"மனிதர்களை அல்ல, ஆண்டவரையே ஆட்சியாளராக ஏற்று அடி பணிய வேண்டும்." (Acts 4:19, 5:29, 1 Corinthians 6:1-6)
"அடக்கப்பட்டவர்கள் பூமியை உடைமையாக்கிக் கொள்வார்கள்." (Psalms 37:10,11,28)
ஏசுவின் போதனைகளும், ஆதி கால கிறிஸ்தவர்களின் வாழ்க்கையும் அதிகார வர்க்கத்திற்கு எதிராகவே இருந்துள்ளன. ஆனால் ஒரு கூட்டம் பிற்காலத்தில் ஏசுவின் பெயரை சொல்லி மதம் என்ற நிறுவனத்தை உருவாக்கி, மக்களை அடக்கி ஆண்டது. ஆதி கால கிறிஸ்தவ சமுதாயம், பொதுவுடமைப் பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது. சக்கரவர்த்தியுடன் அதிகாரத்தை பங்கு போட்டுக் கொண்ட கத்தோலிக்க மதத் தலைவர்கள், நிலவுடமைச் சுரண்டல் சமுதாயத்தை உருவாக்கினர். மதத்தின் பெயரால் பெண்களை அடக்கி ஆணாதிக்கத்தை உலக நியதி ஆக்கினார்கள். மத நிறுவனத்தின் அதிகாரத்தை, அடக்குமுறையை எதிர்த்தவர்கள் பாதாளச் சிறைகளில் அடைக்கப்பட்டனர். "கிறிஸ்தவ எதிர்ப்பாளர்களை" உயிருடன் எரித்து, மக்கள் மேல் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டார்கள். இன்றைக்கு இந்த உண்மைகளை எழுதுவதற்காக, கொடுங்கோலர்களின் வாரிசுகள் என்னை, "கிறிஸ்தவ எதிர்ப்பாளர்" என்று தூற்றித் திரிகின்றனர்.
கிறிஸ்தவ மதம் ஸ்தாபனமயப் பட்ட காலத்தில் இருந்தே பல்வேறு பட்ட மாற்றுக் கருத்தாளர்களைக் கொண்டிருந்தது. விவிலிய நூல் எழுதப்பட்ட காலத்திலேயே பல கிறிஸ்தவ பிரிவுகள் கருத்து முரண்பாடு கொண்டு தமக்குள் மோதிக்கொண்டன. புனித பவுல் எழுதிய கடிதங்களில், கிறிஸ்தவ சபைகளின் மேல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஏசு கிறிஸ்து கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபிக்கவில்லை. அவரது சீடர்களான பீட்டர், பவுல் ஆகியோர் ஐரோப்பியக் கண்டத்தில் பல நம்பிக்கையாளர்களை புதிய மதத்தில் சேர்த்தனர். கத்தோலிக்க மதம் பீட்டரினால் ஸ்தாபிக்கப் பட்டதாக உரிமை கோருகின்றது. புனித பீட்டர் முதலாவது பாப்பரசராக பதவி வகித்தமை குறிப்பிடத் தக்கது. ஜெருசலேமில் ஏசுவின் சகோதரரான ஜேம்ஸின் கிறிஸ்தவ சபை ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. கி.பி. 66 ம் ஆண்டு இடம்பெற்ற யூதர்களின் கிளர்ச்சியினால், அந்த சபையும் பாதிக்கப்பட்டது.
கி.பி. 970 ம் ஆண்டு, பல்கேரியாவில் போகொமில் (Bogomil) என்ற பாதிரியார் தலைமையில் புதிய பிரிவு தோன்றியது. அதனை உருவாக்கியவரின் பெயரில் "போகொமில் கிறிஸ்தவர்கள்" என அழைக்கப்படலாயினர்.(Bogomilism) கடும் தூய்மைவாதிகளான போகொமிலியர்கள் பழைய ஏற்பாட்டை நிராகரித்து விட்டு, புதிய ஏற்பாட்டை மட்டும் புனித நூலாக ஏற்றுக் கொண்டனர். சிலுவை மனிதர்களை சித்திரவதை செய்யும் கருவி. ஆகவே ஒரு சித்திரவதைக் கருவியை வணங்குவது தவறு என்று நம்பினார்கள். இயேசு கிறிஸ்து கடவுள், ஆகையினால் அவரது ஆன்மா மட்டுமே சிலுவையில் அறையப்பட்டது, என்று வாதிட்டனர். பூமியும், மனிதர்களும், அனைத்துப் பொருள்களும் சாத்தானால் படைக்கப் பட்டவை, என்று நம்பினார்கள். (சாத்தானால் படைக்கப்பட்ட) கிறிஸ்தவ தேவாலயத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். அவர்கள் அரசு, மதம் ஆகிய நிறுவனங்களை தீமையின் உறைவிடமாக கருதினார்கள். ஒரு வகையில், இன்று அதிகார மையங்களை எதிர்க்கும் மார்க்சிய, இடதுசாரி கொள்கைகளை நம்புவோரின் முன்னோடிகள் என்றும் கூறலாம்.
அன்றிருந்த கத்தோலிக்க கிறஸ்தவ மதகுருக்கள் உலக இச்சைகளை துறந்தவர்களாக இருக்கவில்லை. பாதிரிகள் மணம் முடித்து வாழ்வதும், சொத்துகளை சேர்த்து வைப்பதும், அன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணம். போகொமில் மதகுருக்கள் மட்டும் அத்தகைய ஒழுக்கநெறிகளை கடைப்பிடித்தார்கள். போகொமில் மதகுருக்கள் மது, மாமிசம், பாலியல் உறவு மூன்றையும் ஒதுக்கி துறவறம் பூண்டனர். போகொமில் கிறிஸ்தவர்களின் எளிமையான வாழ்க்கை மக்களைக் கவர்ந்தது. பல்கேரியாவில் இருந்து இத்தாலி வரை, புதிய நம்பிக்கையாளர்கள் சேர்ந்தார்கள். கத்தோலிக்க மத தலைவர்கள், தமது அதிகாரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக பார்த்தார்கள். கத்தோலிக்க திருச்சபையும், பல்கேரிய மன்னனும் போகொமில் கிறிஸ்தவர்களை அழித்தொழிக்க கிளம்பினார்கள். அவர்களின் புனித நூல்கள் யாவும் தீக்கிரையாக்கப் பட்டன. போகொமில் பிரிவை சேர்ந்த ஒருவர் விடாமல் தேடித் தேடி அழித்தனர். போகொமில் கிறிஸ்தவர்கள் வழிபட்ட புனிதஸ்தலம் ஒன்று மட்டும் எஞ்சியது. இன்றைக்கும் பல்கேரியாவில் காணப்படும் புனிதஸ்தலத்தின் படம் மேலே உள்ளது.
இன்று சில புரட்டஸ்தாந்து சபைகளும், அங்கிலிக்கன் திருச்சபையும் பெண்களை மதகுருக்களாக ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் கிறிஸ்தவ மதத்தினுள் பெண்கள் சம உரிமை பெறுவதற்காக ஆயிரம் வருட காலம் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. இன்றைக்கும் கத்தோலிக்க மதத்தில் பெண்களுக்கு சம உரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை. பெண்கள் சமையல்கட்டுக்குள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்று, பிற்போக்கு கலாச்சாரத்தை போதிக்கின்றனர். ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், கிறிஸ்தவ மதத்திற்குள் கிளர்ச்சி செய்த "கிறிஸ்தவ எதிர்ப்பாளர்கள்" புதிய மதப் பிரிவை உருவாக்கினார்கள். அவர்களது சபைகளில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப் பட்டது. பெண்களும் பாதிரிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். தெற்கு பிரான்ஸில், ராஜ்யத்தையே ஆளும் அளவிற்கு, இந்த "கிறிஸ்தவ எதிர்ப்பாளர்கள்" பெருமளவு மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தனர். பெல்ஜியம் முதல் இத்தாலி வரை ஆதரவாளர்கள் பெருகியிருந்தனர். ஆனால் அதிகார வர்க்கம் இந்த முன்னேற்றங்களை சகித்துக் கொள்ளவில்லை. "புரட்சிகர கிறிஸ்தவர்கள்" மீது போர்ப் பிரகடனம் செய்தனர். அதையும் சிலுவைப்போர் என்றே அறிவித்தார்கள். ஜனநாயக சமுதாயத்தை சேர்ந்த அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். பிரான்ஸில், Beziers என்ற இடத்தில் உள்ள தேவாலயத்தில் சரணடைந்த ஒன்பதாயிரம் பெண்களும், குழந்தைகளும் மதவெறியர்களின் வாளுக்கு இரையாகினர். ((800th anniversary of Béziers massacre) நாகரீக உலகம் வெட்கித் தலைகுனிந்த இனப்படுகொலைக்காக, வத்திக்கான் இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை.
5 comments:
Interesting info. Keep going.
அடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?
நீங்கள் சொல்வதில் சில உண்மைகளும் உள்ளன. அக்கால கிறிஸ்தவ மதவாதிகளில பலர் கொடுங்கோலர்களாக இருந்துள்ளர். மதத்திற்கு எதிராக யாராவது கருத்துத் தெரிவித்தால் அவர்களை கொன்றழித்துள்ளனர். இது கண்டிக்கத்தக்க செயலாகும்.
பைபிள் பற்றி சொல்லியுள்ள சில விடயங்கள் நெருடலை ஏற்படுத்துகிறது. பைபிள் சேர்த்துக் கொள்ளப்படாத பிரதிகள் எரிக்கப்படவில்லை. இன்னும் சில பிரதிகளை காணலாம். எவற்றை சேர்க்க வேண்டும் எவை சேர்க்கப்பட்டக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. பழைய ஏற்பாட்டில் எதுவித சிக்கல்களும் இல்லை. ஏனென்றால் இயேசுவின் காலங்களில் அவர் எவற்றை உபயோகித்தாரே அவை இடம்பெற்றுள்ளன. புதிய ஏற்பாட்டில்தான் சிக்கல்கள் எழுந்தன.குறிப்பிட்ட கால எல்லைகள் எழுதப்பட்டவை, வேதத்தை முரண்படுத்தாதவை போன்ற காரணங்களும் கருத்திற் கொள்ளப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.
தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
அபிமான வாசகர்கள் அனைவருக்கும் நமது காலத்திய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
Post a Comment