Monday, July 31, 2017

மலையகத் தமிழரை பிரிக்கும் யாழ் சைவ வேளாள மேலாதிக்கவாதிகள்


வட இலங்கையில், ஈழத்தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்த அதே தீய சக்திகள், தற்போது மலையகத் தமிழ் மக்களையும் பிரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இது காலங்காலமாக தொடரும் வழமையான "யாழ் சைவ-வேளாள மையவாத சிந்தனை" தான். அது குறித்து ஆச்சரியப் பட எதுவும் இல்லை.

ஆயினும், பொது மக்கள் விழிப்பாக இருந்து, இந்த தீய சக்திகள் விரிக்கும் வலைகளில் விழ விடாமல் தடுக்க வேண்டியது அவசியம். தேர்தல் அரசியலில் இனவாதம் பேசி வாக்குகளை அறுவடை செய்யும் மூன்றாந்தர அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளில் அகப்படாமல் தப்ப வேண்டும்.

கிளிநொச்சி நகரிலும், அதை அண்டிய பகுதிகளிலும் மலையகத் தமிழர்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர். சரியான கணக்கெடுப்பு இல்லாவிட்டாலும், 30% - 40% அளவில் இருக்கலாம் எனத் தெரிய வருகின்றது. மலையகப் பகுதிகளில் எழுபதுகளில் நடந்த கலவரங்களை அடுத்து அகதிகளாக இடம்பெயர்ந்து குடியேறியவர்கள். அவர்களது இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் சுத்தமான யாழ்ப்பாணத் தமிழ் பேசுவது மட்டுமல்லாது, வன்னியை தாயகமாக்கிக் கொண்டவர்கள்.

ஈழப்போர் நடந்த காலத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கணிசமான அளவில் மலையகத் தமிழ்ப் போராளிகள் இணைந்திருந்தனர். தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களாக கூட இருந்துள்ளனர். போராளிகளில் மலையகத் தமிழர் எவ்வளவு என்ற சரியான எண்ணிக்கை தெரியாது. அது பற்றிய தரவுகளும் இல்லை. இருப்பினும் புலிப் போராளிகளில் பெரும்பான்மையானோர், ஒன்றில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் அல்லது வன்னியை சேர்ந்த மலையகத் தமிழர்கள். போர் நடந்த காலத்தில் களப்பலியான மாவீரர்களின் குடும்பங்களை கணக்கெடுத்தால் தெரியும்.

விரைவான நகரமயமாக்கல் நடக்கும் பகுதிகளில் கிளிநொச்சி பிரதானமானது. வடக்கே பரந்தன் சந்தி முதல் தெற்கே இரணைமடு குளம் வரையில் விரிந்த பெரியதொரு நகரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. புதிதாக கட்டப்பட்ட ஜெர்மன் தொழில்நுட்பக் கல்லூரி, பலகலைக் கழக விவசாய பீடம் என்பன பல பிரதேசங்களில் இருந்தும் மாணவர்களை தருவிக்கவுள்ளது. அதைவிட, வட இலங்கை உழைக்கும் வர்க்க மக்களை சுரண்ட வரும் சுதந்திர வர்த்தக வலையத் தொழிற்சாலைகள், தொழில் வாய்ப்புகளை உருவாக்கப் போகின்றது.

கிளிநொச்சியில் மூன்று வர்க்க அடிப்படை கொண்ட சமூக அமைப்பு வெளிப்படையாக தெரியும் வண்ணம் உள்ளது. பெரும் முதலீட்டு நிறுவனங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் சிங்கள முதலாளிகளும், வெளிநாட்டவரும் (இதற்குள் மேற்கத்திய NGO நிர்வாகிகளும் அடக்கம்) மேல்தட்டு வர்க்கமாக உள்ளனர். அதற்கு அடுத்த நிலையில், நிலவுடமையாளர்கள், பண்ணையார்கள், விவசாய முதலாளிகள், மத்தியதர வர்க்க ஊழியர்களாக யாழ்ப்பாணத் (ஈழத்) தமிழர்கள் உள்ளனர். அடித்தட்டு உழைக்கும் வர்க்கமாக உள்ளவர்கள் பெரும்பாலும் மலையகத் தமிழர்கள் தான்.

பாரதிபுரம் போன்ற பல கிராமங்கள் மலையகத் தமிழருக்காக ஒதுக்கப் பட்டதைப் போன்றுள்ளன. அந்தக் கிராமங்கள் தற்போதும் பின்தங்கி இருக்கின்றன. 2016 ம் ஆண்டு, அக்டோபர் மாதமளவில், பாரதிபுரம் கிராமத்தில், மலையகத் தமிழ்ப் பிள்ளைகள் படிக்கும் பாடசாலையில் அசம்பாவிதம் ஒன்று நடைபெற்றது. வறுமை காரணமாக சப்பாத்து (காலணி) அணிந்து வராத மாணவர்களை அவமானப் படுத்திய பாடசாலை அதிபர், அவர்களது செருப்புக்களை வீதியில் வீசியிருந்தார்.

ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த இந்தச் சம்பவம், பாரதிபுரம் மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை தூண்டி விட்டது. அந்த அதிபரும் யாழ் மையவாத சிந்தனை கொண்ட மேலாதிக்கவாதி தான். சாதாரண மக்களுக்கு வர்க்க முரண்பாடுகள் புரியாது. அவர்களுக்கு தெரிந்த வகையில் தான் எதிர்வினையாற்றுவார்கள். அந்த வகையில், யாழ் மையவாதிகளின் மேலாதிக்கத்தை எதிர்க்கும் மலையகத் தமிழரின் போராட்டமாக அது அமைந்து விட்டது. ஆணவத்துடன் நடந்து கொண்ட குறிப்பிட்ட அதிபர், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) நெருக்கமானவர் என்று கேள்விப் பட்டேன்.

நான் முன்னர் குறிப்பிட்ட படி, அதிபர்கள், ஆசிரியர்கள் போன்ற மத்தியதர வர்க்க வேலைகளில் இருப்பவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள் தான். அதற்காக அவர்கள் எல்லோரும் பூர்ஷுவா மனப்பான்மை, அல்லது யாழ் மையவாத சிந்தனை கொண்டவர்கள் என்று அர்த்தம் அல்ல. ஏழை மலையகத் தமிழ் மாணவர்களை ஊக்குவித்து படிக்க வைத்த ஆசிரியர்கள், அதிபர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக, எனது சித்தப்பா ஒருவரும் கிளிநொச்சியில் பாடசாலை அதிபராக இருந்தவர் தான். அவரது பதவிக் காலத்தில் இது போன்ற வர்க்கப் பிரச்சினைகள் எழவில்லை.

ஆகவே, இந்தப் பின்னணியில் தான், மலையகத் தமிழருக்கு எதிரான அண்மைய பிரச்சனைகளை பார்க்க வேண்டும். ஊடகவியலாளர் ஒருவருடான பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடலில், பா.உ. சிறிதரன் மலையகத் தமிழரை ஏளனமாகக் குறிப்பிடும் "வடக்கத்தியான்" என்ற வசைச் சொல்லை பயன்படுத்தி இருந்தார். வடக்கே இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்ற பொருளில் சொல்லப் படும் "வடக்கத்தியான்" என்ற வசைச் சொல், யாழ் மையவாதிகள் மத்தியில் சர்வ சாதாரணமாகப் புழங்குகின்றது. "வயிற்றுக்குத்தை நம்பினாலும் வடக்கத்தியானை நம்பாதே!" என்று பழமொழி மாதிரி சொல்லிக் கொள்வார்கள்.

அது ஒரு புறமிருக்க, பேஸ்புக்கில் மலையகத் தமிழர் மீது இனத்துவேசம் பாராட்டும் வீடியோ ஒன்று தீய வழியில் பிரபலமானது. ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் கச்சாய் சிவம் என்ற நபர், "சைவ வேளாளன்... ஒரிஜினல் ஈழத்தமிழன்..." என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறார். "மலையகத் தமிழர்கள் இந்தியர்கள், அவர்களும் முஸ்லிம்கள் மாதிரி சிங்களவனுக்கு அடிவருடுபவர்கள்... தோட்டக் காட்டார்கள்..." என்று வசைபாடினார். அதை விட மலையகத் தமிழ்ப் பெண்கள் "விபச்சாரிகள்" என்றும் அபாண்டமாக பழி போட்டார். ஆகவே இது மலையகத் தமிழர்கள் மத்தியில் ஆத்திரத்தை தூண்டியதில் வியப்பில்லை. அந்தக் கச்சாய் சிவம் என்ற மனநோயாளி, கிளிநொச்சி பா.உ. சிறிதரனின் உறவினர் என்று சொல்லப் படுகின்றது.

இதிலே கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், "தமிழர்கள் எல்லோரும் ஓரினம்" என்று தமிழ்த்தேசியம் பேசும் அரசியல் ஆர்வலர்கள் யாருமே இதைக் கண்டிக்கவில்லை. வன்னியில் வாழும் மலையக மக்கள் தமது உரிமைகளைப் பற்றிப் பேசினால், "இனத்தைப் பிரிக்கும் சிங்களவனின் சூழ்ச்சி" என்று கம்பு சுற்றுவதற்கு நிறையப் பேர் வருவார்கள், வந்தார்கள். மலையகத் தமிழ் மக்களின் அவலநிலை பற்றி எழுத்தாளர் தமிழ்க்கவி எழுதிய கட்டுரையை, கிளிநொச்சி நகர சபை இதழில் பிரசுரிக்க மறுத்தார்கள். சமூக வலைத் தளங்களில் தமிழ்க்கவியை மிரட்டும் வண்ணம் திட்டித் திட்டிப் பதிவிட்டனர்.

போலித் தமிழ்த் தேசியவாதிகள், தமிழினவாதிகள் யாருமே, மலையகத் தமிழருக்கு எதிரான கச்சாய் சிவத்தின் இனத்துவேச பேச்சைக் கண்டிக்கவில்லை. "தமிழர்களின் ஐக்கியத்தைக் குலைக்கும் சிங்கள கைக்கூலி கச்சாய் சிவம்" என்று பொங்கி எழவில்லை. இதிலிருந்தே அவர்கள் மனதிலும் அழுக்கு இருக்கிறது என்பது புலனாகின்றது. 

யாழ்ப்பாணத்து கனவான்கள் அறைக்குள் பேசுவதை, அந்த மனநோயாளி அம்பலத்தில் சொல்லி விட்டான். அது மட்டுமே வித்தியாசம். யாழ் மையவாத மேலாதிக்க வாதிகளுக்கென அடிப்படையான சில குணங்கள் உள்ளன. அவை என்றைக்குமே மாறாதவை. மலையகத் தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி ஒரு பக்கம். தாழ்த்தப் பட்ட சாதியினருக்கு எதிரான சாதிவெறி மறுபக்கம். அது இரண்டும் சேர்ந்த கலவை தான், வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகளின் பம்மாத்து அரசியல்.

3 comments:

Anonymous said...

Excellent post!

ஆட்சியாளன் said...

இது எல்லா இடங்களிலும் உள்ளதுதான் ,தமிழ் நாட்டின் தர்மபுரியில் சாதி பிரச்னை உள்ளது .ஆனால் பெங்களூருக்கு வேலை தேடி செல்லும் தமிழர்கள் அனைவரும் கன்னடர் களுக்கு தமிழர்கள் தான்.காவிரி பிரச்னை வரும் பொது யாரும் அந்த சாதி காரனை அடித்தான்.இந்த சாதி காரனை அடித்தான் என்று சும்மா இருப்பதில்லை.எல்லாரும் இணைந்து தான் போராடுகிறார்கள்.காவிரி நீரால் பயன் பெறாத தென்மாவடத்தினர் கூட காவிரிக்காக போராடுகிறார்கள். 4 பேர் இருக்கும் வெட்டுக்குள்ளேயே அடிதடிகள் பிரச்சனைகள் இருக்கும் பொது 50 லட்ச்சம் தமிழர்கள் இருக்கும் ஈழ த் தமிழர்களுக்குள் பிரச்னை இருப்பதில் வியப்பில்லை.இதை களைய வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய வாதிகளுக்கு உள்ளது.ஈழம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பொழுது சாதி பிரச்னை இருக்கவில்லை.

Unknown said...

நீங்கள் கூறும் அனைத்தும் உண்மையே.
வாழ்த்துக்கள். உங்களோடு தொடர்பைபேன விரும்புகிறேன்.