Sunday, April 26, 2020

Fake News: வைரஸ் இழப்புகளுக்கு சீனாவிடம் இழப்பீடு கோரும் அமெரிக்கா

எச்சரிக்கை! FAKE NEWS!! 
"வைரஸ் பரம்பலின் மூலஸ்தானம் வூஹான் சோதனைக்கூடம்" என்பது ஒரு பொய்ச் செய்தி. 
தீவிர வலதுசாரி விஷமிகள் பரப்பும் வதந்தி.


பிரான்ஸ், பாரிஸில் வசிக்கும் குமாரதாசன் (Kumarathasan Karthigesu) என்பவர் "வைரஸ் பரம்பலின் மூலஸ்தானம் என்று குறிப்பிட்டுக் குற்றஞ்சாட்டப்படும் சீனாவின் யுஹான் பரிசோதனைக்கூடம்" என்ற தலைப்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதிய பொய்ச் செய்தியை இதுவரை 152 பேர் பகிர்ந்துள்ளனர். இதை எழுதியவர் ஒரு பிரபல ஈழத்து "ஊடகவியலாளர்"(?) என்று சொல்கிறார்கள். அப்படியான ஒருவரே இந்தத் தகவலின் உண்மைத் தன்மை குறித்து ஆராயாமல் எழுதியுள்ளார். ஒருவேளை அவரும் ஒரு தீவிர வலதுசாரியாக இருந்தால், தனது வழமையான அரசியல் பிரச்சாரத்திற்கு சாதகமாக இந்த வதந்தியை பயன்படுத்தி இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் விஷமிகள் விரிக்கும் சூழ்ச்சி வலைக்குள் நாமும் விழுந்து விடக் கூடாது.

இந்த விஷமத்தனமான வதந்தியின் ஆதி மூலம் அமெரிக்கா. வேறு யார்? குறிப்பாக ஜனாதிபதி டிரம்பிற்கு நெருக்கமான தீவிர வலதுசாரிகள். யார் இந்த டிரம்ப்? கிருமிநாசினி குடித்தால் கொரோனா வைரஸ் செத்து விடும் என்று கூறிய "அறிவாளி". இன்று வரையில் உலகிலேயே அதிகப்படியான கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளும், உயிரிழப்புகளும் அமெரிக்காவில் மட்டுமே நடந்துள்ளன. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்த காலத்தில், ஜனாதிபதி டிரம்ப் விமானநிலையங்களை மூடாமல் lock down கொண்டு வர மறுத்து வந்தார். Lockdown போட்டால் பொருளாதாரம் ஸ்தம்பித்து விடும் என்பதற்காக தனது சொந்த மக்களை பலி கொடுக்கவும் தயங்காத அரசுத் தலைவர்.

இதுவரை நாற்பதாயிரம் பேரை பலி வாங்கிய கொரோனா வைரஸ் பரவுதலுக்கு பொறுப்பேற்க மறுக்கும் டிரம்ப் தன்னைத் தவிர மற்ற எல்லோரையும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார். உலக சுகாதார நிறுவனம் கூட இவரது குற்றச்சாட்டுக்கு தப்பவில்லை. கொரோனா மரணங்களுக்கு காரணம் அமெரிக்க அரசின் நிர்வாக குறைபாடுகள் என்பதை மறைப்பதற்காக வேண்டுமென்றே பல பொய்யான செய்திகள் புனைந்து பரப்பப் படுகின்றன. டிரம்புக்கு ஆதரவான தீவிர வலதுசாரி இணையத் தளங்களிலும், Fox news தொலைக்காட்சியிலும் இந்த பொய்ச் செய்திகள் பரப்பப் படுகின்றன.

கொரோனா வைரசானது சீனாவில் வூஹான் ஆய்வுகூடத்தில் உருவாக்கப் பட்டது, அல்லது அங்கிருந்து தப்பியது, வேண்டுமென்றே பரப்பப் பட்டது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அமெரிக்க நுண்ணுயிரியல் விஞ்ஞானிகளே இது உண்மையல்ல என்று மறுத்துள்ளனர். இது விஞ்ஞானபூர்வமான தகவல் அல்ல என்றும் அரசியல் நோக்கங்களுக்காக பரப்பப் படும் வதந்தி என்றும் கூறியுள்ளனர்.

ஒரு வதந்தியை மட்டும் "ஆதாரமாக" வைத்துக் கொண்டு குமாரதாசன் தனது கற்பனைக் குதிரையை தட்டி விட்டுள்ளார். உலகம் முழுவதும் வைரஸ் பரவியதற்கு சீனாவே பொறுப்பு என்றும், அதனால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் "தங்களது இழப்புகளுக்குரிய 'பில்' லை சீனாவிடம் கொடுக்கத் தயாராகின்றன" என்று சிறுபிள்ளை கூட நம்ப முடியாத விடயங்களை எல்லாம் கற்பனை செய்து எழுதுகிறார். அதே மாதிரி, எபோலாவை பரப்பியதற்கு ஆப்பிரிக்க நாடுகள் அமெரிக்காவிடம் 'பில்' கொடுக்கலாமா என்பதையும் கேட்டுச் சொன்னால் நல்லது. (எபோலா வைரஸ் அமெரிக்காவில் தோன்றியதற்கான ஆதாரம் உள்ளது.)

ஒரு பேச்சுக்கு இது சாத்தியம் என்று வைத்துக் கொண்டாலும், பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய உயிரியல் யுத்தத்திற்காக வட கொரியா, வியட்நாம், சீனா, கியூபா, போன்ற பல உலக நாடுகள் அமெரிக்காவுக்கு 'பில்' அனுப்பி நஷ்டஈடு கோரக் காத்திருக்கின்றன. இவையெல்லாம் அமெரிக்கா திட்டமிட்டு செய்த இனப்படுகொலைகளுக்குள் அடங்கும். இது விடயத்திலும் சர்வதேச ரீதியான விசாரணை ஒன்று பின்னராக நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டல்லவா ஊடகவியலாளரே?

அமெரிக்காவில் தீவிர வலதுசாரிகள் பரப்பும் பொய்ச் செய்திகளை, தமிழ் பேசும் தீவிர வலதுசாரிகள் தமிழில் மொழிபெயர்த்து எழுதி பரப்பியுள்ளனர். இதுவும் அவர்களது தீவிர வலதுசாரி அரசியல் பிரச்சாரத்தின் ஒரு பகுதி தான். இந்த விஷமிகள் குறித்து தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

இது ஒரு பொய்ச் செய்தி என்பதை நிரூபிப்பதற்கான நிறைய ஆதாரங்கள் இந்த இணைப்பில் உள்ளன:
Scientists Haven’t Found Proof The Coronavirus Escaped From A Lab In Wuhan. Trump Supporters Are Spreading The Rumor Anyway. 
https://www.buzzfeednews.com/article/ryanhatesthis/coronavirus-rumors-escape-lab-china-fox-news-trump?fbclid=IwAR3xsqG7pWS5y6e78l6CllDAPkzHttHUqqKMK3996RKqanyEZl297BDseQc

அமெரிக்காவின் பிரச்சாரம் COVID-19 க்கு சீனாவை குற்றம்சாட்டும் பொய்களை ஊக்குவிக்கிறது

நெதர்லாந்து தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி. அதிலும் மேற்படி வூஹான் ஆய்வுகூடம் பற்றிய பொய் செய்தியை பரப்பியது டிரம்ப் சார்பான தீவிர வலதுசாரி இணையத் தளங்கள் என்று தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
 

3 comments:

பாபு பகத். க said...

எனக்கும் அமெரிக்கா கூறுவதை ஏற்க முடியவில்லை ஆனால் என் மனது மற்றவர்கள் என்னிடம் வினவும் ஒரு கேள்விக்கு பதில் உரைக்க முடியவில்லை அதாவது WHO இந்த வைரஸ் மனிதனிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவாது என்று கூறியதாக வரும் செய்தியின் உண்மைத் தன்மை என்ன சகோதரா?

சோம. சிவ சங்கரன் said...

பாபு பகத் க அவர்களுக்கு,
WHO அமைப்பின் Dr.Tedros-இற்கு எழுதிய கடிதத்தில் டிரம்ப் சுமத்தும் குற்றசாட்டுகள் முற்றிலும் ஒதுக்கி விட முடியாது. பாமரத்தனமாக விஷமத்தனமாக trump-இன் அரசியல்/சுபாவம் இருந்தாலும், அந்த கடிதம் அமேரிக்க அரசாங்கத்தின் தரப்பாகவே பார்க்கிறேன்.

WHO ஒரு தலைபட்சமாக செயல்பட்டிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

மற்றபடி வைரஸ்களின் DNA, RNA போன்ற மரபியல் மூலக் கூறுகளில் அவற்றின் பரிணாமம், mutations பற்றிய தடங்கள் தெரியும். அவற்றை வைத்து அது இயல்பாக பரிணமித்ததா என்பது எளிதாக தெரிந்து விடும் என்கிறார்கள் அறிஞர்கள். திட்டமிட்டு உருவாக்கப்பட்டது (அல்லது மரபணு மாற்றபட்டது) என்றால் தெரிந்து இருக்கும் இந்த நேரத்தில் . உலகம் முழுவதும் இந்த வைரஸை ஆய்கிறார்கள்.

Prithiviraj kulasinghan said...

சீனா ஒன்றும் கம்யூனிச நாடல்ல. அவர்களிடையேயான ஏகாதிபத்தியச் சண்டையில் நாம் ஏதோ ஒரு பக்கம் எடுத்தாக வேண்டியதில்லை. இந்தப் பதிவு இன்னமும் சீனா மீது காதல் கொண்டுள்ள ஒருவர் எழுதியுள்ள பதிவாகவே தோற்றம் அளிக்கிறது.