Showing posts with label இஸ்ரேல் - பாலஸ்தீன இனப் பிரச்சினை. Show all posts
Showing posts with label இஸ்ரேல் - பாலஸ்தீன இனப் பிரச்சினை. Show all posts

Thursday, December 24, 2009

தனி நாடு கண்ட யூதர்களும், தாயகம் இழந்த பாலஸ்தீனியரும்

("போர்க்களமான புனித பூமி" தொடரின் இரண்டாம் பகுதி)

இரண்டாம் உலகப்போரின் முடிவு உலகில் பல மாற்றங்களை உருவாக்கியிருந்தது. போரில் பாதிக்கப்பட்ட பிரிட்டன் தனது காலனிகளை பராமரிக்க முடியாமல் தடுமாறியது. இதற்கிடையே அமெரிக்கா புதிய வல்லரசாக உருவாகியிருந்தது. ஹிட்லரின் யூத மக்கள் படுகொலை, உலகம் முழுவதும் யூதர்களுக்கு சார்பான அனுதாப அலைகளை தோற்றிவித்தது. ஆரம்ப காலங்களில் பாலஸ்தீனத்தில் சென்று குடியேறியவர்கள், கிழக்கைரோப்பாவை சேர்ந்த சோஷலிச யூதர்களாக இருந்தனர். அவர்களால் இலகுவாக சோவியத் யூனியனின் ஆதரவைப் பெற முடிந்தது. அந்தக் காலகட்டத்தில் இஸ்ரேலின் நண்பனாக இருந்தது அமெரிக்கா அல்ல, சோவியத் யூனியன். இது இன்று பலருக்கு வியப்பளிக்கலாம்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தேசிய விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்கும் ஸ்டாலினின் கொள்கையின் கீழ் அந்த ஆதரவு வழங்கப்பட்டது. சோவியத் யூனியன் அன்று, அந்தப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டனுக்கும், பிரான்சுக்கும் எதிரான சக்தியாக இஸ்ரேல் உருவாவதை விரும்பியது. ஆனால் அந்த உறவு சிறிது காலமே நீடித்தது. சுதந்திரத்திற்கு பின்னர் இஸ்ரேலிய அரசு அமெரிக்கா மற்றும் மேற்குலகுடன் உறவு கொண்டாடி, சோவியத் யூனியனுக்கு எதிராக திரும்பியது. அமெரிக்கா கூட ஆரம்பத்தில் எகிப்துடன் நல்லுறவைப் பேணவே விரும்பியது. ஆனால் சுயெஸ் கால்வாய் பிரச்சினையில் இஸ்ரேலை விட சிறந்த அடியாள் கிடைக்க மாட்டான் எனக் கண்டு கொண்டது.

நாசிகளால் பாதிக்கப்பட்ட யூதர்கள் பாலஸ்தீனம் சென்று குடியேறவும், அங்கே இஸ்ரேல் அமைக்கவும் ஐ.நா.சபை அங்கீகாரம் வழங்கியது. ஆரம்பத்தில் பாலஸ்தீன அரபுக்கள் கூட யூத மக்களும் அனுதாபத்துடன் நோக்கினார்கள். அதுவரை தாயகம் திரும்பும் யூதர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத ஐரோப்பிய அரசாங்கங்கள், இப்போது திடீர் கவனம் செலுத்த ஆரம்பித்தன. அமெரிக்கா, பிரிட்டன் உதவியால் நாசிகளின் நரவேட்டைக்கு அகப்படாது தப்பிய யூதர்கள் கப்பல், கப்பலாக பாலஸ்தீனம் சென்று குடியேறினர். சிறிது சிறிதாக பாலஸ்தீன அரபுக்கள் என்ன நடக்கின்றது என உணர ஆரம்பித்தார்கள். ஆனால் காலம் கடந்து விட்டது. மேற்கு பாலஸ்தீனத்தில் போதுமான அளவு யூதர்கள் குடியேறிய பின்பு, ஐ.நா.சபை பிரிட்டிஷ் பாலஸ்தீனத்தை இரு துண்டுகளாக்க தீர்மானித்தது. யூதர்கள் இந்த முடிவை வரவேற்றனர். இஸ்ரேலிய குடியரசு பிரகடனம் செய்தனர். மறுபக்கத்தில் அரபுக்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. யுத்தம் மூண்டது. யூதர்களுக்கு கிடைத்த நவீன ஆயுதங்கள், அவர்களின் வெற்றியை உறுதிப் படுத்தியது. பல கிராமங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அரபு மக்கள், அயல்நாடுகளில் அகதிகளாயினர்.

இந்தச் சமயத்தில், அன்றைய ஜோர்டான் மன்னர் ஹுசைன் பாலஸ்தீனர்களுக்கு இழைத்த துரோகம் பலர் அறியாதது. இந்த துரோகத்திற்கு பிராயச் சித்தமாக, பாலஸ்தீன அகதிகளுக்கு ஜோர்டானிய பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. பிற்காலத்தில், எழுபதுகளில் பாலஸ்தீன இயக்கங்கள் அடித்து விரட்டப் பட்டன. மன்னருக்கு விசுவாசமான படைகள் பாலஸ்தீன எழுச்சியை அடக்கியதில் சுமார் 5000 பேர் கொல்லப்பட்டனர். இறுதியாக பாலஸ்தீன போராளிகள் லெபனானில் தஞ்சமடைந்தனர். இஸ்ரேல் பலவீனமான லெபனான் நாட்டின் மீது படையெடுத்தது.

ஜோர்டானில் இருந்தது போலவே, லெபனானிலும் பாலஸ்தீன அகதி முகாம்கள் ஆயுதபாணி இயக்கங்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. அத்தோடு இஸ்ரேலிய எல்லையோரம் பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கிருந்த படியே இஸ்ரேலினுள் ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள். போராளிகளின் செயல்கள் உள்ளூர் (லெபனான்) மக்களிடம் வெறுப்பை தோற்றுவித்தது. அதிலும் லெபனானிய கிறிஸ்தவர்கள் அளவுகடந்த வெறுப்பை காட்டினார்கள்.

பாலஸ்தீன போராளிகளை அடக்குவதாகக் கூறி (எல்லை கடந்த பயங்கரவாதம்?), இஸ்ரேலிய இராணுவம் படையெடுத்து வந்தது. பெய்ரூட் வரை வந்த இஸ்ரேலிய படைகளுக்கு கிறிஸ்தவ பலாங்கிஸ்ட் இயக்கம் ஒத்துழைப்பு வழங்கியது. அதுவரை அகதி முகாம்களை பாதுகாத்து வந்த பாலஸ்தீன போராளிகள் வெளிநாட்டு மத்தியஸ்தத்துடன் வெளியேறினர். அநாதரவாக விடப்பட்ட ஷப்லா, ஷடிலா முகாம்கள் இஸ்ரேலிய, கிறிஸ்தவ படைகளின் முற்றுகைக்குள்ளானது. 2000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன அகதிகள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இனப்படுகொலையை தலைமை தாங்கி நடத்திய இஸ்ரேலிய படைத் தளபதி ஷரோன் பிற்காலத்தில் பிரதமராக தெரிவானார்.

அரபு நாடுகளை தளமமைத்திருந்த பத்துக்கும் குறையாத பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் அன்று முற்போக்கான, மதச்சார்பற்ற, தேசியவாதக் கொள்கையை கடைப்பிடித்தன. தேசியவாத யாசீர் அரபாத் தலைமையிலான Tahir al Hatani al Falestini (பதாஹ்), மார்க்சிய PFLP ஆகியன பெரும்பான்மை மக்கள் ஆதரவை பெற்றிருந்தன. இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்கு எதிரான கெரில்லாப் போராட்டம் தொடர்ந்தது. மறுபக்கம் மக்கள் போராட்டமான "இன்டிபதா" இஸ்ரேலிய அரசை சர்வதேச அரங்கில் தலைகுனிய வைத்தது.

பனிப்போர் காலத்தில் ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களையும், அமெரிக்க வீட்டோ தடுத்தது. அப்போதெல்லாம் சோவியத் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவு வழங்கியது. பனிப்போர் முடிந்த பின்னர் பாலஸ்தீன பிரச்சினையை தீர்க்க வேண்டிய நிலை உருவானது. அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. யாசீர் அரபாத்தின் இயக்கத்தை தம் பக்கம் வென்றெடுத்தனர். இஸ்ரேலோடு சமாதானமாகப் போய் சுயாட்சிப் பிரதேசத்திற்கு உடன்படுமாறு வற்புறுத்தினர். தொடர்ந்து நோர்வேயின் அனுசரணையால் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது.

இதில் முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய சில விஷயங்கள்:
- பாலஸ்தீனம் இஸ்ரேலின் உள்ளே ஒரு சுயாட்சிப் பிரதேசமாக இருக்கும்.
- இனிமேல் பாலஸ்தீன மக்களின் எழுச்சியை கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்து இஸ்ரேல் விடுபட்டது.
- பாலஸ்தீனர்களை, பாலஸ்தீனியர் அடக்கும் நிலை உருவானது. அரபாத்தின் தலைமை இஸ்ரேல் சொற்கேட்டு நடக்கும் பிரதேச பொலிஸ் ஆகியது.
- வெளிநாடுகளில் வசிக்கும் பாலஸ்தீன அகதிகள் நிரந்தரமாக தாயகம் திரும்ப முடியாது.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் சீரழிவு ஒட்டுமொத்த மதச்சார்பற்ற தேசியவாத சக்திகளின் பின்னடைவாகியது. ஏகாதிபத்தியங்களும் அரபு நாடுகளில் எழுந்த முற்போக்கு சக்திகளை திட்டமிட்டே அழித்தன. அதற்கு பாலஸ்தீனமும் பலியாகியது. அப்போது எழுந்த வெற்றிடத்தை நிரப்ப இன்னொரு சக்தி கிளம்பியது.

Harakat al-Muqaama al-Islamiya (இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் அல்லது "ஹமாஸ்"). மேற்குலகில் மத அடிப்படைவாதிகள் என அழைக்கப் படும் இஸ்லாமிய தேசியவாதிகள். எகிப்தில் "முஸ்லிம் சகோதரர்கள்" இயக்க அரசியலால் கவரப்பட்ட பாலஸ்தீன அகதியால் ஸ்தாபிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அரபாத்தின் பதாவுக்கு போட்டியாக, இஸ்ரேலும் ஹமாசுக்கு ஆதரவளித்தது. அரபாத் சமாதான கூட்டாளியான பின்னர், இவர்களைத் தேவையில்லை என கழட்டி விட்டது. சிறிது காலத்தின் பின்னர் சமாதானம் எந்தத் தீர்வையும் கொண்டு வராததால், ஏமாற்றமடைந்த பாலஸ்தீன மக்களின் அதிருப்தியை பயன்படுத்திக் கொண்டது. ஒரு காலத்தில் மதச் சார்பற்ற தேசியவாதிகளாக இருந்த பாலஸ்தீனர்களை, ஹமாஸ் இஸ்லாமியவாதிகளாக மாற்றியது. ஈழத்தில் புதிதாக ஒரு "சைவத் தமிழ் தேசிய அமைப்பு" உருவானால் விளைவு எப்படியிருக்கும்? அது தான் பாலஸ்தீனத்தில் நடந்தது. பாலஸ்தீன தேசிய அடையாளம் முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் உள்ளடக்கியது. ஆனால் ஹமாஸ் பாலஸ்தீனத்தை இஸ்லாமிய சர்வதேசியத்தின் ஒரு பகுதியாக்கியது.

ஹமாஸ் இராணுவ நடவடிக்கைகளில் மட்டுமல்லாது, அரசியல் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்துகின்றது. பாலஸ்தீன பகுதி எங்கும் வறிய மக்களுக்கான இலவச மருத்துவமனைகள், இலவச பாடசாலைகள், அநாதை இல்லங்கள், நலன்புரி மையங்கள் என்பனவற்றை நடத்தி வருகின்றது. (வைத்தியத்திற்கும், கல்விக்கும் கட்டணம் அறவிடும் நாட்டில் வாழும் ஏழைகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.) ஹமாசின் தர்ம காரியங்களுக்கான நிதி, சவூதி அரேபியா, மற்றும் பல வளைகுடா நாடுகளில் இருந்து வருகின்றது. வெளிநாடுகளில் உள்ள ஹமாஸ் கிளைகளும் நிதி சேகரித்து அனுப்புகின்றன. ஹமாஸ் நிர்வகிக்கும் சமூக நலன் காப்பகங்களில் இருந்து புதிய உறுப்பினர்கள் தெரிவாகின்றனர்.

ஹமாஸ் ஒரு பரந்த அரசியல் அமைப்பு. அதன் இராணுவப் பிரிவான "காசிம் பிரிகேட்". அதன் உறுப்பினர்கள், முன்னைநாள் பாலஸ்தீன போராளிகளைப் போன்று கெரில்லா இராணுவப் பயிற்சி பெற்றவர்களல்ல. (இந்த நிலை பிற்காலத்தில் மாறியது.) சிறிது மனோதைரியம், தியாக சிந்தை, நடைமுறை தந்திரம், இவை இருந்தால் போதும். ஒருவரை தற்கொலைக் குண்டுதாரியாக மாற்றிவிடலாம். தற்கொலைக் குண்டு தத்துவத்திற்கும், இஸ்லாமிற்கும் சம்பந்தம் இல்லை. இஸ்ரேல் மீதான வெறுப்புணர்வே பலரை தற்கொலைப் போராளியாக்குகிறது. பலம் வாய்ந்த இராணுவத்திற்கு எதிரான, பலவீனமானவர்களின் இயலாமையின் வெளிப்பாடு அது. ஹமாசின் குண்டுவெடிப்பினால் அதிகம் பாதிக்கப்படுவது யூத பொதுமக்கள். (இஸ்ரேலிய அரச இயந்திரத்தை நெருங்கவே முடியாது.) ஒரு காலத்தில் தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் மாற்றத்தை கொண்டு வரும் என நம்பப்பட்டது. இதனால் ஜிஹாத், அல் அக்சா பிரிகேட் என்பனவும் தற்கொலைக் குண்டு தாக்குதலில் இறங்கின. "முற்றுமுழுதாக இராணுவ மயப்பட்ட இஸ்ரேலிய சமூகத்தில், கொல்லப்படுபவர் படைவீரனா, அல்லது அப்பாவியா என வேறுபடுத்த முடியாது." எனபது ஹமாசின் வாதம். அதே போல இஸ்ரேலும், "யார் பயங்கரவாதி, யார் பொது மகன், என வேறுபாடு காட்டி தாக்க முடியாது." என வாதிடுகின்றது. இஸ்ரேலிய இராணுவம், ஹமாஸ் இரண்டுமே பழிக்குபழி வாங்குவதை இராணுவ நடவடிக்கையாக கொண்டுள்ளன.

சில நேரம், இஸ்ரேலிய புலனாய்வுப்பிரிவான மொசாட் கூட, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றது. தீவிரவாத அமைப்பை சேர்ந்த உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவரின் கார், வீடு என்பன குண்டு வைத்து தகர்க்கப்படுகின்றன. அந்த தீவிரவாதி தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் இறந்தால் கூட, அவரின் உறவினர்களை வெளியேற்றி விட்டு, வீட்டை குண்டு வைத்து தரைமட்டமாக்குவார்கள்.

(தொடரும்)


இந்தத் தொடரின் முதலாவது பகுதி:
போர்க்களமான புனித பூமி


(உயிர் நிழல் (ஏப்ரல்-யூன் 2002 ) சஞ்சிகையில் பிரசுரமானது. சில திருத்தங்களுடன் வலையேற்றம் செய்யப்படுகின்றது.)