தயவுசெய்து, பொதுவுடமைக் கொள்கையை எதிர்ப்பவர்கள், முதலில் பொருளாதார அடிப்படைகளை அறிந்து கொண்டு வாருங்கள். "பணம் என்றால் என்ன? முதலாளித்துவப் பொருளாதாரம் எப்படி இயங்குகின்றது?" இவை போன்ற அடிப்படை அறிவு இல்லாமல், கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யாதீர்கள். உங்களுக்கு தெரியாத விடயங்களில் மூக்கை நுழைத்து அவமானப் படாதீர்கள்.
கம்யூனிச எதிர்ப்புக் காய்ச்சலால் பீடிக்கப் பட்ட தமிழ் அறிவுஜீவிகள் பலர், தற்போது அடிக்கடி பிதற்றுவதைக் காணக் கூடியதாகவுள்ளது. உலகம் முழுவதும் மட்டுமல்லாது, இலங்கையிலும், அதிலும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பொதுவுடமைக்கு ஆதரவு பெருகுவதைக் கண்டு சகிக்க முடியாத அறிவுஜீவிகள், மிகவும் அபத்தமான கருத்துக்களை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இலங்கையில் முதலாளித்துவ பத்திரிகையான வீரகேசரியில், ஓர் அபத்தமான கம்யூனிச எதிர்ப்புக் கட்டுரை ஒன்று பிரசுரமானது. (27.02.2017) "பொதுவுடமை, ஒரு சிந்தனாவாதம் மட்டுமே…! ஒரு அநுபவக் குறிப்பு" என்ற தலைப்பிலான கட்டுரையில், "முதலாளித்துவத்தின் குறைபாடுகளை" பொதுவுடைமை என்று திரித்து எழுதி பித்தலாட்டம் நடந்துள்ளது.
(கட்டுரையை இந்த இணைப்பில் முழுமையாக வாசிக்கலாம்:பொதுவுடமை, ஒரு சிந்தனாவாதம் மட்டுமே…! ஒரு அநுபவக் குறிப்பு)
அதாவது, கட்டுரையில் முதலாளித்துவம் என்பதற்கு பதிலாக, பொதுவுடைமை என்று மாற்றி எழுதியுள்ளார். அதற்குக் காரணம், அவருக்கு பொதுவுடைமை பற்றி ஒரு மண்ணும் தெரியாது. ஒரு அறிவுஜீவி தனது அறியாமையை வெளிப்படுத்தி எழுதியுள்ள கட்டுரையின் உண்மைத் தன்மையை ஆராயாமல், வீரகேசரி பத்திரிகை ஞாயிறு வாரமஞ்சரியில் பிரசுரித்து விட்டது. நான் அந்தக் கட்டுரையில் இருந்த அபத்தமான தகவல்களை சுட்டிக் காட்டி எழுதிய விமர்சனக் கட்டுரையை வீரகேசரிக்கு அனுப்பியும் அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. (எனது மறுப்புக் கட்டுரை:பொதுவுடமை ஒரு "சிந்தனைவாதம்"(?) - ஒரு அபத்தக் குறிப்பு)
இலங்கையில் பத்தாம் வகுப்பில் இருந்து வணிகவியல் படிக்க முடியும். நடைமுறையில் உள்ள முதலாளித்துவ பொருளாதாரம் எப்படி இயங்குகிறது என்பதை, பாடசாலையில், பல்கலைக்கழகத்தில் கற்றவர்கள் இலட்சக் கணக்கில் இருப்பார்கள். சாதாரணமான வணிகவியல் மாணவனுக்கே இலகுவாக புரியக் கூடிய அபத்தமான கருத்துக்களை, இலங்கையில் அதிகம் விற்பனையாகும் "பெரும் மதிப்புக்குரிய" வீரகேசரி பத்திரிகை பிரசுரித்தது எப்படி?
எவ்வாறு ஒரு எழுத்தாளர் முதலாளித்துவத்தை பொதுவுடைமை என்று திரித்து தனது வாசகர்களை ஏமாற்ற முடிந்தது? அதற்குக் காரணம் பின்னால் உள்ள வர்க்க விரோத சிந்தனை. அதாவது, கம்யூனிசம் பற்றி நீங்கள் எத்தகைய அவதூறுகளையும் பரப்பலாம். அதற்கு வெகுஜன ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப் படும். அதைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு கூட்டம் தயாராக உள்ளது. குறிப்பாக, படித்த மத்திய தர வர்க்கத்தினர், குட்டி முதலாளிய சிந்தனை கொண்டோர் அதை எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளனர்.
இந்தக் கட்டுரையாளர் தான் "கிழக்கு ஜெர்மனியில் ஏழாண்டுகள் கல்வி கற்றதாகவும், அங்கு மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் எழுதிய நூல்களை ஜெர்மன் மொழியில் கற்று, பரீட்சை எழுதி, சித்தி பெற்றதாகவும்" குறிப்பிட்டுள்ளார். எனது எதிர்வினைக்கு பதில் அளிக்க முடியாமல் சமாளித்து "மார்க்ஸ் எழுதியதை ஜெர்மன் மொழியில் படிக்குமாறு(?)" பதில் கூறினார்.
விவிலிய நூலை கிரேக்க மொழியில் படிக்குமாறு சொன்னதைப் போன்று அவரது பதில் அமைந்திருந்தது. ஏற்கனவே மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் கடைகளில் விற்பனையாகின்றன. மொழிபெயர்ப்பு எந்தப் பிழையுமில்லாமல் சரியான பொருள் தருகின்றதா என்பது தான் முக்கியம். அவற்றை ஆங்கிலத்தில் அல்லது ஜெர்மன் மொழியில் படிக்குமாறு சொல்வதெல்லாம் அறிவுஜீவிகளின் தலைக்கனம்.
கட்டுரையில் இருந்து: //சோசலிஷ மற்றும் முதலாளித்துவ பொருளாதார கொள்ளைகளுக்கு இடையே, பாரிய வித்தியாசங்கள் உண்டு.... அமெரிக்க டொலர்கள் மற்றும் பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்ஸ், ஆகியன தங்குதடையின்றி உலகமெங்கும் பரவிக் கிடக்கின்றன... இந்த பணமெல்லாம் ஒருநாள், ஒரே நேரத்தில் அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்பட்டால் என்ன நடக்கும்? சடுதியான பணவீக்கம் அங்கு ஏற்படும்!அதனைச் சமாளிக்கும் திறன் அமெரிக்காவிடம் உண்டு. அவர்கள் அச்சிடும் டொலர் நோட்டுக்களுக்கு பெறுமதியான பொருளாதார வலு, தங்கமாகவோ அல்லது வேறு ரூபத்திலோ அமெரிக்க நாட்டு மத்திய வங்கியில் இருக்கிறது. இது உபரியாக புளக்கத்துக்கு வரும் டொலர்களைச் சமாளிக்கும். இதுவே அவர்கள் பொருளாதார பலத்தின் சூக்குமம்.சோசலிஷ பொருளாதாரம் அப்படியல்ல. கார்ல் மார்க்ஸ் சொல்லிய பொருளாதார தத்துவத்தின்படி ‘பணம் என்பது சுற்றிச் சுழல வேண்டியதொரு ஊடகம். அது ஓரிடத்தில் அல்லது ஒருவரிடத்தில் நிரந்தரமாக தங்கக்கூடாது. (“Geld ist ein zirkulation mittel” – German language, Money is a circulation medium).சோசலிஷ நாடுகளில் பாவனைக்கும் விற்பனைக்கும் விடப்படும் பொருள்களின் பெறுமதிக்கேற்பவே, அங்கு பணமும் புழக்கத்தில் விடப்படும். நாட்டின் பொருளாதாரத்துக்கும் புழக்கத்தில் விடப்படும் பணத்துக்கும் சமநிலை பேணப்பட வேண்டும். இல்லையேல் பணவீக்கம் ஏற்படும். மத்திய வங்கியில் பொன்னையும் பொருளையும் சேர்த்து வைக்கும் நிலையில் சோசலிச நாடுகள் இல்லை. இதனால்தான் கம்யூனிச நாட்டுப்பணம் தங்கு தடையின்றி உலகமெங்கும் உலவுவதில்லை.// (ஆசி கந்தராஜா)
உண்மையில் இவருக்கு பொருளாதாரம் பற்றிய அரிச்சுவடி தெரியுமா என்பதே சந்தேகத்திற்குரியது. //சோசலிஷ மற்றும் முதலாளித்துவ பொருளாதார கொள்ளைகளுக்கு இடையே, பாரிய வித்தியாசங்கள் உண்டு.// இதைச் சொல்லி விட்டு அமெரிக்க டாலர், ஸ்டேர்லிங் பவுன்ஸ் என்று தாவுகிறார். நாணயம் என்பது பரிவர்த்தனைக்கான ஊடகம். அது மட்டுமே பொருளாதாரத்தை தீர்மானிப்பதில்லை. முதலில் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கும், சோஷலிச பொருளாதாரத்திற்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்று பார்த்து விட்டு பணப் புழக்கத்திற்கு வருவோம்.
முதலாளித்துவ பொருளாதாரம் என்பது இயற்கையாக உருவாவது. அதனால் தான் சுதந்திர சந்தை பற்றிய கதையாடல்களும் வருகின்றன. அதாவது, சந்தையில் குறிப்பிட்ட பொருளுக்கு கேள்வி இருக்குமானால் அதை அளவுக்கதிகமாக உற்பத்தி செய்து கொண்டு வந்து கொட்டுவார்கள். இதனால் நன்மையையும் உண்டு, தீமையும் உண்டு.
சந்தையில் தாராளமாக எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் இருப்பது முதலாளித்துவ பொருளாதாரத்தில் உள்ள நன்மை. கேள்வி குறைந்து பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டால் பொருளாதார நெருக்கடி ஏற்படும். அந்த நேரம் மிதமிஞ்சிய நுகர்வுப் பொருட்களை யாருக்கும் பிரயோசனம் இல்லாமல் அழிக்க வேண்டி இருக்கும். இது முதலாளித்துவத்தின் தீய விளைவு.
சந்தையில் தாராளமாக எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் இருப்பது முதலாளித்துவ பொருளாதாரத்தில் உள்ள நன்மை. கேள்வி குறைந்து பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டால் பொருளாதார நெருக்கடி ஏற்படும். அந்த நேரம் மிதமிஞ்சிய நுகர்வுப் பொருட்களை யாருக்கும் பிரயோசனம் இல்லாமல் அழிக்க வேண்டி இருக்கும். இது முதலாளித்துவத்தின் தீய விளைவு.
அதற்கு மாறாக, சோஷலிச பொருளாதாரம் இயற்கையாக உருவாவதில்லை. அது எப்போதும் திட்டமிடப் பட்டதாக உள்ளது. அதனால் தான் சோஷலிச நாடுகளில், ஐந்தாண்டுத் திட்டம், பத்தாண்டுத் திட்டம் பற்றிய கதையாடல்களும் நடந்து கொண்டிருந்தன. அதாவது, ஒட்டு மொத்த சமூகத்திலும் குறிப்பிட்ட ஒரு பொருளுக்கு எந்தளவு தேவை இருக்கிறது என்பதற்கு அமைய, அந்தப் பொருள் அளவாக உற்பத்தி செய்யப்படும்.
அதற்கு முதலில் ஒரு நாட்டின் சனத்தொகை எவ்வளவு என்பன போன்ற புள்ளிவிபரங்கள் கைவசம் வைத்திருக்க வேண்டும். இதிலும் நன்மை, தீமை இரண்டும் உண்டு. நாட்டுப் பிரஜைகள் அனைவரதும் தேவைகள் பூர்த்தி செய்யப் படுவது ஒரு நன்மை. ஆகையினால், கிடைக்கும் நுகர்வுப் பொருட்களை யாரும் வீணாக்க மாட்டார்கள். ஆனால் அதில் தீமையும் உள்ளது. ஒரு சில நேரம், எதிர்பார்ப்புகள் பிழைத்துப் போவதால், பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். அதனால் தான் முன்னாள் சோஷலிச நாடுகளில் வரிசையில் நின்று வாங்க வேண்டி இருந்தது.
மேற்படி பொருளாதார அடிப்படை பற்றி எதுவும் பேசாமால், எடுத்த எடுப்பில் அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுன் என்று பேசுவது பாமரத்தனமானது. ஆம், அது பாமரத் தனமானது தான். சாதாரணமான மக்களுக்கு எப்போதும் டாலர்,பவுன் மீது ஒரு கவர்ச்சி இருக்கும். கடினச் செலாவணி (hard currency) எனப்படும் டாலர், பவுன், யூரோக்களை சம்பாதிப்பதற்காக வெளிநாடு சென்று உழைப்பவர் ஏராளம். அது சாதாரண மக்களின் மனநிலை. ஒரு மெத்தப் படித்த அறிவுஜீவி தனது "அனுபவக் குறிப்புகள்" என்று எழுதலாமா?
ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் வளர்ச்சிக் கட்டம் என்று சொல்வார்கள். இது பற்றி லெனின் எழுதிய நூலில் புள்ளிவிபரங்களுடன் விளக்கம் கொடுத்திருக்கிறார். 19 ம் நூற்றாண்டில் நவீன காலத்து சர்வதேச வர்த்தகம் தொடங்கியது. அப்போது பிரித்தானியா உலகில் அரைவாசியை காலனிப் படுத்தியதால், அதன் நாணயமான ஸ்டேர்லிங் பவுன்ஸ் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்கா மிகப் பெரிய வல்லரசானது. அதனால், சர்வதேச பொருளாதாரத்திலும் அமெரிக்காவின் மேலாதிக்கம் அதிகரித்தது. அதன் நிமித்தம், அமெரிக்க டாலர்களின் பாவனையும் கூடியது.
எதற்காக அமெரிக்க டொலர்கள் மற்றும் பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்ஸ், ஆகியன தங்குதடையின்றி உலகமெங்கும் பரவிக் கிடக்கின்றன? அதற்குப் பின்னால் உள்ள பொருளாதார காரணம் என்ன? அதற்கு முதலில் நாங்கள் பணம் என்றால் என்னவென்று பார்க்க வேண்டும். பண்டமாற்று மூலமே வர்த்தகம் நடந்த காலத்தில் பணம் கொண்டுவரப் பட்டது. ஆனால், நாம் கண்ணால் காணும் பணம் ஒரு உலோகத் துண்டு அல்லது கடதாசி தான். பாவனையாளர்களான நாங்கள் தான் அதற்கு மதிப்பை கூட்டுகிறோம்.
ஆரம்பத்தில் தங்கம் அல்லது வெள்ளித் துண்டு தான் நாணயமாக பயன்படுத்தப் பட்டது. தங்கத்தின் பெறுமதியும், நாணயத்தின் பெறுமதியும் ஒன்றாக இருந்தது. தங்கத்தை வீட்டில் வைத்திருக்கப் பயந்த மக்கள், அவற்றை பாதுகாப்பாக நகை அடைவுக் கடைக்காரரிடம் கொடுத்தார்கள். அடைவுக் கடைக்காரர் தான் பெற்றுக் கொண்டதற்கான பற்றுச் சீட்டை எழுதிக் கொடுத்தார். பின்னர் அதுவே மக்கள் மத்தியில் பரிமாற்றிக் கொள்ள பட்டது. அதாவது, பற்றுச் சீட்டில் எழுதி உள்ள அளவு தங்கம் எப்போதும் இருக்கும் என்ற நம்பிக்கையில், அது நாணயத் தாள் போன்று பயன்படுத்தப் பட்டது.
முதலாம் உலகப்போர் வரைக்கும், ஒரு நாட்டில் பணத்தாள்களை புழக்கத்திற்கு விடும் மத்திய வங்கி அதற்கு அளவான தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்க வேண்டியிருந்தது. டாலர், பவுன்ஸ் போன்ற அந்நிய செலாவணியும் தங்கத்திற்குப் பதிலாக வைத்திருந்தார்கள். முன்னாள் சோஷலிச நாடுகள் உட்பட, இப்போதும் உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகளில் பின்பற்றப் படும் நடைமுறை அது தான். தங்கத்திற்கும், பணத்திற்கும் இடையிலான உறவு நூற்றுக்கு நூறு வீதம் சரிசமமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
முதலாம் உலகப் போர் தொடங்க முன்னரே (குறிப்பாக 1914 இலிருந்து) மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில், மத்திய வங்கி குறைந்த பட்சம் நாற்பது சதவீத தங்கம் வைத்திருந்தாலே போதும் என்ற நிலை இருந்து வந்தது. அதற்குக் காரணம், தங்கத்தின் பெறுமதிக்கும், நாணயத்தின் பெறுமதிக்கும் இடையிலான தொடர்பு எப்போதோ துண்டிக்கப் பட்டு விட்டது.
தற்காலத்தில், நாணயத்தின் பெறுமதி தனியாக தீர்மானிக்கப் படுகின்றது. சாதாரணமாக பங்குச் சந்தை நிலவரத்தை அவதானிக்கும் ஒருவருக்கு இந்த உண்மை தெளிவாகப் புரியும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர், மேற்கு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப் படி, டாலர் சர்வதேச வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அதே மாதிரி, பிற்காலத்தில் யூரோ நாணயமும் கொண்டு வரப் பட்டது. சுருக்கமாக, முன்பு தங்கம் வகித்த பாத்திரத்தை, தற்போது டாலர், யூரோ நாணயங்கள் நிரப்புகின்றன. அதனால் தங்கத்தின் முக்கியத்துவம் குறைந்து விட்டது.
தற்காலத்தில், நாணயத்தின் பெறுமதி தனியாக தீர்மானிக்கப் படுகின்றது. சாதாரணமாக பங்குச் சந்தை நிலவரத்தை அவதானிக்கும் ஒருவருக்கு இந்த உண்மை தெளிவாகப் புரியும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர், மேற்கு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப் படி, டாலர் சர்வதேச வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அதே மாதிரி, பிற்காலத்தில் யூரோ நாணயமும் கொண்டு வரப் பட்டது. சுருக்கமாக, முன்பு தங்கம் வகித்த பாத்திரத்தை, தற்போது டாலர், யூரோ நாணயங்கள் நிரப்புகின்றன. அதனால் தங்கத்தின் முக்கியத்துவம் குறைந்து விட்டது.
ஆகவே, ஆசி கந்தராஜா கட்டுரையில் எழுதியது எத்தனை அபத்தமானது என்பது இப்போது நன்றாகப் புரிந்திருக்கும்.
அவர் சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் ஏதோதோ உளறுகிறார்:
//சோசலிஷ பொருளாதாரம் அப்படியல்ல. கார்ல் மார்க்ஸ் சொல்லிய பொருளாதார தத்துவத்தின்படி ‘பணம் என்பது சுற்றிச் சுழல வேண்டியதொரு ஊடகம். அது ஓரிடத்தில் அல்லது ஒருவரிடத்தில் நிரந்தரமாக தங்கக்கூடாது.//
பணம் மட்டும் பொருளாதாரத்தை தீர்மானிப்பதில்லை. மேலும் "பணம் சுற்றிச் சுழல வேண்டும்" என்பது ஒரு ஐரோப்பியப் பழமொழி! இன்றைக்கும் நீங்கள் ஒரு சாதாரண ஐரோப்பியக் குடிமகனிடம் கேட்டாலும் அதைச் சொல்வான். அதை "கார்ல் மார்க்ஸ் சொன்ன பொருளாதார தத்துவம்" என்று திரிப்பது எத்தனை அபத்தமானது?
உண்மையில் அவருக்கு கார்ல் மார்க்ஸ் சொன்னது எதுவும் தெரியாது. அதே நேரம் பொருளாதாரமும் தெரியாது. பணம் ஓரிடத்தில் நிரந்தரமாக தங்கக் கூடாது என்பதற்காக தான், மேற்குலக நாடுகளில் நுகர்வுக் கலாச்சாரத்தை ஊக்குவித்தார்கள். அது தற்போது இந்தியா, இலங்கை போன்ற பழமைவாத கலாச்சாரம் கொண்ட நாடுகளிலும் வந்து விட்டது.
//சோசலிஷ நாடுகளில் பாவனைக்கும் விற்பனைக்கும் விடப்படும் பொருள்களின் பெறுமதிக்கேற்பவே, அங்கு பணமும் புழக்கத்தில் விடப்படும்.// இது ஒரு மிகப் பெரிய பொய். இவர் முதலாளித்துவ நாடுகளின் பணம் பற்றிய கோட்பாட்டை, அதுவும் அரைவேக்காட்டுத்தனமாக, சோஷலிச நாடுகளுடையதாக திரிக்கிறார். தன்னை மாதிரியே, தனது கட்டுரையை வாசிப்பவர்களுக்கும் பொருளாதார அடிப்படை எதுவும் தெரியாது என்று நினைத்துக் கொள்ளும் மடமையை என்னவென்பது?
முதலாளித்துவ நாடுகளில் பணம் எத்தகைய பங்கு வகிக்கின்றதோ, அதே பங்கை சோஷலிச நாடுகளிலும் வகிக்கும். ஏனென்றால், பணம் என்பது ஒரு பரிவர்த்தனை ஊடகம் மட்டுமே. பணத்தை இல்லாதொழிப்பது தான் கம்யூனிஸ்டுகளின் நீண்ட கால இலட்சியம். அதனால், சோஷலிச நாடுகளில் சில இடங்களில் பண்டமாற்று ஊக்குவிக்கப் பட்டது. பிற சோஷலிச நாடுகளுடனும் பண்டமாற்று மூலம் வர்த்தகம் நடந்தது.
முதலாளித்துவ பொருளாதாரத்தில் பாவனைக்கும், விற்பனைக்கும் விடப்படும் பொருட்களுக்கும், பணப் புழக்கத்திற்கும் தொடர்பு உள்ளது. ஆயினும், அங்கே கூட, "பொருளின் பெறுமதிக்கு ஏற்ப பணம் புழக்கத்திற்கு" விடப் படுவதில்லை. அது நடைமுறைச் சாத்தியமானது அல்ல. அமெரிக்க பொருளியல் அறிஞர் இர்விங் பிஷர் (Irving Fisher) எழுதிய பணம் பற்றிய கோட்பாடு தான் இன்றைக்கும் முதலாளித்துவ நாடுகளால் பின்பற்றப் படுகின்றன. அது என்ன கோட்பாடு?
வங்கிகள் பணத்தை உருவாக்கி சமூகத்தில் புழக்கத்திற்கு விடுகின்றன. இதை "பண உற்பத்தி" (M) என்று குறித்துக் கொள்வோம். அந்தப் பணம் கடனாகவோ, ஏற்றுமதியாகவோ பரிமாற்றம் செய்யப் படுகின்றது. அதை "பரிமாற்றம்" (V) என்று குறித்துக் கொள்வோம். பரிமாற்றம் விரைவாக நடந்து கொண்டிருந்தால், புதிய பணமும் உருவாகிக் கொண்டிருக்கும். ஒருவேளை கடன் வாங்க யாருமில்லை, அல்லது எல்லோரும் கடன்களை திருப்பிக் கட்டி விட்டார்கள் என்றால், புதிய பணம் உருவாகாது.
சமூகத்தில் பணம் பெருகும் பொழுது, இன்னொரு பக்கத்தில் பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருக்கும். அதை "விற்பனைப் பொருட்கள்" (P) என்று குறித்துக் கொள்வோம். பொருட்களின் பாவனையும், விற்பனையும் விரைவாக கூடிக் கொண்டிருக்கும். அதை "விற்பனை" (T) என்று குறித்துக் கொள்வோம்.
ஒரு பக்கத்தில், M கூடும் பொழுது V கூடுகிறது (M x V). மறுபக்கத்தில், P கூடும் பொழுது T கூடுகின்றது (P x T). இவ்விரண்டும் சமமாக இருந்தால் தான் ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியை அளவிட முடியும்.
ஒரு பக்கத்தில், M கூடும் பொழுது V கூடுகிறது (M x V). மறுபக்கத்தில், P கூடும் பொழுது T கூடுகின்றது (P x T). இவ்விரண்டும் சமமாக இருந்தால் தான் ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியை அளவிட முடியும்.
அதாவது, MV = PT.
ஒரு நாட்டில் பணவீக்கம் எப்படி ஏற்படுகின்றது? புதிதாக அச்சடிக்கப் படும் பணத் தாள்களின் எண்ணிக்கை அதிகமாகவும், வாங்குவதற்கு தேவையான பொருட்கள் குறைவாகவும் இருந்தால் பணவீக்கம் என்கிறோம். ஆனால், பொதுவாக ஒரு நாட்டில் பணவீக்கம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். பணக்கார முதலாளித்துவ நாடுகளிலும் இருக்கவே செய்யும். அதற்குக் காரணம் கடன்களும், பரிவர்த்தனைகளும் அதிகமாக நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் புதிய பணத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள்.
மேற்படி பொருளாதார தத்துவத்திற்கு அமையத் தான், அமெரிக்க டாலர்களும், பிரிட்டிஷ் பவுன்களும் உலகம் முழுக்க சுற்றுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் அமெரிக்காவுக்கு வெளியே பிற உலக நாடுகளில் சுற்றிக் கொண்டிருக்கிறன. அதன் அர்த்தம், அதே ஒரு மில்லியன் டாலர்கள் அமெரிக்க நாட்டுக்குள் புழக்கத்தில் விடப் பட்டுள்ளன. அதாவது, வழமைக்கு மாறாக இரண்டு மடங்கு டாலர்கள் அச்சிடப் பட்டுள்ளன.
இந்த இடத்தில் ஆசி கந்தராஜா ஒரு நகைப்புக்குரிய, அரைவேக்காட்டுத்தனமான காரணத்தை கூறுகின்றார்: //இந்த பணமெல்லாம் ஒருநாள், ஒரே நேரத்தில் அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்பட்டால் என்ன நடக்கும்? சடுதியான பணவீக்கம் அங்கு ஏற்படும்! அதனைச் சமாளிக்கும் திறன் அமெரிக்காவிடம் உண்டு. அவர்கள் அச்சிடும் டொலர் நோட்டுக்களுக்கு பெறுமதியான பொருளாதார வலு, தங்கமாகவோ அல்லது வேறு ரூபத்திலோ அமெரிக்க நாட்டு மத்திய வங்கியில் இருக்கிறது. இது உபரியாக புளக்கத்துக்கு வரும் டொலர்களைச் சமாளிக்கும். இதுவே அவர்கள் பொருளாதார பலத்தின் சூக்குமம்.//😄😄😄
கந்தராஜாவின் கூற்றில் உள்ள அபத்தம் என்னவென்று அதை வாசிக்கும் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். மத்திய வங்கி வைத்திருக்கும் தங்கத்தின் அளவு தான் பணத் தாள்களை அச்சிட வேண்டும் என்பது நியதி என்றால், வெளியில் இருந்து அமெரிக்காவுக்குள் வரும் டாலர்களுக்கு அளவான தங்கத்திற்கு எங்கே போவார்கள்? அருகில் உள்ள கனடா, மெக்சிகோ மீது படை எடுத்து அங்கிருக்கும் தங்கத்தை எல்லாம் கொள்ளையடிக்க வேண்டும்! அமெரிக்கா ஒரு "ஜனநாயக" நாடு, அப்படி நடக்காது என்று வைத்துக் கொண்டால், ஏற்கனவே அமெரிக்காவினுள் டாலர் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு இருக்க வேண்டும். அதாவது அங்கு பணச் சுருக்கம் (deflation) நிலவ வேண்டும்.
அப்படியானால், அமெரிக்காவின் பொருளாதார பலத்தின் சூக்குமம் என்ன? கடன், கடன், கடன் மட்டுமே! நாட்டில் எவ்வளவுக்கெவ்வளவு கடன் அதிகரிக்கின்றதோ அதற்கு ஏற்றவாறு பணத் தாள்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. உதாரணத்திற்கு, ஒருவர் வங்கியில் பத்தாயிரம் டாலர்கள் கடனாக கேட்கிறார். வங்கி தன்னிடம் இருந்த பத்தாயிரம் டாலரை எடுத்துக் கொடுத்து விட்டு, நடப்புக் கணக்கில் எழுதி வைக்கின்றது. நடப்புக் கணக்கு என்பது ஒரு நிரந்தரமில்லாத தற்காலிகமான கணக்கு. ஏன் அதில் குறித்துக் கொள்கிறது? கடனாக கொடுக்கப் பட்ட பத்தாயிரம் டாலருக்கு ஈடாக புதிதாக பத்தாயிரம் டாலர்கள் உருவாக்கப் படுகின்றன. அதாவது, கடனில் இருந்து புதிய பணம் பிறக்கிறது.
ஒரு நாட்டில் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் காலத்தில் கடனில் உருவாகும் புதிய பணத்தால் எந்தப் பிரச்சினையும் வருவதில்லை. ஆனால், ஒரு காலத்தில் எல்லோரும் கடன்களை திருப்பிக் கட்டி விட்டால், அல்லது கட்டாமல் ஓடி விட்டால், மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உண்டாகும். 2008 ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்ததும் அது தான். புதிது புதிதாக வீடுகளை கட்டி, கடனுக்கு விற்று வந்தார்கள். நிரந்தர வருமானம் இல்லாதவர்கள் கூட வீடு வாங்கினார்கள். ஒரு கட்டத்தில் பெரும்பான்மை கடனாளிகள் கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலைமை உருவானது. அதன் விளைவு? நிதி நெருக்கடி. மிகப் பெரிய அமெரிக்க வங்கிகள் கூட திவாலாகின.
ஆகவே, கந்தராஜா சொல்வது மாதிரி, வெளிநாடுகளில் உள்ள டாலர்களை அமெரிக்காவுக்குள் கொண்டு வந்தால் அங்கே ஏற்படப் போவது "சடுதியான பணவீக்கம்" அல்ல. மாறாக, மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி. பொருளாதாரம் ஸ்தம்பிதம் அடையும். ஒரு தேசமே திவாலாகி விடும். பொதுவுடமையை விமர்சிப்பதற்கு முன்னர், முதலாளித்துவம் என்றால் என்னவென்று கற்றுக் கொள்ளுங்கள்.
(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரை எழுதுவதற்கு ஆதாரமாக Arnold Heertje எழுதிய Economie நூலில் சில பகுதிகளை எடுத்திருக்கிறேன். அவர் ஒரு முதலாளித்துவ பொருளியல் அறிஞர். ஒரு முதலாளித்துவ நாடான நெதர்லாந்தில், ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் நாற்பது வருடங்களுக்கும் மேலாக பேராசிரியராக கடமையாற்றி உள்ளார். அவருக்கு எனது நன்றிகள்.)
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
No comments:
Post a Comment