
அப்போஸ்தலர் பவுல் கர்த்தரின் அருளைப் பெற்ற இடமாக கருதப்படும் வழி இன்றும் உள்ளது. இஸ்ரேலையும், சிரியாவையும் பிரிக்கும் கோலான் மலைப் பள்ளத்தாக்கில் அந்த இடம் அமைந்துள்ளது. இன்று குனைத்திரா என்று அரபு மொழியில் அழைக்கப்படும் நகரம், ஒரு காலத்தில் பிரதான வர்த்தக மையமாக திகழ்ந்தது. அந்த மலைப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்கள். அதனால் உலக கிறிஸ்தவர்களுக்கு புனிதமான தேவாலயம் ஒன்றும் அங்குள்ளது. பண்டைய தேவாலயம் என்பதால் அது கிரேக்க ஒர்தொடோக்ஸ் முறையில் கட்டப்பட்டுள்ளது. இன்று குனைத்திரா நகரமும், சுற்றாடலும் இடிபாடுகளுடன், பாழடைந்து போய்க் காணப்படுகின்றது. அங்கே வாழ்ந்த மக்கள் எல்லோரும் அகதிகளாக, டமாஸ்கஸ்ஸில் வாழ்கின்றனர். கிறிஸ்தவர்களுக்கு புனிதமான குனைத்திரா நகரம் இஸ்ரேலியரின் விமானக் குண்டு வீச்சுகளால் தரைமட்டமாக்கப் பட்டது. புனித பவுலின் ஆலயத்திற்கு என்ன நடந்தது?
"இஸ்ரேலை யாராலும் தோற்கடிக்க முடியாது. எந்தப் போரிலும் வெற்றி இஸ்ரேல் பக்கம்." போன்ற கருத்துகள் உலகம் முழுவதும் பிரச்சாரப் படுத்தப் படுகின்றன. மேற்குலகில் இருந்து முடுக்கி விடப்படும் அரசியல் பிரச்சாரத்தை, சில புரட்டஸ்தாந்து சபைகளும் தமது நம்பிக்கையாளர் மத்தியில் பரப்புகின்றன. அன்றும் இன்றும், இஸ்ரேலின் வெற்றிகளுக்கு காரணம் நவீன ஆயுத தளபாடங்கள். அமெரிக்கா உலகின் உயர்தர தொழில்நுட்ப அறிவை, இஸ்ரேலுக்கு முதலில் வழங்கி விடும். அயலில் உள்ள அரபு நாடுகள் சம பலத்துடன் நிற்க விடாமல், சர்வதேச சமூகத்தின் பேரில் தடைகள் ஏற்படுத்தப்படும். அண்மையில் ரஷ்யா, சிரியாவுக்கு நவீன ஏவுகணைகளை விற்க முன் வந்த போது, அமெரிக்கா தடுத்து விட்டது.
1967 ம் ஆண்டு ஆறு நாள் நடந்த போரை, இஸ்ரேலின் மாபெரும் வெற்றியாக வரலாறு காட்டுகின்றது. ஜெருசலேம் உட்பட பாலஸ்தீனர்களின் மேற்குக்கரை, எகிப்தின் சினாய் பாலைவனம், சிரியாவின் கோலான் குன்றுகள் என்பன இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டன. இலங்கையில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதை, சிங்களவர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியது போல, யூதர்கள் அந்த வெற்றியை கொண்டாடினார்கள். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை உலக கிறிஸ்தவர்கள் எவ்வாறு ஆதரிக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. ஏனெனில் அந்த ஆறு நாள் போரில், கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலங்கள் பல இஸ்ரேலியரால் ஆக்கிரமிக்கப்பட்டன. அவை வெறும் தேவாலயங்கள் மட்டுமல்ல, அவற்றை சுற்றி வாழ்ந்த லட்சக்கணக்கான கிறிஸ்தவர்களும் ஆக்கிரமிப்புக்கு உள்ளானார்கள். பெருமளவு கிறிஸ்தவர்கள் அகதிகளாக அயல் நாடுகளில் தஞ்சம் கோரினார்கள். இயேசு பிறந்த புனித மண்ணில் வாழ்ந்தவர்கள் யாரும் உங்கள் கண்ணுக்கு கிறிஸ்தவராக தெரியவில்லையா? பாலஸ்தீன கிறிஸ்தவர்கள் அதனை அந்நிய ஆக்கிரமிப்பாகத் தான் பார்க்கிறார்கள். பாலஸ்தீன தேசியவாதம் கூட கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்ட கருத்தியல் என்பது குறிப்பிடத் தக்கது.
இஸ்ரேல், கோலான் குன்றுகளை 1967 ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றது. அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இன்றும் டமாஸ்கஸ் அகதிமுகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் கிராமங்களில் யூதர்கள் வந்து குடியேறி வாழ்கின்றனர். "ஆக்கிரமிக்கப் பட்ட பகுதிகளில் குடியேற்றம் செய்வது சட்டவிரோதம்" என்று ஐ.நா. ஆணை பிறப்பித்தது. ஆனால் இஸ்ரேல் அதை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, யூத குடியேற்றங்களை தொடர்ந்து அமைத்து வருகின்றது. "கோலான் குன்றில் குடியேற வருகிறீர்களா? நவீன வசதிகளுடன் கூடிய வீடுகள் காத்திருக்கின்றன." போன்ற விளம்பரங்கள் அமெரிக்க நாளிதழ்களில் வருகின்றன.
1973 ம் ஆண்டு, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோலான் குன்றுகளை மீட்கும் போரை சிரியா தொடங்கியது. "யொம் கிப்புர் யுத்தம்" என்று அழைக்கப்படும், அந்தப் போரின் ஆரம்பத்தில் சிரியப் படைகள் வெற்றிகளை குவித்தன. கோலான் குன்றுகளை மீட்டெடுத்தன. இஸ்ரேலியப் படைகள் பின்வாங்கி ஓடின. நவீன இஸ்ரேலின் வரலாற்றில் முதல் தடவையாக, "வெல்ல முடியாத நாடு" என்ற இமேஜ் நொறுங்கியது. ஆயினும் சிறிது நாட்களில் தன்னை சுதாகரித்துக் கொண்ட இஸ்ரேல் திருப்பித் தாக்கியது. எப்படி? தடை செய்யப்பட்ட நேபாம் குண்டுகளை வீசி, சிரியப் படைகளை பின்வாங்க வைத்தது.(பார்க்க: MIDDLE EAST: The War of the Day of Judgment )சர்வதேச சமூகம் சகுனி வேலையில் இறங்கியது. சமாதானப் பேச்சுவார்த்தை நாடகமாடி, கோலான் குன்றை மூன்று பிரிவுகளாக துண்டு போட்டது. மேற்கில் பெரும்பகுதியை இஸ்ரேல் தக்க வைத்தது. கிழக்கில் சிறிய பகுதி சிரியாவுக்கு கொடுக்கப்பட்டது. இடையில் சூனியப் பிரதேசம் ஒன்றை ஐ.நா. சமாதானப் படை காவல் காத்தது.
புனித குனைத்ரா நகரம் இன்று சூனியப் பிரதேசத்திற்குள் அகப்பட்டுக் கொண்டுள்ளது. உண்மையில் அது சிரியாவினால் நிர்வகிக்கப் படுகின்றது. 2001 ல், காலஞ் சென்ற போப்பாண்டவர் ஜோன் போல் அங்கு விஜயம் செய்து, பிரார்த்தனை செய்தார். பாப்பரசரின் விஜயத்தால், குனைத்ரா சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெற்றது. (பார்க்க: John Paul Prays for Peace In Former War Zone in Syria )
அங்கு சென்ற ஊடகவியலாளர்கள், இஸ்ரேலிய படைகளின் காட்டுமிராண்டித் தனத்தை கண்ணால் கண்டனர். குனைத்ரா நகரம் முழுவதும் இஸ்ரேலிய அட்டூழியங்களுக்கு சாட்சியமாக காணப்படுகின்றது. இஸ்ரேலிய படையினர் புனித பவுலின் தேவாலயத்தையும் விட்டு வைக்கவில்லை. கிறிஸ்தவர்களின் மனது புண்படும் வண்ணம் தேவாலயத்தின் தூய்மையை மாசு படுத்தியுள்ளனர். (பார்க்க : மேலேயுள்ள புகைப் படம்) தேவாலயத்தின் ரகசிய கருவூலங்களை, கிரனைட் வீசி உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஊடகவியலாளரிடம் நடந்ததை விபரித்த தலைமை மதகுரு, "மனிதர்கள் இந்த அளவு கேவலமாக நடந்து கொள்வார்களா?" எனக் கண்ணீர் மல்கக் கூறினார்.
When Pope John Paul visited this frontline town in the Israeli-occupied Golan Heights Monday, his Syrian hosts did not have to say anything....
Indeed, the panorama of destruction tells the whole story. Bulldozed houses, naked buildings, demolished hospitals, shell-holed churches and devastated mosques are blunt reminders of the bitter conflict between Israel and Syria.
Time stopped at Quneitra when the Israelis withdrew in 1974 under a U.S.-negotiated armistice. Israeli troops destroyed everything in their wake, leaving not one building intact...
Residents of the Golan Heights who have became refugees in other cities, including Damascus, say they see a good omen in the Pope's pilgrimage to Syria.
(Reuters, May 7, 2001)
இயேசு வாழ்ந்த மண்ணில், இரண்டாயிரம் வருடங்களாக வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களை வெளியேற்றிய இஸ்ரேலை, ஒரு கிறிஸ்தவன் ஆதரிக்க முடியுமா? அது கிறிஸ்தவ சகோதரர்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகாதா? இஸ்ரேலை ஆதரிப்பவர்கள் மத, இன அடையாளங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் காலனியாதிக்க எஜமான்களின் விசுவாசிகள்.