

இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கொல்லப்பட்ட இளைஞன் மறைந்திருந்த போராளிகளை அமெரிக்கப் படைகளுக்குக் காட்டிக்கொடுத்த குற்றத்திற்காக ஊர்மக்களின் வற்புறுத்தலினால் அவனுக்குத் தண்டனை வழங்கியவர்கள் அவனது தந்தையும் தம்பியும்.
ஈராக்கில் தற்போது நடந்துகொண்டிருக்கும் யுத்தத்திற்கு பொதுமக்களின் ஆதரவு எவ்வளவு தூரம் இருக்கிறதென்பதற்கு மேற்குறிப்பிட்ட சம்பவம் ஒரு உதாரணம். அமெரிக்கப்படைகள் ஈராக்கை ஓரிரு மாதங்களில் கைப்பற்றியவுடன் அங்கே எந்த எதிர்ப்பியக்கமும் வராது எனத் திட்டவட்டமாகக் கூறினர் அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள். வியட்னாமுடன் ஒப்பிடமுடியாது என ஆரூடம் கூறினர். இருப்பினும் ஈராக் மெல்ல மெல்ல வியட்னாமாகி வருவதை பலர் தற்போது ஒத்துக்கொள்கின்றனர். முதலாவது வளைகுடா யுத்தத்தின்போது இறந்த அமெரிக்கப்படையினரின் எண்ணிக்கையைவிட தற்போது நடக்கும் கொரில்லாப்போரில் இறந்த படையினரின் எண்ணிக்கை அதிகம். இது ஈராக்கைக் கைப்பற்றுவதற்கான போரில் இறந்த படையினரைவிட அதிகம். இவை அமெரிக்க அரசு வழங்கிய உத்தியோக பூர்வ அறிக்கையிலிருந்து பெறப்பட்டவை.
ஈராக் போரில் இறக்கும் படையினரைப்பற்றிய சரியான எண்ணிக்கை அறிவிக்கப்படுவதில்லை. பல மரணங்கள் "விபத்துகளில்" ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகின்றன. அங்கே தினசரி சராசரி 20 தாக்குதற் சம்பவங்கள் நடைபெறுவதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இராணுவ வாகனத் தொடர்கள் கண்ணிவெடியில் சிக்குதல், நடந்து செல்லும் படையினர் தெருவோர மிதிவெடிக்கு அகப்படல் போன்ற அன்றாட தாக்குதல் சம்பவங்களைத் தவிர அரசியல் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தாக்குமளவிற்கு எதிர்ப்பியக்கம் வளர்ந்துள்ளது. பலருக்குப் "புரியாத விடயமாக" ஐ.நா சபை, செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்களும் தாக்கப்பட்டுள்ளன.
முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்ட ஈராக் விடுதலைப்போராட்டம், அமெரிக்கப் படைகள் நாட்டினுள் வந்தவுடனேயே ஆரம்பிக்கவில்லை. அதற்குச் சிறிது காலம் எடுத்தது. திடீரென நடந்த ஆட்சி மாற்றத்தால் தடுமாறிப்போன மக்கள் அமெரிக்க இராணுவத்திடம் இருந்து நிறையவே எதிர்பார்த்தார்கள். சதாமால் ஓரங்கட்டப்பட்டிருந்த பிற அரசியல் சக்திகளுக்கு இடம் கொடுக்கும் வகையில் பொதுத் தேர்தல்கள நடாத்தப்பட்டு ஜனநாயக ஆட்சி நடப்பதை மக்கள் விரும்பினர். நாட்டின் பொருளாதார மீள்கட்டுமானம் விரைவாக நடக்கவேண்டுமென அவர்கள் கோரினர். அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. பொதுத் தேர்தலையோ ஜனநாயகத்தையோ காணவில்லை. ஒரே இரவில் வேலையிழந்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள் அதிர்ஷ்டக்காரருக்கு மட்டுமே வேலை கிடைப்பதைக் கண்டனர். அதிருப்தி அமைதி வழி ஊர்வலமாகி அமெரிக்கப்படைகளின் நிலைகளை முற்றுகையிட்டபோது, அமைதியிழந்த படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இறந்தவர்களின் சடலங்களைப் புதைக்கும் போது பலர் ஆயுதமேந்திப் போராடப்போவதாகச் சூளுரைத்தனர். ஈராக்கின் நீண்ட கெரில்லாப் போர் இவ்வாறுதான் ஆரம்பமாகியது.
ஒவ்வொரு நாளும் நடக்கும் தாக்குதற் சம்பவங்களைப் பார்க்கும்போது இவை மிகச் சிறப்பபாக ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்படுவதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் இவற்றை நடத்துவது யார் என்பதில்தான் வேறுபட்ட அபிப்பிராயங்கள் கூறப்படுகின்றன. பதவியிழந்து தூக்கில் தொங்கிய சதாம் ஹுசையினின் ஆதரவாளர்கள்தான் இவர்கள் என்கிறது அமெரிக்கா. அரபுப் பத்திரிகையாளர்கள் புதிய இஸ்லமியத் தேசியவாத இயக்கங்கள் உருவாகியுள்ளதாகக் கூறிவருகின்றனர். இதற்கிடையே மறக்காமல் அவ்வப்போது அல்-கைதாவின் பெயரும் அடிபடும். இந்த ஊகங்கள் மேலெழுந்தவாரியாகச் சரிபோல தோன்றினாலும் அறுதியிட்டுக் கூறமுடியாது உள்ளன. ஒரு சில சதாம் ஆதரவாளர்களினால் பெரும்பான்மை ஆதரவைத் திரட்ட முடிந்தது எபபடி? புதிய இயக்கங்கள் எப்படி நுட்பமான இராணுவத் தந்திரோபாயங்களை கையாள்கிறார்கள்? மதத்தை முக்கியமாக முக்கியமாகக் கருதாத சமூகத்தினுள் அல்-கைதா நுழைந்தது எப்படி?
மத்திய கிழக்கு நாடுகளில் ஈராக் இராணுவம் பிரமாண்டமானது. பல சிறப்புப் படையணிகளைக் கொண்டது. இதற்கும் மேலாக தசாப்தகால ஈரானுடனான போரில் அனுபவங்களைப் பெற்றுக்கொண்டது. இத்தகைய இராணுவம்தான் ஈராக்கை ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் பிராந்திய வல்லரசாகக் காட்டியது. மார்ச் 2003 ல் நடந்த அமெரிக்கப் படையெடுப்பின்போது சேவையிலிருந்த படைவீரர்கள் நான்கு லட்சத்திற்கும் அதிகம். ஈராக்கை அமெரிக்கா கைப்பற்றிய நாளில் இருந்து அவ்வளவு வீரர்களுக்கும் ஒரே நாளில் வேலை பறிபோனது. வேறு எந்த வேலையும் தெரியாத அவர்களின் எதிர்காலம் என்ன? என்பதைப்பற்றி ஆக்கிரமிப்பாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பாக்தத்தில் முன்னாள் இராணுவ வீரர்கள் வேலை கேட்டு ஊர்வலமாகப் போனபோது இவ்வாறு கூறினார்கள்: "வேலை கிடைக்காவிட்டால் எதிர்ப்பியக்கத்தில் இணைந்து கொள்வோம்". அன்று சொன்னதைத் தற்போது செயலில் காட்டுகிறார்கள்.
சதாம் ஹுசையினுக்கும் பிற ஆட்சியாளருக்கும் அமெரிக்கா படையெடுக்கப்போவது முன்கூட்டியே தெரிந்திருந்தது. ஒருபக்கம் நாட்டினுள் நுழையும் எதிரிப்படைகளை எதிர்த்துச் சண்டையிடும் பொறுப்பை பெதாயின் படையினரிடமும், மறுபக்கம் பாக்தாத்தை பாதுகாக்கும் கடமையைக் குடியரசுப் படையினரிடமும் ஒப்படைக்கப்பட்டது. இவர்களின் எதிர்ப்பு வீணாகி அந்நியப்படைகள் நாட்டை ஆக்கிரமிக்கும் பட்சத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆராயப்பட்டன. அதாவது வியட்னாம் பாணியிலான நீண்ட கெரில்லாப் போராட்டத்திற்கு அப்போதே திட்டமிடப்பட்டுவிட்டது.
இரகசியமாகவும், பகிரங்கமாகவும் பல திட்டங்கள் தீட்டப்பட்டன. சிறு ஆயுதங்கள் (AK47) பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. இது முன்கூட்டியே நடைபெற்ற விடயம். தற்போது கடைசி தருணத்தில் துப்பாக்கிகள், ஆர்.பி.ஜி ரொக்கட் லோஞ்சர்கள் மற்றும் வெடிமருந்துகள் போன்றவற்றை இராணுவ அதிகாரிகள் தத்தமது வீடுகளுக்குக் கொண்டுபோய் பதுக்கி வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. ஆயுத விநியோகம் மட்டுமல்லாது நிறுவனமயமாக்கல் விடயத்திலும் கவனம் செலுத்தப்பட்டது. கிராமங்கள், நகரங்கள் எங்கும் "செல்" எனப்படும் சிறு சிறு இரகசியக் குழுக்கள் அமைக்கப்பட்டன. குறைந்தது மூன்று பேரும், கூடியது பத்துப்பேரும் கொண்டவையாக குழுக்கள் உருவாக்கபபட்டன. இலகுவில் கொண்டு செல்லக்கூடிய ஆயுதங்களை மாத்திரமே இவர்கள் வைத்திருப்பர். எந்த இடத்தில் எந்தத் தாக்குதல் செய்வதென்பதை அந்தக் குழு மட்டுமே சுதந்திரமாக முடிவு செய்யும். அதாவது ஒரு குழு ஓரிடத்தில் என்ன செய்யப்பபோகிறது என்பது அடுத்த குழுக்களுக்குத் தெரியாது. தாக்குதல் திட்டங்கள் மட்டுமல்ல உறுப்பினர்களைப்பற்றிக் கூட அடுத்த குழுக்களுக்கு எதுவும் தெரியாது. இதனால் எங்காவது ஒரு நபர் இராணுவத்திடம் அகப்பட்டு சித்திரவதையினால் சக போராளிகளைக் காட்டிக் கொடுத்தாலும் கூட பிற குழுக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.
உலகில் பலர் ஈராக் என்றால் சதாம் ஹுசைன் மாத்திரம்தான் என்றுதான் அறிந்து வைத்திருக்கின்றனர். சதாம் தலைமை தாங்கிய பாத் கட்சி பற்றி அதன் அரசியல் வரலாறு பற்றி அறிந்தவர்கள் மிகக்குறைவு. சதாம் என்ற "தனிநபர்" ஈராக்கை ஆளவில்லை. அதற்குப் பின்னால் பாரம்பரியம் மிக்க பாத் கட்சி இருந்தது. அதற்கெனக் குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தம் இருந்தது.
பாரிஸ் பலகலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சிரிய கிறிஸ்தவரான மிஷெல் அஃப்லக்கின் சிந்தனையில் பிறந்த அரபுத் தேசியவாதத்தின் நிறுவனமயமாக்கல்தான் பாத் கட்சி . சதாம் என்னதான் அதிகார மமதையில் ஆட்சி புரிந்தாலும், பாத்தின் அரசியற் கொள்கைகளை பின்பற்றியவர் என்பதை மறுக்கமுடியாது. அப்போது சிரிய ஆட்சியாளர்கள் தம்மை "இடதுசாரி பாத்" என்றும் ஈராக்கியரை "வலதுசாரி பாத்" என்றும் அழைத்தனர். ஈராக் பாத்தில் சதாம் அசைக்க முடியாத தலைவராக இருந்தது உண்மை. ஆனால் கட்சி தனது செல்வாக்கை நாடு முழுவதும் பரப்பியிருந்தது. அவ்வப்போது கட்சி பொதுத்தேர்தல்கள் நடாத்தப்பட்டன. அதிக சுதந்திரமற்ற , ஜனநாகமற்ற சூழ்நிலை நிலவிய போதும் ஈராக்கை சதாம் என்ற தனிநபர் மட்டுமல்ல பாத் கட்சியும் சேர்ந்தே ஆட்சி செய்தது.
பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளால் நியமிக்கப்பட்ட மன்னராட்சிக்கு எதிரான போராட்டம் மூலமே பாத் கட்சி ஆட்சிக்கு வந்தது. கொரில்லாப் போராட்டம், வெகுஜனக் கிளர்ச்சிகளை ஒழுங்குபடுத்தல் என்பன பாத் கட்சி வந்த பாதைகள். மூன்றாம் உலக நாடுகளின் பிற விடுதலை இயக்கங்களைப் போல் காலணிய ஆட்சிக்கு எதிராக பிரதேச தேசியவாதத்தை தனது அரசியலாக முன்னெடுத்தது. இத்தகைய பின்னணியில் வந்த பாத் கட்சி தற்போது சீர்குலைந்து அழிந்து போய்விட்டதாகக் கருதுவது யதார்த்தத்தை மறுப்பது போலாகும். சதாமின் காலத்தில் தொழில்முறை அரசியல்வாதிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது உண்மை. நிர்வாகத் தேவைகருதி பலதரப்பட்டவர்களையும் சேர்த்துக் கொள்வதுண்டு. ஆனால் தற்போது நடப்பது அந்நிய ஆக்கிரமிப்புக் கெதிரான தேசிய விடுதலைப் போராட்டம். ஆகவே இன்றைய நிலையில் தேவையற்ற பலர் கழற்றி விடப்பட்டதும் அத்தகைய உதிரிகள் அமெரிக்கருடன் கூட்டுச்சேர்வதும் நடந்தது. அப்படியானவர்களில் பலர் அமெரிக்கப்படைகளால் கைது செய்யப்பட்டதால் அல்லது சரணடைந்ததால் பாத் கட்சியின் கதை முடிந்தது என தவறாகக் கணிப்பிடப்பட்டது.
அமெரிக்க அரசு என்னதான் சதாமின் ஆதரவாளர்களே தற்காலத் தாக்குதல்களுக்குக் காரணம் என்று திரும்பத் திரும்பக் கூறினாலும் அது வெறும் பிரச்சாரமாகவே அமைந்து விடுகிறது. சதாம் என்ற சர்வாதிகாரியை அப்புறப்படுத்தவேதான் ஈராக் போனதாகவும் பதவியிழந்த சர்வாதிகாரியின் ஆதரவாளர்களை அடக்கும் பணி இருப்பதால்தான அங்கே தொடர்ந்து இருப்பதாகவும் சாட்டுச் சொல்லத்தான் இந்தப் பிரச்சாரம் செய்யப்படுகிது. இதன் அர்த்தம் இன்னும் எத்தனை அமெரிக்கப் படையினர் இறந்தாலும்அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேறும் நோக்கம் தற்போது இல்லை என்பதே . எதிர்ப்பைச் சமாளிக்க மேலதிக படையினர் குவிக்கப்படலாம். பிறநாட்டு இராணுவங்களை அனுப்பும்படி கோரப்படலாம்.
எது எப்படியிருப்பினும் அமெரிக்கப் படையினருக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள் பாத் கட்சியினாலேயே தலைமை தாங்கப்படுவது தற்போது தெளிவாகியுள்ளது. அவர்களின் யுத்த தந்ரோபாய முறைதான் முன்குறிப்பிட்ட சிறு போராளிக்குழுக்களை அமைக்கும் முறை. இந்தப்போர் முறையை முன்னொரு காலத்தில் சோவியத் யூனியனும் சொல்லிக் கொடுத்திருந்து. அன்று சோவியத் யூனியன் வழங்கிய AK47 , ஆர்.பி.ஜீ , சாம் போன்ற சிறு ஆயுதங்கள் இன்று உலகின் அதிநவீன ஆயுதங்களை வைத்திருக்கும் அமெரிக்க இராணுவத்தை எதிர்க்கப் பயன்படுகின்றன. இவற்றின் முன்னாள் அதியுயர் தொழில் நுட்பம் தோற்றுப்போகிறது.
ஈராக்கின் போராட்டம் இஸ்லாமியவாதிகளால் முன்னெடுக்கப்படுவதாக சிலர் கூறிவருகின்றனர். பிற அரபுநாட்டுச் செய்தி ஊடகங்கள் இது போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஏற்கெனவே சதாம் ஹுசைனை தமது போட்டியாளராக வெறுத்த அரபு நாடுகளின் மத்திய தர வர்க்கமே இந்தச் செய்தியைப் பரப்பிவருகிறது. இருப்பினும் ஈராக்கில் இஸ்லாமிய வாதிகளும் போராடுவது உண்மைதான். ஒருகாலத்தில் எதிரிகளாகவிருந்த மதசார்பற்ற பாத் கட்சிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் இடையில் "எனது எதிரியின் எதிரி எனக்கு நண்பன்" என்ற அடிப்படையிலான கூட்டு ஏற்பட்டுள்ளமை பலரை வியக்க வைத்துள்ளது. ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு நீடிக்கும் காலம்வரையில் இந்தக் கூட்டணியும் நீடிக்கும்.
போராட்டத்தில் பிற அரபு நாடுகளில் இருந்து வந்த தொண்டர்கள் பங்குபற்றுவது உண்மைதான். இருப்பினும் பெரும்பான்மையான போராளிகள் ஈராக்கியப் பிரஜைகள் என்ற உண்மையை அமெரிக்க அரசு உலகிற்கு மறைத்து வருகின்றது. தொடரும் வேலையில்லாப் பிரச்சினை, அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாமை, இராணுவக் கெடுபிடி , உள்நாட்டுக் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ளாத அந்நிய நாட்டுப்படைகளின் அத்துமீறல்கள் என்பன அதிக இளைஞர்களை போராளிகளாக்கி வருகின்றன. முன்பு சதாமின் ஆட்சி இதைவிட பரவாயில்லை என்று கூறப் பலர் தலைப்பட்டுள்ளனர்.
ஈராக்கில் அமெரிக்கப் படைகளுக்கெதிரான போராட்டம் தொடர்வது ஈரான், சிரியா போன்ற அயல்நாடுகளுக்கு மகிழ்ச்சி தரும் விடயம். ஈராக் புதைசேற்றில் அமெரிக்கா சிக்கிக் கொண்டு தவிப்பதைப் பல நாடுகள் ஆர்வத்துடன் அவதானித்து வருகின்றன.
(பிற்குறிப்பு: இந்த ஆய்வுக் கட்டுரை சில வருடங்களுக்கு முன்னர் ஈராக்கில் போர் மும்முரமாக நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது. ஈராக்கிய விடுதலைப் போரின் பின்னணித் தகவல்களை அறிய விரும்புபவர்களுக்காக இங்கே பதிவிடுகின்றேன்.)