Thursday, February 18, 2021

பாஜக நாஜிகள் இலங்கையை ஆளும் கனவு பலிக்குமா?

👉நேபாளம் முதல் இலங்கை வரை பாஜக ஆட்சி நடக்க வேண்டும் என்று அமித்ஷா தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக, ஈழத் தமிழ்த் தேசியவாதிகள் கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? இந்திய ஏகாதிபத்திய அபிலாஷைகளை அறிய முடியாத அப்பாவிகளா அவர்கள்? முப்பது வருடங்களுக்கு முன்பு, இந்திய இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த யுத்தத்தை அதற்குள் மறந்து விட்டார்களா? பாஜக ஒரு சாதாரண அரசியல் கட்சி அல்ல. அது ஜெர்மன் நாஜிக் கட்சியை பின்பற்றி அமைக்கப் பட்ட ஒரு பாசிசக் கட்சி. நாங்கள் வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்வதில்லை. 


திரு. மனோ கணேசன் அவர்களுக்கு, 

நீங்கள் சொல்வது மாதிரி, பாஜக பத்தோடு பதினொன்றாக கருதப் படக் கூடிய அரசியல் கட்சி அல்ல. அது ஒரு பாசிசக் கட்சி. கம்யூனிச/சோஷலிசக் கட்சிகள் சர்வதேச தொடர்புகளை பேணலாம் என்றால், பாஜக இலங்கையில் தனது தோழமைக் கட்சிகளுடன் தொடர்புகளை கொண்டிருப்பதில் என்ன தவறு என்ற மாதிரி கேட்டிருக்கிறீர்கள். 

மேலெழுந்தவாரியாக சரி போன்று தோன்றினாலும், இது மிகவும் தவறான ஒப்பீடு. உலகில் எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சியும் யாரையும் இன/மத ரீதியாக பாகுபாடு காட்டுவதில்லை. ஒரு குறிப்பிட்ட இனத்தில் அல்லது மதத்தில் பிறந்த குற்றத்திற்காக யாரையும் கொல்லவில்லை. கம்யூனிச/சோஷலிசக் கட்சிகளின் அடிப்படைக் கோட்பாடே இனங்களுக்கு இடையிலான சகோதரத்துவமும், மனிதநேயமும் தான். அதை எப்படி நீங்கள் இஸ்லாமியவிரோத பாஜகவுடன் ஒப்பிடுவீர்கள்? இந்திய பாஜகவின் இஸ்லாமிய விரோதமும், ஜெர்மன் நாஜிகளின் யூத விரோதமும் ஒரே மாதிரியான இனவாதக் கொள்கைகள் தான். 

உங்களுடைய கூற்று, மறைமுகமாக பாசிசத்திற்கு சமூக அங்கீகாரம் கோரும் வாதம் ஆகும். மனிதர்களை இனரீதியாக பிளவுபடுத்தி இனப்படுகொலைக்கு வழிவகுக்கும் பாசிசக் கட்சிகள் தடைசெய்யப் பட வேண்டியவை. இனவாதம் பேசுவதை கருத்துச் சுதந்திரமாக கருத முடியாது. காரணம் இல்லாமல், ஐரோப்பாவில் நவ நாஜிக் கட்சிகள் தடைசெய்யப் படவில்லை. நாஜிசம் பாஜக வடிவில் வந்தாலும், அதை எதிர்க்க வேண்டுமே தவிர "அதுவும் அரசியல் கட்சி தானே" என வக்காலத்து வாங்கக் கூடாது. 

ஜெர்மனியிலும் ஹிட்லரின் நேஷனல் சோஷலிசக் கட்சி (NSDAP) ஆரம்ப காலங்களில் தேர்தல்களில் போட்டியிடும் ஒரு "சாதாரண" அரசியல் கட்சியாகத் தான் இருந்தது. அப்போது அயல்நாடான செக்கோஸ்லோவாக்கியாவிலும் NSDAP போட்டியிட வேண்டும் என்று ஹிட்லர் தனது கட்சித் தலைவர்களிடம் தனது பேராசையை வெளியிட்டு இருந்தார். 

அப்போதே, "ஆரிய இனத்தவர் வாழும் நாடுகள்" என்று, ஹிட்லர் கருதிய ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் நாஜிக் கட்சி உருவாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஜெர்மனியில் நடந்த பொதுத் தேர்தல்களில் நாஜிக் கட்சி பெற்ற அமோக வெற்றிகளை பார்த்த பின்னர், பிற ஐரோப்பிய நாடுகளிலும், பிற மொழிகளைப் பேசுவோர் மத்தியிலும் ஹிட்லருக்கு ஆதரவாளர்கள் உருவானார்கள். 

ஜெர்மன் மொழியுடன் எந்தவித சம்பந்தமும் இல்லாத, ஒரு சொல் கூட ஒற்றுமை இல்லாத, எஸ்தோனிய, ருமேனிய மொழிகளைப் பேசும் மக்கள் மத்தியில் இருந்து கூட, ஹிட்லரை ஆராதிக்கும் பாசிசக் கட்சிகள் தோன்றியது எப்படி? அன்று ஐரோப்பிய பாசிஸ்டுகளை கவர்வதற்கு ஹிட்லரின் ஆரியனிசக் கொள்கை உதவியது. அதே மாதிரி, இன்று மோடியின் இந்துத்துவா கொள்கை நேபாளம் முதல் இலங்கை வரையான தெற்காசிய பாசிஸ்டுகளை ஒன்று சேர்க்க உதவாதா? நாங்கள் வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ள மறுக்கிறோம். 

இலங்கையில் தமிழர்கள் மாதிரி, ஜெர்மனிக்கு அயல்நாடான செக்கோஸ்லோவேகியாவில் ஜெர்மன் மொழி பேசுவோர் ஒரு சிறுபான்மை இனம். நிலவுடைமையாளர்களின் ஜெர்மன் தேசியவாதக் கட்சிகள் அந்த மக்களை பிரதிநிதித்துவப் படுத்தி வந்தன. ஆனால் முப்பதுகளில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடிக்கு பிறகு ஜெர்மன் நாஜிகளுடன் கொள்கை உடன்பாடு கொண்ட புதிய கட்சிகள் உருவாக்கி, ஓரிரு வருடங்களுக்குள் பெரிதாக வளர்ந்து விட்டன. 

முப்பதுகள் வரையில், செக்கோஸ்லோவேகியா தேர்தலில் நாஜிக் கட்சி போட்டியிட வேண்டுமென்ற ஹிட்லரின் "நிறைவேற முடியாத பேராசை" பற்றிக் கேள்விப்பட்டவுடன் செக்கோஸ்லாவாக்கிய ஜெர்மனியர்கள் பலர் சிரித்தனர். உங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளும் அவர்களில் அடக்கம். முதலில் (நாஜிகளின் கோட்டையான) பவாரியா மாநிலத்திற்கு வெளியில் உள்ள பிற மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் வென்று காட்டுங்கள் என்று பரிகசித்தார்கள். 

இன்று பாஜகவுக்கு உத்தரப் பிரதேசம் மாதிரி, அன்று நாஜிகளுக்கு பவாரியா இருந்தது. இன்று பாஜக கேரளா, தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் வெல்ல முடியாத சூழ்நிலை காணப்படுவது மாதிரி, அன்று நாஜிகள் மேற்கு ஜெர்மன் மாநிலங்களில் வெல்லவே முடியாத சூழ்நிலை நிலவியது. வெஸ்ட் பாலென் (West Falen) போன்ற மேற்கு ஜெர்மன் மாநிலங்களில், எப்போதும் இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சிக்கு தான் பெருமளவு வாக்குகள் கிடைத்து வந்தன. 

நாஜிக் கட்சி பதவிக்கு வந்த 1933 ம் ஆண்டு தேர்தலில் கூட, மேற்கு ஜெர்மன் மாநிலங்களில் 30% க்கும் குறைவான வாக்குகளே கிடைத்தன. அந்தளவுக்கு அவர்களுக்கு அங்கே ஒருபோதும் மக்கள் ஆதரவு இருக்கவில்லை. அப்படியான ஒரு காலத்தில், நாஜிக் கட்சி செக்கோஸ்லாவாக்கிய தேர்தலில் போட்டியிடப் போகிறது என்று சொல்லி இருந்தால், எல்லோரும் அதைக் கேட்டு சிரித்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அதற்குப் பின்னர் நடந்த வரலாறு என்னவென்பதை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். 

இப்படிக்கு, 
- கலையரசன் 
 17-2-2021


இதில் உள்ள வீடியோப் பதிவையும் பாரவையிடவும்: 

 

No comments: