ஒரு முதலாளித்துவ நாட்டில் கல்வி அமைப்பானது, உத்தியோகம் பார்க்கும் சிறிய அளவிலான மேட்டுக்குடி வர்க்கத்தை உருவாக்கும் நோக்கில் அமைக்கப் பட்டுள்ளது. மிகவும் புத்திசாலித்தனமான மாணவர்கள் மட்டுமே சித்தி அடையும் வகையில், பாடங்கள் கடினமான மொழி நடையில் எழுதப் படுகின்றன. ஒன்றை சுற்றி வளைத்து சொல்வதன் மூலம், தேவையில்லாத சொற்களை புகுத்துவதன் மூலம், பலருக்கும் புரிந்து கொள்ள முடியாதவாறு வேண்டுமென்றே கடினமாக்கப் பட்டுள்ளது.
இது பற்றி விமர்சித்தால் ஒரு பதில் தயார் நிலையில் இருக்கும்: "பாடங்களையும், சோதனைகளையும் இலகுவாக்கினால் எல்லோரும் பாஸ் பண்ணி விடுவார்களே!" அதாவது, முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும் அளவிற்கு தேவையான ஒரு சிறு தொகையினர் மட்டுமே போதும். எஞ்சியவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. அவர்களைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை.
சோஷலிசப் புரட்சிக்கு முன்பிருந்த ரஷ்யாவிலும், சீனாவிலும் நிலைமை அப்படித் தான் இருந்தது. அப்போதிருந்த முதலாளித்துவ கல்வி அமைப்பானது, சமூகத்தில் உத்தியோகம் பார்க்கும் ஒரு அறிவுஜீவிக் குழாமை உருவாக்கிக் கொண்டிருந்தது. ரஷ்யாவில் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் கிராமப்புறங்களுக்கு அனுப்பப் பட்டனர். அங்கு அவர்கள் விவசாயிகளுடன் தங்கியிருந்து, பண்ணைகளில், வயல்களில் வேலை செய்ய வேண்டும். அத்துடன் எழுத்தறிவற்ற கிராமிய மக்களுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.
அறுபதுகளில் அமெரிக்க பொருளியல் பேராசிரியர் Granick, சோவியத் யூனியனில் நிறுவனங்கள் எப்படி இயங்குகின்றன என்று ஆராய்வதற்காக சென்று வந்தார். தாயகம் திரும்பிய பின்னர், "சிவப்பு நிர்வாகி" என்ற பெயரில் அவர் எழுதிய நூலில், சோவியத் பல்கலைக்கழக பரீட்சைகள் எப்படி நடக்கின்றன என்பதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஒரு பல்கலைக்கழக பரீட்சை மண்டபத்தில் அமர்ந்திருந்து மாணவர்கள் எப்படிப் பரீட்சிக்கப் படுகிறார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளார்.
அந்த நூலில் இருந்து:
பரீட்சை மண்டபத்திற்குள் ஒவ்வொரு மாணவர்களாக அழைக்கப் பட்டனர். அங்கு கேள்வித்தாள்கள் கொண்ட மூன்று கடித உறைகள் இருந்தன. மாணவர் அதிலொன்றை தெரிவு செய்ய வேண்டும். கேள்விகளை வாசித்து குறிப்புகள் எழுதிக் கொள்வதற்கு சில நேரம் ஒதுக்கப் பட்டது. மாணவர் தயாரானவுடன், பரீட்சை நடத்தும் ஆசிரியர் கேள்வி கேட்பார். அவை திறந்த கேள்விகளாக இருந்தன. அதாவது, மாணவர் விரிவான பதில் கொடுக்க முடிந்தது. மேலும் பரீட்சைகள் பெரும்பாலும் வாய்மூலம் தான் நடக்கும். எழுதுவதற்கான அவசியம் இல்லை.
அமெரிக்காவுக்கு திரும்பிய பேராசிரியர் Granick, அமெரிக்க மாணவர்களினதும், ரஷ்ய மாணவர்களினதும் கல்வித் தகைமை சமமாக இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்துள்ளார். இரண்டு நாடுகளிலும் கல்வி போதிக்கும் முறையிலும், பரீட்சை நடத்தும் முறையிலும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இருப்பினும் சித்தி அடைந்த மாணவர்களின் கல்வித் தகைமை கிட்டத்தட்ட ஒரே மட்டத்தில் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்.
கலாச்சார புரட்சிக்கு முந்திய சீனாவிலும், கல்வி முறை பெருமளவு மாற்றங்களுக்கு உள்ளாகவில்லை. அதிகாரத் தன்மை கொண்ட கல்வியாளர்கள், பாடத்திட்டங்களை வகுத்திருந்தார்கள்.
பல்கலைக்கழகம் என்பது உத்தியோகம் பார்க்கும் நோக்கில் சமூகத்தில் மேன் நிலைக்கு செல்ல விரும்புவோருக்கு வாய்ப்பளிக்கும் நிறுவனமாக இருந்தது. கலாச்சாரப் புரட்சிக்குப் பின்னர், அது தொழிலாளர், விவசாயிகளுக்கு சேவை செய்ய வேண்டியிருந்தது. அதற்காக பல்கலைக்கழகத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப் பட்டன. குறிப்பாக, தொழிலாளர்கள், விவசாயிகளை அனுமதிக்கும் வகையில், பல்கலைக்கழக அனுமதி இலகுவாக்கப் பட வேண்டும். அதற்காக, இரண்டு அல்லது மூன்று வருடங்கள் உற்பத்தியில் பங்கெடுத்த மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப் பட்டது.
பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவன்/மாணவி, தான் வேலை செய்த தொழிற்சாலை அல்லது பண்ணையில் இருந்து சான்றிதழ் பெற்றுக் கொடுக்க வேண்டும். கூட வேலை செய்த சக தொழிலாளி ஒருவரும், புரட்சிகர கமிட்டியும் அந்த சான்றிதழில் கையொப்பமிட்டிருக்க வேண்டும். அது வரை காலமும் விவசாயிகள், தொழிலாளர்கள் பல்கலைக்கழகத்தில் சேரத் தடையாக இருந்த கடினமான அனுமதிப் பரீட்சைகள் அனைத்தும் இரத்து செய்யப் பட்டன.
படிக்கும் காலத்தில் பரீட்சைகளும் வேறு விதமாக நடத்தப் பட்டன. சிலநேரம் மாணவர்கள் ஒரு சிறு குழுவாக கூடியிருந்து கேள்விகளுக்கு விடை கூறினார்கள். பெரும்பாலானவை "திறந்த புத்தக" பரீட்சைகளாக இருந்தன. அதாவது பரீட்சை நடக்கும் இடத்திற்கு தான் படித்த பாடநூலையும் கொண்டு செல்லலாம். ஆனால், குறிப்பிட்ட நேர அளவிற்கும் பதில் எழுத வேண்டும். இது போன்ற பரீட்சைகள், சிலநேரம் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் நடக்கின்றன.
பாடநூல்கள், அனைவருக்கும் புரியும் வகையில் இலகுவான மொழி நடையில் எழுதப் பட்டிருந்தன. அது மிகவும் முக்கியமாக இருந்தது. ஏனென்றால், முன்பு நூல்களை எழுதிய பேராசிரியர்கள் வேண்டுமென்றே கடினமாக்கி வைத்திருந்தார்கள்.
Tsinghua பல்கலைக்கழகத்தில் கற்பித்த பேராசிரியர் ஒருவர் சுயவிமர்சனம் செய்து கொள்ளும் வகையில் பின்வரும் கருத்துக்களை கூறினார்:
"நான் மக்களுக்கு சேவை செய்வதற்காக பாடநூல்களை எழுதி இருக்கவில்லை. மாறாக, எனது திறமைகளை காட்டுவதற்காக, கல்வியறிவை வெளிப்படுத்தும் வகையில் எழுதி இருந்தேன். என்னால் என்னவெல்லாம் முடியும் என்று காட்டுவதற்காக, பிரமிக்க வைக்கும் நோக்கில் பார்முலாக்களையும், வெளிநாட்டு மேற்கோள்களையும் பயன்படுத்தி இருந்தேன். சில தெரிவு செய்யப் பட்ட வாக்கியங்கள் மூலம் இலகுவாக விளக்கக் கூடிய பிரச்சனைகளை கடுமையாக்கி வைத்திருந்தேன். பல அருமையான கண்டுபிடிப்புகளை செய்திருந்த அனுபவம் மிக்க தொழிலாளி ஒருவர், எனது கடினமான விளக்கத்தை கேட்டு மனமுடைந்து போயிருந்தார். இதையெல்லாம் தான் என்றைக்குமே புரிந்து கொள்ள முடியாது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்."
பாடநூல்கள் இலகுவாக்கப் பட்டது மட்டுமல்லாது, கல்வி அமைப்பு முழுவதும் நடைமுறையுடன் ஒன்றிணைக்கப் பட்டது. ஒவ்வொரு கற்கையும் நடைமுறையுடன் கூடியதாக இருக்க வேண்டும். சில பல்கலைக்கழகங்கள் தமக்கென தொழிற்சாலைகள், விவசாயப் பண்ணைகளை கொண்டிருந்தன. ஆசிரியர்களும், மாணவர்களும் தொழிற்சாலைகள், பண்ணைகளுக்கு சென்று நடைமுறையில் எப்படி இருக்கிறதென்று படித்தார்கள்.
அதே மாதிரி, தொழிலாளர்கள், விவசாயிகள் பல்கலைக் கழகங்களுக்கு சென்று "வருகை தரும் பேராசிரியர்களாக" விரிவுரை ஆற்றினார்கள். மேலும், மாணவர்கள் தமது துறை சார்ந்த பாடங்களை மட்டும் படிக்கவில்லை. அரசியல் பாடம் அனைவரும் படிக்க வேண்டிய கட்டாய பாடமாக இருந்தது. அதில் தகைமை பெற்றிருந்த தொழிலாளர்கள் வந்து வகுப்பெடுத்தார்கள்.
அதே மாதிரி, தொழிலாளர்கள், விவசாயிகள் பல்கலைக் கழகங்களுக்கு சென்று "வருகை தரும் பேராசிரியர்களாக" விரிவுரை ஆற்றினார்கள். மேலும், மாணவர்கள் தமது துறை சார்ந்த பாடங்களை மட்டும் படிக்கவில்லை. அரசியல் பாடம் அனைவரும் படிக்க வேண்டிய கட்டாய பாடமாக இருந்தது. அதில் தகைமை பெற்றிருந்த தொழிலாளர்கள் வந்து வகுப்பெடுத்தார்கள்.
நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையிலான மிகப்பெரும் இடைவெளியும் நிரப்பப் பட்டது. உதாரணத்திற்கு, மருத்துவ மாணவர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று மருத்துவமனை கட்டுவதற்கு உதவினார்கள். அதே மாதிரி, கிராமிய மக்கள் மருத்துவக் கல்லூரிக்கு வந்து பாரம்பரிய மருத்துவ முறைகள் பற்றியும், மூலிகைகள் பற்றியும் விளக்கினார்கள்.
உசாத்துணை:
De Rode Directeur, David Granick
Sociaslisme en Herstel van het Kapitalisme, Niek Scheerder
No comments:
Post a Comment