கனடாவில் கியூபெக் மாநிலம் பிரிவதற்காக நடத்தப் பட்ட வாக்கெடுப்பு பற்றி சிலாகித்துப் பேசும் தமிழ்த் தேசியவாதிகள் பலரைக் கண்டிருப்போம். ஆனால், அவர்களில் யாராவது கனடிய பூர்வ குடி மக்களுக்கான தனிநாடு பற்றிப் பேசுகிறார்களா?
கியூபெக் பிரிவினைக் கோரிக்கை, காலனிய காலத்திய ஏகாதிபத்திய முரண்பாடுகளின் விளைவு என்ற உண்மையை பலர் உணர்வதில்லை. கனடாவை காலனிப் படுத்திய ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்கள், தமக்குள் சண்டையிட்டுக் கொண்ட காலம் ஒன்றிருந்தது. இது எஜமானர்களுக்கு இடையிலான ஆதிக்கப் போட்டி. அதை தேசிய இனங்களின் சுயநிர்ணயப் போராட்டமாக நினைத்துக் குழப்பிக் கொள்வது அறிவிலித் தனம்.
இதிலே இன்னொரு வேடிக்கையையும் குறிப்பிட வேண்டும். கியூபெக் மாநிலத்தில் ஆயிரக் கணக்கான ஈழத் தமிழர்கள் வாக்குரிமையுடன் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் தமிழீழ ஆதரவாளர்கள். இருப்பினும் கியூபெக் வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக வாக்களித்தனர். "குடியேறிகளின் எதிர்ப்பு வாக்குகளால் தோற்றதாக" கியூபெக் தேசியவாதிகளும் அறிவித்திருந்தனர்.
எதற்காக கனடா வாழ் தமிழீழ ஆதரவாளர்களும் கியூபெக் பிரிவினைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்? ஏனென்றால் தேசியவாதம் அடிப்படையில் ஒரு தன்னலவாதம். தனது சொந்த தேசிய இனத்தின் நன்மைகளுக்கப்பால் வேறெதையும் சிந்திப்பதில்லை. அதனால் தான், கனடாவில், கியூபெக் தேசியவாதிகளுக்கும், தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வு இருக்கவில்லை. இருக்கவும் முடியாது.
கியூபெக் தனி நாடானால் தனது நிலைமை என்னாகுமோ என்ற அச்சம் அங்கிருக்கும் தமிழர் மனதில் எழுவது இயல்பு. ஏனைய இனத்தவரின் நலன்களை கணக்கில் எடுக்காத (கியூபெக்) தேசியவாதத்தை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளாததில் தப்பில்லை.
தேசியவாதம் பெரும்பாலும் அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு பெரிதும் உதவுகின்றது. இந்த உண்மையை பலர் உணர்வதில்லை. ஒரு பக்கம் கியூபெக் தேசியவாதிகளின் பிரிவினைக் கோரிக்கையை அங்கீகரித்த அதே கனடிய அரசு தான் பன்னாட்டுக் குடியேறிகளை அங்கே குடியமர்த்தியது.
தேசியவாதம் எப்போதும் குறுகிய மனப்பான்மை கொண்டது. அதனால் பல்வேறு இனங்களை ஒரே கொள்கையின் கீழ் ஒன்று சேர்க்க முடியாது. ஒருநாளும் நடக்காது. அதனால் இறுதியில் ஆட்சியாளருக்கே ஆதாயம். இதைப் பிரித்தாளும் சூழ்ச்சி என்றும் சொல்லலாம்.
தேசியவாதிகளின் அரசியல் செல்வாக்கை குறைக்க வேண்டுமானால், அவர்கள் கேட்கும் தனி நாட்டை பிரித்துக் கொடுத்து விடுவது சிறந்த வழி. இருபது வருடங்களுக்கு முன்னர், தமிழீழம் கிடைத்திருந்தால், இன்று தமிழ் தேசியவாதிகள் காணாமல் போயிருப்பார்கள்.
உலகில் பல நாடுகளில் நடந்த தேசிய இன விடுதலைப் போராட்டங்கள், அதனை உறுதிப் படுத்துகின்றன. உதாரணத்திற்கு, செக்கோஸ்லோவாக்கியா என்ற நாடு, செக் மற்றும் ஸ்லோவாக்கியா குடியரசுகள் என்று பிரிந்த வரலாற்றை எடுத்துப் பார்ப்போம்.
செக் மொழிக்கும், ஸ்லோவாக்கிய மொழிக்கும் இடையில் என்ன வேறுபாடு? ஒன்றுமேயில்லை. சில நூறு சொற்களைத் தவிர, வேறெந்த வித்தியாசமும் இல்லை. வீம்புக்கு ஒரே மாதிரியான சொற்களை, வேறு எழுத்தை பாவித்து எழுதுகிறார்கள். (வேறு மொழி என்று காட்ட வேண்டுமாம்.)
அதே மாதிரி, ஈழத் தமிழையும் வித்தியாசமாக எழுதலாம். ஏற்கனவே அப்படித் தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். "T" என்ற ஒலிக்கு, ஈழத் தமிழில் "ரி" என்று எழுதுவார்கள். இந்தியத் தமிழில் "டி" என்று எழுதுவார்கள். அது போதும், ஈழத் தமிழ் மொழி தனித்துவமானது, ஈழத் தமிழர்கள் தனியான தேசிய இனம் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்து விடலாம். அதே தான், ஸ்லோவாக்கியாவில் நடந்தது. (மசிடோனியா, குரோவாசியா போன்ற பல தேசியவாத இயக்கங்கள் அப்படித் தான் ஆரம்பமாகின.)
செக்கோஸ்லோவாக்கியாவில் கம்யூனிச ஆட்சி முடிவுக்கு வந்ததும், செக், ஸ்லோவாக்கிய தேசியவாதிகளின் செல்வாக்கு உயர்ந்தது. செக்கியர்களின் தேசியத் தலைவர் Václav Klaus, ஸ்லோவாக்கியர்களின் தேசியத் தலைவர் Vladimír Mečiar, இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு தான், செக்கோஸ்லோவாக்கிய பிரிவினை. (ஒரு காலத்தில், இருவரையும் கம்யூனிஸ்டுகள் போட்டு உதைத்ததால், கடுப்பில் இருந்திருப்பார்கள் போலும்.)
உண்மையில் பெருமளவு மக்கள் அதனை ஆதரிக்கவில்லை. இரண்டு பக்கமும் முப்பத்தைந்து சதவீதமானோர் மட்டுமே ஆதரித்தார்கள். நீண்ட காலம் குடும்பம் நடத்திய கணவனும், மனைவியும் விவாகரத்து செய்வதைப் போல நாட்டை பிரித்தார்கள். அரசு உடைமைகள், இராணுவ உபகரணங்கள், ரயில் பாதைகள் எல்லாம் மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பிரிக்கப் பட்டன. ஏனென்றால், செக் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையாகவும், ஸ்லோவாக்கிய மக்கள், மூன்றில் ஒரு சிறுபான்மையாகவும் இருந்தனர்.
இரண்டு தேசியங்களும், தங்களுக்கென்று தனியான கொடிகள், தேசிய கீதங்கள், கடவுச்சீட்டு, நாணயம் என்றெல்லாம் உருவாக்கினார்கள். இதற்காக கோடிக் கணக்கில் செலவிட்டார்கள். இரண்டு நாடுகளுக்கு நடுவில், எல்லை போட்டு காவலர்களை நிறுத்தி வைத்தார்கள். செக்கியர்களும், ஸ்லோவாக்கியர்களும், "இனிமேல் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ முடியாது," என்று சொல்லி பிரிந்து சென்றார்கள்.
பிரிந்து வாழ்ந்து சில வருடங்கள் ஆகவில்லை. நேட்டோ கூட்டமைப்பில் இரண்டு நாடுகளும் சேர்ந்து கொண்டன. அதனால், பிரிந்த இராணுவம் மீண்டும் ஒன்றாக சேர்ந்தது. இன்னொரு பக்கத்தில், ஐரோப்பிய ஒன்றியமும் ஆள் சேர்த்துக் கொண்டிருந்தது. அதிலே இரண்டு நாடுகளும் சமர்த்துப் பிள்ளைகளாக சேர்ந்து விட்டன. ஐரோப்பிய ஒன்றியம் கேட்ட படி, செங்கன் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்கள்.
அதற்குப் பின் என்ன நடந்தது? இரண்டு நாடுகளுக்கு நடுவில் இருந்த எல்லைக் கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டன. இப்போது இரண்டு நாட்டு பிரஜைகளும் பாஸ்போர்ட் இல்லாமல், சுதந்திரமாக போய் வரலாம். ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகள் என்பதால், ஒரு நாட்டின் பிரஜை மற்ற நாட்டில் வாழவும், வேலை செய்யவும், வர்த்தகம் செய்யவும் பூரண சுதந்திரம் பெற்றவராகிறார்.
வருங்காலத்தில் யூரோ வந்தால், ஒரே நாணயம் புழக்கத்தில் இருக்கும். (ஏற்கனவே ஸ்லோவாக்கியா யூரோ பயன்படுத்துகிறது.) தற்போது, செக் குடியரசும், ஸ்லோவாக்கிய குடியரசும், நடைமுறையில் ஒரே நாடாக உள்ளன. ஆனால், பெயருக்கு இரண்டு அரசாங்கங்கள் இருக்கின்றன. இது எப்படி இருக்கிறது என்றால், விவாகரத்து பெற்று சென்ற கணவனும், மனைவியும் பின்னர் ஒரே வீட்டில் வாழ்வதைப் போன்றுள்ளது.
உலகில் உள்ள எல்லா நாட்டு மக்களையும் போலத் தான், செக்கோஸ்வாக்கிய மக்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. பெரும்பான்மை மக்களுக்கு, அவர்களது குடும்பப் பொறுப்புகள், வேலை, பணம், இவை மட்டுமே முக்கியமானவை. அவர்களிடம் சென்று, "எதற்காக ஸ்லோவாக்கியா பிரிந்தது?" என்று கேட்டு விடாதீர்கள். பெரும்பான்மை மக்களுக்கு அதற்குப் பதில் தெரியாது.
தேசிய விடுதலைப் போராட்டம் நடக்கும் நேரத்தில் அமோகமாக இருந்த மக்கள் ஆதரவு, சுதந்திரம் அடைந்த பின்னரும் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது. உதாரணத்திற்கு, இந்திய சுதந்திரப் போராட்டத்தை எடுத்துக் காட்டலாம். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெறப் போராடிய காலத்தில் இருந்த மக்கள் ஆதரவு இப்போது இல்லை. குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மட்டுமே இந்திய தேசியத்தை ஆதரிக்கிறார்கள். அதே மாதிரி, தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய ANC க்கு முன்பிருந்த மக்கள் ஆதரவு இப்போது இல்லை.அது அரசு அதிகாரத்திற்கு வந்த பின்னர், அதன் ஆதரவாளர்கள் மத்தியில் இருந்தே வெறுப்பை சம்பாதித்தது.
இது இயற்கையான அரசியல் மாற்றம். ஈழத்தில் விடுதலைப் புலிகளின் விடயத்திலும் இதை நாங்கள் எதிர்பார்க்க வேண்டும். புலிகள் வைத்திருந்த "நடைமுறை அரசு" உண்மையில் அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேச நிர்வாகம் ஆகும். அப்போது அங்கே மும்முரமாக போர் நடந்து கொண்டிருந்தது. போர் தொடர்ந்த படியால் அதைக் காட்டியே நடைமுறை அரசின் குறைபாடுகளுக்கு நியாயம் கற்பித்தார்கள். ஆகவே அதனை உண்மையான தமிழீழம் என்று கருத முடியாது.
உலகம் முழுவதும் தேசிய இனங்களின் போராட்டம் ஒரே நோக்கத்திற்காக நடக்கின்றன. எத்தியோப்பியாவில் பேசப்படும் அதே மொழிகள் (அம்ஹாரி, திக்ரிஞ்ஞா) எரித்திரியாவிலும் பேசப் படுகின்றன. அவர்கள் ஒரே மொழி பேசினாலும் எத்தியோப்பியாவை பேரினவாத அரசாக கருதினார்கள். (விரும்பினால் அதை பிரதேசவாதம் என்று அழைக்கலாம்.)காலனியாதிக்க காலத்தில் எரித்திரியா இத்தாலியின் காலனியாக இருந்தது. அதனால் அங்கு பண்பாட்டு மாற்றம் ஏற்பட்டிருந்தது. அது மட்டுமே எரித்திரியர்களை ஒன்று சேர்த்தது.
ஈழத்தில் புலிகள் சிங்கள மொழி மேலாண்மையை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட தமிழரின் பெயரால் போராடினார்கள். ஆனால் எத்தியோப்பியாவிலும், இலங்கையிலும் ஒடுக்கும் அரசு ஒரே மாதிரி செயற்பட்டது. அரச பயங்கரவாதம் இரண்டு நாடுகளிலும் ஒரே மாதிரி இருந்தது. எரித்திரியா, ஈழத்திற்கான விடுதலைப் போராட்டங்களும் ஒரே மாதிரி நடந்தது. சிலநேரம், யுத்த தந்திரங்களும், வியூகங்களும் ஒரே மாதிரி இருந்தன. உதாரணத்திற்கு, கட்டுநாயக்க விமானநிலைய தாக்குதல் மாதிரியான சம்பவம், ஏற்கனவே எரித்திரிய விடுதலைப் போரில் நடந்துள்ளது.
புலிகளால் ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் நடத்தப் பட்டாலும் அதன் இறுதி இலட்சியம் ஒரு தேசிய அரசு அமைப்பது தான். அது எப்படி இருக்கும் என்பது தான் கேள்வி. அடிப்படையில், தமிழ் அரசும் சிங்கள அரசு கட்டமைப்பை பின்பற்றியதாக இருக்கும். நிர்வாக அமைப்பில் எந்த வித்தியாசமும் இருக்காது. அந்த உண்மையை புலிகளும் மறுக்கவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் முன்பிருந்த நடைமுறை அரசு அதை நிரூபிக்கிறது. உதாரணத்திற்கு, சிறிலங்கா அரசு நியமித்த அரச அதிபர்கள், கிராம சேவகர்கள் அப்படியே இருந்தனர். அதே நேரம், சமாந்தரமாக புலிகளின் நிழல் அரசும் இயங்கியது. அதாவது, புலிகள் நியமித்த அரச அதிகார்கள், கிராம சேவகர்களும் இருந்தனர்.
ஒரு வேளை, புலிகளின் தலைமையில் தமிழீழம் என்ற தேசம் உருவாகி இரு தசாப்த காலமாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். தற்போது புலி ஆதரவாளர்கள் அரச ஒத்தோடிகள் என்று அழைக்கப் படுவார்கள். புலி எதிர்ப்பாளர்கள் அரச எதிர்ப்பாளராக கருதப் படுவார்கள். ஏனென்றால், இறுதியில் புலிகளின் நோக்கமும் தமிழீழ "அரசு" அமைப்பது தான் இல்லையா?
இப்போது கண் முன்னால் காணக்கூடிய ஆதாரத்திற்கு வருவோம். இரு தசாப்த காலத்திற்கு முன்னர், எத்தியோப்பியாவில் இருந்து எரித்திரியாவை விடுதலை செய்வதற்காக EPLF இயக்கம் போராடியது. EPLF என்பது நமக்குப் புலிகள் மாதிரி. அதன் தலைவர் இசையாஸ் அபெவெர்கி நமக்கு பிரபாகரன் மாதிரி.
எரித்திரியா சுதந்திரமான தனி நாடான பின்னர், முன்பு விடுதலை இயக்கமாக இருந்த EPLF ஆட்சி அமைத்தது. அதன் தலைவர் ஜனாதிபதி ஆனார். எத்தியோப்பியாவில் இருந்து பிரிந்த பின்னர் சில வருடங்கள் எல்லைப் போர் நடந்தது. எரித்திரிய அரசு அதைக் காரணமாகக் காட்டி, ஜனநாயகத்தை மறுத்து வருகின்றது. தேர்தல்கள் நடத்துவதில்லை.
இப்போது புலம்பெயர்ந்த நாடுகளுக்கு வருவோம். இரு தசாப்த காலத்திற்கு முன்னர், அதாவது எரித்திரிய விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் பெருந்தொகை அகதிகள் ஐரோப்பா சென்று குடியேறி விட்டனர்.
புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பகுதியினர் புலிகளை ஆதரிப்பது மாதிரி, அன்று வந்த எரித்திரியர்களில் பெரும்பகுதியினர் EPLF ஆதரவாளர்கள். அதாவது இன்றைய நிலையில் எரித்திரிய அரச ஆதரவாளர்கள்.
சில தினங்களுக்கு முன்னர் எரித்திரிய அதிபரின் வலதுகரமாக பதவியில் இருக்கும் ஒருவர் நெதர்லாந்திற்கு வருகை தந்திருந்தார். நமக்கு அன்டன் பாலசிங்கம் மாதிரி ஒருவர் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அவர் அங்கு ஒரு மகாநாட்டில் பேசுவதற்கு ஏற்பாடாகி இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் மகாநாடு நடத்த அனுமதி மறுக்கப் பட்டது. அந்த இடத்தில் ஒரு சிறிய கலவரம் நடந்து ஓய்ந்துள்ளது. உண்மையில் என்ன நடந்தது?
மகாநாட்டை ஒழுங்கு படுத்தியவர்கள், நெதர்லாந்தில் வாழும் இரண்டாந்தலைமுறை எரித்திரிய இளைஞர்கள். அவர்களது பெற்றோர் இருபது வருடங்களுக்கு முன்னர் வந்து குடியேறியவர்கள். தமது பெற்றோர் மாதிரியே, இந்த இளையோரும் EPLF ஆதரவாளர்கள். ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த இரண்டாந் தலைமுறையை சேர்ந்த புலி ஆதரவு தமிழ் இளையோருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இலகுவாகப் புரியும்.
அதே நேரம், எரித்திரியா தனி நாடாக சுதந்திரம் அடைந்த பின்னர், பெருமளவு அகதிகள் ஐரோப்பா வந்துள்ளனர். அண்மைக் கால அகதிகள், ஒன்றில் எல்லைப் போரை எதிர்த்து வெளியேறி இருப்பார்கள். இல்லாவிட்டால் அபெவெர்கி அரசை எதிர்ப்பவர்களாக இருப்பார்கள்.
நெதர்லாந்தில் மகாநாடு நடக்கவிருந்த இடத்தில், அபெவெர்கி அரச எதிர்ப்பாளர்கள் (நமக்கு புலி எதிர்ப்பாளர்கள் மாதிரி) ஒன்று கூடி விட்டனர். மகாநாட்டை நடத்த விடுவதில்லை என்று கலகம் செய்தனர். நிலைமை எல்லை மீறிச் செல்வதைக் கண்ட உள்ளூராட்சி சபை மகாநாட்டை தடை செய்து விட்டது.
அங்கு நடந்த சம்பவங்கள், எவ்வாறு புலம்பெயர்ந்த நாடுகளிலும் எரித்திரிய மக்கள் பிளவு பட்டுள்ளனர் என்ற உண்மையை உணர்த்தியது.
அண்மைக் காலத்தில் வந்த அகதிகள், தமக்கு தாயகத்தின் உண்மை நிலைமை தெரியும் என்று கூறுகின்றனர். அதற்கு மாறாக புலம்பெயர் சூழலில் வளர்ந்த இரண்டாந் தலைமுறையினருக்கு அங்குள்ள உண்மை நிலவரம் தெரியாது என்று வாதிடுகின்றனர்.
No comments:
Post a Comment