Wednesday, October 05, 2016

சோஷலிசப் புரட்சிக்குப் பின்னரான அரசியல் பொருளாதார நிலைமை


ஒரு நாட்டில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன், அங்கே சோஷலிசப் புரட்சி நடந்ததாக அர்த்தம் இல்லை. அதற்கு முன்னர் மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற காலகட்டம் உள்ளது. இதனால், பல முன்னாள் "சோஷலிச" நாடுகள், உத்தியோகபூர்வமாக மக்கள் ஜனநாயகக் குடியரசுகள் என்று அழைத்துக் கொண்டன.

சோஷலிச நாடுகளாக கருதப் பட்ட, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், மற்றும் கியூபா ஆகியன, உண்மையில் மக்கள் ஜனநாயகக் குடியரசுகளாக இருந்தன. மக்கள் ஜனநாயகக் குடியரசில், புரட்சிக்கு முன்பிருந்த அதே அமைப்பு வடிவம் தொடர்ந்தும் இருக்கும். முன்பிருந்த முதலாளிகள், நிலவுடைமையாளர்களும் இருப்பார்கள். ஆனால், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் அவர்களை கட்டுப்படுத்தும்.

வர்க்கப் போராட்டம் என்பதன் அர்த்தம், வர்க்க சமுதாய அமைப்பை இல்லாதொழிப்பது. ஒரு சிலர் தவறாக நினைப்பது போல, வர்க்கத்தை சேர்ந்த மனிதர்களை ஒழித்துக் கட்டுவதல்ல. கலகம் செய்யும் எதிர்ப்புரட்சியாளர்கள் மட்டுமே கைது செய்யப் படுவர், அல்லது சுட்டுக் கொல்லப் படுவர். ஏனையோர் அரசியல் பாடங்களை கற்று தம்மைத் தாமே திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப் படும்.

சீனாவில் நடந்த புரட்சிக்குப் பின்னரும் அதே மாதிரியான நிலைமை தானிருந்தது. பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும் மட்டுமே எதிரிகளாக பிரகடனப் படுத்தப் பட்டனர். தேசிய முதலாளிகள் தொடர்ந்தும் இயங்குவதற்கு அனுமதிக்கப் பட்டது. அந்த வகையில், நிலவுடைமையாளர்கள், பண்ணையார்கள், பணக்கார விவசாயிகள் கூட பொருளாதார நன்மை கருதி விட்டு வைக்கப் பட்டனர்.

இதிலே முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. முன்னாள் முதலாளிகள், நிலவுடைமையாளர்கள், பண்ணையார்கள் போன்றோர், தமது சமூக அந்தஸ்தை இழந்து விடுவார்கள். அதாவது அவர்களும் சாதாரண தொழிலாளர்கள் போன்றே கருதப் படுவார்கள்.

உதாரணத்திற்கு, ஒரு முதலாளி தனது தொழிற்சாலையில் ஒரு சாதாரண தொழிலாளியாக வேலை செய்ய வேண்டும். அத்துடன் "முதலாளிக்குரிய" நிர்வாகப் பொறுப்புகளையும் கவனித்துக் கொள்வார். நிலவுடமையாளரும் அப்படியே தனது வயலில் இறங்கி வேலை செய்ய வேண்டும்.

முன்னாள் முதலாளிகளும், நிலவுடைமையாளர்களும் ஐந்தாண்டுகள் வேலை செய்ய வேண்டும். பணக்கார விவசாயிகளுக்கு மூன்றாண்டுகள். அந்தக் காலகட்டத்தில் அவர்களும் சாதாரண தொழிலாளர்கள் போன்று அரசியல் கல்வி புகட்டும் பாடசாலைக்கு செல்ல வேண்டும். ஐந்து வருடம் முடிந்ததும் அவர்களது வர்க்க மனப்பான்மை எப்படி இருக்கின்றது என்பது சோதித்து அறியப் படும். திருப்தி இல்லாவிட்டால், மேலும் சில வருடங்கள் நீடிக்கப் படும்.

(ஆதாரம்: de culturele revolutie in China, Adrian Hsia)

மேற்குறிப்பிட்ட பதிவு தொடர்பாக, பேஸ்புக்கில் எனக்கும், நடராஜா முரளிதரனுக்கும் இடையில் நடந்த உரையாடலை கீழே தருகின்றேன். சோவியத் யூனியன், சோஷலிச நாடுகள் குறித்து மேற்குலகம் பரப்பிய பொய்ப் பிரச்சாரங்களை, இவரைப் போன்று பலர் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது சந்தேகங்களை தெளிவு படுத்துவதற்கு அது உதவும்.

கேள்வி (Nadarajah Muralitharan): கட்சித் தலைவர்களும் கட்சி நிர்வாகிகளும் சலுகை பெற்ற அதிகாரம் கொண்ட புதிய வர்க்கமாக மாறவில்லையா ? மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்காக "கியூ"வில் முண்டியடித்துக் கொண்டிருக்கையில் கட்சி நிர்வாகிகளும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்ட கட்சி உறுப்பினர்களும் பிரத்தியேகமான கடைகளில் தங்களுக்கானவற்றைச் சுலபமாக கொள்முதல் செய்யவில்லையா ?

பதில்: அது எப்போது ந‌ட‌ந்த‌து என்ப‌து முக்கிய‌மான‌து. யுத்த‌ கால‌த்தில் மேற்கு ஐரோப்பாவிலும் அத்தியாவ‌சிய‌ப் பொருட்க‌ளுக்கு த‌ட்டுப்பாடு நில‌விய‌து. ம‌க்க‌ள் கியூ வ‌ரிசையில் நின்றார்க‌ள்.

சோவிய‌த் யூனிய‌னில் குருஷேவ் வ‌ந்த‌ பின்ன‌ரும், சீனாவில் டெங்சியாபெங் வ‌ந்த‌ பின்ன‌ர் முத‌லாளித்துவ‌ சீர்திருத்த‌ங்க‌ளை அறிமுக‌ப் ப‌டுத்தினார்க‌ள். க‌ட்சி நிர்வாகிக‌ள் ப‌ற்றி ம‌ட்டும் தான் உங்களுக்கு தெரியும். க‌ம்ப‌னி நிர்வாகிகள், உத்தியோக‌ம் பார்க்கும் ம‌த்திய‌ த‌ர வ‌ர்க்க‌மும் ச‌லுகைக‌ளை அனுப‌வித்த‌ன‌ர். அந்த‌ப் பிரிவின‌ரை வேண்டுமென்றே ம‌றைப்ப‌து ஏனோ?

கேள்வி: அந்தப் பிரிவினர் எப்படிப்பட்டவர்கள் என்பது குறித்து எல்லோருக்கும் தெளிவாகத் தெரிகிறது. அத்தகையவர்கள் கூடுதல் நலன்களைத் தாங்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். அவர்களோடு கொண்டு போய் பொதுவுடமைத் தத்துவத்தில் தோய்ந்தெழுந்தவர்களை சுரண்டலுக்கு எதிராகப் போர்க் கோலம் பூண்டவர்களையும் ஒப்பிடுவது நகைப்புக்கு இடமாக இல்லையா?

பதில்: இப்போது யார் ஒப்பிட்டார்கள்? கலப்புப் பொருளாதாரம் இருந்தால், அங்கே நிர்வாகிகளும், மத்தியதர வர்க்கத்தினரும் இருப்பார்கள் தானே? அதிலென்ன அதிசயம் கண்டுவிட்டீர்கள்? குருஷேவ் "சோவியத் யூனியன் அனைத்து மக்களுக்குமான நாடு" என்று சொன்னார். அதன் அர்த்தம் என்ன தெரியுமா? மேற்கத்திய நாடுகளில் இருப்பது மாதிரி, எல்லா வகையானவர்களையும் சகித்துக் கொள்ளும் சமூகம்.

கேள்வி: அந்த நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகள் என்று சொல்லுகிறேன். பொதுவுடமைத் தத்துவத்தைக் கரைத்துக் குடித்தததாகப் பறைசாற்றுபவர்கள் என்கிறேன். பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினர்கள் என்று கூறுகிறேன். அப்படிப்பட்டவர்கள் சாதாரண மக்களையும் விடவும் சலுகைகளைக் கூடுதலாக அனுபவிக்கத் துடித்திருக்கிறார்கள். 1917 இல் நடைபெற்ற புரட்சிக்குப் பின்னர் 40 ஆண்டுகள் கழித்து அங்கே ஏன் கலப்புப் பொருளாதாரம் நிகழ வேண்டியிருந்தது ?

பதில்: "கட்சி நிர்வாகிகள்" என்ற போர்வையின் கீழ் சிறு முதலாளிகள், மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளையும் மறைக்கிறீர்கள். ஸ்டாலினின் மறைவுக்குப் பிறகு de- stalinisation என்ற ஒன்று நடந்தது தெரியுமா? அது என்ன தெரியுமா? ஸ்டாலின் காலத்தில் வர்க்கமற்ற சமுதாயம் கறாராக பின்பற்றப் பட்டது. கூட்டுத்துவ பொருளாதார அமைப்பு காரணமாக யாரும் சொத்து சேர்க்க முடியாத நிலைமை இருந்தது. 

ஆனால், குருஷேவ் கொண்டு வந்த de-stalinisation அதை இல்லாதொழித்தது. முதலாளித்துவ செயற்பாடுகளும் சிறிய அளவில் அனுமதிக்கப் பட்டன. அப்போது புதிதாக கம்பனி நிர்வாகிகள் உருவாகினார்கள். அவர்கள் கட்சிக்கு கட்டுப் பட்டு நடந்தாலும், ஓரளவு சுதந்திரமாக இயங்க முடிந்தது. மானேஜர்களுக்கு அதிக சம்பளம் கிடைத்தது. அதெல்லாம் கூடாது என்று சொல்கிறீர்களா? அப்போ நீங்கள் அசல் ஸ்டாலினிஸ்ட் ஆக இருக்க வேண்டும்.

கேள்வி: மக்கள் கிளர்ந்தெழுந்த .....தொழிலாளர்கள் ஆர்ப்பரிந்தெழுந்த ....போராட்டம் ....பின்பு தத்துவார்த்தம் ஊட்டப்பட்ட சமூகமாக மாறிய பொதுவுடமைத் தேசத்தில் தனியொரு மனிதன் ஸ்ராலின் கடவுளாக மாற்றம் பெறுகிறார். பின்பு அவர் மறைந்த பின் அனைத்து மாற்றங்களும் தலைகீழாக ஆகி விட்டது என்று சொல்லுவது எவ்வளவு பெரிய மோசடி தெரியுமா ?

பதில்: மேலெழுந்தவாரியாக பார்த்தால் அப்படித் தான் தெரியும். ஸ்டாலினை யாரும் கடவுளாக்கவில்லை. அது வெளியுலகில் நடத்தப் பட்ட விஷமப் பிரச்சாரம். ஸ்டாலின் வர்க்கப் போராட்டத்தை நடைமுறைப் படுத்தினார் என்று தான் சொன்னேன். அது என்ன என்றாவது கேட்டிருக்க வேண்டும். அதாவது, நீங்கள் குற்றம் சாட்டும் கட்சி நிர்வாகிகள் கூட அதிகாரத் துஸ்பிரயோகம் செய்தால், அல்லது லஞ்சம் வாங்கினால், சிறைக்குப் போக வேண்டியிருக்கும். ஊரில் யாரிடமாவது பணம் புழங்குவதாக தெரிந்தால் மக்களே தகவல் கொடுப்பார்கள். 

அப்படியானதொரு சமுதாயத்தில் நீங்கள் சொல்லும் முறைகேடுகள் எப்படி இருக்க முடியும்? அப்படியானால் நீங்கள் லஞ்சம், ஊழலை ஆதரிப்பவரா? ஸ்டாலின் மறைந்த பிறகு, கட்சிக்குள் குருஷேவின் திடீர் சதிப்புரட்சி நடந்தது. ஸ்டாலினுக்கு ஆதரவானவர்களை விலத்தி விட்டு, தனக்கு விசுவாசமானவர்களை நியமித்தார். அதன் பிறகு ஸ்டாலினுக்கு எதிரான குற்றப் பத்திரிகை வாசிக்கப் பட்டது... இதில் "மோசடி" எங்கே வந்தது? அது அதிகார மட்டத்தில் நடந்த ஆட்சி மாற்றம்.

//தத்துவார்த்தம் ஊட்டப்பட்டமாக சமூகமாக மாறிய பொதுவுடமைத் தேசத்தில்// இது அதீத கற்பனை. எல்லா நாடுகளிலும் மக்கள் ஒரே மாதிரித் தான் இருப்பார்கள். சோவியத் மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மக்கள் மக்கள் தான். உங்களை மாதிரி ஆட்களும் இருப்பார்கள். என்னை மாதிரி ஆட்களும் இருப்பார்கள். இதையெல்லாம் வாசித்துக் கொண்டிருப்பவர்கள் மாதிரி ஆட்களும் உண்டு. வெவ்வேறு அரசியல் கொள்கைகளை நம்புகிறவர்கள் இருப்பார்கள். 

பொதுவுடைமை தத்துவம் என்பது "ஊட்டப் படுவது" அல்ல. அதை மக்கள் தாமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். யாரையும் வற்புறுத்த முடியாது. ஒரே இரவில் எல்லாவற்றையும் அடியோடு மாற்ற முடியாது. சமூகம் மெல்ல மெல்லத் தான் மாறும். அதற்குப் பொறுமை வேண்டும். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று நடக்க முடியாது. எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுக் கொல்ல முடியாது. எப்படிப் பட்ட எதிரியாக இருந்தாலும் திருந்துவதற்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்.

கேள்வி: "இது அதீத கற்பனை." இங்கு நான் இதனை அச்சொட்டாகச் சொல்லவில்லை. இந்த நாடுகளில் பொதுவுடமைத் தத்துவம் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டது. பல்கலைக்கழகங்களில் புகட்டப்பட்டது. இந்த நாடுகளில் உள்ள எல்லா ஊடகங்களிலும் பொதுவுடமைத் தத்துவம் ஒலிக்கப்பட்டும் எழுதப்பட்டும் வந்தது. கலை, இலக்கியம், திரைப்படங்கள் வாயிலாக மக்களுக்குப் பொதுவுடமைத் தைலம் பூசப்பட்டது. "எல்லா நாடுகளிலும் மக்கள் ஒரே மாதிரித் தான் இருப்பார்கள்." என்ற ஒப்புதல் வாக்குமூலம் இங்கு நடக்கும் உரையாடலில் குறிப்பிடத்தக்கது. "சோவியத் மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மக்கள் மக்கள் தான். உங்களை மாதிரி ஆட்களும் இருப்பார்கள்." இந்த வாக்கியமும் இங்கு முக்கியமானதொன்று! ஆகாவென்றெழுந்த "யுகப் புரட்சியை" நிகழ்த்திய சோவியத் மக்கள் ஒப்பீட்டளவில் தமிழ் மக்களைக் காட்டிலும் கூடுதலாகப் பொதுவுடமைத் தத்துவார்த்தப் பின்னணி கொண்டவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்கிறார் கலை! மக்கள் தாமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். யாரையும் வற்புறுத்த முடியாது. அப்படியாயின் 1917 இல் நிகழ்ந்தது ஒரு நாட்டுக்குள் நிகழ்ந்த "சோசலிசப் புரட்சி" அல்ல....மிகச் சிறுபான்மையோரால் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட புரட்சியாகவே "கலை" ரஷ்யப் புரட்சியை நோக்குகிறார் எனலாம். ஆனால் பொதுவுடமைத் தத்துவவாதிகள் ஒரு நாட்டுக்குள் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட "சோசலிசப் புரட்சி" என்றே அக்டோபர் புரட்சியை வரையறுத்திருந்தனர். 70 வருட காலம் நீடித்த புரட்சியின் பின்னான அந்த ஆட்சி ஆட்டம் காண முன்பு வெகுகாலத்துக்கு முன்பாகவே 1956இல் ஹங்கேரிக்கு சோவியத் படைகள் ஏன் அனுப்பப்பட்டது ? ஹங்கேரி என்ற நாடு சார் மன்னர்கள் காலத்திலேயே ரஷ்யாவுக்குள் இருந்த நாடா ? அல்லது ஜேர்மனியின் நாஜிப்படைகளை வெற்றி கொண்ட செம்படையினர் வலிந்து ஆக்கிரமித்த நிலமா ஹங்கேரி ?

பதில்: நீங்கள் இரண்டு மாறுபட்ட விடயங்களை ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள். உங்களது கருத்திடலில் பல தடவைகள் அவதானிக்கப் பட்ட குறைபாடு இது. //தத்துவார்த்தம் ஊட்டப்பட்டமாக சமூகமாக மாறிய பொதுவுடமைத் தேசத்தில்// என்ற கூற்றுக்கு தான் விளக்கம் கூறினேன். புரட்சியில் என்ன நடந்தது என்று விவாதிக்கவில்லை. தத்துவம் ஊட்டுவது பற்றி மேலதிக விளக்கம் கூறி விட்டு புரட்சிக்கு வருகிறேன். 

இன்று பெரும்பான்மையான உலக நாடுகளில் முதலாளித்துவ தத்துவம் பாடசாலைகளில் போதிக்கப் படுகின்றது. ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. சுயநலம் பேணுவது, நுகர்பொருள் கலாச்சாரத்திற்கு அடிமையாவது சர்வ சாதாரணமாக கருதப் படுகின்றது. செல்வம் சேர்க்க வேண்டும் என்ற வெறி, பொருளாசை, மண்ணாசை, பெண்ணாசை, எல்லாம் ஊக்குவிக்கப் படுகின்றன. இவற்றுக்குப் பின்னால் முதலாளித்துவ தத்துவம் மறைந்திருப்பதை யாரும் மறைக்க முடியாது. 

இருந்தாலும் இவற்றில் நம்பிக்கையற்ற மக்களும் இருக்கிறார்கள் தானே? அதாவது சுயநலம் பார்க்காமல் பொதுநல சேவை செய்பவர்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். பணம், பொருளில் பற்று இல்லாதவர்கள். பேராசை கொள்ளாதவர்கள்.... உலகில் இப்படியான மனிதர்களும் இருக்கிறார்கள் தானே? அவர்கள் தான் நீங்கள் வெறுக்கும் "பொதுவுடைமைவாதிகள்". 

அரசே முன்னின்று பொதுவுடைமை கொள்கையை செயற்படுத்தும் நாட்டில் அவை தான் போதிக்கப் படும். அதெல்லாம் தவறு என்று சொல்கிறீர்களா? அதே நேரம், அந்த சமூகத்தில் சுயநலவாதிகள், பணத்தாசை கொண்டவர்கள், பேராசை மிக்கவர்களும் இருப்பார்கள். அதாவது, சுருக்கமாக முதலாளித்துவ சிந்தனை கொண்டவர்கள். இவர்களை முடிந்த வரையில் திருத்தி எடுப்பது தானே முறை? ஒருவனை கெட்ட வழியில் செல்ல விடாமல் நல்லவனாக மாற்றுவதை நீங்கள் "தத்துவார்த்தம் ஊட்டப்பட்டது" என்று புரிந்து கொள்கிறீர்கள். உங்களது புரிதல் அப்படித் தான்.

புரட்சி தொடர்பாக... உங்களுக்குத் தெரியுமா? உலகில் முதலாவது பொதுவுடைமைப் புரட்சி நடந்த நாடு எது? அது ரஷ்யா அல்ல! பிரான்ஸ்!! பாரிஸ் கம்யூன் என்ற பெயரில் பாட்டாளிவர்க்க அரசு அமைக்கப் பட்டது. மூன்று மாதங்கள் நீடித்தது. 

ரஷ்யாவில் நடந்த பாட்டாளிவர்க்க புரட்சி மட்டுமே உங்களுக்குத் தெரியும். அதே காலகட்டத்தில், ஜெர்மனியில் நடந்த பாட்டாளி வர்க்கப் புரட்சி பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? பெர்லின், மியூனிச், ஹம்பேர்க் ஆகிய நகரங்களில் சோவியத் அரசுகள் உருவாக்கப் பட்டன! குறைந்தது ஒரு மாதமாவது ஜெர்மன் சோவியத்துகள் நின்று பிடித்தன. 

இதை விட ஹங்கேரியிலும் பாட்டாளி வர்க்கப் புரட்சி நடந்து சில மாதங்கள் நீடித்தது. முதலாம் உலகப்போர் முடிந்த பின்னர், அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் பொதுவுடமைப் புரட்சி நடக்கலாம் என்ற அச்சம் நிலவியது. அதைத் தடுப்பதற்கு அரசுகள் எல்லா முயற்சிகளையும் எடுத்திருந்தன. ஆகவே, புரட்சி என்பது ரஷ்யாவுக்கு மட்டுமே உரிய தனித்துவம் அல்ல. அது உலகில் எந்த நாட்டிலும் நடக்கலாம், நடந்துள்ளது. 

ரஷ்யா மட்டும் ஏன் விதிவிலக்காக பேசப் படுகின்றது? அதற்குக் காரணம் புரட்சியை தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போர். போல்ஷெவிக் கட்சியினர், தொழிலாளர்கள், விவசாயிகளை இணைத்து செம்படையை உருவாக்கினார்கள். அது எதிர்ப்புரட்சியாளர்களுடனான போரில் வெற்றி பெற்றது. அதனால் தான் அங்கு உருவான பொதுவுடைமை அரசு அடுத்து வந்த எழுபதாண்டுகள் நீடித்தது. 

பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி போன்ற நாடுகளில் எதிப்புரட்சியாளர்கள் பலமாக இருந்தனர். தேசிய இராணுவம் அவர்களது பக்கம் நின்றது. அதனால், அங்கு நடந்த புரட்சிகள் வன்முறை கொண்டு அடக்கப் பட்டன. அப்போது புரட்சியில் பங்கெடுத்தவர்கள் அனைவரும் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப் பட்டனர்.

//1956இல் ஹங்கேரிக்கு சோவியத் படைகள் ஏன் அனுப்பப்பட்டது ?// நீங்கள் ஒரு தடவை நேட்டோ ஒப்பந்தம் என்ன சொல்கிறதென்று வாசித்துப் பாருங்கள். நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடொன்றில் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அங்கு நேட்டோ படைகளை அனுப்பும். ஒரு தடவை அப்படியும் நடக்க இருந்தது. 

போர்த்துக்கல் நாட்டில் பொதுவுடைமைக்கு ஆதரவான இராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றினார்கள். அங்கு ஜனநாயக வழியில் தெரிவு செய்யப் பட்ட சோஷலிச அரசு அமைந்தது. அதைத் தொடர்ந்து, நேட்டோ கடற்படைக் கப்பல்கள் போர்த்துக்கல் கரையோரத்தில் முற்றுகையிட்டன. படையெடுக்கப் போவதாக மிரட்டின. ஹங்கேரியிலும் அதே கதை தான் நடந்தது. 

ஹங்கேரி வார்சோ ஒப்பந்த உறுப்புரிமை கொண்ட நாடாக இருந்தது. அதுவும் நேட்டோ மாதிரியான விதிகளை உள்ளடக்கிய இராணுவக் கூட்டமைப்பு தான். அந்த வகையில் ஹங்கேரி கிளர்ச்சியை அடக்குவதற்கு வார்சோ படையணிகள் அனுப்பப் பட்டன. நேட்டோவில் பெரும்பங்கு அமெரிக்க இராணுவம் இருப்பது மாதிரி, வார்சோவில் சோவியத் இராணுவம் பெரும்பங்கு வகித்தது. இது தான் நடந்தது. வார்சோ படையணிகளை, சோவியத் படைகள் என்று திரித்து பேசுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது.

கேள்வி: சோவியத் யூனியன் என்பது அந்தந்த நாடுகளில் வாழும் மக்களின் விருப்புக்கு மாறாக ஒன்றிணைக்கப்பட்ட கூட்டமைப்பு இல்லையா ?

பதில்: அப்போ நீங்க‌ தேசிய‌ இன‌ங்க‌ளின் சுய‌நிர்ண‌ய‌த்திற்கு எதிரான‌வரா? சார் ம‌ன்ன‌ன் கால‌த்தில், 20 ம் நூற்றாண்டு வ‌ரை ர‌ஷ்யா என்ற‌ ஒரே தேச‌மாக‌ இருந்த‌து. அதைத் தான் சோவிய‌த் யூனிய‌ன் என்ற‌ பெய‌ரில் 15 குடிய‌ர‌சுக‌ளாக‌ பிரித்தார்க‌ள். அத‌ற்குள் ஒவ்வொரு இன‌த்திற்கும் த‌னித் த‌னியாக‌ த‌ன்னாட்சிப் பிர‌தேச‌ங்க‌ளும் உருவாக்கினார்க‌ள். அதற்காக‌ அந்த‌ ம‌க்க‌ள் சோவிய‌த் யூனிய‌னுக்கு ந‌ன்றி கூற‌க் க‌ட‌மைப் ப‌ட்டுள்ள‌ன‌ர்.

கேள்வி: அடிப்படையில் நான் தேசிய சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவானவன். சார் மன்னன் ஆயுத முனையில் கட்டியாண்ட பெரு நிலப் பிரதேசத்தை நீங்கள் ஒரே அரச பிராந்தியமாக மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒன்றாகக் கருதுகிறீர்களா ? அப்படியாயின் லெனின் காலத்தில் உக்ரேன் பிரிய வேண்டிய காலகட்டம் ஏன் நிகழ்ந்தது ? எஸ்தோனியா,லாட்வியா, லிதுவேனியா மக்கள் எந்தக் காலத்திலும் "ஸ்லாவிய" இன மக்களாக தங்களைக் கருதவில்லை. அதனால் சோவியத் யூனியனோடு இணைந்திருக்க அவர்கள் எந்தக் காலத்திலும் பிரியப்படவில்லை. எந்தக் குடியரசுகளும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி இணைக்கப்படவில்லை.

பதில்: சுயநிர்ணய உரிமைக்கு "ஆதரவானவர்" சோவியத் யூனியனை எதிர்க்க மாட்டார். ஏனென்றால் சோவியத் புரட்சிக்குப் பிறகு தான் சுயநிர்ணயம் பற்றிய பேச்சே எழுந்தது. அது நடைமுறைப் படுத்தப் பட்டது. அதற்கு முன்னர் அதைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை. மேற்கு ஐரோப்பாவில் தோன்றிய தேசியவாதக் கருத்துக்கள் ஏற்கனவே சில இடங்களில் பரவி இருந்தன. உதாரணத்திற்கு, ஆர்மேனியா, ஜோர்ஜியா. 

அதே நேரம், மத்திய ஆசியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கிளர்ச்சி செய்தனர். அவர்களது நோக்கம் தேசிய அரசு அல்ல. மாறாக, இஸ்லாமிய அரசு. ஸ்லாவிய மக்கள் ரஷ்யா, உக்ரைன், வெள்ளை ரஷ்யாவில் மட்டும் இருந்தனர். மற்ற நாடுகளில் வெவ்வேறு மொழிகளை பேசினார்கள். அவற்றிற்கும் ஸ்லாவிய மொழிகளுக்கும் சம்பந்தம் இல்லை. மொல்டாவியாவில் ருமேனிய மொழி, அசர்பைஜானில் துருக்கி மொழி.... ஏன் ரஷ்யாவுக்குள் கூட நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப் படுகின்றன.

1917 ம் ஆண்டுக்கு முந்திய உலக வரலாற்றில் எந்தவொரு நாடும், "சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி" இணைக்கப்படவில்லை. பிரித்தானியாவில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தியா அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸை இணைத்தார்கள்? ஸ்பெயினில், பிரான்சில் சர்வசன வாக்கெடுப்பு நடந்ததா? நோர்வே, சுவீடன், பெல்ஜிய, நெதர்லாந்து, இங்கெல்லாம் சிறுபான்மை இனங்களை சர்வசன வாக்கெடுப்பு நடத்தியா இணைத்தார்கள்?

கேள்வி: சுயநிர்ணயம் என்ற மொட்டைத் தலையோடு சோவியத் யூனியன் என்ற முழங்காலை ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லையென்று நினைக்கின்றேன்! தேசிய இனம் குறித்த சிந்தனைகள் மேற்கு ஐரோப்பாவிலேயே முதலில் தோற்றம் பெற்றது. அறிவொளிக் காலமும் கைத்தொழிற் புரட்சியும் அதற்கான தோற்றுவாய்களாக இருந்தன. மதமாகவும் ...கடவுளாகவும் எவற்றையும் வழிபாடு செய்ய வேண்டிய அவசியம் கருத்துக் கட்டாயம் உண்மையான உரையாடலுக்கு இடையூறு என்று எண்ணுகிறேன். மக்கள் எழுச்சி பெற்ற காலங்கள் ...ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடிய வேளைகளில் நல்ல கருத்தியல்கள் பிறந்திருக்கின்றன என்பதற்காக அவற்றைக் கண்மூடித்தனமாகப் போற்ற வேண்டியதில்லை. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான கருத்தியல் பெரும் விவாதமாக லெனின் காலகட்டத்தில் உருவெடுத்தாலும் ஸ்ராலின் போன்றவர்கள்(ஸ்ராலின் ஜோர்ஜியனாக இருந்த பொழுதிலும்) ரஷ்யப் பெருந்தேசியவாதிகளாகவே இருந்தார்கள் என்பதே வரலாற்றுண்மை. ஏனென்றால் போர்களை வெற்றி கொள்ள மக்களுக்குத் தேசிய வெறியை ஊட்ட வேண்டிய கட்டாயத்தில் ஸ்ராலின் போன்றவர்கள் இருந்தார்கள்.

பதில்: மேற்கு ஐரோப்பிய "தேசிய இன சிந்தனைகள்"(?) பேரினவாதமாக மாறியதை கண்டுகொள்ளாமல் மறைப்பது ஏனோ? உதாரணத்திற்கு, பிரெஞ்சு "தேசிய இனம்", சிறுபான்மை தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கியது. அவர்கள் வீட்டில் கூட தமது மொழியைப் பேச விடாமல் தடை போட்டது. இது சுத்த பேரினவாத சிந்தனை. அனேகமாக எல்லா மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பேரினவாத சிந்தனை தான் கோலோச்சியது. 

சோவியத் ஒன்றியத்தின் குறிக்கோள் தேசியங்களை வளர்த்து விடுவதல்ல. பாட்டாளி வர்க்க மக்களின் அதிகாரத்தை நிலைநாட்டுவது. சோஷலிச சமுதாயத்தை உருவாக்குவது. நூற்றுக் கணக்கான மொழிகளை பேசும் மக்கள், தமது மொழி, கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு உதவியாகத் தான் தேசிய அரசமைப்பு உருவாக்கப் பட்டது. உங்களது மனதில் உள்ள "தேசிய இன சிந்தனை" வேறு. அது மக்களுக்கான அரசு அல்ல. மேட்டுக்குடி வர்க்கம் சலுகைகளை கோரும் அரசு. ஒரே இனத்தில் ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கி ஆளும் ஒடுக்குமுறை அரசு. அது தான் உங்கள் மனதில் உள்ள "தேசிய இன சிந்தனை"!

கேள்வி: தேசிய இனம் என்ற கருத்தியல் தோற்றம் பெற்ற வரலாற்றைப் பற்றிப் பேசுகையில் மேற்கைப் பற்றிக் குறிப்பிட வேண்டி நேர்ந்தது. அதற்காக மறைப்பது என்று சொல்லுவது அபத்தத்தின் உச்சம். எப்படியாயினும் சோவியத் ஒன்றியம் என்பதில் ரஷ்யப் பேரினவாதமே மேலாட்சி செலுத்தியது என்பதை யாரும் மறைக்க முடியாது. பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை நிலைநாட்டுவதாயின் சோஷலிச சமுதாயத்தை உருவாக்குவதாயின் அது பெரும்பான்மை மக்களது ஆதரவோடு நிகழ்த்தப்பட வேண்டும். அதனைத் திணிக்க முடியாது. ஆயுத முனையில் அமுலாக்கினால் நீண்ட காலத்திற்கு அது தாக்குப் பிடிக்க முடியாது. அந்தந்த மக்களை இயல்பாக இருக்க விடுங்கள். அவர்கள் தங்களது மொழியையும் கலையையும் பண்பாட்டையும் காப்பார்கள். இங்கு எஜமான் தேவையில்லை. எனது மனதில் உள்ள தேசிய இனச் சிந்தனையானது மேலாதிக்க மனோபாவம் கொண்டதல்ல என்று உறிதியாகக் கூறுகிறேன். இன்றைய ரஷியாவின் அதிபர் முன்னாள் "கொம்யூனிஸ்ட்" எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பார்க்கிறீர்களா ? முழுக்க முழுக்க ரஷ்ய பேரினவாத மேலாண்மையும் ஓதோடொக்ஸ் கிறீஸ்தவ மத வாதமும் அவரில் பொங்கி வழிவதை அவதானிக்கலாம். கலையும் கூட மேற்குலக சுரண்டல் அரசின் சலுகைகளைப் புத்திசாலித்தனமாக அனுபவித்துக் கொண்டு எங்கள் எலலோருக்கும் மார்க்சீயம் போதிக்க விரும்புகிறார். அவருடைய புகலிட வாழ்வில் என்றுமே எந்தப் பொதுவுடமை சார்பு நாடுகளுக்குச் செல்லவோ அதனை அங்கு சென்று ஆராயவோ அல்லது அங்கு வாழவோ விரும்பியிருக்க மாட்டார் என்றே எனக்கு நினைக்கத் தோன்றுகிறது!

பதில்: //சோவியத் ஒன்றியம் என்பதில் ரஷ்யப் பேரினவாதமே மேலாட்சி செலுத்தியது// அபத்தமான கற்பனை. இதை மேற்குலகப் பேரினவாதிகள் சொல்வது தான் மிகப் பெரிய அபத்தம். சோவியத் யூனியன் ரஷ்யப் பேரினவாதிகளை அடக்கியொடுக்கியது. வெண் படைகள் என்ற பெயரில் எதிர்ப்புரட்சியில் ஈடுபட்ட ரஷ்யப் பேரினவாதிகளுக்கு மேற்குலக நாடுகள் முண்டு கொடுத்தன. ரஷ்யப் பேரினவாதிகளுக்கு ஆதரவாக தமது படைகளையும் அனுப்பின. 

ரஷ்ய மொழி பொது மொழியாக ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு விடயத்தை மட்டும் வைத்துக் கொண்டு, அதை பேரினவாதமாக காட்ட முடியாது. உங்களிடமே கேட்கிறேன். வேறு எந்த மொழியை பொது மொழியாக படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் இவற்றில் ஒன்றை சோவியத் யூனியனின் பொது மொழியாக்கினால் ஏற்றுக் கொள்வீர்களா? ரஷ்ய மொழியை இரண்டாம் மொழியாக படிப்பது "ரஷ்ய பேரினவாதம்" என்றால், ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக படிப்பதற்கு என்ன பெயர்? அது பேரினவாதம் இல்லையா?

//பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை நிலைநாட்டுவதாயின் சோஷலிச சமுதாயத்தை உருவாக்குவதாயின் அது பெரும்பான்மை மக்களது ஆதரவோடு நிகழ்த்தப்பட வேண்டும். அதனைத் திணிக்க முடியாது.// நீங்கள் குறிப்பிடும் அந்தப் "பெரும்பான்மை" மக்கள் யார்? முதலாளிகளா? பணக்காரர்களா? நிலவுடமையாளர்களா? இல்லவே இல்லை. சாதாரண விவசாயிகள், தொழிலாளர்கள் தான் ஒரு நாட்டில் பெரும்பான்மையாக இருப்பார்கள். அவர்கள் அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு உதவுவது எப்படி "திணிப்பு" ஆகும்? உண்மையில் அது தான் ஜனநாயகம். 

போல்ஷெவிக் புரட்சிக்கு முன்னரே, ரஷ்யாவில் மேற்குறிப்பிட்ட பிரிவினர் புரட்சி செய்தனர். அதற்குப் பிறகு உருவான இடைக்கால அரசு முதலாளித்துவ நலன் சார்ந்த அரசாக இருந்தது. அதனால் தான் பிற்காலத்தில் போல்ஷெவிக் புரட்சி நடந்தது. அதைத் தொடங்கியவர்கள் சாதாரண கடற்படையினர். தொழிலாளர்கள் உதவியுடன் குளிர்கால அரண்மனையை கைப்பற்றியதும் புரட்சி வெடித்தது. 

ஆரம்பத்தில் சென் பீட்டர்ஸ்பெர்க் மட்டும் புரட்சியாளரின் கையில் இருந்தது உண்மை. ஏனைய இடங்களில் உள்நாட்டுப் போர் நடந்தது. நடக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. சாதாரணமான விவசாயிகள், தொழிலாளர்கள் தான் செம்படையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். வாழ்க்கையில் ஒரு நாள் கூட துப்பாக்கியை தொட்டிராத விவசாயிகள், தொழிலாளரை படைவீரர்களாக மாற்றுவது லேசான விடயமா?

//இன்றைய ரஷியாவின் அதிபர் முன்னாள் "கொம்யூனிஸ்ட்" எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பார்க்கிறீர்களா ?// இது மற்றொரு அபத்தமான கூற்று. ஒரு காலத்தில் அப்படி இருந்தார்கள் என்பதற்காக இபோதும் அப்படி இருப்பார்களா? அவர்கள் இன்று முதலாளித்துவவாதிகள். ஒரு முதலாளித்துவவாதி எப்படி நடந்து கொள்வார் என்பது உங்களுக்கு தெரியும் தானே? அப்படித் தான் நடந்து கொள்கிறார். இதில் என்ன ஆச்சரியம்?

//கலையும் கூட மேற்குலக சுரண்டல் அரசின் சலுகைகளைப் புத்திசாலித்தனமாக அனுபவித்துக் கொண்டு எங்கள் எலலோருக்கும் மார்க்சீயம் போதிக்க விரும்புகிறார்.// நீங்கள் குறிப்பிடும் "சலுகைகள்" எதுவும் அரசு விரும்பிக் கொடுத்தவை அல்ல. அது தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள். நீண்ட காலமாக நடந்த போராட்ட வரலாற்றை இருட்டடிப்பு செய்து விட்டு "சலுகை" பற்றிப் பேசுவது ஒரு அரச அடிவருடித்தனம். ஆமாம், அரசு "சலுகை" தருகிறது என்பதற்காக, அந்த அரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று போதிப்பதை எப்படி அழைப்பது? 

முதலில் அரசு என்றால் என்னவென்று அடிப்படை அறிவு இருக்க வேண்டும். முதலாளிகளுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிப்பதாக அரசு காட்டிக் கொள்கிறது. எல்லா நாடுகளிலும் அப்படித் தான். ஆனால், நடைமுறையில் முதலாளிகளின் பக்கம் சாய்ந்து விடுகின்றது. மேற்கு ஐரோப்பிய தொழிலாளர்கள், தொழிற்சங்க நடவடிக்கை மூலம் அதை மாற்றி அமைத்தார்கள். 

உதாரணத்திற்கு, இன்று சம்பளத்தை தீர்மானிக்கும் விடயத்தில், தொழிற்சங்கத்தை அழைத்துப் பேசும் நிலையில் கொண்டு வந்திருக்கிறார்கள். இதெல்லாம் வானத்தில் இருந்து விழவில்லை. வேலைநிறுத்தம் போன்ற பல வகையான போராட்டங்கள் ஊடாக பெற்றுக் கொண்ட உரிமைகள்.

//எந்தப் பொதுவுடமை சார்பு நாடுகளுக்குச் செல்லவோ அதனை அங்கு சென்று ஆராயவோ அல்லது அங்கு வாழவோ விரும்பியிருக்க மாட்டார்// இதுவும் சுத்த அபத்தமான கூற்று. நாங்கள் காலனிய எஜமானர்களின் நாடுகளுக்கு செல்கிறோம். ஒரு காலத்தில் மட்டுமல்ல, இப்போதும் எமது தாயகத்தின் வளங்களை சுரண்டிக் கொழுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு செல்கிறோம். அதற்கு எமது மக்களுக்கு இருக்கும் உரிமையை மறுப்பது, வெள்ளையின மக்களை பாதுகாக்கும் நிறவெறிச் சிந்தனை ஆகும்.

"பொதுவுடைமை" ஒரு அது மாற்று அரசியல் பொருளாதாரம். எந்த நாட்டிலும் நடைமுறைப் படுத்தக் கூடிய, எல்லா நாடுகளிலும் பெரும்பான்மையாக உள்ள, உழைக்கும் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வது பற்றிய தத்துவம். அது குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே இருக்கிறது என்று நினைப்பது உங்களது அறியாமை. முதலாளித்துவ நாடுகளில் வாழ்பவர்கள் எல்லோரும் முதலாளிகள் அல்ல. அங்கேயும் பெரும்பான்மையினர் உழைக்கும் மக்கள் தான். உலகம் முழுவதும் நிலைமை அப்படித் தான்.

3 comments:

ஹரி நிவாஸ் said...

நன்று அண்ணா .கம்முனிசம் சோசியலிசம் என்ன விடியாசம் விளக்க முடியுமா எனக்கு புரியவில்லை.விலகுவிற்களா

Anonymous said...

வயிறு நிறைய சாப்பாடு கிடைக்கும் வரையில் வசதியான வாழ்க்கை கிடைக்கும் வரையில் சராசரி மக்களுக்கு முதலாளித்துவம் பிடிக்கும் காரணம் அந்த அமைப்பு இவர்களும் சில ஊழல்களை செய்ய அனுமதிக்கிறது அதனால் இந்த முதலாளித்துவ அமைப்பே சிறத்தது என்று விவாதிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை..அது அவர்களின் வர்க்க நலனை ஏதோ ஒரு வகையில் பாதுகாக்கிறது..ஆனால் இவர்களின் அற்புத முதலாளித்துவம் ஒருநாள் இவர்கள் வாழ்க்கையை புரட்டிப்போடும் அப்போதுதான் தங்களது பாசாங்குகளை கைவிடுவார்கள்..2-ம் உலக யுத்த காலத்தைவிட இப்போது அதிக மக்கள் அகதிகளாக சிதரடிக்கப்படுகின்றனர் இந்த மக்கள் ஒரு காலத்தில் முதலாளித்துவ பெருமைகளை போற்றி புகழ்ந்தவர்களாகத்தான் இருந்திருப்பார்கள்..ஆனால் இன்று அவர்களின் துயரத்தை முதலாளித்துவம் போக்காமல் அடிமைகளாக்கிவிட்டது..புதிய நோய்கள்,இயற்கை அழிவு,ஒழுங்கீனமான இளம் தலைமுறை,பயங்கரவாதம்,போர்,அடிமைத்தனம்,பசி,ஏழ்மை போன்ற பல பரிசுகளை நமக்கு வழங்க முதலாளித்துவம் காத்துக்கிடக்கிறது.

Kalaiyarasan said...

//கம்முனிசம் சோசியலிசம் என்ன விடியாசம் விளக்க முடியுமா//

மன்னராட்சி அல்லது நிலப்பிரபுத்துவத்தில் இருந்து உலகம் முதலாளித்துவம் நோக்கி நகர்ந்தது வரலாற்றில் ஏற்பட்ட நாகரிக வளர்ச்சி. அதே மாதிரி, உலகம் மீண்டும் ஒரு நாகரிக மாற்றத்தை சந்திக்கிறது. இந்தத் தடவை முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிசம் நோக்கிய மாற்றம். இனி வருங்காலத்தில், சிலநூறு அல்லது ஆயிரம் வருடங்களுக்குப் பின்னராவது இன்னொரு மாற்றம் நடக்கும். அது சோஷலிசத்தில் இருந்து கம்யூனிசத்திற்கு. சோசலிச சமுதாயத்தில் அரசு இருக்கும். ஒரு தேசத்தின் கட்டமைப்பும் பெரிய வித்தியாசம் இருக்காது. ஆனால் பொருளாதார மாற்றங்கள் நடக்கும். கம்யூனிச சமுதாயத்தில் அரசு இருக்காது. மக்களே மக்களை ஆளும் கட்டமைப்பு.போர்கள் நடக்காது. இராணுவம் இருக்காது. குற்றங்கள் நடக்காது. அதனால், பொலிஸ், சிறைச்சாலை, நீதிமன்றம் இருக்காது.