Tuesday, September 29, 2015

"சோவியத் கால வாழ்க்கை மிகவும் சிறந்தது!" - பொது மக்களின் வாக்குமூலம்


ஐரோப்பாவில் மிகவும் வறுமையான நாடான மோல்டாவியா பற்றிய ஆவணப்படம் (Mistig land) ஒன்றை, நெதர்லாந்து தொலைக்காட்சியில் பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. மோல்டாவியா முன்னர் ஒரு காலத்தில் சோவியத் குடியரசாக இருந்தது. 

அந்தக் காலத்தில், மக்களுக்கு எல்லா வசதிகளும் கிடைத்து வந்தன. வசிப்பதற்கு வீடு, நிரந்தர வேலை, பயிரிட வீட்டுத் தோட்டம், பால் கறக்க பசுமாடு எல்லாம் இருந்தன. இப்போது ஒன்றுமில்லை. வேலையில்லாப் பிரச்சினையால் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்கிறார்கள். அதனால் குடும்பங்கள் உடைகின்றன. பெற்றோரின் அரவணைப்புக் கிடைக்காத பிள்ளைகள் தற்கொலை செய்கின்றன.

நெதர்லாந்து தொலைக்காட்சியில் Grensland எனும் தொடர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகின்றது. சரளமாக ரஷ்ய மொழி பேசத் தெரிந்த, டச்சு ஊடகவியலாளர் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். ரஷ்யா உட்பட, முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கு சென்று இந்த ஆவணப் படங்களை தயாரித்துள்ளார். அதன் முதலாவது பகுதி, மோல்டாவியா பற்றியது.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் மேற்கத்திய நலனில் இருந்தே அந்த நாடுகளைப் பார்க்கின்றார். பல தடவைகள், தனது ஒரு பக்கச் சார்பான கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார். இருப்பினும், அவரால் ஓர் உண்மையை மறைக்க முடியவில்லை. "பெரும்பான்மையான மக்கள், சோவியத் கால வாழ்க்கை மிகச் சிறந்தது என்ற எண்ணத்தைக் கொண்டுள்ளனர்."

பொது இடங்களில் சந்திக்கும் சாதாரண மக்கள் பலரைப் பேட்டி எடுத்துள்ளார். அவர்களில் யாருமே சோவியத் கால வாழ்க்கை பற்றி குறை கூறவில்லை! முன்பு வாழ்க்கை நன்றாக இருந்தது, எமக்கு எல்லா வசதிகளும் கிடைத்தன. இப்போது எல்லாம் மோசமாகப் போய்க் கொண்டிருக்கின்றன என்று தான் கூறினார்கள். 

சோவியத் காலத்தில் பிறந்திராத இளையதலைமுறையினர், நிலைமையை இவ்வாறு புரிந்து கொள்கின்றனர்: "சோவியத் காலத்தில் மூன்று தொலைக்காட்சிப் பெட்டி வாங்கும் அளவிற்கு யாரிடமும் வசதி இருக்கவில்லை. ஆனால், தாராளமான ஓய்வு நேரம் கிடைத்தது. அதனால் மக்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளவும், கூடிக் கதை பேசி பொழுது போக்கவும் முடிந்தது. தற்போது அப்படி அல்ல. யாருக்குமே ஆறுதலாக பேசுவதற்கு நேரமில்லை. எல்லோரும் ஏதோவொரு வேலையில் மும்முரமாக இருக்கின்றனர். கஷ்டங்களில் இருந்து தப்பிப் பிழைத்து வாழ்வதே பலருக்கு சவாலாக இருக்கிறது."

மோல்டாவியாவில் மூவின மக்கள் வாழ்கிறார்கள். மேற்கில் ருமேனிய மொழியினரும், கிழக்கில் ரஷ்ய மொழியினரும், தெற்கில் ஒரு மாகாணத்தில் கவ்காசியா (துருக்கி போன்றது) மொழி பேசுவோரும் வாழ்கின்றனர். நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், மூவின மக்களையும் பேட்டி கண்டுள்ளனர். முன்னாள் சோவியத் யூனியனில் எல்லாம் சிறப்பாக இருந்தன என்பதில் மட்டும் அவர்களுக்கு இடையில் கருத்தொற்றுமை நிலவுகின்றது.


மோல்டாவியாவில் முதலாளித்துவ மீட்சிக்குப் பின்னர் தான் இனப்பிரச்சினை தீவிரமடைந்தது. அதற்கு முன்னர், சோவியத் காலத்தில் பல்லின மக்களும் சகோதர உணர்வுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். மக்களுக்கிடையில் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மை இருந்தது. இப்போது அவரவர் தன்னுடைய பிரச்சினையை மட்டுமே பார்க்கும் சுயநலவாதிகளாகி விட்டனர்.

இந்தக் கருத்துக்களை, தற்போது இரண்டு துருவங்களாக பிரிந்து வாழும், மூவின மக்கள் அனைவரும் ஒரே மாதிரி தெரிவிப்பது கவனிக்கத் தக்கது. தொண்ணூறுகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள், தனி நாட்டுக்காக ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள். நீண்டதொரு உள்நாட்டுப் போரின் பின்னர் தனியாகப் பிரிந்து சென்ற திரான்ஸ்நிஸ்திரியா (அல்லது திரான்ஸ்நியேஸ்திரியா) குடியரசை, இன்னமும் உலகில் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. 

தெற்கே வாழும் துருக்கி மொழி பேசும் கவ்காசிய மக்கள், தொண்ணூறுகளில் பிரிந்து செல்ல விரும்பினாலும், மோல்டாவியாவின் சுயாட்சிப் பிரதேசமாக இணைந்து கொண்டனர். இவ்வாறு இன்று ஒன்றுகொன்று பகைமை கொண்ட இனங்களாக பிரிந்து நிற்கும் மோல்டாவியா மக்கள், சோவியத் காலத்தில் ஒற்றுமையாக சகோதர உணர்வுடன் வாழ்ந்தார்கள் என்பதை இன்று நம்ப முடியாமல் இருக்கும். ஆனால், நாங்கள் நம்பத் தான் வேண்டும். சோவியத் கால சகோதரத்துவம் பற்றி, அந்த மக்களே தமது வாயால் சொல்லக் கேட்கலாம்.

சோவியத் யூனியன் உடைவுக்குப் பின்னர் பிறந்த இளைய தலைமுறையினருக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் தமது பெற்றோரிடமிருந்து சோவியத் வாழ்க்கை வசதிகள் பற்றி அறிந்து கொண்டாலும், இன்றைய மோசமான நிலைமையை சமாளிப்பதே அவர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கிறது. வறுமை, வேலையில்லாப் பிரச்சினை காரணமாக, பெரும்பாலான இளைய தலைமுறையினர் வேலை தேடி புலம்பெயர்கின்றனர். அநேகமானோர், ரஷ்யாவிலும், இத்தாலியிலும் வேலை செய்து சம்பாதித்து வீட்டுக்கு காசு அனுப்புகின்றனர்.

வெளிநாடுகளில் வேலை செய்யும் பெற்றோர் பணம் அனுப்பி வசதி வாய்ப்புகளை பெருக்கினாலும் குடும்பங்களில் நிம்மதி இருப்பதில்லை. பல குடும்பங்களில், தாய், தந்தை இருவரும் வெளிநாடுகளில் இருப்பதால், பிள்ளைகள் தாத்தா, பாட்டிகளுடன் வளர்கின்றன. அவர்கள் எந்தளவு பாசமாக நடந்து கொண்டாலும், வீட்டில் தாராளமாக பாவனைப் பொருட்கள் குவிந்திருந்தாலும், பிள்ளைகளுக்கு பெற்றோரின் அரவணைப்பு இல்லாதது பெரிய குறையாக உள்ளது. 

இந்தக் குறைபாட்டை வெளியில் இருப்பவர்கள் புரிந்து கொள்வதில்லை. "இந்தப் பிள்ளைக்கு வீட்டில் எல்லா வசதிகளும் இருக்கின்றன தானே?" என்று கேட்கிறார்கள். அதாவது, பணம் மட்டும் தான் வாழ்க்கையில் முக்கியம் என்று நினைக்கிறார்கள். ஆனால், எந்தளவு பணம் இருந்தாலும், அது தாய், தந்தையின் அன்புக்கு ஈடாகுமா? அதனால், பருவ வயது பிள்ளைகள் மத்தியில் தற்கொலை மரணமும் அதிகரித்து வருகின்றது.

சோவியத் காலத்தில் கட்டப்பட்ட லெனின் சிலைகள், இன்றைக்கும் பல இடங்களில் நிலைத்து நிற்கின்றன. சோவியத் யூனியனை இழந்ததற்காக, அங்கு வாழும் மக்கள் இன்று வரை கவலைப் படுகிறார்கள். பெரும்பாலும் வயோதிபர் மத்தியில் அதற்கான ஏக்கம் அதிகமாக உள்ளது. அந்தக் காலங்களில் தாங்கள் எதிர்காலத்தைப் பற்றி அச்சப் படவில்லை என்று சொல்கின்றனர். வேலையும், வசதி வாய்ப்புகளும் இருந்தன. இன்றைக்கு வாழும் மக்கள் பண்பாடற்றவர்களாக நடந்து கொள்வதாக அவர்கள் குறைப் படுகின்றனர்.

ஆவணப் படத்தை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்:

1 comment:

Actress Videos said...

மிக மிக சிறந்த பதிவு நண்பரே. உங்களின் இந்த பதிவை தமிழ் திரட்டியிலும் (http://tamilthiratti.com) இணைத்து இன்னும் பல நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.