Wednesday, June 06, 2012

லெனினிச பார்வையில், ஈழத்திற்கான சுயநிர்ணய உரிமை

இடதுசாரிகளை, தேசியவாதிகளாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள சில 'முற்போக்கு தமிழ்த் தேசியவாதிகள்', இரண்டு நாடுகளின் உதாரணங்களை அடிக்கடி எடுத்துக் காட்டுவார்கள். லெனின் நோர்வேயின் சுதந்திரத்தை ஆதரித்ததையும், கார்ல் மார்க்ஸ் அயர்லாந்தின் சுதந்திரத்தை ஆதரித்ததையும் சுட்டிக்காட்டி மடக்கப் பார்ப்பார்கள். ஆகவே, இவ்விரு நாடுகளின் சுயநிர்ணய உரிமை பற்றிய மார்க்சிய- லெனினிசப் பார்வை அவசியமாகின்றது.


லெனின், மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளை எடுத்துக் காட்டி தத்துவார்த்த விளக்கம் கொடுப்பதற்கு முன்னர், அவர்கள் வாழ்ந்த காலத்திய பூகோள அரசியல் நிலவரத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதே நேரம், ஒரு தேசியத்தின் சுதந்திர உரிமையை அங்கீகரித்த லெனினும், மார்க்சும், தாம் சார்ந்த பிற தேசியங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளாமல், அல்லது புறக்கணித்த முரண்பாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது? அயர்லாந்து, நோர்வேயின் சுயநிர்ணய உரிமையையும், அவர்கள் எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரித்தார்களா? இவற்றை ஆராயாமல், 'லெனின் நோர்வீஜிய தேசியத்தையும், மார்க்ஸ் ஐரிஷ் தேசியத்தையும் ஆதரித்தார்கள், ஆகவே அனைத்து இடதுசாரிகளும் தேசியவாதத்தை ஆதரிக்க வேண்டும்,' என்று வாதிடமுடியாது.


"நோர்வேக்கும், சுவீடனுக்கும் இடையிலான பொருளாதார, மொழியியல் பிணைப்புகள், ரஷ்ய, ஸ்லாவிய தேசங்களைப் போல நெருக்கமானது. ஆனால், நோர்வேக்கும், சுவீடனுக்கும் இடையிலான ஒன்றியம், (நோர்வேயின்) விருப்பத்துடன் எடுக்கப்பட்ட முடிவல்ல.... நெப்போலியனின் யுத்த காலத்தில், நோர்வே மக்களின் விருப்பத்திற்கு மாறாக, மன்னர்களால் நோர்வே சுவீடனுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. நோர்வேயை பணிய வைப்பதற்காக, சுவீடன் படையனுப்ப வேண்டியிருந்தது." - லெனின் (தேசங்களின் சுய நிர்ணய உரிமை தொடர்பாக)


போலந்து மார்க்சியவாதியும், லெனினுடன் கருத்து முரண்பாடு கொண்டவருமான ரோசா லக்சம்பேர்க்கின் கட்டுரை ஒன்றுக்கு பதிலளிக்கும் முகமாக, லெனின் அந்த பத்தியை எழுதினார். இதிலே லெனின், நோர்வேயின் சுயநிர்ணய உரிமையை, அந்தக் காலத்திய ஐரோப்பிய சரித்திரப் பின்னணியுடன் விளக்குவதை கவனிக்க வேண்டும். சுமார் நானூறு வருடங்கள், நோர்வே டென்மார்க் அரச பரம்பரையினரால் ஆளப்பட்டு வந்தது. நோர்வே மக்கள் பேசிய "பழைய நோர்வீஜிய" மொழியின் மேல், டேனிஷ் மொழி ஆதிக்கம் செலுத்தியது. அதனை சிலர் "டேனிஷ் ஏகாதிபத்தியம்" என்று அழைக்கின்றனர்.

இன்றைக்கும், டேனிஷ் மொழி, சில திருத்தங்களுடன் நோர்வேயின் உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. உண்மையில், டென்மார்க்கின் கலாச்சார ஆதிக்கத்திற்கு பழக்கப் பட்ட நோர்வீஜியர்கள், சுவீடனின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரிவினைக்குப் பின்னரும், டென்மார்க்கின் அரச பரம்பரையை சேர்ந்த ஒருவரைத் தான், நோர்வேயின் மன்னனாக முடி சூட்டினார்கள். நோர்வீஜிய மத்தியதர வர்க்கத்திற்கும், டேனிஷ் மத்தியதர வர்க்கத்திற்கும் இடையிலான நெருக்கம், சுவீடிஷ் மத்தியதர வர்க்கத்துடன் இருக்கவில்லை. இத்தகைய முரண்பாடுகளையும் கவனத்தில் எடுப்பது அவசியம்.

பிரெஞ்சுப் புரட்சியும், அதைத் தொடர்ந்த நெப்போலியனின் ஐரோப்பிய ஆக்கிரமிப்புப் போர்களும், ஐரோப்பியக் கண்டத்தின் அரசியல் வரைபடத்தை அடியோடு மாற்றியது. டென்மார்க்-நோர்வே அணி, பிரான்சின் பக்கம் நின்றதால், நெப்போலியனின் தோல்வி, அவர்களையும் பாதித்தது. பிரிட்டன், ரஷ்யா, சுவீடன் போன்ற போரில் வெற்றி பெற்ற நாடுகள், தாம் விரும்பிய படி, தேசங்களை மறுசீரமைத்தன. அதன்படி, டென்மார்க், நோர்வேயை சுவீடனுக்கு தாரை வார்க்க வேண்டியேற்பட்டது.

ஸ்கண்டிநேவிய நாடுகளில், மிகவும் பின்தங்கிய வறிய நாடான நோர்வேக்கு, வேறு தெரிவு ஏதும் இருக்கவில்லை. ஒன்று, சுவீடனின் ஒரு பகுதியாக மாறுவது, அல்லது, டென்மார்க்குடன் சேர்ந்து தண்டப்பணம் செலுத்துவது. மேலும், நோர்வீஜியர்கள், சுவீடனிடம் இருந்து விடுதலை அடைவதற்கு முன்னரே, தமக்கென அரசமைப்புச் சட்டம் ஒன்றை இயற்றி இருந்தனர். இதற்கென நாடு முழுவதிலும் இருந்து, நிலப்பிரபுக்களினதும், பூர்ஷுவாக்களினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டிய லெனின், சுதந்திரத்தின் பின்னர் நோர்வே குடியரசாக மாறும் என்று எதிர்பார்த்தார். ஆனால், நோர்வீஜியர்கள் முடியாட்சிக்கு உட்பட்ட பாராளுமன்ற முறையை தெரிந்தெடுத்தனர். 1917 , போல்ஷெவிக் புரட்சி நடப்பதற்கு முன்னரே, லெனின் நோர்வேயின் சுதந்திரத்தை அங்கீகரித்திருந்தார். அதே போன்று, புரட்சியின் பின்னர், ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவிருந்த பின்லாந்திற்கு சுதந்திரம் வழங்கினார். பிற்காலத்தில், இவ்விரண்டு நாடுகளும், அமெரிக்க சார்பு அணியில் சேர்ந்தமை குறிப்பிடத் தக்கது.

லெனின் எதிர்பார்த்த, பாட்டாளி வர்க்கப் புரட்சியை ஊக்குவிக்கும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, நடைமுறையில் பலிக்கவில்லை. அது லெனின் விட்ட தவறா? அல்லது நோர்வே, பின்லாந்து நாடுகளின் பாட்டாளி மக்கள் விட்ட தவறா? இதற்கான விடை, தத்துவார்த்த நடைமுறைகளை மேவும், பூகோள அரசியல் சதுரங்கம் விளையாட்டினுள் மறைந்திருக்கின்றது. அதனை, லெனினோ அல்லது கார்ல் மார்க்சோ எழுதியிருக்கப் போவதில்லை. ஏனெனில், இவை எல்லாம் சராசரி அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுகள். அவற்றை காலத்தால் அழியாத புரட்சிகர சித்தாந்தமாக குறிப்பிட முடியாது.

முதலாம் உலகப்போரின் முடிவில், பெர்லின் நகரில் ஜெர்மன் சோவியத் அரசமைத்த புரட்சியாளர்களுக்கு உதவும் நோக்குடன், லெனின் செம்படைகளை அனுப்பி வைத்தார். ஜெர்மனி செல்வதற்கு முன்னர், இடையில் இருந்த போலந்தில் ஒரு பாட்டாளி வர்க்க அரசை நிறுவ வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், போலந்து தேசியவாதிகளின் கடும் எதிர்ப்பினால், லெனினின் நோக்கம் நிறைவேறவில்லை.

தேசியவாதிகளின் வலதுசாரி சார்புத் தன்மையும், வர்க்க விரோத மனப்பான்மையும், பாட்டாளி வர்க்க புரட்சிக்கு தடைக் கல்லாக இருக்கும் என்பதை, லெனின் மிகத் தாமதமாகத் தான் உணர்ந்து கொண்டார். அல்லா விட்டால், தேசியங்கள் குறித்த கோட்பாட்டை எழுதும் பொறுப்பை ஸ்டாலினிடம் ஒப்படைத்திருப்பாரா? ஸ்டாலின் தனது சொந்த நாடான ஜோர்ஜியாவில், வலதுசாரி ஜோர்ஜிய தேசியவாதிகளை போரிட்டு அடக்க வேண்டியேற்பட்டது. ஒரு வருட காலமே பூரண சுதந்திரத்தை அனுபவித்த ஜோர்ஜியா, சோவியத் யூனியனின் குடியரசானது.

பின்லாந்து போன்று, ஜோர்ஜியாவையும் வலதுசாரித் தேசியவாதிகளின் போக்கில் விட்டிருந்தால், அங்கே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் படைகளைக் குவித்திருக்கும். ஒரு தேசியத்தின் (உதாரணம்: பின்லாந்து) பூரண சுதந்திரத்தை ஏற்றுக் கொண்டதற்காக இடதுசாரிகளைப் புகழ்வதும், இன்னொரு தேசியத்தின் சுதந்திரத்தை (உதாரணம்: ஜோர்ஜியா) மட்டுப் படுத்தியதற்காக இடதுசாரிகளை இகழ்வதும் வாடிக்கையாகி விட்டது. ஒரு தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் நோக்கம், அதனை பாட்டாளி வர்க்க நலன் சார்ந்த அரசாக்குவதாகும். பின்லாந்தும், நோர்வேயும் அமெரிக்க சார்பு அணியில் இருந்தாலும், சோவியத் யூனியனுடன் சிறந்த நட்புறவைப் பேணி வந்துள்ளன.

கம்யூனிஸ்டுகளின் தேசிய சுயநிர்ணயக் கொள்கை, ஒரு குறிப்பிட்ட தேசியத்தின் மொழிக்கு, கலாச்சாரத்திற்கு எதிரானதல்ல. மாறாக, பெரும்பான்மை இனத்தின் பேரினவாத வெறி அடக்கப் பட்டு, சிறுபான்மை இனங்களின் கலாச்சார சுதந்திரத்தை உறுதிப் படுத்தியதே வரலாறு. சோவியத் யூனியனில் ரஷ்ய பேரினவாதிகள் அடக்கி வைக்கப் பட்டனர். யூகோஸ்லேவியாவில், செர்பிய பேரினவாதிகள் வாலாட்ட முடியவில்லை. சோவியத் யூனியனில் ஜோர்ஜிய சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஸ்டாலினும், யூகோஸ்லேவியாவில் குரோவாசிய சிறுபான்மையினத்தை சேர்ந்த டிட்டோவும் தலைமைப் பதவிக்கு வர முடிந்தது. அது மட்டுமல்ல, அவர்கள் காலத்தில் தான் சுயநிர்ணய உரிமை கோட்பாடு நடைமுறைப் படுத்தப் பட்டது.

சோவியத் யூனியனில் ரஷ்ய மொழி பொது மொழியாக இருந்தது. யூகோஸ்லேவியாவில் செர்பிய மொழி பொது மொழியாக இருந்தது. ஆனால், அதற்கு காரணம் பேரினவாத அடக்குமுறை அல்ல. நாம் எவ்வாறு ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அது போன்று பல்வேறு இனங்கள் தொடர்பாடக் கூடிய பொது மொழி ஒன்றின் தேவை காரணமாக இருந்தது. சோவியத் யூனியனிலும், யூகோஸ்லேவியாவிலும் சிறுபான்மை மொழி பேசும் இனங்களுக்கு வழங்கப் பட்ட சுதந்திரம், இன்று வரை அவர்களின் மொழியை, கலாச்சாரத்தை அழிய விடாமல் காப்பாற்ற உதவியிருக்கிறது. முதலாளித்துவம் கோலோச்சிய மேற்கத்திய நாடுகளில் நிலைமை எப்படி இருந்தது?

அயர்லாந்து மக்கள் தமது மொழியை மறந்து விட்டார்கள். அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் ஆங்கில மொழியை தாய்மொழியாக பேசி வருகின்றனர். நோர்வேயிலும் அது தான் நிலைமை. பழைய நோர்வீஜிய மொழி, தொலை தூரத்தில் தனித்திருக்கும் தீவான ஐஸ்லாந்தில் மட்டுமே, இன்று வரை பேசப் பட்டு வருகின்றது. இன்று டென்மார்க்கினால் ஆளப்படும் பேரோ தீவு மக்கள், டேனிஷ் மொழி ஆதிக்கத்திற்கு எதிராக, பண்டைய நோர்வீஜிய மொழியை காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

பழைய நோர்வீஜிய மொழியை பேசத் தெரிந்தவர்கள் யாரும், இன்று நோர்வேயில் இல்லை. டேனிஷ் மொழி மட்டுமே பேசத் தெரிந்த தற்கால நோர்வீஜியர்கள், தமக்கென தனித்துவமான மொழியை உருவாக்கிக் கொண்ட சுவீடிஷ்காரரைப் போன்று வர விரும்பியதில் என்ன தவறு? லெனினின் மனதில் அத்தகைய எதிர்பார்ப்பு இருந்ததை, ரோசா லக்ஸம்பேர்க்கிற்கு அளித்த விளக்கத்தில் பார்க்க முடிகின்றது. ரஷ்ய, ஸ்லாவிய மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமையை, சுவீடிஷ், நோர்வீஜிய மொழிகளுடன் லெனின் ஒப்பிடுவதைக் கவனிக்கவும். தமிழும், மலையாளமும் போல, சுவீடிஷ், நோர்வீஜிய மொழிகள் ஒரே வேர்களைக் கொண்டுள்ளன. லெனினின் எதிர்பார்ப்பு பிழைக்கவில்லை. சுவீடனிடம் இருந்து விடுதலை பெற்ற நோர்வே, தனித்துவமான கலாச்சாரத்தை உருவாக்கிக் கொள்வதில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது.


"நோர்வீஜிய, சுவீடிஷ் உழைக்கும் வர்க்க மக்களுக்கு இடையிலான ஒற்றுமை காரணமாக, நோர்வேயின் பிரிந்து செல்லும் உரிமைக்கு ஆதரவாக, சுவீடிஷ் பாட்டாளி மக்களின் ஒப்புதலைப் பெற முடிந்தது. சுவீடிஷ் உழைக்கும் வர்க்க மக்கள், சுவீடிஷ் தேசியவாதத்தினால் பீடிக்கப் படவில்லை என்பதை இது உறுதிப் படுத்துகின்றது. ஸ்வீடிஷ் அரச பரம்பரை,பூர்ஷுவாக்கள் வழங்கிய சலுகைகளை விட, நோர்வீஜிய பாட்டாளி மக்களுடனான சகோதரத்துவம் உயர்வாகப் பட்டது." - லெனின்

இடதுசாரிகள், தமிழ் தேசியக் கோட்பாட்டை ஆதரிக்க வேண்டும், என்று வற்புறுத்தும் தமிழ்த் தேசியவாதிகள், லெனின் முன்மொழிந்த பாட்டாளிவர்க்க சகோதரத்துவம் என்ற நிபந்தனையை கண்டு கொள்ள மறுக்கிறார்கள். சில இடதுசாரி வேஷம் போட்ட தமிழ்த் தேசிய அபிமானிகள் கூட நுனிப்புல் மேய்கின்றனர். நோர்வேயின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த லெனினின் கூற்றுக்களை, ஈழப் பிரச்சினையில் பொருத்திப் பார்ப்போம். பண்டைய வரலாற்றுடன் ஒப்பிட வேண்டுமானால், நோர்வேயை தமிழீழத்துடனும், சுவீடனை சிறி லங்காவுடனும், இந்திய- சோழ சாம்ராஜ்யத்தை டென்மார்க்குடனும் ஒப்பிடலாம். பிரிட்டிஷ் காலனிய காலகட்டத்தை, நெப்போலியன் போர்களுடன் ஒப்பிடலாம்.

அந்த வகையில், சிறிலங்காவிடம் இருந்து பிரிந்து, இந்தியாவுடனும் சேராமல் தனித்து அரசமைக்க விரும்பும் தமிழீழம், தனக்கென ஒரு அரசமைப்பு சட்டத்தை எழுதியுள்ளதா? இந்தியாவுடன் அடையாளம் காண விரும்பாத, தனித்துவமான மொழி, அல்லது கலாச்சாரத்தை உருவாக்கி உள்ளதா? எல்லாவற்றிற்கும் மேலாக, சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் சகோதரத்துவத்தை பேணி வருகின்றதா? இது போன்ற கேள்விகள் எழுப்புவதையே விரும்பாதவர்கள் தான், இடதுசாரிகளுக்கு வகுப்பு எடுக்கின்றனர். லெனின் நோர்வேயின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தார். அதற்கான வாதங்களையும் முன் வைத்தார். ஆனால், அந்த வாதங்களை எல்லாம் புறந்தள்ளி விட்டு, இடதுசாரிகள் எல்லோரும் குருட்டுத்தனமாக தேசியவாதத்தை நிபந்தனை இன்றி அங்கீகரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயமானது?


"ஒடுக்கப் படும் இனத்தை சேர்ந்த பாட்டாளிகள், ஒடுக்கும் இனத்தை சேர்ந்த பாட்டாளிகளுடன் சகோதரத்துவ உறவைப் பேண வேண்டும்," என்பது, ஒரு தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதற்கு மார்க்சியவாதிகள் முன்வைக்கும் நிபந்தனையாகும். ஏற்கனவே, பல சர்வதேச இடதுசாரிகள் தமிழ்த் தேசிய எழுச்சியை ஆதரித்துள்ளனர். எந்த நிபந்தனையின் பேரில், எத்தகைய எதிர்பார்ப்புகளுடன் அந்த ஆதரவு வழங்கப் பட்டது, என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும். "சிறி லங்கா ஆட்சியாளர்களை, பிரிட்டிஷ் நவ-காலனிய கைக்கூலிகளாகவே," சர்வதேச இடதுசாரிகள் கருதுகின்றனர். "ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிரானது," என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டே இடதுசாரிகள் ஆதரவு வழங்க முடியும்.

அயர்லாந்தின் விடுதலையை ஆதரித்த மார்க்சும், நோர்வேயின் விடுதலையை ஆதரித்த லெனினும், மேலைத்தேய ஏகாதிபத்தியத்தை பலவீனப் படுத்துவதை கருத்தில் கொண்டிருந்தனர், என்பது இங்கே நினைவுகூரத் தக்கது. தொன்னூறுகளில், சோவியத் யூனியன், யூகோஸ்லேவியா போன்ற கம்யூனிச வல்லரசுகளை உடைக்கும் நோக்குடன், மேற்குலகம் புதிய குடியரசுகளை அங்கீகரித்தது. அதே நேரம், பாஸ்க் (ஸ்பெயின்), கோர்சிகா (பிரான்ஸ்), போன்ற தேசிய விடுதலைப் போராட்டங்களை நசுக்கி வந்துள்ளது. இந்த முரண்பாடுகளை, தத்துவார்த்த, அல்லது பூகோள அரசியல் அடிப்படையில் புரிந்து கொள்வது அவசியம்.

2 comments:

குறும்பன் said...

//அந்த வகையில், சிறிலங்காவிடம் இருந்து பிரிந்து, இந்தியாவுடனும் சேராமல் தனித்து அரசமைக்க விரும்பும் தமிழீழம், தனக்கென ஒரு அரசமைப்பு சட்டத்தை எழுதியுள்ளதா? இந்தியாவுடன் அடையாளம் காண விரும்பாத, தனித்துவமான மொழி, அல்லது கலாச்சாரத்தை உருவாக்கி உள்ளதா? எல்லாவற்றிற்கும் மேலாக, சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் சகோதரத்துவத்தை பேணி வருகின்றதா?//தமிழீழத்தில் எந்த வகையான மொழி இருக்க வேண்டும் என்னு நினைக்கிறீர்கள்? தமிழகத்தில் ஆங்கிலம் கலந்த தமிழ் (தமிங்கிலம்) தான் மொழி, அது இன்னும் தமிழீழத்திற்கு பரவவில்லை என்று எண்ணுகிறேன். இந்திய கலாச்சாரம் என்று சொன்னாலும் நீங்கள் சொல்வது இந்திய தமிழகத்தின் கலாச்சாரத்தை பற்றி என்று புரிந்து கொள்ளமுடிகிறது. கலாச்சாரம் மொழி, மதம், இடம் சார்ந்தது. சிங்கள பாட்டாளி வர்க்கமே தமிழீழ பாட்டாளி வர்க்கத்துடன் முதல் கரத்தை நீட்டியிருக்க வேண்டும். (அப்படி நீட்டி தமிழீழ பாட்டாளி வர்க்கம் உதாசீனப்படுத்தியதா என்று தெரியாது)

Kalaiyarasan said...

ஈழத் தமிழ் மொழி இருக்கிறது. நோர்வீஜிய , டேனிஷ் மொழிகளுக்கு இடையிலான எந்தளவு வித்தியாசம் இருக்கிறதோ, அந்தளவு வித்தியாசம் தமிழகத் தமிழுக்கும், ஈழத் தமிழுக்கும் இடையில் உள்ளது. டேனிஷ் மொழியும், நோர்வீஜிய மொழியும் ஒரே மொழி தான். ஆனால், நோர்வீஜிய மொழியில் சில பிராந்திய வழக்குச் சொற்கள் கலந்துள்ளன.

தமிழீழம் என்ற சொல்லை விட, ஈழம் என்ற சொல் தான், இது சுயநிர்ணய உரிமை கொண்ட தேசிய இனம் என்பதை வரையறை செய்கின்றது. உதாரணத்திற்கு, சிரியா, ஜோர்டான், எகிப்து எல்லாம் அரபு மொழி பேசும் நாடுகள் தான். ஆனால், அவர்கள் தங்கள் நாட்டின் பெயருடன் அரபு என்ற சொல்லை சேர்த்துக் கொள்ளவில்லை. ஏனெனில், அரபு என்பது மொழியைக் குறிக்கும். ஆனால், எகிதியர்கள், சிரியர்கள், ஜோர்டானியர்கள் என்பது சுயநிர்ணய உரிமை கொண்ட தேசிய இனங்களைக் குறிக்கும்.

சிங்களப் பாட்டாளி வர்க்கம் நீட்டியதா, தமிழ் பாட்டாளி வர்க்கம் உதாசீனப் படுத்தியதா, என்ற கேள்விக்கே இடமிருக்கவில்லை. அறுபதுகள் வரையில், இரண்டு இனங்களின் பாட்டாளி வர்க்கங்களும் ஒன்று சேர்ந்து போராடினார்கள். ஆனால், அந்த ஒற்றுமை தனக்கு ஆபத்தானது என்று உணர்ந்து கொண்ட அரசாங்கம், இனப்பிரச்சினையை தூண்டி வர்க்க ஒற்றுமைக்கு ஆப்பு வைத்தது. மிகுதியை, இரண்டு இனங்களிலும் இருந்த இனவாதிகள் பார்த்துக் கொண்டார்கள். ஆனால், சிங்கள-தமிழ் இனவாதிகளை கட்டுப்படுத்தும் கடிவாளம் சிறிலங்கா அரசின் கையில் இருக்கிறது. தேவைப் பட்டால் திறந்து விடுவார்கள். தேவை முடிந்தால், பூட்டி வைப்பார்கள்.