Saturday, May 26, 2012

ஒரு தமிழ் மன்னனின், "சிங்கள-பௌத்த" நிலப்பிரபுத்துவ சமுதாயம்


"சிங்கள- பௌத்த பேரினவாதம்" என்று எல்லோரும் சொல்கிறார்களே, அது யாரால் உருவாக்கப் பட்டது என்று தெரிந்து வைத்திருக்கிறார்களா? சிங்கள-பௌத்த மேலாதிக்கம் என்ற சமுதாயக் கட்டமைப்பை உருவாக்கியவன் ஒரு தமிழன்! இந்த உண்மையை, சிங்கள இனவாதிகள் மட்டுமல்ல, தமிழ் இனவாதிகளும் அறிந்து கொள்ள விரும்ப மாட்டார்கள்.


18ம் நூற்றாண்டில், கண்டி ராஜ்ஜியத்தை ஆண்ட கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் என்ற தமிழ் மன்னன், இலங்கையின் நிலப்பிரபுத்துவ கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைத்தான். ஒவ்வொரு ஊரிலும் உள்ள பௌத்த விகாரையின் கீழ், நிலங்களை பகிர்ந்தளித்தான். இதனால், பௌத்த சங்கங்களின் மடாதிபதிகள், நிலவுடமையாளர்களாக மாறினார்கள். சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்னர் உருவான புதிய நிலவுடமையாளர்களின் சமூகம், இன்றைக்கும் இலங்கை அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக உருப்பெற்றுள்ளது. இவர்களின் பொருளாதார அடித்தளத்தை தகர்ப்பதற்கான சமூகப் புரட்சி ஒன்று அவசியமாகின்றது. இலங்கையில் ஒரு சமூகப் புரட்சியை முன்னெடுக்காமல், "சிங்கள-பௌத்த பேரினவாத மேலாதிக்கம்" பற்றி ஐ.நா. சபை வரையில் சென்று முறையிட்டாலும், எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை.


இலங்கை இன்றைக்கும் ஒரு அரை நிலப்பிரபுத்துவ, அரைக் காலனித்துவ நாடாகும். அங்கே இன்னமும் நிலப்பிரபுத்துவம் முற்றாக ஒழிக்கப் படவில்லை. மாறாக, முன்னை நாள் நிலப்பிரபுக்கள், உள்நாட்டு முதலாளிகளாக, அல்லது அரசியல்வாதிகளாக தம்மை மாற்றிக் கொண்டுள்ளனர். பெரும்பாலான சிங்கள - தமிழ் அரசியல் தலைவர்கள், நிலவுடமைக் குடும்பங்களில் இருந்து, அல்லது "வெள்ளாளர்கள்" என்ற உயர்சாதியில் இருந்து வந்தவர்கள் என்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல. 


அதே போன்று, பௌத்த மதகுருக்கள் ஒரு காலத்தில் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு அரசியலில் செல்வாக்கு செலுத்தினார்கள். இரு தசாப்தங்களுக்கு முன்னர், "ஜாதிக ஹெல உறுமய" என்ற கட்சியின் கீழ் அணி சேர்ந்தார்கள். "என்ன இது? புத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடலாமா?" என்று ஆச்சரியப் படுபவர்கள், ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையின் சிங்களப் பகுதிகளில், ஏராளமான நிலங்கள் புத்த விகாரைகளுக்கு சொந்தமாக இருந்துள்ளன. பௌத்த மடாதிபதிகள் நிலப்பிரபுக்களாகவும் இருந்துள்ளனர். இன்றைய முதலாளித்துவ உலகில், தமது இருப்பை நிச்சயப் படுத்திக் கொள்ளவும், சந்தர்ப்பம் கிடைத்தால் அதிகாரத்தை கைப்பற்றவும் விரும்புகின்றனர்.


திபெத் நாட்டிலும், இது போன்றே பௌத்த மடாதிபதிகள் நிலப்பிரபுக்களாக அதிகாரம் செலுத்தினார்கள். சீனக் கம்யூனிஸ்டுகளின் கலாச்சாரப் புரட்சியின் பின்னர் தான், திபெத்தில் பௌத்த நிலப்பிரப்புகளின் ஆதிக்கம் முற்றாக மறைந்தது. இந்த உண்மையை உணராத, மேற்கத்திய பிரச்சாரங்களால் மதி மயங்கி தலாய் லாமாக்களை ஆதரிக்கும் தமிழ் தேசியவாதிகள், தாம் அறியாமலே சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் இருப்பையும் நியாயப் படுத்துகின்றனர். மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இது போன்ற போக்கைப் பார்க்கலாம். அங்கு ஒரு காலத்தில் பெரும் நிலவுடமையாளர்களாக இருந்த கிறிஸ்தவ மதகுருக்கள், இன்று கிறிஸ்தவ கட்சிகள், பாசிச இயக்கங்கள் மூலம் தமது இழந்த அதிகாரத்தை மீளப் பெற விரும்புகின்றனர். ஹெல உறுமய, ஆர்.எஸ்.எஸ்., முஸ்லிம் சகோதரத்துவம் ஆகிய மதவாத பாசிசக் கட்சிகளின் சித்தாந்தங்கள் ஒன்றாகவே இருக்கின்றன. "இழந்த தாயகம், பண்பாட்டுப் பெருமைகள், அந்நிய இனத்தவரின் ஆக்கிரமிப்பு" , இது போன்ற கதையாடல்களும் பொதுவாகவே உள்ளன.


சுமார் 500 ஆண்டுகள், இலங்கை ஐரோப்பிய காலனியாதிக்கத்தின் கீழ் இருந்துள்ளது. அதனால், தனித்துவமான சமூக, சாதிய, பொருளாதார மாற்றங்களுக்குட்பட்டது. இந்தியாவில் உள்ள, அல்லது தமிழ் நாட்டில் இருப்பது மாதிரியான, அதே மாதிரியான சாதியமைப்பு படிமுறை இலங்கையில் இல்லாததற்கான காரணமும் அது தான். ஐரோப்பியர்களுடன் ஒத்துழைத்த, அவர்களுக்கு காட்டிக் கொடுத்து சலுகைகள் பெற்ற, சாதிகள் தான் இன்று மேன் நிலையில் உள்ளன. சில சாதிகள் ஐரோப்பியராலேயே புதிதாக உருவாக்கப் பட்டன. 


முதலாவது ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளான போர்த்துக்கேயர்கள் வந்த காலத்தில், இலங்கையில் மூன்று ராஜ்ஜியங்கள் இருந்தன. ஆனால், இன்று பலர் நினைப்பதற்கு மாறாக, அந்த ராஜ்ஜியங்கள் "சிங்கள ஸ்ரீலங்கா, தமிழ் ஈழம்" என்று பிரிந்திருக்கவில்லை. (அவ்வாறான மொழிப்பிரிவினை ஆங்கிலேயர் காலத்தில் தான் தோன்றியது.) விகிதாசாரம் மாறுபட்ட போதிலும், மூன்று ராஜ்ஜியங்களிலும் சிங்கள, தமிழ் மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்ந்தனர். குறிப்பாக, தமிழ் பேசுவோரை பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டம், நீண்ட நெடுங் காலமாக கண்டி ராஜ்ஜியத்தின் பகுதியாக இருந்தது.


அன்றைய இலங்கையில், மொழியுணர்வை விட, சாதி உணர்வு பிரதானமாகக் கருதப் பட்டது. (சிங்கள மொழியில் இன்றைக்கும்  இனம் என்பதை  ஜாதி  என்று அழைக்கின்றனர்.) மன்னர் பரம்பரைகள் கூட ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் தான். இந்தியாவில் உள்ளதைப் போல, இந்து மத வர்ணாச்சிரம அடிப்படையில், சத்திரிய சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே மன்னர்களாக சிம்மாசனத்தில் அமர முடியும். தமிழ் ராஜ்ஜியமாக இருந்தாலும், சிங்கள ராஜ்ஜியமாக இருந்தாலும் அது பொது விதியாக இருந்தது. உண்மையில், இலங்கையின் "ஆண்ட பரம்பரையை" சேர்ந்தவர்கள் யாரும் இன்று உயிரோடு இல்லை. அனைவரும் ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளால் அழித்தொழிக்கப் பட்டு விட்டனர்.


ஏற்கனவே , கரையோரமாக இருந்த, யாழ்ப்பாண ராஜ்ஜியத்தையும், கோட்டே ராஜ்ஜியத்தையும் போர்த்துக்கேயர்கள் அழித்திருந்தார்கள். மலைகளை இயற்கையான பாதுகாப்பு அரண்களாக கொண்டிருந்த, கண்டி ராஜ்ஜியத்தை அவர்களால் அசைக்க முடியவில்லை. கோட்டே ராசதானியை ஆண்ட மன்னன், கிறிஸ்தவனாக மாறி, போர்த்துக்கேயரின் கைப்பொம்மையாக ஆட்சி செய்தான். இருப்பினும், ஒரு "கிறிஸ்தவ சகோதர மன்னன்" என்பதற்காக அவனை விட்டு வைக்கவில்லை. யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னன், இதற்கு நேரெதிர் கொள்கையை பின்பற்றினான். ஒரு இந்து மத அடிப்படைவாதி போன்று நடந்து கொண்டான். மன்னாரில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தான்.


அதைக் காரணமாக காட்டியே, போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாண ராஜ்ஜியம் மீது படையெடுத்து ஆக்கிரமித்தார்கள். போர்த்துக்கேயர்களும் பதிலுக்கு பல யாழ்ப்பாண மக்களை இனப்படுகொலை செய்தனர். சங்கிலி மன்னனின் குடும்ப உறுப்பினர்களை, கத்தோலிக்கர்களாக கட்டாய மத மாற்றம் செய்து, கோவா (இந்தியா) வுக்கு நாடுகடத்தினார்கள். போர்த்துகேய ஆட்சிக் காலத்தில், யாழ் குடாநாட்டில் வாழ்ந்த 90 சதவீத தமிழர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்தனர். போர்த்துக்கேயர்கள் அதனோடு திருப்தியடையவில்லை. இலங்கை முழுவதும், (கண்டி ராஜ்ஜியம் தவிர) ஆயிரக் கணக்கான சைவக் கோயில்களையும், பௌத்த ஆலயங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். அந்தக் கற்களை வைத்து தேவாலயங்களை கட்டினார்கள்.


இந்த சரித்திரப் பின்புலத்துடன், கண்டி ராஜ்ஜியத்தின் அன்றைய நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். போர்த்துகேய காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உயிராபத்தை எதிர்நோக்கிய புத்தபிக்குகள் கண்டி ராஜ்ஜிய பரிபாலன எல்லைக்குள் தப்பியோடி புகலிடம் கோரினார்கள். கண்டி ராஜ்ஜியத்திலும் புத்த மதம் பலவீனமடைந்திருந்தது. இதற்கிடையே கண்டி மன்னனின் பரம்பரையில் தகுதியான வாரிசு கிடைக்கவிலை. 


அதனால், தமிழகத்தில், மதுரையை ஆண்ட நாயக்கர் பரம்பரையில் இருந்து ஒருவரை வரவழைத்தார்கள். அவன் தான், கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் என்ற பெயரில், கண்டி அரசனாக முடி சூட்டிக் கொண்டான். தென்னிந்தியாவை ஆண்ட விஜய நகரப் பேரரசிற்குட்பட்ட சிற்றரசர்களாக, நாயக்கர்கள் தமிழகத்தை ஆட்சி செய்தனர். இந்து வர்ணாச்சிரம தர்மப் படி, சத்திரியர்கள் மட்டுமே நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்பதை இங்கே நினைவு படுத்த விரும்புகின்றேன். (இலங்கையின் தேரவாத பௌத்தம், பிராமண மேலாண்மையை ஏற்றுக் கொண்ட மதமாகும்.)


கீர்த்தி ஸ்ரீ, மன்னனான முடி சூட்டிக் கொண்டவுடன் செய்த முதல் வேலை, ராஜ்ஜியத்தின் சமுதாயக் கட்டமைப்பை அடியோடு மாற்றியது தான். அன்றைய காலங்களில், பிற உலக நாடுகளில் இருந்ததைப் போன்று, இலங்கையிலும் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு நிலவியது. மன்னன் மிகப்பெரிய நிலப்பிரபுவாகவும், அவனுக்கு கீழே சிற்றரசர்கள், சிறிய நிலப்பிரபுக்களாகவும் விவசாயப் பொருளாதாரத்தின் நிர்வாக மையமாக விளங்கினார்கள். பௌத்த மதகுருக்கள், மடாலயங்களிலும், விகாரைகளையும் காலத்தைக் கழித்தார்கள். 


ஆனால், ஐரோப்பிய காலனியாதிக்கம் அவர்களது அரசியல் நிலையை அடியோடு மாற்றியது. கரையோர மாகாணங்களை ஆண்ட போர்த்துக்கேயர்கள், தீவிரமான கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளாக இருந்தனர். இலங்கைத் தீவு முழுவதும், பௌத்த, சைவ மதங்களை வேரோடு அழித்து விடும் வெறியுடன் செயற்பட்டார்கள். இதன் எதிர் விளைவாக, கண்டி ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னனுக்கும், பௌத்த மடாதிபதிகளுக்கும் இடையில் அரசியல் நெருக்கம் ஏற்பட்டது. இன்றைக்கு இலங்கை ஆளும் சிங்கள ஆட்சியாளர்கள் போன்று, கண்டிய அரசனும் தன்னை ஒரு பௌத்த மதக் காவலனாக நிலை நிறுத்திக் கொண்டான். நமது கால அரசியல் மொழியில் கூறினால், "இலங்கையின் முதலாவது சிங்கள-பௌத்த பேரினவாத ஆட்சியாளன், "ஒரு தமிழனான" கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன்!"


கீர்த்தி ஸ்ரீ மன்னன், கண்டி ராஜ்யத்தின் ஆளுகைக்குட்பட்ட நிலங்களை மறு சீரமைத்தான். நிலப்பிரபுக்களிடமிருந்த நிலங்களை பறித்தெடுத்து, அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை பௌத்த விகாரைகளிடம் ஒப்படைத்தான். அதனால், ஒவ்வொரு ஊரிலும், பௌத்த மடாலயங்கள், நிலப்பிரபுத்துவ ஸ்தாபனங்களாக மாறின. பௌத்த மடாலயத்தின் தலைமை மதகுருக்கள், புதிய நிலப்பிரபுவாக அரசியல்-பொருளாதார அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். 


நிலப்பிரபுவாக மாறிய தலைமை மதகுரு, "விகாராதிபதி" என்று அழைக்கப்பட்டார். இதனால் அதிகாரமிழந்த, பழைய நிலப்பிரபுக்கள் பொறாமை கொண்டனர். ஆயினும், காலப்போக்கில் அவர்களும் பௌத்த துறவிகள் வேடத்தில் மடாலயங்களுக்கு ஊடுருவி, அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டனர். இலங்கையில் இன்று ஆதிக்க சாதியாகவிருக்கும் வெள்ளாளர்கள் (சிங்களத்தில்: கொவிகம), அவ்வாறு தான் பௌத்த சங்கங்களின் தலைமையை கைப்பற்றினார்கள். இன்றைக்கு, பௌத்த சங்கங்களின் தலைமை மதகுரு வெள்ளாள சாதியை சேர்ந்திருக்க வேண்டுமென்பது, எழுதாத விதியாகும். வட இலங்கையிலும், சைவக் கோயில்களை நிர்வகிக்கும் ஆலய பரிபாலன சபை, வெள்ளாளரின் ஆதிக்கத்தில் இருக்கின்றது.


கோயில் திருவிழாக்களில் சாதிகளின் பங்களிப்பு என்பது, இலங்கையின் சிங்களப் பகுதிகளிலும், தமிழ்ப் பகுதிகளிலும், இன்றைக்கும் நிலவும் கலாச்சார ஒற்றுமை ஆகும். யாழ்ப்பாணத்தில் சைவக் கோயில்கள் வெள்ளாளரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தாலும், ஏழாம் திருவிழா, பத்தாம் திருவிழா என்று, பிற சாதிகளுக்காக ஒதுக்கப் பட்ட திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இலங்கையின் பிரபல பௌத்த விகாரையான, கண்டி தலதா மாளிகையிலும், இது போன்று சாதிக்கொரு திருவிழா கொண்டாடுவது கடைப் பிடிக்கப் படுகின்றது. திருவிழாக்கள் மட்டுமல்ல, கோயில்களில் பணிவிடைகள் செய்வதும் அந்தந்த சாதியை சேர்ந்தவர்களின் கடமையாகும். சிங்களத்தில் அதனை "நில காரியம்" என்று கூறுகின்றனர். இடைநிலைச் சாதிகளை சேர்ந்தவர்கள் தான், நில காரியம் என்ற கோயில் பணிவிடைகள் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். சைவக் கோயில்களில் கிரியைகள் செய்யும் இசை வேளாளர்கள், பண்டாரங்கள் போன்ற சாதிகளுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.


அன்றைய கண்டிய ராஜ்யத்தில் மன்னனுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள், "அதிகார்கள்" என்ற பிரபுக்கள். அரசவையில் மந்திரிகளாகவும், அதே நேரம் பெரும் நிலவுடமையாளர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு அடுத்த படியாக, அன்றைய ஆதிக்க சாதியாக இருந்தவர்கள், ராதலர்கள். (பிற்காலத்தில் இந்த ராதல சாதியினர், வெள்ளாளரின் உட்பிரிவாக மாறி விட்டனர்.) கீர்த்தி ஸ்ரீ கொண்டுவந்த சீர்திருத்தம், அதிகார்களினது பொருளாதார பலத்தைக் குறைத்தது. சில அதிகார்கள், மன்னன் கீர்த்தி ஸ்ரீ யை கொலை செய்ய சூழ்ச்சி செய்தனர். மல்வத்த விகாரைக்கு விஜயம் செய்யவிருந்த மன்னனை, ஈட்டிகள் மறைத்து வைக்கப் பட்டிருந்த மரணப் பொறி ஒன்றுக்குள் தள்ளி விட திட்டம் தீட்டினார்கள். அதற்கு மல்வத்த விகாரையை சேர்ந்த பிக்குகளும் உடந்தையாக இருந்தனர். ஆயினும், அந்த அரசவை சூழ்ச்சிகளிலும், "சிங்கள-தமிழ் வேற்றுமை" துளியும் தலைகாட்டியிருக்கவில்லை.


(தொடரும்)

4 comments:

சிவக்குமார் said...

வரலாற்றில் இன்னும் எத்தனை உண்மைகள் வரவேண்டியுள்ளது

சிவக்குமார் said...

எழுத்துக்கள் மிகவும் சிறியதாக உள்ளது.

mnalin said...

///அதனால், தமிழகத்தில், மதுரையை ஆண்ட நாயக்கர் பரம்பரையில் இருந்து ஒருவரை வரவழைத்தார்கள். அவன் தான், கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் என்ற பெயரில், கண்டி அரசனாக முடி சூட்டிக் கொண்டான்./// இதில் சிறிது மயக்கம் உள்ளது உங்கள் கவனத்துக்கு

rangam said...

Rajasinghan is Telugu not a tamilian