Thursday, April 21, 2022

சிங்கள ராஜபக்சேக்களும் தமிழ் முதலாளிகளும்- திருடர்களின் கூட்டணி

 
ராஜபக்சே குடும்பத்தினர் கொள்ளையடித்த சொத்துக்களை வெளிநாடுகளில் பதுக்குவதற்கு இரண்டு தமிழ் கோடீஸ்வர தொழிலதிபர்கள் உதவி இருக்கிறார்கள். ஒருவர் முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்சேயின் கணவர் திருக்குமரன் நடேசன். மற்றவர் புலம்பெயர்ந்த தமிழ் தொழிலதிபர் வேலுப்பிள்ளை கணநாதன்.

இறுதிப்போர் முடிவில், தமிழர்களுக்காக போராடுவதாக சொல்லிக் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கம் வைத்திருந்த ஏராளமான நகைகள், மில்லியன் கணக்கான இலங்கை ரூபாய்கள், மற்றும் பல்லாயிரம் டாலர்கள் அனைத்தையும் அரசுடமையாக்காமல் ராஜபக்சே குடும்பத்தினரே சொந்தமாக்கிக் கொண்டார்கள். இவற்றை ஹெலிகாப்டரில் கொண்டு சென்று ராஜபக்சேவிடம் ஒப்படைத்த பைலட் பின்னர் மர்மமான முறையில் கொல்லப் பட்டுள்ளார். 
 
அத்துடன் மகிந்த ராஜபக்சேயின் பதவிக்காலத்தில் லஞ்சமாகவும், வேறு முறைகேடான வழிகளிலும் பெற்றுக் கொண்ட பணம் ஏராளம் இருக்கும். இந்தப் பணம் யாவும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளன. அங்கு பல அசையும், அசையா சொத்துக்களில் முதலிட்டுள்ளனர். போலி நிறுவனங்களின் பெயரில் வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளனர்.

இதற்கு நிருபமாவும் அவர் கணவர் திருக்குமரனும் உதவி இருக்கிறார்கள். மகிந்த ராஜபக்சேயின் நெருங்கிய உறவினரான நிருபமா, யுத்தம் முடிந்த பின்னரான காலத்தில் பிரதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். இவர் தமது அரசாங்க பொறுப்புகளை துஸ்பிரயோகம் செய்து தான், கறுப்புப் பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல உதவியிருக்கிறார்.  
 
திருக்குமரன், நிருபமா தம்பதியினர் லண்டன் நகர மத்தியில் ஆடம்பர வீடுகள் வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.  இவர்கள் மேற்கு ஐரோப்பா, அவுஸ்திரேலியாவிலும் ரியல் எஸ்டேட்டில் முதலிட்டு உள்ளனர். இவற்றின் பெறுமதி பல மில்லியன் டாலர்கள். அதை விட பல மில்லியன் டாலர்கள் பணமாக துபாய், சீஷெல்ஸ், மற்றும் பல நாடுகளில் உள்ள வங்கிகளில் வைப்பிலிடப் பட்டுள்ளன.
 
உலகில் எந்த முதலாளிக்கும் தேசப்பற்று, இனப்பற்று அறவே கிடையாது. இலங்கையில் ஒரு பிரதி அமைச்சராக பதவி வகித்தவரே தனது தனது நாட்டு மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை கொண்டு சென்று பணக்கார நாடுகளில் முதலிட்டிருக்கிறார். குறைந்த பட்சம் அவற்றை தாய்நாட்டில் முதலிட்டிருந்தாலாவது ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.
 
நிருபமாவின் கணவர் திருக்குமரன் ஒரு கோடீஸ்வர தொழிலதிபர் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம். இவர் தனது வணிகத் தொடர்புகளை பயன்படுத்தில் பல்வேறு போலி நிறுவனங்கள், அறக்கட்டளைகளை உருவாக்கி மேற்கத்திய பணக்கார நாடுகளில் முதலிட்டுள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு பதினெட்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள். இலங்கையில் ஒரு தனி மனிதனின் சராசரி வருட வருமானம் நாலாயிரம் டாலர்கள்.

திருக்குமரன் நடேசன் ஆரம்பத்தில் இருந்தே "அரசியலில் ஈடுபடாத" வணிகத்தை மட்டுமே கவனித்து வந்த தொழிலதிபராக தன்னைக் காட்டி வந்துள்ளார். அத்துடன் இலங்கையில் பல இந்துக் கோயில்களுக்கு வாரி வழங்கி தன்னை ஒரு கொடை வள்ளலாக காட்டிக் கொண்டார். ஈழப்போர் தீவிரமடைந்த தொண்ணூறுகளில் தான் இவரது வணிகமும் கொடிகட்டிப் பறந்துள்ளது. 
 
திருக்குமரன் நடேசன், இலங்கையில் முதலிடுவோருக்கு ஆலோசனை வழங்குவதாக சொல்லி Pacific Commodities Ltd என்ற பெயரில் ஒரு போலி நிறுவனத்தை உருவாக்கி நடத்தி வந்தார். Pacific Commodities Ltd, வரியில்லா சொர்க்கம் என்று அழைக்கப்படும் பிரித்தானியாவுக்கு சொந்தமான சேனல் மற்றும் ஜெர்சி தீவுகளில் பதிவுசெய்யப் பட்டது. அதனால் எவ்வளவு பணம் இலங்கையை விட்டு வெளியே சென்றுள்ளது என்ற விபரம் தெரிய வராது.

அத்துடன் நடேசன் அப்போதே கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹில்டன் ஹோட்டலின் உரிமையாளராகி விட்டார். கடந்த இருபத்தைந்து வருடங்களாக ஹோட்டல் நிர்வாகக் குழுவின் (board of directors, Hotel Developers Ltd) தலைவராக இருந்து வருகிறார். இவரது மாதச் சம்பளம் அப்போதே நான்கு இலட்சம் (Rs 400,000) இலங்கை ரூபாய்கள். அவரது மனைவி நிருபமா அப்போது அரசியலில் ஈடுபடவில்லை.

இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவெனில், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தற்போது எதிர்க்கட்சியாக உள்ள யு.என்.பி. ஆட்சியில் இருந்தது. ராஜபக்சே குடும்பத்திற்கு நெருக்கமான தொழிலதிபர் இலங்கையில் ஒரு மிகப்பெரிய முதலீட்டாளராக இருப்பதை அவர்களும் தடுக்கவில்லை. அதுவும் இனப்பிரச்சினை காரணமாக எழுந்த போர் உச்சத்தில் இருந்த காலத்தில் ஒரு தமிழ் தொழிலதிபரை யாரும் கண்டுகொள்ளவில்லை. 
 
இலங்கையில் அப்போதும் இப்போதும் இன உணர்வை விட பண உணர்வே பிரதானமானது. இனப்பற்று, தேசப் பற்று எல்லாம் அப்பாவி உழைக்கும் வர்க்க மக்களை ஏமாற்றுவதற்கான வார்த்தை ஜாலங்கள். ராஜபக்சே குடும்பத்தினர் பூர்வீகத்தில் கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு நிலவுடைமைப் பரம்பரையை சேர்ந்தவர்கள். ஒரு காலத்தில் பல ஏக்கர் கணக்கிலான வயல் காணிகளும், தென்னந் தோப்புகளும் இவர்களுக்கு சொந்தமாக இருந்துள்ளன. 

*****

மகிந்த ராஜபக்சே ஜனாதிபதி பதவியில் இருந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் அடிக்கடி திருப்பதிக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்த பயணச் செலவை பொறுப்பெடுத்து, தனியார் விமானத்தில் அனுப்பி வைத்தவர் கணநாதன் என்ற ஒரு தமிழ் தொழிலதிபர். மகிந்த திருப்பதிக்கு சென்ற காரணம் சாமி கும்பிடுவதற்காக அல்ல. அனேகமாக வெளிநாடுகளில் உள்ள வணிக முதலீடுகளை மேற்பார்வை செய்வதற்கான பயணங்களாக அவை இருக்க வேண்டும்.

யார் இந்த கணநாதன்? இவரைப் பற்றிய தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. பெரும்பாலும் முன்பு புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகளின் சொத்துக்களை மேற்பார்வை செய்த பினாமியாக இருந்திருக்க வாய்ப்புண்டு. போர் முடிந்த பின்னர் பல முன்னாள் பினாமிகள் புலிகளின் சொத்துக்களை சொந்தமாக்கிக் கொண்டார்கள். அவர்களில் பலர் தற்போது ராஜபக்சே குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வருகிறார்கள். கணநாதனும் அவர்களில் ஒருவராக இருந்தால் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

வேலுப்பிள்ளை கணநாதன் ஏற்கனவே உகண்டாவில் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கப் பட்டிருந்தார். கோத்தபாய ராஜபக்சேயின் ஆட்சிக் காலத்தில் இந்த நியமனம் வழங்கப் பட்டுள்ளது. கடந்த வருடம், அதாவது 2021 ம் ஆண்டில் இருந்து தான், உகண்டாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான வணிகத் தொடர்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. இலங்கையை சேர்ந்த நிறுவனங்கள் உகண்டாவில் முதலிடத் தொடங்கின. இந்த நிறுவனங்கள் யாவும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு சொந்தமான பினாமி நிறுவனங்கள் என்றே கருதப் படுகின்றன. இவற்றை எல்லாம் மேற்பார்வை செய்யும் பொறுப்பு ஒரு புலம்பெயர்ந்த தமிழ் முதலாளியான கணநாதனிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

பெரும்பான்மை தமிழர்களிடம் ராஜபக்சே சகோதரர்கள் பற்றிக் கருத்துக் கேட்டால் "அவர்கள் சிங்கள இனவாதிகள் அல்லது சிங்கள பௌத்த பேரினவாதிகள்" என்று பதில் கூறுவார்கள். அதே மாதிரி பெரும்பான்மை சிங்களவர்களிடம் கேட்டால் "அவர்கள் சிங்களத் தேசியவாதிகள் அல்லது இலங்கை தேசப் பற்றாளர்கள்" என்று பதில் கூறுவார்கள். (பொருளாதார நெருக்கடி, மக்கள் எழுச்சிக்கு முன்னரான நிலைமை.) இரண்டு பக்கமும் உள்ள "தேசியவாதிகள்" (அல்லது இனவாதிகள், ஏதோ ஒன்று) இப்படியான அரசியலை தான் கட்டமைத்துள்ளனர். இனப்பிரச்சினை நிலவும் நாட்டில், குறிப்பிட்ட ஒரு இனத்தவர் தாம் பேசுவது தேசியவாதம் என்றும், எதிரி இனத்தவர் பேசுவது இனவாதம் என்றும் பொதுவாக பேசிக் கொள்வார்கள்.

அந்தந்த இனத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் தலைவர்கள் தாமே சிறந்த தேசியவாதிகள் என்பது மாதிரி காட்டிக் கொள்வார்கள். ஆகவே, ராஜபக்சே சகோதரர்களும் தாமே தலைசிறந்த தேசியவாதிகள், இனப்பற்றாளர்கள், தேசப் பற்றாளர்கள் என்பது மாதிரியான பிம்பத்தை சிங்கள மக்கள் மத்தியில் கட்டமைத்து வைத்திருந்தார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அந்த விம்பத்தை உடைத்தெறிந்து விட்டது. 
 
ஒரு காலத்தில் தேசியத் தலைவர்கள் என்று போற்றிய அதே மக்கள் இன்று தேசத் திருடர்கள் என்று தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். ராஜபக்சே சகோதரர்கள், இனிமேலும் தேசியவாதம், இனவாதத்தை மட்டுமே நம்பி ஆட்சி நடத்த முடியாத நையறு நிலையில் உள்ளனர். இது தேசியவாதம் பேசும் அத்தனை பேருக்கும் படிப்பினையாக அமைய வேண்டும்.

No comments: