1917 ஆம் ஆண்டு, ரஷ்யாவில் போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் புரட்சி நடந்தது. ஆட்சி கவிழ்க்கப் பட்ட சார் மன்னனின் அலுவலக கோப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்த, போல்ஷெவிக் அமைச்சர் ட்ராஸ்கி, ஒரு இரகசிய ஆவணத்தை கண்டுபிடித்தார். மத்திய கிழக்கு அரபு நாடுகளை, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய சாம்ராஜ்யங்கள் தமக்குள் பங்கிட்டுக் கொள்வது சம்பந்தமான ஒப்பந்தம் அது. முதலாளித்துவ நாடுகளின் அயோக்கியத்தனத்தை உலகறியச் செய்யும் நோக்கில், ட்ராஸ்கி அந்த ஒப்பந்தத்தை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கினார்.
"Sykes-Picot ஒப்பந்தம்" என்று அழைக்கப் படும் அந்த உடன்படிக்கை, மிகவும் இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. ஏனெனில், துருக்கியிடம் அடிமைப் பட்டிருந்த அரேபியர்களுக்கு ஒரு தாயகத்தை உருவாக்கித் தர விரும்புவதாக, பிரிட்டன் வாக்குறுதி அளித்திருந்தது. அரேபியரின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக, பிரிட்டன் லாரன்ஸ் எனும் உளவாளியை அனுப்பி, ஆயுதங்களும் கொடுத்து உதவி இருந்தது.
"நாகரிகமடைந்த மேன் மக்களின் நாடான" பிரிட்டன், தமது நலன் கருதி நடக்கிறது என்று, அரேபியர்களும் அப்பாவித்தனமாக நம்பினார்கள். ஆனால், துருக்கியின் பகுதியாக இருந்த அரேபிய நாடுகளை காலனிப் படுத்துவதே பிரிட்டனின் உண்மையான நோக்கமாக இருந்தது. அதற்காக, பிரிட்டனும், இன்னொரு ஐரோப்பிய காலனியாதிக்க நாடான பிரான்சும், "Sykes-Picot ஒப்பந்தம்" என்ற பெயரில், அரபு நாடுகளை தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.
பிரிட்டன் எதற்காக அரேபியர்களை ஏமாற்றி, அவர்களின் நாடுகளை காலனிப் படுத்த வேண்டும்? முதலாம் உலக யுத்தம் நடப்பதற்கு முன்னர், இந்தியா (பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளடங்கியது) பிரிட்டனின் ஒரு முக்கியமான "பணக்கார" காலனியாக இருந்தது. என்ன விலை கொடுத்தேனும், பிரிட்டன் இந்தியாவை தொடர்ந்தும் காலனியாக வைத்திருக்க விரும்பியது. ஆனால், இந்தியாவுக்கு வடக்குப் பகுதியில், ரஷ்ய சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டிருந்தது. ஆப்கானிஸ்தானை நடுவில் வைத்து, இரண்டு சாம்ராஜ்யங்களும் பரஸ்பரம் எல்லைகளை தீர்மானித்துக் கொண்டன.
எதிர்பாராத விதமாக முதலாம் உலகப்போர் வெடித்து விட்டது. இஸ்தான்புல் நகரை கைப்பற்றும் நோக்கில், துருக்கியில் கலிபொலி எனும் இடத்தில் பிரிட்டிஷ் படைகள் இறக்கப் பட்டன. ஆனால், கடுமையான இழப்புகளுக்குப் பின்னர் பின்வாங்கி விட்டன. இதற்கிடையே, பிரிட்டனுக்கு இன்னொரு பிரச்சினை எழுந்தது. துருக்கி சுல்தான் சர்வதேச இஸ்லாமிய அகிலத்திற்கு (கிலிபாத்) தலைமை தாங்கும் கலீபாவாக கருதப் பட்டார். முதலாம் உலகப்போரில் எதிரி நாடுகளான பிரிட்டன், பிரான்சுக்கு எதிராக, துருக்கி ஜிகாத் ஒன்றை அறிவித்து விட்டால் என்ன செய்வது?
அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த சனத்தொகையில் ஏறத்தாள அரைவாசிப் பேர் முஸ்லிம்கள். துருக்கி சுல்தானின் ஜிகாத்திற்கான அழைப்பை ஏற்று, இந்திய முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்தால் என்ன செய்வது? அது இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் முடிவாக இருந்திருக்கும். ஆகவே, பிரிட்டனுக்கு எதிரான ஜிகாத் ஒன்றை தடுக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி முஸ்லிம்களை பிரித்து ஆள வேண்டும். அரேபியர்களை துருக்கியரிடம் இருந்து பிரித்து விட வேண்டும். பிரிட்டன் அரேபியரின் விடுதலைப் போராட்டத்திற்கு உதவிய நோக்கம் அது தான்.
உண்மையிலேயே, துருக்கி சுல்தான் ஜிகாத் அறிவிப்பு செய்திருந்தார். அது யாருடைய கவனத்தையும் பெறவில்லை. அதற்குக் காரணம், இளம் துருக்கியர்கள் எனும் தேசியவாத அமைப்பு, ஏற்கனவே சுல்தானின் அதிகாரங்களை கட்டுப்படுத்தி இருந்தது. மேலும் துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் அதிகார மையத்திலும், துருக்கி தேசியவாதிகள் ஊடுருவினார்கள்.
அரபு நாடுகளில் அதிகாரத்தில் இருந்த துருக்கி தேசியவாதிகள், அரேபியரை சிறுமைப் படுத்தினார்கள். இதனால், துருக்கி பேரினவாதத்திற்கு எதிரான அரேபிய தேசிய இன எழுச்சி ஒன்று உருவானது. பிரிட்டன் தன் பங்கிற்கு அதை எண்ணை ஊற்றி எரிய விட்டது. அரபு தேசியவாதிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொண்டது. ஆனால், அரேபியர்கள் துருக்கியரிடம் இருந்து விடுதலை பெற்றதும், அவர்களின் நாடுகளை துண்டு போட்டது. இன்றுள்ள அரபு நாடுகளின் எல்லைகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் தீர்மானிக்கப் பட்டவை ஆகும். துருக்கி, ரஷ்யா ஆகிய வல்லரசுகளிடம் இருந்து, பிரிட்டிஷ் இந்தியாவை பாதுகாக்கும் நோக்கத்திற்காக உருவாக்கப் பட்டவை தான், நவீன அரபு தேசங்கள்.
வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவர்கள், ஒரே தவறை மீண்டும் செய்வதற்கு சபிக்கப் பட்டவர்கள் ஆவார்கள். அரேபியர்கள் மட்டுமல்ல, பிரிட்டனை தமது நட்பு சக்தியாக நம்பிக் கொண்டிருக்கும், வலதுசாரி தமிழ் தேசியவாதிகளும், வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை.
மேலதிக தகவல்களுக்கு:
Setting desert on fire, T.E.Lawrence and Britain's secret war in Arabia; James Barr
Lawrence In Arabia: War, Deceit, Imperial Folly, And The Making Of The Modern Middle East; Scott Anderson