"எங்களுக்கு மார்க்சியம் தேவையில்லை... மார்க்சியம் பேசுவது ஒரு இளம்பருவக் கோளாறு..." என்று பூர்ஷுவா மனப்பான்மையுடன் பேசும் மத்தியதர வர்க்க நண்பர்களுக்கு,
மார்க்சியம் என்பது ஏழைகளின், ஒடுக்கப் பட்ட மக்களின் அரசியல். அது உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தேவையில்லாமல் இருக்கலாம். அதாவது உங்களது மத்தியதர வர்க்க நலன்களுக்கு அது தேவையில்லை. முதலாளித்துவம் தாராளமாக வழங்கும் வாழ்க்கை வசதிகளை அனுபவிப்பவர்களுக்கு அது தேவையில்லை.
மார்க்சியத்தால் உங்களுக்கு எந்த நன்மையையும் இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால், முதலாளித்துவம் உங்களுக்கு போதுமான அளவு வருமானம் கொடுக்கிறது. வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதனால் உங்களுக்கு மார்க்சியம் தேவையில்லை. இதைத் தான் வர்க்கக் குணாம்சம் என்று சொல்வார்கள்.
ஏழைகள் சார்பாகப் பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை. ஏனென்றால் அப்பாவி மனிதர்களை சுரண்டி பணம் சேர்க்கும் குறுக்கு வழிகளை, நுணுக்கமான திருட்டுக்களை, ஏமாற்றிப் பணம் பறிப்பதை, முதலாளிகளுக்கு சொல்லிக் கொடுப்பதே நீங்கள் தானே? அதற்காகத் தானே நீங்கள் கற்ற கல்வி பயன்படுகிறது?
முதலாளி தான் கொள்ளையடிக்கும் கோடிக் கணக்கான பணத்தில், உங்களுக்கு சில ஆயிரங்களை கிள்ளிக் கொடுக்கிறான். அந்த பிச்சைக் காசுக்காக விசுவாசமாக வாலாட்டுகிறீர்கள். அந்த நாய்க் குணத்தை பெருமையாக கருதிக் கொள்கிறீர்கள்.
உங்கள் அளவிற்கு பெரிய படிப்பு படித்திராத, சாதாரண அடித்தட்டு மக்களுக்கு மார்க்சியத்தை சொல்லிப் புரிய வைக்க படித்தவர்கள் தான் முன்வர வேண்டும். அதற்கு நீங்கள் உதவி செய்யா விட்டாலும், உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும். உங்களால் முடியாத ஒரு விடயத்தை, இன்னொருவன் செய்யும் பொழுது அதற்கு வழிவிட வேண்டும்.
உங்களைப் போன்ற மெத்தப் படித்தவர்கள், எந்தக் காலத்திலும் உண்மை பேசுவதில்லை. முதலாளித்துவ சுரண்டல் பற்றிப் பேசுவதில்லை. கடன் சுமைகளை கண்டுகொள்வதில்லை.
யுத்தங்கள், பேரழிவுகளை பார்க்கும் போதெல்லாம், அதற்கு "இனப் பிரச்சினை, மதப் பிரச்சினை" என்று காரணம் சொல்லிக் கொள்வீர்கள். மனித அழிவில் இலாபம் சம்பாதிக்கும் ஆயுத வியாபாரிகள் உங்கள் கண்களுக்கு தெரியப் போவதில்லை.
நீங்கள் யாரும் வறுமையைக் கண்டு கொள்வதில்லை. ஒவ்வொருநாளும் பட்டினியால் இறந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகளை பற்றிக் கேள்விப் பட்டாலும் பாராமுகமாக இருக்கிறீர்கள். ஏனென்றால் அது எதுவும் உங்கள் குழந்தை அல்ல.
அதைப் பற்றி எல்லாம் நீங்கள் பேசுவதில்லை. கேள்விப் பட்டாலும் பேச மாட்டீர்கள். உங்கள் வாயை திறக்க விடாமல் எதுவோ தடுக்கிறது. ஆனால், அதைப் பற்றி எல்லாம் மார்க்ஸிஸ்டுகள் பேசுகிறார்கள். அதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதா?
நாய்களுக்கும், மாடுகளுக்கும் வித்தியாசம் உள்ளது. முதலாளிகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவோர் நாய்கள் போன்றவர்கள். முதலாளிகளுக்கு கீழே வேலை செய்பவர்கள் மாடுகள் போன்றவர்கள்.
நாய்கள் உடல் உழைப்பில் ஈடுபடுவதில்லை. முதலாளிகளின் சொத்துக்களுக்கு காவல் காப்பது மட்டுமே அவற்றின் வேலை. முதலாளிகள் வீசும் எலும்புத்துண்டுகளுக்காக வாலாட்டும். முதலாளியை எதிர்ப்பவர்களை பார்த்துக் குரைக்கும். கடிக்கச் சொன்னால் கடிக்கும்.
மாடுகள் வாழ்க்கை முழுவதும் உழைத்துக் கொண்டே இருக்கும். மாடுகளின் உழைப்பால் உருவான நெல் முதலாளிகளால் நுகரப் படுவதுடன், சந்தையில் விற்று பணமாக்கிக் கொள்வார்கள். நெல்லைப் பிரித்த பின்னர் கழிவாக அகற்றப்படும் வைக்கோல் மட்டுமே மாடுகளுக்கு உணவாகும்.
இன்றைய முதலாளித்துவ உற்பத்தி அமைப்பும் அப்படித் தான் இயங்குகிறது. தொழிலாளர்கள் மாடுகள் போன்று உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மத்தியதர வர்க்க புத்திஜீவிகள், நாய்கள் மாதிரி முதலாளிகளுக்கு சேவை செய்வதில் பெருமை அடைகிறார்கள்.
பாட்டாளிவர்க்க அரசியலுக்கும், பூர்ஷுவா (மத்தியதர வர்க்க) அரசியலுக்கும் வித்தியாசம் உள்ளது. முதலாவது யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கிறது. இரண்டாவது கற்பனாவாத உலகை சிருஷ்டிக்கிறது.
பகல் முழுவதும் அலுவலகத்தில் குந்தியிருந்து, முதலாளிகளின் இலாபத்தை அதிகரிக்கும் வழிவகைகளை செய்து கொடுத்து விட்டு, மாலை நேரப் பொழுதுபோக்காக தேசியவாதம், மதவாதம், இனவாதம் என்று பேசித் திரிவது பூர்ஷுவா அரசியல்.
அதற்கு மாறாக, வேலை செய்யும் இடங்களிலும் அரசியல் பேசி சக ஊழியர்களின் உரிமைகளை உணர வைப்பது பாட்டாளிவர்க்க அரசியல். ஐரோப்பாவில் எனக்குத் தெரிந்த பல அரசியல் செயற்பாட்டாளர்கள் வேண்டுமென்றே தொழிற்சாலைகளில் சேர்ந்து வேலை செய்துள்ளனர்.
நெதர்லாந்தில் எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர், கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றின் செயற்பாட்டாளர். பொருளாதார நெருக்கடி காலத்தில் வேலையிழந்து இருந்த நேரம், தபால்கள் தரம் பிரிக்கும் வேலையில் சேர்ந்தார். ஏற்கனவே பல தபால் ஊழியர்கள் அவரது கட்சி உறுப்பினர்களாக உள்ளனர்.
அந்த ஆசிரியர், தபால் தரம் பிரிக்கும் தொழிலகத்தில், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டார். தொழிலாளர் தற்காலிக தீர்வுகளுக்காக அல்லாமல், நிரந்தரமான சோஷலிசப் புரட்சிக்காக போராட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். அந்தத் தொழிலகத்தை சேர்ந்த பலர் தற்போது கட்சி ஆர்வலர்களாக உள்ளானர்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது மாதிரி, இது ஓர் உதாரணம் மட்டுமே. முதலாளித்துவ சுரண்டலைப் பற்றி அறிந்து கொள்வதற்கு அனுபவமும் அவசியம். ஒரு அரசியல் ஆர்வலர், தானும் ஒரு தொழிலாளியாக வேலை செய்வதன் மூலம் தேவையான அனுபவ அறிவைப் பெற்றுக் கொள்கிறார். அத்துடன் சக தொழிலாளர்களையும் ஒன்றிணைக்கிறார்.
1 comment:
// ஏழைகள் சார்பாகப் பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை. ஏனென்றால் அப்பாவி மனிதர்களை சுரண்டி பணம் சேர்க்கும் குறுக்கு வழிகளை, நுணுக்கமான திருட்டுக்களை, ஏமாற்றிப் பணம் பறிப்பதை, முதலாளிகளுக்கு சொல்லிக் கொடுப்பதே நீங்கள் தானே? அதற்காகத் தானே நீங்கள் கற்ற கல்வி பயன்படுகிறது? //
-- நடுதட்டு மக்கள பத்தி ரொம்ப சரியான கருத்து.தேர்தல்ல வாக்கப்போட்டதோட கடம முடிஞ்சதுனு நெனக்கறவங்க. இந்தியாவுல NEET-மாதிரி மாநில அரசோட உரிம பறிபோனா கூட போராடமாட்டாங்க, அது சாய்ந்தரம் அரட்ட அடிக்க மட்டுந்தான் .போராட்டமெல்லாம் அரசியல்வாதியோட கடமன்னு தட்டு கழிப்பாங்க.
இதோட தொடர்பில்லாதது உங்க மின்னஞ்சல் முகவரி இல்லாததால இங்க கேக்கறன் , நேர்கானல் ஒண்ணுல தன்னாட்சி பத்தின லால்கசநாயக்கா அறிக்கைக்கு சுரேச் பிரேமசந்திரனும் அவரு கூட இருந்தவங்களும் கேட்டது " பாதிக்கப்பட்ட தமிழ் தரப்ப திருப்பதி வேண்டுமா , இல்ல பாதிக்கபடாத பெரும்பாண்மய திருப்பதி வேண்டுமா " -னுது ,
எனக்கு பெரும்பாண்மய காட்டி அறத்தல(நீதி தருவதுல) இருந்து தப்பிக்கும் , சிறுபாண்மய எப்பவும் பயமூட்டி அடக்கும் உத்தினு தான் தோனுது , .
- இள.செயக்குமரன் , சேலம் .
Post a Comment