Saturday, November 08, 2014

கருவிலே அழிக்கப் பட்ட துருக்கியின் பத்து மாதப் புரட்சி


பத்சா (Fatsa), கருங்கடலுக்கு அருகில் உள்ள துருக்கியின் ஒர்டு மாகாணத்தில் ஒரு நகரம். எழுபதுகளில், இருபதாயிரம் பத்சா வாசிகளில் பெரும்பான்மையானோர் விவசாயிகள். உணவுக்கான சாக்லேட் களி செய்ய பயன்படும் மூலப் பொருளான hazel nut உற்பத்தியாகும் அரிதான இடங்களில் அதுவும் ஒன்று. விவசாயிகள் தவிர்ந்த ஏனையோர் மீனவர்கள்.

1965 ஆம் ஆண்டு, பத்சா நகரில், துருக்கி உழைப்பாளர் கட்சி (TIP) உருவாக்கப் பட்டது. உழைப்பாளர் கட்சியானது, மாணவர்கள், தொழிலாளர்கள் மத்தியில், தொழிற்சங்கம், விவாத அரங்கம் போன்றவற்றின் ஊடாக இயங்கத் தொடங்கியது. குறிப்பாக விவசாயிகள் சுரண்டப் படுத்தல், கந்து வட்டிகாரர்களின் கொடுமை, இடைத் தரகர்களின் மோசடி  போன்றவற்றை விவாதப் பொருளாக்கியது.

TIP கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, மஹிர் ஜயான் (Mahir Çayan)  தலைமையில், "மக்கள் விடுதலை இயக்கம் - துருக்கி முன்னணி" (THKP-C) ஸ்தாபிக்கப் பட்டது. துருக்கி, கோடீஸ்வர தொழிலதிபர்களினால் ஆளப்படுகின்றது என்றும், நவ- தாராளவாத பிடியின் கீழ் இருக்கிறது என்பதும் அவர்களது கொள்கையாக இருந்தது. ஆளும் வர்க்கத்தை அடக்க வேண்டுமானால், ஆயுதப் போராட்டம் அவசியம் என்பது அவர்களது பாதை. பத்சா நகரில் அந்த இயக்கத்திற்கு ஆதரவுத் தளம் இருந்தது.

12-5-1971 அன்று, துருக்கியில் ஒரு சதிப்புரட்சி மூலம் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இராணுவ ஆட்சியாளர்கள் புரட்சிகர இடதுசாரி சக்திகளை அடக்க முனைந்தனர். அதனால் THKP-C ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டது. இதே நேரம், இராணுவத்தினர் மூன்று இடதுசாரி மாணவர் தலைவர்களை (Deniz Gezmis, Hüseyin Inan, Yusuf Aslan) கைது செய்து தூக்கில் போட இருந்தனர்.

மாணவர் தலைவர்களின் மரண தண்டனையை தடுக்கும் நோக்கில், THKP-C கெரில்லாக்கள், நேட்டோ வில் வேலை செய்த மூன்று ரேடார் தொழில் நுட்ப நிபுணர்களை கடத்திச் சென்றனர். அவர்கள் கிசில்டேரே(Kizildere) எனும் கிராமத்தில் மறைத்து வைக்கப் பட்டிருந்தனர். 30-3-1972 அன்று, அந்தக் கிராமத்தை படையினர் சுற்றி வளைத்தனர். இராணுவத்தினருடன் நடந்த மோதலில், ஜயான் உட்பட பத்து போராளிகளும், மூன்று நேட்டோ பயணக்கைதிகளும் கொல்லப் பட்டனர்.

இராணுவ சர்வாதிகார ஆட்சி, கிசில்டேரே தாக்குதல் காரணமாக, பத்சா கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தது. ஏனெனில், கொல்லப் பட்ட போராளிகளில் பலர் அந்த நகரத்தை சேர்ந்தவர்கள். எழுபதுகளின் மத்தியில், பாராளுமன்ற ஜனநாயகம் மீட்கப் பட்டு, அங்காராவில் சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி அமைத்தது. அப்போது இராணுவ அடக்குமுறை ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்ட, இடதுசாரி ஆர்வலர்கள் பலர் விடுதலை செய்யப் பட்டனர். அவர்களில் ஒருவர், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான "பிக்ரி சென்மெஸ்" (Fikri Sönmez). அவர் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர், பத்சா நகரில் ஒரு தையல்காரராக தொழில் புரிந்து வந்தவர்.

பிக்ரி சென்மெஸ் (Fikri Sönmez)

பிக்ரி சென்மெஸ், ஜோர்ஜிய மொழி பேசும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர். அதனால் இன வேற்றுமைகளை கடந்து மக்களை ஒன்று சேர்க்க முடிந்தது. விடுதலையாகி வரும் பொழுது, அவரின் வயது 36 மட்டுமே. அதனால், இரண்டு தலைமுறைகளை சேர்ந்தவர்களை இணைக்கும் பாலமாக திகழ்ந்தார். பத்சா உதைபந்தாட்ட கழகத்தின் நிறுவனராக இருந்தார். மேலும் மக்களைக் கவரும் பேச்சு வன்மை கொண்டவர்.  பிக்ரி சென்மெஸ், அடுத்து வரப் போகும் பத்சா நகர புரட்சியில் முக்கிய பாத்திரம் வகிக்க இருந்தார்.  

பிக்ரி சென்மெஸ், THKP-C இயக்கத்தின் பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கினார். பத்சா விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அதிக பட்ச விலை நிர்ணயம் செய்தல், அரிதாகக் கிடைத்த பாவனைப் பொருட்களின் பதுக்கலை தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்தார்.

அந்தக் காலத்தில், துருக்கி கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளினால் பாதிக்கப் பட்டிருந்தது. சீனி, மார்ஜரீன், சலவைத் தூள், சீமென்ட், சிகரட் போன்ற பாவனைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. வர்த்தகர்கள் அவற்றை பதுக்கி வைத்திருந்து, அதிக விலைக்கு விற்று வந்தனர்.

இடதுசாரி ஆர்வலர்கள், பதுக்கப் பட்ட களஞ்சிய அறைகளை உடைத்து, அந்தப் பொருட்களை மக்களுக்கு நியாய விலையில் விற்பனை செய்தனர். விற்பனையில் கிடைத்த இலாபத்தை, சம்பந்தப் பட்ட வர்த்தகர்களிடம் கொடுத்தனர். இடதுசாரி இளைஞர்களின் இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக, உள்ளூர் மக்கள் மத்தியில் சோஷலிசவாதிகளின் செல்வாக்கு உயர்ந்தது.

எழுபதுகளின் மத்தியில், நாடு முழுவதும் இடதுசாரி அலை வீசியது. பத்சாவில் மட்டுமல்லாது, வேறு பல இடங்களிலும் பல்வேறு சோஷலிச, கம்யூனிச இயக்கங்கள் செயற்பட்டுக் கொண்டிருந்தன. 

1971 ஆம் நடந்த இராணுவ சதிப்புரட்சியின் எதிர்விளைவாக, மக்கள் இடதுசாரி கட்சிகளை ஆதரிக்கத் தொடங்கி இருந்தனர். துருக்கியின் "ஜனநாயக அரசாங்கத்திற்கும்" அது ஒரு பெரும் தலையிடியாக இருந்தது. அன்று உலகம் முழுவதும் பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலமாகையினால், அதன் தாக்கம் துருக்கியிலும் உணரப் பட்டது. 

இடதுசாரிகளை அடக்குவதற்கு, ஆளும் வர்க்கத்திற்கு இன்னொரு இராணுவ சதிப்புரட்சி தேவைப் படவில்லை. அதற்குப் பதிலாக, பாதுகாப்புப் படைகளுக்கும், பாசிஸ இயக்கங்களுக்கும் இடையில் ஓர் உடன்பாடு எட்டப் பட்டது. சாம்பல் ஓநாய்கள், தேசிய செயற்பாட்டுக் கட்சி (MHP) என்பன, அரச இயந்திரத்தின் கைக்கூலிகளாக இயங்க முன் வந்தன. 

இடதுசாரிகளின் கோட்டைகள் எனக் கருதப் படும் இடங்களுக்குள் மோட்டார் சைக்கிள்களில் திரியும் பாசிஸ காடையர்கள், இலக்கின்றி சகட்டுமேனிக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். புரட்சிகர சோஷலிச இயக்கங்களின் உறுப்பினர்களை தேடிச் சென்று தாக்கினார்கள். தெருக்கள், பாடசாலைகள் போன்ற எந்தப் பொது இடத்திலும், இடதுசாரிகளுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை. அதனால், இடதுசாரி ஆர்வலர்கள், தற் பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆதரவாளர்கள் குறைவான பகுதிகளில், தலைமறைவாக வாழ வேண்டி இருந்தது. அங்கெல்லாம் பாசிஸ இயக்கங்களின் கை ஓங்கியது. 

1977 ஆம் ஆண்டு, பத்சா நகரில் இயங்கிய மக்கள் குழுத் தலைவரும், சென்மெஸ்ஸின் கூட்டாளியுமான கெமல் கரா (Kemel Kara) படுகொலை செய்யப் பட்டார். அந்தக் கொலை மூலம், மக்கள் மனதில் பீதியை உண்டாக்கலாம் என்று பாசிஸ்டுகள் எதிர்பார்த்தார்கள். ஆனால், விளைவு அதற்கு மாறாக அமைந்தது. மக்கள் மத்தியில் பாசிஸ எதிர்ப்புணர்வு அதிகரித்தது. அதனால், பத்சாவை சேர்ந்த சாம்பல் ஓநாய்கள் அமைப்பின் உறுப்பினர்கள் தமது பாதுகாப்புக் கருதி ஊரை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

மேலும் 1977 ஆம் ஆண்டு படுகொலைச் சம்பவம், புதியதொரு புரட்சிகர இயக்கத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. டெவ்ரிம்சி யொல் (Devrimci Yol: புரட்சிகர பாதை) எனும் பெயரிலான இயக்கத்தில், முன்னாள் THKP-C உறுப்பினர்கள் சிலருடன், மக்கள் குழுக்களின் பிரதிநிதிகளும், தொழிற்சங்க வாதிகளும் அங்கம் வகித்தனர். 

டெவ்ரிம்சி யொல் துருக்கி முழுவதுக்குமான இயக்கமாக இயங்கியது. பத்சா நகரில் சென்மெஸ்ஸும், அவரின் தோழர்களும் முக்கிய பங்கு வகித்தனர். அது ஒரு மார்க்சிய இயக்கம் தான். ஆனால், பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் இருந்து வேறு பட்டிருந்தது. அதாவது, டெவ்ரிம்சி யொல் சோவியத் யூனியனையோ, அல்லது சீனாவையோ பின்பற்றவில்லை. 

துருக்கி பற்றிய டெவ்ரிம்சி யொல்லின் அரசியல் நிலைப்பாடு இது: "துருக்கியில் முதலாளித்துவம் மேலிருந்து திணிக்கப் பட்டது. பிற்காலத்தில் வெளிநாட்டு உதவியுடன் நிலைநாட்டப் பட்டது. அந்தக் காரணத்தினால், துருக்கி முதலாளித்துவம் பலவீனமானதாகவும், நிலப்பிரபுத்துவ பிரச்சினைகளுடன் போராட வேண்டிய நிலையிலும் உள்ளது. ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்தியங்கும், தொழிலதிபர்கள், நிலவுடமையாளர்கள், மேட்டுக்குடி வர்க்கத்தினர், துருக்கியில் முதலாளித்துவத்தை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். அந்த ஆளும் வர்க்கம், பாசிஸ்டுகளை அடியாட்படையாக வைத்துக் கொண்டுள்ளது. அதனால், பாசிஸ்டுகளை தோற்கடிப்பது சோஷலிச புரட்சிக்கு முன் நிபந்தனையாக உள்ளது."  

முந்திய THKP-C இயக்கத்திற்கும், பிந்திய டெவ்ரிம்சி யொல் இயக்கத்திற்கும் இடையில் ஒரு பிரதானமான கொள்கை வேறுபாடு இருந்தது. முன்னையது ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்திருந்தது. பிந்தியது மக்கள் விழிப்புக் குழுக்கள் அமைத்து, மக்கள் போராட்டமாக மாற்ற விரும்பியது. முதலில் மக்கள் புரட்சிக் கமிட்டிகள் உருவாக்கி, பின்னர் தேவைப் பட்டால் அவற்றை ஆயுதபாணிகளாக்கலாம் என்றது. 

மக்கள் கமிட்டிகள், எதிர்கால சோஷலிச மாற்று சமூகத்திற்கான வித்துகள் என்று சொல்லப் பட்டது. மக்கள் தமது அரசியல் தீர்மானங்களை எடுப்பதற்கு பயிற்சிக் களமாக மக்கள் கமிட்டிகள் இருக்கும். குறிப்பாக, பத்சா நகரில், மக்கள் கமிட்டிகள் செயற்பட ஆரம்பித்தன. அங்கே பாசிஸ்டுகள் விரட்டப் பட்ட பின்னர், பெருமளவு மக்கள் ஆதரவு கிடைத்தது. 

1979 ஆம் ஆண்டு, பத்சா நகர சபையை நிர்வகித்த, சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மேயர் காலமானார். அதனால் அங்கே இடைத் தேர்தல் வந்தது. டெவ்ரிம்சி யொல் இடைத்தேர்தலில் பங்கெடுப்பதா, அல்லது பகிஷ்கரிப்பதா என்று விவாதம் நடந்தது. அரச அடக்குமுறைக்குள் சுதந்திரமான தேர்தல் நடக்க முடியாது என்ற காரணத்தைக் கூறி, கட்சித் தலைமை முடிவு செய்தது. இருப்பினும், பத்சா நகரில் கணிசமான அளவு மக்கள் ஆதரவு இருந்த படியால், டெவ்ரிம்சி யொல் தேர்தலில் போட்டியிட்டது. 

டெவ்ரிம்சி யொல் ஒரு அங்கீகரிக்கப் பட்ட கட்சியாக இருக்கவில்லை. அதனால், சென்மெஸ் ஒரு சுயேச்சை உறுப்பினராக நிறுத்தப் பட்டார். பிற கட்சிகளின் வேட்பாளர்கள் வழங்கிய உறுதிமொழிகளை விட வித்தியாசமாக, சென்மெஸ் நேரடி ஜனநாயகத்தை கொண்டு வரப் போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தார். 

நகர சபை நிர்வாகத்தில் ஊழல், அணைவு அரசியல், போன்ற தீமைகளை இல்லாதொழிப்பதற்கு மக்கள் கமிட்டிகள் அமைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தினார். 14-10-1979 அன்று நடந்த தேர்தலில், சென்மெஸ்  61சதவீத வாக்குகளைப் பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.  அவருடன் போட்டியிட்ட சமூக ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு 22 சதவீத ஓட்டுக்கள் விழுந்தன. 

உள்ளூராட்சி சபைக்கான இடைத் தேர்தல் முடிந்தவுடனே, 11 மக்கள் கமிட்டிகள் உருவாக்கப் பட்டன. அவற்றின் பொறுப்பாளர்கள் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப் பட்டனர். நூற்றுக் கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட கமிட்டிக் கூட்டங்கள், வெளிப்படையாக நடத்தப் பட்டன. 

மக்கள் கமிட்டிக் கூட்டங்களில் நடக்கும் விவாதங்கள், நகரின் பல பகுதிகளிலும் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகள் மூலம், மக்கள் அனைவருக்கும் கேட்கும் வசதி செய்யப் பட்டது. மக்களின் பல்வேறு பிரச்சினைகள், தேவைகளுக்காக, தனித் தனி கமிட்டிகள் நியமிக்கப் பட்டன.    

மக்களின் பிரதான பிரச்சினைகளான, பாதைகளை செப்பனிடுவது, கால்வாய் அமைத்தல், குடி நீர் மற்றும் மின்சார விநியோகம், போன்றவற்றை கவனிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டது. இதிலே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய விடயம் என்னவெனில், மக்கள் கமிட்டிகள் பரித்துரைக்கும் திட்டமொன்றை நிறைவேற்றுவதற்கு, "சட்ட பூர்வமான" நகர சபையின் அங்கீகாரம் தேவைப் பட்டது. 

அன்று நடைபெற்ற தேர்தல் மேயர் பதவிக்கானது. ஏற்கனவே பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் நகரசபை உறுப்பினர்களாக இருந்தனர். சமூக ஜனநாயகக் கட்சி பெருமளவு ஆசனங்களில் அமர்ந்திருந்தது. இருந்த போதிலும், மக்கள் கமிட்டிகள் பரிந்துரைத்த திட்டங்களுக்கு அந்தக் கட்சி உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கினார்கள். 

மேயர் சென்மெஸ், மாதத்திற்கு இரண்டு தடவைகள் மக்கள் கமிட்டிக்கு முன்னால் சமூகமளித்தார். நகர சபை நிர்வாகத்தில் நடக்கும் விடயங்கள் தொடர்பாக, கமிட்டியில் கேட்கப் படும் கேள்விகளுக்கு பதில் கூறும் பொறுப்பை ஏற்றிருந்தார். 

நகர சபையின் கீழ் வேலை செய்த அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பாக ஒரு பொது ஒப்பந்தம் போடப் பட்டது. புரட்சிகர தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (DISK) முன்மொழிந்த ஊழியர் சம்பளத் திட்டம், துருக்கி முழுவதற்கும் முன்னுதாரணமாக விளங்கியது. உதாரணத்திற்கு, அரசியல் ஈடுபாடு தொடர்பாக ஓர் அரச ஊழியர் கைது செய்யப் பட்டு சிறையிலடைக்கப் பட்டாலும், அவரது சம்பளம் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு வழங்கப் படும். அதற்குப் பிறகு, நான்கு வருடங்களுக்கு 25% கிடைத்துக் கொண்டிருக்கும். 

துருக்கியில் முன்னெப்போதும் கேள்விப் பட்டிராத நேரடி ஜனநாயகம், மக்களுக்கு புதுமையாக இருந்தது. உண்மையில், பத்சா நகரில் இரண்டு அதிகார மையங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. வழமையான அரச இயந்திரமான பொலிஸ், நீதிமன்றம் போன்றன அப்படியே இருந்தன. ஆனால், மக்கள் அவற்றின் உதவியை நாடுவது குறைந்து கொண்டே சென்றது. அதற்குப் பதிலாக, மக்கள் கமிட்டிகள் மக்களின் குறை, நிறைகளை கேட்டு நிவர்த்தி செய்தன. 

மக்கள் கமிட்டிகள் உள்ளூர் பொருளாதாரத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தன. முன்னர் தனியாருக்கு தாரை வார்க்கப் பட்டிருந்த நிறுவனங்களை, மீண்டும் அரசுடமையாக்கியது. உதாரணத்திற்கு, குடிநீர், தானிய விநியோகம், பொதுப் போக்குவரத்து, துறைமுக மேற்பார்வை போன்றவற்றை குறிப்பிடலாம். அதனால், நகர சபைக்கு நிறைய வருமானம் கிடைத்தது. 

நீண்ட காலமாக, சட்டவிரோதமாக நடந்து கொண்டிருந்த வர்த்தகம் தடை செய்யப் பட்டது. கந்துவட்டிக் காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட்டது. பத்சா நகரவாசிகளில் பெரும்பான்மையானோர் விவசாயிகள் என்பதால், வருடத்திற்கு ஒரு தடவை தான் பணத்தை கண்ணால் காண்பார்கள். அதாவது, அறுவடைக் காலத்தில் விளைச்சலை விற்றால் தான் பணம் கிடைக்கும். அதனால், இடைப்பட்ட காலத்தில் கந்துவட்டிக் காரர்களிடம் கடன் வாங்கி, அநியாய வட்டி கட்டிக் கொண்டிருந்தார்கள். விவசாயிகள் வாங்கிய கடனை மட்டுமே திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் கமிட்டிகள் உத்தரவு பிறப்பித்தன. 

புரட்சியின் இன்னொரு முக்கியமான சாதனையாக, தெருக்கள் அமைத்ததை குறிப்பிடலாம். பத்சா நகரில் பெரும்பாலான தெருக்கள் செப்பனிடப் படாமல் இருந்தன. மழைக் காலத்தில் சேறும், சகதியுமாக போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும். அதனால், அவற்றை தார் போட்டு நிரப்பும் பணிகள் ஆரம்பமாகின. தெருக்களை புனரமைப்பதற்கு, ஆயிரக் கணக்கான தொண்டர்கள் தாமாகவே முன்வந்து வேலை செய்தனர். 

துருக்கியின் பல பாகங்களில் இருந்தும், புரட்சியாளர்கள் திரண்டு வந்தார்கள். அயலில் இருந்த நகரங்களில் இருந்தும், வாகன, உபகரண உதவி கிடைத்தது. அதனால், தொடங்கப் பட்டு சில வாரங்களிலேயே அனைத்து தெருக்களும் செப்பனிட்டு முடிக்கப் பட்டன. 

1980 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், பத்சா நகரில் "மக்கள் பண்டிகை" அறிவிக்கப் பட்டது. நகர மத்தியில் மேடைகள் அமைக்கப் பட்டு, ஒரு வாரம் முழுவதும் கொண்டாட்டம் நடைபெற்றது. துருக்கி முழுவதிலும் இருந்து பல சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு உட்பட்ட வெகுஜன கலாச்சாரத்திற்கு மாற்றாக, இடதுசாரி கலாச்சார விழுமியங்களை வெற்றிகரமாக மேடையேற்றினார்கள். 

நிச்சயமாக, துருக்கி அரசாங்கம் பத்சா புரட்சியை கலக்கத்துடன் கவனித்துக் கொண்டிருந்தது. தலைநகர் அங்காராவில் இருந்து, வெறும் 500 கிலோ மீட்டர் தூரத்தில் பத்சா இருந்தது. 1978 ம் ஆண்டு. ஜோரும், மாராஸ், ஆகிய இடங்களில், சாம்பல் ஓநாய் பாசிஸ்டுகள், அலாவி சிறுபான்மையின மக்களை படுகொலை செய்திருந்தனர். அந்த இனப்படுகொலை துருக்கியை உலுக்கி இருந்தது.

பிரதமர் டெமிரேல், அந்தப் படுகொலைகளை நினைவுபடுத்தி, பாசிஸ்டுகளை தூண்டி விடும் வகையில் உரையாற்றினார்: "ஜோருமை மறந்து விடுங்கள்... பத்சாவை பாருங்கள்... இப்போதே நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கா விட்டால், எதிர்காலத்தில் நூறு பத்சாக்கள் உருவாகும்."

அரசு நிறுவனங்கள், பத்சா நகர சபை நிர்வாகத்தின் மேல் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தன. பெட்ரோல் போன்ற பொருட்களின் விநியோகம் தடுக்கப் பட்டது. ஆடிட்டர் பரிசோதகர்களை அனுப்பி, நகர சபை கணக்குகளை ஆராய்ந்தது.

இதற்கிடையே, முதலாளிய ஊடகங்கள் அவதூறுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டன. பத்சாவில் "ஒரு குட்டி மொஸ்கோ" உருவாகி விட்டது என்று பதறின. அது ஒரு தனியான குடியரசாக பிரிந்து சென்று விட்டதாகவும், பாஸ்போர்ட் இல்லாமல் யாரும் அங்கே செல்ல முடியாதென்றும், கட்டுக்கதைகளை பரப்பின. 

நகர சபை கட்டிடம், காவல்துறையினரால் அடிக்கடி காரணமின்றி சோதனையிடப் பட்டது. அங்கு வேலை செய்த ஊழியர்கள் துன்புறுத்தப் பட்டனர். பத்சா நகரவாசிகள், அருகில் உள்ள பெரிய நகரங்களுக்கு செல்லும் போதெல்லாம் தாக்கப் பட்டனர். அவர்கள் வைத்திருந்த பணம், பொருட்கள் வழிப்பறி செய்யப் பட்டன. பாசிஸ்டுகள் அவர்களைக் கண்டால் குண்டாந்தடிகளால் தாக்கினார்கள். 

பத்சா நகரம் அமைந்துள்ள, ஒர்டு மாகாணத்தின் ஆளுநராக, பாசிஸ MHP கட்சியை சேர்ந்த ஒருவர் நியமிக்கப் பட்டார். அவர் "பத்சாவை மீட்டெடுக்கப் போவதாக" சூளுரைத்தார். பாதுகாப்புப் படைகளையும், பாசிஸ குண்டர்களையும், பத்சாவை நோக்கி நகர்த்தினார். 

11-7-1980 அன்று, பத்சா மீதான இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகியது. அயல் நாட்டின் மீது படையெடுப்பது போன்று, பாதுகாப்புப் படைகள் கவச வாகனங்கள், தாங்கிகள் சகிதம் முன்னேறிச் சென்றன. கடலில் இரண்டு போர்க் கப்பல்கள் ரோந்து சுற்றின. இவை யாவும் அங்கே ஒரு யுத்தம் நடப்பது போன்ற பிரமையை உண்டாக்கின. 

இராணுவ நடவடிக்கையின் போது, சென்மெஸ் உட்பட, 600 பேரளவில் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப் பட்டனர். தப்பி ஓடக் கூடியவர்கள், காடுகளுக்குள்ளும், மலைகளிலும் மறைந்து கொண்டார்கள். பெரும் படையை எதிர்த்து நிற்பது தற்கொலைக்கொப்பானது என்பதால், யாரும் ஆயுதமேந்திப் போராடவில்லை. அவ்வாறு போராடி இருந்தாலும், ஆயுத வன்முறையை துருக்கி அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்று நினைத்தனர். 

கைது செய்யப் பட்டவர்கள், முகமூடி அணிந்த தலையாட்டிகளின் முன்னால் நிறுத்தப் பட்டனர். முன்னர் பத்சாவில் வாழ்ந்த, இடதுசாரிகளினால் விரட்டப்பட்ட பாசிஸ இளைஞர்களே, படையினருடன் கூட வந்து காட்டிக் கொடுத்தனர். இராணுவ நடவடிக்கையின் பின்னர், பாசிஸ்டுகள் பத்சா நகரில் சுதந்திரமாக தங்க முடிந்தது. பத்சா இராணுவ நடவடிக்கையானது, துருக்கியில் வரப் போகும் இராணுவ ஆட்சிக்கு ஒத்திகையாக அமைந்திருந்தது. 12-9-1980 அன்று, துருக்கியில் இராணுவ சதிப்புரட்சி நடந்தது. 

சென்மெஸ்ஸுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப் பட்டது. அரசியல் நிர்ணய சட்டத்தை மாற்றுவதற்கு முயற்சித்தமை ஒரு குற்றமாக தீர்ப்புக் கூரப் பட்டது. சிறையில் அடைக்கப் பட்டிருந்த சென்மெஸ், தனது 47 வது வயதில், 4-5-1985 அன்று மாரடைப்பினால் காலமானார். 

பத்சா புரட்சி பத்து மாதங்கள் நீடித்தது. அதற்கு காரணமான புரட்சியாளர்கள் கம்யூனிஸ்டுகள் அல்லர். மார்க்சிஸ்டுகள் ஆனால் லெனினிஸ்டுகள் அல்லர். இடதுசாரி சோஷலிஸ்டுகள் என்று கூறலாம். அவர்களால் பூரணமான சோஷலிச சமுதாயத்தை உருவாக்க முடியவில்லை. அரசு இயந்திரத்தின் மேல் கை வைக்கவில்லை. அரசு நிறுவனங்கள் வழமை போல இயங்கிக் கொண்டிருந்தன. தனியுடைமை, சொத்துரிமை ஆகியவற்றில் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை. மேலும் சில கலாச்சார மரபுகள், இடதுசாரி ஒழுக்கக் கோட்பாட்டின் பெயரில் நீடித்தன. 

பத்து மாத பத்சா புரட்சியானது, ஒரு ஜனநாயக மறுமலர்ச்சியை உண்டாக்கி விட்டிருந்தது. அடக்குமுறை இல்லாதிருந்தால், அது இன்னும் சிறப்பாக வளர்ந்திருக்கும். ஆயினும், கோட்பாடுகளில் காலம் கழிக்காமல், மக்கள் கமிட்டிகள் மூலம் மாற்று உலகை சிருஷ்டிக்கும் முயற்சியில் இறங்கி இருந்தது. மக்கள் சுதந்திரமாக வாழ்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தனர். 

(நன்றி: Doorbraak, oktober 2012, Mehmet Kirmaci எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு.)

No comments: