Sunday, November 03, 2013

வெளிநாடு செல்லும் தமிழ் தொழிலாளர்கள் வசதியாக வாழ்வது எப்படி?

மேலைத்தேய பணக்கார நாடொன்றில், கையில் காசில்லாமல் புதிதாக வரும் ஒருவர், உணவு விடுதியில் சுத்திகரிப்பு வேலை செய்து சம்பாதித்து, வசதியாக வாழ முடிகிறது. போதுமான பணம் சம்பாதித்து, ஒரு சில வருடங்களில், சொந்த வீடு, கார் என்று வாங்க முடிகின்றது. ஆனால், இலங்கையில், அல்லது இந்தியாவில், அதே வேலையை வாழ் நாள் முழுவதும் செய்தாலும், ஒரு சைக்கிள் கூட வாங்க முடியாமல் இருக்கிறார். அவர் தனது வீட்டு வாடகையை கூட, ஒழுங்காக கட்ட முடியாத நிலைமைக்கு என்ன காரணம்? 

இருவரும் ஒரே தொழிலைத் தானே செய்கின்றனர்? இருவரும் ஒரே உழைப்பைத் தானே செலுத்துகின்றனர்? ஒவ்வொரு நாட்டிலும், ஒரு தொழிலாளியின் ஒரு மணிநேர உழைப்புக்கு, நிர்ணயிக்கப் படும் விலை மாறுபடுகின்றது. அதனால் தான், தமது உழைப்புக்கு அதிக விலை கிடைக்கும் நாட்டை நோக்கி, பலர் புலம்பெயர்ந்து செல்கின்றனர். உலகப் பொருளாதாரத்தை ஒரே சர்வதேச சந்தை தீர்மானிக்கும் காலத்தில், தொழிலாளர்களின் வெளிநாடுகளை நோக்கிய இடப்பெயர்வும் தடுக்க முடியாதது.

பணக்கார நாடுகளில், தொழிலாளர்களுக்கு கொடுக்கும் கூலி அதிகம் என்பதால், பொருளின் உற்பத்திச் செலவும் அதிகமாகின்றது. அதனால், அந்தப் பொருளை, சந்தையில் அதிக விலைக்குத் தான் விற்க வேண்டும். அவற்றை நுகர்வதற்கு தகுதியான மக்களும் அந்த நாட்டில் இருக்க வேண்டியது அவசியம். தொழிலாளர்களும், இன்னொரு இடத்தில் நுகர்வோர் தான். அதனால், சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கும் தகுதியும், ஒரு தொழிலாளிக்கு இருக்க வேண்டும். அதற்காகத் தான், அதிக சம்பளம் கொடுக்கிறார்கள். 

மேலைத்தேய நாடுகளில், வேலை வாய்ப்பில்லாதவர்களை "உழைக்காத சோம்பேறிகளாக" கருதுவதில்லை. மாறாக, "வாயுள்ள ஜீவன்களாக" கருதப் படுகின்றனர். அதன் அர்த்தம், அவர்களும் நுகர்வோர் தான். ஆகவே, அரசு "சும்மா இருப்பவர்களுக்கு" உதவிப் பணம் கொடுத்து, அவர்களை நுகர வைக்கின்றது. மேற்கத்திய நாடுகளுக்கு வெறுங்கையுடன் வரும் அகதிகளுக்கும், அதனால் தான் பெருமளவு உதவிப் பணம் கிடைக்கின்றது. அவர்களுக்கு கிடைக்கும் தொகை மட்டுப் படுத்தப் பட்டது என்பதால், தமக்கு கிடைக்கும் பணத்தை அந்த நாட்டிலேயே செலவிட வேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழ்கின்றனர்.

"பணக்கார நாடுகளில்", பொருளின் விலைக்கும், தொழிலாளியின் கூலிக்கும் இடையில் சிறிதளவே வித்தியாசம் இருப்பதால், மேலதிக இலாபத்திற்காக சர்வதேச சந்தையை பிடித்து வைக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. மேலைத்தேய பன்னாட்டு நிறுவனங்கள், உலகம் முழுவதும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி, தமது பொருட்களை அதே விலைக்கு விற்கின்றன. "வெளிநாட்டுப் பொருள் என்றால் தரமானதாக இருக்கும்"  என்று நம்பும் மக்கள் வாழும் இலங்கை, இந்தியா போன்ற வறிய நாடுகளிலும், அந்தப் பொருட்கள், அதே விலைக்கு சந்தையில் கிடைக்கின்றது. வறிய நாடுகளில் வாழும் செல்வந்தர்கள், அவற்றை வாங்கி அனுபவிக்கிறார்கள். அதே நேரம், மேலைத்தேய நாடுகளில், தங்கி வேலை செய்யும் வாய்ப்புக் கிடைத்த, அடிமட்ட தொழிலாளர்களும், அதே விலையை கொடுத்து அனுபவிக்க முடிகின்றது. அதனால் தான், பணக்கார நாடுகளில் வாழும் தமிழர்கள், "தாம் வசதியானவர்கள் என்று நினைத்துக் கொள்கின்றனர்."

"உலகமயமாக்கல், சுதந்திர வர்த்தகம்" என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், வறிய நாடுகள் தமது பொருட்களை சர்வதேச சந்தைக்கு கொண்டு வர முடியாமல் திணறுகின்றன. இது வரை காலமும், சர்வதேச தரம் வாய்ந்த "பிராண்ட்" பொருள் எதையும் அவை சந்தைப் படுத்த முடியவில்லை. அதற்குக் காரணம், மூலதனம் குவித்து வைத்திருக்கும் நாடுகளின் அசுர பலம், சர்வதேச சந்தையை கட்டுப்படுத்துகின்றது. ஏதாவது ஒரு நாடு, தனது தரமான பொருளை, கஷ்டப் பட்டு சந்தைக்கு கொண்டு வந்தாலும், அது பின்னர் மேலைத்தேய மூலதனத்தால் வாங்கப் படுகின்றது. உதாரணத்திற்கு, மெக்சிகோவின் கொரோனா பியர் உலகம் முழுவதும் பிரபலமானதும், அமெரிக்க மூலதனத்தால் வாங்கப் பட்டது. "Hotmail மின்னஞ்சலை ஒரு தமிழன் கண்டுபிடித்தான்" என்று நாங்கள் பெருமையாக சொல்லிக் கொண்டாலும், அது கடைசியில் அமெரிக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வாங்கப் பட்டது. 

சந்தையில் நிலவும் "சுதந்திரமான போட்டி", செல்வந்த நாடுகளுக்கு சாதகமாகவும், வறிய நாடுகளுக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது. "சுதந்திரமான போட்டி" ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டால் மட்டுமே, வறிய நாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் ஊதியம் உயர வாய்ப்புண்டு. உதாரணத்திற்கு, சீனா தனது உள்நாட்டு பொருளாதாரத்தை காப்பதற்காக கட்டுப்பாடுகளை விதித்தது. அதனால், உலக வர்த்தக மையத்தினுள் அனுமதி மறுக்கப் பட்டது. சீனா சுதந்திரமான போட்டியை கட்டுப் படுத்தியதால், அந்நாட்டு தொழிலாளர்களின் ஊதியம் உயர்ந்தது. ஜப்பானியர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு, சீனர்களும் உலக நாடுகளை சுற்றிப் பார்க்குமளவிற்கு, அந்நாட்டில் ஊழியர்களின் சம்பள விகிதம் அதிகரித்துள்ளது. தற்போது பிரேசிலும் அந்தப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.  

ஒரு சிக்கலான பொருளாதார கட்டமைப்பினை புரிந்து கொள்ள முடியாத, மேலைத்தேய நாட்டு பாட்டாளி வர்க்கம், நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவாக, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் வாழ்வதாக, தன்னைத் தானே நினைத்துக் கொள்கின்றது. அந்த நாடுகளில் வாழும், தமிழ் தொழிலாளர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த தோற்றப்பாடு, ஐரோப்பிய சமூகத்திற்கு புதிய விடயமல்ல. 

"பாட்டாளி வர்க்கத்தில் மேட்டுக்குடியின் உருவாக்கம்" (labour aristocracy) பற்றி, கார்ல் மார்க்ஸ் 150 வருடங்களுக்கு முன்னரே எழுதி இருக்கிறார். தமது சமூக அந்தஸ்து குறித்து பெருமைப்படும், மேலைத்தேய தமிழ் பாட்டாளி வர்க்கமும், மார்க்ஸ் எழுதியவற்றை ஒரு தடவை வாசித்துப் பார்ப்பது நல்லது.

***********************************

எனது ஜெர்மன் நண்பர் ஒருவர், கணனியின் பாகங்களை பகுதி பகுதியாக பிரித்துப் போட்டு, பின்னர் பொருத்தி முழுமையான கணணியாக்குவது எப்படி என்று காட்டித் தந்தார். அவர் முன்னாள் கம்யூனிச கிழக்கு ஜெர்மனியை சேர்ந்தவர். பெர்லின் மதில் விழும் பொழுது, அவருக்கு பத்து வயதாக இருந்திருக்கலாம். அந்த நண்பர், தனது செயலை ஒரு உதாரணம் மூலம் புரிய வைத்தார். 

ஒரு முதலாளியவாதி, பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீனை சாப்பிடக் கொடுத்து விட்டு, பின்னர் அவன் கஷ்டப் பட்டு வேலை செய்து, மீன் வாங்கிச் சாப்பிட வேண்டுமென்று எதிர்பார்ப்பான். அதே நேரம், ஒரு பொதுவுடமைவாதி பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதுடன், அவனாகவே மீன் பிடித்து உண்பது எப்படி என்றும் காட்டிக் கொடுப்பான். மக்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்காமல், அறியாமையில் வைத்திருந்தால் தான், முதலாளி கோடி கோடியாக இலாபம் சம்பாதிக்க முடியும். 

"நமது தமிழ் மக்களுக்கு கம்யூனிசம் தேவையில்லை. இன்று யாருமே அதை பொருட் படுத்துவதில்லை. மக்கள் இடதுசாரிகளை வெறுக்கிறார்கள்..." என்றெல்லாம் மெத்தப் படித்த அறிவாளிகள் கூட உளறித் திரிகின்றார்கள். அவர்கள் மனதில் குடி கொண்டிருக்கும் அச்சம் தான், இந்த உளறலுக்கு காரணம். அவர்களிடம் மட்டுமே தேங்கிக் கிடக்கும் அறிவியல், அனைத்து மக்களையும் போய்ச் சேர்ந்து விட்டால், யார் அவர்களை மதிப்பார்கள்? அதற்குப் பின், கை நிறைய சம்பளம் வாங்கி, வாய் நிறைய உண்ண முடியுமா? 

எதற்காக, பெரும்பாலான நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள், கம்யூனிசத்தை வெறுக்கிறார்கள் என்பதற்கு, இதை விட வேறு உதாரணம் வேண்டுமா? ஐயோ பாவம். அவர்கள் தாங்கள் மட்டுமே உலகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

 *************************************

9 comments:

Kasthuri Rengan said...

வித்யாசமான தகவல்களை அருமையாக தரும் தங்கள் பணி வாழ்க...
நான் தொடர்ந்து உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன்... அல்டெர்நெட் மீடியா பணி வாழ்க...

ஒரு சிறு தகவல்... ஹாட்மெயில் ஷபீர் பாட்டியாவினுடையது அவரும் இந்தியரே... சிவா ஐயாத்துரை தமிழர் அவர் ஈமெயில் கண்டுபிடித்தவர். ஷபீர் அதை காசாக்கியவர்
நன்றி...

Kalaiyarasan said...

தகவலுக்கு நன்றி

Nellai Balaji said...

\\உலக வர்த்தக மையத்தினுள் அனுமதி மறுக்கப் பட்டது. சீனா சுதந்திரமான போட்டியை கட்டுப் படுத்தியதால், அந்நாட்டு தொழிலாளர்களின் ஊதியம் உயர்ந்தது\\

தோழரே...மேற்கண்ட வாக்கியங்கள், சீனாவில் நடக்கும், குறைந்த கூலி, அதிக வேலை என்ற கொடுமையை மறைக்கும்படி உள்ளனவே???

Nellai Balaji said...

\\ஒரு முதலாளியவாதி, பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீனை சாப்பிடக் கொடுத்து விட்டு, பின்னர் அவன் கஷ்டப் பட்டு வேலை செய்து, மீன் வாங்கிச் சாப்பிட வேண்டுமென்று எதிர்பார்ப்பான். அதே நேரம், ஒரு பொதுவுடமைவாதி பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதுடன், அவனாகவே மீன் பிடித்து உண்பது எப்படி என்றும் காட்டிக் கொடுப்பான்.\\\

இது அனைத்து பொதுவுடமைவாதிகளும், ஒரு தனிப்பட்ட முதலாளியை உருவாக்குகிறான் அல்லது அனைவரும் முதலாளிகள் என்று புரிந்து கொள்ளலாமா ??

Kalaiyarasan said...

//இது அனைத்து பொதுவுடமைவாதிகளும், ஒரு தனிப்பட்ட முதலாளியை உருவாக்குகிறான் அல்லது அனைவரும் முதலாளிகள் என்று புரிந்து கொள்ளலாமா ??//

இது ஒரு விதண்டாவாதம். இதிலே எந்த லாஜிக்கும் கிடையாது. உங்களுக்கு முதலாளி என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாது என்று நினைக்கிறேன். மூலதனத்தை திரட்டி வைத்து, முதல் போடுபவன் தான் முதலாளி. சொந்தமாக தொழில் நடத்துபவர்கள் முதலாளிகள் அல்லர். ஒரு சிறு துண்டு நிலத்தில் உழுது, பயிரிடும் விவசாயி முதலாளி அல்ல. ஒரு பெட்டிக் கடை வைத்திருக்கும் வணிகன் கூட முதலாளி அல்ல. அவர்களை முதலாளிகள் என்று அழைப்பது மக்களை ஏமாற்றும் செயல்.

Kalaiyarasan said...

//மேற்கண்ட வாக்கியங்கள், சீனாவில் நடக்கும், குறைந்த கூலி, அதிக வேலை என்ற கொடுமையை மறைக்கும்படி உள்ளனவே???//

நீங்கள் இப்போதும் இருபது வருடங்களுக்கு முந்திய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். உலகம் இன்று எவ்வளவோ மாறி விட்டது. சீனாவில் குறைந்த கூலி கொடுக்கிறார்கள் என்பதால் தான், அந்நிய நிறுவனங்கள் அங்கே முதலிட்டன. ஆனால், போட்டி காரணமாக தொழிலாளர்களின் ஊதியமும் உயரும் என்பது சந்தை பொருளாதார தத்துவம். இருபது வருடங்களுக்கு முன்பிருந்ததை விட, சீன தொழிலாளர்களின் ஊதியம் இன்று பல மடங்கு உயர்ந்துள்ளது.

மேலும் சீனாவில் இருந்த குறைந்த ஊதியம், அதிக வேலை என்ற நிலைமை, இன்றைக்கும் இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் சீனாவை விட மோசமாக உள்ளது. சீனாவில் தொழிலாளியின் சம்பளம் ஒரு டாலர் என்றால், இந்தியாவில் அரை டாலர். எதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவை விட்டு, சீனாவை தெரிவு செய்தன? நீங்கள் சொல்வது மாதிரி, குறைந்த கூலி கொடுத்து, அதிக வேலை வாங்க முடியும் என்றால், அவர்கள் எல்லோரும் இந்தியாவில் அல்லவா முதலிட்டிருப்பார்கள்? இந்திய அரசு சர்வதேச சந்தையை திருப்திப் படுத்தவில்லை என்பது மட்டும் அதற்கு காரணம் அல்ல. சீனாவில் உள்ள கட்டுமான வசதிகள் இந்தியாவில் இல்லை.

நீங்கள் இன்னொரு விடயத்தையும் மறந்து விட்டுப் பேசுகின்றீர்கள். சீனா, இந்தியாவில் குறைந்த கூலி கொடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் நுகர்வதற்கு தேவையான பொருட்களும் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய முதலாளிகள், அந்த வித்தியாசத்தை தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஏனென்றால், அவர்களது நாட்டில் தொழிலாளர்களின் கூலியும் அதிகம், பொருகளின் விலையும் அதிகம்.

Kalaiyarasan said...

இந்தியாவில் உள்ள Software, BPO கம்பனிகள் எல்லாம், இந்திய தொழிலாளர்களின் குறைந்த கூலி, அதிக வேலை என்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கின்றன. நீங்கள் குறிப்பிடும் "கொடுமை" சீனாவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் நடக்கிறது.

Nellai Balaji said...

\\ The report claims the base wage at Jabil is 1,500 RMB (£160) a month, half the average monthly wage in the city of Wuxi. Only by working 100 hours of overtime a month can employees secure an income that matches the average.

Because of the poor pay and 12-hour shift patterns "married workers have no choice but to leave their children in their rural homes with grandparents", the report states.\\
http://www.theguardian.com/technology/2013/sep/05/workers-rights-flouted-apple-iphone-plant

தோழரே...நான் இந்தியாவா அல்லது சீனாவா என்ற போட்டியில் இதை எழுதவில்லை...சீனா வில் அடிமட்ட தொழிலாளர்கள் இன்னும் நசுக்க படுகின்றனர் என்பது, இந்த ஒரு கட்டுரையில் இருந்தே நிறுவலாம்...
அடிமட்ட தொழிலாளர்களை பொருந்தவரை, இந்தியாவும், சீனாவும், வங்கதேசமும் ஒன்றுதான்...

\\சீனர்களும் உலக நாடுகளை சுற்றிப் பார்க்குமளவிற்கு, அந்நாட்டில் ஊழியர்களின் சம்பள விகிதம் அதிகரித்துள்ளது\\நீங்கள் கூறுவது போல், வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் அளவிற்க்கு வந்துள்ளதா என்பது சந்தேகமே...அமெரிக்காவில் நான் பார்தத வரையில், நான் உரையாடிய சீனா சுற்றுலா பயணிகளில் பெரும்பாலோனோர் மேல்தட்டு அல்லது பெரு நகரங்களில் இருந்து வந்தவர்கள்...மற்ற நாடுகளை பற்றி எனக்கு தெரிய வாய்ப்பில்லை...

மற்றபடி உங்கள் கட்டுரையின் மற்ற கருத்துக்களுடன் ஒத்து போகிறேன்...

Nellai Balaji said...

கணினி துறை மற்றும் அயல்பணியாக்க நண்பர்களை பற்றி நான் பேசுவதே இல்லை... நான் அந்த துறையில் பணியாற்றுவதால் அல்ல, இவர்களை (90 % )போன்ற ஒரு சமூக பொறுப்பற்ற ஒரு கூட்டத்தை நான் பணியாளர்களாக எண்ணுவதே இல்லை...ஒரு நவீன அடிமை கூட்டம் என்பதே என் எண்ணம்..