Friday, September 11, 2015

ஈழக் குழந்தைக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் போலித் தமிழ் உணர்வாளர்கள்


"சிரிய குழந்தைக்காக உலகமே அழுகிறது, ஈழக் குழந்தைக்காக யாரும் அழவில்லை..." என்று, இப்போது சிலர் பிரச்சாரம் செய்யக் கிளம்பி உள்ளனர். இவர்கள் உண்மையில் தமிழ் உணர்வாளர்களும் அல்ல, ஈழக் குழந்தை மீது கரிசனை கொண்டவர்களும் அல்ல.

மேற்கத்திய அரசுக்களின் இரட்டை வேடத்தை மூடி மறைப்பது மட்டும் அவர்களது நோக்கம் அல்ல. சர்வதேச மட்டத்தில் தமிழ் மக்களை தனிமைப் படுத்தி, அவர்களை அறியாமையில் வைத்திருக்கும் உள் நோக்கில் இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப் படுகின்றது. 

முதலில் நாங்கள் ஒரு முக்கியமான விடயத்தை அவதானிக்க வேண்டும். சிரியா, பாலஸ்தீனம் போன்ற, மூன்றாமுலகை சேர்ந்த, மத்திய கிழக்கு மக்களின் பிரச்சினை ஊடகங்களின் கவனத்தைப் பெறும் நேரத்தில் "மட்டும்" தான், இவர்கள் இது போன்ற வாதங்களை அடுக்குவார்கள்.

அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் பிரச்சினை என்றால் இவர்களும் சேர்ந்து அழுவார்கள். உதாரணத்திற்கு, கொசோவோவுக்காக உலகமே அழுத நேரம் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இவர்களும் சேர்ந்து அழுதார்கள்! அப்போது யாருக்கும் ஈழப்போரில் இறந்து கொண்டிருந்த குழந்தைகள் நினைவுக்கு வரவில்லை!

2000 ம் ஆண்டு, அமெரிக்காவில் கிட்டத்தட்ட இதே மாதிரியானதொரு சம்பவம் நடந்தது. எலியான் என்ற ஐந்து வயது கியூபா நாட்டுக் குழந்தை, தாயுடன் அகதியாக அமெரிக்காவை நோக்கி படகில் சென்று கொண்டிருந்தான். எதிர்பாராத விதமாக, படகு கடலில் மூழ்கியதால், தாய் உட்பட பல அகதிகள் இறந்து விட்டனர். எப்படியோ குழந்தை எலியான் உயிர் தப்பிப் பிழைத்து மியாமிக் கரையை வந்து சேர்ந்து விட்டான். 

மியாமியில் வசிக்கும் தாய் மாமன், எலியானை பராமரித்து வந்தாலும், கியூபாவில் வசிக்கும் தந்தை, மகனைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரினர். அதனால் அமெரிக்க அரசு தலையிட்டு, குழந்தையை தாய் மாமனிடம் இருந்து பிரித்து, கியூபாவுக்கு அனுப்பி விட்டது. (Elián González affair; https://en.wikipedia.org/wiki/Eli%C3%A1n_Gonz%C3%A1lez_affair)

அமெரிக்கா - கியூபா முரண்பாடு காரணமாக, ஒரு குடும்பப் பிரச்சினை, சர்வதேசப் பிரச்சினையாகி, அன்று "உலகமே ஒரு கியூபக் குழந்தைக்காக அழுது கொண்டிருந்தது". அப்போது நமது போலித் தமிழ் உணர்வாளர்கள் என்ன செய்தார்கள்? "ஒரு கியூபக் குழந்தைக்காக" அவர்களும் சேர்ந்து அழுதார்கள்! அந்த நேரத்தில் ஈழப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. பல ஈழக் குழந்தைகள் செத்து மடிந்து கொண்டிருந்தனர். அப்போது யாருக்கும் கியூபக் குழந்தையையும், ஈழக் குழந்தையையும் ஒப்பிடத் தோன்றவில்லையே? அது ஏன்?

ஈழக் குழந்தைகள் குறித்து அக்கறைப் படாமல், மேற்கத்திய நாடுகள் பாராமுகமாக இருந்தமையை காட்டுவதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. ஒரு தடவை, ஈழப் போர் நடந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில், 2007 ம் ஆண்டு, போர்த்துக்கல் நாட்டில் உள்ள சுற்றுலா ஸ்தலமான அல்கார்வே பகுதியில், மடலின் என்ற ஒரு பிரிட்டிஷ் குழந்தை காணாமல் போனது. அன்று அது பிரதானமான செய்தியாக அனைத்து ஊடகங்களிலும் பேசப் பட்டது. (Disappearance of Madeleine McCann; https://en.wikipedia.org/wiki/Disappearance_of_Madeleine_McCann)

ஈழப் போரில் இறந்து கொண்டிருந்த ஈழக் குழந்தைகளை பற்றி, ஒரு வார்த்தை பேசாத மேற்கத்திய ஊடகங்கள், காணாமல்போன ஒரு பிரிட்டிஷ் குழந்தைக்காக அழுதன. உலகம் முழுவதையும் அழ வைத்தன. ஏனென்றால், அது ஒரு மேலைத்தேய பணக்கார நாட்டில் பிறந்த அதிர்ஷ்டக்காரக் குழந்தை! 

அப்போது நமது "தமிழ் உணர்வாளர்" யாரும் பொங்கியெழுந்து, "பிரிட்டிஷ் குழந்தைக்காக அழுகிறீர்களே! ஈழக் குழந்தைக்காக அழுதீர்களா?" என்று கேட்கவில்லை! எப்படிக் கேட்பார்கள்? அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் வெள்ளை எஜமானுக்கு கோபம் வராதா?


கரை ஒதுங்கிய திமிங்கிலத்தை கடலுக்குள் தள்ளி விட்ட மிருக காருண்யம் பற்றி, மேற்கத்திய ஊடகங்கள் முக்கிய கவனமெடுத்து தகவல் தெரிவிக்கும். ஆனால், விலங்குகள் மீது காட்டும் அன்பு, பாசத்தில் நூற்றில் ஒரு பங்கைக் கூட, மேற்கத்திய நாட்டவர்கள் போரில் கொல்லப் பட்ட ஈழக் குழந்தைகள் விடயத்தில் காட்டவில்லை.

துருக்கிக் கடற்கரையில், சிரிய அகதிக் குழந்தை இறந்து ஒதுங்கிய சம்பவம் நடப்பதற்கு, ஓரிரு மாதங்களுக்கு முன்னர், அமெரிக்க மக்கள் அனைவரும் ஒரு சிங்கத்திற்காக அழுது வடித்தார்கள். (https://en.wikipedia.org/wiki/Cecil_(lion))

சிம்பாப்வே வன விலங்கு சரணாலயத்தில், ஒரு அமெரிக்க பல் வைத்தியர் சிசில் என்ற சிங்கத்தை சுட்டுக் கொன்ற சம்பவம், அமெரிக்கர்களை கிளர்ந்தெழ வைத்தது. "சிங்கத்தை கொன்ற படுபாவி! இரக்கமற்ற கொலைகாரன்!" என்றெல்லாம் அந்த வைத்தியரை திட்டித் தீர்த்தார்கள். நேரில் கண்டால் என்ன செய்திருப்பார்களோ தெரியாது. 


இதே அமெரிக்கர்கள், ஆயிரக் கணக்கான தமிழ் மக்களை கொன்ற மகிந்த ராஜபக்சவும், கோத்தபாய ராஜபக்சவும் அமெரிக்கா வந்திருந்த நேரம் என்ன செய்தார்கள்? ஒன்றுமே செய்யவில்லை. 

"தமிழர்களை கொன்ற படுபாவிகள்! இரக்கமற்ற கொலைகாரர்கள்!" என்று எந்தவொரு அமெரிக்கரும் முணுமுணுக்கக் கூட இல்லை! அது சரி, நமது "தமிழ் உணர்வாளர்கள்" அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? "அமெரிக்கர்களுடன் நாங்களும் சேர்ந்து, அந்த சிங்கத்திற்காக அழுவோம் வாருங்கள்!" என்று அமெரிக்காவுக்கு விசுவாசமான அடிமைகளாக நடந்து காட்டினார்கள்.


முதலில் "சிரியக் குழந்தை = ஈழக் குழந்தை ஒப்பீடு" அடிப்படையிலேயே தவறானது. உலகில் யாரும் "சிரியக்  குழந்தைகளுக்காக," அல்லது "சிரியாவுக்காக" அழவில்லை! இப்போதும் கூட சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தில் அகப்பட்டு குழந்தைகள் மரணிக்கின்றன. உலகில் யாருக்குமே அதைப் பற்றிக் கவலையில்லை! "சிரியாவில் இன்றைக்கு நடந்த குண்டுவீச்சில், இத்தனை குழந்தைகள் கொல்லப் பட்டனர்...." என்று எந்த ஊடகமாவது அறிவித்திருக்கிறதா? மேற்கத்திய நாடுகளின் இதே கள்ள மௌனம் தான், ஈழக் குழந்தைகள் விடயத்திலும் பாராமுகமாக இருந்துள்ளது.

அப்படியானால், எதற்காக "அந்த சிரியக் குழந்தை" பற்றிய தகவல் முக்கியத்துவம் பெற்றது? முதலில், அது ஒரு "சிரியக்" குழந்தை என்பதற்காக ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. அது ஓர் அகதிக் குழந்தை என்பதற்காக எல்லோரும் அழுதார்கள். ஐரோப்பியரின் உணர்வுகளை தட்டி எழுப்பும் விடயம் எல்லாம் ஊடகங்களுக்கு பரபரப்பான தகவல்கள் தான். அதைப் பற்றி பேசுவதற்கு முன்னர், ஐரோப்பிய அரசியல் நிலவரம் பற்றி ஓரளவாவது அறிந்திருக்க வேண்டும்.

தற்போது அகதிகளின் நெருக்கடி ஐரோப்பாவை பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஓர் ஐரோப்பிய நாட்டில் வசித்தால் அந்த நிலைமையை புரிந்து கொள்ள முடியும். ஐரோப்பிய பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகளில், தினந்தோறும் அகதிகள் தான் தலைப்புச் செய்தியாக இடம்பெறுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றங்கள், ஏன் ஐரோப்பிய ஒன்றியத்தில் கூட, அகதிகள் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றி விவாதங்கள் நடக்கின்றன. ஆயிரக் கணக்கில் ஐரோப்பாவுக்குள் வந்து குவியும் அகதிகள் பிரச்சினை, ஐரோப்பாவை பிடித்தாட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான், அய்லான் என்ற அகதிக் குழந்தை கடலில் மூழ்கி இறந்தது.

ஐரோப்பிய மக்கள் அனைவரும் ஒரு முனைப்பாக அகதிகள் பிரச்சினை பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், "சிரியக் குழந்தையின்" மரணம் ஐரோப்பியரின் மனச்சாட்சியை பிடித்து உலுக்கியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னர்,  பெரும்பான்மையான ஐரோப்பியர்கள், பொதுவாக அனைத்து அகதிகளுக்கும் எதிராக பேசிக் கொண்டிருந்தார்கள். அதாவது, ஈழத் தமிழர்கள் அகதிகளாக வருவதையும் அவர்கள் விரும்பவில்லை.
"கிறிஸ்தவ குழந்தைகளுக்காக யாருமே அழவில்லை." என்று கவலைப்படும், ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளின் இனவாதக் கார்ட்டூன். 

இந்த உண்மை தெரியாமல், "சிரியக் குழந்தைக்காக உலகமே அழுகிறது. ஈழக் குழந்தைக்காக எவன் அழுதான்?" என்று சிலர் நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று உங்களது "தமிழினப் பற்றை" விளம்பரப் படுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும். இதே சிரியக் குழந்தை, சிரியாவில் நடந்த யுத்தத்தில் கொல்லப் பட்டிருந்தால், "உலகம் அழுதிருக்குமா"? 

அய்லான் என்ற அந்தக் குழந்தை, சிரியாவில் கொபானி என்ற இடத்தில் பிறந்தது. அது பிறக்கும் பொழுதே யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அய்லான் குர்டியின் குடும்பத்தினர், குர்திய சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள். சிரியாவில் உள்ள குர்து சிறுபான்மை இனம், இலங்கையில் தமிழருடன் ஒப்பிடத் தக்கது. 

மூன்று வருடங்களுக்கு முன்னர், அதாவது அய்லான் பிறந்த நேரம், குர்து மக்களின் பிரதேசமான கொபானியை (சிரிய- முள்ளிவாய்க்கால் என்று நினைத்துக் கொள்ளுங்கள்) கைப்பற்றுவதற்காக ISIS படைகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தன. அப்போது பெருந்தொகையான கொபானி வாசிகள் அகதிகளாக வெளியேறி துருக்கியில் அகதித் தஞ்சம் கோரினார்கள். அங்கிருந்து ஐரோப்பா செல்வதற்காக கிளம்பிய பொழுது தான், கிரேக்க கடல் எல்லையில் அய்லானின் மரணம் நிகழ்ந்தது.

போலித் தமிழ் உணர்வாளர்களே! இப்போது சொல்லுங்கள். ஒரு "தமிழ் அய்லானும்" அவனது குடும்பமும், முள்ளிவாய்க்கால் முற்றுகையில் இருந்து தப்பி தமிழ்நாட்டுக்கு அகதியாக செல்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். இந்தியாவில் இருந்து வெளியேறி, ஐரோப்பாவில் அகதித் தஞ்சம் கோருவதற்காக, படகில் பயணம் செய்த பொழுது, அந்தத் தமிழ்க் குழந்தை கிரேக்க கடல் எல்லையில் மூழ்கி இறந்து விடுகின்றது. 

அப்படி ஒரு சம்பவம் நடந்து, அது உலக ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை என்றால், "சிரியக் குழந்தை = ஈழக் குழந்தை ஒப்பீடு" சரியாக இருந்திருக்கும். இங்கே நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஈழப் போர்க் களத்தில் இறந்த குழந்தையை, ஐரோப்பிய கடலில் இறந்த அகதிக் குழந்தையுடன் ஒப்பிடுகின்றீர்கள். ஈழக் குழந்தைகளும், ஐரோப்பாவுக்கு அகதிகளாக செல்கின்றன என்ற உண்மையை மறந்து விட்டுப் பேசுகின்றீர்கள்.

ஐரோப்பிய நாடுகள் எதுவும், அகதித் தஞ்சம் கோருவோருக்கு இலகுவான வழி வகைகளை செய்து கொடுக்கவில்லை. ஐரோப்பிய நாடொன்றின் தூதுவராலயத்தில் அகதித் தஞ்சம் கோரலாம் என்று சட்டம் எழுதி வைத்திருகிறார்கள். ஆனால், நடைமுறையில் எதுவுமே நடப்பதில்லை.

எந்தவொரு ஈழத் தமிழ் அகதியும், கொழுப்பு அல்லது புது டில்லியில் உள்ள ஐரோப்பிய நாடொன்றின் தூதுவராலயத்தில், அகதித் தஞ்சத்திற்கு விண்ணப்பித்து விட்டு, ஐரோப்பாவுக்கு செல்லவில்லை. அது சாத்தியமல்ல என்பது அவர்களுக்கும் தெரியும்.

அதிகம் பேசுவானேன். சம்பந்தப் பட்ட சிரிய குழந்தையின் குடும்பமும், கனடாவில் தஞ்சம் கோருவதற்கு விண்ணப்பித்து இருந்தது. ஆனால், கனடிய குடிவரவு அமைச்சு அந்த விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதால் தான், சட்டவிரோதமாக ஐரோப்பா செல்ல முற்பட்டு மரணம் சம்பவித்தது.

ஆகவே, இங்கே முக்கியமான பிரச்சினை ஐரோப்பாவை சுற்றிலும் உள்ள கண்ணுக்குப் புலப்படாத கோட்டை மதில்கள். வறிய நாடுகளில் இருப்பவர்களுக்கு விசா கொடுக்க மறுக்கும் பாகுபாடு. ஏன் எந்தவொரு "தமிழ் உணர்வாளரும்"(?) இந்தப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதில்லை?

ஈழத் தமிழ் அகதிகளுக்கு இருக்கும் ஒரே வழி, சட்டவிரோதமாக விசா இல்லாமல் ஐரோப்பாவுக்குள் நுழைவது தான். அதைச் செய்ய முயன்ற பொழுது தான், சிரியக் குழந்தையான அய்லானும் அவனது குடும்பமும் கடலில் மூழ்கி இறந்துள்ளன. ஈழம், சிரியா எங்கிருந்து வந்தாலும்,   ஐரோப்பாவில் அவர்கள் அகதிகள் தான். 

ஆகவே, "தமிழ் உணர்வாளர்களே"! நீங்கள் உண்மையிலேயே ஈழக் குழந்தைகளில் கரிசனை கொண்டவர்கள் என்றால், "ஐரோப்பிய நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி, தாராள மனதுடன் அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்துப் போராடுங்கள். அது தான் உங்களது தமிழ் உணர்வு நேர்மையானது என்பதை எடுத்துக் காட்டும். உண்மையான பிரச்சனைகளை மூடி மறைத்துக் கொண்டு, "சிரியக் குழந்தை = ஈழக் குழந்தை ஒப்பீடு" செய்து கொண்டிருந்தால், அது உங்களுடைய "தமிழ் உணர்வு" போலியானது என்பதைத் தான் நிரூபிக்கும்.