Saturday, June 02, 2012

பௌத்த சங்கம் பாதுகாக்கும் சிங்கள வேளாள சாதியம்

[ஒரு தமிழ் மன்னனின், "சிங்கள-பௌத்த" நிலப்பிரபுத்துவ சமுதாயம்] 
(பகுதி - இரண்டு)
கண்டிய ராஜ்யத்தை ராஜசிங்க பரம்பரையினர் ஆண்ட காலம் முழுவதும், மன்னரை கொலை செய்வதற்காக, ஏராளமான சூழ்ச்சிகள், சதியாலோசனைகள் நடந்துள்ளன. முடி தரித்த தலைக்கு நிம்மதி இல்லை என்றொரு பழமொழி உண்டு. அதற்கேற்றவாறு, எல்லையில் அன்னியப் படைகளையும், அரச மாளிகைக்குள் சதிகாரர்களையும் சமாளிப்பதற்கே, கண்டி அரசனுக்கு நேரம் போதாமல் இருந்திருக்கும். கண்டி அரசவையில் நடந்த சூழ்ச்சிகளை வைத்து, ஒரு விறுவிறுப்பான சரித்திர மர்ம நாவல் எழுதலாம். ராஜசிங்க வம்சத்தின் ஒவ்வொரு அரசனையும், கொல்வதற்கு சூழ்ச்சி செய்ததும், கொலை முயற்சியில் இருந்து பாதுகாத்ததும், மன்னனுக்கு நெருக்கமான அதிகார்களும், புத்த மதகுருக்களும் தான். மன்னன் கீர்த்திஸ்ரீ, மல்வத்த விகாரை சதி முயற்சியில் இருந்து உயிர் தப்பினான். ஆனால், அந்தச் சம்பவமானது நிலப்பிரபுக்களின் பலத்தை குறைத்து மதிப்பிட முடியாது, என எடுத்துக் காட்டியது. சுமார் 200 அல்லது 300 வருடங்களுக்குப் பிறகு, இலங்கை ஆண்ட கடைசி மன்னன் ஆங்கிலேயரால் சிறைப் பிடிக்கப் பட்டாலும், நிலப்பிரபுக்களின் வர்க்கம் ஆங்கிலேயருடன் சில உடன்படிக்கைகளை செய்து கொண்டது.

இலங்கையை ஒல்லாந்தர்கள் (டச்சுக் காரர்கள்) ஆண்ட காலத்திலும், கண்டி ராஜ்யத்தை கைப்பற்ற முடியவில்லை. கண்டி நாட்டு படையினரின், கெரில்லா போர் முறையும், நவீன ஆயுதம் ஒன்றின் பாவனையும், டச்சு காலனிய படைகளை நெருங்க விடாமல் தடுத்தன. அன்றைய காலத்தில், டச்சுக் காரராலேயே நவீன ஆயுதமாக கருதப்பட்ட ஒரு வகை துப்பாக்கி, இன்றைக்கும் நெதர்லாந்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது. கண்டிய படைகள், காலி, மாத்தறை ஆகிய இடங்களை கைப்பற்றியதுடன், கொழும்பு நகரையும் முற்றுகையிட்டிருந்தன. இந்தியாவில் இருந்து உதவிக்கு மேலதிக துருப்புகள் வந்திரா விட்டால், இலங்கையில் ஐரோப்பிய காலனியாதிக்கம் 18 ம் நூற்றாண்டிலேயே முடிவுக்கு வந்திருக்கும். (Inventaris van het archief van Lubbert Jan, Baron van Eck http://databases.tanap.net/ead/html/1.10.106/pdf/1.10.106.pdf) இத்தனை பலம் பொருந்திய கண்டி ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு காரணம், ஆளும் வர்க்கத்தினுள் நிலவிய ஒற்றுமையின்மை, போட்டி, பொறாமைகள், எதேச்சாதிகாரம் என்பன ஆகும்.

குறிப்பாக, கடைசி கண்டிய மன்னனான விக்கிரம ராஜசிங்கன் காலத்தில், "துரோகிகளை களை எடுக்கும் நடவடிக்கை" அளவுக்கு மீறிப் போய்க் கொண்டிருந்தது. அரசவையில் இருந்த மந்திரி பிரதானிகள் (அதிகார்கள்), மன்னனின் உத்தரவின் பேரில் கொல்லப் பட்டனர். சில அதிகார்கள் ஒன்று சேர்ந்து, அரசனை கொலை செய்ய திட்டமிட்டமை அம்பலமானதும், அதிலே சம்பந்தப்பட்டவர்களை கொலை செய்யும் படலம் தொடங்கியது. அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கூட கொல்லப் பட்டனர். எஹலப்பொல என்ற அதிகார், ஆங்கிலேயருடன் கூட்டுச் சேர்ந்து எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்தான். ஆங்கிலேயர்கள், அவ்வாறு தான் கண்டி ராஜ்யத்தை கைப்பற்றினார்கள். 1815 ம் ஆண்டு, எஹலப்பொலவும், எஞ்சியிருந்த அதிகார்களும் ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அந்த உடன்படிக்கையின் படி, சில வருடங்களின் பின்னர் கண்டி ராஜ்யத்தை ஒரு சுதந்திர நாடாக, அதிகார்கள் கையில் திருப்பி ஒப்படைப்பதாக எழுதப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தை மீறிய ஆங்கிலேயர்கள், இலங்கை முழுவதையும் ஒரே நாடாக ஆண்டார்கள்.

கண்டி ராஜ்யத்தின் ஆட்சி நிர்வாகத்தை பொறுப்பேற்ற ஆங்கிலேயர்கள், அங்கு நிலவிய நிலப்பிரபுத்துவ அமைப்பை மறு சீரமைத்தனர். புத்த மடாலயங்கள், நிலங்களின் மீதான அதிகாரத்தைக் கொண்டிருப்பதை அறிந்த ஆங்கிலேயர்கள், ஒரு ஆணைக்குழுவை அமைத்தார்கள். நிலங்களை அளவை செய்வதும், கணக்கிடுவதும், அந்த ஆணைக்குழுவின் பொறுப்பாக இருந்தது. சொத்துக் கணக்கெடுப்பு என்ற பெயரில், ஏராளமான நிலங்களை ஆங்கிலேயர்கள் பறித்துக் கொண்டனர். அப்படி இருந்தும், புத்த மடாலயங்கள் பெருமளவு நிலங்களை சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்கப் பட்டது. ஆனால், ஒரே ஒரு நிபந்தனை, சொத்துக்களின் எண்ணிக்கை, வரவு, செலவுக் கணக்குகளை அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும்.

ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த நிலச்சீர்திருத்தம், இன்றும் கூட பெருமளவு மாற்றத்திற்கு உட்படவில்லை. நிலப்பிரபுக்களான மடாதிபதிகள், தமக்கு சொந்தமான நிலங்களை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு குத்தகைக்கு கொடுத்தார்கள். பல பெரிய மடாலயங்களின் தலைமை மதகுருக்களுக்கு சொந்தமான ரப்பர் தோட்டங்களும், தென்னந் தோப்புகளும், பல இலட்ச ரூபாய் வருமானத்தை ஈட்டித் தந்தன. இதிலே வேடிக்கை என்னவென்றால், பெருந்தோட்ட உரிமையாளர்களான சில மடாதிபதிகள், இந்திய தமிழ் தோட்டத் தொழிலாளரை வைத்து வேலை வாங்கி இருக்கிறார்கள். பிற்காலத்தில், பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்திய உழைப்பாளிகளின் தேவை முடிந்ததும், இனவாதம் பேசி திருப்பி அனுப்பினார்கள். 

சிங்கள-பௌத்த பொருளாதார கட்டமைப்பில், சாதி அமைப்பின் படி நிலை வளர்ச்சி பிறிதாக நோக்கப் பட வேண்டும். கண்டி ராஜ்யத்தில் ஆதிக்க சாதியாகவிருந்த ராதலர்கள், ஆங்கிலேய நிர்வாகிகளுடன் ஒத்துழைத்தனர். இருப்பினும், இலங்கை முழுவதும் புதிதாக உருவாகிக் கொண்டிருந்த "வெள்ளாளர்கள்" என்ற புதிய சாதியினருக்கு இடம் கொடுத்து ஒதுங்க நேர்ந்தது. இன்று ராதலர்கள், தம்மை வெள்ளாளரின் உட்பிரிவாக அழைத்துக் கொள்கின்றனர். ஆரம்பத்தில், வெள்ளாளர்கள் என்பது ஒரு சாதியாக இருக்கவில்லை. நிலவுடமையாளர்களின் நிலங்களை மேற்பார்வை செய்யும் வேலை பார்த்து வந்தனர். ஒரு விகாராதிபதி (நிலப்பிரபுவான புத்த மதகுரு), பல்லாயிரம் ஏக்கர் காணிகளை, "பங்கு" என்ற பெயரில் சிறு சிறு துண்டுகளாக பிரித்திருப்பார்.

அந்த பங்குகளை நிர்வகிப்பதற்கும், மேற்பார்வை செய்வதற்கும் சிலர் இருந்தனர். அவர்கள் இரண்டு வகையாக அந்த நிலங்களை பராமரித்தனர். ஒன்று, அவர்கள் தாமே அந்த வயல்களுக்கு சொந்தக்காரர்கள் போல் உழுது பயிரிட்டு, அறுவடையில் ஒரு பகுதியை நிலப்பிரபுவுக்கு கொடுப்பார்கள். இரண்டு, வயல்களை சிறு விவசாயிகளுக்கு குத்தகைக்கு கொடுத்து விட்டு மேற்பார்வை பார்ப்பார்கள். பிற்காலத்தில், நிலப்பிரபுக்களின் அதிகாரம் ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளால் பிடுங்கப் பட்டதும், நிலங்களை மேற்பார்வை செய்தவர்கள் "வேளாளர்கள்" (சிங்களத்தில் : கொவிகம) என்ற சாதியாக மாறி விட்டனர். 

நிலப்பிரபுவான மடாதிபதியின் நிலங்களை மேற்பார்வை செய்யும் சாதிகளை சேர்ந்தோர், அந்த ஊர் விகாரைகளில் நடக்கும் திருவிழாக்களில் கலந்து கொள்ள வேண்டும். கடவுளுக்கு பணிவிடை செய்யும் அந்தக் கடமையை "நில காரிய" என்று அழைப்பார்கள். நில காரியம் செய்வோர் பெரும்பாலும், உயர்சாதியினர் அல்லது இடைநிலைச் சாதியினர் ஆவர். அதைத் தவிர, வயல்களில் வேலை செய்யும் கூலி உழைப்பாளிகளும், குடிமைத் தொழில் செய்யும் பிற பணியாட்களும் தாழ்த்தப் பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அடிமைகளாகவே நடத்தப் பட்டனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், நாடு முழுவதும் முதலாளித்துவ பொருளாதார முறை பரவியதால், கிராமங்களில் இருந்து, நகரங்களுக்கு வேலை தேடிச் செல்வது அதிகரித்தது. அதனால், அடிமை முறையும் தகர்ந்தது. 

மத்திய கால நிலப்பிரபுத்துவ அமைப்பு, இன்றைக்கு ஏறத்தாள அழிந்து விட்டது. ஆயினும், இன்றைக்கும் இந்தியாவில் சில எச்ச சொச்சங்களை காண முடிவதைப் போல, அண்மையில் இலங்கையிலும் ஓரிடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. மகியங்கன எனும் இடத்தில் உள்ள ஊர் ஒன்றில், இன்னமும் மத்திய கால அடிமை உழைப்பு முறை நிலவுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அங்கிருக்கும் பௌத்த மடாலயத்திற்கு சொந்தமான விகாராதிபதி, இன்றைக்கும் நிலப்பிரபு போன்றே நடந்து கொள்கிறார். அந்த ஊர் மக்கள், விகாராதிபதிக்கு சொந்தமான வயல்களில் கொத்தடிமைகளாக வேலை செய்கின்றனர்.

கண்டி ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு பின்னர், ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் காட்டுக்குள் சென்று மறைந்து வாழ்ந்தனர். காட்டை அழித்து, அதனை கிராமமாக்கி, தமக்குத் தேவையான உணவுப் பயிர்களை தாமே பயிரிட்டுக் கொண்டு வாழ்ந்தனர். அந்த தன்னிறைவு கண்ட சமுதாயத்தில், பௌத்த மடாதிபதிகள் நுழைந்த பின்னர் தான் பிரச்சினை ஆரம்பமாகியது. அந்த நிலம் முழுவதும் தமக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடிய மடாதிபதிகள், மக்களை கொத்தடிமைகளாக்கி உழைப்பை சுரண்டி வந்தனர். அங்கே, அரச இயந்திரத்தின் அங்கமாக செயற்படும் பொலிஸ் நிலையம் ஒன்றுள்ளது. பொலிஸ் அதிகாரிகளும், மடாதிபதிகளுக்கு சார்பாகவே நடந்து கொள்கின்றனர். கடந்த கால ஜேவிபி கிளர்ச்சியை காரணமாக வைத்து, பலரை கொன்று அரச பயங்கரவாத்தினால் அடக்கி வைத்தனர். மகியங்கனையில் அல்லலுறும் அடிமைகள் பற்றிய ஆவணப் படத்தை இங்குள்ள இணைப்பில் பார்க்கலாம். (21st century slaves)

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், பெரும் செல்வாக்கு மிக்க, மல்வத்த, அஸ்கிரிய பௌத்த சங்கங்கள், அரசியலில் இருந்து தள்ளி இருக்கப் போவதாக அறிவித்தன. ஆனால், நடைமுறை வேறாக இருந்தது. பல மடாதிபதிகள், நேரடியாக அரசியலில் ஈடுபடா விட்டாலும், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தனர். அதற்குப் பல காரணங்கள் இருந்தன. முதலாவதாக, விகாரைக்கு சொந்தமான நிலங்களின் மீதான உரிமை, அவற்றால் கிடைக்கும் வருமானம், இவற்றை நிச்சயப் படுத்திக் கொள்வது. இரண்டாவதாக, நிலப்பிரபுக்களாகவும், முதலாளிகளாகவும் இருந்த மடாதிபதிகளின் ஆதரவு, அரசியல்வாதிகளுக்கு தேவைப் பட்டது. மூன்றாவதாக, இலங்கையில் இன்றைக்கும் மாற்ற முடியாத, வெள்ளாள ஆதிக்க சாதி அரசியல். இலங்கையில் உள்ள பௌத்த மடாலயத்தின் தலைமை மதகுருவாக வருபவர், வெள்ளாளர் சாதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகும். கரவா, சலாகம போன்ற இடைநிலைச் சாதியினர், தமக்கென தனியான பௌத்த சங்கங்களை அமைத்துக் கொண்டுள்ளனர்.

இலங்கையில், அதிக வருமானம் ஈட்டும் பௌத்த மடாலயங்களில், ஸ்ரீபாத (சிவனொளிபாத மலை), தலதா மாளிகை ஆகியன பிரபலமானவை. இந்த இடங்களுக்கு வந்து குவியும், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகளால் அதிக வருவாய் கிடைக்கின்றது என்று ஒரு காரணத்தைக் கூறலாம். ஆனால், மகியங்கன, திஸ்ஸ மகரகம, தம்புள்ள போன்ற இடங்களில் அமைந்துள்ள ரஜ மஹா விகாரைகளும் பெருமளவு பணத்தை கணக்கில் காட்டுகின்றன. பௌத்த சமயத்துடன் தொடர்புடைய இடங்களை விளம்பரப் படுத்தி, அதிகளவு யாத்ரீகர்களை வரவழைக்கும் வியாபார நோக்கம், சில நேரம் இன முரண்பாடுகளையும் உருவாக்கி விடுகின்றது. உதாரணத்திற்கு, இந்தியாவில் இருந்து சங்கமித்தை வந்திறங்கிய புனிதஸ்தலம் என்று கூறி, மாதகலில் (யாழ்ப்பாணம்) புதிதாக பௌத்த விகாரை ஒன்று கட்டப் பட்டது. இன்று, பெருமளவு தென்னிலங்கை யாத்ரீகர்கள் வருகை தருவதால், மாதகல் மடாலயமும் தனது வருமானத்தைப் பெருக்கிக் கொள்கின்றது. இந்த இலக்கை அடைவதற்காக, ஒரு பேரினவாத நிகழ்ச்சி நிரலின் கீழ், அரசுடனும், இராணுவத்துடனும் ஒத்துழைத்திருப்பார்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்ததைப் போல், மதத்தையும், அரசியலையும் பிரித்து வைக்கும் தைரியம், இலங்கையை ஆண்ட தலைவர்களுக்கு இருக்கவில்லை. பௌத்த மத பாசிச சக்திகளின் பலத்தை, பண்டாரநாயக்க கொலைக்குப் பிறகு தான் எல்லோரும் புரிந்து கொண்டார்கள். சிங்கள-பௌத்த சமூகக் கட்டமைப்பின் வேர்கள், எங்கெங்கெல்லாம் பரவி இருக்கின்றன என்பதை, இன்று வரைக்கும் யாரும் ஆராயவில்லை.

(முற்றும்)

இந்தத் தொடரின் முதலாவது பதிவை வாசிப்பதற்கு:
ஒரு தமிழ் மன்னனின், "சிங்கள-பௌத்த" நிலப்பிரபுத்துவ சமுதாயம்


இந்தக் கட்டுரை எழுத உதவிய உசாத்துணை நூல்கள், இணையத் தளங்கள்:
1.Inventaris van het archief van Lubbert Jan, Baron van Eck
2.The Kandyan Kingdom
3.21st century slaves
4.The Expedient Utopian: Bandaranaike and Ceylon
5.நோத் முதல் கோபல்லவா வரை 6."Monastic Landlordism" in Ceylon, Journal of Asian Studies, Volume 28, Issue 4(August 1969)
------------------------------------

இந்த விடயத்துடன் தொடர்புடைய முன்னைய ஆய்வுக் கட்டுரைகள்:
1.இலங்கை அரசியலில் "வெள்ளாள-கொவிகம" ஆதிக்கம்
2.தமிழகத்தின் சிங்கள தொப்புள்கொடி உறவுகள் 3.சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

1 comment:

Vithyarajan said...

nalla thakavalkal