Saturday, September 02, 2023

தர்மன் சண்முகரட்னம்- ஒரு "சிங்கப்பூர் கதிர்காமர்"!

 Image

தர்மன் சண்முகரட்னம் என்ற "யாழ்ப்பாணத் தமிழன்"(?) சிங்கப்பூர் ஜனாதிபதியாக வந்து விட்டார் என்று மோட்டுத் தமிழ்த்தேசியவாதிகள் துள்ளிக் குதிக்கிறார்கள். ஒருவேளை இலங்கையில் யுத்தம் நடந்திரா விட்டால், புலிகள் இருந்திரா விட்டால், கதிர்காமர் வெளிவிவகார அமைச்சரான நேரம் இதே மோட்டுத் தமிழ்த்தேசியவாதிகள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருப்பார்கள். ஒருவேளை கதிர்காமரை புலிகள் சுட்டுக் கொல்லாமல் விட்டிருந்தால் அவர் ஜனாதிபதியாக கூட வந்திருப்பார்.

கதிர்காமருக்கும், தர்மனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பீர்கள். இருவருக்கும் இடையிலான நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

1. கதிர்காமர், இலங்கையில் ஆளும் கட்சியான SLFP தலைமைக்கு மிக விசுவாசமான முக்கிய உறுப்பினர். பண்டாரநாயக்க குடும்பத்தின் நெருங்கிய நண்பர். அதன் விளைவாக SLFP கட்சியில் அதியுயர் தலைமைப் பொறுப்புக்கு வந்த ஒரு தமிழன். அதிலும் "யாழ்ப்பாணத் தமிழன்". ஆனால் உண்மையில் யாழ்ப்பாணம் தெரியாத கொழும்பு தமிழன்.

2. தர்மன் சண்முகரட்னம், சிங்கப்பூரில் ஆளும் கட்சியான PAP தலைமைக்கு விசுவாசமான முக்கிய உறுப்பினர். லீ குவான்யூ குடும்பத்தின் நெருங்கிய நண்பர். அதன் விளைவாக கட்சியின் அதியுயர் தலைமைப் பொறுப்புக்கு வந்த ஒரு தமிழன். அதிலும் "யாழ்ப்பாணத் தமிழன்". உண்மையில் யாழ்ப்பாணம் தெரியாத சிங்கப்பூர் தமிழன்.

Srilanka Freedom Party (SLFP), People's Action Party (PAP) ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் ஒரே காலகட்டத்தில் உருவாக்கப் பட்டவை. ஆரம்பத்தில் தங்களை மத்திய- இடது கொள்கை சார்ந்ததாக காட்டிக் கொண்டாலும், பிற்காலத்தில் மத்திய- வலது கொள்கையை பின்பற்றின. மக்கள் நலன் சார்ந்த Populist அரசியல் பேசிக் கொண்டே இடதுசாரிகளை ஒழித்துக் கட்டியதில் இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

அவ்வாறான அரசியல் பின்னணியில் வந்தவர்கள் தான் இலங்கைக் கதிர்காமரும், சிங்கப்பூர் தர்மனும். இருவரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இதை எல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு, நமது மோட்டுத் தமிழ்த்தேசியவாதிகளுக்கு அறிவும் கிடையாது, பக்குவமும் கிடையாது.

லக்ஷ்மன் கதிர்காமர் மானிப்பாயில் பிறந்த ஒரு யாழ்ப்பாணத் தமிழர். அவர் வீட்டில் ஆங்கிலம் பேசி தமிழை மறந்திருக்கலாம். யாழ்ப்பாணத்திற்கு சென்று வாக்கரசியல் செய்திராத விட்டால் ஜி.ஜி.பொன்னம்பலம், தந்தை செல்வா போன்ற "தமிழ்த்தேசிய" தலைவர்களும் கதிர்காமர் மாதிரி ஆங்கிலம் மட்டுமே பேசிக் கொண்டு தமிழை மறந்து விட்டிருப்பார்கள். பிரிட்டிஷ் காலனிய காலத்தில் பிறந்து வளர்ந்த மேட்டுக்குடித் "தமிழ்" குடும்பங்களில் இது சாதாரணமான விடயம்.

அதே மாதிரி சிங்கப்பூரில் பிறந்த "தர்மன் சண்முகரட்னம் ஒரு தமிழரா?" என்றும் கேட்கலாம். அவரும் வீட்டில் ஆங்கிலம் மட்டுமே பேசுகிறவர் தான். கதிர்காமர் திருமணம் முடித்தது ஒரு பிரெஞ்சு- பாகிஸ்தான் கலப்பின பெண்ணை. அதே மாதிரி தர்மன் திருமணம் முடித்தது ஒரு சீன- ஜப்பானிய கலப்பின பெண்ணை. இவர்கள் வீட்டில் தமிழில் பேசி இருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? மேலும் தமிழ் அடையாளத்தை துறந்தவர்கள் என்பதால் தான் நாட்டின் அதியுயர் பதவிக்கு வர முடிந்தது. கதிர்காமர் தன்னை ஒரு சிறிலங்கன் என்று அடையாளப் படுத்தியவர். அதே மாதிரி தர்மன் தன்னை ஒரு சிங்கப்பூரியன் என்று அடையாளப் படுத்தியவர்.

அது போகட்டும். உங்களுக்கு ஓர் உண்மை சொல்லவா? இலங்கை மாதிரி சிங்கப்பூரில் "தமிழ்த்தேசியம்" என்று அடையாள அரசியல் செய்யக் கிளம்பினால் முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவார்கள்! "சிங்கப்பூர் தமிழரசுக் கட்சி", "சிங்கப்பூர் விடுதலைப் புலிகள்" இப்படி எல்லாம் தொடங்கலாம் என்று கனவிலும் நினைத்து விடாதீர்கள். அப்படியான எண்ணம் கொண்ட அத்தனை பேரையும் ஒரே நாளில் கைது செய்து ஜெயிலுக்குள் போட்டு விடுவார்கள். சிங்கப்பூர் வெளிப் பார்வைக்கு தான் அழகாக இருக்கும். உள்ளே மிகக் கொடூரமான சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடு.

2 comments:

truth teller said...

தமிழ் பேசறவனெல்லாம் தமிழனா
தமிழ் நாட்டில் கட்டுமரமும் சுடலையும் தமிழ் பேசறாங்க . சமஸ்க்ரிதத்துக்கு முக்கியம் கொடுக்கும் தமிழ் பிராமணர்கள் தமிழ் பேசறாங்க அவங்க தமிழனா
தமிழ் பேசினால் என்ன பிற மொழி பேசினால் என்ன . நல்லவனா என்று பாருங்கள் . மொழி ஒரு கருவி அவளவுதான்

truth teller said...

தமிழ் பேசறவனெல்லாம் தமிழனா
தமிழ் நாட்டில் கட்டுமரமும் சுடலையும் தமிழ் பேசறாங்க . சமஸ்க்ரிதத்துக்கு முக்கியம் கொடுக்கும் தமிழ் பிராமணர்கள் தமிழ் பேசறாங்க அவங்க தமிழனா
தமிழ் பேசினால் என்ன பிற மொழி பேசினால் என்ன . நல்லவனா என்று பாருங்கள் . மொழி ஒரு கருவி அவளவுதான்