறு உருவாகின்றது?" போன்ற அறிவைப் பெற வேண்டும்.

Laurel Ptak வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை பேஸ்புக் நிறுவனம் பற்றியது தான். ஆனால், பாவனையாளர்களின் உழைப்பில் இருந்து பெறப் படும் உபரி மதிப்பை விற்றுக் காசாக்கும் வேறு சில இணைய நிறுவனங்களும் உள்ளன. கூகிள், டிவிட்டர், யாகூ போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம். இது பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பரவும் நேரம், அது இணையப் புரட்சியை மட்டுமல்லாது, சமூகப் புரட்சியையும் உருவாக்கும். ஏனெனில், இது போன்று மகளின் இலவச உழைப்பை திருடிச் சம்பாதிக்கும் பல நிறுவனங்கள் சமூகத்தில் உள்ளன. 

முதலில் நாங்கள் உழைப்பு, வேலை போன்ற சொற்களுக்கு அர்த்தம் என்னவென்று அறிந்து கொள்வோம். அதற்குப் பிறகு, புதிய நண்பர்களை உருவாக்கி, எமது நட்பு வட்டத்தை விரிவு படுத்திக் கொள்வோம். 

 (பிற்குறிப்பு: இந்தக் கட்டுரை, இணையத்தில் செயற்படும் பெல்ஜியத்தை சேர்ந்த சமூக- அரசியல் ஆர்வலர்கள் அனுப்பிய தகவலை தழுவி எழுதப் பட்டது.)

மேலதிக தகவல்களுக்கு:
1.Wages for facebook
2.Wages for Facebook? Maybe it's not So Crazy

இதனுடன் தொடர்பான முன்னைய பதிவுகள்: