Thursday, January 10, 2013

இலங்கையில் இடதுசாரி அரசியல் பற்றிய தமிழ் வலதுசாரிகளின் புனைவுகள்

புனைவு 1:
இடதுசாரிகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாததால் தான், தமிழரசுக் கட்சி என்ற தமிழ் தேசியக் கட்சி தோற்றம் பெற்றது.

உண்மை நிலவரம் என்ன?
சிங்கள தேசியவாத சுதந்திரக் கட்சியின் தோற்றமும், தமிழ் தேசியவாத தமிழரசுக் கட்சியின் தோற்றமும், ஆச்சரியப்படத் தக்கவாறு நிறைய ஒற்றுமைகளை கொண்டுள்ளன. பிரிட்டிஷ் காலனியான இலங்கையின் ஆட்சி நிர்வாகம், சிங்கள-தமிழ் மேட்டுக்குடியினரின் கைகளில் ஒப்படைக்கப் பட்டிருந்தது. ஒரு பக்கம் ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள மேட்டுக்குடியினரையும், மறுபக்கம் தமிழ்க் காங்கிரஸ் தமிழ் மேட்டுக்குடியினரையும் பிரதிநிதித்துவப் படுத்தி வந்தன. இதனால் பெரும்பான்மை சிங்கள-தமிழ் உழைக்கும் மக்கள், தேர்தலில் இடதுசாரி கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டு வந்தனர். பாராளுமன்ற தேர்தல்களில், கம்யூனிஸ்ட் அல்லது சோஷலிச கட்சிகள் மூன்றாமிடத்தை பிடித்து வந்தன. 

இலங்கையில் மேல்தட்டு வர்க்க அரசியல் தொடர்வதால் ஏற்படக் கூடிய விளைவுகளை, சில தலைவர்கள் உணர்ந்து கொள்ள ஆரம்பித்தனர். பண்டாரநாயக்க, சுதந்திரக் கட்சி என்ற பெயரில் பிரிந்து சென்று, சிங்கள தேசியவாத அரசியலை முன்னெடுத்தார். சிங்கள உயர்சாதியினரான கொவிகமவினர் மட்டுமே அரசியல் அதிகாரத்தை வைத்திருந்த நிலை மாறி, அனைத்து சாதிகளையும் சிங்கள தேசியவாதம் ஒன்று சேர்த்தது. கண்டிய சிங்களவர்களுக்கும், கரையோர சிங்களவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் மறைந்தது. யாழ் குடாநாட்டில், உயர்சாதி வெள்ளாளர்களின் கட்சியாக கருதப்பட்ட தமிழ் காங்கிரஸ், தாழ்த்தப்பட்ட சாதி மக்களை உதாசீனப் படுத்தி வந்தது. தமது அபிலாஷைகளை பிரதிபலிக்காத காரணத்தால், தாழ்த்தப்பட்ட சாதியினர் யாரும் தமிழ்க் காங்கிரசுக்கு ஓட்டுப் போடுவதில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. அவர்கள் மத்தியில் இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு வளர்ந்து வந்தது. 

SJV செல்வநாயகம் தலைமையில், தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்றவர்கள், தமிழரசுக் கட்சியை ஸ்தாபித்தார்கள். தமிழ் இன உணர்வு, தமிழ் மொழி உரிமை போன்றவற்றிற்கு பாடுபடுவதாக பிரச்சாரம் செய்து வந்தனர். இதன் விளைவாக, அனைத்து சாதிகளையும் தமிழர் என்ற பெயரில் ஒன்றிணைக்க முடிந்தது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்றவற்றுக்கு இடையிலான பிரதேச வேறுபாடுகளும் மறைந்தன. சுதந்திரக் கட்சியும், தமிழரசுக் கட்சியும் தமது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டன. இலங்கையில் அதற்குப் பிறகு நடந்த தேர்தல்களில், எந்தவொரு இடதுசாரிக் கட்சியும் பெருமளவு வாக்குகளைப் பெற முடியவில்லை. இலங்கையில், கம்யூனிஸ்டுகள் பாராளுமன்ற தேர்தல் மூலம் ஆட்சியை கைப்பற்றி விடுவார்களோ, என்று பயந்த காலம் மலையேறி விட்டது. இன்றைய சிங்கள-தமிழ் இளைய தலைமுறையினர், "கம்யூனிசம் என்றால் கிலோ என்ன விலை?" என்று கேட்குமளவுக்கு நிலைமை மாறி விட்டது. இலங்கையில் ஏற்படவிருந்த "சிவப்பு அபாயத்தை" அடியோடு ஒழித்துக் கட்டியதற்காக, சுதந்திரக் கட்சிக்கும், தமிழரசுக் கட்சிக்கும், முதலாளித்துவ வர்க்கம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

******************

புனைவு 2:
யதார்த்தத்தில் இருந்து விலகிய கண்ணோட்டத்தினால், பரந்துபட்ட தமிழ் மக்களிடமிருந்து "இடதுசாரிகள் " எனப்பட்டோர் அந்நியமாகி ஏறக்குறைய அழிந்துவிட்டனர்.

உண்மை நிலவரம் என்ன?
கடந்த முப்பது வருடங்களாக இலங்கையில் நடந்த கொடிய யுத்தம், சர்வாதிகார அடக்குமுறை, நீதிக்கு புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள், மனிதப் பேரவலங்கள், இவை எல்லாவற்றையும் மூடி மறைத்து விட்டு, எப்படி இவ்வாறு பேச முடிகின்றது?

*****************

புனைவு 3:
இலங்கையில் கம்யூனிசம், கம்யூனிஸ்டுகளாலேயே அழிக்கப்பட்டது. அதற்கு, அன்று கம்யூனிஸ்டுகள் என்று மக்கள் மத்தியில் தமது பெயரை நிலைநாட்டியோரின் புரள்வுகளே காரணம். பெரும்பாலான மக்கள் இவர்களையே கம்யூனிஸ்டுகள் என்று நம்பினார்கள். எனவே மக்கள் இவர்களின் குத்துக்கரணங்களை, கம்யூனிஸ்டுகளின் குத்துகரணம் என்றே விளங்கி கொண்டனர். சிறிமா ஜேவிபியினரை வேட்டையாடி கொண்டிருந்தபோது இந்த போலி கம்யூனிஸ்டுகள் சிறிமாவின் அடிவருடிகிடந்தன.


உண்மை நிலவரம் என்ன?
மார்க்ஸ், லெனின் படங்களை வைத்திருப்பதாலேயே, அல்லது பொதுவுடைமை என்று பெயர் வைத்திருப்பதால், ஒரு கட்சி இடதுசாரிக் கட்சியாக மாறி விடுவதில்லை. அதே போல தமிழீழத்திற்காக போராடுவதாக சொல்வதாலேயே, ஒரு கட்சி தமிழ் தேசியக் கட்சியாகி விடாது. சுய விமர்சனங்களுக்கூடாக அந்த இலக்கை அடைவதற்கு, கட்சிக்குள்ளே போராட வேண்டும். போலிகளை மட்டுமே எதற்காக அடிக்கடி உதாரணம் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? டக்லஸ், கருணா, பிள்ளையான், போன்ற எத்தனையோ முன்னாள் தமிழ் தேசிய விடுதலைப் போராளிகள், இன்று சிங்கள அரசின் அடிமைகளாக இருப்பதை எடுத்துக் காட்டி, தமிழ் தேசியவாதிகளே இப்படித் தான் என்று பேச முடியுமா? அவ்வாறு சிந்திப்பதே அபத்தமாக தெரிகின்றதல்லவா? நடப்பில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும், ஆயுதபாணி இயக்கங்களும், மக்களிடம் இருந்து அந்நியப் பட்டதால் தான், இன்று மக்கள் யாரையுமே நம்புவதில்லை.

முன்பு தமிழர் விடுதலைக் கூட்டணி, இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, போன்ற போலி தமிழ்தேசியவாத கட்சிகளின் குத்துக் கரணங்கள் எல்லாம் தமிழ் மக்கள் நன்கு அறிந்தவை தான். புலிகளை கூட எல்லா தமிழரும் ஆதரிக்கவில்லை. போர் நடந்த காலங்களிலும், போர் முடிந்த பின்னரும் புலிகளின் குறைகளை எடுத்துக் காட்டி பேசும் தமிழ் மக்கள் நிறையப்பேரை  யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் காணலாம். தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் நிறைய தவறுகள் விட்டுள்ளமை உண்மை தான். ஆனால், அதைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டு, தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சினையை மழுங்கடிக்கும், அல்லது புறக்கணிக்கும்  செயலை தான் நான் எதிர்க்கிறேன்.  அரசியல் தலைவர்களின்/கட்சிகளின் பிழையான அரசியலை விமர்சிக்கும் பூரண சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. அதனை யாரும்  மறுக்கவில்லை. ஆனால் அதை மட்டுமே காட்டி, மக்களின் பிரச்சினையை மூடி மறைக்கும் செயல் அயோக்கியத்தனமானது.  ஸ்ரீலங்கா அரசு செய்யும் அதே அயோக்கியத்தனத்தை, இவர்கள்  கம்யூனிஸ்டுகள் விஷயத்தில் செய்கிறார்கள். நான் தமிழ் மக்களுக்கு தேவையான கம்யூனிசத்தை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால், முதலாளித்துவ ஆதரவாளர்கள்  "அந்த இடதுசாரி தலைவர், அல்லது அந்த கட்சி, அப்படியான தவறு செய்தார்கள்" என்று, கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி ஒரே பல்லவியை திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருக்கிறார்கள்.  "புலிகள் என்ன பிழை விட்டார்கள்? இடதுசாரி கட்சிகள் என்ன பிழை விட்டார்கள்?" என்பதைப் பற்றி எல்லாம், இன்றுள்ள  தமிழ் மக்களுக்கு கவலை இல்லை. தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகள்  வேறு. அவர்களது கவலைகள் வேறு.  இந்த வித்தியாசத்தை நாங்கள்  முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

*******************

புனைவு 4:
"டட்லிகே படே மசால வடே!" ( டட்லியின் வயிற்றில் மசால வடை ) என்று "இடதுசாரிகள்" "முற்போக்கு!" முழக்கமிட்டது 1966 இல் ; இனவாத மதவாத அரசியல் அமைப்பைக் கொல்வின் ஆர். டி.சில்வா என்ற "இடதுசாரி" உருவாக்கியது 1972 இல் ஆகும். "டட்லி வயிற்றில் மசாலா வடை என்று 1956லும், இனவாத அரசியலமைப்பை 1970லும் வரைந்தபோதே இலங்கையில் செயற்படு கம்யூனிசம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. தமிழரின் சுய நிர்ணய உரிமைக்கான, ஈழ விடுதலைப் போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் புறக்கணித்தார்கள்.


உண்மை நிலவரம் என்ன?
பாட்டி வடை சுட்ட கதை போல, "டட்லி மசாலா வடை" கதை ஒன்று, தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. இலங்கையில் சிங்களவர்-தமிழர் முரண்பாடு தீவிரமடைந்த காலத்தில், புத்திஜீவிகளும், இடதுசாரிகளும் இன அடிப்படையில் பிரிந்து சென்றார்கள். ஒரு பக்கம், சிங்கள இடதுசாரிகள் சிங்கள பேரினவாத அரசுக்கு ஆதரவாக நடந்து கொண்டார்கள். மறுபக்கம் தமிழ் இடதுசாரிகள் தமிழ் குறுந் தேசியவாத இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்கள். அறுபதுகளில், "டட்லியின் வயிற்றில் மசாலா வடை" என்று சிங்கள இனவாதம் பேசிய LSSP என்ற ட்ராஸ்கியவாத கட்சியில் இருந்து, முக்கிய தமிழ் அரசியல்வாதியான  ஆனந்தசங்கரி பிரிந்து சென்று, தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொண்டதை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

இலங்கையின் போலி இடதுசாரிக் கட்சிகள், அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்ததையும், சிலநேரம் போட்டி போட்டுக் கொண்டு சிங்கள இனவாதம் பேசியதையும் இப்போது மறுபடியும் நினைவுபடுத்த வேண்டிய அவசியம் என்ன? "டட்லி மசாலா வடை கதையை திரும்பத் திரும்ப இரைமீட்கும் தமிழ் முதலாளித்துவ ஆதரவாளர்கள்,  "இலங்கையில் கம்யூனிசம் என்பது ஒரு சிங்கள இனவாத பூச்சாண்டி" என்று, அப்பாவி தமிழ் மக்களை பயமுறுத்தி வருகின்றனர். மேற்கத்திய நாடுகளில், "ஸ்டாலின்-ஹிட்லர் ஒப்பந்தத்தை" சுட்டிக் காட்டி, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யப் பட்டது. மேற்கத்திய எஜமானர்களிடம் அரசியல் பாடம் பயின்ற தமிழ் முதலாளித்துவவாதிகள், அதே மாதிரியான பிரச்சாரம் செய்வது வியப்புக்குரியதல்ல. அவர்கள் தமிழ் தேசிய முகமூடி அணிந்து கொண்டே, ஈழ தேசிய விடுதலைப் போரில் கம்யூனிஸ்டுகள் எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை என்று ஒரு பொய்யை, திரும்பத் திரும்ப பரப்புரை செய்து வருகின்றனர். 

எப்போதும் வெற்றி பெற்றவர்களே வரலாற்றை எழுதுவது வழக்கம் என்பதால், இந்த வரலாற்று மோசடியும் மக்களிடம் எடுபடுகின்றது. ஈழ விடுதலைப் போரின் தொடக்க காலங்களில், தமிழ் தேசியமும், மார்க்சியமும் கலந்த ஒரு அரசியல் பாதை உருவாகி இருந்தது. EROS, EPRLF, PLOTE ஆகிய இயக்கங்கள், தாம் மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தை பின்பற்றுவதாக பகிரங்கமாக அறிவித்துக் கொண்டன. ஈழத்திற்கான ஆயுதப் போராட்டமானது, சம காலத்தில் ஒரு சோஷலிசப் புரட்சியாக அமையும் என்று சொல்லித் தான், தமிழ் மக்களை அணிதிரட்டினார்கள். அன்றைய நிலமையில், தமிழ் மக்களின் மொத்த சனத்தொகையில் அரைவாசி, அல்லது அதற்கும் சற்று அதிகமான மக்கள், மேற்குறிப்பிட்ட இடதுசாரி இயக்கங்களின் உறுப்பினர்களாக, ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். கணிசமான அளவு மலையகத் தமிழரும் சேர்ந்து இருந்தமை குறிப்பிடத் தக்கது. மேலும், விடுதலைப் புலிகளின் ஆலோசகர்களும் இடதுசாரிகளாக இருந்ததால், அந்த இயக்கத்தின் தொடக்க கால பிரசுரங்களில் தாம் சோஷலிச தமிழீழத்திற்காக போராடுவதாக அறிவித்திருந்தனர். 

ஈழ விடுதலைப் போரில் இடதுசாரிகளின் பலம் அதிகமாக இருந்ததைக் கண்ட இந்தியா, RAW மூலம் பல்வேறு சதிகளை செய்து, வலதுசாரி சக்திகளை ஊக்குவித்தது. அதனால், ஒரு தலைமுறை மார்க்சியம் பற்றி அறிந்து கொள்ளாமல் வளர்ந்துள்ளது. இதே மாதிரியான தலைமுறை இடைவெளி, நாளைக்கு புலிகளின் விஷயத்திலும் நடக்கலாம். ஒரு பக்கத்தில், மனித உரிமை மீறல்கள், படுகொலைகளை செய்ததாக புலிகள் மீது பல பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டாலும், மறு பக்கத்தில் அவர்களை ஆதரிக்கும் ஒரு பிரிவினர் இன்றைக்கும் இருக்கின்றனர். "புலிகளின் தவறுகளுடன், அவர்களை ஏற்றுக் கொள்கிறீர்களா?" என்று தமிழ் மக்களிடம் கருத்துக் கேட்கும் வாக்கெடுப்பு நடத்திப் பார்க்குமாறு சவால் விடுகின்றனர். அதே மாதிரியான தமிழ் மக்களின் கருத்தை அறியும் வாக்கெடுப்பு, கம்யூனிஸ்டுகள் விஷயத்திலும் நடத்தலாம் அல்லவா? ஈழத் தமிழ் மக்களுக்கு "முதலாளித்துவ தமிழீழம் வேண்டுமா?" அல்லது "சோஷலிச தமிழீழம் வேண்டுமா?" என்று, ஐ.நா. தலைமையில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்திப் பார்ப்போமா?

(பிற்குறிப்பு: இந்தக் குறிப்புகள், முகநூலில் நடந்த விவாதங்களின் போது எழுதப் பட்டவை ஆகும்)

1 comment:

indrayavanam.blogspot.com said...

இலங்கையின் இடதுசாரி அரசியல் பற்றி புதிய தகவலுக்கு நன்றி